இருபத்தியோராம் நூற்றாண்டின் இறுதியில் இருப்பினும், இருள்போல் நம்மைச் சூழ்ந்துள்ள இந்துமதச் சாதி முறைகளும், அதன் ஆதார நூலாகிய மநுஸ்ம்ருதியும், இந்திய நாட்டின் உயர்நீதிமன்ற, உச்சிக்குடிமி மன்ற (மன்னிக்க-உச்சநீதி மன்றம்) அமர்வுகளில் அமர்ந்து கொண்டு, ஒளிரும் இந்திய தேசத்தைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கின்றன. மனுதர்மம் பல்வேறு நிலைகளில், மனிதம் கொன்று, வர்க்கபேதத்தை உருவாக்கும் அடிப்படை அடிமைத்தனத்தைத் துவக்குகிறது.

Manuமனு தர்மம் எப்படி சாதீயக் குறியீடுகளை உமிழ்ந்தது என்று மனுவின் சில உரைகளை மட்டுமே உணர்ந்தால் போதுமானது.

மனுவின் அத்தியாயம் 1 இல் முப்பத்தியோராம் சுலோகம் சொல்கிறது,

"ப்ரஹ்மாவாகப்பட்டவர், உலக விருத்தியின் பொருட்டு தன்னுடைய முகம், புஜம், தொடை, கால் இவைகளில் இருந்து, பிராமணன், க்ஷத்ரியன், வைசியன், சூத்திரன் இவர்களைக் கிரமமாக உண்டு பண்ணினார்".

மனுவின் பதினோராம் அத்தியாயம், எண்பத்து நான்காம் ஸ்லோகம் சொல்கிறது,

“பிராமணன் மட்டுமே பிறவிச்சிறப்பாளன், தேவரும் மதிக்கத்தக்கவன், மனிதரின் பிறப்பால் உயர்ந்தவன், தேவமந்திரமே அவன் உயர்வுக்கு மூல காரணம், எனவே அவனது முடிவுப்படி நடக்க வேண்டும்".

மனுவின், ஏழாம் அத்தியாயம், முப்பதியேழாம் ஸ்லோகம் சொல்கிறது,

“அரசர்கள் பிராமணர் அறிவுரைகளைக் கேட்பது நன்று, அதுவே ஆக்கம் தரும், அவர்களின் முடிவிற்குப் புறம்பாய் நீதி வழங்கிய அரசர்கள் அழிந்தனர்”

மனு அத்: - 9, ஸ்லோகம் - 317 சொல்கிறது:

“வைதீகமாயிருந்தாலும், லோவ்கீகமாயிருந்தாலும், அக்னி எப்படி மேலான தெய்வமாய் இருக்கிறதோ, அப்படியே பிராமணன் ஞானியை இருந்தாலும், மூடனாய் இருந்தாலும், அவனே மேலான தெய்வம், அனைவரும் அவனை வணங்க வேண்டும்”

மனு : அத் : 2 ஸ்லோகம் : 135 சொல்கிறது:

“பத்து வயதுள்ள பிராமணனையும், நூறு வயதுள்ள க்ஷத்ரியனையும், தகப்பன் பிள்ளையாக அறிய வேண்டியது, பிராமணன் தகப்பன் மரியாதையையும், க்ஷத்ரியன் புத்திர மரியாதையையும் வகிக்க வேண்டியது".

அத்: 10 ஸ்லோகம் 73 சொல்கிறது:

"பிராமணனுக்குரிய தொழிலைச் செய்தாலும், சூத்திரன் ஒருக்காலமும் பிராமண ஜாதியாக மாட்டான், சூத்திரன் செய்கிற தொழிலைச் செய்ய நேரிட்டாலும் பிராமணன் சூத்திரனாக மாட்டான், ஏனென்றால் ஈனத் தொழிலைச் செய்தாலும், அவன் ஜாதி உயர்ந்தது அல்லவா? இப்படியே இந்த விஷயங்களை ப்ரஹ்மா நிச்சயம் செய்திருக்கிறார்”

அத்: 10 ஸ்லோகம் : 125 சொல்கிறது:

"பின்னும் மீதமான அன்னம், பழைய வஸ்திரம், நொய் அரிசி முதலிய சாரமில்லாத தானியம், பழைய பாத்திரம், எச்சில் உணவு இவற்றை சூத்திரனுக்குக் கொடுத்துப் புசிக்கச் செய்ய வேண்டும்”.

இவற்றில் காணப்படும் மூலம் என்ன? சமத்துவமின்மை என்னும் ஒரே வார்த்தை தான், இவ்வாறு பல ஸ்லோகங்களாக வெளிவருகிறது. மனுவின் வழிகாட்டு நெறிமுறைகளில் முதன்மையானது, சமத்துவமின்மையைக் கட்டிக் காக்க வேண்டும் என்கிற மிகுந்த ஆர்வம் மட்டும்தான்.

