670 கோடி மக்கள் வாழும் இவ்வுலகில் 50 முதல் 75 கோடி மக்கள் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகர்களாக வாழ்கிறாார்கள். கடந்த பத்தாண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பலகட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இந்தப் புள்ளி விபரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

அமெரிக்கா உள்ளிட்ட பொருளாதார வளர்ச்சிபெற்ற நாடுகளில் நாத்திகமும் வேகமாக வளர்ந்து வருவதாக கலிபோர்னியா பிட்சர் கல்லூரியின் பேராசிரியார் பில் ஜுகர்மேன்  கூறுகிறார். வளர்ச்சி பெறாமல் பின் தங்கியுள்ள நாடுகளில் மதம் இன்னமும் மக்களின்மேல் ஆதிக்கம் செலுத்துவதால் இந்த நாடுகளில் மக்கள் தொகைப் பெருக்கமும் விரைவாக உள்ளது.

நாத்திகர்கள் அதிகம் வாழும் பத்து நாடுகள்

1. ஸ்வீடன் 46.85%,

2. வியட்நாம்  81%

3. டென்மார்க் 43.80%

4. நார்வே 31.72%

5. ஜப்பான் 64.65%

6. செக் குடியரசு 54.61%

7. பின்லாந்து 26.80%

8 .பிரான்ஸ் 43.54%

9. தென்கொரியா 30.52%

10 . எஸ்டோனியா 49%

அய்ரோப்பா, வட அமெரிக்க போன்ற வளர்ச்சி பெற்ற நாடுகளில் மக்களிடம் கடவுளைப் பற்றியும் மதத்தைப்பற்றியும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, மக்கள்  கடவுள் என்பதில் முழமையான நம்பிக்கையில்லை (Absolutely Not Believe in God)    எனக்கு மதத்தில் நம்பிக்கையில்லை(I am Not into Religion) என்று அளித்த பதிலின் அடிப்படையில் இந்தப் புள்ளி விபரங்கள் மிகச்சரியானவையே என்று உறுதிப்படுத்தப்பட்டது.

நாத்திகர்கள் வழக்கம்போல் இளைஞர்கள், ஆண்கள், அதிகம் படித்தவர்களாகவே இருக்கிறார்கள். இவர்கள் சரியான தேர்வையே ஆதரிப்பவர்கள். பெண்ணுரிமை ஆதரவாளர்கள், மனிதாபிமானவர்கள், உடலை வருத்தும் தண்டனைகள் அளிப்பதற்கு எதிரானவர்களாக இருக்கிறார்கள்.  மகிழ்ச்சியாக வாழக் கூடியவர்கள் என்று மக்கள் தொகையியல் ஆய்வுகள் காட்டுகின்றன

இந்தியாவில் 3 சதவீதம் பேர் நாத்திகர்களாக இருப்பதாக 2004 - ல் பி.பி.சி. நடத்திய ஆய்விலும் 5 சதம் பேர் நாத்திகர்களாக இருக்கிறார்கள் என்று நோரிஸ் மற்றும் ஈங்கிள்-ஹார்ட் என்னும் இரண்டு பிரிட்டிஷ் ஆராய்சியாளர்கள் கண்டுள்ளனர் என்று ஜுகர்மேன் தெரிவிக்கிறார். இந்தச் செய்தி நாத்திகர்களைப்பற்றி இணைய தளத்தில் தேடியபோது கிடைத்தக் கட்டுரை. இது 2010-ல் டைம் ஆஃப் இந்தியா நாளிதழ் வெளியிட்டதாக அந்தக் கட்டுரை முடிகிறது.

உலகில் மற்ற நாடுகளில் உள்ள நாத்திகத்திற்கும் இந்தியாவில் உள்ள  நாத்திகத்திறகும் அதிக வேறுபாடுகள் உள்ளது. மற்ற நாடுகளில் கடவுளையும் மதத்தை மட்டும்  மறுத்தால் போதும்.  ஆனால் இந்தியாவில் கூடுதலாக,  சாதியையும் மறுத்து அதற்கு எதிராகவும் போராட வேண்டிள்ளது. தோழர் பெரியார், நாத்திகம் தொடர்பாக சொன்ன கருத்து இந்தியாவிற்கு மிகவும் பொருத்தமானதாக  இன்றும் இருக்கிறது.

