பல்லடத்தில் நடந்த நாத்திகர் விழாவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை தொடர்ச்சி:

இப்போ திருமணம் பன்றப்ப பையன் எனக்கு பி.இ. படித்த பெண் வேணும்; எம்.பி.பி.எஸ். படித்த பெண் வேணும்; எல்லாம் கேட்பான். அதற்கு மேல் இவனும் படித்திருப்பான். போய் வரதட்சணை கேட்பான். என்னப்பா நீ இவ்வளவு படிச்சுட்டு போய் வரதட்சணை கேட்கிறாயே? என்றால் எங்கம்மா ஒத்துக்கவே மாட்டேங்கிறாங்க. எங்கப்பா ஒத்துக்கவே மாட்டேங்கிறாங்க என்பான். அப்பா சொன்ன பல விசயத்தை கேட்க மாட்டான். தண்ணி போடாதே என்று சொன்னால் கேட்க மாட்டான். அவன்கூட சேர்ந்து சுத்தாதே என்று சொன்னால் கேட்க மாட்டான். அப்பா வரதட்சணை கேட்க சொன்னா மட்டும் ஒத்துக்குவான். எங்கப்பா சொல்றாருங்க எப்படி மீறுவது எங்கம்மா ஆசைப்படுதுங்க என்பான்.

இப்படி பக்தன் பலவற்றில் கடவுளுக்கு மாறாக நடப்பான். ஆனால் இந்த மாதிரி வரும்போது இல்லை. அது கடவுளுக்கு எதிரானது அதை செய்யக் கூடாது என்பான். எதை என்றால் கடவுள் எதையெல்லாம் சொல்லி வைத் திருக்கிறாரோ அதை மீறுவது தப்பு என்பான். அவங்க வுங்க எப்படீனு பிரித்து வைத்திருக்கிறாரோ அப்படி அப்படி இருக்கனும் என்பான். உலகத்தில் எல்லா மதமும் எல்லா கடவுள்களும் மனிதனை சமம் என்று சொன்னது. ஆண்ட வன் முன்னால் அனைவரும சமம் என்று எல்லா மதத் தத்துவங்களும் சொன்னது. நம்ம இந்து மதம் மட்டும் வித்தி யாசமாக சொல்லியது. ஆண்டவன் முன்னால் அனைவரும் சமம் இல்லை என்று; இதுதான் இந்துமதத் தத்துவம்.

இப்ப மத்த கடவுளுக்கும் நம்ம கடவுளுக்கும் ஒரு வேறுபாடு எல்லா மத வேதங்களையும் மதத் தலைவர்கள் படியுங்கள் என்று சொன்னார்கள். பைபிளை படி என கிருத்துவ மதக் குருவும் சொன்னார். பெற்றோர்களும் சொன்னார்கள். குரானை படி என்று இஸ்லாமிய மதக் குருவும் சொன்னார், பெற்றோர்களும் சொன்னார்கள். ஆனால் இந்து மதத் தலைவர்கள் சொன்னார்கள் வேதத்தைப் படிக்காதே. ஆனால் ஏற்றுக் கொள் என்று. பெரியார் கேட்டார், ‘ஏண்டா பத்திரத்த படிக்காம கையெழுத்து போடச் சொல்லுகிற மாதிரி வேதத்தை படிக்காம ஏற்றுக் கொள் என்றால் எப்படி ஏற்றுக் கொள்வது? அதுல என்ன இருக்குதுனு சொல்லு. அப்புறம் ஒத்துக் கொள்வதா இல்லையானு நான் சொல்றேன். நீ பத்திரத்தை கொண்டு வந்து கையெழுத்து போடுனா நான் படிச்சு பார்த்துதான் போடுவேன். படிச்சு பார்க்காம நாம கையெழுத்து போட்டதா கருதிக் கொண்டு நம் மேல் இந்த மத தத்துவத்தை திணிக்கிறார்கள்.

