சென்னையில் நவம்பர் 26 அன்று மாலை இராயப்பேட்டையில் நடந்த சாதி ஒழிப்பு சட்ட எரிப்பு நாளில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை- 

டிசம்பர் 6 அம்பேத்கர் நினைவு நாள். ஆனால் அன்று பாபர் மசூதியை இடித்த நாள் என்பதுதான் நம் நினைவுக்கு வரும். எப்படி இருந்தாலும் இன்று பெரியார் சாதி ஒழிப்புக்காக அரசியல் சட்டத்தை எரித்த நாளாக இருந்தாலும், இன்று தான் தமிழ் ஈழ விடுதலைப் போரை தலைமையேற்று நடத்திக் கொண்டிருக்கிற தலைவர் பிரபாகரன் பிறந்த நாள். நாம் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு தொடர்ந்து ஓர் ஆண்டு காலம் பல்வேறு தளங்களில் பணியாற்றினோம். ஈழப் போராளிகளுக்கு நம் ஆதரவை வழங்கினோம். தனி ஈழத்திற்கான நியாயங்களை மக்களிடம் விளக்கினோம். எல்லாம் வீணாகி ஒரு நசிவுக்கு ஈழப் போர் வந்த நிலையில் முள்வேலி முகாமில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் ஈழ மக்களை எந்த குற்றமும் செய்யாத அந்த நாட்டு மக்களை போர் முடிந்துவிட்டது என்று சொன்ன பிறகும் அந்த மக்களை சொந்த நிலத்திற்கு விடாமல் வைத்திருக்கின்ற இந்த சூழலில் அந்த முகாமில் உள்ள மக்களை விடுதலை செய்யுங்கள் என்ற கோரிக்கை மட்டும்தான் நாம் இப்பொழுது எழுப்பிக் கொண்டிருக்கிற ஈழக் கோரிக்கைகளில் ஒன்றாக இருக்கிறது.

இந்திய அரசை அது செய்கின்ற தவறுகளிலிருந்து தடுப்பதற்கான முயற்சிகளில் தொடர்ந்து நம் இயக்கம் செயல்பட்டது. ஆனாலும், முள்வேலிக் கம்பிகளுக்குள் அங்கே தமிழர்கள் அகதிகளாக இருக்கிறார்கள் என்றால் - இங்கே திறந்தவெளியில் நமது மக்கள் இன்றும் பல்வேறு வகையில் அடிமைகளாக உரிமையற்றவர்களாகவே உள்ளனர். 

நாம் இந்த மண்ணில் ஆற்ற வேண்டிய கடமைகளை நினைவில் கொண்டு வருவோம். கடந்த ஆண்டு இந்த சட்ட எரிப்புப் போராட்டம் நடந்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. இது நினைவுக் குறிப்பாக கொண்டாடுகிற விழா அல்ல. உண்மையில் இது வருந்த வேண்டிய நாள். 50 ஆண்டுகளுக்கு முன்னால் சட்டத்தைக் கொளுத்தியும்கூட பலன் ஏற்படவில்லையே என்ற ஆதங்கத்தை எடுத்துரைக்கும் நாள். ஏன் இந்த நாளை பெரியார் தேர்ந்தெடுத்தார் என்பதைப் பற்றி சொல்லியாக வேண்டும். இந்த நாட்டுக்கு விடுதலை வந்ததாக அறிவித்த பிறகே விடுதலை பெற்ற நாட்டில்தான் இந்த நாட்டுக்கான அரசியல் சட்டம் எழுதப்பட வேண்டும். 

இலங்கைக்குக்கூட விடுதலை 1948 இல் வந்தது. அதற்கான அரசியல் சட்டம் 1972 இல் தான் எழுதப்பட்டு நிறைவேற்றப்பட்டது.  ஆனால் இந்தியாவில் விடுதலை வருவதற்கு முன்னாலேயே அரசியல் சட்டம் எழுதத் தொடங்கி விட்டார்கள். இந்தியாவின் விடுதலைக்காக முன் நின்று போராடுவதாக சொன்ன காங்கிரஸ் கட்சி, அது தொடர்ந்து பல காலமாக என்ன சொல்லி வந்தது? இந்த நாட்டிற்கு விடுதலை வந்த பின்னால் வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை தந்து, அவர்களால் தேர்ந்தெடுக்கிற பிரதிநிதிகளைக் கொண்டு சட்டத்தை எழுதுவோம் என்று தீர்மானம் போட்டு வந்தார்கள். எல்லாப் பக்கமும் பரப்பி வந்தார்கள். ஆனால், இந்தியாவில் அரசியல் சட்டம் அப்படி எழுதப்படவில்லை. 

