“இப்போது எங்கே இருக்கிறீர்கள்?”என்ற கேள்வியுடனேயே என்னோடான உரையாடலை நண்பர்களும் உறவினர்களும் தொடங்குகிறார்கள். ஓரிடத்தில் நிலைத்திருக்க முடியாது அலைந்து திரியும் எனது வாழ்வு பற்றி அறிந்தவர்களது கேள்வி அது.
இந்த உலகத்தில் நடக்கும் எல்லாம் அரசியல்மயப்பட்டவையே. தனிமனித நடத்தைகளின் பின்னாலுள்ள உளவியலை ஆராய்ந்து பார்க்கும்போது, அதன் பின்னாலும், ஒவ்வொருவரும் வாழ்ந்த, வாழும் சமூகச் சூழலின் அரசியல் இயங்குவதை அவதானிக்கமுடியும். மேற்கூறப்பட்ட எனது அலைந்து திரியும் மனநிலைக்கு, ‘இதுதான் காரணம்’ எனத் தீர்க்கமான ஒன்றை என்னால் உறுதியாகச் சுட்டமுடியவில்லை. ஆனாலும், நான் பிறந்த இலங்கைத்தீவானது பூகோள வரைபடத்தில் வேறொரு அமைவிடத்தில் இருந்திருந்தால், சிறுபான்மையினத்தவராகிய எங்கள் மீது பேரினவாதத்தின் கூரிய நகங்கள் பதிக்கப்படாதிருந்திருந்தால், பிராந்திய வல்லாதிக்கமாகிய இந்தியாவும் - பிரிட்டன், அமெரிக்கா இன்னபிற மேற்கத்திய நாடுகளும் எங்களைப் பகடைக்காய்கள் ஆக்காமலிருந்திருந்தால் நானும் ஓரிடத்தில் நிலைத்து வாழ்ந்திருப்பேன் என்று அடிக்கடி நினைத்துக் கொள்வேன்.
பயணங்களின் மீதான விருப்பத்திற்கும் அப்பால் ஏதோவொன்று என்னை இயக்குகிறது. அண்மைக்காலமாக, ஓய்வை விழையும் உடலுக்கும், ஓயாது உழலும் மனதிற்கும் இடையில் பலத்த இழுபறி. ஆயினும், அலைந்துழல்வதானது சில நல்விளைவுகளையும் தராமலில்லை. அவற்றிலொன்று, மூன்று நிலங்களிலும் இருக்கவும் அங்கு நிகழ்பவற்றைக் குறிப்பிட்ட அளவிலேனும் காணவும் வாய்த்தது. ‘வாழ்தல்’ என்ற வார்த்தைக்குப் பதிலாக ‘இருத்தல்’ என்ற வார்த்தையை, பிரக்ஞையோடே பயன்படுத்தியுள்ளேன். 2009ஆம் ஆண்டு, முள்ளிவாய்க்காலில், பேரினவாதிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலையின் பின், வாழ்தலானது பிழைத்திருத்தலாகத் திரிந்துபோனது. என்னுடைய வாழ்வை மட்டுமல்லாது ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களது வாழ்வையும் முள்ளிவாய்க்காலுக்கு முன், முள்ளிவாய்க்காலுக்குப் பின் என வகுக்கலாம். வரலாற்றில் அஃதொரு திசைமாறு காலகட்டம். என்னைப் பொறுத்தவரை, சமூக ஊடாட்டம் என்பது முற்றிலும் குறைந்து போயிற்று. தொடர்பாடல்களை வலிந்து அறுத்துக்கொண்டு தனிமையுடனான வாழ்வு தொடர்கிறது. அவ்வப்போது வெளியாகும் எனது படைப்புகளாலும் சமூக வலைத்தளங்களில் இடும் பதிவுகளாலும் மட்டுமே எனது இருப்பு அறியப்படுகிறது.