ஆனால், அவன் (பார்ப்பான்) வசதிக்கு அதை பின்பற்றிக் கொள்கிறான். கொலை செய்யப்பட்ட சங்கரராமனை சங்கராச்சாரி ஏன் கொலை பண்ணினான் என்றால், அவர் வெளிநாட்டுக்கு போக விரும்பினார். உள்நாடு அலுத்துப் போய் வெளிநாட்டில் போய் வித்தியாசமாய் பார்க்கலாம்னு விரும்பினார். இவன் சொன்னான் இல்லை, இந்து மதத் தத்துவம் அதை அனுமதிக்காது. கடலைத் தாண்டக் கூடாது என்றான். உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டான். இந்து மதத் தத்துவம் கடலைத் தாண்டக் கூடாது என்கிறது, சங்கராச்சாரி தாண்டுவது தப்பு என்றான்.

நம் தமிழன் தத்துவம் அப்படிச் சொல்லவில்லை. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்றது. கடல் பயணத் திற்காக நெய்தல், திணை என்று தனியாக வைத்தான். போருக்கு, கல்விக்கு, தூதுக்கு கடல் தாண்டி பயணம் போகலாம். கடல் தாண்டி போவது இயல்பு நமக்கு. அவன் போகக் கூடாதுனு சொன்னான். இவன் மீறி போகலாம் னான். சங்கர் ராமன் எதிர்த்தார். ஆளை முடிச்சிட்டான். ஆனால், அந்த சிறிய செய்தியில் சாஸ்திரத்தை மீறக் கூடாது என்று கருதிய சங்கரராமன் மனைவி, முதலமைச்சர் கிட்ட பணம் வாங்க போனாங்க. பார்ப்பன பெண் மொட்டை பாப்பாத்தி காவி கட்டீட்டு அல்லவா போக வேண்டும். இந்தம்மா முழு சடையோடு பழைய உடையோடு போய் பணத்தை வாங்குவதை பத்திரிகையில் பார்த்தோம். அவன் சாஸ்திரத்தை மீறாதே என்று நம்மைப் பார்த்து சொல்வான். சங்கரராமன் மனைவி சாஸ்த்திரப்படி மொட்டை அடித்துக் கொண்டு காவி கட்டிக் கொண்டு முக்காடு போட்டு போய்தான் காசு வாங்கியிருக்கனும்.

அவங்களுக்கு வசதின்னா மீறுவார்கள். கடல் தாண்டி போகக் கூடாதுனு சாஸ்திரம் வெச்சிருக்கிற அவன், அமெரிக்காவில போய் அர்ச்சனை பண்ணினா போச்சுல. அவன் அய்யரே இல்லையே மதத்தை விட்டு போயிட்டானுல. ஆனாலும் இங்கிருந்து அங்க போயி பூஜை செய்து கொண்டிருக்கிறார்கள்.

அவன் வேதம் பாலை விற்கக் கூடாது, உணவை விற்கக் கூடாது. விற்றால் அடுத்த ஜென்மத்தில் விற்றவன் பன்றி யாக பிறப்பான் என சொல்கிறது. ஆனால் பிராமணாள் ஹோட்டல் நடந்து கொண்டிருக்கிறது. அப்ப ஒன்று அவன் அடுத்த பிறவியில் பன்றியாப் பிறக்கனும். இல்ல இப்ப திரிகிற பன்றிகள் போன பிறவியில் ஹோட்டல் நடத்தின அய்யராய் இருக்கனும். அவன் வசதிக்கு அவன் மீறிக் கொள்வான். கலப்புத் திருமணத்தை மறுப்பான். ஆனால், காந்தி வீட்டில் ராஜாஜி பெண் கொடுப்பார். அது காந்தி என்றால் கொடுக்கலாம். நம்மூரில் கொடுக்கக் கூடாது. அய்யர் போய் சுப்புலட்சுமியை கல்யாணம் பண்ணிக்கலாம். இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் சதாசிவ அய்யர் கல்யாணம் பண்ணிக்குவார். இவள் பாப்பாத்தி ஆகிவிடுவாள். அல்லது சௌந்தத்தரம் மாள் ராமச்சந்திரனை கல்யாணம் பண்ணினாலும் பாப்பாத்தியா இருப்பா. ருக்மணி, அருண்டேல் என்ற ஆங்கிலேயனை திருமணம் செய்தாலும் பாப்பாத்தியா இருப்பா. அப்பெல்லாம் பார்ப்பன தன்மை போகாது.

