kolathur mani‘பெரியாரும் - மார்க்சியமும்’ தலைப்பில் கொளத்தூர் மணி உரை (9)

5 வருடங்களில் கடவுள் மதங்கள் முற்றாக ஒழிக்க ரஷ்யா உருவாக்கிய திட்டம்

  • கிறிஸ்தவ மதத்தில் அடிமை முறை இருந்ததை கிறிஸ்தவ மதமே ஒழிக்க முன் வந்தது.
  • ஒரே மதத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆவதை பார்ப்பனர்கள் எதிர்க்கிறார்கள்.

குமரி மாவட்டம் குழித்துறையில் ஜன.24, 2021 அன்று ‘பெரியாரும் மார்க்சியமும்’ என்ற தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்த்திய உரை இது.

பத்து சதவிகித உயர்ஜாதி ஏழைகள் இட ஒதுக்கீட்டைப் பற்றி தோழர் பேசுகிற போது குறிப்பிட்டார். காங்கிரஸ்காரர்களே ஏற்கனவே அப்படி ஒரு முயற்சி எடுத்தார்கள். வடக்கே இருக்கிற எல்லாருமே அப்படித்தான் இருப்பார்கள். நம்மூர் காங்கிரஸ்காரர் அப்படி பேசமாட்டார்.

நரசிம்ம ராவ் தலைமை அமைச்சர் ஆனவுடனே புதிதாக ஒரு சட்டம் கொண்டு வந்தார். வி.பி.சிங் போட்ட உத்தரவோடு சேர்த்து, இன்னொரு இரண்டாவது உத்தரவு போட்டார் ஆட்சிக்கு வந்தவுடனே. எந்த வித இட ஒதுக்கீட்டுப் பிரிவுக்குள்ளும் வராத ஜாதியைச் சேர்ந்த ஏழைகளுக்கு பத்து சதவிகிதம் என்று போட்டார். அதை பின்னர் உச்ச நீதி மன்றம் செல்லாது என்று சொல்லிவிட்டது.

ஒன்பது நீதிபதிகள் கொண்ட ஆயம் செல்லாது என்று சொல்லி விட்டது. அது தான் இந்திரா சஹானி வழக்கு, மண்டல் கமிஷன் வழக்கில் சொல்லி விட்டார்கள்.

வி.பி.சிங்கின் பிற்படுத்தப்பட்டோருக்கான 27ரூ இட ஒதுக்கீட்டு உத்தரவு செல்லும்; நரசிம்மராவ் பிறப்பித்த 10ரூ பொருளாதார அடிப்படை உத்தரவு செல்லாது, அது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்று. ஆனால், அதை மீண்டும் கொண்டு வந்து விட்டார்கள். எதிர்ப்பில்லாமல் கொண்டு வந்து விட்டார்கள்.

முதலில் கேட்டபொழுதெல்லாம், 50 சதவிதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு இல்லை என்றார்கள். இப்பொழுது 60ரூ சதவிகிதம் இருக்கலாம் என்று இவர்களே சட்டத்தை திருத்திக் கொண்டார்கள். உச்ச நீதிமன்றம் தவறு என்று தீர்ப்பு சொல்லி விட்டது என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள், மண்டல் கமிஷன் வழக்கிலும் அதையேதான் சொன்னார்கள்.

50 விழுக்காட்டுக்கு மேல் இட ஒதுக்கீடு போகக்கூடாது. ஆனால் இப்போது 50க்கும் மேலாக நிலவிக் கொண்டிருக்கிற இடங்களைப் பற்றிய மறு பரிசீலனை வேண்டுமென்றால் செய்யலாம், அதை நீட்டிப்பதற்கு, அனுமதிப்பதற்கு, யோசிக்கலாம் என்று சொல்லுகிறார்கள். அவர்கள் சொன்னது, வட கிழக்கு மாகாணங்கள் என்றிருக்கிற அருணாசலப் பிரதேசத்தில் எஸ்.டி., பழங்குடியினர் இட ஒதுக்கீடு 80ரூ ஆக இருக்கிறது.

அது போன்ற குறிப்பிட்ட சூழலில், அதைப் பற்றி யோசிக்கலாம் என்று சொன்னார்கள். ஆனால் இப்போது புதிதாக இட ஒதுக்கீடு தருகிறார்கள். யாருக்கு ஏழை மக்களுக்காக இருப்பவர்களுக்குத் தான், எந்த ஏழைகளுக்கு? ஏழைகளுக்கு கொடு என்று கூட சொல்லியிருக்கலாம்.

