கிராமத்தில் சிலர் சொறிநாயை கல்லெடுத்து விரட்டுவதைப் பார்த்திருக்கிறேன். அடிவாங்கிய சொறிநாய் அந்த இடத்திலேயே நிற்காது. பாதுகாப்பான தூரத்திற்கு ஓடி, அங்கு நின்று கொண்டு கல்லெறிந்தவர்களைப் பார்த்து வெகுநேரம் குரைத்துக் கொண்டிருக்கும். சென்னைக்கு வந்தபிறகு, அத்தகைய சம்பவங்களைப் பார்க்க வாய்ப்பில்லாமல் போனது. அண்மையில் ஷோபாசக்தியின் பதில்களைப் பார்த்தபோது அந்தக் குறை நீங்கியது. பக்கம் பக்கமாக எழுதியதைப் பார்த்தால், அடி கொஞ்சம் பலமாகத்தான் விழுந்திருக்கும்போல...

அத்தனை பக்கங்களாலும் அவரது பித்தலாட்டங்களையும், பொறுக்கித்தனங்களையும் மறைக்க முடியவில்லை. இன்னும் சில முயற்சிகள் செய்யலாம். கீற்றுக்கு எதிராக எழுதியவற்றை ஒரு தொகுப்பாக கொண்டுவரலாம் (முடிந்தால் ஆங்கிலத்திலும் ஒரு பதிப்பு). பரமார்த்த குரு சீடர்களிடமும், மகாமக்குகளிடமும் அந்தப் புத்தகத்தைக் கொடுத்து, கீற்றுக்கு எதிரான பிரச்சாரத்தை முடுக்கி விடலாம். நோட்ஸ் வாத்தியாரைக் கூப்பிட்டு, லீனாவுக்கு ஒரு கூட்டம் நடத்தியதுபோல, சரிந்து போன ஷோபாவின் கட் அவுட்டை தூக்கி நிறுத்த ஒரு கூட்டம் நடத்தச் சொல்லலாம். கடற்கரய் புண்ணியத்தில் குமுதம் வாயிலாக ஷோபா சக்தியின் அம்மணம் உலகம் முழுவதும் சென்று சேர்ந்திருப்பதால், அத்தனை குமுதம் வாசகர்களையும் நேரில் சந்தித்து 'நான் நல்லவன், கீற்று நந்தன்தான் என்னை கிள்ளி வச்சுட்டான்' என்று ஒரு பாட்டம் அழுது வைக்கலாம். 

ஷோபா சக்திவலி தாங்கமாட்டாமல், வானத்திற்கும் பூமிக்கும் குதித்திருக்கிறார். அதே ஆத்திரத்தில் எழுதவும் உட்கார்ந்ததால் ஷோபா சக்திக்கு பல விஷயங்கள் உறைக்கவில்லை. கீற்றில் வெளியாகும் படைப்புகள் அனைத்தும் கீற்று ஆசிரியர் குழுவின் கருத்துக்கள் அல்ல; அவை அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே என்பதை கீற்று தொடங்கிய நாளிலேயே http://www.keetru.com/common/terms.php பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறோம். பலர் அதைக் கவனிக்கத் தவறுகிறார்கள் என்பதற்காக பின்னர் அதை ஒவ்வொரு படைப்பின் கீழும் குறிப்பிட்டோம். அனைவரும் பயன்படுத்தும் வகையில் - விக்கிபீடியா போன்று - தமிழில் மாற்றுக்கருத்துக்களுக்கான ஒரு தளத்தை உருவாக்க வேண்டும் என்று நோக்கத்தில்தான் கீற்று உருவாக்கப்பட்டது. கீற்று குழுவினரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள், கீற்று தளத்தினை ஆதிக்கம் செலுத்தாமல் நடத்தி வருகிறோம்.

இது எல்லோருக்கும் பொதுவானது. எல்லோருக்குமான விவாத மேடை. அதனால்தான், திராவிட இயக்கவாதிகளை விமர்சித்து தமிழ்த் தேசியவாதிகள் எழுதும் கட்டுரைகளும், தமிழ்த் தேசியவாதிகளை விமர்சித்து இடதுசாரிகள் எழுதும் கட்டுரைகளும், இடதுசாரிகளை விமர்சித்து தலித் இயக்கவாதிகள் எழுதும் கட்டுரைகளும் கீற்றில் காணக் கிடைக்கின்றன. இராஜராஜ சோழனை விதந்தோதும் கட்டுரைகளையும் கீற்றில் பார்க்கலாம். அதே சோழனை விமர்சிக்கும் கட்டுரைகளையும் கீற்றில் பார்க்கலாம். புலிகளை பாசிஸ்ட்கள் என்ற குற்றச்சாட்டையும் காணலாம்; புலிகள் மக்களுக்காக சமரசமின்றி போராடினார்கள் என்ற பாராட்டையும் காணலாம். வர்க்கப்புரட்சி முடிந்தால் சாதி ஒழிந்துவிடும் என்ற கருத்தையும் பார்க்கலாம்; இந்திய பார்ப்பனிய மண்ணில் வர்க்கப்புரட்சி சாத்தியமில்லை என்ற மறுப்பையும் பார்க்கலாம். அவ்வளவு ஏன், ஒரு புத்தகத்தைப் படிக்காமலேயே, தலைப்புக்கு மட்டுமே அ.மார்க்ஸ் ஒரு நோட்ஸ் போட்டது குறித்தும் படிக்கலாம். அதே அ.மார்க்சை ஒரு மாபெரும் ஆராய்ச்சியாளர் என்று பாராட்டிய கட்டுரையையும் கீற்றில் பார்க்கலாம்.

கீற்று தரும் இந்த கருத்து சுதந்திரத்தை அனைத்து இயக்கத்தவர்களும், வாசகர்களும் உணர்ந்திருக்கிறார்கள். அதனால்தான் கீற்றின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்போது இன்னும் வெளிப்படையாக, கீற்றில் அவரவர் படைப்புகளை அவரவர்களே வலையேற்றும் வசதியையும் அளித்துள்ளோம். இந்த கருத்து சுதந்திரத்தை அனைவரும் பயன்படுத்த, பயந்து தெறித்து ஓடிய ஒரே கூட்டம் அ.மார்க்ஸ் கூட்டம்தான்.

100 பூக்கள் மலரட்டும் என்பதுதான் கீற்றின் கோட்பாடு. ஆனால், மாற்றுக் கருத்துகளை மறுத்து, தங்கள் கூட்டத்திற்கான பஜனை மடமாக இணையதளங்களைப் பார்க்கும் அ.மார்க்ஸ், ஷோபா சக்தி குழுவினருக்கு கீற்று உவப்பில்லாமல் போனதில் ஆச்சரியமில்லை.

கீற்றில் வரும் கட்டுரைகள் எல்லாம் கீற்று நந்தனின் கட்டுரைகள் என்று புரிந்து கொள்ளுமளவிற்குதான் ஷோபா சக்தியின் அறிவு வேலை செய்கிறது. பல்வேறு கருத்தியல் சிந்தனைகளுடன் இருப்பவர்கள் சங்கமிக்கும் இடமாக கீற்று இருப்பதால் ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்களுடன் இருக்கும் கட்டுரைகளை கீற்றில் அதிகம் காணலாம். அவை அனைத்தும் கீற்று நந்தனின் கருத்துக்கள் என்றால், அ.மார்க்சை விட குழப்பவாதியாக கீற்று நந்தன் தெரிவான். ‘நான் ஒத்துக்கொள்ள மாட்டேன்; கீற்றில் வருவது எல்லாம் கீற்று நந்தனின் கருத்துதான்’ என்று ஷோபா சக்தி அடம்பிடிப்பாரேயானால், கீற்றில் இருக்கும் ஷோபாவின் படைப்புகளை இனி எந்தத் தொகுப்பிலும் அவர் பயன்படுத்தாமல் இருக்கட்டும்.

நண்பர் ஒருவர் முன்பு சொன்னதை வைத்து, நான் கூட ஷோபா சக்தியை ஓரளவுக்கு விஷயம் உள்ள ஆள் என்றுதான் நினைத்தேன். ஆனால் அவர் பதில் எழுதிய லட்சணம், இவரும் பரமார்த்த குருவின் பரம சீடர் என்பதை தண்டனிட்டு நிரூபிப்பதாக இருக்கிறது. தன்னிடம் வைக்கப்பட்ட கேள்விகளுக்கு வழக்கம்போல் தாவித்தாவி பதில் சொல்லியிருப்பதோடு, கேள்வி கேட்டவர்களுக்கு எல்லாம் அறிவு இல்லை என்று சொல்லி தன்னை அறிவாளியாக்கிக் கொள்ளவும் முயற்சி எடுத்துள்ளார். அதில் ஜம்பம் வேறு.. காலையில் எழுந்தால் தினம் ஒரு விமர்சனத்துக்கு பதில் சொல்கிறாராம். ‘ஜில்லுன்னு ஒரு காதல்’ வடிவேலு காமெடிதான் ஞாபகத்துக்கு வருகிறது. “காலையில் எழுந்திருச்சா ஒரே பஞ்சாயத்துதான்... ஒரு மனுசன் ஒரு நாளைக்கு எத்தனை பஞ்சாயத்துதான் அட்டெண்ட் பண்றது? ஒரு தடவை வந்தா கப்புனு பிடிச்சிக்கனும்.. பிறகு ராமசாமி வரலை, முனுசாமி வரலைன்னு சொல்லக்கூடாது?”

ஒருத்தன் தினம் பஞ்சாயத்துக்குப் போகிறான் என்றால், ஒன்று பஞ்சாயத்துத் தலைவராக இருக்க வேண்டும்; இல்லையென்றால் அயோக்கியப் பயலாக இருக்க வேண்டும். இதில் ஷோபா சக்தி எந்த வகை என்பது யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஒவ்வொரு பஞ்சாயத்தையும் கலைக்க மனுஷன் படாதபாடு படுகிறார், ‘கணக்கு கேட்டால், கணக்கு கேட்ட அந்த நபரைச் சொல். அவரிடம் காட்டுகிறேன். ஆனால் ஒரு கண்டிஷன் என் கடன் முழுவதும் கட்ட வேண்டும்’ என்று ‘சூனாபானா’ வடிவேலு போல் மிரட்டிப் பார்க்கிறார்.

‘நான் விசாரணைக்குத் தயார்தான். குற்றம் சாட்டுபவர்கள்தான் தர்பாரைக் கூட்ட வேண்டும்.’ என்ற வீர முழக்கம் வேறு. சொறிநாயைப் பார்த்தால் கல்லெடுத்து எறிவார்கள். சொறிநாய் பதிலுக்கு குரைத்தால், மனிதர்கள் அதனுடன் மல்லுக்குப் போக மாட்டார்கள். அதனால்தான் தோழர் சந்திரசேகர ஆசாத், அ.மார்க்சைக் கூப்பிட்டிருக்கிறார். ஆனால், ஏனோ அ.மார்க்சும் பம்முகிறார்.

கீற்றுக்குப் பதில் சொல்கிறேன் என்று பேர்வழி என்று ஷோபா சக்தி அடித்ததெல்லாம் சேம் சைடு கோல்கள்தான்.

