கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

மத அடிப்படைவாதிகளால் இறை மறுப்பாளர் என்பதற்காக மார்ச் 16 அன்று இரவு கொடூரமாக கொலை செய்யப்பட்டார் கோவை திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் ஃபாரூக். ஃபாரூக் படத்திறப்பு - நினைவேந்தல் நிகழ்வு 16.4.2017 ஞாயிறு மாலை 5 மணியளவில் கோவை அண்ணாமலை அரங்கில் உணர்வுபூர்வமாக நடந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கழகத் தோழர் களும், பல்வேறு இயக்கங்களின் தோழர்களும் திரண் டிருந்தனர். 4.30 மணியளவில் அரங்கம் முழுதும் நிரம்பிய நிலையில் பலரும் நின்றுகொண்டே கருத்துகளைக் கேட்டனர். நிகழ்வுகள் தொடங்குவதற்கு முன் செய்தி யாளர்களுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேட்டி அளித்தார். பேட்டியில் -

“இந்த வழக்கை சி.பி.சி.அய்.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து, நாங்கள் போராடினோம். இப்போது அந்தக் கோரிக்கையை காவல் துறை ஏற்று காவல்துறை இயக்குனர் ‘சி.பி.சி.ஐ.டி.’ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். இதை வரவேற் கிறோம். அதே  நேரத்தில் இந்த வழக்கின் பின்னணி - இந்தக் கொலைக்கு எங்கே திட்டமிடப்பட்டது? யார் நிதி வழங்கினார்கள்? இதற்குப் பின்னாலிருந்து தூண்டி விட்ட அமைப்புகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப் பட்டு, அவர்களும் கைது செய்யப்பட்டு வழக்கு   பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். அப்போதுதான் சி.பி.சி.அய்.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டதன் நோக்கத்துக்கு அர்த்தமிருக்க முடியும்” என்று கூறினார்.

farok 600தொடர்ந்து கோவை மாவட்ட கழகத் தலைவர் நேருதாசு தொடக்க உரையாற்றி, நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார். புரட்சிகர இளைஞர் முன்னணி தோழர் கண்மணி, ‘இப்படிக்கு பாரூக்’ என்ற தலைப்பில் கவிதை வாசித்தார். தோழர் கொளத்தூர் மணி, ஃபாரூக் படத்தை திறந்து வைத்தார். எஸ்ஸன்ஸ் கிளப் (Essense Club) எனும் கேரள நாத்திகர் சங்கத்தின் தலைவர் சஜீவன் அந்திக்காடு நிகழ் வில் பங்கேற்று உரையாற்றியதோடு தங்களது அமைப்பு சார்பில் ஃபாரூக் குடும்ப நிதியாக 4 இலட்சத்து 4ஆயிரம் ரூபாயை பாரூக் தந்தை ஹமீது மற்றும் பாரூக் குழந்தை களிடம் வழங்கினார். தொடர்ந்து கீழ்க்கண்ட அமைப்பு களைச் சார்ந்த தோழர்கள் மத அடிப்படை வாதத்துக்கு எதி ராகவும், பாரூக் கொலையைக் கண்டித்தும் உரையாற்றினர்.

யு.கே. சிவஞானம் (தமிழ் மாநில தீண்டாமை ஒழிப்பு முன்னணி), வழக்குரைஞர் அலாவுதீன் (நாத்திக பண்பாட்டுக் கழகம்), பார்த்திபன் (ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்), பெரோஸ் பாபு (புரட்சிகர இளைஞர் கழகம்), மலரவன் (புரட்சிகர இளைஞர் முன்னணி), இளவேனில் (தமிழ்ப் புலிகள்), சே.மெ. மதிவதனி (மாநில மாணவரணி கூட்டுச் செயலாளர், திராவிடர் கழகம்), மு. கார்க்கி (தலைவர், சமத்துவக் கழகம்), மருத்துவர் மாணிக்கம் (விடுதலை சிறுத்தைகள் கட்சி), வழக்குரைஞர் ச.பால முருகன் (பி.யூ.சி.எல்.), யு. கலாநாதன் (இந்திய பகுத்தறி வாளர்கள் கூட்டமைப்பின் புரவலர்), எழுத்தாளர் பாமரன், சுசி. கலையரசன் (விசிக), ஆறுச்சாமி (ஆட்சிக் குழு உறுப்பினர் த.பெ.தி.க.), ப.பா.மோகன் (வழக்குரைஞர்), விடுதலை இராசேந்திரன் (பொதுச் செயலாளர், திவிக.) ஆகியோர் உரையாற்றினர். பாரூக் குடும்பத்துக்கு நிதி வழங்கி நினைவேந்தல் உரையை கொளத்தூர் மணி நிகழ்த்தினார்.

பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தனது உரையில், “தோழர் பாரூக் இறை மறுப்பாளர் - மத மறுப்பாளர் என்ற இலட்சியத்தில் உறுதியாக இருந்தார் என்பதற்காகவே கொலை செய்யப்பட்டிருக்கிறார். இலட்சியத்துக்காக உயிர்ப் பலியான வரலாற்றுப் பெருமை அவருக்குக் கிடைத்திருக்கிறது. பகத்சிங் தூக்கிலிடப்பட்ட போது பெரியார் இப்படி ஒரு பெருமைக்குரிய மரணம் தனக்கு கிடைக்கவில்லையே என்று எழுதினார். இஸ்லாமியர்கள், பார்ப்பனிய இந்துமத சமூக அமைப்புக்குள் பலி கடாவாக்கப்பட்ட மக்கள் என்ற பார்வையோடு அந்த மக்களின் உரிமைகளுக்கும் அவர்கள் மீது இந்துத்துவ பார்ப்பனியம் திணிக்கும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் நாம் செயல்பட்டு வருகிறோம். சமூகப் பார்வையில் இஸ்லாமியர்களோடு நமது நட்பு தொடருகிறது. அதை இஸ்லாமிய மதத்துக்கான ஆதரவாக கருதிட முடியாது. பெரியாரிஸ்டுகள் - மத மறுப்பாளர்கள். அதே நேரத்தில் இஸ்லாமிய மக்களிடம் நமக்குள்ள உறவு குலைந்துவிடக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எங்களுடைய அமைப்பின் தோழர்களும் அதே உணர்வு டனேயே செயல்படுகிறார்கள். ஆனால், இஸ்லாமியர் களுக்கும் திராவிடர் இயக்கத்துக்குமான உறவை சீர்குலைக்கும் நோக்கத்தோடு செயல்படும். ஒரு சில இஸ்லாமிய தலைவர்களின் செயல்பாடுகள், தமிழ்நாட்டில் நீண்டகாலமாக பேணப்பட்டு வரும் நல்லுறவை குலைத்து விடக்கூடாது. அத்தகைய தலைவர்களை இஸ்லாமிய சமூகத்திலிருந்து வேறுபடுத்தியே நாங்கள் பார்க்கிறோம். இந்த மதத் தீவிரவாதங்களுக்கு தமிழக இஸ்லாமிய மக்கள் இடம் தந்துவிடக் கூடாது” என்று குறிப்பிட்டார்.

பரப்புரை செயலாளர் பால் பிரபாகரன் பேசுகையில்: “சில இஸ்லாமிய தலைவர்கள் எங்களை வாதத்துக்கு அழைக்கிறார்கள். தலைவரோ பொதுச் செயலாளரோ வரவேண்டாம். நானே வாதத்துக்கு தயார்” என்றார்.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசுகையில், “பெரியார் அவரது காலத்திலேயே நபிகள் விழாவில் இசுலாமியர்களிடையே பேசும்போதுகூட இஸ்லாம் குறித்த தனது விமர்சனங்களை சுட்டிக்காட்டி அவர்களுக்கான ஆதரவை வழங்கிப் பேசியிருக்கிறார். இஸ்லாமிய மக்களின் உரிமைகளுக்காக நாங்கள் எப்போதும் களத்தில் நிற்போம். அதே நேரத்தில் அந்த சமூகத்திலிருந்து சில தலைவர்கள் தொடர்ந்து ஆணவமாகப் பேசி, பெரியார் இயக்கத்தை விவாதத்துக்கு அழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். பெரியார் இயக்கத்துக்கு சவால் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து இப்படி சில ஆணவ இஸ்லாமிய தலைவர்கள் சீண்டிக் கொண்டே இருப்பதால், இப்போது நாங்கள் அதை சந்திக்க முடிவுக்கு வந்து விட்டோம். நேருக்கு நேர் வேண்டாம்; முகநூல்கள் வழியாக உங்கள் வாதங்களை வைத்துக் கொள்ளலாம். நாங்கள் அந்த வாதங்களுக்கு பதில் தரத் தயாராக இருக்கிறோம்” என்று அ றிவித்தார்.

தொடர்ந்து பேசுகையில், “ஃபாரூக் குடும்பத்துக்கு நிதி திரட்ட நாங்கள் முடிவு செய்தபோது, முகநூல் வழியாக அறிவித்தோம். இதற்காக நிதி கேட்டு இயக்கம் ஏதும் நடத்தவில்லை; நிதி தாருங்கள் என்று எவரிடமும் கேட்கவும் இல்லை. முகநூல் அறிவிப்பைப் பார்த்து அதில் தரப்பட்ட எங்கள் கழகப் பொருளாளர் துரைசாமி அவர்களின் வங்கிக் கணக்கில் தோழர்கள் தாங்களாகவே முன் வந்து நிதி அனுப்பினார்கள். இந்த நிகழ்விலும் தாங்களாகவே முன் வந்து நிதி வழங்கினார்கள். இப்படி திரட்டிய தொகை 10 இலட்சத்தை எட்டியிருக்கிறது என்று பலத்த கரவொலிக்கிடையே அறிவித்தார். பாரூக்கின் தந்தை ஹமீது மற்றும் பாரூக் குழந்தைகளிடம் மேடையில் அதற்கான காசோலைகளை வழங்கினார்.