"யாதும் ஊரே, யாவரும் கேளிர்" எனும் உயரிய விழுமியத்தை உலக சமுதாயத்திற்கு வழங்கிய பெருமைக்குரியவர்கள் தமிழர்கள். ஆனால் தமிழர்களின் வரலாறு என்பது அப்படியொன்றும் ஒரே நேர்கோட்டில் அமைந்திடவில்லை. அது மேடும் பள்ளமுமாகத்தான் இருந்து வந்துள்ளது.
கடல் பயணம் என்பது தமிழர்களின் மரபணுவிலேயே உறைந்து கிடப்பதைக் கடந்தகால நமது வரலாறு உணர்த்துகிறது. எனவேதான் கிரேக்கம், எகிப்து, ரோம் என உலகளாவிய வணிக வலைக்குத் தமிழர்கள் சொந்தக்காரர்களாகத் திகழ்ந்தது ஒரு காலம். பிறகு உலகெங்கும் அடிமைகளாகவும், கூலிகளாகவும் பரவி வறுமையில் வாடி உழன்றது மற்றோர் காலம். இரண்டு நிலைகளிலும் படிப்பினைகள் உண்டு.
தற்காலத்தில் வாழ்வாதாரம் தேடிச் செல்வதைக் காட்டிலும், வளவாழ்வு நாடிச் செல்லும் போக்கு தமிழ் மக்களிடையே அதிகரித்துள்ளது. தனது கல்வியாலும், முயற்சியாலும் பொருளாதார ரீதியில் ஓரளவு முன்னேறிய நிலையில் தமிழ் வாழ்வு பரந்து கிடக்கிறது. அநேகமாகப் பட்டினிச்சாவு தமிழகத்தில் அரிது என்றே கூறலாம். ஆனால், அன்றும் இன்றும் மாறாமல் இருக்கும் கூறு என ஒன்று இருக்கிறது என்றால், அது சாதிதான்.
இந்தப் புதுமலர் இதழில் வெளியாகியுள்ள பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் 70 ஆம் ஆண்டுக் கட்டுரையில் அவர் என்ன குறிப்பிட்டுள்ளாரோ, அதையேதான் நவீன மொழியில் யமுனா ராஜேந்திரனது கட்டுரை 2024ஆம் ஆண்டிலும் குறிப்பிடுகிறது. எங்கு சென்றாலும சாதி எனும் பீடை தமிழனைப்பிடித்தாட்டுகிறது என்பதில் மட்டும் மாற்றத்தைக் காணோம்.
பொருளாதார அடித்தளம் மாறினாலும், மேல் கட்டுமானம் மாறவே- யில்லை.. ஏனெனில் சாதி என்பது அடித்தளமாகவும் இருக்கிறது, மேல் கட்டுமானமாகவும் இருக்கிறது. எனவே நிறைவான வாழ்வுக்குச் சமத்துவமும் தேவைப்படுகிறது. சமூகநீதியும் தேவைப்படுகிறது. ஒரு நாணயத்தின் இருபக்கங்களைப் போல, இவை ஒன்றுடன் ஒன்று பிணைந்தும், பிரிக்க முடியாமலும் இறுகிக் கிடக்கின்றன.
இதனால்தான் அரசியல் விடுதலைக்குப் போராடுவதைக் காட்டிலும், சமூக விடுதலைக்குப் போராடுவது மிகவும் சவாலானது என அண்ணல் அம்பேத்கர் அவர்களும், தந்தை பெரியார் அவர்களும் குறிப்பிட்டனர்.
அடுத்துப் புலம்பெயர் வாழ்வில் நேரிடும் மற்றுமொரு சோகம், நமது வேர்களை நமது சந்ததியினர் இழக்க நேரிடுவதுதான்.
நான் அண்மையில் இலண்டன் சென்ற பொழுது நான் கேட்டறிந்த ஒரு விந்தையான செய்தி இந்த சமயத்தில் எனது நினைவுக்கு வருகிறது. ஈழத்- திலிருந்து இலண்டனுக்குப் புலம் பெயர்ந்து கணிசமான பொருள் ஈட்டிச் செல்வமும் செல்வாக்குமாக வாழ்ந்துவரும் ஒரு குடும்பத் தலைவர் தமிழின் மீது மிகுந்த ஆர்வம் உடையவராக இருந்தார். அவரைச் சந்திக்கச் சென்ற அவரது நண்பரை வரவேற்பறையில் அமரச் சொல்லிவிட்டு, அவரது மகள் உள்ளே சென்று அவரது தந்தையாரிடம் நண்பரின் வருகை பற்றித் தெரி- வித்திருக்கிறார்.
"டாடி, உங்கள் மொழி பேசும் நண்பர் ஒருவர் வரவேற்பறையில் உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்" என்பதுதான் அவரது அறிவிப்பு. இதை அந்தத் தந்தையாரே குறிப்பிட்டு வருந்தியிருக்கிறார்.
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய தமிழிலிருந்து புலம்பெயர் நாடுகளிலுள்ள இரண்டாம் கட்டத் தலைமுறை எப்படி அந்நியப் பட்டுக் கிடக்கிறது என்பதைத்தான் இந்த நிகழ்வு சுட்டுகிறது. இந்த நிலை இலண்டனில் மட்டுமல்ல, பாரிசீலும் இப்படித்தான். பிராங்பர்ட், நியூயார்க், ஜெனிவா எனப் பெரும்பாலான புலம்பெயர் பகுதிகளிலும் இதுதான் மெய் நடப்பு.