ஒரு தேசத்தின் வளர்ச்சிக்கு இன்றியமையாத காரணிகளாய், மூன்றைக் கொள்ளலாம். அவை முறையே:

1) சமூக சமத்துவம்.
2) பொருளாதாரப் பாதுகாப்பு.
3) அனைவருக்குமான கல்வி.

1) சமூக சமத்துவம்.

முதன்மைக் காரணியான சமூக சமத்துவம், இன்று இந்தியா முழுவதும் கேள்விக்குரியதாகவே இருக்கிறது. சமூகத்தில் சமமாக உழைக்கும் மக்கள் சமமான வாழ்வியல் உரிமைகளையும் உணர்வுகளையும் பெற்றிருக்க வேண்டும், ஆனால், இந்து மதம் மிகக் கடுமையாகப் பயிற்றுவிக்கப்பட்ட உரிமை மறுப்புகளையும், அவமதிப்புகளையும் தனக்குள்ளே பொதிந்து வைத்துக் கொண்டிருப்பது மட்டுமன்றி அவற்றைப் போற்றிப் பாதுகாக்க கடவுளர்களையும் துணைக்கு அழைத்து வரும், எடுத்துக்காட்டாக “ஆலயங்களின் கருவறைகளுக்குள் பிராமணர் மட்டுமே நுழைய வேண்டும்” என்பதைக் கொள்ளலாம். ஆலயங்கள் எப்படி சமூகப் பொதுமன்றங்களாக இருந்தனவோ அதே வேகத்தில் அவற்றின் உட்புறங்களில் சமூக சமத்துவமின்மையை ஆணித்தரமாக இன்றும் நிலை நாட்டுவதில் வெற்றி பெறுகின்றன இந்துமத ஆலயங்கள்.

2) பொருளாதாரப் பாதுகாப்பு.

பொருளாதாரப் பாதுகாப்பு என்கிற நிலைப்பாடு, இன்று வணிகம் உலகமயமாக்கப்பட்டதன் விளைவாக பரவலாக கிடைக்கப் பெற்றுள்ளது என்றாலும், இந்துமதமும், அதன் சாதீயக் கட்டமைப்பும் பொருளாதாரப் பாதுகாப்பை இன்னும் கேளிவிக்குள்ளாக்குகின்றன. கிராமப்புறங்களில் நிலவும், நிலமான்ய முறைகளும், பண்ணை அடிமை முறைமைகளும் இன்றளவும் விவசாயப் பணிகளில் ஈடுபடும் உழைக்கும் மக்களின் உழைப்பை மட்டுமன்றி, அவர்களின் தொழில் முனையும் ஆர்வத்தையும் அடியோடு அழிக்க முனைகின்றன. ஒடுக்கப்பட்ட மக்களின் விளைநிலங்களில் பணிபுரிய சாதி இந்துக்கள், அவர்கள் கூலி வேலை செய்பவாராக இருப்பினும் வருவதில்லை, உள்ளூர் சந்தைப்படுத்தலில் கூட ஒடுக்கப்பட்ட மக்களின் விளைநிலங்கள் விளைவித்த காய்கறிகள் கூட தீண்டாமைக்குத் தப்புவதில்லை, ஊரகப் பகுதிகளில் வாழும், ஒடுக்கப்பட்ட சமூக இளைஞர்கள் இன்றும் தேவையான நிலங்களும், வாய்ப்புகளும் இருந்தும் நகர்ப்புறம் நோக்கி நகர்வதற்கான முக்கியக் காரணிகளில் சாதீயக் கட்டமைப்பு குறிப்பிடத்தகுந்த பணியாற்றுகிறது என்று சொன்னால அது மிகையாக இருக்க இயலாது. எனவே பொருளாதாரப் பாதுகாப்பு என்கிற முன்னேற்றக் காரணியை இந்து மதமும், அதன் அடிப்படை சாதீயக் கட்டமைப்பும் அடியோடு தகர்க்கிறது.

3) அனைவருக்குமான கல்வி.

மூன்றாவது காரணியான அனைவருக்குமான கல்வி, மனித குலத்தின் அளப்பரிய ஆற்றலுக்கான திறவுகோல். கல்வி மனிதனை அவனுடைய மிகச் சிறந்த நிலைகளுக்கு எடுத்துச் செல்கிறது. இன்றைய இந்தியாவில் அடிப்படைக் கல்வி அனைவருக்கும் கிடைக்கிறது என்றே வைத்துக் கொண்டாலும் (இது நிகழ்ந்தது கடுமையான போராட்டங்களின் விளைவாகவும், பல்வேறு தலைவர்களின் அயராத உழைப்பாலும்), இடஒதுக்கீடு போன்ற அனைவருக்குமான கல்வியை, சம வாய்ப்பை உறுதி செய்யும் காரணியை பல்வேறு தளங்களில் நின்று, இந்து மதமும் அதன் ஆதிக்க சாதிக் கட்டமைப்புகளும் எதிர்த்துப் போரிடுவதை இந்தியா முழுவதும் நீங்கள் இனிதே காணலாம்,

ஊடகங்களின் வாயிலாக, மதவாத அமைப்புகளின் மூலமாக இந்தியத் தொழில் நுட்பக் கழகங்களின் வாயிலாக இன்னும் எண்ணற்ற நிலைகளில் கல்விக்கான சமவாய்ப்பை இந்து மதம் கேள்விக்குரியதாக்கும். இன்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், பள்ளிக்கூடங்களில் சாதீய வேறுபாடுகள் அப்பட்டமாக இருக்கிறது என்பதற்கு, அருகாமையில் வெளியான கீழ்க்கண்ட ஆய்வுகளை படித்து உணர்வதன் மூலம் நீங்கள் உறுதி செய்து கொள்ளலாம்.