மாநில அரசுக்கு 10 விழுக்காடு மக்கள் மட்டுமே வாக்காளர்களாக இருந்தார்கள். படித்தவர்கள் பட்டா நிலம் வைத்திருப்பவர்கள், வரி கட்டுபவர்கள் மட்டும் தான். வாக்காளர்கள் மத்திய அரசுக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 4 சதவீதம் மக்கள் மட்டும் தான் வாக்களிக்கும் நிலை இருந்தது. இப்படிப்பட்ட படித்த, பணக்காரர்கள் மட்டுமே தேர்ந்தெடுத்த 4 சதவீத வாக்காளர் பிரதிநிதிகளைக் கொண்டுதான் அரசியல் நிர்ணய சபையை உண்டாக்கினர். இவர்களெல்லாம் சேர்ந்து எழுதிய சட்டம்தான் இது. நாமெல்லாம் சொல்லுவது அம்பேத்கர் எழுதியது என்று. அம்பேத்கர் வரைவுக் குழுவுக்குத் தலைவர். அவரே எழுதவில்லை. 13 துணைக் குழுக்கள் எல்லாம் எழுதிக் கொடுத்ததை வரைவுபடுத்தினார் அம்பேத்கர்.

பெனசில் நரசிங்க ராவ் என்ற பார்ப்பனர் எழுதிய சட்டத்தின் அடிப்படையில் எழுதுங்கள் என்று அம்பேத்கரிடம் கொடுத்தனர். அப்படி எழுதப்பட்ட சட்டத்தை அதை எழுதுகிற போதே பெரியார் எதிர்த்தார். இது எங்களுக்கான எங்கள் சட்டம் அல்ல. எங்கள் பிரதிநிதிகளால் எழுதப்படுகிற சட்டம் அல்ல.  பணக்காரர்கள், நிலச்சுவான்தார்கள், படித்தவர்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் உட்கார்ந்து முடிவு செய்கிறார்கள். நான் இந்தச் சட்டத்தை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று அமைத்த நாளிலேயே பெரியார் சொன்னார். அப்படி எழுதப்பட்ட அரசியல் சட்டத்தை நாடாளுமன்ற அவை ஏற்புக்காக அம்பேத்கர் வைத்தார்.  

நவம்பர் 25 ம் நாள் அந்த சட்டத்தை முன் வைத்து அம்பேத்கர், இதற்கான ஏற்பு வழங்குங்கள் என்று சொன்னபோது, அம்பேத்கர் சொன்னார், “இந்தச் சட்டம் அரசியல் சமத்துவத்தை அவைருக்கும் வழங்குகிறது. ஒரு மனிதனுக்கு ஒரு வாக்கு, எல்லா வாக்குகளுக்கும் சமம். அப்பேர்ப்பட்ட சட்டத்தை நான் உங்கள் முன்னால் வைக்கிறேன். இப்போதே நான் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். இந்த அரசியல் சட்டம் கொடுத்திருக்கிற அரசியல் சமத்துவத்தைப் பயன்படுத்தி, இந்த அடிப்படையில் சமூக சமத்துவத்தையும், அரசியல் சமத்துவத்தையும் உண்டாக்க தவறுவோமேயானால் இந்த சட்டத்தை எதிர்கால சமுதாயம் தகர்த்தெறிந்து விடும்” என்று சொல்லிவிட்டுத்தான் அம்பேத்கர் இந்த சட்டத்தை நாடாளுமன்றத்தின் முன் வைத்தார். 

