என் 18-ஆவது அகவை 1943-இல் முடிந்தது. அதுவரை நான் படித்தவை - ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், விவேகசிந்தாமணி, மூதுரை, திருவருட்பா முதலான நூல்களாகும். அவை கடவுள் ஒருவர் உண்டு; மனிதனை மனிதன் நேசிக்க வேண்டும்; மது அருந்துவது தீது; பிறன்மனையை விரும்புவது தவறு; சூதாடுவது கேடு என்ற உணர்வுகளை எனக்கு ஊட்டின.

அப்போதே குடிஅரசு, விடுதலை, தமிழ்ப்பொழில் ஏடுகளையும், திருக்குறளையும் ஆசிரியர் ந. கணபதி மூலம் பெற்றுப் படித்தேன். மனிதனை மனிதன் நேசிக்க முடியாத செயற்கைத் தடைகள் உண்டாக்கப்பட்டிருப்பதை இவற்றின் மூலம் உணர்ந்தேன். இவற்றை உண்டாக்கியவர்களும் காப்பாற்றியவர்களும் பார்ப்பனர்கள் என்பதை உணர்ந்தேன்.

28.10.1944 அன்றுதான் முதன்முதலாகத் தந்தை பெரியார் அவர்களைப் பார்த்தேன். அன்றே இரண்டு இடங்களில் அவருடைய உரையைக் கேட்டேன். அன்றே “கடவுள் ஒருவர் இருக்க வேண்டிய தேவையில்லை” என்பதை ஒருவாறு உணர்ந்தேன். திருக்குறளையும், குடிஅரசுப் பதிப்பக வெளியீடுகளையும், தேவநேயப் பாவாணரின் ‘ஒப்பியல் மொழி நூலை’யும் 1946-க்குள் ஆழ்ந்து படித்தேன்.

உழைக்கும் மக்கள் கூட்டத்தை அடக்கி ஒடுக்கிச் சுரண்டுவதற்குத் திட்டமிட்டே வருணசாதி அமைப்பு - நால்வருண சாதி அமைப்பு கற்பனையாகவும் செயற்கையாகவும் பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்டிருப்பதையும் அவற்றின் விளைவாகப் பெரிய எண்ணிக்கைக் கொண்ட திராவிட இனத்தமிழர்கள் கீழ்ச்சாதியாகவும் இழிசாதியாகவும் ஆக்கப்பட்டிருப்பதையும் நன்கு புரிந்தேன்.

1946-1949-ஆம் ஆண்டுகளில் ஒரே மூச்சில் தொல்காப்பியம், திருக்குறள் இவற்றின் பல உரைகளையும் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அத்துடன் மாக்ஸ்முல்லரின் ஆங்கில மொழிபெயர்ப்பில் மனு நெறி அல்லது மனு தரும சாஸ்திரம் (Code of Manu), சுக்கிர நீதி, இவற்றை அண்ணாமலைப் பல்கலைக் கழக நூலகத்தில் ஆய்வுப் பகுதியில் அமர்ந்து படிக்கவும் குறிப்பெடுக்கவும் செய்தேன்.

பெரியார் புகட்டிய வருண சாதி பற்றிய விளக்கங்களும், அவையே சமுதாய வாழ்க்கை, வீட்டு வாழ்க்கை - சமய வாழ்க்கை இவற்றில் படிந்து விட்டதையும், இவற்றை இந்த வடிவில் காப்பாற்றி நிலைக்க வைத்திட அரசர்களும் பேரரசர்களும் அடிப்படையாக விளங்கியதையும் தெளிவுபட உணர்ந்தேன்.

