தமிழகத்திலிருந்து - பல கட்சிகள் டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தியதைப் பார்த்துள்ளோம். கூடுதலான கூட்டம் - டெல்லியிலேயே திரட்டப்பட்டு விடும். தமிழ்நாட்டிலிருந்தே இவ்வளவு பெண்களும், குழந்தைகளும் பங்கேற்ற உணர்வுபூர்வமான இந்தப் பேரணி - டெல்லிக்கு புதுமையானது. நாங்கள் வியந்து விட்டோம்" என்று கூறினாr, ஓர் ஆங்கில இதழின் செய்தியாளர்.
டெல்லியில் - கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்திய நாட்களில், அங்கு குளிர் 5 டிகிரி செல்சியஸ், 6 டிகிரி செல்சியஸ் என்றிருந்தது. தமிழகத்தில் 19 டிகிரிக்கு குறைவான தட்பவெப்ப நிலையில் வாழ்ந்து பழக்கமில்லை. ஆனாலும் உறையச் செய்த குளிரிலும் உணர்வோடு கழகத் தோழர்கள் குடும்பம் குடும்பமாக சுமார் 3000 கிலோ மீட்டர் பயணம் செய்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
டெல்லி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தோழர்கள் - அதற்கான முழு கட்டணத்தையும் செலுத்தி வந்தனர். "தங்களது வருவாயிலும், சேமிப்பிலும் மிகப் பெரிய பங்கை அர்ப்பணித்து, கழகத் தோழர்கள் டெல்லி வந்துள்ளனர்" என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆர்ப்பாட்டத்தில் பேசுகையில் சுட்டிக் காட்டினார்.
ஆர்ப்பாட்டம் நடந்து முடிந்த - ஒரு மணி நேரத்துக்குள்ளேயே ஆர்ப்பாட்டச் செய்திகளை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டு விட்டன. தமிழ் இணைய தளங்கள் அனைத்துமே உடனுக்குடன் செய்திகளை வெளியிட்டன. பி.பி.சி. தமிழோசை, கழகத் தலைவர் கொளத்தூர் மணியின் பேட்டியை வெளியிட்டது. 'வின்' தொலைக்காட்சியில் ஒவ்வொரு நாளும் விரிவான செய்தி விமர்சனம் தரும் டி.எஸ்.எஸ்.மணி, வழக்கம் போல் ஆர்ப்பாட்டச் செய்திகளையும் விரிவாகவே தந்தார்.
போராட்டப் பயணத்தின் ஒருங்கிணைப்பாளராக தென்சென்னை மாவட்டக் கழகத்தலைவர் தபசி குமரன் செயல்பட்டார். தமிழகம் முழுதும் கழகத் தோழர்களுடன் தொடர்பு கொண்டு, பயணச்சீட்டுப் பதிவு உள்ளிட்ட ஏற்பாடு களை செய்ததோடு, இரு வாரங்களுக்கு முன், டெல்லி சென்று, தங்குமிடம், உணவு ஏற்பாடுகளையும் செய்தார். சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் அன்பு தனசேகரன், இலக்குமணன் ஆகியோர் இருநாட்கள் முன்பாகவே டெல்லி சென்று ஊடகங்கள் தொடர்பு உள்ளிட்ட முன்னேற்பாடுகளை செய்தனர்.
சென்னை எம்.ஜி.ஆர். நகர் கழகத் தோழர் அண்ணாமலை முயற்சியால் தொடர்வண்டி பயணத்தில் தோழர்களுக்கு உணவுப் பொட்டலங்கள், குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன.
டெல்லியில் தோழர்கள் தங்கிய இரண்டு மண்டபங்களில் - தமிழக உணவு அங்கேயே சமையல் கலைஞர்களால் சமைத்து வழங்கப்பட்டது. தரமான சுவையான உணவு என்று தோழர்கள் பாராட்டினர். அனைவருக்கும் கம்பளியுடன் கூடிய மெத்தை படுக்கைகள் வழங்கப்பட்டன.