1946 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதியை சட்ட தினம் என்று சொல்லுகிறார்கள். இந்த சட்டம் 60 நாட்களுக்கு பின்னால் தான் நடைமுறைக்கு வரும் என்று சொன்னார்கள். அது ஜனவரி 26, குடியரசு நாளாகச் சொல்லப்பட்டது. அதனால் தான் சட்டம் எழுதப்பட்ட நாளான நவம்பர் 26-ஐ பெரியார் எரிப்பதற்கான நாளாக தேர்ந்தெடுத்தார். சட்டம் எழுதப்பட்டு, நாடாளுமன்றம் ஏற்ற அந்த நவம்பர் 26-யே தனது போராட்டத்துக்கான நாளாக தேர்ந்தெடுத்தார்.

இந்த நாட்டில் சமுதாயத்தில் நிலவுகிற கொடுமையைப் பார்த்து சாதிக் கொடுமைகளை முதலில் கணக்கில் எடுத்து இயக்கம் தொடங்கியவர் பெரியார். ஆண் பெண் சமத்துவம் வேண்டும் என்று சொல்லி, வாழ்நாள் முழுதும் இயக்கம் நடத்திய தலைவர் பெரியார். அவர் எப்போதுமே அரசியல் விடுதலையைவிட சமுதாய விடுதலையைத்தான் பேசி வந்தார். காந்தியார் நான்கு திட்டங்களை முன் வைத்தார். தீண்டாமை விலக்கு, மது விலக்கு, கிராம மறுமலர்ச்சி, இந்து முஸ்லீம் ஒற்றுமை இதுதான் நிர்மாணத் திட்டம் என்று காந்தி சொன்னார். இதை ஏற்றுக் கொள்ள எல்லோரும் வாருங்கள் என்று சொன்னார். பெரியார் அதை ஏற்றுக் கொண்டு காங்கிரசில் சேர்ந்தார்.

பின்னால் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக பெரியாருக்கு தாமிர பட்டயம் கொடுக்கப்பட்டபோது பெரியாரை வானொலியில் பேட்டி எடுத்தார்கள். பேட்டிக் கண்ட மாறன், பெரியாரிடத்தில் “அய்யா எல்லோரும் அமைதியாக இருந்த போது நீங்கள் மட்டும் இந்தப் போராட்டத்தில் ஏன் இறங்கினீர்கள்” என்றார். பெரியார் சொன்னார், “அய்யா மன்னிக்கனும், இந்தியாவிற்கு விடுதலை வேண்டும் என்பதற்காக நான் காங்கிரசில் சேரவில்லை. காந்தி சொன்ன நான்கு திட்டங்களை செய்யலாம் என்றுதான் காங்கிரசில்  சேர்ந்தேன்” என்றார். 

சமுதாயத்தில் நிலவுகிற சாதிக் கொடுமையை அகற்ற வேண்டும்; ஒழிக்க வேண்டும் என்ற சிந்தனையே பெரியாரின் உள்ளத்தில் மேலோங்கி நின்றது. அதன் காரணமாகவே இந்த காங்கிரசை பயன்படுத்திக் கொண்டிருக்கிற பார்ப்பனர்கள், ஆங்கிலேயர் வரவால் அவர்கள் இழந்து போன சமுதாயத்தின் மேலாண்மையை இந்திய விடுதலை என்ற பேரால் நிலைநிறுத்திக் கொள்ள முயற்சிக்கிறார்கள் என்பதுதான் பெரியாரின் பார்வையாக இருந்தது.  

