“இரு பிறப்பாளராம் வருணங்களில், முதல் திருமணத்திற்கு அதே வர்ணத்தைச் சேர்ந்த பெண்ணையே மணம் செய்ய பரிந்துரைக்கப் படுகிறது.”   

- மனுநீதி அத்தியாயம் 3; சுலோகம் 12

“சூத்திரனின் மனைவி சூத்திரச்சியாகவே இருத்தல் வேண்டும்.”

- மனுநீதி அத்தியாயம் 3; சுலோகம் 13.

“மனு கலப்பு மணத்தை எதிர்ப்பவர். ஒவ்வொரு வர்ணத்தாரும் தமக்குள்ளே மணம் புரிதல் வேண்டும் என்பவர்.”

-  அம்பேத்கர்.

மனுவின் இந்த பார்ப்பன சட்டங்களே சமூகத்தை ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கிறது. மனு கூறிய பிராமண - சத்திரிய - வைசிய - சூத்திரப் பிரிவுகளில் ஏற்பட்ட கலப்பு சாதிக் குழுக்களாக சமூகத்தைப் பிரித்துப் போட்டு விட்டது. இந்த சாதிக் குழுக்கள் தங்கள் சாதி அடையாளத்தை பாதுகாக்கவே துடிக் கின்றன. மீறினால் குடும்பப் பாசம் உறவுகளையே பின்னுக்குத் தள்ளிவிட்டு, பெற்ற மகளையே கொலை செய்யக்கூடிய வெறிக்கு உள்ளாகி விடுகிறார்கள். ‘தமிழினப் போராளியாக’ பெருமைபடுத்தப்படும் மருத்துவர் ராமதாசு முன்னிலையிலேயே அவரது “தளபதி”யாக அவராலேயே பெருமைப்படுத்தப் படும் காடுவெட்டிகுரு என்பவர், ‘வன்னியப் பெண் களை அன்னிய சாதியினர் திருமணம் செய்தால் வெட்டு’ என்று பேசினார். இது அப்பட்டமான ‘மனுவின்’ குரல் என்று நாம் கண்டித்தோம்.

இப்போது, கொங்கு வேளாளர் கவுண்டர் பேரவை என்ற அமைப்பிலிருந்து இதே ‘பார்ப்பனக் குரல்’ ஒலித்திருக்கிறது.

கொங்கு வேளாளக் கவுண்டர்களின் பண்பாடு, கலாச்சாரம், குலப் பெருமைகள் அழிந்து விடாமல் காக்கவும், சாதி மோதல் ஏற்படாமல் அனைத்து சமுதாயத்தினருடனும் எப்போதும் நட்புறவை தொடரவும், கொங்கு இன மக்கள் கலப்புத் திருமணங்களை தவிர்த்து, நம் சமூகத்திற்குள்ளேயே திருமண உறவை ஏற்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் கொங்கு வேளாள கவுண்டர்கள் வசிக்கும் கிராமந் தோறும் மற்றும் கொங்கு இன மாணவ மாணவிகள்  கல்வி பயிலும் கல்லூரி தோறும் இயக்கத்தின் சார்பில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்வது என தீர்மானிக்கப்படுகிறது. - இப்படி ஒரு மனுதர்ம பார்ப்பனிய தீர்மானத்தை ஏப்.15 ஆம் தேதி கரூரில் கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் நடந்த பேரவைக் கூட்டத்தில் நிறைவேற்றியுள்ளார்கள்.

மனு என்ற ஏதோ ஒரு பார்ப்பனிய மன நோயாளி, சமூகத்துக்கான சட்டங்களை நிர்ணயிக்கும் அதிகாரங்களை தனக்குத் தானே எடுத்துக் கொண்டு, சமூகத்தை பார்ப்பன சாக்கடையாக்கிவிட்டான். மனு என்பவன் ஒருவன் தானா? பலரா? அவன் காலம் என்ன? - இதற்கெல்லாம் தெளிவான விடைகள் கிடையாது. ஆனால் சமூகத்தை நாற்றமடிக்கச் செய்து நாசமாக்கிடும் பார்ப்பனிய தொற்று நோயைப் பரப்பும் அதிகாரத்தை எவனும் கையில் எடுத்துக் கொள்ளலாம் என்ற செய்தியை மனு விட்டுச் சென்று விட்டான், அதே நாசகார வழியை சாதிக் குழுக்களும் பின்பற்றத் தொடங்கி விட்டன. ஒவ்வொரு சாதி குழுவிலும் சில தனி மனிதர்களே சங்கம் அமைத்துக் கொண்டு, ஏதோ அந்த சமூகத்துக்கு தாங்களே ‘நாட்டாமை’ என்று கருதிக் கொண்டு ஆணையிடத் தொடங்கி விடுகிறார்கள்.

