திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஆகிய மூன்று திராவிடர் இயக்கங்களும் நடத்திய, நடத்த உள்ள மாநாடுகள், ஜாதி, மத அழிப்பில் அக்கறை கொண்ட அனைவருக்கும் பெரும் நம்பிக்கையைக் கொடுத்துள்ளன.
திருவாரூரில் திராவிடர் கழகம் கடந்த 17.12.2016 அன்று திராவிடர் மகளிர் எழுச்சி மாநாட்டை நடத்தியுள்ளது. அந்த மாநாட்டில் பெண் விடுதலைக்குத் தடையாக உள்ள மனுசாஸ்திரத்தைக் கொளுத்தும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. திராவிடர் கழகத் தலைவர் மானமிகு தோழர் வீரமணி அவர்களது உரையில்,
"நம் நாட்டு சாத்திரங்களும், இதிகாசங்களும், வேதங்களும் பெண்களை ஒரு மானுடக் கூறாகவே பார்ப்பதில்லை. அடிமையாக மட்டுமல்ல; இழிவான பிறவிகளாக, கேவலமாகப் பேசுகின்றன. என் கையில் இருப்பது அசல் மனுதர்மம். அதன் ஒன்பதாவது அத்தியாயம் 14 ஆம் சுலோகம் என்ன சொல்லுகிறது?
“மாதர் ஆடவரிடத்தில் அழகையும், பருவத்தையும் விரும்பாமலே ஆண் தன்மையை மாத்திரமும் முக்கியமானதாக எண்ணி அவர்களைப் புணருகிறார்கள்.’’
15 ஆம் சுலோகம் என்ன கூறுகிறது?
“மாதர்கள் கற்பு நிலையின்மையும், நிலையா மனமும் நண்பின்மையும் இயற்கையாக யுடையவராதலால் கணவனால் காக்கப்பட்டிருப்பினும் அவர்களை விரோதிக்கிறார்கள்.’’
16 ஆம் சுலோகம் அதைவிட மோசம்.
“மாதர்களுக்கு இந்த சுபாவம் பிரமன் சிருட்டித்த போதே யுண்டானது என்றறிந்து ஆடவர்கள் அவர்கள் கேடுறாமல் நடப்பதற்காக மேலான முயற்சி செய்யவேண்டியது’’ என்கிறது மனு. இன்னும் எத்தனையோ இருக்கின்றன. இதிகாசங்களும், உபநிஷத்துகளும், வேதங்களும் இந்த வகையில்தான் எழுதப்பட்டுள்ளன.
திருவாரூரில் நடக்கும் இந்த எழுச்சிமிக்க திராவிடர் மகளிர் மாநாட்டில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறேன்.
அன்னை மணியம்மையார் பிறந்த நாளான வரும் மார்ச் 10 ஆம் தேதியன்று பெண்களை இழிவுபடுத்தும் இத்தகைய நூல்களைக் கொளுத்துவோம்! இந்தப் போராட்டத்துக்குப் பெண்களே எங்கும் தலைமை தாங்குவார்கள்" என்று அறிவித்துள்ளார்.
அதேபோல திராவிடர் விடுதலைக் கழகம் வரும் டிசம்பர் 24 ல் வேத மரபு மறுப்பு மாநாட்டை நடத்த உள்ளது. ஏற்கனவே 2012 ல் இதே டிசம்பர் 24 ல் மனுசாஸ்திர எரிப்பு மாநாட்டையும், 2013 ஏப்ரல் 14 ல் மனுசாஸ்திர எரிப்புப் போராட்டத்தையும் வெற்றிகரமாக நடத்திய அமைப்புதான் திராவிடர் விடுதலைக் கழகம். 2013 க்குப் பிறகு மீண்டும் இந்து மதத்தின் அஸ்திவாரமாக உள்ள வேத, சாஸ்திரங்கள் உண்டாக்கிய மரபுகளுக்கு எதிராகக் களமிறங்குகிறது.
வள்ளலாரையும் பெரியாரையும் ஒரே நேர்கோட்டில் வைத்து அறிவிக்கப்பட்ட அந்தத் தலைப்பில் நமக்கு மாறுபட்ட கருத்து உண்டு. இருப்பினும், மாநாட்டின் அடிப்படை நோக்கம், மிகவும் பாராட்டத்தக்கது. வரவேற்றுப் பின்பற்றத்தக்கது. 2013 ல் நடத்தியதைப் போலவே, மீண்டும் திராவிடர் விடுதலைக் கழகம் வேத, சாஸ்திரங்களை எரிப்பது போன்ற ஒரு மாபெரும் போராட்டத்தை அறிவித்தால், இன்றைய சமுதாய, அரசியல் சூழலுக்கு அது மிகவும் அவசியமான வரலாற்றுக் கடமையாக அமையும்.
