ஸர். ஸி.பி. இராமசாமி அய்யரைத் தாக்கியதன் எதிரொலி இப்போது கேட்கிறது. முன்னெச்சரிக்கையுடன் கத்திக் குத்தைக் தடுக்காமலும், நிகழ்ச்சிக்குப் பிறகு நிலைமையைச் சமாளிக்காமலும் இருந்ததற்காக ஜில்லா போலீஸ் சூப்பரிண்டென்டெண்டும், போலீஸ் இன்ஸ்பெக்டரும் வேலையிலிருந்து நீக்கப்பட்டு விட்டார்களாம்.
இவ்வளவுதானா? ரொம்ப ‘லைட் பனிஷ்மெண்ட்’! ஒரு திவானை, அதுவும் மன்னர் குடும்பத்தின் உயிருக்குயிரான ஒருவரை, அதுவும் பிராமணராய்ப் பிறந்தவரை, ஒருவன் கத்தியால் குத்தி விட்டானென்றால் போலீஸ் உத்யோகஸ்தர்களை ‘டிஸ்மிஸ்’ செய்தால் மட்டும் போதுமா? ஆயுள் தண்டனை அல்லவா கொடுத்திருக்க வேண்டும்?
“நாட்டிலே எத்தனையோ பேர் நாள்தோறும் தாக்கப் படுகிறார்கள். குத்தப் படுகிறார்கள். கொல்லவும் படுகிறார்கள். இவைகளுக்காக இதுவரை எத்தனை போலீஸ்காரர் ‘டிஸ்மிஸ்’ செய்யப் பட்டிருக்கிறார்கள்? ஸி. பி. உயிர் மட்டும் என்ன அவ்வளவு ஒசத்தி?” என்று வாசகர்கள் கேட்கலாம்.
ஆத்திரப் படாதீர்கள்! "பிராமணனைப் பார்த்து சூத்திரன்: அகங்காரத்தினால் காரி உமிழ்ந்தால் இரண்டு உதடுகளையும், மூத்திரத்தை ஊற்றினால் சிசிநத்தையும், மலத்தை எறிந்தால் பிர்ஷ்டபாகத்தையும் சீவி எறிய வேண்டியது,” என்பது மநுதர்ம விதி! 8-வது அத்தியாயம்; 282 -வது சுலோகம். தெரியுமா?
ஆரியனைப் பார்த்துக் காரி உமிழ்ந்தாலே உதட்டை அறுக்க வேண்டுமென்றால் கத்தியாலேயே குத்தினால் என்ன தண்டனைதான் கொடுக்கக் கூடாது? குத்தாமல் தடுக்கத் தவறிய போலீஸாரை என்னதான் செய்யக் கூடாது?
பிராமணன் மட்டும் தவறு செய்தால் தண்டனையில்லையா, என்று கேட்கலாம். ஆஹா! உண்டு! படியுங்கள்:-
“பிராமணன் எந்தப் பாவஞ் செய்தாலும் அவனைக் கொல்லாமல் காயமின்றி ஊரை விட்டுத் துரத்த வேண்டியது,” என்பது 380-வது சுலோகம்!
காயம் கூடாது! பொருளுடன் துரத்த வேண்டும்! அப்பப்பா! என்ன கடுமையான தண்டனை!
இப்போது தெரிகிறதா? பார்ப்பான் ஏன் ஹிந்து மதத்தைக் கட்டிக் கொண்டு அழுகிறான் என்பது?
- குத்தூசி குருசாமி (13-10-1947)
நன்றி: வாலாசா வல்லவன்