கீற்று நிறைய அவதூறு செய்கிறது என்று ஒரு பட்டியல் போட்டிருக்கிறார் ஷோபா சக்தி. சுசீந்திரனை தவறாகக் கருதி புகைப்படம் வெளியிட்டது, அகிலன் கதிர்காமரை லட்சுமண் கதிர்காமரின் மகன் என பிழையாக எழுதியது என்று சிலவற்றைக் குறிப்பிடுகிறார். அவர் பட்டியலில் இடம்பெறாத இன்னும் சில பிழைகளையும் என்னால் கூறமுடியும். இலங்கையில் இனப்படுகொலையே நடக்கவில்லை என்று சுசீந்திரனும், ஆதவன் தீட்சண்யாவும் சொன்ன மகா அயோக்கியத்தனமான ஒரு கருத்தும் (புதுவிசை நேர்காணல்) கீற்றில் வெளியானது (ஷோபா சக்தி உச்சிமோந்து இந்த நேர்காணலை தனது இணையதளத்தில் பிரசுரித்தார்). அதற்கு சில மாதங்கள் கழித்து அங்கு நடந்தது இனப்படுகொலைதான், அப்பாவி மக்கள் ஆயிரக்கணக்கானோரை இலங்கை அரசு கொன்று குவித்திருக்கிறது என்ற டப்ளின் தீர்ப்பாயம் ஆதாரத்துடன் கூறியது (தலித் முரசு சிறப்பிதழ்) கீற்றில் வெளியானது. கோவை ராணுவ லாரி மறிப்பில் கலந்து கொண்டவர்கள் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார்கள் என்று அ.மார்க்ஸ் வாய்கூசாமல் சொன்ன ஒரு பொய் (இதுவும் புதுவிசை கட்டுரைதான்) கீற்றில் வந்தபோது, வழக்கறிஞர்கள் ச.பாலமுருகனும், இரா.முருகவேளும் அதை ஆதாரத்துடன் மறுத்தார்கள். இலங்கைக்கு இந்தியா இராணுவ உதவி செய்யவில்லை என்ற பச்சைப் பொய்யையும் அ.மார்க்ஸ் (அதே புதுவிசை கட்டுரைதான்) சொன்னார். நிறைய வாசிப்பதாகவும், தீவிர அரசியல் பார்வையோடு இருப்பதாகவும் லீனா மணிமேகலை விட்ட புரூடா (புத்தகம் பேசுது) கீற்றில் வந்த சில மாதங்களில், அவருக்கு எந்த வாசிப்பறிவும் இல்லை என்பதும், பிரேமின் கட்டுரையை அப்படியே சுட்டு தனது பெயரில் போட்டுக் கொண்டார் என்பதும் கீற்றில் வெளியானது (http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=9695&Itemid=139). தேடினால் இதுபோன்ற பிழைகள் இன்னும் நிறைய கிடைக்கும்.

கீற்றில் வரும் கருத்துக்கள் எல்லாம் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. அந்த அடிப்படையில் அருள் எழிலன், வளர்மதி தங்களது தவறுகளுக்கு கீற்றிலேயே வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், இதுவரை மேற்சொன்ன பிழைகளுக்காக அ.மார்க்ஸ், சுசீந்திரன், ஆதவன் தீட்சண்யா, லீனா மணிமேகலை தரப்பிலிருந்து சிறு முக்கல், முனகல்கூட வரவில்லை.

வெகுசனப் பத்திரிக்கைகள் தங்களுக்கென நிருபர்கள் குழு வைத்து செயல்படுகின்றன, செய்திகளை ஓரளவு உறுதிப்படுத்தி வெளியிடுகின்றன. ஆனால், மாற்றுப் பத்திரிக்கைகள் மக்களுக்காக எழுதுபவர்களை நம்பி இயங்குகின்றன. அவர்கள் எழுதும் கருத்துகள் சரியாக இருக்கும் என்று கருதி வெளியிடுகின்றன. உதாரணத்திற்கு, சிங்கூர் பிரச்சினை தொடர்பாக மேற்கு வங்க அரசை விமர்சித்து உயிர்மையில் ஒரு கட்டுரை வெளிவந்தது. அதை மறுத்து ச.தமிழ்ச்செல்வன் அடுத்த மாதம் ஒரு கட்டுரை எழுதினார். இதில் எது சரி, எது தவறு என்று வாசகர்கள் தீர்மானித்துக் கொள்வார்கள். ‘இல்லை, சரிபார்த்துதான் மனுஷ்யபுத்திரன் வெளியிட வேண்டும்’ என்றால், அவர் உயிர்மையை மாதாமாதம் வெளியிட முடியாது. ஒரு கட்டுரைக்கு மேற்கு வங்கம் போக வேண்டும், அடுத்த கட்டுரைக்கு பாலஸ்தீனம் போக வேண்டும்.

‘ஓர் எழுத்தாளர் எழுதும் கட்டுரைக்கு மறுப்பு வந்தால், அந்த எழுத்தாளரிடம் அதற்கான விளக்கத்தைப் பெற்று கீற்று வெளியிட வேண்டும்’ என்று சில நண்பர்கள் கூறினார்கள். ஈழம், தலித் அரசியல் தொடர்பாக ஆதவன் தீட்சண்யா எழுதியதற்கு மறுப்பாக நிறைய பேர் கீற்றிலேயே எதிர்க்கேள்வி கேட்டார்கள். ஆனால், அவற்றுக்குப் பதில் சொல்லாமல், ஆதவன் ‘நான் தலித்’ என்று அழ ஆரம்பித்துவிட்டார் (தலித் அரசியலை இதைவிட‌ யாராலும் கேவலப்படுத்த முடியாது). என்ன செய்ய?

***

ஷோபா சக்தி அடித்த ஸேம் சைடு கோல்களில் முக்கியமான‌ ஒன்று பிலால் முகமது விவகாரம். ஷோபா சக்தி, அ.மார்க்ஸ், லீனா மணிமேகலையின் திருட்டுத்தனங்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளை எல்லாம் வசதியாக மறந்துவிட்ட ஷோபா சக்தி, அடியாள் சுகுணா திவாகரை மட்டும் எளிதாக காவு கொடுத்துவிட்டார். சதுரங்கத்தில் முதலில் வெட்டப்படுவது சிப்பாய்கள் தானே!

கேவலமான ‘பிலால் முகமது’ டெக்னிக்கை பெரியாரிஸ்ட் என்று சொல்லிக் கொள்ளும் சுகுணா திவாகர் ஏன் செய்ய வேண்டி வந்தது?

அ.மார்க்ஸின் அரசியல் நிலைப்பாடுகளை கேள்விக்குள்ளாக்கி கீற்றில் ஒரு பத்து, பதினைந்து கட்டுரைகள் வெளிவந்தன. கடப்பாரை முழுங்கிய ஆளாக அ.மார்க்ஸ் பதில் சொல்ல முடியாமல் முழித்துக் கொண்டிருந்தார். பாவம், வருத்தமில்லா வாலிபர் சங்கத்தினர் எத்தனை நாள்தான் கீற்றில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் அ.மார்க்ஸ் தவிப்பதை பார்த்துக் கொண்டிருப்பார்கள்? இத்தனைநாள் கஷ்டப்பட்டு அ.மார்க்ஸ் சேர்த்துவைத்திருந்த ‘அறிவுஜீவி’ தோற்றம் கலைந்துபோய், ‘நோட்ஸ் வாத்தி’ என்ற பழைய பெயரே நிலைபெற்று விடுமோ என்ற அச்சம் அவர்களுக்கு இருக்கத்தானே செய்யும்? அதற்காக பேராசிரியருக்கு ‘பதில் தெரியவில்லை’ என்பதை ஒத்துக் கொள்ளமுடியுமா? “அ.மார்க்ஸ் தன்னிடம் கேள்வி கேட்பவர்களை எப்படி இழித்துப் பேசுவாரோ அதேபோல், அந்தக் கேள்விகளை தங்களது தளத்தில் அனுமதித்தவர்களையும் பேசு!!” இதுதான் வ.வா.சங்கத்து ஆட்கள் எடுத்த முடிவு. ஆகவே, கீற்றினை முஸ்லிம்களுக்கு எதிரிகளாகக் காட்ட வேண்டிய அவசியம் அ.மார்க்சுக்கும், அவரது சங்கத்து ஆட்களுக்கும் ஏற்பட்டது.

அ.மார்க்சின் சரிந்துபோன கட்-அவுட்டை முட்டுக் கொடுத்து தூக்கி நிறுத்த, 90களில் அவர் போட்ட நோட்ஸ்களையெல்லாம் தொகுத்து, ‘அய்யா அப்பவே அறிவாளி’ எனக் காட்ட அவரது பினாமிகளால் தொடங்கப்பட்ட இணையதளத்தில்தான் கீற்று ஆசிரியர் குழுவுக்கு ‘முஸ்லிம் விரோதிகளுக்கு முட்டுக் கொடுப்பவர்கள்’ பட்டம் கொடுக்கப்பட்டது. லும்பினி இணையதளம், கீற்று போல் பொதுவெளியல்ல. ‘அதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை’ என்று அ.மார்க்ஸ் சொன்னாலும், பார்ப்பவர்களுக்கு நன்கு தெரியும், அது வருத்தமில்லா வாலிபர் சங்கத்தின் விளம்பரப் பிரிவு.

முஸ்லிம் மக்களுக்கு ஆதரவானவராகக் காட்டிக் கொள்ளும் அ.மார்க்சும் அவரது கூட்டமும், ‘இஸ்லாமியர்கள் மீதான சமூக, அரசியல் ஒடுக்குமுறைகள்’ என்ற கீற்றின் கூட்டத்தை நிறுத்த எவ்வளவு பாடுபட்டார்கள் என்பதை ஏற்கனவே எழுதியிருக்கிறேன். நேரடியாக அ.மார்க்சோ ஷோபா சக்தியோ பேசினார்களா என்று கேட்காதீர்கள். கைப்புள்ளைகள் எப்போதும் கோட்டிற்கு வெளியேதான் இருப்பார்கள். கட்டதுரைகளிடம் பேசுவதற்கு வ.வா. சங்கத்து ஆட்கள்தான் செல்வார்கள். இங்கேயும் அப்படித்தான் நடந்தது. இதையெல்லாம் எதிர்பார்த்தே, கூட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லிம் சகோதரர்களின் பெயர்களை நாங்கள் அழைப்பிதழில் வெளியிடவில்லை. அப்படி வெளியிட்டிருந்தால், அ.மார்க்சே அவர்களிடம் பேசி தடுத்துவிட்டிருந்திருப்பார். முஸ்லிம்கள் மீதான அக்கறையைவிட கீற்று மீதான இவர்களது காழ்ப்பும், கருத்துச் சுதந்திரத்திற்கு இவர்கள் தரும் மரியாதையும் அந்தளவிற்கானது. சிறுபான்மை அரசியலில் உண்மையிலேயே அக்கறையுள்ளவர்களாக அ.மார்க்ஸ் கூட்டம் இருந்திருந்தால், அவர்கள் இந்தக் கூட்டத்தை நிறுத்த ஏன் முயற்சி செய்ய வேண்டும்?

இவர்கள் எவ்வளவோ முயன்றும், இவர்கள் தடுக்க முயன்ற அனைவரும் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். பாடல்பதிவு காரணமாக யுகபாரதி மட்டும் கலந்துகொள்ளவில்லை. சரி, கூட்டம் நடந்து முடிந்துவிட்டது. ‘சிறுபான்மையினரின் ஒரே அத்தாரிட்டி' என்ற தனது பெயருக்கு கீற்றினால் பங்கம் வந்துவிடுமோ என்ற பயந்த அ.மார்க்ஸ் கூட்டத்துக்கு கிடைத்தது அவல். கூட்டத்தில் நடந்த சலசலப்பை பெரிதாக்கி, முஸ்லிம் விரோதப் போக்கிற்கு முட்டுக்கொடுப்பவர்களாக காட்ட‌ முயற்சித்தார்கள்.

கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தோழர்களில் ஒருவரான ரஹீம், மறுநாள் என்னிடம் பேசியபோது ‘எங்களை தீவிரவாதிகள் என்று எல்லா மீடியாக்களும் சொல்லின. ஆனால் நாங்கள் நிரபராதிகள் என்று சொல்வதற்கு முதன்முறையாக மேடையமைத்துக் கொடுத்தது கீற்றுதான். இதை எங்களால் என்றும் மறக்கமுடியாது. தொடர்ந்து நாம் சேர்ந்து வேலை செய்வோம்’ என்றார். கோவை தோழர் ஹாரூண் பாஷா, ‘குற்றவாளியாக எனது புகைப்படம் பல பத்திரிக்கைகளில் வந்தது. நிரபராதியாக எனது புகைப்படம் இப்போது பல பத்திரிக்கைகளில் வந்துள்ளது. இதற்குக் காரணம் கீற்றுதான்’ என்று கூறினார்.

ஜூனியர் விகடன், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தின் ‘மக்கள் ரிப்போர்ட்’, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ‘மக்கள் உரிமை’, தலித் முரசு, புரட்சிப் பெரியார் முழக்கம் பத்திரிக்கைகள் இந்த செய்தியை சிறப்பாகப் பதிவு செய்தன. ஆனால், அ.மார்க்சின் பஜனை மடத்திற்கு மட்டும் இது எப்படி முஸ்லிம் விரோதமாகப்படுகிறது? காரணம் ரொம்பவும் எளிது. கீற்று மீதான தனது காழ்ப்புணர்வைத் தீர்த்துக் கொள்ள வேண்டும்.

‘இலங்கையிலிருந்து வந்த முஸ்லிம் தோழர், முஸ்லிம் மக்கள் மீதான புலிகளின் தாக்குதல் குறித்துப் பேசும்போது, தமிழ்த் தேசியவாதிகள் முஸ்லிம் விரோதப் போக்குடன் அவரைத் தடுத்தார்கள். அதற்கு ஒத்திசைவாக கீற்று நந்தன் நடந்துகொண்டார். இலங்கைத் தோழர் அவமானப்பட்டார். சங்கடத்தில் நெளிந்தார்’ - இதுதான் அ.மார்க்ஸ் தரப்பு குற்றச்சாட்டு.

இது குறித்து இலங்கையிலிருந்து வந்த தோழர் இஸ்மாயில் முஸ்தீன் என்ன கூறுகிறார் என்பதை அவரது குரலிலேயே கேட்கலாம் (பின்வரும் வரிகளை அழுத்தினால் அவரது ஒலிப்பதிவைக் கேட்கலாம்)

கீற்றினுடைய ஆறாம் ஆண்டு துவக்க வைபவத்தில் எனக்கு வழங்கப்பட்டிருந்த தலைப்புக்கு ஒப்ப, இலங்கையில் முஸ்லிம்கள் மீது இனரீதியாக நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து செய்திகளைத் தயாரித்து இருந்தேன். உண்மையில் எனக்கு வழங்கப்பட்டிருந்த 15 நிமிடங்களுக்குள் அவையெல்லாவற்றையும் பேசி முடிப்பது என்பது மிகவும் அசாத்தியமான ஒரு விடயம். இருப்பினும்கூட, வழங்கப்பட்ட 15 நிமிடங்களுக்கு மேலாக, இன்னும் 15 நிமிடங்கள் எடுத்து, அந்தக் கூட்டத்திலேயே அதிகமான நேரம் பேசியவனாக நான் மட்டுமே இருந்தேன். முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை மாத்திரம் முன்வைத்துப் பேசியது என்பது, தமிழ்த்தேசிய உணர்வாளர்களிடையே ஒருவிதமான சலசலப்பை உண்டு பண்ணியது. ஒருபக்கப் பார்வையோடு பேசப்படுவதாக அவர்கள் புரிந்துகொண்டார்கள். உண்மையில் தலைப்பிற்குள் நின்று பேசும்போது நிச்சயம் அது ஒருபக்கப் பார்வையாகத்தான் புரிந்துகொள்வதற்கான சாத்தியப்பாடுகள் இருக்கின்றது. அதுதவிர கூட்டத்தில் எழுந்த சலசலப்பு எல்லாம் அந்த நேரத்தில் நிகழ்ந்த ஒரு விபத்துதான் என்பதை உளப்பூர்வமாக நான் உள்வாங்கிக் கொள்கின்றேன். அது திட்டமிட்ட நடந்த ஒன்றாகவோ, என்னை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக நடந்த நிகழ்வாகவோ நான் கருதவில்லை. இதை பலர் தங்களது கருத்தியலுக்கு ஒப்ப, தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிகழ்வை வேறொரு கோணத்தில் பார்ப்பது அவ்வளவு நாகரிகமான விடயமாகக் கருதமுடியாது.”

லீனா மணிமேகலையின் ‘கருத்து சுதந்திரத்’திற்காக அ.மார்க்ஸ் நடத்திய கூட்டத்தில், அவர்கள் விரும்பும் வகையில் பஜனை பாடாமல், அவர்களுக்குப் பிடிக்காத கேள்விகளைக் கேட்டார்கள் என்பதற்காக ம.க.இ.க. தோழர்களை லீனா அடிப்பதற்குப் பாய்ந்தாரே அப்படி ஏதும் கீற்று கூட்டத்தில் நடக்கவில்லை. 14 பேர் பேசுவதாக இருந்த கூட்டத்தில், 10லிருந்து 15 நிமிட நேரத்திற்குள் பேசுமாறு பேச்சாளர்களிடம் கேட்டிருந்தோம். தோழர் ரஹீம் பேசும்போதுகூட, 13 வருட சிறைவாழ்க்கையில் பட்ட கஷ்டங்களை 10 நிமிடத்தில் எப்படிப் பேசுவது என்றுதான் பேச்சைத் தொடங்கினார். அப்படியிருந்தும் அன்று பேசியவர்களில் அதிக நேரமாக சுமார் 30 நிமிடங்கள்வரை பேசியவர் தோழர் முஸ்தீன்தான். 25 நிமிடங்கள் தாண்டி அவர் பேசிக் கொண்டிருந்தபோது, பேச்சை முடித்துக் கொள்ளுமாறு சீட்டு கொடுக்கலாமா என்று யோசித்தவேளையில்தான், தமிழ்த் தேசியவாதிகள் தரப்பில் இருந்து எதிர்ப்புக் குரல் வந்தது.

ஓவியர் வீரசந்தனம் ‘முஸ்லிம்களை புலிகள் ஏன் வெளியேற்றினார்கள் என்பதையும் சேர்த்துப் பேசுங்கள்’ என்றார். பேராசிரியர் சுப.வீ. ‘ஒரு தரப்பு நியாயத்தை மட்டும் பேசாதீர்கள்’ என்றார். முப்பது ஆண்டு ஆயுதப் போராட்ட வரலாற்றின் சாதக பாதகங்களில், பாதகங்களை மட்டுமே பேசும்போது, இத்தகைய எதிர்ப்புக் குரல்கள் நிச்சயம் வரத்தான் செய்யும். கருத்தரங்கின் தலைப்பிற்குள் நின்று பேசும் நியாயம் தோழர் முஸ்தீனுக்கு இருந்தது. தாங்கள் இருக்கும் அரங்கில், காரண காரியங்கள் இன்றி முஸ்லிம்களை புலிகள் கொன்றார்கள் என்று ஒருதரப்பு நியாயம் மட்டும் பேசப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய அவசியம் பேராசிரியர் சுப.வீ. போன்றவர்களுக்கு இருந்தது. புலிகளைக் கொச்சைப்படுத்துகிற நோக்கம் முஸ்தீனுக்கு இல்லை என்பதை - கூட்டத்திற்கு முன்னர் அதாவது 2010 ஜூலை 24ம் தேதி முற்பகலில் நாங்கள் எடுக்கத் தொடங்கிய நேர்காணலில் இருந்து அறிந்தவன் என்ற முறையில், அவர் அந்த நேர்காணலில் (http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=10168:2010-07-31-13-11-58&catid=5:interviews&Itemid=296) என்னிடம் பகிர்ந்த சில செய்திகளையும், நான் படித்துத் தெரிந்த சில செய்திகளையும் மேடையில் பேசினேன். தோழரின் நேர்காணலைப் படிப்பவர்களுக்கு அது நிச்சயம் புரியும்.

அ.மார்க்சின் கருத்துக்கு எதிராகப் பேசினார் என்பதற்காக தலித் எழுத்தாளர் மதிவண்ணனை அ.மார்க்சும் அவரது வ.வா.சங்கத்து ஆட்களும் தண்ணியடித்துவிட்டு, இரவு முழுவதும் தடித்த வார்த்தைகளால் பேசி அவமானப்படுத்தினார்களே, அப்படி எதுவும் தோழர் முஸ்தீனுக்கு நேரவில்லை.

மதிவண்ணன் அவமானப்படுத்தப்பட்டது தொடர்பாக காலச்சுவடில் சுகிர்தராணி எழுதியது (http://www.kalachuvadu.com/issue-116/page67.asp):

“ஆட்டம் பாட்டம் கொண்டாட்டச் சத்தங்களுக்கிடையில் மதிவண்ணன் பற்றிய அவதூறான பேச்சுகள் கேட்டன. அ.மார்க்ஸூக்கு எதிராக அவர் எழுப்பிய கேள்வி பலரை ஆழமாகச் சீண்டியிருந்தது உரையாடலில் வெளிப்பட்டது. எல்லாக் கூட்டங்களிலும் பிரச்சினை செய்பவர் அவர், எனவே அவரைப் பொருட்படுத்த வேண்டாம் என்றெல்லாம் பேசினார்கள். தலித்துகள் பற்றிய இழிவான பார்வை அவ்வுரையாடல்களில் ஊடாடியது. கீழ்த்தளத்தில் தங்கியிருந்த மதிவண்ணன் இவற்றை அறியவில்லை. கொண்டாட்டங்கள் நடந்த மேல்தளத்தில் என் அறைக்குப் பக்கத்து அறையிலிருந்த மதிவண்ணனின் மனைவி இந்த அவதூறுகளைக் கேட்டு இரவெல்லாம் அழுத கண்களுடன் காலை ஆறு மணிக்கு மதிவண்ணனை அழைத்துக் கொண்டு அவ்வரங்கை விட்டு வெளியேறினார். பிறகு என்னுடன் பேசிய மதிவண்ணன் சமூகத்தில் எதிர்கொள்ளும் அதே ஆதிக்கச் சாதி உணர்வுகள் இலக்கிய அரங்கிலும் வெளிப்பட்டதில் அவர் மனைவி அதிர்ச்சியடைந்ததாகத் தெரிவித்தார். இவ்வாறு தலித்துகளுக்கு எதிரான மனநிலையைக் கொண்டாட்டத்திற்குரிய குடி அங்கு ஏற்படுத்தியிருந்தது. பெரும்பாலான தலித்துகள் அக்கொண்டாட்டத்தில் இல்லாதபோது அவர்களைப் பற்றி விவாதித்தது நேர்மையற்ற செயலாகவே எனக்குத் தோன்றியது.”