ஆங்கிலேயர்கள் பல சட்டங்களைக் கொண்டு வந்தார்கள். தேவதாசி ஒழிப்பு, திருமண வயது உயர்வு, உடன் கட்டை ஏறத் தடை என்று சீர்திருத்தச் சட்டங்களைக் கொண்டு வந்தார்கள். 'சமுதாயத்தில் இந்து மதம் ஏற்றுக் கொண்டிருக்கிற பல பழக்க வழக்கங்களை அழிக்கிறவனாக வந்து சேர்ந்திருக்கின்றான். ஆகவே இவனை விரட்டிவிட வேண்டும். இவன் நம் மதத்திற்கு எதிராக இருக்கின்றான். இதனால் நம் மேலாண்மை கெட்டுப் போய்விடும்' என்பதற்காகத்தான் காங்கிரஸ், பிரிட்டிஷாரை எதிர்த்து போராட்டம் தொடங்கியதே தவிர, இந்த நாட்டு மக்கள் விடுதலைப் பெற்ற மக்களாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு அல்ல என்பதே பெரியாரின் கருத்தாக இருந்தது. அதனால் தான் இவர்களுடைய அசைவுகளை துல்லியமாகப் பார்த்த பெரியார், ஒவ்வொரு பணியிலும் அதன் மீது விமர்சனத்தை வைத்து, தமிழர்களே எச்சரிக்கையாக இருங்கள்; பார்ப்பனரல்லாதோரே எச்சரிக்கையாக இருங்கள் என்று சொல்லிய வண்ணம் இருந்தார்.  

இந்திய அரசியல் சட்டம் வருவதற்கு முன்னாலே பிரிட்டிஷ்காரர்கள் ஒரு அரசியல் சட்டம் இயற்றினார்கள். 1931 இல் விடுதலைப் பெற்ற இந்தியாவில் அரசியல் சட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு குழு அமைத்து, காங்கிரஸ் கமிட்டி நிறைவேற்றியது. கராச்சி காங்கிரஸ் மாநாட்டில்தான் மோதிலால் நேரு தலைமையில் அமைக்கப்பட்ட அந்தக் குழு ஒரு அறிக்கையை வைத்தது. அந்த அறிக்கையில்தான் அவர்கள் சொன்னார்கள், மதச் சுதந்திரம் என்பதை “பழக்க வழக்கங்களுக்கு இடையூறு இல்லாமல் விடுதலை பெற்ற நாடாக வருங்காலத்தில் அரசியல் சட்டம் இருக்கும்” என்றார்கள். பெரியார் இதை அப்போதே கண்டித்தார். இவர்கள் வேலையை ஆரம்பித்து விட்டார்கள் என்று பெரியார் சொன்னார். 

அதற்கு முன்னால் 1929 இல் சென்னை நேப்பியர் பூங்காவில் நடந்த ஆதி திராவிடர்கள் சுயமரியாதை மாநாட்டில் பெரியார் சொல்லுகிறார், “எச்சரிக்கையாக இருங்கள்; இந்த பார்ப்பனக் கூட்டம் இதுவரை கடவுளை, புராணங்களை, மதத்தை, சாஸ்திரத்தை சொல்லி நம்மை ஏமாற்றி வந்தார்கள். இப்போது புதிதாக ‘பழக்க வழக்கங்கள்’ என்ற ஒன்றை ஆரம்பித்து இருக்கிறார்கள்” என்றார். இப்பொழுதும் அதையே வைத்துதான் எல்லா சட்டத் திருத்தங்களையும் கெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.  அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதும் இதை வைத்துத்தான் தடுக்கப்படுகின்றது. 1929 இல் பெரியார் இதைத்தான் சொன்னார். அவர் எதிர்பார்த்ததைப் போலவே 1931 இல் காங்கிரஸ் அதைத்தான் செய்தது. 

பெரியார் உடனடியாக விருதுநகர் சுயமரியாதை மாநாட்டைக் கூட்டி 'மதச் சுதந்திரம் என்பதே இருக்கக்கூடாது' என்றார். 'மத நடுநிலைமை என்று சொன்னார்கள். மத நடு நிலைமை என்று ஏன் சொல்கிறாய்; எல்லோரும் சமம் என்று சொல். எல்லா குடிமக்களுக்கும் ஒரே சட்டம் என்று சொல். அது என்ன மதச் சுதந்திரம்' என்று பெரியார் கேட்டார். 'இந்த மதச் சுதந்திரம் தான் மீண்டும் இந்து மதத்தை நிலைக்கச் செய்து தீண்டாமையை, சாதியை, பெண்ணடிமையை என எல்லாவற்றையும் இதுவே காப்பாற்றும். எனவே இதை ஏற்றுக் கொள்ள முடியாது' என்று பெரியார் சொன்னார். 