எதிர்பாராத தன்மையில், 1947 மே திங்களில் மறைமலையடிகளாரை நேரில் பல்லாவரம் இல்லத்தில் கண்டு உரையாடும் வாய்ப்பைப் பெற்றேன். அதற்கு முன்னரே அன்னாரின் நூல்களைப் படித்திருந்தேன். அதே மூச்சில் பா.வே. மாணிக்க நாயக்கரின் ஆய்வு நூல்கள் அனைத்தையும், பாரதிதாசன் கவிதைகளையும், ‘அக்டோபர் புரட்சி’ என்னும் லெனினின் பொதுவுடைமைப் புரட்சிப் பற்றிய குறு நூலையும் வாங்கிப் படித்தேன். எந்த நூலைப் படித்தாலும் முதன்மையானவற்றைக் குறிப்பு எடுக்கும் பழக்கம் எனக்கு உண்டு. அதனால் 1950-இல் என் ‘குறள் மலர்’ ஏட்டில் சில கட்டுரைகளை இவற்றை விளக்கி எழுதினேன். அவற்றைப் பார்க்கவும் படிக்கவும் பெரியாருக்கு வாய்ப்பு இருந்தது.

15.1.1952 முதல் இந்திய அரசமைப்புச் சட்டத்தை முறையாகப் படிக்கத் தொடங்கினேன். இந்தி மொழி இந்தியாவின் ஆட்சி மொழியாக ஆக்கப்பட்டிருப்பது; பழைய வழக்கச் சட்டங்கள் - 1950-இல் அரசமைப்புச் சட்டம் வந்த பிறகும் செல்லுபடியாகும் என்கிற கெட்டியான ஏற்பாடு; உடைமை வைத்திருப்போருக்கு உள்ள உறுதியான பாதுகாப்பு. இவை இச்சட்டத்தின் உயிரான கூறுகளாக இருப்பதை நன்கு உணர்ந்தேன். இவற்றைப் பற்றி விரிவாக, 13.4.1954-இல் பெரம்பலூரில் பெரியார் முன்னிலையில் பேசிடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அன்றே அவருடைய நெஞ்சில் எனக்கு நல்லதொரு இடம் கிடைத்துவிட்டது.

1956 மே முதல் முழுநேரப் பணியாளனாக நான் ஆனேன். 1957-இல் திருச்சியிலிருந்து நான் சொந்தமாக வெளியிட்ட ‘குறள் முரசு’ வார ஏட்டில் “இன்றைய அரசமைப்புச் சட்டப்படி ஆட்சி நடத்தும் எவராலும் சமுதாய, பொருளாதார விடுதலையை ஒருபோதும் பெற்றுத்தர முடியாது” என்பதை விளக்கிப் பல கட்டுரைகளை எழுதினேன். அவற்றைப் பாராட்டும் தன்மையில், அப்படியே அக்கட்டுரைகளை ‘விடுதலை’யில் பெரியார் வெளியிட்டார்.

அன்னாரின் கட்டளையை ஏற்று, வருணாசிரம அமைப்புக்கு அரசமைப்புச் சட்டத்திலுள்ள பாதுகாப்புத் தரும் பகுதிகளை அச்சிட்டுக் கொளுத்தும் போராட்டத்தில் 10,000 திராவிடர் கழகத் தொண்டர்கள் ஈடுபட்டுக் கைதானோம். 3,000 பேர் தண்டிக்கப்பட்டுச் சிறை வைக்கப்பட்டோம்.

எனக்கு 18 மாதம் கடுங்காவல். கழிவுக்குரிய நாள்கள் போக 360 நாள்கள் நான் சிறையிலிருந்தேன். என் ஓரளவு படிப்பும், நல்ல கையெழுத்தும் நான் சிறை அறையிலேயே அமர்ந்து எழுதவும் படிக்கவும் ஏற்ற வாய்ப்பை அளித்தன. அந்த அரிய வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தினேன்.

மனுநீதியின் நல்ல தமிழாக்கம், பகவத் கீதையின் விரிவான தமிழாக்கம், திருக்குறள் பரிமேலழகர் உரை, தென்னிந்தியச் சாதி களும் குலங்களும் பற்றிய ஆங்கில நூல் தொகுதிகள், இந்துச் சட்டம் இவற்றைச் சிறையில் அமைதியுடன் ஆழ்ந்து படிக்கவும், ஒப்பிட்டுப் பார்க்கவும், குறிப்புகள் எழுதவும் 1330 குறட்பாக்களையும் கொண்டு கூட்டி எழுதவும் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டேன்.

