சூலூர் பயிற்சி முகாமில் தோழர்கள் உறுதி:-

கோவை தெற்கு மாவட்டக் கழக சார்பில் கழகப் பொறுப்பாளர்களுக்கும், களப்பணியாளர்களுக்கு மான பயிற்சி முகாம் கடந்த ஜூலை 2, 3 தேதிகளில் சிறப்புடன் நடந்தது. சூலூருக்கு அருகே இயற்கை எழில் சூழ்ந்த பசுமைப் பண்ணையில் கழகத் தோழர்கள் இந்தப் பயிற்சி முகாமை நடத்தினர். 10 பெண்கள் உட்பட 40 தோழர்கள் பயிற்சி வகுப்பில் பங்கேற்றனர். பயிற்சியில் பங்கேற்கும் தோழர்கள் அனைவரும் முதல் நாள் இரவே முகாம் நடைபெறும் இடத்துக்கு வந்து சேர்ந்து விட்டனர்.

இரண்டு நாள்களிலும் விடியற்காலையில் தமிழ்நாடு ‘உதைகுத்துச் சண்டைக் கழக’ அமைப் பாளர் தோழர் கோ. சிவபெருமாள் உடற்பயிற்சி முறைகளை பயிற்றுவித்தார். ஒரு மணி நேரம் தோழர்கள் உடற்பயிற்சியில் ஈடுபட்டனர். ஜூலை 2 ஆம் தேதி காலை 10 மணியளவில் அரங்கிற்கு வெளியே பசுமையான புல்வெளியில் பயிற்சி முகாம் தொடங்கியது. முகாமுக்கு அமைப்பாளராக இருந்து ஒருங்கிணைத்து வழி நடத்திய மாவட்ட செயலாளர் கா.சு. நாகராசன் முகாமின் நோக்கங்களை விளக்கி னார். மாவட்ட தலைவர் கலங்கல் மு. வேலுசாமி தலைமை உரையாற்றினார். பயிற்சியாளர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். முதல் வகுப்பாக கழகப் பொதுச் செயலாளர் கோவை கு. இராமகிருட்டிணன், இன்றைய சூழலில் ‘பெரியாரின் தேவையும் இளைஞர் கடமையும்’ என்ற தலைப்பில் வகுப்பு எடுத்தார்.

பெரியார் காலத்துக்கு முந்தைய சமுதாயம் பார்ப்பனக் கொடுமைகளால் சீரழிந்து கிடந்த வரலாறுகளையும் பார்ப்பனர்கள் இப்போதும் தங்கள் ‘வர்ணாஸ்ரமக் கொள்கைகளை’ விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருப்பதையும் வரலாற்றுச் சான்றுகளுடன் விளக்கி, பெரியார் வாழ்க்கையில் அவர் வாழ்ந்து காட்டிய எளிமை, சிக்கனம், கொள்கை உறுதிகளை எடுத்துக் காட்டியும் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாகப் பேசினார். தொடர்ந்து பயிற்சியாளர்கள் ஒவ்வொருவரும் பெரியார் கொள்கையை நோக்கி, தாங்கள் வருவதற்குக் காரணமாக அமைந்த அனுபவங்களை, விளக்கிப் பேசியது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு களிடம் போய், பிறகு பெரியார் கொள்கையை நோக்கி, மீண்டு வந்த தோழர்கள், தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். சாதி - தீண்டாமை ஒடுக்குமுறைகளை தங்களின் பகுதி களிலிருந்து முழுமையாக ஒழித்துக் கட்டுவோம் என்று தோழர்கள் உறுதியுடன் தெரி வித்தனர். மதிய உணவுக்குப் பிறகு தோழர் சிற்பி ராசன், ‘புத்தி வந்தால் பக்தி போகும்’ என்ற தலைப் பில் மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பகுத்தறிவு கருத்துகளையும் அன்றாட வாழ்க்கையில் பின்பற்றப் படும் மூடநம்பிக்கைகளையும் அவை அறிவியலுக்கு எதிரானவை என்பதையும் விளக்கிப் பேசினார்.

தேனீர் வேளைக்குப் பிறகு கழகத் தலைவர் கொளத்தூர் மணி ‘பெரியார் காண விரும்பிய தமிழ் தேசம்’ எனும் தலைப்பில் வகுப்பு எடுத்தார். தமிழர் சமூக வரலாற்றில் உழைப்புச் சுரண்டல் உருவான காலத்தையும், பார்ப்பனர்கள் தங்களது சாதி, வர்ண பண்பாட்டை தமிழர்கள் மீது திணித்து, தமிழர் சமு தாயத்தை பார்ப்பனர்களுக்கு அடிமைகளாக மாற்றி யமைத்து, அதை தமிழர்கள் ஏற்கச் செய்ததையும் விரிவாக விளக்கியதோடு, தமிழர்களின் பண் பாட்டுத் தளத்தில் பார்ப்பனியத்திடமிருந்து மீட்டெடுக்க பெரியார் முன் வைத்த அடையாளமே ‘திராவிடர்’ என்றும், அரசியலில் விடுதலைக்கு பெரியார் வலி யுறுத்திய அடையாளம் ‘தமிழன்’ என்றும் விளக்கி னார். திராவிடர், தமிழர் குறித்து பயிற்சியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு விளக்கமளித்தார். கழகத் தலைவர் உரையைத் தொடர்ந்து பயிற்சியாளர்கள் பங்கேற்ற விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.

