கிருட்டிணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவ வளாகத்தில் அரசாணைகளுக்கு எதிராக விநாயகன் சிலையை திடீரென வைத்து பூஜைகளை நடத்தி வருகிறார்கள். அங்கே மருத்துவராக பணியாற்றும் வட்டார மருத்துவ அலுவலர் இரா. அரிராம் என்பவரே முன்னின்று இந்த பூஜைகளை நடத்திக் கொண்டிருக் கிறார். தகவல் அறிந்து கிருட்டிணகிரி மாவட்ட கழகத் தலைவர் தி.குமார் தலைமையில் கழகத் தோழர்கள் மார்ச் 28ஆம் தேதி காலை மருத்துவ அலுவலர் அரிராமைச் சந்தித்து, அரசு வளாகங்களில் கோயில் கட்டுவது சட்டப்படி தவறு என்பதை சுட்டிக் காட்டி மனு ஒன்றை அளித்தனர். மனுவை அளித்து விட்டு வெளியே வரும்போது முன்கூட்டியே தகவல் அறிந்த பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். காரர்கள் மாவட்ட தலைவர் குமார் மற்றும் தோழர்களை சூழ்ந்து கொண்டு தாக்குதல் நடத்தும் நோக்கத்தில் வாக்குவாதம் செய்தனர். தனது உயிருக்கோ, உடைமை களுக்கோ ஆபத்து ஏற்படுமானால் அதற்கு மருத்துவர் அரிராம் மற்றும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.காரர்களே பொறுப்பு என்று காவேரிப்பட்டினம் காவல்துறை ஆய்வாளரிடம் மாவட்டக் கழக தலைவர் தி. குமார் புகார் மனு அளித்துள்ளார்.
இதற்கிடையே சுகாதாரத் துறை துணை இயக்குனருக்கு மருத்துவர் இரா. அரிராம் வளாகத்தில் விநாயகன் சிலை அமைப்பதை நியாயப்படுத்தி ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில் மருத்துவ வளாகத்தில் கோயில் அமைக்க பொது மக்களே கோரிக்கை விடுத்ததால் அதற்கு தடைபோட வில்லை என்று தனது சட்டவிரோத செயல்பாட்டுக்கு பொது மக்களையும் துணைக்கு இழுத்துள்ளார்.
“பிரசவம் பார்க்க வரும் தாய்மார்கள் மற்றும் நோயாளிகள் தங்களின் மன நிம்மதிக்கு வழிபாடு நடத்த விரும்புகிறார்கள். எனவே மத நல்லிணக்கம் மேம்பட அவர்களே சொந்த முயற்சியில் வழிபாட்டு இடங்களை அமைக்க முன் வந்துள்ளனர். நோயாளிகள் நல சங்கமும் இதற்கு ஒப்புதல் வழங்கியிருக்கிறது. நிர்வாக ரீதியாக நாங்கள் எழுத்துப்பூர்வமாக இதை அனுமதிக்கவில்லை. அவர்களே வழி பாட்டு சின்னங்களை அமைப்பதால் நாங்கள் தடை செய்யவில்லை. இது தவிர சுதந்திர போராட்ட தேசத் தலைவர்கள் படங்களும், பெரியார், அம்பேத்கர், காமராசர் போன்றோர் பொன்மொழிகளும் இடம் பெற வேண்டும் என்ற கோரிக்கையும் வந்துள்ளது. கோயில் கட்ட திராவிடர் விடுதலைக் கழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அனைத்து மதம் சார்ந்தோரும் ஒற்றுமையாக மதம் சார்ந்த சின்னங்களை அமைக்க விரும்புகின்றனர். இது குறித்து ஆலோசனை வழங்க வேண்டும்” என்று மருத்துவர் அரிராம் துணை இயக்குனருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மருத்துவமனை நீதிமன்ற வளாகங்களில் எந்த மத வழிபாடு சின்னங்களுக்கும் அனுமதி இல்லை என்று மத்திய மாநில அரசு ஆணைகள் தெளிவாகக் கூறும் நிலையில், ‘விநாயகன்’ வழிபாட்டை நியாயப்படுத்த ஏனைய மதத்தினரை யும் தனக்கு துணையாக அழைத்துக் கொண்டு, பெரியார், அம்பேத்கர், காமராசர் போன்ற தலைவர்களையும் இதில், தனக்கு ஆதரவாக இழுத்துக் கொண்டு சுகாதாரத்துறை இயக்குன ருக்கு மறைமுக அழுத்தத்தை உருவாக்கியுள்ளார், மருத்துவர் இரா. அரிராம்.
உச்சநீதிமன்றம் நடைபாதைக் கோயில்களை அகற்ற வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு கண்டிப்பான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அரசு வளாகங் களில் வழிபாட்டுத் தளங்களை அனுமதித்தால் பிறகு, அங்கே ‘பொது நல மன்றங்கள்’, ‘சேவை அமைப்புகள்’ என்ற பெயரில் தனியார் கட்டிடங்கள் கட்ட ஆரம்பித்தால், அது மக்களின் விருப்பம் என்று, அனுமதிப்பார்களா?
சென்னை உயர்நீதிமன்றம் இப்படி - நீதிமன்றங்கள், மருத்துவமனை உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் சட்ட விரோதமாக கட்டப்பட்ட கோயில்களை இடிக்க உத்தரவிட் டுள்ளதையும் சுட்டிக் காட்ட வேண்டும்.