tamil flagநேற்றைய தினம் பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு (01.11.2020) தமிழ்நாடு நாளை மிகச்சிறப்பாக கொண்டாடியுள்ளது. மேலும் இந்த கொண்டாட்டத்தில் தமிழ்நாட்டிற்கென ஒரு கொடியை அரசே உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி தற்காலிகமாக ஒரு கொடியையும் அறிமுகப்படுத்தி அதை ஏற்றுவதாகவும் அறிவித்திருந்தது.

ஆனால் இக்கொடியை ஏற்றுக்கூடாதென காவல்துறை 124 A பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்வோம் என மிரட்டி கடுமையாக நடந்துகொண்டு அதை தடுத்துள்ளது. இதிலிருந்தே அரசு இயந்திரம் மாநிலத்திற்காக கொடி வரவிடக்கூடாது என்பதில் எவ்வளவு உறுதியாக இருக்கிறது என்பது நன்கு தெரிகின்றது. ஆகவே கூட்டமைப்பினர் தமிழ்நாடு நாளை மட்டும் கொண்டாடினர். ஒருங்கிணைப்பாளர் பொழிலன் அவர்கள் மட்டும் தமிழ்நாடு கொடியை ஏற்றி கைதாகி தற்போது சிறையில் இருக்கிறார்.

தமிழ்நாடு நில தோற்றம் மற்றும் பெயர் தோற்றம் வரலாறு :

1956 நவம்பர் 1 அன்று நேரு ஆட்சியில் மொழிவழி மாநிலமாக 14 மாநிலங்களும் 6 ஒன்றியங்களும் பிரிக்கப்பட்டது. சென்னை மாகாணத்தில் இருந்து கேரளம், கர்நாடகம் (ஆந்திரம் முன்னாடியே பிரிந்துவிட்டது) தனியாக பிரிந்து சென்றது. மீதமுள்ள சென்னை மாகாணத்தில் தமிழ் பேசும் மக்கள் மட்டும் கொண்ட பகுதியாக இருந்ததால் அந்நாளையே தமிழ்நாடு உருவான நாளாக கொண்டாடி வருகிறோம்.

கடந்த வருடத்திலிருந்து (2019) தமிழக அரசுமே கொண்டாடுகிறது.1956 க்கு பிறகுதான் எல்லைப் போராட்டம் துவங்கியது. சில பகுதிகள் அண்டை மாநிலத்திற்கு சென்றன, சில வந்தன அதற்கு பல தலைவர்கள் போராடினர் என்பதெல்லாம் தனி வரலாறு அதை மற்றொரு சமயம் எழுதுவோம்.

ஆனால் சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்கிற பெயரை பேரறிஞர் அண்ணா தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்தபிறகு தான் ஜூலை 18, 1967 அன்று சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தது. பின்பு அது சட்டமாக்கப்பட்டு அதன்பிறகு மத்திய அரசால் ஜனவரி 14, 1968 அன்று அங்கீகரிக்கப்பட்டது. அன்று முதல் நம் மாநிலத்தை தமிழ்நாடு என பெருமைபட கூறிவருகிறோம்.

இந்த தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கு பின்னாலும் சில வரலாறு இருக்கிறது. பக்தவச்சலம் ஆட்சியில் திமுக இருமுறை சட்டமன்றத்தில் தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா கொண்டுவந்து அது தோற்கடிக்கப்பட்டது. மேலும் சங்கரலிங்கனார் அவர்கள் ஆந்திரா மொழிப்போர் தியாகி பொட்டி ஸ்ரீராமுலு அவர்கள் வழியைப் பின்பற்றி 1956 ம் ஆண்டு 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி 76 நாள் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து இறுதியில் உயிரையும் ஈகம் செய்தார்.

அந்த 12 கோரிக்கையில் ஒன்று தான் சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்ட வேண்டும் என்பது. ஆனால் எல்லா தலைர்களுக்கும் முன்பாக தந்தை பெரியார் அவர்கள் 11.09.1938 ம் நாள் சென்னை தீவுத்திடலில் நடந்த இந்தி எதிர்ப்பு மாநாட்டில் தான் முதன்முதலாக தமிழ்நாடு தமிழருக்கே என கர்ஜித்துள்ளார். மேலும் சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்ததற்கு ஒரு வருடத்திற்கு முன்பே தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டச் சொல்லி தந்தை பெரியார் விடுதலையில் எழுதியுள்ளார்.

