பிறப்பு முதல் இறப்பு வரை தமிழர் வாழ்வியலில் பண்பாடுகள் என்ற பெயரில் திணிக்கப்பட்ட கூறுகள், தமிழர்கள் சுயமரியாதைக்கு எதிரானவைகளாகவே உள்ளன. தமிழர்களை சூத்திரர் களாக்கும் இழிவும், பெண்கள் அடிமைகள் என்ற கருத்தும், மூட நம்பிக்கைகளுமே, அதில் பொதிந்து கிடக்கின்றன. இந்த அடிமைப் பண்பாடுகளுக்கு எதிராக, மாற்றுக் கலாச்சாரங்களை சமுதாயத்தில் அறிமுகப்படுத்தி, பண்பாட்டுப் புரட்சியை கடும் எதிர்ப்புகளுக்கிடையே விதைத்தது, பெரியாரின் திராவிடர் இயக்கம்.

குழந்தைக்கு பிறந்த நாள் கொண்டாடுவதும், புகைப்படம் எடுப்பதும் குழந்தையின் ஆயுளைப் பாதித்துவிடும் என்ற மூட நம்பிக்கைக்கு எதிராக குழந்தைகளுக்கு பிறந்த நாள் விழாக்கள் அறிமுகமாகி அது பரவலாகிவிட்டது. வடமொழியில் பெயர் சூட்டுவதுதான் சமூக செல்வாக்கை உயர்த்திக்காட்டும் என்ற பார்ப்பனிய செல்வாக்கைத் தவிர்க்க தமிழ்ப் பெயர் சூட்டுதல்; கடவுள், மதத் தலைவர் பெயர்களுக்கு மாற்றாக புரட்சியாளர்கள், விஞ்ஞானிகள் பெயர்களை சூட்டுதல் என்ற மாற்றம் உருவானது. பெண்கள் வயதுக்கு வந்துவிட்டால், அதற்கொரு சடங்கை நடத்தி, சாதி உறவுகளின் விழாவாக்கி நாடு முழுதும் அந்தச் செய்தியை அறிவிக்கும் சடங்கை எதிர்த்து, பெரியாரின் திராவிடர் இயக்கம் தான் கேள்வி கேட்டது. இயற்கையாக நிகழும் உடல் மாற்றத்துக்கு ஒரு விழாவா? அப்படியானால், ஆண்களுக்கு அப்படி ஒரு விழாவை ஏன் நடத்துவதில்லை என்ற கேள்விகளை பெரியார் இயக்கம் முன் வைத்தது. கல்வியின் வளர்ச்சியால், இந்தக் கேள்வியை சிந்தித்த பெண்களே அப்படி ஒரு சடங்கை நடத்த விரும்பாத நிலை உருவாகிவிட்டது.

திருமணம் என்பதற்கு ‘விவாக சுபமுகூர்த்தம்’ என்று பெயர் சூட்டி, பார்ப்பன புரோகிதர்களை அழைத்து, வடமொழியில் மந்திரங்களை ஓதும் புரோகித விவாகத்துக்கு எதிராக பெரியார் இயக்கம் அறிமுகப்படுத்திய சுயமரியாதை திருமணம், தமிழர்களின் திருமண முறையாக வளர்ந்து வருகிறது. புதிய வீட்டிற்குகுடிபுகும், ‘கிரகப் பிரவேசங்கள்’ பார்ப்பன புரோகிதர்கள் பசுமாடுகளைக் கொண்டு நடத்தும் முறைக்கு எதிராக, இல்லத் திறப்பு விழாவை பெரியாரின் திராவிடர் இயக்கம் அறிமுகப்படுத்தியது. ‘சூத்திரன்’ வீட்டு மரணச் சடங்குகளில் பங்கேற்காத பார்ப்பனர்கள், இறந்தவரின் ‘ஆன்மாவை’ சொர்க்கத்துக்கு அனுப்பு வதற்காக ‘திதி’ நடத்த மட்டும் வந்துவிடுவார்கள். இதற்கு மாற்றாக நினைவுநாள் படத்திறப்பு நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியது பெரியாரின் திராவிடர் இயக்கம்.