அ.மார்க்சும் அவரது கூட்டமும் செய்த இதுமாதிரியான அவமானம் எதுவும் தோழர் இஸ்மாயில் முஸ்தீனுக்கு ஏற்படவில்லை. கீற்று கூட்டத்திற்குப் பின், அடுத்த ஐந்தாறு நாட்கள் - திரும்பவும் இலங்கை செல்லும்வரை - விருந்தாளியாக எங்களது வீட்டில்தான் தங்கியிருந்தார். என்னால் அதிக நாட்கள் விடுமுறை எடுக்க முடியாத நிலையிலும், இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்து அவர் பார்க்க விரும்பிய இடங்களுக்கும், சில தோழர்களை சந்திக்கவும் அழைத்துச் சென்றேன். சென்னையில் முதுகலைப் பட்டப்படிப்பு பயில வேண்டும் என்ற அவர் விருப்பப்பட்டபோது, த.மு.மு.க. தோழர் தமிமுன் அன்சாரி மூலமாக பேராசிரியர் ஜவஹிருல்லா அவர்களிடம் தெரிவித்தோம். பேராசிரியரும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்கள். வேறு சில வேலைகள் காரணமாக முஸ்தீன் படிக்க வரமுடியவில்லை என்றாலும், இன்றளவும் அவர் என்னுடன் தொடர்பில் இருக்கிறார். ஓர் ஆவணப்படத்திற்காக இந்த மாதம் சென்னை வந்த முஸ்தீன் நேரே எனது வீட்டிற்குத்தான் வந்திருக்கிறார்.

மற்றபடி முஸ்தீன் அவமானப்படுத்தப்பட்டார், நான் அவரிடம் மன்னிப்பு கேட்டேன் என்பதெல்லாம் அ.மார்க்ஸ் கூட்டத்தின் வழக்கமான பொய்களே.

தன்னிடம் யாராவது கேட்டால், பதில் சொல்ல முடியாமல் அவமானப்பட்டு நிற்பதை விரும்பாமல்தான், அ.மார்க்ஸ் தனது கூட்டங்களில் கேள்விகள் கேட்கப்படுவதை விரும்புவதில்லை. அதையேதான் கீற்று கூட்டத்திலும் அ.மார்க்ஸ் கும்பல் எதிர்பார்க்கிறது. ஒத்த கருத்துடன் இருப்பவர்கள் மட்டுமே கூட்டத்தில் இருக்க வேண்டும், மற்றவர்கள் வெளியேற வேண்டும் என்ற அ.மார்க்ஸ்தனம் எங்களிடம் இல்லை.

தனது கூட்டத்தில் கேள்வி கேட்பவர்களுக்கு பரிசு கொடுக்கும் பெரியாரது வழியே எங்களது வழியாகக் கருதுகிறோம். சபையினருக்கு முற்றிலும் உவப்பில்லாத செய்திகளை ஒருவர் பேச அனுமதிக்கப்படுவதும், சபையினர் தாங்கள் முரண்படும் செய்திகளுக்கு எதிர்ப்புக் குரல் எழுப்புவதும் முற்றிலும் ஜனநாயாக வழியின்பாற்பட்டது என்றும், அதுதான் உண்மையான கருத்துச் சுதந்திரம் என்றும் நாங்கள் நம்புகிறோம்.

இல்லையில்லை, ‘கீற்றிற்கு நான் தமிழ்த் தேசிய முத்திரை குத்தி வைத்துவிட்டேன்’ என்று அ.மார்க்ஸ் கூட்டம் கருதினால், அவர்களுக்குக் கோளாறு பார்வையிலா அல்லது மூளையிலா என்ற சந்தேகம் எழுகிறது. பிலால் முகமது டெக்னிக்கில் அ.மார்க்ஸ், ஷோபா சக்தி கூட்டம் ஆடிய ஆட்டம் குறித்து தோழர் இஸ்மாயில் முஸ்தீன் கவனித்து வந்திருக்கிறார். அது குறித்து அவர் பேசியதன் சாராம்சம் (முழுப்பதிவையும் ஒலி வடிவத்தில் கேட்க அடுத்து வரும் வரிகளை அழுத்தவும்):

“அ.மார்க்ஸ், ஷோபா சக்தி மீது எங்களுக்கு ஆழமான மரியாதை இருந்தது. ஆனால், கடந்த முறை இந்தியாவுக்கு வந்து, ‘இஸ்லாமியர்களுக்கு எதிரான சமூக, அரசியல் ஒடுக்குமுறைகள்’ கூட்டத்தில் கலந்துகொண்டபோது, அக்கூட்டத்தை நிறுத்த இவர்கள் முயற்சிகள் மேற்கொண்டதைக் கேள்விப்பட்டு மிகவும் கவலைப்பட்டேன். நேர்மையாக சிந்திக்கிற, மற்றவர் நலனுக்காகப் பாடுபடுகிற ஒரு நபர் அவர்களுக்காக வரும் நலன்களைத் தடுப்பது எந்த வகையில் நியாயம் என்று புரியவில்லை. ஒரு கொள்கையின் அடிப்படையில் - உண்மையாக பிறருக்காகப் பாடுபவராக இருந்தால் - அவர்களுக்கு ஆதரவாக எந்த ஒரு மூலையில் இருந்து சின்ன ஆதரவுக் குரல் வந்தாலும், அதற்கு தங்களது ஒத்துழைப்பை நல்கி அதனை பலப்படுத்துவதுதான் ஒரு கொள்கைவாதி செய்கிற செயல். அப்படி இல்லாமல், தான் பண்ணுவதை மட்டும் ஆதரிப்பது, மற்றவர்கள் பண்ணினால் குழப்பிவிடுவது என்பது, தன்னை நிலைநிறுத்திக் கொள்கிற, சுயநலமான, சந்தர்ப்பவாத, பிசினஸ் மைண்ட் உள்ள செயலாகத்தான் தெரிகிறது. அ.மார்க்சின் எழுத்துக்களைப் படித்து இலங்கையில் நாங்கள் அவர் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறோம். ஆனால், அ.மார்க்ஸ் ஒரே நேரத்தில் முஸ்லிம்களுக்கு ஆதரவான போக்கும், அதே நேரத்தில் முஸ்லிம்களுக்கு ஆதரவான – தான் அல்லாத சக்திகளுக்கு எதிராக காய் நகர்த்துகின்ற போக்கும் கொண்டிருப்பது தூய்மையான பண்பாடான ஓர் எழுத்தாளருக்கு அழகல்ல. அ.மார்க்ஸ் முஸ்லிம்களின் பிரச்சினைகளை தூய்மையான எண்ணத்துடன் அணுகிறாரா அல்லது தனது எழுத்துகளுக்கான வணிக மையமாக வர்த்தக நோக்கத்துடன் அணுகுகிறாரா என்ற கேள்வி இப்போது வருகிறது.”

***

புனைபெயர்கள் வைத்துக் கொள்பவர்கள் இரண்டு வகை. சொந்தப் பெயர் பிடிக்காமல், தனக்குப் பிடித்த தலைவர்கள், வழிகாட்டிகளின் பெயர்களை வைத்துக் கொள்வது அல்லது சொந்தப் பெயரில் எழுதினால் வேலைக்கோ, உயிருக்கோ ஆபத்து வரும் என்று நிலையில் புனைபெயர் வைத்துக் கொள்வது. ஆனால், ஷோபா சக்தி போட்ட எலும்புத்துண்டுகளுக்காக வாலை ஆட்டும் சுகுணா திவாகர், கீற்றினைத் திட்டுவதற்காக வைத்துக் கொண்ட ‘பிலால் முகமது’ என்பது யார்? லெனின், காரல் மார்க்ஸ், சே குவேரா, நந்தன், பாரதி, ஈவேரா, வ.ஊ.சி., காயிதே மில்லத், கக்கன் வரிசையில் ஒரு வழிகாட்டியாக, குறியீடாக ‘பிலால் முகமது’ பெயர் எங்கே இருக்கிறது? ஆனந்த விகடனில் ‘ரீ.சிவக்குமார்’ என்று சொந்தப் பெயரில் எழுதுபவரின் புனைபெயர்தான் சுகுணா திவாகர். அப்படியிருக்க, கீற்றினை விமர்சிப்பதற்காக இன்னொரு முஸ்லிம் பெயரின் பின்னே ஒளிந்துகொள்ள வேண்டிய அவசியம் இந்த பச்சோந்திக்கு ஏன் வந்தது?

சுகுணா திவாகருடன் அ.மார்க்ஸ்‘முஸ்லிம்களுக்கு விரோதமாக கீற்று நடந்து கொள்வதாக‌ ஒரு முஸ்லிமே சொல்கிறார்’ என்று வாசகர்கள் கருத வேண்டும் என்று கள்ள புத்தியுடன் சுகுணா திவாகர் எழுதியிருக்கிறார்.

பிலால் முகமது யார் என்று எங்களுக்குத் தெரிந்தபின்பு பல இடங்களில் கேள்வி கேட்டபோது, இந்த ‘யோக்கிய சிகாமணி’ சுகுணா திவாகர் பதில் சொல்லவே இல்லை. தமிழ்நதியின் கட்டுரைக்கு (http://tamilnathy.blogspot.com/2011/01/blog-post.html) ‘ஆந்தையன்’ என்ற பெயரில் ஷோபா சக்திக்கு வக்காலத்து வாங்க வந்த சுகுணா திவாகரிடம், ‘உங்களது உண்மை முகத்தைக் காட்டுங்கள்’ என்ற நண்பர்கள் கேட்டபோது பதில் சொல்லவில்லை. ‘தமிழ்நதி! IP address கொடுங்கள். இது ஆனந்தவிகடனில் வேலை பார்க்கும் நபர்தான் என்பதை உறுதி செய்துவிடுவோம்’ என்று நண்பர்கள் எழுதியதும் பயந்துபோய், அந்த இடத்தை விட்டே ஓடிவிட்டார்.

பேஸ்புக்கில் ‘பிலாம் முகமது’ டெக்னிக் குறித்து வளர்மதி எழுதியபோதும், சுகுணா திவாகர் என்ற ரீ.சிவக்குமார் 'ஆமாம், நான்தான் எழுதினேன்' என்று வெளிப்படையாக ஒத்துக் கொள்ளவில்லை. ஆனால் அந்தோ பாவம்! ஷோபா சக்தி, சுகுணா திவாகரின் அயோக்கியத்தனத்தைக் காட்டிக் கொடுத்துவிட்டார். அதற்கு ஷோபா சக்தி கூறிய சப்பைக்கட்டு இருக்கிறதே… அப்பப்பா.. ஷோபாவின் அறிவுக்கூர்மையும், விவாதத்திறனும் புல்லரிக்க வைக்கிறது. அய்ந்து வயது குழந்தை தோற்றது போங்கள்...

தலித்தல்லாத நான் ‘நந்தன்’ என்ற பெயரில் எழுதுகிறேனாம். அதனால் சுகுணா திவாகர் ‘பிலால் முகமது’ பெயர் வைத்துக் கொண்டதும் சரியாம். உலகமகா அறிவாளி ஷோபா சக்தி சொல்கிறார். எனக்கு இரமேஷ் என்ற வடமொழிப் பெயரில் எழுதுவதில் விருப்பமில்லை.  ஆதிக்க எதிர்ப்புக் குறியீடாக இருந்த ‘நந்தன்’ என்ற பெயரை வைத்துக் கொண்டேன். இரமேஷ்தான் 'கீற்று நந்தன்' பெயரில் எழுதுவது என்பது கீற்றுடன் தொடர்பு பேணி வரும் அனைவருக்கும் தெரியும். நானாக எழுதும் எல்லா இடங்களிலும் எனது பெயரை கீற்று நந்தன் என்றுதான் பயன்படுத்தியிருக்கிறேன். கீற்று நந்தன் அவ்வளவு பிரபலமில்லாத பெயர் என்பதால், நண்பர்கள் பல இடங்களில் ‘இரமேஷ்’ என்று குறிப்பிட்டே எழுதுகிறார்கள். கீற்று நந்தன் யார் என்று கேட்டவர்களிடம் நான்தான் அது என்று பலமுறை சொல்லியுமிருக்கிறேன். அதுவுமில்லாமல், நான் தலித் என்று என்னை எப்போதும் பிரதிநிதித்துவப்படுத்தியதில்லை.

