கும்பகோணத்தில் மகாமக உற்சவம் நடக்கப் போகிறது. அதற்கு திராவிட மக்களை வரும்படியாக கும்பகோணம் பார்ப்பனர்களால் அழைப்புக்கு மேல் அழைப்பு விடுத்தவண்ணமாக விளம்பரங்கள் காணப்படுகின்றன. பார்ப்பனப் பத்திரிகைகள் மாமாங்கத்தைப் பற்றி பிரமாதப்படுத்தி மக்களை அங்கு சேர்ப்பிக்க  - தள்ளிவிட முயற்சிக் கின்றன. இந்த 20ஆம் நூற்றாண்டுக்குப் பக்கத்தில் வாழும் திராவிட மக்கள் இப்படி ஒரு அறிவும், மானமும் சூன்யமான ஒரு உற்சவத்தை மதித்துக் கும்பகோணம் சென்று கூமுட்டைகள் ஆவதென்றால் இதை உலகின் 8வது அதிசயமென்றுதான் சொல்ல வேண்டும். கும்பகோணத்தில் இவ்வளவு கூட்டம் சேர்க்கப்படுவதற்கும் மாமாங்கத்தன்று அங்கு என்ன புதிய சங்கதி காணப்படப்போகிறது என்பதை யோசிப்போம்.

periyar 468அங்குள்ள மாமாங்கக் குளம் என்பது வெகு நாளாக இருந்து வருவதேயாகும். அதில் உள்ள தண்ணீரும் வெகு நாளாக இருந்து வருவதேயாகும். அப்படி இருக்க அன்று (மக நட்சத்திரத் தினத்தன்று) மாத்திரம் அக்குளத்திற்கும் தண்ணீருக்கும் எப்படிப் புது யோக்கியதையோ, பெருமையோ உண்டாகிவிடும் என்பதை அறிவுள்ள மனிதன் யோசித்துப் பார்க்க வேண்டாமா!  தமிழனின் மதி ஈனத்தை கைமுதலாக வைத்து வாழும் பார்ப்பனர் கூட்டம் தங்கள் வாழ்க்கைக்கும் வயிற்றுப் பிழைப்புக்குமாக எதைக் கற்பித்தாலும், தமிழன் அதற்கு அடிமையாவதென்பது இழிவான காரியமல்லவா?

பார்ப்பனர் கட்டிய கதை

கும்பகோண மாமாங்கத்திற்குப் பார்ப்பனர் ஏற்படுத்தி இருக்கும் கதை என்னவென்பது எவரும் அறியாததல்ல.

அதாவது, சப்த நதிகளும் சிவனிடம் சென்று உலக மக்கள் தங்கள் தங்கள் பாவத்தைக் கழிப்பதற்கு ஆக தங்களிடம் வந்து குளித்து முழுகிப் பாவங்களை கழுவிவிட்டுக்கொண்டே இருப்பதால் அப்பாவங்கள் தங்களால் சுமக்க முடியவில்லை என்று அழுதார்கள். அதற்கு சிவன் அந்நதிகளைத் தேற்றி 12 வருஷத்திற்கு ஒரு முறை கும்ப கோணத்திற்கு வந்து அங்குள்ள ஒரு குளத்தில் ஒரு தீர்த்தத்தை உற்பத்தி செய்கிறேன். அக்குளத்திற்கு வந்து நீங்கள் குளித்தால் உங்களின் பாவங்கள் அதில் கழுவப்பட்டுப் போகும் என்றும் சொன்னார். அதற்கு ஆக அந்த நதிகள் அங்கு வந்து குளித்து தங்கள் மீதுள்ள பாவங்களை அதில் கழுவி விடுகின்றன. ஆதலால் மனிதர்களும் அன்று வந்து அதில் குளித்தால் அம்மனிதர்களின் பாவமும் அங்கு கழுவப்பட்டுவிடும் என்பது புராணக் கதை. இதுதான் மாமாங்கக் கதையின் சுருக்கம்.

இதை எந்த மனிதனாவது நம்ப முடியுமா? மனிதன் உயர்ந்த ஜீவப் பிராணி என்பதற்குக் காரணம் அவனுக்கு உள்ள ஆறாவது (பகுத்தறியும்) அறிவேயாகும். அதாவது சிந்தித்துப் பார்க்கும் தன்மையே யாகும். அப்படிப்பட்ட ஆறாவது அறிவுப்படி பார்த்தால் இந்த மாமாங்கக் கதையை எந்த மனிதனாலாவது நம்ப முடியுமா என்று கேட்கின்றோம்.

நதியில் குளித்தால் பாபம் போகுமா?