இன்னும் சொல்லப்போனால் மொழிவாரியாக சென்னை மாகாணத்திலேயே தங்கள் கட்சி அமைப்பை முதன்முதலாக 1920 ல் காங்கிரஸ் தான் உருவாக்கியது. நீதிக்கட்சி சென்னை மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு மொழி பேசுவோருக்கும் ஒரு பத்திரிக்கை ஒவ்வொரு மொழியில் ஆந்திரப்பிரகாசிகா, திராவிடன், Justice என பத்திரிக்கை நடத்தியது.

தமிழ்நாட்டு கொடி உருவாக்கம் மற்றும் நாள் கொண்டாட வேண்டிய அவசியம் என்ன?

தேவை தான் கண்டுபிடிப்புகளின் தாய் என ஏங்கெல்ஸ் கூறினார். அதே போல் அடக்குமுறைகளும், புறக்கணிப்புகளும், சுரண்டல்களும் தான் பிரிவினைக்கான உணர்வு தோன்றவும், விடுதலை உணர்வு பிறக்கவும் அடிப்படையாக அமைகிறது.

அதனால் தான் மதத்தை அடிப்படையாக கொண்டு இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்தபிறகு ஒரே மதமாக இருந்தாலும் பாகிஸ்தானிலிருந்து மொழியை காரணியாக வைத்து பங்களாதேஷ் பிறந்தது. ஏன் ஒரே மதம், ஒரே மொழி பேசுபவர்களாக இருந்தாலும் புறக்கணிப்புக்கு உள்ளாகிறோம் எனக்கூறி ஆந்திராவில் இருந்து பிரிந்து தெலுங்கானா பிறந்தது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலக முடிவெடுத்ததும் இதே அடிப்படையை வைத்து தான். அதை தான் BREXIT என ஊடகங்கள் வர்ணித்தது. இப்படி உலகம் முழுக்க பல உதாரணங்களை மேற்கோள் காட்ட முடியும். இலங்கையில் கூட தனிஈழம் கேட்டு ஆயுதமேந்தி போராடியதும் இதே காரணிகளை அடிப்படையாக கொண்டு தான். உலகம் முழுவதும் தனிநாடு, தனியுரிமை கோருவதன் அடிப்படைக் காரணிகள் ஒன்றாகத்தான் இருக்கும்.

இதை உணர்ந்து தான் பேரறிஞர் அண்ணா அவர்கள் நாடு என்பது வெறும் பூகோள வரைப்படம் அல்ல, அது அங்கு வாழும் மக்களின் உணர்ச்சி தொகுப்பு எனக் கூறினார். ஆகவே தான் அண்ணா திராவிட நாடு கேட்கும் போது கூட மொழிவழி பிரிந்து இனவழி கூடி பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய திராவிட நாடு (The federation in the confederation) கேட்டார்.

ஏன் இந்த காரணிகள் உருவாகிறது என்றால் நம்மை நம் மொழியை, நம் உரிமையை மதிக்க ஒன்றிய அரசு தவறுவதாலும், பொருட்டாக நினைக்காததாலும் இக்காரணிகள் உருவாகின்றன. இதே போன்று பல மொழி, பல கலாச்சாரம், பலதரப்பட்ட மக்கள் வாழும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் ஏன் இதுபோன்ற பிரச்சினை எழவில்லை என்று சொன்னால் அதற்கான தேவையை அங்குள்ள அரசு உருவாக்கவில்லை.

அரசே அனைவரையும் சமமான பிரஜைகளாக மதிக்கிறது. அனைத்து தரப்பு மக்களுக்கும் சமவாய்ப்பை அந்நாட்டு அரசு வழங்குகிறது. ஆகவே அங்குள்ள மக்கள் தங்களை அந்நாட்டு குடிமகனாக அடையாளப்படுத்திக் கொள்வதையே பெருமையாக கருதுகிறார்கள். ஆனால் இங்கு நாமோ நாம் இந்தியர்கள் என்று சொல்லிக் கொள்ள வெட்கப்படுகிறோம் ஏனென்றால் இந்திய அரசு நம்மை அப்படி தான் வைத்துள்ளது.