தந்தை பெரியார் திராவிடர் கழகம் வரும் டிசம்பர் 24, 25 தேதிகளில் திராவிடர் இயக்கக் கொள்கைப் பிரகடன நூற்றாண்டு நிறைவுவிழாவை மாநாடாக அறிவித்துள்ளது. திராவிடர் 100 என்ற தலைப்பில், தோழர் பெரியாரின் எழுத்து, பேச்சுக்களை 100 சிறு நூல்களாகத் தொகுத்து வெளியிடுகிறது. மிகவும் மகிழ்ச்சியான, அவசியமான செயல்பாடுகள் இவை. சென்னையில் 2016 லும் இராவணலீலாவை நடத்தி, வரலாற்றில் தடம்பதித்த தந்தை பெரியார் திராவிடர் கழகம் இந்து மத அடிப்படைகளைத் தகர்க்கும் வகையில் வேத, சாஸ்திரங்களுக்கு எதிரான ஒரு போராட்டத்தை அறிவித்து நடத்தினால், தமிழ்நாட்டில் வேர்பிடிக்கத் துடிக்கும் காவிகளுக்கு விதைப்பிலேயே வெந்நீர் ஊற்றுவது போன்ற காரியமாகப் பயன்கொடுக்கும்.
இதுபோன்ற போராட்டங்களை குறுகிய காலத்திற்குள் அறிவித்து செய்துவிடாமால், ஓராண்டு அல்லது இரண்டு ஆண்டுகாலம் இடைவெளி கொடுத்து, அந்த இடைவெளிக்காலம் முழுக்க வேத, சாஸ்திர, சம்பிரதாயங்களுக்கு எதிராக மாபெரும் பரபபுரைகளை நடத்தி, அதன் பிறகு நடத்தினால் மிகவும் சிறப்பாக இருக்கும்.
இவைபோன்ற இந்து அடிப்படைகளுக்கு எதிரான போராட்டங்களுக்கு அனுமதியே கிடைக்கா விட்டாலும் பரவாயில்லை. போராட்டமே நடத்தப்படவில்லையானாலும் பரவாயில்லை. வேத எரிப்பு, சாஸ்திர எரிப்பு என்ற சொற்களும், வேத எதிர்ப்புக் கருத்துக்களும் வெகு மக்களைச் சென்று சேரவேண்டும். வேத எதிர்ப்புக் கருத்துக்கள் சுமூக வலைத்தளங்களிலும், தொலைக்காட்சி விவாதங்களிலும், அச்சு ஊடகங்களிலும் ஒரு விவாதப் பொருளாக மாற வேண்டும். அதற்கு ஒரு வாய்ப்பாக இந்தப் போராட்ட அறிவிப்புகள் பயன்பட்டால்கூட அது திராவிடர் இயக்கங்களுக்கு பெரும் வெற்றியாக அமையும்.
திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் தோழர் கோவை. இராமக்கிருட்டிணன் ஆகியோருக்கு காட்டாறு இவற்றை ஓர் வேண்டுகோளாக விடுக்கிறது.
திராவிடர் கழகம் அறிவித்துள்ள மனுசாஸ்திர எரிப்புப் போராட்டத்தில் காட்டாறு குழு தோழர்கள் முழுமையாகப் பங்கேற்பார்கள். தி.வி.க, த.பெ.தி.க அமைப்புகளும் இவை போன்ற போராட்டங்களை அறிவித்தால் அவற்றிலும் காட்டாறு தோழர்கள் முழுமையாகப் பங்கேற்பார்கள். அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் இந்து அடிப்படைவாதக் கும்பலை விரட்ட எண்ணும் அனைத்து அரசியல் கட்சிகளும், தலித் அமைப்புகளும், பொதுவுடைமை இயக்கங்களும், தமிழ்த்தேசிய அமைப்புகளும் இவை போன்ற போராட்டங்களிலும், பரப்புரைகளிலும் பங்கேற்க வேண்டும். ஆதரிக்கவேண்டும்.