1922 முதல் புதியதோர் சிந்தனைக்கு ஆட்பட்ட ஈ.வெ.ரா., இந்திய-தென்னக-தமிழகச் சமுதாயத்தை எவ்வளவு கூர்மையாக நோக்கி, தெளிவாகப் புரிந்து கொண்டு 26.12.1926-இல் சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்து, விடாப்பிடியாகத் தம் சாதி ஒழிப்புக் கொள்கையை, கடவுள் மறுப்புக் கொள்கையைக் கூறியும் எழுதியும் வருகிறார் என்பதைத் துல்லியமாக சிறை வாழ்க்கையின் போதுதான் நான் புரிந்து கொண்டேன்.

ஓர் இயக்கத்தின் நிறுவனராகவும், ஒரு கொள்கையின் தோற்றுநராகவும், விளக்கவுரையாளராகவும், பரப்புநராகவும் விளங்குகிற அப்பெருமகனாரைப் போற்றுவது என்பது - அவருடைய கூற்று ஒவ்வொன்றையும் தக்க இலக்கிய, வரலாற்று, அரசமைப்புச் சட்ட - இந்துச் சட்டச் சான்றுகளுடன் கூடிய ஆழ்ந்த அகன்ற ஆய்வை நாம் மேற்கொள்ளுவதும், அதன்வழி பெரியாரை நிலை நாட்டுவதும்தான் என நான் முடிவெடுத்தேன். அதற்கான தரவுகளை நாள்தோறும் துழா வினேன்; தேடிக் கண்டேன்; சலித்தேன்; தெளிவான வற்றையும் உறுதியானவற்றையும் பதிவு செய்தேன்.

முதலாவதாக, ‘சாதி பற்றிக் கரிசனம் கொள்ளாத பொதுவுடைமைக்காரரும், பொதுவுடைமை பற்றிப் பேசுவதை ஒத்திவைத்துவிட்ட திராவிடர் கழகத்தினரும் கைகோத்துச் செயற்பட வேண்டும்’ என 1962-இல் பெரியாரிடம் கோரினேன். அவர் 1964-இல் கச்சனம் மாநாட்டில் தொடங்கி, அதை வரவேற்றுச் செயற்படுத்தினார். இது இயக்கத்தில் என்னால் ஏற்பட்ட தாக்கம்.

இரண்டாவதாக, விகிதாச்சார வகுப்புவாரிப் பிரதி நிதித்துவம் பற்றிய அவருடைய கோட்பாட்டைப் புரிந்து கொண்ட என் கருத்தை, அவரே ஒரு குறு நூலாக 1965-இல் வெளியிட்டார். அதுவே முதன்முதலாக அச்சில் வந்த என் நூல் ஆகும்.

1969-இல், ‘அனைத்துச் சாதியினரும் அருச்சகர் ஆகலாம்’ என்பதை விளக்கி எழுதும்படி என்னைப் பணித்தார். காசநோயோடு திருச்சி மருத்துவமனையில் போராடிக் கொண்டிருந்த நான், அன்றுவரையில் புரிந்திருந்த என் சட்ட அறிவைக் கொண்டு, ஒரு தெளிவான கருத்தை உருவாக்கித் தந்தேன்.