1992ஆம் ஆண்டு கனடாவுக்குப் புலம்பெயர்ந்து, 2002ஆம் ஆண்டு கனடாவை விட்டு நீங்கி வரும்வரையிலான பத்தாண்டு காலம் என்னளவில் உயிர்ப்புடைய காலமாக விளங்கிற்று. பத்திரிகைப் பணி, ‘ரோஜா’சஞ்சிகையில் பங்களிப்பு, கனடா எழுத்தாளர் சங்கம் மற்றும் கலை பண்பாட்டுக் கழகத்தின் செயலாளர், வானொலி- பத்திரிகைகளுக்குத் தொடர்ச்சியாக படைப்புகளை வழங்கல், என்னால் எழுதப்பட்ட நாடக ஒத்திகைகளில் கலந்துகொள்ளல், புத்தக வெளியீடுகள், கவியரங்கங்கள், ஏனையவர்களுடன் இணைந்து கலைநிகழ்ச்சிகளை ஒழுங்கமைத்தல், நிகழ்ச்சிகளில் பங்கேற்றல் என மிகச் சுறுசுறுப்பாக இயங்கிய காலமது. இப்போதோ, எல்லாவற்றிலிருந்தும் அந்நியமான சூழல். பொதுவெளியில் புத்தூக்கத்துடன் நான் இயங்கிக் கொண்டிருந்தபோது தொடர்பிலிருந்த யாரையாவது ரொறன்ரோவில் காண நேரும்போது, “நீங்கள். ?” என புருவத்தைச் சுருக்கியபின், “கலைவாணி.. !”என விளித்து கைகளைப் பற்றிக் கொள்கிறார்கள். பழையதும் இனியதுமான அந்த நாட்களுள் சில கணங்கள் சென்று மீள்கிறேன்.
2009ஆம் ஆண்டுக்கு முன்னர், ஈழம் என்ற சொல் எங்கள் எல்லோரையும் பிணைத்திருந்தது. இலட்சியவாதம் எங்களை இயக்கியது. இனவாதிகளிடம் தொடர்ந்து அடிவாங்கியதால் உண்டான தாழ்வுணர்ச்சி மறைந்து தன்மதிப்புடன் தலைநிமிர்ந்திருந்தோம். வீரயுகமொன்றில் வாழ்வதான பெருமிதம் எங்களது தலைகளை நிமிர்த்தியிருந்தது. 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு எல்லாம் மாறிற்று. எனக்குத் தெரிந்து ஈழ ஆதரவாளர்களாக இருந்தவர்களுள் பலர் முள்ளிவாய்க்காலின் பிறகு மனம் நொறுங்கி, தனிப்பட்ட வாழ்வோடு தம்மைச் சுருக்கிக்கொண்டுவிட்டார்கள். விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியுடன் விடுதலைக்கான சாத்தியங்கள் அற்றுப் போய்விட்டதாகக் கருதியதால் உண்டான விலகல் அது. இப்போது, கட்சி அரசியல், தேர்தல்கள், பதின்மூன்றாவது திருத்தச் சட்டம், தீர்வு நோக்கிய பேச்சுவார்த்தைகள் இவற்றின் மீதெல்லாம் அசிரத்தையுடனான விலகலைப் பெரும்பாலானவர்கள் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. ஏனெனில், எதையும் வழங்கத் தயாரில்லாத அரசுகளின் முன் ஏந்திய கைகளுடனும் ஏங்கிய கண்களுடனும் காத்திருப்பது வியர்த்தம் என்ற பாடத்தை ஈழத்தமிழர்களுக்கு வரலாறு கற்பித்திருக்கிறது.
2009ஆம் ஆண்டு, மே மாதத்திற்கு முன்புவரை அரங்கம் நிறைய மக்கள் திரண்ட தேசியம்சார் நிகழ்ச்சிகளில் இப்போது குறைந்த எண்ணிக்கையிலானவர்களே கலந்துகொள்வதாக நண்பர்கள் சொல்கிறார்கள். அப்படிக் கலந்துகொள்பவர்களும் அதே பழைய முகங்கள்தாம். அவர்கள்தான் தேசியம்சார் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கிறார்கள்; அவர்கள்தான் இலங்கை அரசுக்கெதிரான போராட்டங்களில் கலந்துகொள்கிறார்கள். பல்வேறு குழுக்களாகச் சிதறிவிட்ட ஈழ ஆதரவாளர்களை ஒன்றிணைக்கும் ஒரேயொரு நிகழ்வாக மாவீரர் நாள் நிகழ்வு மட்டுமே எஞ்சியிருக்கிறது. ஆனால், ஒரு விடயம் நம்பிக்கையளிக்கிறது. இனப்படுகொலை அரசுக்கெதிரான நிகழ்ச்சிகளில் தென்படும் இளைய முகங்கள் உற்சாகம் அளிக்கின்றன. போராட்டத்தைப் பற்றிய அறிதலை விடவும் இனப்படுகொலையைப் பற்றிய அறிதலை அவர்கள் கொண்டிருக்கிறார்கள். மொழியும் நிலமும் அவர்களை இணைப்பதைவிடவும், குரூரமாகக் கொல்லப்பட்ட இனத்தின் சந்ததிகள் என்ற உணர்வே அவர்களை இணைக்கிறது. முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டது என்பதற்கான சாட்சியங்களைத் திரட்டி ஐ. நா. உள்ளிட்ட அமைப்புகளின் முன் வைத்ததில் புலம்பெயர்ந்து வாழும் இளையோரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. வல்லரசுகளின் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டே இலங்கைத்தீவு போன்ற வளர்ந்துவரும் நாடுகளின் தலைவிதிகள் நிர்ணயிக்கப்படுகின்றன என்ற புரிதல் இருந்தாலும், பேரினவாத இலங்கை அரசுக்கு (ஆட்சிகள் மாறினாலும், மாறாதது இனவாதம்) எதிரான நிலைப்பாட்டினை எடுக்க வேண்டிய ஒரு சூழல் மேற்கத்தேய நாடுகளுக்கு அமையுமேயானால், அப்போது அந்தச் சாட்சியங்கள் பயன்படலாம் என்பது அவர்களது எதிர்பார்ப்பாக உள்ளது.
