கருநாடக அரசு தொடர்ந்த மேலும் 2 வழக்குகளில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியை கொல்லேகால் நீதிமன்றம் நவம்பர் 20 ஆம் தேதி விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

கடந்த 2002 மார்ச் 8 ஆம் தேதி கொளத்தூரிலிருந்து மேட்டூர் வரும் வழியில் வழிமறித்து, கருநாடக காவல்துறை கழகத் தலைவர் கொளத்தூர் மணியை கைது செய்து விட்டு, காட்டுக்குள் வீரப்பனிடம் தருவதற்காக ஆயுதங்களுடன் வந்தபோது கைது செய்ததாக பொய் வழக்குப் பதிவு செய்து சிறையிலடைத்தது.  

கழகத் தலைவர் மீது தொடரப்பட்ட இந்த வழக்கை அனூர் காவல்துறை தொடர்ந்தது. இதனைத் தொடர்ந்து - இந்த வழக்கில், பிணை கிடைத்து விட்டால் விடுதலையாகி விடாமல் தடுக்க, ஏற்கனவே வீரப்பனுக்கு ஆயுதம் கடத்தியதாக சில தோழர்கள் மீது தொடரப்பட்ட வழக்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியையும் குற்றவாளியாக சேர்த்து கொல்லேகால் காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த இரு பொய் வழக்குகளிலும் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணியை, இப்போது நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இதுவரை கருநாடக அரசு தொடர்ந்த 3 பொய் வழக்குகளில் தோழர் கொளத்தூர் மணி விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

இன்னும் மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு வழக்கும், விரைவு நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகளும் நிலுவையில் உள்ளன. வழக்கறிஞர் டி.பி. பிரகாசு, கழகத்தைச் சார்ந்த  வழக்கறிஞர் வி.கிருஷ்ணன் ஆகியோர் நீதிமன்றத்தில் கழகத் தலைவருக்காக வாதாடினார்கள்.

Pin It