‘அரசு நிருவாகத்திற்குட்பட்டவை இந்து சமயக் கோவில்கள். அவற்றில் அருச்சகராக அமர்த்தப்படுவோர் அரசுப் பொதுப் பணியாளராகக் கருதப்பட வேண்டும். அரசுப் பணிக்கு (Public Office) தேர்வு செய்யப்பட ஒரு கல்வியும் தேர்வும் நடத்தப்பட வேண்டும். அதில் தேறியோரெல்லாம் அருச்சகர் ஆக்கப்பட வேண்டும்’ என்று எழுதினேன். அது பெரியாரைக் கவர்ந்தது. அப்போதே என்னைப் பாராட்டினார்; அதை ஏற்று ‘தடையும் விடையும்’ என்ற தலைப்பில் 1969 நவம்பரில் ‘விடுதலை’ ஏட்டில் வெளிவரச் செய்தார். அதைப் படித்துப் புரிந்தோரெல்லாம் பாராட்டினர். இன்று அது, அதே வடிவத்தில், கலைஞர் கருணாநிதி அவர்களின் ஆட்சியில் செயற்பாட்டுக்கு வந்துவிட்டது மகிழத்தக்கது.

ஆனாலும், அதற்குப் பிறகும் இந்தியாவில் நான்கு வருணங்கள் உண்டு. தென்னகத்தில் இரண்டு வருணங்கள் - பிராமணன், சூத்திரன் உண்டு என்பதற்கான கெட்டியான பாதுகாப்பு அரசமைப்பு விதிகள் 13, 25(2)அ, 372 இவற்றில் உள்ளன. இவற்றை அடியோடு நீக்கினாலன்றி, நம் பேரில் சுமத்தப்பட்ட ‘சூத்திரப்பட்டம்’ போகாது. இதைச் செய்திட 1947-இலேயே மேதை அம்பேத்கர் முயன்றார்; பார்ப்பன அரசு அவருடைய இதுபற்றிய இந்துச்சட்டத் திருத்த வரைவை 1951-இல் தள்ளுபடி செய்தது.

பெரியார், 3.11.1957-இல் முடிவு செய்து, 26.11.1957 அன்று இவ்விதிகளை அச்சிட்டு எரித்தார். அதன்பிறகு 51 ஆண்டுகள் கழித்தும் இவ்விதிகள் இன்றும் கல்லுப்போன்று கெட்டியாக அரசமைப்பில் உள்ளன. இது உண்மை.

இதற்கிடையில், தந்தை பெரியார் அவர்கள், “இந்து மதத்தை விட்டு வெளியேறுங்கள்!” என 1973-இல் பாடாலூரில் ஓர் அறைகூவல் விடுத்தார். அவர் கருதுகிறபடி, எந்தச் சூத்திரனும் வெளியேற முடியாது என்பது என் திடமான கருத்து.

இக்கருத்துக்குத் தொடர்புடைய எல்லாச் சட்டச் சான்றுகளையும் எழுதிக்கொண்டு போய்ப் பெரியாரிடம் தந்தேன்; விளக்கிச் சொன்னேன். என் விளக்கத்துக்கு மறுமொழி உரைத்தார். அவை எப்படிப் பொருந்தாதவை என்பதைப் பணிவோடும் கண்டிப்போடும் திருச்சி பெரியார் மாளிகையில் 1973 ஆகஸ்டில் அவரிடம் முன்வைத்தேன்.

“தப்பாச் சொல்லிட்டேன்யா, யாரையும் கேட்காம சொல்லிட்டேன்யா” என்று கூறி, உடனே தம் கைகளைப் பிசைந்துகொண்டு, குனிந்த தலை நிமிராமல் சிந்திக்கத் தொடங்கினார். என் உடல் நாணிக் குறுகியது. உடனே அடுத்த கட்டடத்துக்குப் போய்விட்டேன்.

பின்னும் ஒரு மணிநேரம் கழித்து அவரிடம் சொல்லிக் கொண்டு போக வேண்டி, பகல் 12 மணிக்கு நானும் நோபிள் கு. கோவிந்தராசுலுவும் அவருடைய இருக்கையை அணுகினோம். அவரோ குனிந்த தலை நிமிராமல் வேகவேகமாக எழுதிக் கொண்டிருந்தார்.

என்ன எழுதினார்?

