தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நிலவும் தீண்டாமைக் கொடுமைகள் பற்றிய முழுமையான ஆய்வை ‘எவிடன்ஸ்’ நிறுவனம் நடத்தியுள்ளது. அதனுடைய அறிக்கையிலிருந்து....

தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது;  தீண்டாமையை கடைபிடிப்பது குற்றம் என்று இந்திய அரசியல் சாசனம் பிரிவு 17-ல் கூறப்பட்டுள்ளது. தீண்டாமையை ஒழிப்பதற்காக குடியுரிமை பாதுகாப்புச் சட்டம் 1955 என்கிற சிறப்பு சட்டமும் உருவாக்கப்பட்டது. இதுமட்டுமல்லாமல் இச்சட்டம் இயற்றப்பட்டு 34 ஆண்டுகள் கடந்த பின்னர் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 விதிகள் 1995 என்கிற சிறப்பு சட்டம் இயற்றப்பட்டது.

தீண்டாமை மற்றும் வன்கொடுமைகள் ஒழிக்கப் பட வேண்டும்; சமத்துவமும் சனநாயகமும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்கிற நோக்கத்திற்காக பல்வேறு திட்டங்களும் கொள்கைகளும் நீதி,  நிர்வாக,  காவல் கட்டமைப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனாலும்,  தீண்டாமை மற்றும் வன்கொடுமைகள் ஒழிக்கப்படுகின்றனவா?  இவற்றை ஒழிப்பதற்காக கொண்டு வரப்பட்ட சட்டங்களும் திட்டங்களும் கொள்கைகளுக்கு முறையாக கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்கிற கேள்வி சிவில் சமூக குழுக்களிடையே முன் வைக்கப்படுகின்றன. ஏனெனில் இரட்டை தம்ளர் முறை,  தலித்துகள் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு,அரசு பொது இடங்களை பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகள், பண்ணையடிமை,  கொத்தடிமை என்று தீண்டாமை ஒரு பக்கம், தலித் பெண்கள் பாலியல் வன்புணர்ச்சி, தலித்துகள் கொலை செய்யப்படுதல்,  தாக்கப்படுதல்,  மலம்,  சிறுநீர் குடிக்க வைத்து அவமானப்படுத்தப்படுதல் என்று வன்கொடுமை மற்றொரு பக்கம்; இப்படி தீண்டாமை சித்திரவதைகளாலும்,  வன்கொடுமைகளாலும் தலித்துகள் பல்வேறு புறக்கணிப்புகளுக்கும், அவமானங்களுக்கும் உட்படுத்தப்படுகிறார்கள் என்று பல்வேறு சம்பவங்கள் ‘சாட்சி’ களாக விளங்குகின்றன.

உண்மையில் என்னதான் நடக்கிறது?  இன்னமும் தீண்டாமை வன்கொடுமைகள் நடக்கின்றனவா?  இவற்றிற்கு யார் காரணம்?என்பது குறித்து எமது எவிடன்ஸ் அமைப்பு தமிழக அளவில் ஆய்வினை மேற்கொண்டு வருகிறது.

மதுரை,  சிவகங்கை,  சேலம்,  ஈரோடு,  கோயமுத்தூர்,  கடலூர், பெரம்பலூர்,  தேனி ஆகிய எட்டு மாவட்டங்களில் மொத்தம் 70 ரிசர்வ் பஞ்சாயத்துகள் உள்ளன. இவற்றில் எமது எவிடன்ஸ் அமைப்பு 386பஞ்சாயத்துகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளது. முப்பது வகையான தீண்டாமை வடிவங்களை பட்டியலிட்டு கேள்விப் படிவங்களைக் கொண்டு எமது எவிடன்ஸ் அமைப்பினர் டிசம்பர் 2006 முதல் நவம்பர்2007 வரை நடத்தப்பட்ட இவ்வாய்வில் தகவல் அளிப்பவரின்,நேர்காணல் கொடுப்பவரின் கையொப்பமும் ஆய்வு படிவத்தில் பெறப்பட்டுள்ளது. குறிப்பாக பஞ்சாயத்து தலைவர்கள்,  தங்கள் பகுதிகளில் நடக்கக்கூடிய தீண்டாமை கொடுமைகளை கையொப்பம் இட்டு உறுதிப்படுத்தியுள்ளார்.