அது சரியோ தப்போ. அரசியல் சட்டத்தில் ஏழ்மைக்காக உதவித் தொகைக் கொடுக்கலாம். வீக்கர் செக்ஷன்களுக்கு 46 என்கிற ஒரு பிரிவு இருக்கிறது நமக்கு. Directive Principles of the State Policy, வீக்கர் செக்ஷன்களுக்கு கொடுக்கலாம் என்று. அதிலும் யாரெல்லாம் சுரண்டலுக்கு ஆளாகிறார்களோ அந்த மக்களுக்கு என்றுதான் சொல்லியிருக்கிறான். ஆனால் இவர்களோ சுரண்டுகிற மக்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத் துள்ளார்கள்.

மற்றொன்று, ரஷியாவில் இருப்பதை பற்றி பெரியார் தலையங்கம் ஒன்றை எழுதுகிறார். ஏன் பயப்படவேண்டும் என்று. 04-12-1932-ல் ரஷியாவில் நடந்ததைப் பற்றி எழுதுகிறார். ரஷிய சர்க்கார் தங்கள் நாட்டில் ஐந்து வருடத்திற்குள் கடவுள் மதம் கோவில்கள் இல்லாதிருக்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

இந்த ஐந்து வருஷ நாஸ்திகத் திட்டதைப் பற்றி லண்டன் பார்லிமெண்ட் மெம்பெர் தோழர் ஆதல் டச்சஸ் பேசிய விருந்துப் பேச்சில் குறிப் பிட்டது என்னவென்றால்.., பெரியார் குடிஅரசில் பதிவு செய்கிறார். ஆனால் பேசியது ரஷியாவில் அல்ல.

இங்கிருக்கிற லண்டன் பார்லிமெண்ட் கம்யூனிஸ்ட் மெம்பர் பேசியிருக்கிறார். “முதல் வருஷத்தில், கோவில்களையும் மார்க்க ஆராதனை இடங்களையும் மூடிவிடுவது என்றும் முடிவு செய்கிறார்கள். இரண்டாவது வருஷத்தில், எந்த வீடுகளிலும் பிரார்த்தனைக்கு இடம் இருக்கக் கூடாது என்பதுடன், சர்க்கார் உத்தியோகத்தில் மத சம்பந்தமான எண்ணம் உடையவர்கள் யாவரும் இல்லாமல் செய்துவிடுவது, மத சம்பந்தமான புஸ்தகங்கள் ஆதாரங் கள் எல்லாம் அழிக்கப் பட்டாக வேண்டும், நாத்திகப் படம் நாடகம் சினிமா முதலியவை நூற்றுக் கணக்காக நடத்த வேண்டும் என்கிற இரண்டாவது ஆண்டு திட்டம்.

மூன்றாவது ஆண்டு திட்டம் ஐந்து வருஷத்தில் எந்த வீடுகளிலும் கடவுள் என்ற உச்சரிப்பே இல்லாதபடி செய்து விடுவது, இந்த உத்தரவை கீழ்ப்படியாதவர்கள் தேசத்தை விட்டே வெளியாக்கி விடுவது. நாலாவது வருஷம், எல்லா கோவில்களையும் பிரார்த்தனை ஸ்தலங்களையும், பொது நன்மைக்கு பயன்படும்படி சினிமா இளைப் பாறும் மண்டபமும், காலப்போக்கு ஸ்தலங்களாக மாற்றி விடுவது.

ஐந்தாவது வருஷத்தில், அதாவது 01.05.1937-க்குள், கடவுளுக்கு வீடோ, வணக்க இடமோ, நினைக்க உள்ளமோ ரஷிய எல்லைக்குள் இருக்கக் கூடாது என்று முடிவு செய்திருக்கிறார்கள்” என்று லண்டன் பார்லிமெண்டில் அவர் பேசியிருக்கிறார். அப்படி திட்டமிட்டிருக்கிறது அந்த நாட்டில், ஆனால் நீங்கள் இன்னும் இப்படி செய்து கொண்டிருக்கிறீர்களே, நீங்கள் கொஞ்சமாவது திருந்த வேண்டாமா, என்று அவர் பேசியதை, பெரியார் எடுத்து தனது பத்திரிக்கையில் போட்டிருக்கிறார்.