“நான் முதலில், ‘நான் இந்து அல்ல’ என்று சொல்லிவிட்டால் இழிவு நீங்கிவிடும் என்றுதான் கருதினேன். பிறகு சட்டங்களைப் பார்க்க ஆரம்பித்த பிறகு கிறித்தவர்கள், முசுலிம்கள் தவிர்த்த, இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரும் இந்துக்கள் - இந்துக்கள் என்றால் சூத்திரர்கள்; வேசி மக்கள் என்று பல இடங்களில் காணப்படுகின்றன. ஆதலாலேயே தீவிர முயற்சி எடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது.” (‘விடுதலை’ பெரியார் 95ஆவது பிறந்த நாள் விழா மலர் 17.9.1973); (பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் - பக்கம் 1981).

நான் சொன்ன சட்ட விளக்கத்தை உள்வாங்கிய உடனேயே தந்தை பெரியார் வேகவேகமாக எழுதியது இதுதான். நிற்க.

இதன் முடிவு அத்துடன் நிற்கவில்லை. 1973 செப்டம்பர் இறுதியில் என் கருதுகோள்களை சென்னையிலுள்ள வழக்கறிஞர்கள் பலர் ஏற்கவில்லை எனக் கூறினார். நான் அடுத்த வாரமே இந்துச்சட்ட மூலங்கள் அல்லது பண்டிதர்களின் கருத்துரைகள் (Elements of Hindu Law or Ordination of Pandits) மற்றும் அறிஞர்கள் மெய்னி (Maine), டி.எஃப். முல்லா (D.F.Mulla) முதலானோரின் இந்துச் சட்டங்கள், அரசமைப்பு விதிகள் இவற்றைத் திரட்டித் தமிழில் மொழிபெயர்த்து, அவருடைய பார்வைக்கு வைத்தேன்.

அவற்றையெல்லாம் படித்தார்; அவற்றை ஏற்றுக் கொண்டார் என்பதற்கு அறிகுறியாக, “இவ்வளவையும், இனிமேலே நான் படிச்சிக்கிட்டுப் பேசமுடியுமா? நான் சுற்றுப்பயணம் போறேன். நீயே என்கூட வந்து எல்லா ஊரிலேயும் இதைப் பேசிவிடு” என்று மனந் திறந்து கூறிப் பணித்தார்.

சட்ட விளக்கங்களை நான் சொன்னேன் என்பதை, 4.11.1973 அன்று திருச்சி சிந்தனையாளர் கழக விருந்தளிப்பு விழாவில் பெரியார் குறிப்பிட்டார். அது பின்வருமாறு :

“உள்ளபடி ஒரு அளவிலே நான் திருப்தியாக இருந்தது - ‘நாம் அதிலே இல்லை; மற்றவர்களுக்குச் சொல்லலாம் என்று நினைத்தேன். பகுத்தறிவாளர்கள், நாத்திகர்கள், மதமற்றவர்கள் - இந்துக்கள் அல்ல என்று சொல்லிக் கொள்பவர்கள் இருக்கலாம்.

இந்த இழிவிலே சம்பந்தமில்லை’ என்று அப்படி நினைத்தேன் நான். ஆனால் சட்டம் நண்பர் ஆனைமுத்து படித்துக் காண்பித்தார் - இந்தியாவிலே இருக்கிற கிறித்தவன் தவிர, முசுலிம் தவிர மற்றவன் எல்லாம் இந்து; அவன் யாராயிருந்தாலும் என்று. (பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் - பக்கம் 2043).”

இதை ஊரெல்லாம் சொல்லும்படிப் பணித்தார் அல்லவா? அப்பயணம் தொடங்கியது. 18.11.1973 முதல் 28.11.1973 வரையிலான, பெரியாரின் 11 நாள் இறுதிக்கட்டப் பரப்புரைப் பயணத்தில் - 10 நாள்கள் நான் பங்கேற்றேன். கடலூர் கூடடத்தன்று வயிற்றுப் போக்குடன் துன்புற்றுக் கடலூர் வழக்குரைஞர் சனார்த்தனம் இல்லத்தில் இருந்தார், பெரியார். கூட்டத்தில் அவர் பங்கேற்காததால், நானே பேசி முடித்தேன்.