பாரதி என்ற பெயரை எல்லா சாதியினரும் வைத்துக் கொள்கிறார்கள். நந்தன், நந்தா போன்ற பெயர்களை எல்லா சாதியினரும் வைத்துக் கொள்கிறார்கள். பார்ப்பனரான மணிரத்னத்தின் மகன் பெயரும் நந்தாதான். ஆனால், நரேஷ் ஐயர், டேனியல் பீட்டர், பிலால் முகமது போன்ற பெயர்களை குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே வைத்துக் கொள்கிறார்கள். கீற்று நந்தன் என்ற பெயரில் என்னால் தலித் கூட்டங்களில் கலந்து கொள்ள முடியும். பிலால் முகமது என்ற பெயரில், முஸ்லிம்கள் கூட்டத்தில் சுகுணா திவாகர் கலந்து கொள்ள முடியுமா? செருப்படி விழும்.

பிலால் முகமது டெக்னிக் குறித்து - பிரச்சினையில் சம்பந்தப்பட்ட - தோழர் இஸ்மாயில் முஸ்தீன் என்ன சொல்கிறார்?

“ஒரு விஷயத்தை ஆதரிப்பதாகவோ எதிர்ப்பதாகவோ இருந்தால் நான் நானாக இருந்து செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு, ஆதரிப்பதற்கு ஒரு முகம், எதிர்ப்பதற்கு ஒரு முகம் என்று வைத்துக் கொள்வது ஒரு பண்பாளனுக்கு அழகல்ல. இலங்கையில் இருந்து ஒரு முஸ்லிம் தோழரை – முஸ்தீனை அழைத்துவந்து அவமானப்படுத்திவிட்டார்கள் என்று கூறினார்கள். கூட்டத்தில் குழப்பம் வந்தது உண்மைதான். தரப்பட்ட தலைப்பிற்கு உள்ளாக நின்று நான் பேசும்போது அது புரிந்து கொள்ள கஷ்டமாகத்தான் இருந்திருக்கும். தமிழகச் சூழலைப் புரிந்து கொண்டு நான் கருத்து சொல்லியிருக்க வேண்டும். அதற்குப் பின்னால் நான் உரையாற்றினேன். அதற்கு அடுத்து கீற்று என்னுடைய நீண்ட நேர்காணலை பதிவு செய்தது. இதையெல்லாம் முழுக்கப் படித்து உண்மையை ஆராய்ந்து எழுதியிருக்க வேண்டும். நேர்காணலின் கீழே என்னுடைய மின்னஞ்சல் முகவரி இருந்தது. அதில் தொடர்பு கொண்டு, ‘நீங்கள் அவமானப்படுத்தப்பட்டீர்களா’ என்று கேட்டிருக்கலாம். அது இல்லாமல், ஒரு விஷயம் கிடைத்தவுடன் அதை ஆய்வு செய்யாமல் தனது நோக்கத்திற்குப் பயன்படுத்திக் கொள்வது ஒரு பத்திரிக்கையாளனுக்கு அழகல்ல. ஒரு சமூகத்தின் பிம்பமாக பெயர்களைப் பயன்படுத்துகிற ஒரு போக்கு இருக்கிறது. அதை நல்ல விஷயங்களுக்காகப் பயன்படுத்தும்போது பிரச்சினை இல்லை. மகாத்மா காந்தியைக் கொல்லப் போன கோட்சே தனது கையில் ஒரு முஸ்லிம் பெயரை பச்சை குத்திக் கொண்டு போனதை யாரும் அங்கீகரிக்க மாட்டார்கள். ஒரு கலவரத்தைத் தடுக்க முஸ்லிம் பெயரில் அறிக்கை விட்டால் அதை ஏற்றுக் கொள்ளலாம். அதில்லாமல், தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக – தான் செயல்படுகின்ற தளத்தில் தான் விரும்பாதவர்கள் செயல்படுகின்றார்கள்; அவர்களுடைய செயல்பாட்டுத் தளத்தை முடக்க வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு பெயரில் எழுதுவதை அங்கீகரிக்க முடியாது. இது மிகவும் கேவலமான விஷயம்.”

கேவலம், வெட்கம் என்பதை எல்லாம் காசுக்காக எழுதுபவர்களிடம் எதிர்பார்க்க முடியுமா?

சுகுணா திவாகர் செய்த அடுத்த கேவலமான காரியம், கோயம்புத்தூரில் அ.மார்க்ஸுக்கு எதிராக எந்த ஒரு சம்பவமும் நடைபெறவில்லை என்று ஒரு பச்சைப் பொய்யை சொல்லியது. அந்தப் பிரச்சினை நடந்தபோது அங்கு இல்லாத சுகுணா திவாகர் எப்படி இவ்வாறு புளுக முடிந்தது? நிச்சயமாக‌ அ.மார்க்ஸ் சொல்லித்தான் இந்தப் பொய், சுகுணா திவாகரின் கட்டுரையில் சேர்க்கப்பட்டிருக்கிறது. அ.மார்க்ஸின் மேற்பார்வையில்தான் பிலால் முகமது கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. ஏனெனில், தமிழ்நாட்டில் யார் யாருக்கு கோவணம் இருக்கிறது என்று அ.மார்க்ஸ் (http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=5219:2010-04-07-13-57-57&catid=1006:05&Itemid=273) செய்துவரும் ஆராய்ச்சி பிலால் முகமது கட்டுரையிலும் காண கிடைக்கிறது.

பேரா. ஜவாஹிருல்லாவுடன் சீமான்

கீற்று கூட்டத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தோழர் அன்சாரி பேசியதை, ‘தமிழ்த் தேசியத்திற்கு விசுவாசிகளாக காட்டிக் கொள்ள வேண்டிய அவசியத்தில் முஸ்லிம்கள் இருப்பதாக’ கொச்சைப்படுத்தினார்கள். உண்மை அதுவல்ல. த.மு.மு.க., இந்திய தவ்ஹீத் ஜமாஅத் உள்ளிட்ட போன்ற முஸ்லிம் அமைப்புகளும், தமிழ்த் தேசிய, பெரியாரிய முற்போக்கு சக்திகளும் பல்வேறு பிரச்சினைகளில் இணைந்து செயல்படுகின்றன. இது பிரிவினையில் குளிர் காயும் கூட்டத்துக்கு என்றுமே ஆகாத விடயம். அதனால்தான் பிலால் முகமது என்ற பெயரில் ஒளிந்துகொண்டு கொச்சைப்படுத்தியுள்ளார்கள்.

கோயம்புத்தூரில் அ.மார்க்ஸ் பார்வையாளர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் முழித்தது உண்மை. கோவை நண்பர்களிடம் விசாரித்தபோது, ‘முதலில் ஒரு குழுவினர் அ.மார்க்சுக்கு எதிராக ‘ஈழத்திற்கு எதிராகப் பேசாதே’ என்று கோஷம் போட்டிருக்கிறார்கள். மீறி பேச முயன்றபோது, கூட்டத்தில் கூச்சல் அதிகமாகியிருக்கிறது; நாற்காலிகள் பறந்திருக்கின்றன. போலீஸ் வந்து, ஆர்ப்பாட்டம் செய்தவர்களை வெளியே அனுப்பியிருக்கிறது. அதன்பின்பு அ.மார்க்ஸ் பேசியபோதுதான் இன்னொரு குழுவுடன் வந்த வழக்கறிஞர் கார்க்கி கேள்வி எழுப்பியதும், பதில் சொல்ல முடியாமல் அ.மார்க்ஸ் திருதிருவென்று முழித்ததும் நடந்திருக்கிறது. வாசகர்கள் இதுகுறித்து உண்மை அறிய விரும்பினால், கார்க்கி அவர்களையோ (9443064416) அல்லது அந்தக் கூட்டதிலிருந்த சேது (9442343121) அவர்களையோ கேட்டுக் கொள்ளலாம். இல்லையென்றால், B1 காவல் நிலையத்தில் கேட்டுக் கொள்ளலாம்’ என தோழர்கள் சொல்கிறார்கள். அதிலும் நம்பிக்கையில்லாதவர்கள் கூட்டத்தின் ஒலிப்பதிவிலிருந்து ஒரு சிறுபகுதியை இங்கு (ஒலிப்பதிவு 1 மற்றும் ஒலிப்பதிவு 2) கேட்கலாம்.

***

தமிழச்சியிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்று அடிவாங்கிய ஷோபா சக்தி (http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13087&Itemid=139), அதை மறைக்கும் முகமாக, ‘எங்களுக்குள் முன்பே உடல் தொடர்பு இருந்தது’ என்று ஆணாதிக்க தடித்தனத்துடன் எழுதினார். ‘இவர் சொல்வது ஒருவேளை உண்மையாக இருந்தால்கூட, கல்யாணமான ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக் கொள்வது தவறில்லையா’ என்று கேட்டால், ‘உங்களது அறம், ஒழுக்கம் அளவுகோல்கள் எனக்குப் பொருந்தாது’ என்கிறார். ‘உன் காலில் அசிங்கம் ஒட்டியிருக்கிறது’ என்று சொன்னால், ‘உங்களுக்குத்தான் அசிங்கம்.. நான் ரொம்பா நாளா இட்லிக்கு அதைத் தொட்டுச் சாப்பிடுறேன்’ என்று ஒருவர் பதில் சொன்னால் அந்த நபரை எந்த கணக்கில் சேர்ப்பது?

வரைமுறையற்ற பாலியல் உறவுகளில் ஈடுபடுவதும், பாலியல் விடுதிகளில் விழுந்து கிடப்பதும் பெண் விடுதலையா என்று கேள்வி கேட்டால், அந்த கேள்விகள் இந்துமதப் பாசிசமாம்.

சரி, தகாத உறவு குறித்து இஸ்லாம் மதம் என்ன சொல்கிறது?

தோழர் இஸ்மாயில் முஸ்தீன் சொல்கிறார்: “இஸ்லாம் மதப்படி, தகாத உறவு வைத்துக் கொண்டவர்களை பொது மக்கள் முன்னிலையில் கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும்.”

பாலியல் விடுதிகளில் ஒருவன் விழுந்து கிடக்கிறான் என்றால், பெண்ணை நுகர்வுப் பொருளாகப் பார்க்கும் ஆணாதிக்கப் புத்தியே அவனிடம் செயல்படுகிறது என்று அர்த்தம். ஆனால், எத்தனை காண்டம்களை வாங்கினேன் என்ற கணக்குகூட வைத்திருப்பதாக ஷோபா சக்தி சொல்கிறார். 'முந்தாநாள் அவகிட்டே போனேன், நேத்து இவகிட்டே போனேன்' என்று உண்மையான/கற்பனையான பாலியல் சாகசங்களை பட்டியல் போட்டு, தன் ‘ஆண்மையை’ ஒவ்வொரு நிமிடமும் வெளிச்சம் போட்டு காட்டத் துடிக்கும் அற்பர்களுக்கும், ஷோபா சக்திக்கும் என்ன வித்தியாசம் ‍- எழுதுவதைத் தவிர?