பம்பாயிலிருந்து நாடோடி தமிழன், தமிழ்க்கனல் மெர்சி (பெண்), கதிரவன், ரதி (பெண்), லூக்காசு குமணன், கிறிஸ்தி ஆகியோர் பம்பாயிலிருந்து நேரடியாக டெல்லி வந்தனர். பெங்களூர் தமிழர்கள் கி.ராஜேந்திரன், ஆ. பழனி ஆகியோரும் பெங்களூரிலிருந்து டெல்லி வந்து பங்கேற்றனர். திண்டுக்கல் தோழர்கள் 10 பேர் தனியாக திண்டுக் கல்லிலிருந்து பயணச் சீட்டு பதிவு செய்து டெல்லி வந்தனர்.
காயக்கட்டுகளுடன் கழகத் தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றது - சர்வதேச ஊடகங்களின் கவனத்தை மிகவும் ஈர்த்தது. ராணுவத் தாக்குதலை எளிதில் விளக்கக்கூடிய 'குறியீடு' என்று தமிழ் இணையதளங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. கோவை மாவட்டக் கழகத் தோழர்கள் கதிரவன், பொள்ளாச்சி பிரகாசு, தாஜித் ஆகியோர் தோழர்களுக்கு 'காயக்கட்டுகளை'க் கட்டினர்.
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தைச் சார்ந்த மாணவர்கள் தோழர் கலையரசன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
டெல்லி காவல்துறையினர் தமிழக காவல்துறையினரைப் போல் அல்லாமல் மென்மையான அணுகுமுறையில் செயல்பட்டது சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும். ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிகள் பற்றி முன்கூட்டியே தொலைபேசி வழியாகவும், நேரடியாகவும் தொடர்பு கொண்டு பேசியதோடு 'கெடுபிடிகள்' ஏதுமின்றி, ஆர்ப்பாட்டம் நடக்க சிறப்பாக ஒத்துழைப்பு தந்தனர். 'தமிழ்நாட்டிலே - இப்படி ஒரு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கிடைத்திருக்காது. தடையை மீறி கைதாக வேண்டியிருந்திருக்கும்' என்று கழகத் தோழர்கள் பலரும் ஒருமித்த கருத்தை வெளிப்படுத்தினர்.
கழகத்தின் ஆர்ப்பாட்டச் செய்திகளை - 41 தமிழ் இணைய தளங்களும், 32 ஆங்கில இணைய தளங்களும் படங்களுடன் வெளியிட்டுள்ளன. சி.டி.ஆர். (கனடா), அய்.பி.சி. (இலண்டன்), ஏ.டி.பி.சி., இன்பத் தமிழ் ஒலி (ஆஸ்திரேலியா), பி.பி.சி. தமிழோசை (லண்டன்), ஆகிய வானொலிகள் ஆர்ப்பாட்டச் செய்திகளை ஒலிபரப்பின. 'டெலோ' அமைப்பின் அதிகாரபூர்வ ஆதரவு இணையதளமான 'டெலோ ஓ.ஆர்.ஜி.' (www.telo.org) இணைய தளமும், சீறிலங்காவின் ஆளும் ராஜ பக்சே கட்சியின் அதிகாரபூர்வ இணைய தளமான 'சீறிலங்கா பிரீடம் பார்ட்டி டாட் ஓ.ஆர்.ஜி.' (http://srilankafreedomparty.org)) என்ற இணைய தளமும், டெல்லி ஆர்ப் பாட்டச் செய்திகளை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிங்கள ஆதரவு இணையதளங்கள், தங்கள் கடும் கோபத்தையும், எரிச்சலையும் வெளிப்படுத்தியுள்ளன. 'லங்கா வெப் நியூஸ்' என்ற சிங்கள இணைய தளத்தில் சரத்குமறா என்பவர், ஆத்திரத்தின் உச்சிக்கே சென்று பிதற்றியுள்ளார். பேரணியில் - 'புத்த தேசம் கொல்லுது - காந்தி தேசம் ஆயுதம் வழங்குது' என்று எழுப்பப்பட்ட முழக்கத்தையும் சுட்டிக்காட்டி, தனது எரிச்சலை வெளிப்படுத்தியுள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தைத் தடுக்கும் முயற்சிகளை ஏன் இலங்கை தூதரகம் மேற்கொள்ளவில்லை என்றும் சிங்கள இணைய தளங்கள் குமுறியுள்ளன. சிங்கள ஊடகங்களின் இந்த கோபமும், எரிச்சலும், கழக ஆர்ப்பாட்டத்துக்குக் கிடைத்த மிகப் பெரும் வெற்றி.