இணைப்பு:
http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/941496.stm
http://www.jstor.org/pss/2941637

இந்துமதத்தின் உயரிய தத்துவம், அண்ணல் அம்பேத்கர் சொன்னதைப் போல மிக எளிமையான ஒன்றாகும், “உயர் சாதி மனிதரின் சொர்க்கம், உழைக்கும் மக்களின் மீள முடியாத நரகம்".

இன்று வளர்ந்து, பொருளாதார நிலைகளில் உயர்ந்து நிற்கும் ஒரு இந்துமதக் கட்டமைப்பின் கடைசிப் பிரிவு மனிதன், என்னதான் உயரிய வாழ்க்கை நிலைகளை இருப்பினும், ஊரகப் பகுதியில் இருக்கும் தனது கிராமத்தின் விழாக்களின் ஒரு சமூக ஒடுக்கு நிலைக்காட்பட்ட வாழுரிமை நிலைகளில் சிறுத்துப் போய் கிடப்பதை நான் மட்டும் சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

அதனை மனு தனது அத்தியாயம் 12, ஸ்லோகம் 4 இல் இவ்வாறு சொல்கிறார்:

"வேதத்தைக் கற்க முனையும் சூத்திரனின் காதில் ஈயத்தையும், அரக்கையும் காய்ச்சி ஊற்ற வேண்டும், மீறிப் படிப்பானேயானால், அவனது நாக்கைத் துண்டிக்க வேண்டும், வேதத்தை முழுமையாக ஒரு சூத்திரன் படித்து அறிவானேயானால் அவனைக் கண்டதுண்டமாக வெட்டிக் கூறு போடவேண்டும்".

ஆகா, இதுவன்றோ மதம் தன்னை நம்புகின்ற மனிதனுக்குச் செய்யும் ஒரு மிகப்பெரும் நன்மை. உலகின் எந்த ஒரு மனித சமூகமும், மதக்கருத்துக்களை சக மனிதன் அறிந்து கொள்வதை தடுக்கவில்லை, பொதுமக்களுக்கு அறிவையும், கல்வியையும் மறுத்த ஒரே மதம் உலகில் ‘தெய்வீகமதம்’ என்று புகழப்படும் இந்து மதமும் அதன் ஆஸ்தான அறிஞர் "முனைவர் மனு” அவர்களையும் மட்டுமே சாரும்.

இன்றைக்கு இந்து மதத்தின் சட்டங்களும், சட்ட முன்வடிவுகளும் மனு தர்மம் என்கிற ஒரு சமத்துவமற்ற, பொருளாதார சுதந்திரமற்ற, சமமான கல்வி வாய்ப்பை மறுக்கின்ற தர்மத்தை அடிப்படையாக வைத்தே உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றின் அடிப்படையில் தான் இந்தியாவில் மக்களுக்கான நீதி வழங்கப்படுகிறது. இவற்றின் அடிப்படைக் கூறுகளை அடித்து நொறுக்க வேண்டும் என்று சொனால், இதனைப் போற்றிப் பாதுகாக்கின்ற சட்டங்களை உடைக்க வேண்டும், சட்டங்களை உடைக்க வேண்டும் என்றால் அரசியல் விழிப்புணர்வும், அரசியல் அதிகாரமும் வேண்டும், இவைகளைப் பெற வேண்டுமென்றால் நீங்கள் முதலில் ஒரு இந்துவாக இருக்கக் கூடாது.

அதனால் தான் "தமிழர்கள் இந்துக்கள் அல்ல, அல்ல, அல்ல” என்று அறுதியிட்டுச் சொல்கிறேன், உரக்கக் கூவுகிறேன். இந்து மதம் என்கிற இழிவுகள் மிகுந்த சாக்கடையை இனி எடியூரப்பங்களும், மோடிக்களும், அத்வானிகளும் கிறிஸ்துவ தேவாலயங்கள் மீது கல்லெறிந்தே காப்பாற்றி விடுவார்கள், அல்லது நிறமற்ற குண்டுகளை இந்துத்துவத் திரிகளால் பற்ற வைத்து ஆட்சியில் அமர்வார்கள், சாதியின் கொடும்கரங்களில் இருந்தும், விழித்து எழ வேண்டியது நாமும் நம் இளைஞர்களும் தான்.

- அறிவழகன் கைவல்யம்

Pin It