மதுரை மாவட்டம்

மதுரை மாவட்டத்தில் நாங்கள் ஆய்வு செய்த 83  கிராம பஞ்சாயத்துகளில் (மொத்தம் ரிசர்வ் பஞ்சாயத்து 83) 22 பஞ்சாயத்து தலைவர்கள், தங்கள் பகுதிகளில் நடக்கக்கூடிய தீண்டாமை கொடுமைகளை உறுதி செய்துள்ளனர்.

நாங்கள் ஆய்வு செய்த 83 கிராம பஞ்சாயத்துகளில் 77 கிராமங்களில் இரட்டை டம்ளர் முறை உள்ளது. சாதி இந்துக்களுக்கு தனிக்குவளை,  தலித்துகளுக்கு தனிக்குவளை என்று தேநீர் கடைகளில் பயன்படுத்தப்படுகின்றன. பெரும் பாலான கிராமங்களில் தலித்துகளுக்கு அனுமினிய, பீங்கான் கிளாஸ்கள் கொடுக்கப்படுகின்றன.

தலித்துகள் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு,  திருவிழாவில் பங்கேற்க கட்டுப்பாடு என்று  35  கிராமங்களில் கோவில்,  வழிபாடு ரீதியான தீண்டாமை கடைபிடிக்கப்படுகின்றன.  பள்ளிக்கூடம் மற்றும் பள்ளிக்கூட வளாகத்தில் தலித் குழந்தைகள் மீதான பாகுபாடு  70 கிராமங்களில் கடைபிடிக்கப்படுகின்றன. இவற்றில் ஆசிரியர்களும், சாதி இந்து மாணவர்களும் தலித் குழந்தைகளை சாதிய ரீதியாக இழிவாக நடத்துகின்றனர் என்கிற தகவல்களும் எமது ஆய்வில் கிடைக்கப் பெற்றுள்ளது. தலித் குழந்தைகளை தனியாக உட்கார வைத்தல், அக்குழந்தைகளுக்கு என்று தனி தண்ணீர் குடம்,  அக்குழந்தைகள் மீது மட்டும் ஆசிரியர்கள் தனியாக கடைபிடிக்கப்படும் தண்டனை என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களாலும் மருத்துவ பணியாளர்களாலும் தலித்துகளுக்கு கடைப் பிடிக்கப்படும் சிகிச்சையில் பாகுபாடு காட்டப்படு கிறது. தொட்டு மருத்துவம் பார்க்காதது, அலட்சியமாக பேசுவது, திட்டுவது,பிரசவம் பார்க்க அனுமதி மறுப்பது என்று மொத்தம் 83கிராமங்களில் 36 கிராமங்களில் இப்பாகுபாடுகள் நிலவுகின்றன.

தலித் குழந்தைகள் கொத்தடிமை தொழில்களுக்கு வெளி மாநிலங்களுக்கும் வெளி மாவட்டங்களுக்கும் கடத்தப்படுகிற சூழல் மிகுதியாக காணப்படுகிறது. நாங்கள் ஆய்வு செய்த 83 கிராமங்களில்46 கிராமங்களில் தலித் குழந்தைகள் கொத்தடிமையாக உள்ளனர். ரேசன் மற்றும் பொதுக் கடைகளில் 76 கிராமங்களில் தலித்துகள் பாகுபாட் டுடன் நடத்தப்படுகின்றனர். வரிசையில் நிற்க அனுமதி மறுப்பு, குறைவான பொருட்கள் விநியோகம், முக்கியப் பொருட்கள் கொடுக்க அனுமதி மறுப்பு என்று பாகுபாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