 ***

‘புலிகள் இயக்கமே அதுவரையான வெள்ளாளத் தலைமைகளை உடைத்து எழுந்த முதலாவது இயக்கம் என்றும் பிரபாகரன் சிறுவயதிலிருந்தே வெள்ளாள ஆதிக்கத்திக்கு எதிரான மனநிலை கொண்டவர், புலிகளின் தலைமை தோற்கடிக்கப்படும்போது ஆதிக்கசாதி வெள்ளாளர்கள் பிரபாகரனினின் சாதியைக் குறிப்பிட்டுத் தாக்குதலைத் தொடுப்பார்கள். புலிகள் இயக்கத்தில் குறிப்பிட்ட காலம் செயற்பட்டவன் என்ற முறையில் இயக்கத்திற்குள் சாதி ஏற்றத்தாழ்வுகள் கடைப்பிடிக்கப்பட்டதில்லை என்பதையும் என்னால் கூற முடியும். இயக்கத்தில் தனிநபர்கள் சாதிய உணர்வோடு எங்காவது வெளிப்பட்டிருந்தாலும் கூட அதை இயக்கத்தின் பொதுப் பண்பாக வரையறுக்க முடியாது. இயக்கத்தின் தலைமைப் பொறுப்புகளில் தலித்துகள் இருந்தார்கள் என்பதும் உண்மையே. புலிகள் குறிப்பிட்ட பகுதிகளில் குடிமைத் தொழில் முறையையும் ஒழித்திருந்தார்கள். இந்த உண்மைகளோடுதான் சாதியும் புலிகளும் என்பது குறித்துப் பேசமுடியும். ஆனால், புலிகள் சாதியொழிப்புப் போராட்டத்தை காத்திரமாகச் சமூகத்தளத்தில் முன்னெடுக்கவில்லை.’ என்றும் ஷோபா சக்தி திருவாய் மலர்ந்திருக்கிறார். இதை கொஞ்சம் ஆதவன் தீட்சண்யாவிடம் சொன்னால் நல்லது. இங்கிலாந்தில் இந்தக் கூட்டம் மந்திரித்து விட்டதில் இருந்து மனுஷன் ‘புலி, தலித் விரோதம்’ என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்.

இதுநாள் வரை இந்த பரமார்த்த குரு கூட்டம் ‘புலிகள் தலைமை வெள்ளாளத் தலைமை, புலிகள் சாதியவாதிகள்’ என்று பிரச்சாரம் செய்துவந்தார்கள். அதற்கு வாய்ப்பாக ‘வேலுப்பிள்ளை பிரபாகரன்’ என்றே குறிப்பிட்டு வந்தார்கள். ஷோபா சக்தி இன்னும் ஒரு படி கீழ்த்தரமாக ‘தான் ஒரு தலித்’ என்று வேஷம் போட்டார். தலித் அரசியலை புலிகளுக்கு எதிராக சாதுரியமாக முன்னிருத்தினார்கள். போருக்குப் பின்னர், புலிகளின் சாதியொழிப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு உண்மைகள் வெளிவர ஆரம்பித்த பின்பு, 'நான் அப்பவே சொன்னேன். புலிகள் சாதியை வளர்க்கவில்லை. ஆனாலும், காத்திரமாக...' என்று இழுக்கிறார்கள். இந்த 'காத்திரமாக' என்ற வார்த்தையை சாதி ஒழிப்புக்கு அளவுகோலாக வைத்து ஓர் இயக்கத்தை மதிப்பிடுவதாக இருந்தால், தெற்காசியச் சூழலில் தலித் அமைப்புகள், திராவிட இயக்கங்களைத் தவிர வேறு எந்த இயக்கமும் மிஞ்சாது.

சாதியை ஒழிப்பதற்காக உருவானதல்ல புலிகள் அமைப்பு. அது, ஈழ விடுதலையை இலட்சியமாகக் கொண்டு கட்டப்பட்ட இயக்கம். வளர்ச்சிப் போக்கில், தங்கள் ஆளுகைக்குட்பட்ட பகுதிக்குள் சாதி ஒழிப்பு, வரதட்சணை ஒழிப்பு உள்ளிட்ட சமூகப் பிரச்சினைகளுக்கும் முகம் கொடுத்து செயலாற்றியிருக்கின்றனர். அதுமட்டுமல்லாது, போர்நிறுத்தம் அமலில் இருந்த மிகச் சில ஆண்டுகளைத் தவிர, மற்ற காலங்களில் எல்லாம் கடுமையான யுத்த நடவடிக்கைகளில் இருந்த இயக்கமது. இவற்றின் ஊடாகத்தான் சாதி ஒழிப்பில் அவர்களது பங்கை அளக்க முடியும். அப்படிப் பார்க்கையில், ‘1980களுக்கு முன்னர் ஈழத்தில் இருந்த சாதிய இறுக்கம் (இந்தியாவின் சாதிய இறுக்கத்தை விட) தளர்வுற்று, இன்று கலப்புத் திருமணங்கள் அங்கு சாதாரணமாக நடைபெறுகின்றன’ என்று மலையகத் தமிழர் காத்தமுத்து (http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-16/13775-2011-03-25-11-14-27) சொல்கிறார் என்றால், அதற்குக் காரணம் யார் என்பது எவரும் விளக்காமலே புரியும்.

2000 ஆண்டுகளாக நீடித்திருக்கும் சாதி அமைப்பினை அடித்து நொறுக்க, பெரியார், அம்பேத்கர் அரை நூற்றாண்டு காலம் போராடியும் இந்தியாவில் சாதி இருக்கிறது என்றால், அந்த அமைப்பு அத்தனை கெட்டித்தன்மையுடன் மக்களின் மனங்களில் வேரூன்றிப் போயிருப்பதுதான் காரணம். அத்தனை இறுக்கமான சாதி அமைப்பை, ஒரு சில ஆண்டுகளுக்குள் புலிகள் முற்றிலும் ஒழித்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது மடத்தனம். ஒழிப்பதற்கு நேர்மையாக முயற்சித்தார்களா என்பதுதான் முக்கியம். முயற்சித்தார்கள் என்பதை ஷோபா சக்தியின் ஒப்புதல் வாக்குமூலமே காட்டுகிறது.

புலிகள் பிரதேசத்தில் சாதி ஒழியவில்லை, மறைந்துதான் இருந்தது என்று கூறும் வாதத்திற்கு மலையகத் தமிழர் காத்தமுத்து இவ்வாறு பதில் கூறுகிறார். "புலிகளின் சட்டதிட்டங்கள் காரணமாக சாதியை மக்கள் மறைத்த நிலையில் வைத்திருந்திருக்கலாம். புலிகளின் கட்டுப்பாடு பிரதேசத்தில் சாதியின் பெயரை குறிப்பிட்டாலே 10000 ரூபா தண்டப் பணம் கட்ட வேண்டும். சடங்குகளில் சாதியால் ஒடுக்கப்பட்டவர்கள் பங்குபற்றினால் அதற்கும் தண்டப்பணம் கட்ட வேண்டும். ஆயுத அமைப்பு அப்படித்தான் செயல்பட்டிருக்க முடியும். ஆனால் நீண்ட காலப்போக்கில் அது தொடர்ச்சியாக இருந்திருக்குமாயின் சாதி மறந்த விடயமாக இருந்திருக்கும். ஏனென்றால் நீண்ட காலம் மறைந்த ஒரு விடயம் மறந்து அல்லது அழிந்து போவது மனித இயல்புதானே. சாதி ஒடுக்குமுறையை அதிகளவில் தக்க வைப்பது பொருளாதார ரீதியான ஒடுக்குமுறையும், தீண்டாமையும் தான். ஆனால் அவை தற்பொழுது நடைமுறையில் இல்லை."

விடுதலைப் புலிகள் அமைப்பில் மலையகத் தமிழர்கள் பங்கு பெற்றிருந்தமை குறித்தும், புலிகளின் நம்பிக்கைக்குரியவர்களாக மலையகத் தமிழர்கள் இருந்தது குறித்தும் தோழர் காத்தமுத்து தனது பேட்டியில் கூறியிருக்கிறார். இவற்றையெல்லாம் குறித்து ஷோபா சக்தியிடம் கேட்டால், 'இதெல்லாம் எனக்கு ஏற்கனவே தெரிந்த செய்திகள் தான். கீற்று பார்த்துதான் இவற்றையெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் எனக்கு இல்லை' என்று சொல்கிறார். பிறகு ஏன் இவர்கள் இத்தனை காலம் தலித் அரசியலை புலிகளுக்கு எதிராக நிறுத்தி பிரச்சாரம் செய்தார்கள்?

அடுத்து, புலிகள் பிரதேசத்தில் இந்துக் கோயில்கள் இருந்தனவாம், அவற்றில் இருந்து உண்டியல் காசு எடுத்துக் கொண்டார்களாம்; அதனால் புலிகள் இந்துத்துவவாதிகளாம். "இந்துக் கோயில்கள் மட்டுமல்ல, கிறித்துவப் பேராலயங்களும் இருந்தன; அவற்றில் பாதிரியார்களும் இருந்தார்கள். பொதுமக்கள் மட்டுமல்லாது, புலிகள் இயக்கத்திலிருந்த கிறித்துவர்களும் பேராலயங்களுக்குச் சென்று வந்தார்கள். மக்களின் மதநம்பிக்கைகளில் புலிகள் தலையிடவில்லை" என்று மார்க்ரெட் ட்ராவிக் எழுதியுள்ளார். இவர் 1996, 97 ஆண்டுகளில் புலிகள் பிரதேசத்தில் தங்கியிருந்து அந்த அனுபவங்களை 321 பக்க புத்தகமாக (Enemy Lines, Margaret Trawick, University of California Press, 2007) எழுதிய அமெரிக்கப் பெண்மணி.

புலிகள் இயக்கத்தில் இந்துக்கள், கிறித்துவர்கள், முஸ்லிம்கள் என அனைத்து மதத்தினரும் இருந்திருக்கிறார்கள். எல்லா மதத்தவர்களும் சமமாக நடத்தப்பட்டிருக்கிறார்கள். எந்த மதத்தைச் சேர்ந்தவர் இயக்கத்தில் புதிதாக சேர்ந்தாலும், அவர்களுக்கு இயக்கப் பெயர் ஒன்று சூட்டப்படுவதும், அவர்கள் தங்களது மதவழிபாட்டைத் தொடர அனுமதிக்கப்படுவதும் வழக்கத்தில் இருந்திருக்கிறது. தோழர் இஸ்மாயில் முஸ்தீன் தனது நேர்காணலில் (http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-16/10168-2010-07-31-13-11-58) "சங்கர் என்னும் ஆயுதப் பயிற்சியாசிரியரை போர்நிறுத்தக்காலத்தில் புலிகளின் பிரதேசத்தில் நான் சந்தித்தேன். அவருடன் பேசத் தொடங்கிய பிறகுதான் அவர் நான் வாழும் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், அவர் ஒரு முஸ்லிம் என்பதும் எனக்குத் தெரிய வந்தது. இதுபோல் நிறைய முஸ்லிம்கள் புலிகள் அமைப்பில் கடைசிவரை இருந்தார்கள். புல்மோட்டை ஊர் முழுக்கவே விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான ஊர் என்னும் நிலைப்பாடு இருந்தது. அந்த அளவுக்கு புல்மோட்டையைச் சேர்ந்த முஸ்லிம் அன்பர்கள் பலர் கடைசி வரை புலிகள் அமைப்பில் இருந்தார்கள்." என்று கூறுகிறார். முஸ்லிம் சகோதரர்கள் மதநம்பிக்கையை விட்டுத்தராதவர்கள் என்பதை தனியே சொல்லத் தேவையில்லை.

