லண்டனில்  உயிர் நீத்த டாக்டர் டி.எம்.நாயர்

1919ஜனவரியில் டாக்டர் டி.எம். நாயர் சென்னை திரும்பியதும், ‘சவுத் பரோ’ கமிட்டியைப் புறக்கணிக்கும் படி பார்ப்பனரல்லாதாரைக் கேட்டுக் கொண்டார். வகுப்புவாரிப் பிரதிநிதித் துவத்துக்கும் தனித் தொகுதிக்கும் விரோதமான கருத்துக் கொண்ட இரு பார்ப்பனர்கள் அடங்கிய இக்குழு வினரால் எந்த நியாயமும் கிடைக் காது என்று எடுத்துக் கூறினார். எதிர் பார்த்தது போலவே ‘சவுத்பரோ’ குழு வகுப்பு அடிப்படையில் சட்ட மன்றத்தில் தொகுதி ஒதுக்கக் கூடாது என்று தீர்ப்புக் கூறி விட்டது. ஆனால், இக் கமிட்டியின் முடிவை இந்திய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. ‘மாண்டேகு-செம்ஸ் போர்டு’ மசோதா ஜூன் மாதம், இரண்டாவது முறையாக பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அதற்கென நியமிக்கப்பட்ட நாடாளு மன்ற பொறுக்குக் குழு (Joint Select Committee) வின் முன் தங்கள் வாக்குமூலங்களை அளிக்க, இந்தியாவிலிருந்து  பல்வேறு அரசியல் கட்சி களும்,சங்கங்களும் இங்கிலாந்து சென்றிருந்தன. ஹோம்ரூல் இயக்கம், முஸ்லிம் லீக், காங்கிரஸ், சென்னை மாகாண சங்கம், நீதிக்கட்சி ஆகியவை அவற்றுள் குறிப்பிடத்தக்கவை ஆகும். உடல்நலம் பெரிதும் குன்றியிருந்தபோதிலும், கடமை உணர்ச்சி காரணமாக, நாயர் நீதிக்கட்சி சார்பில் பார்ப்பனரல்லாதார் நலனுக்காக வாதாடுவதற்காக லண்டன் புறப் பட்டார். நடேசனாரிடம் நான் மீண்டும் வரும் வரையில் போர்க் கொடி தாழாமல் பார்த்துக் கொள்க! நம் நீதிக்கட்சியை உங்களிடம் ஒப்படைத்துச் செல்லுகிறேன்!’ என்று கூறினார்.

சென்னை சென்ட்ரல் புகைவண்டி நிலையத்தில் புறப்படுமுன், வழி அனுப்ப வந்த தனது நண்பர் புதுக் கோட்டை ராஜாவிடம் சொன்னார்: ‘நல்லது! நான் அதுவரை உயிருடன் இருப்பேன்!’ இவரது குழுவினரான கே.வி. ரெட்டி, (கே.வெங்கடா ரெட்டி நாயுடு), ஏ.ஆர். முதலியார், கே.ஏ. அப்பாராவ் (நாயுடு), எல். கே.துளசி ராம் ஆகியோர் டாக்டர் நாயருடன் செல்லாது தனியே, பின்னர் லண்டன் சென்று அடைந்தனர். பனகல் அரசர் அகில இந்திய நிலச்சுவான்தார் குழுவின் பிரதிநிதி என்ற பெயரில் லண்டன் சென்றார். லண்டன் அடைந்ததும், உடல் நலமற்ற நிலையிலேயே பாராளுமன்ற குழுவக்கு முன் சமர்ப்பிக்க வேண்டிய அறிக்கையைத் தயாரிக்க முயற்சி செய்தார். இதற்கிடையில் நாயர் உடல் நிலை மேலும் குன்றி மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் கே.வி.ரெட்டியும், சர்.ஏ.ராமசாமி முதலியாரும் ஜூன் 21 இல் லண்டன் சென்று மருத்துவமனையில் நாயரைக் கண்டனர். அவர்களைக் கண்டதும் நாயர், ‘தங்களைக் கண்டது எனக்கு நிம்மதி’ என்று கூறினார். பிறகு கே.வி.ரெட்டியும் நாயரும் மருத்துவ மனையிலேயே அறிக்கையைத் தயாரிக்க முனைத்தனர்.

(தொடரும்)

Pin It