இப்ப இன்போசிஸ் நாராயணமூர்த்தி குடியரசு தலைவராக வரலாம்னு சொன்ன மாதிரி, அன்னைக்கு ருக்மணி அருண்டேல் குடியரசு தலைவராக வருவாங் கன்னு சொன்னாங்க. அந்த அம்மாவுக்கு ‘டான்ஸ்’ ஆடுவது மட்டும்தான் தெரியும்; வேறென்ன தெரியும் அந்தம்மாவிற்கு.

அவன் வெள்ளையன், அவன் ஆரியன். நிறத்தால் பிரித்தான் வர்ணபேதம் என்று சொன்னான். வெள்ளையாக இருப்பவன் பிராமணன். மஞ்சளாக இருப்பவன் சத்திரியன். பழுப்பாக இருப்பவன் வைசியன். கருப்பாய் இருப்பவன் நம்மாள் சூத்திரன். நிறத்தால் பிரித்தான். அப்புறம் எப்படீடா உன் கடவுள் ராமனும் கிருஷ்ணனும் கருப்பாய் இருக்காங்க. இட ஒதுக்கீட்டில் வந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியை பாப்பாத்தி கல்யாணம் பண்ணிக்கிற மாதிரி வெல்ல முடியாத நம் தலைவர்களை அவன் கடவுள் ஆக்கி விட்டான். எதிர்ப்பான்; இல்லை யென்றால் நம்மாளா மாறிவிடு என்பான். அவன் வசதிக்கு பலவற்றை செய்து கொண்டிருக்கிறான். நாம் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். அத்தனையையும் கடவுள் பெயரால் நம்மை நம்ப வைத்தான் நாம் ஏற்றுக்கொண்டிருக்கிறோம்.

பெரியார் கடவுள் இல்லையென்று சாதாரணமாக சொல்லவில்லை. இப்படி சொல்கிறார்:

“மனிதனுக்கு மனிதன் தொடக் கூடாது. கண்ணில் படக் கூடாது. தெருவில் நடக்கக் கூடாது. கோவிலுக்குப் போகக் கூடாது. குளத்தில் தண்ணீர் எடுக்கக் கூடாது என்கிறதுபோல கொள்கை தாண்டவம் ஆடும் ஒரு நாட்டை பூகம்பத்தால் அழிக்காமலோ, எரிமலையின் நெருப்புக் குழம்பால் எரிக்காமலோ, சமுத்திரம் பொங்கி மூழ்கச் செய்யாமலோ, பூமிப் பிளவில் அமிழச் செய்யாமலோ, சண்ட மாருதத்தால் துகள் ஆக்காமலோ விட்டிருப்பதை பார்த்த பிறகும் கூட கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும், அவர் நீதிமான் என்றும், அவர் சர்வதயாபதர் என்றும் யாராவது சொல்ல வந்தால் அவர்களை என்னவென்று நினைப்பது என்பதை நீங்களே முடிவுசெய்து கொள்ளுங்கள்.”