1973 ஆம் ஆண்டு டிசம்பர் 24 இல் பெரியார் மறைகிறார். அதற்கு முன்னால் டிசம்பர் 8, 9 இல் தமிழர் இழிவு ஒழிப்பு மாநாட்டை சென்னையில் நடத்தினார். அந்த மாநாட்டுத் தீர்மானமும் மதச் சுதந்திரம் என்று ஒன்று இருக்கக் கூடாது. அதற்கான பிரிவு 25-ஐ எடு, வேண்டாம் என்றார். எல்லோருக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டம் (பி.ஜே.பி. சொல்வதைப்போல் அல்ல) அதாவது மதச் சுதந்திரம் என்பதை எடுத்துவிட்டு அனைவருக்கும் சமமான சட்டம் கொடு என்றார். மதச்சுதந்திரம் என்ற சட்டப்பிரிவை  வைத்துக்கொண்டே ஆர்.எஸ்.எஸ்.காரன் பொது சிவில் சட்டம் வேண்டும் என்கிறான். இதை வைத்துக் கொண்டுதான் மதத்தைக் காப்பாற்றுகிறேன், பழக்க வழக்கங்களை காப்பாற்றுகிறேன் என்று சொல்லிக் கொண்டுதான் இந்து மதப்படி, எல்லா சாதிச் சடங்குகளை காப்பாற்றிக் கொண்டு இருக்கிறான் என்பதை பெரியார் கண்டதால்தான் அந்த பிரிவுகளை கொண்டிருக்கிற  சட்டங்களை எரிக்கத் துணிந்தார். 

அரசியல் சட்டம் என்னதான் சொல்லுகிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பல பிரிவுகளில் 13வது பிரிவில் “இந்த நாட்டில் சட்டம் என்கிற சொல்லுக்கு விளக்கம் சொல்கிறான். நாடாளுமன்றம் இயற்றியது சட்டம். நீதிமன்றம், உச்சநீதிமன்றம் தீர்ப்புச் சொல்வதும் சட்டம். நிர்வாக ஆணையாக பிறப்பிக்கப்பட்டதும் ஆணை தான். அதேபோல் பழக்கவழக்கங்களாக தொடர்ந்து நிலவுவதும் சட்டம்" என்றுதான் இந்த பிரிவு சொல்கிறது. 372வது பிரிவு சொல்வது, “இந்த அரசியல் சட்டத்தில் குறிப்பாக ரத்துச் செய்யப்பட்டதைத் தவிர மீதியெல்லாம் (பழக்க வழக்க அடிப்படையில்) நடைமுறையில் இருக்கும்” என்றது. ஆகவேதான் பெரியார் ‘பழக்க வழக்கம்’ என்ற பெயரால் இந்து மதம் - பல சமூகக் கொடுமைகளை இழைக்கிறது என்பதால்தான் பெரியார் இந்த பிரிவை எரித்தார்.  மதச் சுதந்திரத்தை வழங்கும் பிரிவையும் எரிக்க வேண்டும் என்று பெரியார் சொன்னார். 

பெரியார் சட்டமேதையல்ல. ஆனால் சமுதாயத்தின் மீது இருந்த அக்கறை அதை சரியாகப் பார்க்க வைத்தது. இந்து மதம் தான் சாதியை பாதுகாக்கிறது. இந்து மதம் தான் சாதிக்கு காரணமானது. இல்லை என்றால் சாதி ஏது? அம்பேத்கர் சொல்லுவார், “இந்து என்றால் அவன் சாதி இல்லாமல் இருக்க முடியாது. அதுதான் இந்து மதம். இந்து மதத்தில் ஒருவன் இருக்க வேண்டும் என்றால், ஏதோ ஒரு சாதியில் இருந்துதான் தீர வேண்டும். சாதியில்லாதவன் இந்துவாக இருக்க முடியாது” என்றார். இந்து மதம் என்பது அதனுடைய சாஸ்திரங்கள், புராணங்கள் பார்ப்பானுடைய நல்வாழ்வுக்காக பார்ப்பன மேலாண்மைக்கும், சுக வாழ்வுக்கும், தான் சுகமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஏற்று வைக்கப் பட்டதை நாம் ஏன் இன்னும் இழிசாதிகளாக, கீழ்சாதிகளாக, சூத்திரர்களாக இருக்க வேண்டும் என்பதை பெரியார் தன் வாழ்நாள் முழுதும் சொல்லி வந்தார். 