திருமணம் முடிந்து முதல் குழந்தை பிறப்பதற்கு முன், குழந்தைப் பிறப்பு நன்றாக முடிய வேண்டும் என்பதற்கு பெண்கள் கரங்களில் வளையல்களைப் பூட்டி, சாதி உறவுகளையும், புரோகிதர்களையும் அழைத்து நடத்தப்பட்ட ‘வளைகாப்பு’ சடங்குகள் பெரியாரின் திராவிடர் இயக்கத்தின் பிரச்சாரத்தால் குறைந்து வருகின்றன. வளைகாப்புக்கு பதிலாக, சிறந்த மகப்பேறு மருத்துவமனைகளை முன்கூட்டியே பதிவு செய்யும் நிலை வந்துவிட்டது. பார்ப்பனரல்லாத தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை சமூகத்தினரை திராவிடர் என்ற தளத்தில் அணி திரட்டி, பார்ப்பனிய ஆதிக்கத்துக்கு எதிராக பண்பாடு, கல்வி, பதவி, அரசியல் அதிகார உரிமைகளுக்குப் போராடி - அதில் வெற்றிப்பெற்ற பெருமை பெரியாரின் திராவிடர் இயக்கத்துக்கு உண்டு.

‘சூத்திரன்’ வீட்டுச் சாவுகளில் பார்ப்பான் வருவதில்லை என்றாலும்,பார்ப்பனியம் ஊடுருவி நின்றது. இறப்பு சேதியைச் சொல்லவும், தப்பு அடிக்கவும், பிணத்துக்கு பாடை கட்டவும், சுடுகாட்டில் புதைக்கவுமான தொழில்கள் சாதியமைப்பால் நிலைநிறுத்தப்பட்டு, பெண்கள் முற்றிலுமாக இதில் பங்கேற் காமல் தடைபடுத்தப்பட்டனர். பெண்கள் சுடுகாடு வருவதற்கே அனுமதிக்கப்படு வதில்லை. இந்த நிலையில்,பெரியாரின் திராவிடர் இயக்கம் இந்த அடிமை மரபுகளையும் எதிர்த்து கலகம் செய்து வருகிறது. பெண்களே பிணத்தைத் தூக்கிச் சென்று, பெண்களே அடக்கம் செய்யும் நிகழ்ச்சிகளை பெரியார் தொண்டர்கள், தங்கள் வீட்டு மரண நிகழ்வுகளில் பின்பற்றத் தொடங்கியிருக்கிறார்கள்.

இதன் தொடர்ச்சியாக பெரியார் திராவிடர் கழக சேலம் மாவட்ட அமைப் பாளர் டைகர் பாலன் தாயாரின் மரணத்தில், பெண்களே இறந்தவரின் உடலை சுமந்து இடுகாடுச் சென்று அவர்களே குழித் தோண்டி அடக்கம் செய்துள்ளனர்.

தோழர் டைகர் பாலன் அவர்களின் தாயார் கி. மரகதம் அம்மாள்,கடந்த மார்ச் 20 ஆம் தேதி மாலை முடிவெய்தினார். அடுத்த நாள் 21ஆம் தேதி ஞாயிறு காலை 10.30 மணிக்கு இறுதி ஊர்வலம் நடந்தது. கழகத்தைச் சார்ந்த பெண்களே, இறந்தவர் உடலைச் சுமந்துச் சென்று இடுகாட்டில் அடக்கம் செய்ய முன் வந்தனர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் ஏராளமான கழகத் தோழர்கள், தோழியர் களுடன் இறுதி ஊர்வலம் புறப்பட்டது. பெண்களே சுமந்துச் சென்ற காட்சியைப் பொது மக்கள் பலரும் பார்த்து வியந்தனர். எவ்வித மூடநம்பிக்கைச் சடங்குகளும் இன்றி இடுகாட்டில், பெண்களே உடல் அடக்கம் செய்தனர். கழகத் தோழியர் கனகரத்தினம் பெரியார் வடித்துத் தந்த ஆத்மா மறுப்பு முழக்கங்களை எழுப்ப, தோழர்கள் பதில் முழக்கங்களை எழுப்பினர்.  ‘ஆத்மா’ மறுப்போடு அடக்கம் முடிந்தது.

பெரியாரின் திராவிடர் இயக்கம், மனிதன் பிறப்பிலிருந்து இறப்பு வரை அதன் பண்பாட்டுப் புரட்சிச் சுவடுகளைப் பதித்து வருவதற்கு சான்றாக, இந்நிகழ்ச்சி அமைந்துள்ளது.

திராவிடர் இயக்கமே நாட்டைக் கெடுத்தது என்று மேடைகளில் வசனம் பேசக் கிளம்பியிருப்போர்,வரலாறுகளையும் சமூக மாற்றங் களையும் திரும்பிப் பார்ப்பார்களா?

Pin It