உச்ச நீதிமன்றம் - முழு அடைப்பு (பந்த்) சட்ட விரோதம் என்று சொல்லியுள்ளதே தவிர, வேலை நிறுத்தத்தை சட்ட விரோதம் என்று சொல்லவில்லை. இரண்டுக்கும் வேறுபாடு இருப்பதையும் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது. ஆனாலும், தமிழ் நாட்டில் ஈழத் தமிழர் படுகொலைகளைத் தடுக்கக் கோரும் போராட்டங்களை யெல்லாம் ஆட்சியைக் கவிழ்க்கும் போராட்டமாகவே கலைஞர் 'மிரட்சியில்' அறிவித்து வருவதால், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் அறிவித்துள்ள வேலை நிறுத்தத்தையும் சட்ட விரோதம் என்கிறார்.

தமிழர் தலைவர் கி.வீரமணி மிகுந்த விழிப்புணர்வோடு தமிழக அரசு முழு அடைப்புக்கு அனுமதி மறுத்துள்ளதாக தஞ்சையில் பேட்டி அளித்துள்ளார்.

ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் ராக்கெட்டுகளை வீசி கொத்து கொத்தாக இந்திய - சிங்கள ராணுவம் தமிழர்களை பிணமாக்கி வரும் நிலையில் கி.வீரமணி, மாணவர்கள் போராட்டம் நடத்தி, தமிழக ஆட்சிக்கு தொல்லை தரக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளதோடு சட்டத்துக்குட்பட்டு செயல்படவேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளார்.

வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தடை செய்து, போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பை கலைஞர்கூட தனது அறிக்கையாக விடுக்காமல், அதிகாரிகள் வழியாக அறிவித்துக் கொண்டிருக்கும் போது, அதை ஆதரித்து பகிரங்கமாக பேட்டி அளித்துள்ள ஒரே தலைவர் கி.வீரமணி மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது. கி.வீரமணியின் இந்த 'அசாத்தியமான' 'விசுவாசத்தை'க் கண்டு உலகத் தமிழர்கள் வியந்து போய் நிற்கிறார்கள்!

Pin It