கடவுளை ஒழிப்பது என்பது பணக்காரர்களை ஒழிப்பதாகும். மதத்தை ஒழிப்பது என்பது உயர்வு-தாழ்வை அழிப்பதாகும், என்று கடைசியாக அந்தப் பேச்சை முடித்திருக்கிறார், அந்த நாட்டிலேயே. கிருஸ்துவ மதத்தில் ஏற்றத் தாழ்வு இல்லாத நாடு தான் அது. ஒரு கிருஸ்துவன் இன்னொரு கிருஸ்துவனை அடிமைப்படுத்துவது கூடாது என்பதற்காக அவர்களுக்கு அடிமை முறையிலிருந்து விடுதலை அளித்தார்கள்.

இங்கோ ஒரு இந்துவே அதே மதத்தைச் சார்ந்தவனை அடிமையாக வைத்துக் கொண்டிருப்பதா? அப்படிப்பட்ட மனிதாபிமான மதத்தைக் கூட இல்லாமல் செய்துவிட வேண்டும் என்று கருதுகிற இந்தக் காலத்தில், தன்னளவில் ஒரு சிறு மாற்றத்தைக் கூட இந்து மதத்தில் நடைபெற வில்லையே. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் கொண்டு வந்தார்கள்.

தோழர் நாத்திகம் பேசுகிறார், தலைவர் நாத்திகம் பேசினார், நான் நாத்திகம் பேசுகிறேன். தோழர் சுலிப் நாத்திகம் பேசுகிறார். எங்களை விட்டுவிடுங்கள். கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை, அதனுடன் வேத ஆகமங்களில் பயிற்சி பெற்றவர்களை வழிபாட்டு முறையில் பயிற்சி பெற்றவர்களை, ஏன் நீங்கள் அனுமதிக்கக்கூடாது என்பதுதான் கேள்வி.

நீ வேண்டுமானால், மார்பளவுகூட 56 இன்ச்சு என்று தகுதி வைத்துக் கொள்ளலாம். ஏதாவது ஒரு தகுதியை வை. ஒரே தகுதி எல்லோருக்கும் வை. அவர்களை ஏன் அனுமதிக்கக் கூடாது என்ற கேள்விக்கு பதில் இல்லை. தங்களை சிறு மாற்றம் கூட செய்து கொள்ள மறுக்கிறார்கள்.

ஆனால், இன்னொரு பக்கம் - எந்த காலத்திலோ, 640-ல் கலீலியோவிற்கு தண்டனை கொடுக்கிறார்கள், உலகம் உருண்டை என்று சொன்னதற்காக. பின்னால் 1992-ல் போப் இரண்டாம் பால் வந்து அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொண்டார், செய்து இருக்கக்கூடாது, நாங்கள் செய்தது பிழையானது என்று சொன்னார்.

அந்த பிக் பேங் தியரி மாற்றத்தை அனுமதிக்கிற இவ்வாறான மதத்தைக் கூட இருக்கக்கூடாது என்று கருதுகிற மேல் நாட்டு பொதுவுடமையாளர்களும், முற்று முழுதாக ஏற்றத் தாழ்வை நியாயப்படுத்துகிற, இருந்தாக வேண்டும் என்று சொல்லுகிற, கடவுளே விதித்துவிட்ட வருண, ஜாதிப் பிரிவுகளை, ஒரு சிறிதும் திருத்தக் கூடாது என்று சொல்லுகிற, இந்து மதத்தின் மீதான விமரிசனமும், இந்த மதம் காப்பாற்றி வைத்திருக்கிற வர்ணாசிரமம் மீதான விமரிசனமும் இல்லையென்றால், எப்படி இந்த நாட்டில் பொதுவுடமை வரும்?

பெரியார் சொன்னது, முதல் போட்ட மூலதன முதலாளிகளை மட்டுமே கவனித்துக் கொண்டிருக்கிறீர்களே, பிறவி முதலாளிகளைக் கவனத்தில் எடுக்காமல் விட்டு விட்டீர்களே, கல் முதலாளிகளை கவனத்தில் எடுக்காமல் விட்டு விட்டீர்களே, இந்தக் குறை இன்றளவும் நீடிக்கிறதே என்ற குறை எல்லோருக்கும் உண்டு. பெரியார் ஒன்றை சொல்லுவார்.