“மனிதனை மனிதன் தொடக்கூடாது, கண்ணில் படக்கூடாது, தெருவில் நடக்கக்கூடாது, குளத்திள் தண்ணீர் எடுக்கக்கூடாது போன்ற தீண்டாமைக் கொடுமைகள் தாண்டவமாடுகின்ற ஒரு நாட்டை பூகம்பத்தால் அழிக்காமலோ, எரிமலை கொண்டு எரிக்காமலோ, சமுத்திரம் பொங்கி மூழ்கச் செய்யாமலோ, சண்டமாருதத்தால் துகளாக்கப்படாமலோ இருப்பதைப்  பார்த்த பிறகும், கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும், அவர் சர்வ தயாபரர் என்றும் நம்பும் மக்களை என்னவென்று சொல்லுவது”

என்று சமூகம் சார்ந்த நாத்திகம் பேசினார்.  உலகில் மற்றவர்கள் நான்கு சுவர்களுக்குள் பேசிய நாத்திகத்தை பெரியார் மக்கள் மத்தியில் பட்டி தொட்டியெல்லாம் மூலைமுடுக்கெல்லாம் பேசினார்.  நாத்திகத்தை இந்கு இயக்கமாக அதுவும் மக்கள் இயக்கமாக நடத்தினார். இந்தச் சிறப்பு தோழர் பெரியாரைத் தவிர  உலகில் வேறு எந்தத் தலைவர்க்கும் இல்லை.  நாத்திகம் பேசி தன் வாழ்நாளில் வெற்றியும் கண்டவர் பெரியார் மட்டுமே.

மேற்கண்ட கட்டுரையில் உள்ளதைப்போல் இளைஞர்கள்  ஆண்கள் அதிகம் படித்தவர்கள் மட்டும் பேசிய நாத்திகத்தை இங்கு இளைஞர் முதியோர் என்ற பாகுபாடில்லாமல் படிக்காத பாமரனையும், பெண்களையும் நாத்திகம் பேச வைத்தத் தலைவர் பெரியார் மட்டுமே.  சாமி இல்லாத கட்சிகாரன்  என்று தத்துவத்தைச் சொல்லி அடையாளம் காணும் நிலையை உருவாக்கினார்.  

நாத்திகம் பேசி, பண்பட்டதால்தான்  காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோதும், பாபர் மசூதி இடிக்கப்பட்டபோதும்,  இரு மிகப் பெரிய கலவரங்களை நாடு சந்தித்தபோது  தமிழகம் மட்டும்  எவ்வித பாதிப்புமின்றி அமைதியாக இருந்தது. மற்ற மாநிலங்களில் கால் பதித்த பஜக இங்கு கால் பதிக்க முடியாமல் திணறுவதற்கும் பெரியார் பேசிய நாத்திகமே காரணம்.  

பா.ஜ.க  எந்தப் பிள்ளையாரையும் இராமனை வைத்து அரசியல் களமாடுகிறதோ அந்தப் பிள்ளையாரைத் தெருவில் போட்டு உடைத்தும் இராமன் படத்தைச் செருப்பால் அடித்தும் எரித்தும் தவிடு  பொடியாக்கியதால் தான் இராமன் பிள்ளையார் செல்வாக்கு தமிழகத்தில்  எடுபாடாமல் போய்விட்டது. அதனால்தான் மிகப்பெரிய பணபலம், அரசியல், அதிகார பலத்தை முழமையாகப் பயன்படுத்தியும் பா.ஜ.க இங்கு செல்லாக் காசாகி விட்டது. நாத்திகர்களுக்குப் பாதுகாப்பான இடம் தமிழகமேயாகும்.