இந்தியா விடுதலை பெற்றபோது இச்சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னால், அதே 1950 ஆம் ஆண்டில்தான் நமக்கு வேலை வாய்ப்பில் இருந்த இடஒதுக்கீடு செல்லாது என்ற தீர்ப்பை வழங்கினான். 1950 ஆம் ஆண்டு இறுதியிலே வடவர் ஆதிக்க ஒழிப்பு நாள் மாநாடு என்று நடத்தினார். அதிலிருந்து தொடர்ச்சியாக இடஒதுக்கீட்டுக்காக போராடிய போதும் வடவர் எதிர்ப்பையும் சேர்த்தே நடத்தினார். வடவர் ஆதிக்கம் இதில் ஒழிய வேண்டும். இந்தி எதிர்ப்புப் போராட்டம் வந்த போதும் இதையே தான் சொன்னார். சாதி ஒழிப்பும், தனித் தமிழ்நாடும் தான் என் உயிரினும் மேலான கொள்கைகள் என்று பெரியார் சொன்னார்.  

ஏன் அதைச் சொன்னார் என்றால், அரசியல் சட்டத்தின் 368வது பிரிவை திருத்த வேண்டும் என்றால், நாடாளுமன்றத்தில் இருக்கும் உறுப்பினர்களில் 3 இல் 2 பங்கு இருந்தால் தான் திருத்த முடியும். தமிழ்நாட்டில் நாம் 40 பேர் இருக்கின்றோம். மொத்தம் 543 பேர் வட நாட்டில் மட்டும் உள்ளார்கள். திராவிடர் சமுதாயம் என்று பார்த்தாலும் 150 பேர்கூட தேற மாட்டோம். அனைவரும் ஒட்டு மொத்தமாக வாக்களித்தாலும் கூட வடவருடைய  ஆரிய பண்பாட்டிற்கான ஆரிய கலாச்சாரத்தை திணிக்கிற எந்தப் பிரிவையும் நம்மால் மாற்ற முடியாது. தமிழ்நாட்டில் மட்டும் 3 இல் 2 என்றால் பரவாயில்லை. இந்தியா முழுமையும் என்றால் நாம் என்ன செய்ய முடியும். சட்ட எரிப்பு போராட்டத்தின்போது 368வது பிரிவையும் பெரியார் தொடர்ந்து கண்டித்து வந்தார். 

பெரியார் 1950 இல் இருந்து ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டு வந்தார். இந்தியா என்பதே பார்ப்பன பனியாக்களுக்கான நாடு என்பதை இந்தியா விடுதலைப் பெற்ற போதே சொன்னார். தென்னாட்டுப் பார்ப்பானுக்கும், வடநாட்டுப் பணக்காரனுக்கும் ஆன நாடாக இனி இந்தியா இருக்கப் போகிறது என்றார். 1951 இல் இந்தி திணிக்கப்பட்ட போது இந்தி அழிப்பு என்று ஆரம்பித்தார். 1952 ஆகஸ்டு 1 ஆம் தேதி ரயில் நிலையங்களில் உள்ள பெயர்ப்பலகைகளில் இந்தி எழுத்துக்களை அழிப்பது. அந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து பெரியார் சொன்னார், இனி இப்பேர்ப்பட்ட போராட்டங்களினால் அவர்கள் நம்மை கவனிக்க மாட்டார்கள். நான் இந்திய சட்டமாகிய அரசியல் சட்டத்தை எரிக்கலாம் என்று இருக்கிறேன் என்று 1952 இல் சொன்னார் பெரியார்.  

