தமிழ்நாட்டின் கிராமங்களில் ‘தீண்டாமை’க் கொடுமைகள் நிலவி வருவதை பட்டியலோடு ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வெளியிட்டு வருகிறது. இந்தத் தீண்டாமையைத் தடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதற்காகவே காவல் துறையில் மனித உரிமைப் பிரிவு என்று ஒன்று இருந்தாலும் அது செயல்படுவதாகத் தெரியவில்லை.

கடந்த முறை இதேபோல் பட்டியலை வெளியிட்டு கழகம் இரட்டைக் குவளைகளை உடைக்கும் போராட்டத்தில் இறங்கியபோது காவல்துறை தீண்டாமைக்கு எதிராக ‘தேனீர் விருந்து’ எனும் நாடகம் ஒன்றை அரங்கேற்றியது.  தீண்டாமைக்கு எதிரான நடவடிக்கைகளில் காவல்துறை முனைப்புக் காட்டி செயல்பட்டிருந்தால், இப்படி நீண்ட பட்டியலை வெளியிடநேர்ந்திருக்குமா? இதுவே அத்துறைக்கு தலைகுனிவு தான்.
 
தீண்டாமைக்கு அடிப்படையாக இருப்பது சாதிதான். எனவே தீண்டாமை ஒழிப்பை சாதி ஒழிப்பிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. சாதி ஒழிப்பின் அவசியத்தை உணர்ந்து, அதற்காகவே வாழ்நாள் முழுதும் போராடினார் பெரியார். சாதியத்தின் இருப்பு பார்ப்பனியம், மதம், கடவுள் ஆகியவற்றில் உறுதியாக தங்கியிருப்பதை பெரியார் துணிவுடன் எடுத்துக் சொல்லியதற்ககாக அவர் கடும் எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருந்தது.
 
இப்போது இந்தியா முழுதிலுமே தீண்டாமையும், சாதி வெறியும் தலைவிரித்தாடுவது பற்றிய செய்திகள் வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன. ஒரே ‘கோத்திரத்தில்’ திருமணம் செய்தவர்களுக்கு கிராம பஞ்சாயத்து மரண தண்டனை வழங்கி வருகிறது.  அரியானா மாநிலத்தில் இதற்கு சமூக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாம். அம் மாநிலத்திலுள்ள காங்கிரஸ் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும், வெளிப்படையாகவே இதை ஆதரிப்பதுதான் வெட்கக் கேடானது. அரியானா மாநிலத்தின் முதலமைச்சராக உள்ள புபிந்தர்சிங்ஹீடா, ஒரே கோத்திரத்துக் குள் திருமணம் செய்வது அரியானா மக்களின் பண்பாட்டுக்கு எதிரானது என்றும், அப்படி திருமணம் செய்தவர்கள் படுகொலை செய்வதற்கு ‘காப் பஞ்சாயத்து’ எனும் சாதிப் பஞ்சாயத்துகளை பொறுப்பாக்க முடியாது என்றும் கூறியிருப்பதோடு உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை சந்தித்து - ஒரே கோத்திரத்துக்குள் நடக்கும் திருமணத்தை தடைசெய்து இந்துக்களுக்கான திருமண சட்டத்தைத் திருத்த வேண்டும் என்று கோரிக்கையும் வைத்துள்ளார்.
 
1946 ஆம் ஆண்டு ‘இந்து திருமண இடர்ப்பாடுகளை நீக்கும் சட்டம்’ (The Hindu Marriage Disabilities Removal Act) கொண்டு வரப்பட்டது. ஒரே கோத்திரத்தில் நடக்கும் திருமணத்தையோ, அல்லது உட்சாதிக் குழுக்களுக்கிடையே நடக்கும் திருமணத்தையோ தடை செய்ய முடியாது என்று சட்டத்தின் பிரிவு கூறுகிறது. அரியானா காங்கிரஸ் முதல்வரின் அரசியல் எதிரியான இந்திய தேசிய லோக்தள கட்சியைச் சார்ந்த ஓம்பிரகாஷ்  சவுதாலாவும் - கட்சி வேறுபாடுகளை மறந்து, முதல்வரின் கருத்தையே வலியுறுத்துகிறார். பஞ்சாப், ராஜஸ்தான், உ.பி., பீகார், ஜார்கண்ட் மாநிலங் களில் ஒரே கோத்திரத்துக்குள் திருமணம் செய்தவர்களை மணமக்களின் குடும்பத்தாரே கொலை செய்து விட்டு, அதற்கு ‘கவுரவக் கொலை’ என்று பெயர் சூட்டிக் கொள்ளும் வெட்கக் கேடான நிலை தொடர்ந்து வருகிறது. நாற்றமெடுத்து கிடக்கும் இந்து பார்ப் பனீயத்தின் கொடூரத்தை இந்த சம்பவங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டி வருகின்றன.
 