இதெல்லாம் பார்ப்பதற்கு அப்புறமும் கடவுள் இருக்கிறார் என்பதை நீ ஒத்துக் கொள்கிறாயா? ஆக பெரியாரின் கடவுள் மறுப்பு சாவர்க்கரின் கடவுள் மறுப்பு அல்ல. கமலகாசனின் கடவுள் மறுப்பு அல்ல. இவர் கடவுள் மறுப்பு மக்களை ஒன்றாக்க வேண்டும் என்ற சிந்தனை யோடு உழைப்பை மதிக்க வேண்டுமென்ற சிந்தனையோடு உழைப்பவனை அவமானப்படுத்துபவனை எதிர்க்க வேண்டுமென்ற சிந்தனையோடு முன் வைக்கப்பட்ட கடவுள் மறுப்பு அதுதான், பெரியாரின் கடவுள் மறுப்பு. அவர்  கடவுளை மறுப்பதற்குக்கூட பல காரணங்களை சொல்கிறார். இன்னொரு இடத்தில் சொல்கிறார். ஏனென்றால் பெரியார் திராவிடர் கழகம் ஏன் நாத்திகர் விழா எடுக்கிறது வெறும் கடவுள் இல்லையென்று சொல்லி விட்டால் எங்களுக்கு ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை. என்ன நமக்கு கொஞ்சம் செலவு மிச்சமாகும். அதற்கு மேல் ஒன்றும் ஆகிவிடாது. சாதி வேறுபாடுகளைப் பார்த்து பெரியாருக்கு கோபம் வந்தது.  பொதுவாக நாம் சிந்திப்பதற்கு மாறுபட்டு சிந்தித்தவர் பெரியார்.

நாத்திகம் என்பது நம் காலத்தில் தான் கடவுள் மறுப்பாக பொருள் கொள்கிறோம். புராண காலத்தில் வேத மறுப்பை தான் நாஸ்திகம் என்றார்கள். நாஸ்திகோ வேத நிந்தக என்பது வேத சுலோகம். கடவுளைமறுத்தாலும் கவலை இல்லை. பார்ப்பானுக்கு உயர்வும், உழைக்கும் நமக்கெல்லாம் இழிவும் கற்பித்து, நியாயப்படுத்தும் வேதத்தை மட்டும் மறுத்துக்கொள்ள மாட்டோம் என்று கூறும் சுயநல பார்ப்பன மனோநிலைதான் அது. அந்த பார்ப்பன சிந்தனைக்கு எதிர்நிலை தான் பெரியாரின் நிலை. நாத்திகம் என்பது சாதி ஒழிப்புக்கு, இழிவு ஒழிப்புக்காக என்பதே பெரியாரின் நிலைப்பாடு.

சைமன் கமிஷனை எல்லோரும் எதிர்த்தார்கள். நேற்று பிறந்த நாள் வந்தது புரட்சியாளர் அம்பேத்கருக்கு. இரண்டே பேர் தான் இந்தியாவில் சைமன் கமிஷனை வரவேற் றார்கள், பெரியாரும் அம்பேத்கரும். எதிர்த்தவர்கள் சொன்ன காரணம் அந்த குழுவில் இந்தியர்கள் யாரும் இல்லை என்று எதிர்த்தார்கள். பெரியாரும் அம்பேத்கரும் சொன்னார்கள், இந்தியர்கள் இல்லையென்பதால் தான் நாங்கள் வரவேற்கிறாம். ஒருவேளை இந்தியன் இருந்தால் பார்ப்பானாக இருப்பான். அவன் எனக்கு தொல்லைதான் கொடுப்பான். எங்களுக்கு எதிராக செயல்படுவான். ஆக, இந்தியன்  இல்லை என்பதால் வரவேற்கிறோம். ஏன்னா ஆங்கிலேயன் நடுநிலையாக இருப்பான் என்ற எதிர்பார்ப்போடு.

