மீண்டும் மனுசாஸ்திரம் விவாதத்துக்கு வந்துள்ளது. இதை வரவேற்கிறோம். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், காணொளி கருத்தரங்கம் ஒன்றில் மனு சாஸ்திரம், பெண்களை எப்படி இழிவுப்படுத்துகிறது என்பதை விளக்கினார். 40 நிமிட உரையிலிருந்து சில பகுதிகளை வெட்டி ஒட்டி 40 விநாடி உரையாக்கி பெண்களை இழிவுபடுத்துவதாகக் கூறி , பா.ஜ.க.வினர் தந்த புகாரில் தமிழக காவல்துறை 6 பிரிவுகளில் அவர் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறது.

நியாயமாக பெண்களையும் ‘சூத்திரர்’களையும் இழிவுபடுத்தும் ‘மனுதர்ம சாஸ்திர’ நூல்களை அச்சிடுவோர் - விற்பனை செய்வோர் மீது இந்த வழக்குகளைத் தொடர்ந்திருக்க வேண்டும். தமிழக காவல்துறையே ‘மனுநீதி’ துறையாகவே செயல்பட்டு வருகிறது. பெண் பத்திரிகையாளரை இழிவுபடுத்திப் பேசிய திரைப்பட நடிகர் எஸ்.வி. சேகர் மீது நீதிமன்றமே கைது செய்ய உத்தரவிட்டும் இவருக்கு பாதுகாப்பு கொடுத்தது.

கேரளாவில் நடந்த ‘உலக பிராமணர்’ மாநாட்டில் சாஸ்தா பல்கலைக்கழகப் பேராசிரியராக இருக்கும் வேங்கட சுப்ரமணியம் என்ற பார்ப்பனர், மனுசாஸ்திர அடிப்படையில் ‘பிராமணர்’களே உயர்ந்தவர்கள் என்றும், நாய்களில் பொமரேனியன், இராஜபாளையம் என்று தனித் தனி ‘ஜாதி’கள் இருப்பதுபோல் மனிதர்களிலும் உண்டு, ஒன்றாகக் கலக்க முடியாது என்றும் பேசினார்.

அவரது உரையின் ஒலிப்பதிவு நாடாவை சென்னை மாநகர காவல் துறை ஆணையரிடம்  திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் நேரில் சந்தித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து ஒரு வருடம் ஓடி விட்டது. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, கருப்பர் கூட்டம் என்ற ‘காணொளி’, கந்தர் சஷ்டி கவசத்திலுள்ள ஆபாச வரிகளை பகுத்தறிவுக் கண்ணோட்டத்தில் விளக்கியதற்காக இரண்டு தோழர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளது.

இத்தனைக்கும் அந்த காணொளிப் பதிவை நீக்கம் செய்து வருத்தமும் தெரிவித்த நிலையில் காவல்துறை ‘சங்பரிவாரங்களை’ ‘மனுதர்ம வாதிகளை’ திருப்திப்படுத்த இந்த அத்துமீறிய நடவடிக்கைகளை எடுத்தது. ‘கருப்பர் கூட்டம்’ என்றால் குண்டர் சட்டம் பாயும். அதுவே ‘பிராமணர் குலம்’ என்றால் காவல்துறை பாதுகாப்பு தரும் என்றால் காவல்துறையும் அதை இயக்கும் தமிழக அரசும் ‘மனுசாஸ்திரத்தை’ அமுல்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதுதானே, இதன் அர்த்தம்?

இந்திய அரசியல் சட்டமே மனுசாஸ்திரத்தைப் புறக்கணித்து, குப்பைக் கூடையில் வீசிவிட்டது. அரசியல் சட்டம் மக்கள் அனைவரும் சமம் என்று கூறுகிறது. இல்லை, மக்களில் ‘பிராமணர்’ உயர்ந்தவர், ‘சூத்திரர்’ இழிவானவர் என்கிறது மனுசாஸ்திரம். கல்வியை பெண்களுக்கும் சூத்திரர்களுக்கும் வழங்கக் கூடாது என்கிறது மனுசாஸ்திரம். 6லிருந்து 14 வயது வரை கல்வியை கட்டாய உரிமையாக்கியிருக்கிறது அரசியல் சட்டம் (Right to education act).

பெண்களுக்கு குழந்தைப் பருவத்திலே திருமணம் செய்து விட வேண்டும் என்கிறது மனுசாஸ்திரம்; 18 வயதுக்கு உட்பட்டு திருமணம் செய்வது குற்றம் என்று கூறுகிறது சட்டம். கணவனை இழந்த பெண்கள் ‘கைம்மை நோன்பு’ இருந்து, மறுமணம் செய்யாமல் இருக்க வேண்டும் என்கிறது மனுசாஸ்திரம்; மறுமணம் செய்யும் உரிமையை வழங்கியிருக்கிறது சட்டம்.

