தமிழக பா.ஜ.க.வில் என்ன நடக்கிறது? தலித் சமூகத்தைச் சார்ந்த அக்கட்சித் தலைவர் முருகனும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த துணைத் தலைவர் அண்ணாமலை என்ற முன்னாள் அய்.பி.எஸ். அதிகாரியும், “பெரியார் சமூக சீர்திருத்தவாதி; சமூக நீதிக்கு பாடுபட்டவர்; அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுகிறோம். பெரியாரின் இந்துமத எதிர்ப்பு, கடவுள் எதிர்ப்பு கொள்கைகளையே எதிர்க்கிறோம்” என்று பேட்டிகளில் கூற, அந்த முகாமில் உள்ள மனுவாத பார்ப்பனர்களுக்கு ஆத்திரம் பீறிட்டுக் கிளம்பி விட்டது.
நாராயணன் திருப்பதி, கோலாகல சீனிவாஸ், ரங்கராஜ் பாண்டே போன்ற பார்ப்பனர்கள், பெரியாரைப் பேசினால் பா.ஜ.க. ஓட்டு வங்கி ஒழிந்து விடும்; ஆர்.எஸ்.எஸ். பாரம்பர்யம் வேறு; பெரியார் பாரம்பர்யம் வேறு; பெரியார் தனிநாடு கேட்டவர் என்றெல்லாம் வெளிப்படையாக கட்சித் தலைவர் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் பெரியார் போன்ற தலைவர்களையெல்லாம் எதிர்த்துக் கொண்டு பா.ஜ.க.வை வளர்க்க முடியாது என்று டெல்லியில் கட்சி மேலிடம் கருதுவதாக ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு செய்தி வெளியிட்டிருக்கிறது.
பெரியாரையும் திராவிடர் இயக்கத்தையும் தரம் தாழ்ந்த வார்த்தைகளால் பேசி வந்த எச். ராஜாவின், தேசிய செயலாளர் பதவியையும் கட்சி மேலிடம் பறித்து விட்டது. தமிழ்நாட்டில் ‘வெறுப்பு - அருவறுப்பு’ அரசியலுக்கு தூபம் போட்ட தமிழகத்துக்கான பா.ஜ.க. மேலிட பொறுப்பாளரின் பதவிகளும் பறிக்கப்பட்டு விட்டன.
பெரியாரை வெளிப்படையாக எதிர்க்காமல் மதவாதத்தை மனுதர்ம அரசியலை நடத்தலாம் எனும் சூழ்ச்சி தமிழ்நாட்டில் எடுபடாது என்பதை சங்கிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
பா.ஜ.க.வை வளர்க்க வேண்டும் என்பதைவிட அதிகாரம் கொடி கட்டிப் பறக்கும் இந்தக் காலத்தைப் பயன்படுத்திக் கொண்டு பெரியார் இயக்கத்தை அழித்து விடலாம் என்று கற்பனைக் கனவில் களிப்புற்றுக் கிடக்கும் பார்ப்பனர்களும் அந்தப் பருப்பு இங்கே வேகாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
- விடுதலை இராசேந்திரன்