புலம்பெயர் நாடுகளில் பிறந்து வளரும் தமிழ்ப் பிள்ளைகளுக்குத் தாய்த்தமிழின் மீது பெரிய ஈடுபாடு இருப்பதில்லை. அவர்கள் தங்களைப் போன்ற பிற தமிழ்ப்பிள்ளைகளிடம் கூட அந்தந்த நாட்டின் அதிகார பூர்வமான மொழியில்தான் உரையாடுகின்றனர். இங்கிலாந்து என்றால், ஆங்கிலம். பிரான்சு என்றால் பிரெஞ்சு . ஜெர்மனி என்றால் ஜெர்மன் . இன்றைய புதிய தலைமுறையினர் தத்தம் தாய்மொழியில் பேசுவதில்லை என்பது மட்டுமல்ல, தாய்மொழியையே அறியாமலும் அல்லது தமது தாய்மொழி மீது எவ்வித மரியாதையும் இல்லாமலிருப்பதுதான் பெரும் சோகம். இப்படித்தான் தென் ஆப்பிரிக்காவிலோ மொரிஷியசிலோ, மியன்மாரிலோ உள்ள தமிழர்களுக்குத் தமிழே தெரியாமல் போய்விட்டது.
தமிழ் என்று மட்டுமல்ல, பிறமொழியாளர்களது நிலையும் அதுதான். இதிலிருந்து நானறிந்த வரை சற்றே விலகி இருப்பவர்கள் சீனர்கள். அவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும், எவ்வளவு உயரிய இடத்தில் இருந்தாலும் தங்களது மொழியையும், பண்பாட்டையும் அவர்கள் மறப்பதே இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. அப்படிப்பட்ட நிலை இந்தியர்களில் மலையாள மற்றும் வங்காள மொழிச் சகோதார்களிடம் இருப்பதும் இங்கு கருதத் தக்கது.
பொதுவாக நாவில் புழங்காத எந்த மொழியும் மனிதருக்கு அந்நியமாகி விடுவது இயல்பு. ஆனால் இதை அப்படியே விட்டுவிட முடியாது என்பதில் புலம்பெயர்ந்த தமிழர்களின் முதல் தலைமுறையினர் கருத்தாக உள்ளனர். ஏனெனில் மொழி என்பது ஓர் இனத்தின் அடையாளம் என்பதை அவர்கள் நன்கு உணர்ந்திருக்கின்றனர்.
புலம்பெயர் தேசங்களில் வாழும் அந்தந்த நாட்டு மக்களின் இன்ப துன்பங்களில் பங்கேற்பது மனிதநேயம் மிக்க செயல்தான். அது மிகவும் தவிர்க்க முடியாததும் கூட! ஆனால் ஒருவர் தனது தாய்மொழியை ஒருக்காலும் மறக்கலாகாது என்பதே இந்த இதழில் வந்துள்ள பெரும்பாலான கட்டுரைகளின் அடிநாதமாக உள்ளது.
புறத்தளவில் எவ்வளவுதான் மிக உயரிய இடங்களுக்கு ஒருவர் சென்றிருந்தாலும், தாய் மொழியை மறத்தலாகாது எனும் பேருண்மையை ஐ. நா. வும் வலியுறுத்துகிறது. அதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21- ஆம் நாளை "உலகத் தாய் மொழி நாள் " என அறிவித்துத் தவறாமல் அதை ஒவ்வொரு நாடும் கொண்டாட வேண்டும் எனப் பரிந்துரைக்கிறது.
அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்சு, நார்வே, ஸ்வீடன், அயர்லாந்து, பின்லாந்து, ஆகிய நாடுகளிலுள்ள எழுத்தாளர்கள் அயலகத் தமிழ் வாழ்வை இந்த இதழிலுள்ள கட்டுரைகளில் காத்திரமாகப் பதிவிட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் வணங்கி புதுமலர் தனது நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறது.
பல்வேறு நாடுகளின் நடைமுறை தவிரவும், பொதுவான அகதி வாழ்வு குறித்தான கட்டுரைகளும் இதில் இடம் பெற்றுள்ளன. தமிழில் அரிதாகவே மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சியாகவே இது இருக்கிறது என்பதைப் பலரும் அறிவர்.
இத்தகைய அறிதலும் புரிதலும் இனவெறி மேலோங்கி வரும் இன்றைய காலகட்டத்தில் மிகவும் தேவையான ஒன்றாக உள்ளது. தனது ஆதி அடையாளத்தை இழக்காமல், ஆனால் அதே சமயத்தில் தான் வாழுமிடத்திலுள்ள மக்களோடு கரைய வேண்டிய தேவை இன்றைய மனிதர்களுக்கு இருக்கிறது. இந்த அணுகுமுறையில் சமமின்மை ஏற்படும் பொழுது, அது பாரதூரமான விளைவுகளை உண்டாக்கி விடுகிறது.
பன்மைத்துவத்தைப் பேணும் அதே சமயம், தத்தம் சுயத்தையும் இழக்காமல் பாதுகாக்க வேண்டும் என்பதே நிகழ்காலம் நமக்கு உணர்த்தும் பாடமாகும்.
- கண. குறிஞ்சி