இவர்களெல்லாம் பெரியாரைப் பார்த்து கேட்டார்கள், அந்நிய ஆட்சிக்கு எதிராக இருக்கிறீர்களா? அம்பேத்கரை கேட்டார்கள், விடுதலை பற்றி உங்கள் கருத்து என்ன? அம்பேத்கர் சொன்னார் விடுதலை பற்றி அப்புறம் சொல்கிறேன். விடுதலை பெற்ற இந்தியா யார் கைக்குப் போகும் என்று முதலில் சொல். அப்புறம் விடுதலை வேண்டுமா? வேண்டாமா? என்று நான் சொல்கிறேன். விடுதலைபெற்ற இந்தியா மீண்டும் ஓர் அந்நியன் கைக்கு நமக்கு தொடர்பில்லாதவன் கைக்கு போய் நமக்கு தொடர்ந்து தாழ்ந்த நிலையே இருக்குமானால் எனக்கு எதற்கு விடுதலை அவனே இருந்துட்டுப் போறான். அதைத்தான் பெரியாரும் சொன்னார். யார் அந்நியர்? என்னைத் தொடாதே, கிட்ட வராதே, பார்த்தால் தீட்டு என்று சொல்கிற நீ எனக்கு அந்நியனா? ஹலோ பிரதர் என்கிறான். கை குலுக்குகிறான். நான் சமைத்ததை சாப்பிடுகிறான். அவன் எனக்கு அந்நியனா?

இங்குதான் மற்றவர்கள் பார்த்த பார்வைக்கும் புரட்சி யாளர் அம்பேத்கரும்,பெரியாரும் பார்த்த பார்வைக்குமான வேறுபாடுதெரிகிறது. அம்பேத்கர் ஒரு முறை சொன்னார் உன்னுடைய நலம் பெரிதா? நாட்டின் நலம் பெரிதா? என்று கேட்டால்  நான் நாட்டின் நலம்தான் பெரிது என்று சொல் வேன். நாட்டின் நலம் பெரிதா? ஒடுக்கப்பட்ட மக்களின் நலம் பெரிதா? எனக் கேட்டால் எனக்கு ஒடுக்கப்பட்ட மக்களின் நலம்தான்பெரிது. நாட்டின் நலம் பற்றி எனக்கு அக்கறை இல்லை என்று சொன்னார்.  எதற்கு நாடு, எதற்கு ஆட்சி, எதற்கு விடுதலை எல்லாம் கேட்கிறோம். இந்த நாட்டு மக்கள் எப்போதும் போல இருப்பார்கள் என்றால் அப்புறம் எதற்கு மாற்று அரசு, அது தமிழ்நாடாக வருவதாக இருந்தாலும் சரி, விடுதலை பெற்ற தமிழ்நாடு யார் கைக்கு வர வேண்டும் என்ற கேள்வியோடு தான் தமிழ்நாடு விடுதலையும் பேசப்பட வேண்டும். இல்லையென்றால் அதற்கு பொருள் இல்லை. யாரோ எழுதி வைத்த தத்துவம் என்பதற்காக நாடு பிரிய வேண்டும் என்று கருதினால் அது பொருளில்லாத பிரிவினை, பொருளில்லா நாட்டுக் கொள்கை, அது பொருளோடு இருக்க வேண்டுமென்ற வர்கள் பெரியாரும் அம்பேத்கரும் அதை நினைவு கூர்ந்து தான் இந்த நாத்திகத்தை பேசிக்கொண்டிருக்கிறோம்.

பெரியார் சொன்னார், “முதலில் சாதி வித்தியாசம் என்கிற கொடுமைத் தன்மை என்பது இந்த நாட்டை விட்டு ஒழிய வேண்டும். ஒழிய வேண்டுமா வேண்டாமா என முடிவு தெரிந்துவிட வேண்டும். இரண்டாவதாக ஒரு மனிதனுக்கு கீழாக மேலாக சாதி என்று ஒன்றும் இல்லை என்ற முடிவுக்கு வந்தாக வேண்டும். அதற்கு மேல் சாதி வித்தியாசத்திற்கு  ஆதரவாய் இருப்பவைகளை அடியோடு ஒழிக்க முயல வேண்டும். அப்படி செய்யாமல் உயர்வு தாழ்வை போக்கி விடலாம் என்று கருதினால் அது நுனி மரத்தில் உட்கார்ந்துகொண்டு அடிமரத்தை வெட்டுகிற மனிதனின் முட்டாள்தனமான செய்கைக்கு ஒப்பாகும்.”

(தொடரும்)

Pin It