4.4.2017 திங்கட்கிழமை மாலை 6.00 மணியளவில் சென்னை, கவிக்கோ மன்றத்தில், துவக்கு இலக்கிய அமைப்பின் ஒருங்கிணைப்பில், “தோழர் பாரூக் படுகொலை கண்டனமும் காலத்தின் தேவையும்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரும் வரவேற்று துவக்கு இலக்கிய அமைப்பின் பொறுப்பாளர் கவிஞர் இசாக் உரையாற்றி, நிகழ்வினை நெறிப்படுத்தினார்.
திராவிட இயக்கத் தமிழர்ப் பேரவையின் முத்தையா குமரன், விடுதலை சிறுத்தை கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ், மனிதநேய ஜனநாயகக் கட்சி மாவட்ட செயலாளர் தமீம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் முதன்மைத் துணைத் தலைவர் அப்துல் ரகுமான் ஆகியோரைத் தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா உரையாற்றினார்.
அவரது உரையில் பெரியார் இயக்கத்துக்கும், முஸ்லிம் அமைப்புகளுக்கும் நிலவும் நல்லுறவு பெரியார் காலம் முதல் இன்றுவரை தொடர்ந்துவரும் பாங்கினையும், சிறுபான்மை மக்கள்மீது எங்கிருந்து தாக்குதல் வந்தாலும் முதலில் களத்துக்கு வருபவர்கள் திராவிடர் கழகங்களைச் சார்ந்தோரே என்றும், இஸ்லாமிய சமுதாயத்தில் பிறந்த ஏராளமானோர் நாத்திகர் களாகவும், நாத்திக பரப்புரையாளர்களாகவும் விளங்கியதை பெயர்கள் குறிப்பிட்டு எடுத்துரைத்தார். எவர் ஒருவருக்கும் அவரது கொள்கையைப் பேசவும் பரப்பவும் உள்ள உரிமையைத் தடுக்க முடியாது என்றும், எவர் ஒருவரும் மற்றொருவர் பின்பற்றும் கொள்கைக்காக கொலை செய்யும் வெறிச்செயலை ஏற்றுக் கொள்ளமுடியாது என்றும் அழுத்தமாகக் குறிப்பிட்டார்.
இறுதியாகக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசும்போது இஸ்லாமிய சமுதாயத்தில் பிறந்து நாத்திகக் கொள்கையை ஏற்று பரப்புவர்களைப் பற்றிய அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் வெளிப்படையாய் தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்கவேண்டும் என்று கேட்க இருந்ததாகவும், பேராசிரியர் ஜவாஹிருல்லா உரை, அக்கேள்வியை எழுப்ப வேண்டியத் தேவையில்லாமல் செய்துவிட்டது என்றும், மேலும் சென்னை போன்ற இடங்களில் இக்கருத்துகளைப் பேசுவதைவிட கோவை நகரில் ஒரு கூட்டத்தை நீங்கள் ஏற்பாடு செய்து அதில் உரைப்பது கூடுதல் பயனுள்ளதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
கழகத் தலைவர் உரையாற்றி அமர்ந்ததும், ஒலி பெருக்கிக்கு முன்வந்த தோழர் ஆளூர் ஷா நவாஸ், ஓர் அறிவிப்பை வெளியிட்டார். நிகழ்வுக்கு வந்துள்ள முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அப்பல்லோ அனீஃபா, கூட்டமைப்பின் சார்பில், அனைத்து இயக்கங்களையும் ஒருங்கிணைத்து கோவையில் ஒரு கூட்டத்தை விரைவில் நடத்த உள்ளதாக உற்சாக கையொலிக்கிடையில் அறிவித்தார்.
இறுதியாக பேராசிரியர் ஹாஜாகனி தனது குடும்பத்தில் அவரது பெரியப்பா திராவிடர் கழக இயக்கத்தில் தீவிரமாக இயங்கிய செய்தியைக் கூறி நன்றியுரையாற்றி நிகழ்வினை நிறைவு செய்தார்.