‘சக்திவாகினி’ என்ற பெண்கள் உரிமைகளுக்காக செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் சாதி - கோத்திரம் என்ற பெயரால் சமூகத்தில் பெண்கள் மீது திணிக்கப்படும். சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள், பழிவாங்குதல், தண்டனைக்கு உட்படுத்துதல் போன்ற கொடுமைகளுக்கு எதிராக, அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரும் பொது நலன் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தது. வழக்கை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம், கோத்திரத்தின் பெயரால் நடக்கும் கொடுமைகளைத் தடுக்க, அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்று விளக்கம் கேட்டு, கடந்த ஜூன் 21 ஆம் தேதி எட்டு மாநில அரசுகளுக்கு (அரியானா, பஞ்சாப், பீகார், உ.பி., ஜார்கண்ட், இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம்) தாக்கீது அனுப்பியுள்ளது.
 
ஒரே ‘கோத்திரத்துக்குள் திருமணம் செய்வதை’ தடை செய்யக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் சாதி வெறியோடு தொடரப்பட்ட ஒரு வழக்கு மனுவை, கடந்த ஜூன் 19 ஆம் தேதி தள்ளுபடி செய்த நீதிமன்றம், “எந்த இந்து சாஸ்திரத்தில், ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்யக் கூடாது என்று கூறியிருக்கிறது? இத்தகைய வழக்குகளால் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கக் கூடாது” என்று மனுதாரரைக் கண்டனம் செய்தது.
 
தமிழ்நாட்டில் பஞ்சாயத்துகள் வழியாக சாதி, தீண்டாமை அமுல்படுத்தப்படா விட்டாலும், சமூகத்தில் எழுதப்படாத சட்டமாக நீடிக்கவே செய்கின்றன. ஒப்பீட்டளவில் வடமாநிலங்களைவிட தமிழகம் பரவாயில்லை என்று கூறலாமே தவிர, சமூகத்தில், சாதி - தீண்டாமை, ஆழமாக புரையோடிக் கிடக்கிறது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. நாம் வெளியிடும் பட்டியல்களே அதற்குச் சான்று.
 
இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டுவதற்குக் காரணம், சாதி - தீண்டாமை ஒழிப்புக்கான செயல்பாடுகளை மாநில அரசுகளும், அரசு நிர்வாகமும், அரசியல் கட்சிகளுமே மேற்கொள்ள வேண்டிய கடமையிலிருந்து இனியும் விலகி நிற்கக் கூடாது என்பதை வலியுறுத்துவதற்குத்தான். சாதி - தீண்டாமை ஒழிப்பு - பெரியார், அம்பேத்கர் அமைப்புகளுக்கான வேலை என்ற மனப் போக்கிலிருந்து தமிழக அரசியல் கட்சிகள் விடுபட்டு, தங்கள் கட்சியின் வேலைத் திட்டங்களில் ஒன்றாக அதை இணைத்துக் கொள்ள ஏன் முன்வரக்கூடாது? தமிழக அரசே, சாதி தீண்டாமைக்கு எதிரான பரப்புரையை, இயக்கங்களை ஏன் நடத்தக் கூடாது? தேர்தல் வரும்போது சாதி ஓட்டுகளைக் குறி வைத்து செயல்படுவதும் கட்சி அமைப்புக்குள்ளேயே ஆதிக்கசாதிகளை மய்யப்படுத்துவதும் பார்ப்பனியத்தை உறுதிப்படுத்துவது தானே!
 
சாதி- தீண்டாமையை நிலைப்படுத்தும் கருத்தியல்களின் செல்வாக்கை சமூகத்தில் வீழ்த்துவதற்கான பரப்புரைகளையும் இயக்கங்களையும் தொடர்ந்து நடத்தப்படாத வரை, சாதி - தீண்டாமை தொடரவே செய்யும். சட்டங்களை அமுல்படுத்த வேண்டியவர்களே அதைச் செய்யாமல், குறட்டை விட்டு உறங்குவது குற்றவாளிகளைப் பாதுகாப்பதே ஆகும்.
 
பெரியார், அண்ணா பிறந்த மண் என்பதற்கான அடையாளம் சாதி - தீண்டாமைக் கொடுமைகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பதுதானே தவிர, அவர்கள் சிலைகளுக்கு பிறந்த நாட்களில் மாலை போடுவது மட்டும் அல்ல!

- விடுதலை இராசேந்திரன்

Pin It