தலித் பெண்கள் மீதான பாலியல் சித்திரவதைகள் பாலியல் வன்புணர்ச்சி என்று 83 கிராமங்களில் 66 கிராமங்களில் சாதி இந்து ஆண்களால் வன்கொடுமைகள் நடத்தப்படுகின்றன.எமது எவிடன்ஸ்அமைப்பு ஆய்வு செய்த 83 ரிசர்வ் பஞ்சாயத்து கிராமங்களிலும் தீண்டாமை கொடுமைகள் சாதி இந்துக்களால் கடைபிடிக்கப் பட்டு வருகின்றன. அரசியல், பொருளாதாரம், அதிகாரப் பகிர்வு, அரசு இயந்திரங்களின் நடவடிக்கைகள், முடிவெடுக்கும் திறன் உள்ளிட்ட அனைத்து ஆளுமை காரணிகளையும் தீர்மானிக்கும் சக்திகளாக சாதி இந்துக்கள் உள்ளனர். 30 வகையான தீண்டாமை வடிவங்களை பட்டியல் இட்டு ஆய்வுசெய்தாலும், ஒவ்வொரு தீண்டாமையின் கொடூரமும் அவற்றின் வெவ்வேறு வடிவங்களும் அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக உள்ளன.

மதுரை மாவட்டத்திலுள்ள பஞ்சாயத்து யூனியன்களில் 83 ரிசர்வ் பஞ்சாயத்துகளை ஆய்வு செய்த  போது, ‘ரிசர்வ்’ பஞ்சாயத்துகள் கொண்டு வரப்பட்டதற்கான நோக்கங்கள் சனநாயக பங்களிப்புகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்று ஆராய்ந்து பார்த்தோமானால்‘இல்லை’ என்கிற ஆய்வு முடிவுதான் ‘கண்டறிந்தவைகளாக’ ஆய்வில் கிடைக்கின்றன. தலித்துகளுக்கு தனிக் குவளை என்கிற இரட்டை தம்ளர் முறையின் வடிவத்தை ஆய்வு செய்த போது அவற்றில் எத்தனை விதமான கூறுகள் - தன்மைகள்.

•     இன்னமும் தேங்காய் செரட்டை முறை உள்ளது. இந்த தேங்காய் செரட்டையை தலித்துகள் தேநீர் கடையில் கூரையில் சொருகி வைத்திருக்க வேண்டும். தேநீர் வாங்கும்போது 1 அடி உயரம் உள்ள தாழ்வான நிலையில் வைத்துதான் தேநீர் பிடிக்க வேண்டும் என்கிற ‘பாகுபாட்டின் படிவம்’ வன்கொடுமையின் உச்சமாக நாங்கள் கருது கிறோம்.

•     பிரசவ காலங்களில் ஆரம்ப சுகாதார மையத்தி லுள்ள செவிலியர்கள் கர்ப்பமான தலித் பெண்ணை தொட்டு மருத்துவம் பார்க்க மாட்டார்.

•       பேருந்துகளில் பயணம் செய்யும்போது சாதிய இந்துக்கள் வந்தால் உட்கார்ந்து இருக்கக்கூடிய தலித்துகள் எழுந்து நிற்க வேண்டும்.

•    பால்வாடியில் தலித் குழந்தைகளுக்கு அரை முட்டை மட்டுமே கொடுக்கப்படுகிறது.

•     கிராமத்தில் உள்ள மனமகிழ் மன்றங்களில் தலித்துகளின் குடும்ப நிகழ்ச்சி அனுமதிக்கப்பட வில்லை.

இப்படி தீண்டாமையின் பட்டியல் நீண்டு கொண்டே போவதை எமது ஆய்வு உறுதி செய்துள்ளது.

சிவகங்கை மாவட்டம்

சிவகங்கை மாவட்டத்தில் நாங்கள் ஆய்வு செய்த 80 ரிசர்வ் பஞ்சாயத்துகளில் (மொத்தம் ரிசர்வ் பஞ்சாயத்து 85) 40 பஞ்சாயத்து தலைவர்கள் தங்கள் பகுதிகளில் நடக்கக்கூடிய தீண்டாமை கொடுமை களை உறுதி செய்துள்ளனர்.