ஒரு நதியில் ஒரு மனிதன் குளித்த மாத்திரத்தில் அவனது பாபம் அதில் கழுவப்பட்டுப்போகும் (தொலையும்) என்பது எப்படி அறிவுக்குப் பொருந்தும் என்பதும், அந்த நதி அந்தப் பாவத்தை சுமக்காமல் சிவனிடம் சென்று அழுவது என்பதும், அதற்கு ஆக (அந்த நதிகளின் பாவபாரம் குறைவதற்கு ஆக) வேறு ஒரு குளத்தைக் கடவுள் சிருஷ்டிக்கிறது என்பதும், அந்தக் குளத்திற்கு இந்த (ஏழு) நதிகள் வருவது என்பதும் ஆகிய சங்கதிகள் மனிதர்களுக்குச் சொல்லக் கூடியவைகளா அல்லது மடையர்கள், மனிதத்தன்மை அற்ற, மனித உருக்கொண்ட மிருகங்களுக்கும் மரஞ்செடிகளுக்கும் சொல்லக் கூடிய கதையா என்று வாசகர்களை சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறோம்.

12 வருடத்திற்கு ஒரு முறை அந்தக் குளத்தில் நீர் பொங்கி வருவதாக நேரில் பார்த்ததாகவே சிலர் கூறுகிறார்கள்.

தண்ணீரை நெருப்பில் வைத்துக் காய்ச்சினாலல்லாது, பொங்குகிற வஸ்துவை அதில் போட்டாலல்லாது தண்ணீர் எப்படிப் பொங்க முடியும்? மாமாங்க தினத்தன்று தண்ணீர் குளத்தில் விட்டு வைத்த அளவுக்கு மேல் அதிகமாக காணப்படுவதாக சில பார்ப்பனர்கள் கதை கட்டிவிடுகிறார்கள். மக்களைத் தண்ணீருக்குள் இறங்கவிடாமல் தடுத்து நிறுத்தி பிறகு தண்ணீரைப் பார்த்தால் அப்போது அது பொங்குகிறதா இல்லையா என்பதின் உண்மை கண்டுபிடிக்க முடியும். அப்படிக்கில்லாமல் பதினாயிரக்கணக்கான மக்களை, லட்சக்கணக்கான மக்களைக் குளிக்கவிட்டு அதன்பிறகு தண்ணீர் அதிகமாகி இருக்கிறது என்று சொன்னால் அதை எப்படித் தண்ணீர் என்றே சொல்ல முடியும்? குளிக்கப்போகும் மக்கள் அந்தக் குளிரில் தங்கள் சிறுநீரைக் கழிக்க அந்தக் கூட்டத்தில் குளக்கரையில் எங்கு இடம் காண முடியும்? ஆதலால் குளிக்கிறவர்கள் அவசர அவசரமாகத் தண்ணீரில் இறங்கி அங்கு நீர்கழிக்க ஏற்பட்டு விடுவதன் மூலம் குளத்தின் தண்ணீர் பெருகி இருக்கலாம்; அந்தச் சிறுநீரின் தன்மையால் குளத்தில் குமிழ்கள் காணப்படலாம். குளம் தன் பாவத்தை எங்குக் கழுவும்?

அன்றியும் மக்கள் ஏராளமாகத் தண் ணீரில் இறங்குவதாலும் தண்ணீர் உயர்ந்து இருக்கலாம். இந்த மாதிரி காரணங்களால் தண்ணீர் மட்டம் 4, 2 படிக்கட்டுகளுக்கு உயர்ந்துவிட்டால் அதைப் பொங்கிற்று என்று சொல்லுவது அறிவுடைமையாகுமா என்று கேட்கிறோம்.

அன்றியும் சப்த நதிகளுக்குமே தங்களிடம் மக்கள் கழுவிவிட்ட பாபம் தாங்காமல் அங்கு (மாமாங்க குளத்திற்கு) வந்து குளித்துப் பாவங்களைக் கழுவி விட்டு விட்டுப் போக வேண்டிய அவசியம் வந்ததென்றால், பிறகு இந்த நதிகள் கழுவிவிட்ட பாபத்தை இந்த மாமாங்கக் குளம் கழுவி விட வேறு எந்தக் குளத்திற்கு வருஷத்திற்கு வருஷம் அல்லது 12 வருஷத்திற்கு ஒரு தரமாவது அது சென்று வந்தது என்ற கேட்கின்றோம்.