நடுங்கும் குளிரில் - குளிர்ப் பாதுகாப்பு ஆடைகள் ஏதுமின்றி, கருப்புச்சட்டை அடையாளத்துடன் தோழர்கள் ஆர்ப் பாட்டத்தில் பங்கேற்றதைக் கண்டு, காவல்துறை அதிகாரிகளே வியந்து கூறினர்.
இந்திமொழி தெரிந்த சேலம் கழகத் தோழர் பாலு, பம்பாய் தோழர் நாடோடி தமிழன் ஆகியோர் இந்தியில் முழக்கங்களை எழுப்பிட - தோழர்கள் அதை திருப்பிக் கூறினர்.
ஆதித் தமிழர் பேரவைச் செயலாளர் சுப.இளங்கோவன் மற்றும் தோழர்கள் ஏ.வே. மனோகரன், களப்பிரர் ரகுநாதன், பெரியார் தாசன் ஆகியோர் தோழர்களுடன் புதுடில்லி வந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
விளம்பரம் இல்லாத ஒரு அமைப்பு இந்த ஆர்ப்பாட்டத்தின் வழியாக கவனத்தை ஈர்த்துவிட்டது என்று பி.டி.அய். செய்தி நிறுவனம் தனது செய்தியில் பதிவு செய்துள்ளது. 'டெக்கான் கிரானிக்கல்' ஆங்கில நாளேட்டின் தமிழக செய்தியாளர் பவான்சிங் சென்னையிலிருந்து டெல்லி வந்து ஆர்ப்பாட்டத்தை நேரில் பார்வையிட்டு விரிவான செய்திகளை பதிவு செய்துள்ளார். 'சன்' செய்தி மற்றும் 'சன்' தொலைக் காட்சியும், ராஜ் டி.வி., மக்கள் தொலைக்காட்சியும், ஆர்ப்பாட்ட செய்திகளை ஒளிபரப்பின.
மாலை திருமண நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு - கழகத்தினர் புறப்படுவதற்கு முன், வழியனுப்ப வேண்டும் என்று விரைந்து வந்த தோழர் திருமா, கழகக் குடும்பத்தினரைக் கண்டு, மிகுந்த உற்சாகம் பெற்றார். தொடர்வண்டி நிலையத்திலேயே ஈழத் தமிழர்களின் உரிமைகளை வலியுறுத்தி கழகத்தினரோடு இணைந்து முழக்கங்களை எழுப்பிய காட்சி உணர்ச்சிகரமாக இருந்தது.
தொலைக்காட்சியில் ஆர்ப்பாட்ட காட்சிகளைப் பார்த்துவிட்டு ஒரு ஈழத் தமிழர் நேரில் வந்து கண்களில் நீர் பளிச்சிடக் கூறினார், "நீங்கள் போட் டிருந்த மருந்துக் கட்டுகள் - புண்பட்டுக் கிடக்கும் எங்கள் உணர்வுகளுக்குப் போட்ட மருந்தாகவே எங்களுக்குத் தோன்றியது".