நாங்கள் ஆய்வு செய்த 80 கிராம பஞ்சாயத்து களில் 48கிராமங்களில் இரட்டை தம்ளர் முறை உள்ளது. சாதிய இந்துக்களுக்கு தனிக்குவளை, தலித்துகளுக்கு தனிக்குவளை என்று தேநீர் கடைகளில் பயன்படுத்தப்படுகின்றன. பெரும் பாலான கிராமங்களில் தலித்துகளுக்கு அலுமினிய, பீங்கான் கிளாஸ்கள் கொடுக்கப்படுகின்றன.

தலித்துகள் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு, திருவிழாவில் பங்கேற்க கட்டுப்பாடு என்று 64 கிராமங்களில் கோவில், வழிபாடு ரீதியான தீண்டாமை கடைப்பிடிக்கப்படுகின்றன.

பள்ளிக்கூடம் மற்றும் பள்ளிக்கூட வளாகத்தில் தலித் குழந்தைகள் மீதான பாகுபாடு 5 கிராமங்களில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஆசிரியர் களும் சாதி இந்து மாணவர்களும் தலித் குழந்தை களை சாதிய ரீதியாக  இழிவாக நடத்துகின்றனர் என்கிற தகவல்களும் எமது ஆய்வில் கிடைக்கப் பெற்றுள்ளது. தலித் குழந்தைகளை தனியாக உட்கார வைத்தல், அக் குழந்தைகளுக்கு என்று தனி தண்ணீர் குடம், அக் குழந்தைகள் மீது மட்டும் ஆசிரியர்கள் தனியாக கடைப்பிடிக்கப்படும் தண்டனை என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களாலும் மருத்துவ பணியாளர்களாலும் தலித்துகளுக்கு கடைப் பிடிக்கப்படும் சிகிச்சையில் பாகுபாடு காட்டப்படு கிறது. தொட்டு மருத்துவம் பார்க்காதது, அலட்சியமாக பேசுவது, திட்டுவது,பிரசவம் பார்க்க அனுமதி மறுப்பது என்று மொத்தம் 80கிராமங்களில் 8 கிராமங்களில் இப்பாகுபாடுகள் நிலவுகின்றன.

தலித் குழந்தைகள் கொத்தடிமை தொழில்களுக்கு வெளி மாநிலங்களுக்கும் வெளி மாவட்டங்களுக்கும் கடத்தப்படுகிற சூழல் மிகுதியாக காணப்படுகிறது. நாங்கள் ஆய்வு செய்த 80 கிராமங்களில்14 கிராமங்களில் தலித் குழந்தைகள் கொத்தடிமையாக உள்ளனர். ரேசன் மற்றும் பொதுக் கடைகளில் 31 கிராமங்களில் தலித்துகள் பாகுபாட்டுடன் நடத்தப்படுகின்றனர். வரிசையில் நிற்க அனுமதி மறுப்பு, குறைவான பொருட்கள் விநியோகம், முக்கிய பொருட்கள் கொடுக்க அனுமதி மறுப்பு என்று பாகுபாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

தலித் பெண்கள் மீதான பாலியல் சித்திரவதைகள் பாலியல் வன்புணர்ச்சி என்று 80 கிராமங்களில் 24 கிராமங்களில் சாதி இந்து ஆண்களால் வன்கொடுமைகள் நடத்தப்படுகின்றன.

எமது எவிடன்ஸ் அமைப்பு ஆய்வு செய்த 80 ரிசர்வ் பஞ்சாயத்து கிராமங்களிலும் தீண்டாமை கொடுமைகள் சாதிய இந்துக்களால் கடைப் பிடிக்கப்பட்டு வருகின்றன. அரசியல், பொருளா தாரம்,அதிகாரப் பகிர்வு, அரசு இயந்திரங்களின் நடவடிக்கைகள்,முடிவெடுக்கும் திறன் உள்ளிட்ட அனைத்து ஆளுமை காரணிகளையும் தீர்மானிக்கும் சக்திகளாக சாதிய இந்துக்கள் உள்ளனர். 30 வகையான தீண்டாமை வடிவங்களை பட்டியல் இட்டு ஆய்வு செய்தாலும், ஒவ்வொரு தீண்டாமை யின் கொடூரமும்,அவற்றின் வெவ்வேறு வடிவங்களும் அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக உள்ளன.

(தொடரும்)

Pin It