கோயில் கருவறைக்குள் பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகர்களாக நுழைய முடியும் என்ற பார்ப்பன ஆதிக்கம் தமிழ்நாட்டில் ஆகமக் கோயில்களில் இன்றும் பின்பற்றப்படுகிறது. தமிழக சட்டமன்றத்தில் இரண்டு முறை அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் உரிமைக்கு அனுமதி அளித்து ஒரு மனதாக சட்டம் நிறைவேறிய பிறகும் பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றத்தில் சட்டமன்றத் தீர்மானத்தை முடக்கி விட்டனர். அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளைத் தமிழக அரசு நடத்தியது. பயிற்சிப் பெற்ற பார்ப்பனரல்லாத இளைஞர்கள் உச்சநீதிமன்றத் தடையினால் அர்ச்சகர் ஆக முடியவில்லை. இந்த நிலையில் வடநாட்டில் முக்கிய கோயில்களில் கோயில் கர்ப்பக்கிரகம் வரை பக்தர்களே நேரடியாக சென்று கடவுளை வழிபடும் முறை உள்ளது. மராட்டியம், இதில் இன்னும் ஒரு படி மேலே போய் பெண்களையும் கருவறைக்குள் அனுமதிக்க முன் வந்துள்ளது.

மகாராட்டிர மாநிலம் கோலாப்பூரில் பிரபலமான மகாலட்சுமி கோயில் உள்ளது இக்கோயில் கருவறைக்குள் கடந்த 2000 ஆண்டுகளாக பெண்கள் செல்ல தடை இருந்தது. பெண்களையும் கருவறைக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பெண்கள் முன் வைத்தனர். இதனைத் தொடர்ந்து மாநில உள்துறை அமைச்சர் கடேஜ் பட்டேல் என்பவர் தலைமையில் கோயில் நிர்வாகக் குழுவினர், அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் கோயில் கருவறைக்குள் பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டது. இப்போது, பெண்கள் கருவறை வரை சென்று, மகாலட்சுமி கோயிலில் ‘தரிசனம்’ செய்கிறார்கள்; 2000 ஆண்டுகால தடை உடைந்தது.

Pin It