ஒரு முறை பெரியார் அடிக்கடி கொள்கையை மாற்றிக் கொள்கிறீர்கள் என்று கேட்டார்களாம். இருக்கலாம், நான் மாற்றி இருக்கலாம். நியாயமான காரணம் இருக்கும். ஊட்டியில் ஸ்வெட்டர் போடச் சொன்னேன். மேட்டுப்பாளையத்தில் கழட்டிவிடு என்று சொன்னால், நீ தானே ஸ்வெட்டர் போடு என்று சொன்னாய் என்கிறீர்கள். ஆமாம் நான் தான் சொன்னேன். ஊட்டியில் சொன்னேன்.

மேட்டுப் பாளையத்தில் வேர்க்கிறது, கழட்டிவிடு என்று சொன்னால், நீ தான் சொன்னாய், நீ தான் சொன்னாய் என்றால்? மாற்றுவதற்கு நியாயமான காரணம் இருக்கிறது என்று சொல்லுகிறேன் என்றார் பெரியார். நியாயம் இருக்கிறதய்யா, அறியாமல் கூட நாம் விட்டிருக்கலாம்.

கவனத்தில் வராமலும் போயிருக்கக் கூடும். கவனத்திற்கு எல்லாம் வந்துவிடும். எல்லோரும் எல்லாவற்றையும் அறிந்தவர்கள் என்று நாம் சொல்லவில்லை. ஆனால், நம் கவனத்திற்கு வந்த பின்னாலும், அது குறித்து விமரிசனங்கள் வந்த பின்னாலும் கூட, அதைப் பற்றி ஆய்வு செய்வதற்கு தயங்குகிற, அல்லது மறுக்கிற தன்மை என்பது தான் விமரிசிக்கப்படுகிறது.

மார்க்சியத்தில் பல மாற்றங்கள் வந்தது. கிராம்சி - யைப்பற்றி சொல்லவேண்டும். அவரது கருத்தைப் படித்தவுடன் எனக்கு வியப்பாக இருந்தது. அண்டோனியோ கிராம்சி, மேல் கட்டுமானத்தில், இரண்டு மேல் கட்டுமானங்கள் இருக்கின்றன என்கிறார். ஒன்று வழக்கமாகச் சொல்லப்படுகிற அரசியல் மேற்கட்டுமானங்கள்; இன்னொன்று குடிமைச்சமூகம் என்ற ஒன்றைச் சொல்லுகிறார்.

சிவில் சொசைட்டி என்று ஒன்று இருக்கிறது. அது மெல்ல மெல்ல பேசிப்பேசி, அவர்களை அதற்கு ஆட்படுத்திவிடுகிறது. அதில் அவர் சொல்லுவார். இது வந்து கொயர்ஷன் coercion, பலவந்தம்; அது கன்செண்ட் consent. அது வேறு இது வேறு. அதன் மூலமாகத் தான் கல்வியின் மூலமாக பொது சமூகத்தின் உரையாடல் வழியாக நியாயப் படுத்திக் கொண்டே ஒரு கூட்டம் இருக்கும்.

சீக்கிரம் அதை கவிழ்த்து விடவே முடியாது என்று கிராம்சி ஒன்றை குடிமைச் சமூகம் என்பதை எடுக்கிறார். அது நேரடியாக அரசியல் பண்பும் அதே போல் நேரடியாக பொருளாதாரப் பண்பும் இல்லாத ஒரு கட்டுமானம்.

ஆனால், இன்னொரு பக்கம், சமயம் குடும்பம் கல்வி நிறுவனங்கள் போன்ற நிறுவனங்கள் வழியாக ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவாக பொது மனோபாவம் ஒன்றை உருவாக்குவது. அரசுக்கு ஆதரவான பொதுச் சம்மதத்தை, (Consent), குடிமைச் சமூகம் உருவாக்கித் தருகிறது.

இந்த சிவில் சொசைட்டி அதை மாற்றுவதற்கு என்ன செய்தது, அதைப் பற்றி நாம் எப்போதாவது சிந்தித்திருப்போமா? ஏனென்றால், அது இத்தாலி நாட்டில் ரோமில் இருப்பதனால் அவர் பேசினாரா தெரியவில்லை. அவர் அதைப் பற்றி ஒரு கேள்வி வைக்கிறார். நாம் அப்படியே ஏற்றுக் கொண்டு செய்துக் கொண்டிருக்கக் கூடாது.

(அடுத்த இதழில் முடியும்)

- கொளத்தூர் மணி

Pin It