ஆகவே நமது எல்லா உரிமைகளும் தற்போது பறிபோகியுள்ளது. அரசியலமைப்பு சட்டத்தை சிறிதும் மதிக்காமல் மனு சட்டத்தை பின்பற்றி இன்றைய பாஜக ராமராஜ்யத்தை நடத்தி வருகிறது. ஒத்திசைவு பட்டியலில் உள்ள கல்வி குறித்து சிறிதும் மாநில அரசை கலந்தாலோசிக்காமல் ஒப்புதல் பெறாமல் நீட் தேர்வையும், புதிய கல்விக்கொள்கையும் கொண்டுவந்துள்ளது.

காலம்காலமாக ஈராயிரமாண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்கள் சற்று மேம்பட கல்வி, வேலைவாய்ப்பில் கொடுத்த இடஒதுக்கீட்டையும் இல்லாமல் ஆக்கிவருகிறது. ஆனால் இடஒதுக்கீட்டில் வராத உயர்ஜாதி வகுப்பினருக்கு EWS என்கிற பெயரில் 10% இடஒதுக்கீட்டை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நடைமுறைப்படுத்தி வருகிறது. நம்மிடமிருந்தே GST என்கிற பெயரில் வரியை வசூலித்துவிட்டு மாநிலத்திற்கு தரவேண்டிய நிதியைக் கூட தராமல் உலகவங்கியிடம் கடன் வாங்கி கொள்ள சொல்கிறார்கள்.

இதையெல்லாம் விட கொடுமையாக மாநிலப் பட்டியலில் உள்ள விவசாயம் குறித்து மத்திய அரசு வேளாண் சட்டம் கொண்டுவந்துள்ளது. மேலும் புதிதாக நாடாளுமன்றம் கட்டப்பட்டு வருகிறது. அதில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் சேர்ந்து அமர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் அவர்கள் மக்களவை, மாநிலங்களவை என தனித்தனியாக இருப்பதை ஒழிக்க நினைப்பது புரிகிறது.

மேலும் மாநிலங்களே இல்லாமலே ஆக்கிவிட்டு மொத்தமாக 545 ஜன்பந்த் என பிரித்து ஆட்சி செய்ய திட்டமிட்டுள்ள சதியும் தெரியவந்துள்ளது. அதன் மூலம் பல கூறுகளை கொண்ட பல தேசிய இன அடையாளங்களை அழித்து இந்து தேசியம் என்கிற பெயரில் இந்துராஷ்ட்ராவை உருவாக்குவதே அவர்களின் இலக்காக உள்ளது. ஒரே மொழி இந்தி (சமஸ்கிருதம்) ஒரே மதம் இந்து, ஒரே பண்பாடு இந்துப்பண்பாடு என ஒற்றை அடையாள இந்து தேசியத்தை நிறுவ பாஜக மூலம் RSS துடியாய் துடித்துக்கொண்டிருக்கிறது.

இவ்வளவு ஒடுக்குமுறை இருக்கின்றபோதும் பின்னால் இன்னும் பல ஒடுக்குமுறை நிகழ இருக்கிறபோது நியாயப்படி தனித் தமிழ்நாடு கேட்டுத்தான் போராட வேண்டும் ஏனெனில் அதற்கான தேவையை தான் மத்திய பாசிச பாஜக அரசு உருவாக்கியுள்ளது. ஆனால் அதற்கான சூழல் தற்போது இல்லாததால் நாம் இந்த இந்திய ஒன்றியத்தில் இருந்து கொண்டே இழந்த உரிமைகளை மீட்க முயற்சித்து போராடி வருகிறோம். அதில் ஒன்றாகவே மாநில உரிமையை வலியுறுத்தும் விதமாக தமிழ்நாட்டிற்கான தற்காலிக தமிழ்நாட்டு கொடியை அறிமுகப்படுத்தியுள்ளோம். தமிழ்நாடு நாள் கொண்டாட்டத்தை வெகுஜனப்படுத்த முயற்சித்து வருகிறோம்.

அது நமக்கும் நம் எதிர்கால சந்ததியினருக்கும் நன்மை பயக்கவே செய்யும். ஆக தமிழ்நாடு நாளை வெகு விமரிசையாக கொண்டாடுவோம் தமிழர்களே...!

- பெரியார் யுவராஜ்

Pin It