Periyar road name issueசென்னையில் ‘பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை’ பெயரை திடீர் என்று ‘வெஸ்ட்டர்ன் கிரான்ட் டிரங்க் ரோடு’ என்று நெடுஞ்சாலைத் துறை சாலை அறிவிப்பு பலகையில் மாற்றியது. மோடி தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்தபோதே சென்ட்ரல் இரயில் நிலையம் வழியாக நேரு விளையாட்டரங்கத்துக்கு போகிறார் என்பதால் இது அவசரமாக மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பிறகு ஏப். 13ஆம் தேதி இது கவனத்துக்கு வரவே தமிழ்நாட்டில் தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். செய்தி வந்தவுடனேயே சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் ஏணியுடன் தூரிகை ‘கருப்பு மை’யுடன் விரைந்தனர்.

மாநகராட்சி கட்டிடம் அருகிலும் எம்.ஜி.இராமச்சந்திரன் தொடர் வண்டி நிலையம் (சென்ட்ரல்) அருகிலும் நிறவப்பட்டிருந்த பெயர்ப் பலகையிலுள்ள ‘வெஸ்டர்ன் கிராண்ட் டிரங்க்’ பெயரை கருப்பு மை கொண்டு அழித்தனர்.

தொலைக்காட்சி ஊடகங்கள் இந்த அழிப்பை படம் பிடித்து வெளியிட்டன. ஈ.வெ.ரா.  நெடுஞ்சாலை என்று மாற்றப்படும் வரை பெயர் அழிப்பு தொடரும் என்று மாவட்ட செயலாளர் இரா. உமாபதி ஊடகங்களிடம் அறிவித்தார்.

நெடுஞ்சாலைத் துறை ஆவணங்களில் உள்ள பெயரைத் தான் எழுதியதாக அதிகாரிகள் விளக்கம் கூறியுள்ளார்கள். 1979ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது பெரியார் நூற்றாண்டு விழாவையொட்டி அரசாணை வெளியிட்டு பெரியார் பெயரை சூட்டினார்.

42 ஆண்டுகளாக இதை ஏற்றுக் கொண்டிருந்த நெடுஞ்சாலைத் துறை இப்போது மாற்றுவது ஏன் என்ற கேள்விக்கு பதில் இல்லை.

கடந்த 42 ஆண்டுகளாக மத்திய அரசு இந்த சாலையை முகவரியாகக் கொண்டவர்கள் விண்ணப்பித்த கடவுச் சீட்டு, ஆதார், வருமான வரி ஆவணங்களில் பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை என்ற பெயரையே முகவரிகளாக பயன்படுத்தியிருப்பார்கள். அப்போது இப்படி ஒரு பெயரே இல்லை என்று மறுக்கப்பட்டது உண்டா?

ஆவணங்களில் உள்ளதைத் தான் அரசு ஏற்கும் என்று பா.ஜ.க.வினர் வாதிடுகிறார்கள். அயோத்தியில் பாபர் மசூதி இருந்தது என்பதற்கு ஆவணம் இருக்கிறது. ஆனால் ‘ராமன்’ அங்குதான் பிறந்தான் என்பதற்கு எந்த ஆவணமும் இல்லை. ஆவணம் உள்ள மசூதியை இடித்துவிட்டு ஆவணமே இல்லாத ராமனுக்கு கோயில் கட்டுவது ஏன்?

‘சரசுவதி நதி’ என்று ஒரு நதி பற்றி வேதங்களில் மட்டும் குறிப்பு வருகிறது. அது ஆரிய நாகரிகத்தின் சின்னம் என்கிறார்கள். அப்படி ஒரு நதி ஓடியதாக இந்திய வரைபட ஆவணம் ஏதும் இல்லை. இந்தியாவில் ஓடும் நதிகளில் அப்படி ஒரு நதியும் இல்லை.

ஆனால் ‘சரசுவதி நதி’ இருந்ததா என்பது பற்றி ஆராய உ.பி. அரசு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ‘இந்து’ என்ற சொல் எந்த இந்து மதம் சார்ந்த நூலிலும் குறிப்பிடப்படவில்லை. ஆவணச் சான்று இல்லை. ஆனால் இந்தியாவே இந்து நாடு என்கிறார்கள்; பெரியார் பெயரை எடுப்பதற்கு மட்டும் ஆவணத்தில் குறிப்பு இல்லை என்கிறார்கள்.

இது தான் பார்ப்பபனர்களின் ‘நேர்மை’.

(குறிப்பு: தொடர்ந்து த.பெ.தி.க. தொழர்கள் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை என்ற ஸ்டிக்கர்களை ஒட்டி நேர் செய்தனர்)

- விடுதலை இராசேந்திரன்

Pin It