இப்படி ஒவ்வொரு சாதியும் தங்கள் சாதிக்குள்ளே தான் திருமண உறவுகளை வைத்துக் கொள்ள வேண்டும் என்றால், வாழ்க்கையில் ஒவ்வொரு துறையிலும் இதைப் பின்பற்றுவார்களா?

சாதிக்காரன் தெருவில்தான் வாழ வேண்டும்;

சாதிக்காரன் பள்ளியில்தான் படிக்க வேண்டும்;

சாதிக்கார மருத்துவரிடம் தான் சிகிச்சைக்குப் போக வேண்டும்;

சாதிக்காரர்களிடம் மட்டும்தான் சொத்துக்களை விற்க வேண்டும்; வாங்க வேண்டும்;

ஆனால், இவர்களுக்கு துணி வெளுக்க, பிணம் எடுக்க, முடிசிரைக்க, உழைத்துக் கொட்ட, அடிமைத் தொழில் செய்ய மட்டும் இவர்களுக்கு ‘கீழான’ சாதி வரவேண்டும்; அப்படித்தானே?

இந்தப் பார்ப்பனிய பிற்போக்கு கருத்துகளை ஏற்க மறுக்கும் சமத்துவத்தை நேசிக்கும் முற்போக்கு சிந்தனையாளர்கள் இந்த சாதிக் குழுக்களிலேயே ஏராளம் இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம், இந்த பார்ப்பனியத்தைக் கண்டித்துக் குரல் எழுப்ப வேண்டிய சமுதாயக் கடமை இருக்கிறது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

இப்படி ஒரு சந்தர்ப்பத்துக்காகவே காத்துக் கிடந்த பார்ப்பனர்களும், இப்போது துணிச்சலாக வெளியே வந்து விட்டார்கள். “தமிழ்நாடு பிராமண சங்க”த் தலைவர் என்.நாராயணன், இயக்கத்துக்காக நடத்தி வரும் ‘பிராமின் டுடே’ பத்திரிகையில் பார்ப்பன இளைஞர்கள் வேறு சாதியில் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று எழுதியுள்ளார். “பார்ப்பனியம் என்பது ஒரு சாதி மட்டுமல்ல; அது ஒரு வாழ்க்கை முறை; ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின்போது, 15 வயது வந்த ஒவ்வொரு இளைஞரும் பார்ப்பனிய வாழ்க்கை முறையைத் தொடர்ந்து பாதுகாப்பேன்” என்று உறுதி மொழி ஏற்று வருவதாகவும், அவர் பெருமை யுடன் பூணூலை உருவிக் கொண்டு எழுதியிருக்கிறார்.

எந்த பார்ப்பனியத்தின் மனுதர்மத்தை எதிர்த்து சுயமரியாதைப் பெற்று, கல்வியிலும், பதவிகளிலும் தொழில்களிலும் தடைகளைத் தகர்த்து வாழ்வில் ஏற்றம் பெற்றார்களோ, அதே “சூத்திர” கூட்டம் வரலாறுகளை மறந்துவிட்டு மீண்டும் மீண்டும் பார்ப்பனிய மலத்தை மடியில் எடுத்துக் கொண்டு, ‘ஆகா மணம் கமழ்கிறது’ என்று சுவாசிக்கத் தொடங்கியிருக்கிறது.

மனுதர்மத்தைக் காப்பாற்ற ‘சூத்திரர்’களே தொடை தட்டிக் கிளம்பும் காலம் திரும்புவது மாபெரும் அவலம்!

மனுதர்ம சிந்தனைக்கு எதிரான இயக்கத்தின் தேவை இப்போது புரிய வேண்டுமே?

தோழர்களே! மீண்டும் பெரியார் தந்த, அந்த அறிவாயுதத்தை கரங்களில் ஏந்தி நாம் களம் இறங்க வேண்டிய கட்டாயம் வந்து விட்டது.

பார்ப்பானிடம் பாசத்தைக் கொட்டி, “வாங்கோ, வாங்கோ; இந்த திராவிடத்தை ஒழிச்சுடுவோம்; இவாள் தான், தமிழனுக்கு துரோகம் செஞ்சவாள்” என்று, விபீடணர்களும் நடைபாடை விரிக்கக் கிளம்பிவிட்டார்கள்!

பெரியார் திராவிடர் கழக செயல்வீரர்களே!

தமிழர் சமுதாய அவலத்தைக் கண்டு கொதிக்கும் நெஞ்சங்களே!

களப்பணியில் எதிரிகளை திக்குமுக்காடச் செய்து வரும் தீரர்களே!

நாம்தான் மீண்டும் இந்த சவால்களை சந்திக்க வேண்டியிருக்கிறது.

நவம்பர் 26 இல் மனுதர்மத்தை நெருப்பில் போட்டுக் கொளுத்துவோம்; வாருங்கள்!

பார்ப்பனியத்துக்கும் அதற்கு துணை போகும் கோடாரிகாம்புகளுக்கும் பாடம் புகட்டுவோம்!

தயாராவீர்! தயாராவீர்!!

Pin It