தமிழகத்திற்கு வெளியே  பெங்களுரு, டெல்லி போன்ற இடங்களில் நாத்திகம் பேசுபவர்கள் அறிஞர்களாக இருந்தாலும் சுட்டுக் கொல்லப்படுவதும், வெட்டிக்கொல்லப்படுவதும், நாத்திகம் பேசுபவர்களை அச்சுரத்துவதாக இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் உடனே எதிர்விளைவுகள் ஏற்படும் என்பதாலும் இங்கு சாமானியனும் நாத்திகம் பேசுவதாலும், நாத்திகம் இங்கு மக்கள் இயக்கமாக இருப்பதாலும் இங்கு நாத்திகர்கள்மேல் கைவைக்க அச்சப்படுகிறார்கள். பா.ஜ.க வட நாடுகளில் சங் பரிவாரங்களை கட்டவிழ்த்துவிட்டு ஆடுகின்ற ஆட்டத்தைப் பார்க்கும் போது நாடு முழவதற்கும் நாத்திகம் கட்டாயம் தேவை என்பதை உணர்த்துகிறது.

கடவுள் நம்பிக்கை நாட்டின் முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய தடையாக உள்ளது. இந்தியாவில் கடவுள் நம்பிக்கை தனிமனிதனின் நம்பிக்கை சார்ந்த விசயமாக இல்லாமல்,  மனிதர்களை பிறப்பின் அடிப்டையில் பிரித்து கூறு போட்டு வைக்கும் சாதியைப் பாதுகாக்கும் பணியினையும் சிறப்பாக செய்து வருகிறது.  

இந்திய கிராமங்களில் நடைபெறும் அத்துனைக் கலவரங்களுக்கும் அனால் ஏற்படும் படுகொலைகளுக்கும் கடவுள்களுக்கு கொண்டாடப்படும் திருவிழாக்களும் பிறந்த நாட்களுமே காரணம். விழிம்பு நிலை மக்களை பொருளாதார நிலையில் முன்னேறவிடாமல் தடுப்பதும் இந்த திருவிழாக்களேயாகும்.  2000 மக்கள் தொகையுள்ள கிராமத்தில் நடைபெறும் ஒரு திருவிழாவில் செய்யப்படும் செலவு 20 இலட்சம் முதல் 30 இலட்சம்வரை ஆகிறது. ஆனால் அவர்களின்  குழந்தைகளின் கல்வி செய்யப்படும் செலவோ இரண்டு லடசத்தைக்கூடத் தாண்டாது.

கடவுள் நம்பிக்கையின்பேரால் கொண்டாடப்படும் தீபாவளி, கோவில் திருவிழாக்களில் வாணவேடிக்கை என்னும்பெயரில் கொளுத்தப்படுகின்ற பாட்டாசுப் புகையினால் ஏற்படும் மாசு கெடுதலால் ஓசோன் படலத்தில் ஓட்டை விழ்ந்து இந்தியாவில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதற்கும் - கடவுள் நம்பிக்கையின்பேரால் கொண்டாடப்படும் திருவிழாக்கள்தானே காரணம்.

மேற்கண்ட கட்டுரையில் உள்ளதைப் போல் மதம் மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் நாடுகளில் மக்கள் தொகை பெருக்கம் விரைவாக உள்ளது என்பதற்கு இந்தியா மிகப்பெரிய சான்றாக உள்ளது. குழந்தைப் பிறப்பைக்கூட கடவுள் தந்த வரம் என்று இங்கு நம்புவதால்தான், உலகில் மக்கள் தொகையில் முதலிடத்தை ஒருசில ஆண்டுகளில் எட்டிப் பிடித்துவிடும் என்ற அபாயமும் நம்மை அச்சுறுத்துகிறது. எனவே உலகில் மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவின் வளர்ச்சிக்கும்,  மக்கள் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும்  வாழ்வதற்கு  இந்த நாட்டிற்குத் தேவை நாத்திகமே.

Pin It