ஓர் அரசு தனது இராணுவ செலவுகளுக்கு வெளிநாடுகளில் கடன் வாங்க முடியும். அரசை எதிர்த்துப் போராடும் இயக்கங்களுக்கு அத்தகைய கடன் வசதி கிடைக்காது. ஆப்ரிக்க இயக்கங்கள் சில தங்களது நிதித் தேவைகளுக்காக வைரக் கடத்தலில் ஈடுபட்டிருக்கின்றன. சில இயக்கங்கள் வங்கிகளை கொள்ளையடித்திருக்கின்றன. சில இயக்கங்கள் தனது முதல் எதிரியை ஒழிப்பதற்காக முதலாளித்துவ நாடுகளுடன் கைகோர்த்திருக்கின்றன. தனது பசிக்காக குழந்தையைத் தாக்கும் புலி, குழந்தையைக் காப்பதற்காக அரிய விலங்கான புலியைக் கொல்லும் பழங்குடி மக்கள் - இதில் எது சரி என்பது அவரவர் நோக்கம், கொள்கை சார்ந்தது.

கோயில்களை தங்களது பொருளாதார தேவையை தீர்க்கும் வழியாக புலிகள் பார்த்தார்கள். உண்டியல் பணத்தை தங்களது இயக்கத் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டார்கள். கோயில் சொத்தை உயர்சாதிக் கூட்டம் மட்டுமே அனுபவித்து வந்த நிலையில், அதை பொது சொத்தாக்கி அரசு செலவுகளுக்கு பயன்படுத்தியதுதானே திராவிட இயக்க‌ வரலாறு. சிதம்பரம் கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் செல்லவிடாமல் தடுக்க பார்ப்பனர்கள் வரிந்துகட்டிக் கொண்டு நீதிமன்றம் சென்றதை, போன ஆண்டு பார்த்தோமே! அப்படியிருக்க, கோயில் சொத்தை போராட்டப் பணிகளுக்கு புலிகள் பயன்படுத்தியது இந்துமதத்திற்கு எதிரானதுதானே! பெரியாரிஸ்ட் என்று சொல்லிக் கொள்ளும் ஷோபா சக்தி இதனால் மகிழ்ச்சியல்லவா அடைந்திருக்க வேண்டும்?

***

அ.மார்க்ஸ், ஷோபா சக்தியின் செயல்பாடுகளை விமர்சிப்பது ஏதோ தனிமனித தாக்குதல் என்று சில நண்பர்கள் கருதுகிறார்கள். நிச்சயம் இவர்கள் தனிமனிதர்கள் அல்ல.

ஈழ தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கு காரணமானவர்கள் என்று வெளிப்படையாக நமக்குத் தெரிந்த முகங்கள் ராஜபக்சே, பொன்சேகா, கருணா, டக்ளஸ் தேவானந்தா, சோனியா. இன்னொரு கூட்டமும் இருக்கிறது. அகிலன் கதிர்காமர், அம்சா, சோ, இந்து ராம், சுசீந்திரன், இராகவன், ஷோபா சக்தி, அ.மார்க்ஸ் - இவர்கள் எல்லாம் கருத்தியல் மட்டத்தில் சிங்களப் பேரினவாதத்துக்கு பலம் சேர்த்தவர்கள். இத்தகைய கூட்டம் ஊடகங்களில் ஈழப் போராட்டத்திற்கு எதிராக செய்துவந்த பிரச்சாரத்தின் காரணமாகத்தான், ஈழப் போராட்டத்தின் நியாயம் உலக மக்களுக்கு சென்று சேரவில்லை; பாரிய அளவிலான இனப்படுகொலைகளை சிங்களப் பேரினவாத அரசு நடத்தியபோதுகூட, ‘தீவிரவாதிகள் கொல்லப்படுகிறார்கள்’ என்றே உலக நாடுகள் வாளாவிருந்தன.

அ.மார்க்ஸ் மற்றும் ஷோபா சக்தி

ஈழத்தமிழர்களுக்கு எதிரான ஒரு நெட்வொர்க்கின் இலக்கிய முகங்கள் ஷோபா சக்தியும், அ.மார்க்சும். இவர்கள் பேசும் முற்போக்கு கொள்கைகள் எல்லாம் போலியானவை. தலித்தியம், முஸ்லிம் அரசியல், மனித உரிமைகள் உள்ளிட்ட சித்தாந்தங்களை தங்களுக்குப் பிடிக்காத போராட்ட இயக்கங்கள் மீதும், தனிநபர்கள் மீது பிரயோகிக்கும் சந்தர்ப்பவாதிகள். மார்க்சியம், பின்நவீனத்துவம், கட்டுடைப்பு பேசியவர்கள் கைகோர்த்திருப்பது அகிலன் கதிர்காமர், சுசீந்திரன் போன்ற சிங்கள அரசு ஆதரவு என்.ஜீ.ஓ. நபர்களுடன்தான். (பார்க்க: புலி எதிர்ப்பு -‍ முதலீடில்லா லாபம்)

அ.மார்க்ஸ் தன்னை விமர்சிப்பவர்களை எல்லாம் இந்துத்துவவாதிகளாகவும், முஸ்லிம்களுக்கு விரோதிகளாகவும் காட்ட மிகவும் பிரயத்தனப்படுகிறார். இந்துத்துவத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ம.க.இ.க. தோழர்களை கரசேவகர்கள் என்கிறார். தமிழ்த் தேசியவாதிகளை இந்துத்துவவாதிகள் என்கிறார். கீற்றினை இன்னொரு தினமலர் என்கிறார். தெரியாமல்தான் கேட்கிறேன். இந்த முத்திரை குத்தும் வேலையை யார் அ.மார்க்சுக்குக் கொடுத்தது? ‘அ.மார்க்ஸை ஆதரிப்பவர்கள் எல்லாம் மதச்சார்பற்றவர்கள், எதிர்ப்பவர்கள் எல்லாம் முஸ்லிம்களுக்கு விரோதிகள்’ என்று சொல்லுமளவிற்கு அறிவுமமதை அவர் கண்ணை மூடியிருக்கிறதா? அவரைச் சுற்றித்தான் முஸ்லிம் மக்களின் உலகம் இயங்குகிறது என்று நம்புகிறார் என்றால், அவரைப் போன்ற கிணற்றுத்தவளை யாரும் இருக்க முடியாது.

முஸ்லிம் மக்களுக்கு நான்தான் ஒரே அத்தாரிட்டி என்று அ.மார்க்ஸ் பெருமை கொள்வதற்காக, அம்மக்களின் ஆதரவு சக்திகளையெல்லாம் காவு கொடுக்க முயற்சிக்கிறார். அம்மக்களுக்குச் செய்யும் பெரிய துரோகம் இதைவிட வேறு எதுவுமில்லை.

இலங்கையில் தமிழர்களும் சிங்களர்களும் பகையை மறந்து வாழ வேண்டும் என்று அ.மார்க்சும் ஆதவன் தீட்சண்யாவும் சொல்கிறார்கள். சரி, தமிழர்களும், முஸ்லிம்களும் பகையை மறந்து வாழ வேண்டாமா என்றால், ‘பிடாது, பிடாது! விடுதலைப் புலிகள் முஸ்லிம் மக்களைக் கொன்றார்கள், வெளியேற்றினார்கள்’ என்று புலிகள் இல்லாத இந்தக் காலத்திலும் பேசி வருகிறார்கள்.

மாற்றுக்கருத்து உடையவர்களை எதிர்கொள்வது குறித்து விடுதலைப்புலிகளுக்கும், ஊர் உலகத்திற்கும் பாடம் நடத்திய இவர்கள், என்றாவது அதை சொந்த வாழ்க்கையில் கடைபிடித்திருக்கிறார்களா? “நான் உங்களை எதிர்கொண்டால் பேசுவேன். உள்ளார்ந்த அன்போடு புன்னகைப்பேன். இன்னா செய்தாரை ஒறுப்பது என்ற ரீதியில் அல்ல, கருத்துகளும் தனிமனித உறவும், ஒன்று மற்றொன்றுக்கான பலியோ பணயமோ அல்ல என்று நம்புவதால்” என்று தமிழ்நதிக்கு எழுதிய ஆதவனிடம்i (http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/7034-2010-04-25-16-13-00) கேட்டுப் பாருங்கள்... மாற்றுக்கருத்தாளர்களுடன் நட்பு பேணி வருகிறாரா என்று.

‘முஸ்லிம் மக்களை நாங்கள் வெளியேற்றியது வரலாற்றுப் பிழை. மீண்டும் அம்மக்களை குடியேற அழைக்கிறோம்’ என்று விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகராக இருந்த அண்டன் பாலசிங்கம் கூறியதை வசதியாக மறைத்துவிடுகிறார்கள். புலிகளே ஒத்துக் கொண்ட ஒரு தவறை, புலிகள் முற்றாக அழிக்கப்பட்ட பின்னரும் இவர்கள் பேசிக் கொண்டிருப்பதன் பின்னணி என்ன? இல்லை தமிழ்த் தேசியவாதிகள், புலிகளின் அந்த தவறை ஆதரிக்கிறார்களா? நிச்சயமாக இல்லை. தோழர் சீமானின் இந்தக் கருத்தைப் படியுங்கள்: ‘புலிகள்-முஸ்லிம்கள் முரண்பாடு. கடந்தகால தவறுகளை மன்னித்து விடுங்கள்! சீமான் உருக்கம்(http://www.tmmk.in/index.php?option=com_content&view=article&id=1085:seeman-visit-mmk-hq&catid=81:tamilnadu&Itemid=198)

உண்மையிலேயே முஸ்லிம்களுக்கு நியாயம் பெற்றுத் தர வேண்டும் என்று அ.மார்க்ஸ் கூட்டம் விரும்புமேயானால், முஸ்லிம்களை புலிகள் வெளியேற்றியபோது, அதை முன்னின்று நடத்திய கருணா இன்னும் உயிருடன் இருக்கும்போது - அவரை விசாரணைக்குட்படுத்தி தண்டிக்க வேண்டும் என்று குரல் எழுப்பாதது ஏன்? காரணம் மிகவும் எளிது. இவர்களுக்கு சிங்கள என்.ஜீ.ஓ.க்களின் குரலை ஒலிக்க வேண்டும். அதற்கு தலித் அரசியலும், முஸ்லிம் அரசியலும் தேவைப்படுகிறது.

முஸ்லிம் மக்களுக்கு புலிகள் எதிரிகள் என்று தொடர்ந்து பேசுவதன் மூலம், புலிகளை தங்களது வரலாற்று நாயகர்களாகக் கருதும் ஈழத் தமிழர்களுடன் முஸ்லிம் மக்களை ஒன்று சேரவிடாமல் தடுக்கிறார்கள். இந்த இரு பிரிவினரையும் ஒடுக்கும் சிங்கள அரசின் நோக்கமும் அதுதான்.

த‌மிழ‌ர்க‌ள் என்றைக்கும் ஒற்றுமையாக‌ இருந்துவிட‌க் கூடாது என்று‌ இல‌ங்கை அர‌சு விரும்புகிற‌து. த‌மிழ‌ர்க‌ள், முஸ்லிம்க‌ள், ம‌லைய‌க‌த் த‌மிழ‌ர்கள் என்ற‌ அடையாள‌ங்க‌ளைக் கூர்மைப்ப‌டுத்தி, அவ‌ர்க‌ளுக்கிடையே பிள‌வை ஏற்ப‌டுத்தி, அதை நிர‌ந்த‌ர‌ப்ப‌டுத்த‌ விரும்புகிற‌து. அதனால்தான் சிங்களப் பேரினவாத அரசு ஈழ விடுதலையைக் காயடிக்கும் விதமாக – புலிகள் ‘தலித்துகள், முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள்’ என்ற பிரச்சாரத்தை செய்யும் என்.ஜீ.ஓ.க்களுக்கும், இலக்கிய அமைப்புகளுக்கும் பணத்தை வாரியிறைக்கிறது. இந்த என்.ஜீ.ஓ.க்கள் தரும் பணத்தில்தான் கைப்புள்ளை கூட்டம் வெளிநாடுகளுக்கு இலவசப் பயணம் சென்று, தலித் அரசியலையும் முஸ்லிம் அரசியலையும் பேசி, இல்லாத புலிகளுக்கு எதிராக அட்டைக்கத்தி வீசி வருகிறார்கள்.

