ஓர் அமைப்பைத் தோற்றுவிப்பதற்காக பம்பாயிலுள்ள சில பார்சிகள் ஓர் இயக்கத்தைத் தொடங்கியிருப்பதாக, பெல்காமிலிருக்கும்போது நான் கேள்விப்பட்டேன். ஒரு சாதி என்ற வகையில் புரோகித முறையை ரத்து செய்வதே அதனுடைய முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். பார்சி பிரமுகர்களின் வழிமுறைகளைப் பற்றி விவாதிப்பது அவசியமென்று நான் கருதவில்லை. ஆனால், இந்து புரோகித வர்க்கங்கள் எவ்வகையிலும் சராசரி பார்சி புரோகிதர்களுக்கு அறநெறி ரீதியிலோ, கல்வி ரீதியிலோ அல்லது வேறு வகையிலோ மேலானவர்கள் அல்ல என்பதை நான் பார்சி நண்பர்களுக்கு உறுதியாகக் கூற விரும்புகிறேன்.

பரம்பரையான இந்து புரோகிதர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எண்ணற்றவை; அவை திகைப்பூட்டுவதாயிருக்கின்றன. நமது நாகரிகத்தின் காலச் சக்கரத்தில் அவர் (புரோகிதர்) ஒரு முட்டுக்கட்டை. மனிதன் பிறக்கிறான், அவன் திருமணம் செய்து கொள்கிறான், ஒரு குடும்பத்தின் தந்தையாகிறான், பின்னர் காலப்போக்கில் மரணமடைகிறான். இந்த வாழ்க்கை நெடுகிலும் புரோகிதர், ஒரு தீய நுண்ணறிவாளன் போன்று மனிதனை நிழல் போல் தொடர்கிறார். சாஸ்திரங்கள் மற்றும் ஸ்மிருதிகளுக்கு ஏற்ப அவர் கூறும் கொடூரமான விதிகளிலிருந்து விலகிச் செல்வதானது, பயங்கர தண்டனைக் குள்ளாக்கப்படுகிறது. 99 சதவிகித மக்கள் இதைத் தாக்குப்பிடிக்க முடியாதவர்களாக உள்ளனர்.

மனிதனை சமுதாயத்திலிருந்து விலக்கி வைப்பது அல்லது வெளியேற்றுவது என்பது, புரோகிதரே சாத்தானாக இருந்து உருவாக்கிய ஆயுதமேயாகும். இதைப் புரோகிதர் ஈவிரக்கமின்றி, இடைவிடாது, மூர்க்கமான உறுதியுடன் கையாள்கிறார். அதிகாரத் தோரணையில் செயல்படும் பார்ப்பனர், மனித சமுதாயத்தின் ஒரு பரிதாபமான தனி நபராக காட்சியளிக்கிறார் என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். அவருக்கும் இது தெரியும். காணப்பட முடியாத சக்திகளுக்கும், திக்கற்ற மனிதனுக்கும் இடையில் ஒரு தரகராக இருக்கும் அவமானத்தை அவர் கடைப்பிடித்து, அதன் மூலம் தன் வாழ்க்கையை நடத்துகிறார். இவர்கள் மனதறிந்து தான் இந்த இழிசெயலை செய்கிறார்களா என்று ஒருவேளை தத்துவ ஞானிகள் கேட்கக்கூடும்!

ஆனால், இந்தக் கேள்விக்கு விடை எதுவாக இருந்தபோதிலும், சமுதாயத்தின் வாழ்வாதாரங்களைத் தனது சுயநலத்திற்குப் பயன்படுத்திக் கொண்டு, அவற்றை அரித்துவரும் புல்லுருவிகளை, எவ்விதத் தடையும் கட்டுப்பாடும் இன்றி செயல்படுவதற்கு, இனி ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. இந்தியாவிலுள்ள நாம் ஆங்கிலேய மறுமலர்ச்சியிலிருந்து ஒரு படிப்பினையைக் கற்றுக் கொண்டு, மதத்தையும் புரோகிதரையும் முறையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, அதனுடைய பிற்போக்கான மற்றும் கட்டுப்பாடற்ற வளர்ச்சியைத் தடுத்தாக வேண்டும்.