அடுத்த நாள் காலையில் நேரில் அவரைப் பார்த்தேன்; கண்கள் உள்ளே போய்ச் சோர்வாக இருந்தார். “தண்ணீர்க் குழாய் பீச்சிட்டு அடிக்குமே அப்படி பத்துத் தடவை வயித்தாலே போச்சி. அதான் நான் வரலே” என்று தம் இயலாமையைக் கூறினார்.

ஏற்கெனவே, 1973 செப்டம்பரில் ஒரு 16 பக்கம்; அக்டோபரில் பரமத்தி பாண்டமங்கலம் கூட்டத்தில் ஒரு 200 பக்கம் - “பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்” நூலின் அச்சிட்ட படியை அவர் பார்த்துவிட்டார். கடலூ ரில் 400 பக்கங்களை அன்று தந்தேன். 10 மணித் துளிகள் புரட்டிப் பார்த்துவிட்டு, “நல்லா இருக்கு. இனிமே எனக்குக் காட்ட வேண்டாம்; செய்” என மன நிறைவோடு கூறினார்.

அந்த நிலையில் அவர் பயணித்த அம்பாசிடர் ஊர்தியிலேயே என்னையும் ஏற்றிக்கொண்டார். கொடு மையிலும் கொடுமை அது! உடல் அனத்தல், வயிற்று உளைச்சல் இவற்றுடன் பயணித்தார். நேரே தருமபுரி அடைந்தோம்.

அடுத்த நாள் சேலம் கோட்டை மைதானத்தில் பொதுக்கூட்டம்; அ. சித்தய்யன், கி. பச்சமுத்து, ஆர். நடேசன், சின்னத்தம்பி ஆகியோரின் ஏற்பாடு அது. பொத்தனூர் க. சண்முகம் தலைமை. பெரியாருக்கு முன்னதாக நான் பேசினேன். 1 1/2 மணி நேரத்துக்கு மேல் நீரோட்டமான நடை, அடுக்கடுக்கான சட்ட ஆதாரங்கள், பெரியாரின் கருத்துச் செழுமைகள் இவற்றை விளக்கிப் பேசினேன்.

வைத்த கண் வாங்காமல் என்னைப் பார்த்துக் கொண்டே இருந்தார் பெரியார். அவரைப் பேச அழைத்தவுடன், யாரையுமே விளிக்காமலே, “பேரறிஞர் ஆனைமுத்து அவர்களே!” என விளித்து விட்டுக் கடல்மடை திறந் தாற்போலப் பேசினார். கூட்டம் ஆர்ப்பரித்தது. என்னைக் கட்டிப்பிடித்து மேடையிலிருந்து இறக்கி, உச்சி மோந்தனர் சித்தய்யனும் பச்சமுத்துவும்.

பெரியாரின் அந்தப் பாராட்டு மொழி காற்றோடு போய்விடவில்லை.

சேலத்தில் பெரியார் அவர்கள் என்னைப் பற்றிக் கூறியதை அப்படியே அச்சுப்போட்டு, சேலம் ஆத்தூர் தோழர் எஸ்.ஜி.எஸ். சாகிப்ஜி (இன்று 2008, 70 வயது) என்பவர், சென்னையில் 8, 9.12.1973 நாள் களில் நடந்த இழிவு ஒழிப்பு மாநாட்டில் ஆயிரக்கணக்கானோருக்கு வழங்கிவிட்டார்.

பெரியாரை நான் நன்கு பயின்றேன்; நன்கு புரிந்தேன். அவரை நிலைக்கவைத்திட ஏற்ற அசைக்க முடியாத சான்றுகளை அவருடைய காலத்திலேயே திரட்டி அவரிடம் வெளிப்படுத்தினேன். அதன்வழி அவரைப் போற்றினேன்.

