கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

காதலர் நாளான பிப்.14 - ஜாதி எதிர்ப்பு, பெண்ணுரிமை நாளாக கொண்டாடப்பட்டது.

திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட பெரியார் இயக்கங்கள், காதலர் நாளை ஜாதி, மதம் கடந்த காதலை வரவேற்கும் நிகழ்வாக கூட்டங்கள், கருத்தரங்குகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தி, கடந்த சில ஆண்டுகளாக கொண்டாடி வருகிறது.

ஒரு சில ‘இந்து’ மதவாத அமைப்புகளும், இஸ்லாமிய அமைப்புகளும் காதலர் நாளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சில ‘இந்து’ அமைப்புகள் காதலர் நாளில் ‘நாய்களுக்கும் கழுதைகளுக்கும்” திருமணம் நடத்துவதாகக் கூறி, அநாகரிகமான போராட்டங்களை நடத்துவது வழக்கம்.

இதற்கு பதிலடி தரும் வகையில் கழகத் தோழர்கள் கடற்கரையில் காதல் இணையர்களுக்கு இனிப்பு வழங்கி, காதலர் நாளை ஆதரித்து துண்டறிக்கைகள் வழங்கி வந்தனர். இதனால் கடற்கரைக்கு வரும் காதல் இணையர்களை அடிப்பது துன்புறுத்துவது போன்ற மதவாத அமைப்புகளின் வன்முறைகள் கட்டுப்படுத்தப்பட்டன.

இவ்வாண்டு, சென்னை மாநகர காவல்துறை காதலர் நாளில் இத்தகைய வன்முறைகளை அனுமதிக்க முடியாது என்று எச்சரிக்கை செய்திருந்தது. எனவே காதலர் நாள் வாழ்த்து அட்டைகளை எரிக்கும் போராட்டத்துக்காக வந்திருந்த இந்து மக்கள் கட்சியைச் சார்ந்த சிலர், கண்ணகி சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பு வழிபாடு செய்து, ‘கற்பு ஓங்குக’ என முழக்கமிட்டு கலைந்தனர்.

திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள், மாவட்ட செயலாளர் உமாபதி தலைமையில் காலை 10 மணியளவில் கடற்கரையில் திரண்டு, காதல் இணையர்களுக்கு இனிப்பு வழங்கி, கேக் வெட்டி கொண்டாடினர். ‘பெரியாரிய பெண் விடுதலை இயக்கத்’ தோழர்களும் கழகத்தினரோடு கலந்து கொண்டனர்.  ‘ஜாதி மதம் ஒழிய காதல் செய்வீர்’ என்று முழக்கங்களை எழுப்பினர்.

சென்னை பெசன்ட் நகர் ‘எலியட்ஸ்’ கடற்கரையில் காதலர் நாளை முன்னிட்டு ‘மனிதம் இணைப்போம்’ என்ற முழக்கத்தை முன் வைத்து காதலர் நாள் கலை நிகழ்ச்சிகளுடன் நடந்தது. ‘சரி நிகர்’ இயக்கம் சார்பில் நடந்த இந்த நிகழ்வில் திரைப்படக் கலைஞர் ரோகிணி, முன்னாள் துணைவேந்தர் வே.வசந்தி தேவி, பேராசிரியர்கள், அறிவியலாளர்கள், இளைஞர்கள் பங்கேற்றனர்.

ஜாதி-மத மறுப்புத் திருமணம் புரிந்தோருக்கு தனியார் மற்றும் பொதுத் துறைகளில் 10 சதவீத இடஒதுக்கீடு கோரியும், கவுரவக் கொலைகளை தடுக்க தமிழ்நாட்டில் தனிச் சட்டம் கொண்டு வரக் கோரியும், நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டன. ஜாதி-மத எதிர்ப்புப் பாடல்கள், நடனங்கள் நிகழ்வில் இடம் பெற்றன. அனைவரும் ஜாதி மறுப்பு உறுதி மொழி ஏற்றனர்.

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் காதலர் நாள், ஜாதி எதிர்ப்பு-பெண்ணுரிமை நாளாக பல்வேறு இயக்கங்களால் நடத்தப்பட்டுள்ளது.