அதனைத் தொடர்ந்து பயிற்சியாளர்களிடையே சிற்பிராசன் கலந்துரையாடி, பயிற்சியாளர்கள் எழுப்பிய அய்ய வினாக்களுக்கு விளக்கமளித்தார். கழகத் தோழர் சூலூர் பன்னீர்செல்வம் புதிய அமைப்புகளை உருவாக்க வேண்டிய அவசியம்; அதற்கான செயல்முறை, அணுகுமுறைகளை விளக்கிக் கூறினார். இரவு உணவுக்குப் பிறகு, கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், சிற்பிராசன் தோழர் களோடு பயிற்சி முகாமில் பகிர்ந்து கொண்ட கருத்துகள் பற்றி கலந்துரையாடினர். இரவு 10 மணியளவில் முதல் நாள் பயிற்சி நிறைவடைந்தது.

இரண்டாம் நாள் ஜூலை 3, ஞாயிறு காலை 9 மணியளவில் பயிற்சி முகாம் தொடங்கியது. முதல் வகுப்பாக ‘பெரியார் தொண்டர்களின் பெரும் பணி நேற்றும், இன்றும்’ - என்ற தலைப்பில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், ‘சாதி எதிர்ப்பு - இந்து மத எதிர்ப்பு, கடவுள் எதிர்ப்பு, இந்திய தேசிய எதிர்ப்பு’ - என்ற எதிர்ப்புகளுக்கிடையே உள்ள தொடர்புகளை விளக்கியும், பெரியார் திராவிடர் கழகத்தினர் செயல்பாடுகள், அதன் வரலாற்றுத் தேவைகளையும் விளக்கிப் பேசினார். தேனீர் இடை வேளைக்குப் பிறகு தோழர் ஓவியா, ‘ஒடுக்கு முறைகளின் கடும் எதிரி பெரியார்’ - எனும் தலைப் பில் வகுப்பு எடுத்தார். பெரியார் தான் ஏற்றுக் கொண்ட கொள்கையை முதலில் தமது குடும்பத்தில் பின்பற்றச் செய்ய வைத்ததையும், அதற்குப் பெரியார் பின்பற்றிய ‘வற்புறுத்தல்’ இல்லாத அணுகுமுறையை யும் - பெண்களின் விடுதலைக்கு பெரியார் முன் வைத்த கருத்துகளையும் பெண்கள், தங்களின் விடுதலைக்கு, ஆண்களைச் சார்ந்து நின்றால், எந்த முன்னேற்றத்தையும் எட்ட முடியாது என்பதையும் பெண்களின் பங்களிப்பு இல்லாமல், சாதி ஒழிப்பு இயக்கம் வெற்றி பெற முடியாது என்றும் விரிவாக விளக்கினார்.

பயிற்சியாளர்கள் ஆர்வமுடன் எழுப்பிய கேள்விகளுக்கு விளக்கமளித்தார். மதிய உணவுக்குப் பிறகு சிற்பிராசன் ‘மந்திரமா? தந்திரமா’ நிகழ்ச்சி நடத்தினார். தொடர்ந்து களப்பணிகளில் கழகத் தோழர்கள் மேற்கொள்ள வேண்டிய அணுகு முறைகளை விளக்கி கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் கழகத் தலைவர் கொளத் தூர் மணி ஆகியோர் உரையாற்றி, பயிற்சி முகாமை நிறைவு செய்தனர். பயிற்சியாளர்களுக்காக தயாரிக் கப்பட்ட குறிப்புகளடங்கிய கையேடுகளை பயிற்சி யாளர்களுக்கு கழகத் தலைவர் வழங்கினார். இரண்டு நாள் பயிற்சி தங்களுக்கு பெரியாரியல் பற்றிய புரிதலையும் உற்சாகத்தையும் தந்தது என்றும், களப்பணிக்கும் பரப்புரைக்கும் பெரிதும் பயன்படக் கூடியதாக இருந்தது என்றும் பயிற்சியாளர்கள் தெரிவித்தனர்.

மாவட்ட செயலாளர் கா.சு. நாகராசன் நன்றி கூற, 5 மணியளவில் முகாம் நிறைவடைந்தது. தோழர்கள் அனைவரும் முகாம் நினைவாக புகைப்படம் எடுத்துக் கொண்டு பிரியா விடை பெற்றனர். வளர் இளம் பருவத்தினரும் இளைஞர்களும் பங்கேற்ற இந்த பயிற்சி முகாம் கட்டுப்பாட்டுடனும் பயிற்சி யாளர்களின் பங்கேற்பு ஆர்வத்துடனும் தோழமை நெகிழ்வுடன் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும். இயற்கையான பசுமைச் சூழலில் பகுத்தறிவு, சாதி ஒழிப்புக் கொள்கையையும் அதை வாழ்வியலாக்கும் உணர்வுகளையும் சிந்தனையிலும் உள்ளத்திலும் பதிய வைத்தது, இந்த பயிற்சி முகாம். - நமது செய்தியாளர்

Pin It