‘மனிதனை நெருங்கு பவன் கடவுளை நெருங்கு கிறான்’ என்பது மதத்தின் இதோபதேசமாக இருந்தாலும் செயலில் அப்படி இல்லை.
தந்தை பெரியார் அவர்கள் இந்தத் தலைமுறைத் தமிழர்களுக்குத் தந்த மறைமொழி ‘மனிதனை நினை!’ என்பதேயாகும். ஆம்! தமிழகத்தின் கடந்த பலநூற்றாண்டு வரலாற்றை உற்றுநோக்கின் மனிதன் மதிக்கப் பெற்றதாகத் தெரியவில்லை. மனிதரிலும் மகளிர் ஒரு பொருளாக எண்ணப்பட்டதாகக் கூடத் தெரியவில்லை. கடவுள், மதம், மொழி, பணம், சொத்து, பதவி இவைகள் மதிக்கப் பெற்ற அளவுக்கு ‘மனிதன்’ மதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இங்கொன்றும் அங்கொன்று மாகச் சில வரலாற்று நிகழ்ச்சிகள் இருந்ததாகத் தெரிந்தாலும் அது அபூர்வ வாழ்க்கை. அது, இயற்கை நியதியன்று. அதனால் தானே வரலாற்றில் பல நூற்றாண்டுகள் பல கோடி மக்கள் தாழ்த்தப்பட்டவர்களாக வாழ்ந்து வந்துள்ளனர். தாழ்த்தப்பட்ட மக்களுடைய பொறி புலன்கள் பயனற்றப் போயின. கல்வியறிவே இல்லாத மக்களாகப் பல கோடிப் பேரை வைத்திருந்து பல்லக்குச் சவாரி செய்த பெருமை உயர்சாதியினர்க்கு உண்டு.
ஏன் இந்த அவலம்? மனிதனை மதிக்கும் பண்பு நம்முடைய பண்பாட்டில் இல்லை! எல்லாரும் கடவுளை மட்டுமே நாடுகிறார்கள்! நெருங்குகிறார்கள்! ‘மனிதனை நெருங்குபவன் கடவுளை நெருங்குகிறான்’ என்பது மதத்தின் இதோபதேசமாக இருந்தாலும் செயலில் அப்படி இல்லை. இன்னும் நமது நாட்டில் மனித மதிப்பீட்டுச் சமுதாயம் தோன்ற வில்லை. கடவுளும் பணமும்தான் மதிக்கப்படு கின்றன. கடவுளுக்குப் பணம் துணை பணத் துக்குக் கடவுள் துணை. இது இன்றைய சமுதாயப் போக்கு இந்தப் போக்கு மாற வேண்டும்.
பெரியாரின் இலட்சியம்!
மனிதன், மனிதத்துக்காக மதிக்கப் பெறதல் வேண்டும். மனிதம் மொழி, இனம், சாதி, மதம் இவைகளின் காரணமாக ஒதுக்கப் படுதல் கூடாது. மனிதம் அது ஆணாயினும் பெண்ணா யினும் மதிக்கப்படுதல் வேண்டும். போற்றப் படுதல் வேண்டும் என்பதே பெரியாரின் கொள்கை. “சாதி வேற்றுமைகள் இயற்கை, தீண்டாமை, சுகாதார அடிப்படை யில் தோன்றியது” என்ற நச்சுத் தன்மை வாய்ந்த கருத்துகளைப் பெரியார் கடுமை யாகச் சாடினார். சாதிகள்இல்லாத சமுதாய அமைப்பே பெரியாரின் இலட்சியம்! மனிதமே, உயர்வில் உயர்வானது மனிதம் போற்றப்படு கின்ற, மனிதம் மதிக்கப்படுகின்ற நாடுகள் முன்னேறுகின்றன. இதற்கு ஜப்பான் ஒரு எடுத்துக்காட்டு! நமது நாட்டில் மனிதம் மதிக்கப்படுவதில்லை. நமது நாட்டில் மனிதனை மதிக்காமல், மனிதனின் உள்ளீடுகளைத் தூண்டி வளர்க்காமல் அழிக்கத் தொடங்கியதன் விளைவே அடிமைத்தனம். சுதந்திரம் என்பது பல துறைகளிலும் வளர்ந்த மனித உலகம் சுவாசிக்கும் காற்றாகும். நமது நாட்டு மக்கள் இந்தக் காற்றைச் சுவாசித்ததில்லை; இதுவரையில் சுவாசிக்கவில்லை; சுவாசிக்கும் முயற்சி இல்லை. “அச்சமே கீழ்களது ஆசாரம்” என்பார் திருவள்ளுவர். இன்று எங்கும் அச்சம் - பயம் ஏன்? மக்கள் கருத்து, சம்பிரதாயங்கள், மரபுகள் இவையெல்லாம் மனிதனை அச்சுறுத்தி அடிமைப்படுத்துகின்றன.
கருத்துக்குப் பயப்படும் கொடுமை!
மக்கள் யார்? அவர்கள் கருத்து என்ன? நூற்றுக்கு எழுபத்து ஏழு விழுக்காட்டினர் எழுத்தறிவு இல்லாதவர்கள். இவர்களுக்கு ஏது கருத்து? இவர்கள் கருத்தில் மேலாதிக்கம் செய்பவை, சூது செய்யும் படித்தவர்களின் கருத்துகள் அல்லது சம்பிரதாயங்கள், பழக்கங்கள், வழக்கங்கள் ஆகியவை தாமே! மக்கள் எந்தக் காலத்தில் நல்ல கருத்தை ஏற்றுக் கொண்டார்கள்? மக்கள் கருத்துக்குப் பயந்து கொண்டு சிந்தனையை, பகுத்தறிவை இழப்பது கொடுமை! கொடுமை!
அடுத்து, மனிதன் நடைமுறைப்படுத்தும் மரபுகள், சம்பிரதாயங்கள் இன்றைய மனித வாழ்வுக்குப் பலநூறு ஆண்டுகளுக்கு முன் தோன்றியவை. அவை எங்ஙனம் ஒத்ததாகும்? பேரனுக்கு, தாத்தா, சட்டை தைத்து வைக்க இயலுமா?
அடுத்து, படித்தவர்கள், இவர்களில் பலர் சிந்திப்பதில்லை. இல்லை, சிந்திக்க மறுக் கிறார்கள். இவர்கள் சொன்னதையே சொல்லிக் கொண்டிருப்பார்கள். கீறல் விழுந்த இசைத்தட்டு மாதிரி! எரிகிற மெழுகுவர்த்தி யால்தான் பிறி தொன்றை எரிக்கச் செய்ய முடியும். ஆதலினால் மனிதன் சிந்திக்க மறுத்த நாளிலிருந்து மனிதனை மதிக்கத் தவறி விட்டான். மனிதமே கெட்டது. அதனால் தலைவர் பெரியார், ‘மனிதனை நினை!’ என்றார். மனிதனை நினைப்போம்! சாதிகளை, மதங்களைக் கடந்து மனிதனை நினைப்போம்!
நன்றி : 1991ஆம் ஆண்டு வெளி வந்த ‘விடுதலை’ பெரியார் 113ஆவது ஆண்டு பிறந்த நாள் மலர்