தந்தை பெரியார் 13.4.1954 அன்று தொடங்கி, 28.11.1973 வரையிலான 20 ஆண்டுகளில் என்னை நன்றாகப் புரிந்து கொண்டார். தக்க வண்ணம் பயன்படுத்தினார்; மனந்திறந்து என்னைப் பாராட்டினார்.

“பேரறிஞர் ஆனைமுத்து” என்பது எனக்குப் பெரியார் அளித்த விலை மதிக்க முடியாத கொள்கைச் சொத்து. அதனைக் கட்டிக் காத்திட, பெரியார் தமிழ்ப் பேரவை சார்பில் தோழர் சங்கமித்ரா, தூத்துக்குடி வணிகரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான ந. தனசேகரன், சாத்தநத்தம் முனைவர் அ. ஆறுமுகம், அரக்கோணம் கவிஞர் தமிழேந்தி, வடக்கலூர் ந. கருணாகரன் ஆகிய நூல் தொகுப்பாசிரியர் குழுவினரும்; என்பாலும் தந்தை பெரியாரிடத்தும் நீங்காப் பற்றுக்கொண்ட எண்ணற்ற அறிஞர்களும், கவிஞர்களும், தோழர்களும், என் 84ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, “பெரியார் கண்ட பேரறிஞர் வே.ஆனைமுத்து” என்னும் சிறந்ததொரு நூலாக. என் வரலாற்று ஆவணமாகவே பெரிய கட்டுரைத் தொகுப்பை உருவாக்கி வளியிட்டுள்ளனர்.

எனக்கும் என் துணைவியார், என் மக்கள் ஆகியோர்க்கும் இது தமிழ்ச் சமூகத்தின் சார்பில் காட்டப்பட்டுள்ள நன்றியுரையாகவும் அளிக்கப்பட்ட பாராட்டுரையாகவும் ஆகும்.

‘வாழும் பெரியார் ஆனைமுத்து’ என்று - முதன்முதலாக, சென்னை மாநாட்டில், 1978 சூன் 24 அன்று என்னைப் பற்றிக் குறிப்பிட்டவர், மறைந்த சட்ட மேதை பெங்களூர் ஏ.எம். தருமலிங்கம் என்னும் பெருமகனார் ஆவார். ஆர்வ மேலீட்டால் அவர் அதைக் கூறினார். இது தந்தை பெரியாரைக் குறைத்துக் காட்டும் குறிச்சொல் ஆகும். அருள்கூர்ந்து ‘வாழும் பெரியார்’ என என்னை அழைக்காதீர்கள் என வணக்கத்துடன் எல்லோரையும் கேட்டுக் கொள்கிறேன்.

“பேரறிஞர் ஆனைமுத்து” என்பது பெரியார் எனக்குத் தந்த கொள்கைச் சொத்து. அது எனக்கே உரியது. அப்படியே நீங்கள் எல்லோரும் அழைக்கலாம். அதை எவரும் தட்டிப்பறிக்க முடியாது. ஆனால், அதை மூடி மறைக்கலாம். அந்த மூடாக்கைக் கிழித்துத் தூக்கி எறிந்துவிட்டுத் தமிழுலகுக்கும் வெளி உலகுக்கும் என்னை அடையாளப்படுத்திவிட்ட அறிஞர்கள், தோழர்கள், தமிழ்ப் பெருமக்கள், அனைவர்க்கும் - குறிப்பாகத் தோழர் சங்கமித்ரா அவர்கட்கும் நூல் தொகுப்பாசிரியர் குழுவினர்க்கும் மற்றும் 16.8.2008 அன்றைய விழாவில் பங்கேற்க உள்ள அனைவர்க்கும் நெஞ்சார்ந்த நன்றியினை என் சார்பிலும் என் குடும்பத்தினர் சார்பிலும் வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

- வே.ஆனைமுத்து

Pin It