அதேபோல் 1953 இல் சட்டத்தை எழுதிய புரட்சியாளர் அம்பேத்கர் சட்டத்தை எரிக்கப் போகிறேன் என்று சொன்னார். 1953 செப்டம்பரில் ஆந்திர மாநிலம் பிரிவதற்கான சட்டம் விவாதத்திற்கு வருகிறது. விவாதம் நடக்கும்போது ஒவ்வொருவரும் சட்டத்தை நீ தான் எழுதினாய் என்று கேட்கிறார்கள். அப்பொழுது, “ஆம் நான் தான் எழுதினேன்; அதை எரிக்கப் போகிற முதள் ஆளாக நான் தான் இருப்பேன்” என்றார் அம்பேத்கர். 

1953 இல் பிள்ளையார் சிலை உடைப்பு என்கிற போதுதான், “இது வெறும் பிள்ளையார் சிலை உடைப்பு மட்டும் அல்ல. வடவர் ஆதிக்கத்திற்கு எதிராகவும் தான், அங்கிருந்து திணிக்கப்பட்டதை தான் நான் உடைக்கிறேன்” என்று பெரியார் ‘புத்தர் ஜெயந்தி’ (புத்தர் பிறந்த நாள்)யில் உடைத்தார். 1956 இல் மலையப்பன் என்கிற மாவட்ட ஆட்சியர் மீது ஒரு தீர்ப்புச் சொல்லப்படுகிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தவறு என்று சொன்ன நீதிமன்றம், இவர் ஆட்சியராக இருப்பதற்கே தகுதி இல்லை என்று நீதிபதி தீர்ப்பு எழுதினார். இதை பெரியார் கண்டித்தார். இதுவே பார்ப்பானாக இருந்திருந்தால் இப்படி தீர்ப்பில் எழுதியிருப்பார்களாக என்றார்.

இப்படி ஒவ்வொன்றாக வருகின்றபோது, 1957 ஆம் ஆண்டில், ‘பிராமணாள்’ பெயர் பலகை அழிப்புப் போராட்டம் அறிவித்தார். 1919-லேயே ஈரோட்டு நகராட்சி தலைவராக பெரியார் இருந்த போதே ‘பிராமணாள்’ என்று பெயர் போட்டால், அதற்கு நகராட்சி அனுமதியில்லை என்று அறிவித்திருந்தேன். அந்த பெயர் இல்லாமல் தான் ஈரோட்டில் உணவு விடுதிகள் நடந்தன. இப்போதும் ‘பிராமணாள்’ என பெயர் இருக்கின்றதே. நீ பிராமணாள் என்றால் நாங்கள் எல்லாம் யார்? எங்களை ‘சூத்திரன்’ என்று மறைமுகமாக சொல்லுகிறாய். ஒரு வீதியில் 10 வீடு இருக்கிறதென்றால் ஒரு வீட்டில் மட்டும் இது பத்தினி வீடு என்று பெயர் போட்டிருந்தால், மற்ற 9 வீடுகளில் உள்ளவர்களைப் பற்றி என்ன கருத்து என்று கேட்டார் பெரியார். 

நீ பிராமணன் என்றால், நான் சூத்திரன். சூத்திரன் என்றால் போரில் தோற்று ஓடியவன்; விலைக்கு வாங்கப்பட்டவன்; வைப்பாட்டி மகன். இந்தப் பொருளில் தான் சூத்திரன் என்று சொல்லுகிறாய். இன்னும் சாஸ்திரத்தில் நமக்கு திருமணம் செய்ய உரிமையில்லை என்று எழுதி வைத்திருக்கிறான். பார்ப்பானைத் தவிர வேறு யாரும் திருமணம் செய்துக் கொள்ள முடியாது. அதற்காகத்தான் தற்காலிகமாக நமக்கு பூணூல் போட்டு திருமணம் செய்கிறான். திருமணம் முடிந்த உடனே அதை கழற்றி விடுவான். ஆகவே நமக்கு திருமணம் செய்து கொள்ள உரிமை இல்லை என்றால், நம் எல்லோர் மனைவியும் அவனுக்கு வைப்பாட்டிப் போல தான். வைப்பாட்டி மக்கள் என்ற பொருளில் அந்த இழிவு நமக்கு இன்னும் இருக்கிறது. ஆகவே அந்த சூத்திரன் என்பது பிராமணாள் என்ற பெயரில் வெளிப்படுகிறது. ஆகவே இந்த பெயரில் இருக்கக்கூடாது. இதை அழிக்க வேண்டும் என்றார் பெரியார்.