வெகுமக்களிடையில் கடைப்பிடிக்கப்படும் மூடநம்பிக்கை நடைமுறைகளுக்கு எதிராக, கடுமையான சட்டமியற்றுவதற்கு ஒரு பெரும் தேவை இருக்கிறது. புரோகிதர் மூடநம்பிக்கைகளுக்கு ஆதரவாக இருந்து வருகிறார். கடவுள்களுக்கும் பெண் தெய்வங்களுக்கும் வீணானபடையல்கள், மரணத்தின்போது நீண்டகால துக்கச் சடங்குகளைக் கடைப்பிடிப்பது, பிறப்பு மற்றும் திருமணங்களின் போதும் அதிகளவிலான சடங்குகள், அறிவற்ற சாதி ரீதியிலான விருந்துகள் போன்ற சில நடைமுறைகள் புரோகிதர் மகிழ்ச்சியுடன் கடைப்பிடிக்கும் உணர்வற்ற, அர்த்தமற்ற நடைமுறைகளாகும். திருமணத்தைப் போன்ற மகிழ்ச்சியான நிகழ்வாகட்டும், அல்லது மரணம் போன்ற துன்பகரமான நிகழ்ச்சியாகட்டும், புரோகிதர்கள் அவற்றை சமநோக்கில்தான் எதிர்கொள்கிறார்கள். அவர்களில் பலர், பார்சி நிருபர்களில் ஒருவர் சிறப்பாக எடுத்துக்காட்டியதுபோல், தங்களுக்கு இரையாகின்றவர்களைப் பயன்படுத்திக் கொள்வதற்காகப் பிரார்த்தனை செய்கிறார்கள். புரோகிதத்துவத்தின் தீமைகளின் பட்டியல் உண்மையில் நம்மைத் திகைக்க வைக்கின்றன. இறுதியாக, அதனை ஒழித்துக்கட்டுவதை ஒரு லட்சியமாகத்தான் நமது பார்வையில் வைத்துக் கொள்ள முடியும். ஆனால், நமது நேர்மையான இயக்கத்தைத் தொடங்குவதை நாம் தள்ளிப்போட முடியாது.

உயிருடன் வாழ்ந்து கொண்டிருந்தபொழுது ஓர் அலுமினிய டம்ளர்கூட வாங்க முடியாத அளவுக்கு ஏழையாயிருந்த ஒருவர் இறந்தபோது, அவருடைய இறுதிச் சடங்குகளில் ஒரு வெள்ளிக் கிண்ணம் பயன்படுத்தப்பட வேண்டுமென்று புரோகிதர் வற்புறுத்தினார் என்று பார்சி பத்திரிகை அண்மையில் எடுத்துக்காட்டாக ஒரு செய்தியை குறிப்பிட்டிருந்தது. ஆனால், தங்களுடைய கூர்மையான நடைமுறை விவேகத்தின் பயனாக, பார்சிகள் இந்தியாவில் புரோகிதத்துவம் என்னும் தீமையை ஒழித்துக் கட்டுவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு, மிகவும் பொருத்தமாகவே முன்முயற்சி மேற்கொண்டிருப்பதைக் காட்டுவதற்காகவே நான் இதை மேற்கோள் காட்டுகிறேன்.

மேலும், புரோகிதத்துவத்தைத் துடைத்தெறியும் இந்த வீரமான மற்றும் உன்னதமான பணியில் அறிவொளி படைத்த அனைத்து இந்துக்களும், முஸ்லிம்களும், கிறித்துவர்களும் இணைந்து நிற்பார்கள் என்பதில் எனக்கு அய்யமில்லை. ஏனெனில், புரோகிதத் தத்துவத்தின் சுமையைத் தாங்குவதற்குத் தமது பார்சி சகோதரர்களைக் காட்டிலும் அவர்கள் கண்டிப்பாக மிக மிக இயலாத நிலையில் இருக்கின்றனர்.

Pin It