பெண்களுக்கு சொத்து சேர்க்க உரிமை இல்லை என்கிறது மனு சாஸ்திரம்; உரிமை உண்டு என்கிறது சட்டம். ஆனாலும்கூட பெண்கள் வேதம் படிக்கக் கூடாது; சடங்குகளைச் செய்யக் கூடாது; அர்ச்சகர் ஆக முடியாது என்று ‘மனுசாஸ்திரம்’ பெண்கள் மீது சுமத்திய தடைகள் அப்படியே நீடிக்கின்றன.

பிரிட்டிஷ் இந்தியாவில் மெக்காலே என்ற அதிகாரிதான் மனுசாஸ்திர அடிப்படையில் நீதிமன்றங்கள் வழங்கிய தண்டனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து பொது கிரிமினல் சட்டத்தை அறிமுகப்படுத்தினார்.  மெக்காலே சட்டம் வருவதற்கு முன்பு சுமார் 70 ஆண்டுகள் நீதிமன்றங்களில் கிரிமினல் வழக்குகளில் ஒரே குற்றத்திற்கு பிராமணருக்கு குறைந்த தண்டனை; சூத்திரருக்கு மரண தண்டனை என்ற அடிப்படையிலேயே தீர்ப்புகள் வழங்கப்பட்டு வந்தன.

‘பிராமணர்’கள் கொலை செய்தால்கூட தூக்குத் தண்டனை வழங்க தடை செய்யப்பட்டிருந்தது. உலகிலேயே எந்த ஒரு நாட்டிலும் இவ்வித கொடூரமான சட்டம் இருந்தது இல்லை. இப்போதும் ‘ஆகம விதிகள்’, ‘பழக்க வழக்கங்கள்’ என்ற சட்டப் பாதுகாப்புக்குள் மனுசாஸ்திரம் உயிர்த் துடிப்போடு பதுங்கி நிற்கிறது.

காவல்துறையின் ‘சைபர் கிரைம்’ பிரிவு - தொல். திருமாவளவனின் முழு உரையைக் கேட்காமல் ‘வெட்டி ஒட்டி திருகுதாளம்’ செய்யப்பட்ட நேர்மையற்ற எதிரிகள் தயாரித்த 40 விநாடி பேச்சின் அடிப்படையில் வழக்குத் தொடர்வது வன்மையான கண்டனத்துக்கு உரியது.

மனுசாஸ்திரத்தை தடை செய்ய வேண்டும் என்று தமிழகம் முழுதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. நாங்கள் மனுசாஸ்திரத்தைப் படித்ததே இல்லை; அதில் என்ன இருக்கிறது என்பது தெரியாது என்று பார்ப்பனர்கள் தந்திரமாக நழுவுகிறார்கள். அதே நேரத்தில் இந்து மதத்தைப் புண்படுத்திய தொல். திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இரட்டை  வேடம் போடுகிறார்கள்.

மனுசாஸ்திரம் தடை செய்யப்பட வேண்டும் என்பதைவிட அதன் கொடூரமான பாகுபாடுகள் கோயில் கர்ப்பகிரகத்திலும் பழக்க வழக்கங்களிலும் இருப்பதை தடை செய்ய வேண்டும் என்பதே நமது கோரிக்கையாக எழுப்பப்பட வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதி என்ற பெருமைக்குரிய முத்துசாமி அய்யர், தன்னிடம் வந்த கணவன் மனைவியை அடித்து கையை உடைத்த வழக்கில் அப்படி அடிக்கலாம்; மனுசாஸ்திரப்படி குற்றமல்ல என்று தீர்ப்பளித்தார்.

அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சிலை வைத்திருக்கிறார்கள். ராஜஸ்தான் உயர்நீதிமன்ற வாயிலில் ‘மனு’வுக்கு கம்பீரமாக சிலை வைத்திருக்கிறார்கள். தங்களை மனுசாஸ்திர அடிப்படையில் ‘பிராமணர்’களாக அடையாளப்படுத்தும் பூணூல் உபநயன சடங்குகளை செய்து வரும் பார்ப்பனர்கள், மனுசாஸ்திரத்தை நாங்கள் படித்ததே இல்லை என்று உண்மைக்கு மாறாகப் பேசுகிறார்கள்.

தமிழ்நாடு அரசு இப்படி ஒரு வழக்கை தோழர் தொல் திருமாவளவன் மீது பதிவு செய்ததற்காக வெட்கப்பட வேண்டும். இந்த உரையை ஒளிபரப்பிய பெரியார் வலைக் காட்சி மீதும் வழக்கு போட்டுள்ளார்களாம்.

தமிழ்நாட்டில் நடப்பது  அம்மா ஆட்சியா? மனுதர்ம ஆட்சியா?

- விடுதலை இராசேந்திரன்

Pin It