இதையெல்லாம் பார்க்கிறபோதுதான் இன்னொரு பெரிய கொடுமை நடந்தது. விடுதலை பெற்ற நாட்டில் ‘குடியரசு’ நாட்டில் சாதி ஆதிக்கவாதிகளோடு பேச்சுவார்த்தையில் சமமாக அமர்ந்தார் என்பதற்காக, சாதிவெறியர்களால் இமானுவேல் சேகரன் கொலைச் செய்யப்பட்டார். இது நடந்தது 1957 செப்டம்பர்11 ஆம் நாள். அது பெரியாரை பாதித்தது. ஒவ்வொரு கூட்டத்திலும் அதை பேசினார் பெரியார். குற்றவாளிகளைப் பிடிக்கிறபோது, உயர்சாதிக்காரர்களான தேவர்களை போலீஸ் சுட்டது. எல்லோரும் இதை கண்டித்தார்கள். அப்போது பெரியார் சொன்னார், இவனை அப்போதே சுட்டிருந்தால் இத்தனை தாழ்த்தப்பட்டவர்கள் வீடு எரிந்திருக்காது என்றார். நான் ஆட்சியில் பொல்லாத வாய்ப்பு கிடைத்து இருந்திருப்பேனேயானால் நான் அப்போதே சுட்டிருப்பேன் என்றார் பெரியார். 

1957 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேடு பேட்டி காண்கிறது. “இந்த குற்றவாளிகளை கைது செய்து சிறையில் வைக்கவில்லையென்றால் நான் நேரடியாக போராட தெருவில் இறங்குவேன்” என்றார், பெரியார்.

நவம்பர் 3 ஆம் தேதி தஞ்சையில் மாநாடு கூட்டினார். அவருக்கு எடைக்கு எடை வெள்ளிக் கொடுக்கிற மாநாடு. அந்த மாநாட்டில்தான் பெரியார், அரசியல் சட்டத்தை எரிக்கப் போகிறேன் என்றார். உள்ளத்தில் குமுறிக் கொண்டிருந்த அந்த நெருப்பு அப்போது வெளி வந்தது. இந்த சாதியை பாதுகாக்கின்ற சட்டத்தை எரிக்க, தனது தொண்டர்களை தயாராக இருங்கள், கணக்கெடுங்கள் என்றார். இமானுவேல் சேகரனுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி, அதன் தொடர்ச்சியாகத்தான் பெரியார் இந்த சட்ட எரிப்புப் போராட்டத்தை அறிவித்தார். நவம்பர் 3 இல் போராட்டத்துக்கான அறிவிப்பை வெளியிட்டார். நவம்பர் 11 இல் அதாவது அடுத்த எட்டே நாளில் சட்டத் திருத்தம் ஒன்றை ஆட்சியாளர்கள் கொண்டு வந்து, சட்டத்தை எரித்தால் 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை உண்டு என்று திருத்தினார்கள். அந்த சட்டத்தை எரிப்பவர்களை மிரட்டுபவர்களைப் போல சொன்னார்கள். ஆனால் அந்த மிரட்டலுக்கு பெரியாரோ, அவரது தொண்டர்களோ அஞ்சிடவில்லை.  

1949 இல் அண்ணா பிரிந்தபோது பெரியாரை விட்டு இளைஞர்கள் எல்லாம் போய்விட்டார்கள். இப்போது அங்கே யாரும் இல்லை என்று தான் பிரச்சாரம் செய்தார்கள். ஆனால், அந்த காலகட்டத்தில்தான், பெரியார் அறிவித்த போராட்டத்தில் 10000 பேர் சட்டத்தை எரித்து கைதானார்கள். அதில் தண்டிக்கப்பட்டவர்கள் 4000 பேர். உலக நாட்டில் அந்த நாட்டு மக்கள் அந்த நாட்டு அரசியல் சட்டத்தை எரித்ததாக எங்கும் இல்லை.

(தொடரும்)

Pin It