ஆதவன் தீட்சண்யா தன்னை விமர்சிப்பவர்களை ‘தலித் விரோதி’ என்று முத்திரை குத்துகிறார். அ.மார்க்ஸ் தன்னை விமர்சிப்பவர்களை ‘முஸ்லிம் விரோதிகள்’ என்கிறார். இதன் நீட்சியாகத்தான் புலிகளை தலித் விரோதிகள் என்றும், இந்துத்துவவாதிகள் என்றும் இவர்கள் முத்திரை குத்துவது. ஈழவிடுதலைக்கு யார் தடையாக இருப்பார்கள் என்று கருதினார்களோ (அதில் சில தவறுகளும் நடந்திருக்கின்றன), அவர்களை எல்லாம் புலிகள் கொன்றார்கள்; கொல்ல முயன்றார்கள். வெள்ளாளர்கள், பௌத்தர்கள், தலித்கள், முஸ்லிம்கள், கிறித்துவர்கள் என புலிகள் எல்லோர் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.. அதேபோல் எல்லா சாதியினரும், கிறித்துவர்களும், முஸ்லிம்களும் கடைசிவரை புலிகள் இயக்கத்தில் இருந்திருக்கிறார்கள். ஆனால் புலிகள் மீது அ.மார்க்ஸ் கும்பல் சாதி, மத முத்திரை குத்துவதன் நோக்கம் ஆதாய அரசியல்தான். அதனால்தான், சூளைமேட்டில் தலித் இளைஞரை சுட்டுக் கொன்ற - இந்திய அரசினால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட - கிரிமினல் டக்ளஸ் தேவானந்தாவைக் கொஞ்சிவிட்டு, ‘அவர் தலித்களுக்கு ரட்சகர்’ என்கிறார்கள். என்.ஜீ.ஓ. குழு நபர்களைப் பேட்டியெடுத்து பக்கம் பக்கமாக வெளியிட்டு, அவர்களை ஆகப்பெரும் புரட்சியாளர்களாக சித்தரிக்கிறார்கள்.

ஆதிக்க சாதி பிள்ளைமாரான ஷோபா சக்தி, தமிழகத்தில் இதுநாள் வரை தலித்தாக நடித்து, 'புலிகள் தலித் விரோதிகள்' என்ற விஷமப் பிரச்சாரத்தை பத்திரிக்கைகளிலும், புத்தகங்களிலும் செய்து வந்தார். சாதி இந்துவான‌ சுகுணா திவாகர், ‘பிலால் முகமது’ என்று வேஷம் போடுகிறார்; புலிகளுக்கு எதிராக, ஈழ ஆதரவளர்களுக்கு எதிராக வெவ்வேறு பெயர்களில் இணையத்தில் கள்ளத்தனம் செய்து வருகிறார். ஈழ‌ ஆதர‌வாள‌ர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான‌வ‌ர்க‌ள் என்ற பிர‌ச்சார‌த்தை அ.மார்க்ஸ் உள்நோக்க‌த்துட‌ன் செய்து வ‌ருகிறார். இவர்கள் இப்படி கீழ்த்தரமாக நடந்துகொள்வது ஏதோ தற்செயலான நிகழ்வு அல்ல. ஈழத்தில் 1990களின் மத்தியப் பகுதியில் ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தின் ஓர் ஆயுதப் பிரிவு, ‘ராஸீக் குழு’ என்று பெயரில் புலிகளுக்கு எதிராக இயங்கியிருக்கிறது. குழுவிற்கு தலைவனாக இருந்த ராஸீக் உண்மையில் முஸ்லிம் அல்ல, ஓர் இந்து. புலிகள் மீது தாக்குதல் நடத்தும்போது, பழி முஸ்லிம்கள் மீது விழவேண்டும் என்ற நோக்கத்துடன்தான் முஸ்லிம் பெயரை பயன்படுத்தியிருக்கிறான். உண்மை தெரிந்த புலிகள், அந்த அயோக்கியனைப் போட்டுத் தள்ளினார்கள் (ஆதாரம்: Enemy lines, Margaret Trawick, 2007). ராஸீக்கின் தொடர்ச்சிதான் ஷோபா சக்தி, சுகுணா திவாகர். இவர்களே சிந்தித்து திட்டம் போடக்கூடிய அளவிற்கான அறிவுள்ளவர்களாக இவர்களை கருத முடியாது. வெளிநாட்டுப் பயணம் போவதற்கு, வேலையில்லாத ஒரு பரதேசிக்கு பிரான்ஸ் வங்கிகள் கடன் கொடுக்கிறது என்று உளறும் அளவிற்குத்தான் இவர்களின் அறிவுமட்டம் இருக்கிறது. ஏற்கனவே போட்டு வைக்கப்பட்ட திட்டத்தின் கூறுகளை காலத்திற்கும், சூழலுக்கும் ஏற்ப நடிக்குமாறு பணிக்கப்பட்டவர்கள்தான் இவர்கள்.

இவர்களுக்கு இடப்பட்ட பணி இலங்கை அரசுக்கு எதிரான சிறுகுரலையும் கருத்தியல் மட்டத்தில் நசுக்க வேண்டும். அதனால்தான் புலிகளுக்கு எதிராக, ஈழ ஆதரவாளர்களுக்கு எதிராக தலித்தாகவும், முஸ்லிமாகவும் நடித்தார்கள். கோவை இராணுவ லாரி மறிப்பில் ஈடுபட்டவர்களைக் கொச்சைப்படுத்தினார்கள். நாடு கடந்த தமிழீழ அரசை ஈழ ஆதரவாளர்கள் ஏற்பதற்கு முன், இவர்கள் முதல் ஆளாக எதிர்த்தார்கள். உலக நாடுகளில் இலங்கை அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்த காலத்தில், இலங்கை அரசுக்கு நற்பெயர் வாங்கித்தரும் வகையில் கொழும்புவில் நடத்தப்பட்ட தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டிற்கு ஆதரவாக இயங்கினார்கள். இலங்கை அரசை விமர்சிக்கிறார் என்பதற்காக அருந்ததி ராயை கொச்சைப்படுத்தினார்கள்.

இலங்கையில் புத்த பிக்குகள் தமிழ் மக்களுக்கு எதிராக விஷத்தைக் கக்குகிறார்கள். போர்க்காலத்தில் இலங்கை தொலைக்காட்சிகளில் தோன்றி, ராஜபக்சேயின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று பேசினார்கள். அதிகார மையத்துக்கு ஆதரவான மத நிறுவனங்கள்தான் சிங்கள புத்த மடங்கள். அந்த வகையில் சிங்கள பாட்டாளி வர்க்கத்திற்கும் எதிரானவர்கள் புத்த பிக்குகள். அத்தகைய புத்த பிக்குகளின் ஒரு பிரிவுதான் சென்னை எழும்பூரில் இயங்கும் புத்த மடம். அது இலங்கை அரசுக்கு ஆதரவாக உளவு வேலையில் ஈடுபடுகிறது என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருக்கிறது. அங்கு இருப்பவர்கள் அம்பேத்கர் சொன்ன புத்த மதத்தினர் அல்ல. அவர்கள் இந்தியாவின் சங்கராச்சாரியார்களைப் போன்றவர்கள். அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது, தனது தூதரகம் தாக்கப்பட்டதுபோல் இலங்கை அரசு துடித்தது. இலங்கை அரசின் அடிவருடிகளான அ.மார்க்ஸ், ஷோபா சக்தி கூட்டம் தாக்குதல் நடத்தியவர்களை வழக்கம்போல் கொச்சைப்படுத்தியது. வெளியில் இருந்து கல்லெறிந்து விட்டு ஓடிய கோழைகள் என்றது. உண்மை என்னவென்றால், உள்ளே புகுந்து தாக்கியிருக்கிறார்கள்; சிலருக்கு வெட்டுக்காயம் ஏற்பட்டிருக்கிறது. ‘பெண்கள் அடித்தாலும், நான் திருப்பி அடிப்பேன்’ என்று சூரத்தனம் பேசிய ஷோபா சக்தி, ‘ஐயோ முதியவர்கள்’ என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.

ஈழப் போராட்டத்திற்கு எதிராக இவர்கள் பேசும் வாதங்கள் அனைத்தும், காஷ்மீர், பாலஸ்தீனப் போராட்டங்களுக்கும் பொருந்தும். அங்கெல்லாம் அப்பாவி மக்கள் பாதிக்கப்படவில்லையா, சிறுவர்கள் போராடவில்லையா, மாற்று மதத்தினர் கொல்லப்படவில்லையா, காஷ்மீரத்துப் பண்டிட்கள் வெளியேற்றப்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டு கூறப்படவில்லையா? எத்தனை குற்றச்சாட்டுகள் இருந்தாலும் காஷ்மீர், பாலஸ்தீனம், ஈழப் போராட்டங்களை நாம் ஆதரிக்கிறோம். ஆனால் இவர்கள் ஈழப்போராட்டத்தை மட்டும் எதிர்க்கிறார்கள்.

டக்ளஸ் தேவானந்தா, அகிலன் கதிர்காமர், அம்சா, சுசீந்திரன், இராகவன், ஷோபா சக்தி, அ.மார்க்ஸ் ஆகியோர் ஒரே திட்டத்தினை வெவ்வேறு தளங்களில் செயல்படுத்தும் ஏவலாட்கள். பின்நவீனத்துவம், தலித் அரசியல், சிறுபான்மை நலன் என்பதெல்லாம் இவர்கள் மீது போர்த்தப்பட்டிருக்கும் வேடங்கள். இங்கிருக்கும் நபர்களை வெளிநாடுகளுக்குக் கூப்பிட்டு போய், ஈழப் போராட்டத்திற்கு எதிராக மந்திரித்து அனுப்புவது, ஊடகத் துறையில் சுகுணா திவாகர் போன்ற அடியாட்களை இனம் காணுவது, பணம் கொடுப்பது, ஊற்றிக் கொடுப்பது எல்லாம் இவர்களது வேலைகளில் ஒரு பகுதி. பிரதியுபகாரமாக எந்தவொரு வேலையும் செய்யாமல் வெளிநாடுகள் சுத்துவதற்கும், பாலியல் சுதந்திரம், குடி, கூத்து என்று திரிவதற்கும் அருளப்பட்டிருக்கிறார்கள்.

---

வெளியில் கட்டமைக்கப்பட்டிருப்பது போல் இந்தக் கூட்டம் ஒன்றும் அறிவுஜீவிகள் அல்ல. கேள்வி கேட்டால், அ.மார்க்ஸ் பேந்தப் பேந்த முழிக்கிறார். ஷோபா சக்தி சின்னப்பையன் போல், உளறிக் கொட்டுகிறார். கொடுத்த காசுக்கு கூவுபவர்கள், நியாயவான் பட்டத்தை எதிர்பார்க்க முடியாது. ஷோபா சக்தி, ஒன்று அ.மார்க்ஸ் போல கள்ள மௌனம் காக்கப் பழக வேண்டும். இல்லை சொல்கிற பொய்யை பொருந்தச் சொல்ல பழக வேண்டும். யாரோ சொல்லிக் கொடுத்ததை ஒப்பிக்கும் சின்னப் பையனாட்டம் உளறிக் கொட்டக் கூடாது.

‘போய் வீட்லே பெரியவங்க யாராவது இருந்தா அனுப்புங்க..’

- கீற்று நந்தன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்., +9199400 97994)

Pin It