ஆகவே, எத்தனையோ காலமாக எத்தனையோ பேர் கழுவிவிட்ட பாபங் களைக் கொண்டு வந்து கழுவிவிட்ட மாமாங்க குளப் பாவத்தண்ணீரில் மனிதன் போய் குளிப்பதானால் அவனுக்கு பாவம் ஏறுமா? அல்லது கழியுமா? என்று அறிவுடைய மக்கள் யோசிக்க வேண்டாமா என்று கேட்கின்றோம். எனவே, இந்த மாமாங்கப் புரட்டு பார்ப் பனர் பிழைக்க ஏற்படுத்திக்கொண்ட சுங்கச்சாவடி, கட்டுக்கதை அல்லாமல் இதில் ஏதாவது நாணயமோ, உண்மையோ, அறிவுடைமையோ இருக்க இடமிருக்கிறதா? இதற்குப் பார்ப்பனப் பத்திரிகை உடையவும் காங்கிரஸ்காரர்களுடையவும் விளம்பரம் ஒருபுறமிருக்கக் காங்கிரஸ்காரர்கள் அதைத் தங்கள் பிரசாரத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளச் செய்யும் சூழ்ச்சி ஒருபுறம் இருக்க ரயில்வேக்காரருடைய விளம்பரம் வேறு பக்கம் இருந்து வருகிறது. இந்த வருஷம் மாத்திரம் சண்டை நெருக்கடி காரணமாக ரயில்விட முடியாது என்று சொல்லுகிறார்கள் என்றாலும், அந்த விளம்பரத்தின் மூலம் மக்களுக்கு மா மாங்கத்தை ஞாபகப்படுத்திக் கொண்டு தான் வருகிறார்கள். ரயிலுக்கு எப்படியும் சென்ற மாமாங்கத்திற்கு கிடைத்த வரும்படிக்குக் குறையாமல் வரும்படி கிடைக்கத்தான் போகிறது. ரயில்வே சிப்பந்தி பார்ப்பனர்களுக்கும் பிரைஸ் அடிக்கத்தான் போகிறது. மற்றும் பார்ப்பனர்களுக்குக் காப்பிக்கடை, ஓட்டல், தங்குமிட வசதி, பாட்டுக் கச்சேரி, சினிமா, முதலிய காரியங்களாலும், தர்ப்பணம், சங்கல்பம் முதலியவைகளாலும், மற்றும் பலசிங்காரச் சிற்றின்பக் காரியங்களாலும் இரும்பு, நூல், ஜவுளி வியாபாரிகள் அடித்த கொள்ளை லாபத்தைப் போல் லாபம் கிடைக்கத்தான் போகிறது. கடைசியில் கெட்டு நட்டமடைந்து இழிவடைந்த முட்டாளாகத் திராவிட மக்கள்தான் ஆகப் போகிறார்கள்.

மனைவி மக்கள் இடிபடவா?

மற்றும் தன் மனைவி மக்களை ஒரு மீட்டிங்குக்கும் கான்பரன்சுக்கும் அனுப்பக்கூடப் பயந்து நடுங்கியவனும் உறை போட்டு அறைக்குள் பூட்டி வைத்துப் பூட்டை இழுத்து இழுத்துப் பார்த்துவிட்டு வெளியில் போய்வருகிறவனும் கூடத் தன் மனைவி மக்களை மாமாங்கத்திற்குக் கூட்டிக்கொண்டு போய் கூட்டத்தில் சிக்கவைத்து நசுக்குண்ட பஞ்சாமிர்தம் போல் ஆனதைப் பார்த்து கழுத்து பத்திரம், காது பத்திரம் என்று மாத்திரம் உரத்துக் கூறிக்கொண்டு இழுத்து வரப்போகிறான் என்பதைத் தவிர மாமாங்கத்தின் முடிவு வேறு என்னமாக இருக்க முடியும்?

இந்த சர்க்கார் மனுதர்ம, புராண ஆட்சி சர்க்காராய் இல்லாமல் இருக்குமானால் இப்படிப்பட்ட முட்டாள்தனமான காரி யங்களுக்கு மக்களை ஆளாக்காமல் மாமாங்கம் நடத்தக்கூடாது என்று 144 உத்தரவு போட்டு அதற்குப் பதி லாக ஒரு உலகக் கண்காட்சியை நடத்தச் செய்து இருக்கும். மக்கள் மடமையாய் இருக்கும்வரை அரசருக்கும், ஆரியருக் கும் ஆதாயம் என்கிறது சாணக்கிய கொள்கை;ஆதலால் அறிவு வளர்ச்சிக்குச் சர்க்கார் தக்கது செய்யாமல் மாமாங்கம் முதலியவைகளுக்கு ஆதரவளித்து வருகிறது.

எப்படி இருந்தாலும் இந்த மாமாங் கத்திற்குத் திராவிட மக்கள் சிறப்பாகத் தமிழ் மக்கள் செல்லாமல் அதை வெறுத்துத் தள்ளி, போகிறவர்களுக்கும் விவரம் சொல்லி எவரையும் போகாமல் தடுத்துவிட வேண்டுமாய் வேண்டிக்கொள்ளுகிறோம்.

மாமாங்கத்தையே நம்புவது கேடு! மதிகேடு!! மதிகேடு!!! என்று சொல் லுவதோடு அங்கு செல்லுவதும் தமிழ் மகனுக்கு (திராவிடனுக்கு) மானக்கேடு! மானக்கேடு!! மானக்கேடு!!! என்று பல தடவை சொல்லுவோம்.

-------------------------------------------------

பெரியார்-" குடிஅரசு" - தலையங்கம் - 17.02.1945
அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா

Pin It