கனடாவின், குறிப்பாக ஒன்ராறியோ மாநில அரசியலில் கணிசமானளவு செல்வாக்குச் செலுத்தக்கூடிய இனமாக தமிழ் மக்கள் மாறிவிட்டார்கள் என்றே கூற வேண்டும். ஈழத்தமிழர்களால் ஒழுங்கமைக்கப்படும் கூட்டங்களில் கலந்துகொண்டு, இனப்படுகொலையுண்டவர்களுக்கான நீதியைப் பெற்றுத்தர தாம் உறுதுணையாக இருப்போமென வேற்றினத்தைச் சார்ந்தவர்கள் (நிறத்தால் வெள்ளையர்கள்)உறுதியளிப்பதற்கு, மைய நீரோட்ட அரசியலில் கலந்துவிட்ட தமிழர்களது எண்ணிக்கையும் பங்களிப்பும் ஒரு காரணமாகும். புலம்பெயர் தேசங்களில் பொருளாதாரரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் உறுதிமிக்கதொரு சமூகமாக நாங்கள் வளர்ந்தபடிதானுள்ளோம். புலம்பெயர்ந்த புதிதில்- உணவகங்கள், தொழிற்சாலைகள் இன்னபிற கடும் உடலுழைப்பைக் கோரும் வேலைகளைச் செய்த தமிழர்கள், வேலைவாய்ப்பை வழங்குபவர்களாகவும் முதலீட்டாளர்களாகவும் வளர்ந்திருக்கிறார்கள். நானறிய, தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் விரல்விட்டு எண்ணக்கூடியளவு எண்ணிக்கையுடனிருந்த தமிழ்க்கடைகள் இன்று பன்னூற்றுக்கணக்காகப் பெருகிவிட்டன. எங்களுடைய தலைமுறையினரில் பலர் நான்கு மணித்தியாலங்கள் மட்டுமே உறங்கி, மூன்று வேலைகளுக்குச் சென்றே இன்றிருக்கும் நிலையை வந்தடைந்தார்கள். எங்களுக்கு அடுத்த தலைமுறை- யினருக்கு மொழிரீதியான தடைகள், புதிய நிலங்களில் அந்நியமாதலால் உண்டாகும் சிக்கல்கள் ஒப்பீட்டளவில் குறைவு. இன்று, நிர்வாகத் தரத்திலான பதவிகளில் எங்கள் இளைஞர்களைக் (பெண்களும் ஆண்களும்) காணும்பொழுதில் பெருமிதமும் நிறைவும் கொள்கிறோம். ஒப்பீட்டளவில் இனத்துவேசம் குறைந்த நாடாக கனடா விளங்குவதற்குக் காரணம், அங்கு பல்லின மக்கள் வாழ்வதேயாகும். ரொறன்ரோவில் வாழும் ஐம்பது சதவீதமான மக்கள் வெளிநாடுகளில் பிறந்தவர்கள் என்று புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. பார்க்கப்போனால், கனடாவின் பூர்வீக குடிகளைத் தவிர மற்றெல்லோரும் வந்தேறு குடியேறிகளே. அவ்விதமிருக்க யார் யாரிடத்தில் துவேசம் பாராட்டுவது?
எண்பத்து மூன்றாம் ஆண்டு, ‘கறுப்பு ஜூலை’ இனக் கலவரத்துடன் ஈழத்தமிழர்களது புலப்பெயர்வு கணிசமானளவு ஆரம்பித்து விட்டதெனினும், தொண்ணூறுகளிலேயே அதிக எண்ணிக்கை- யிலானவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லவாரம்பித்தார்கள்.
அவ்வாறு புலம் பெயர்ந்தவர்கள் தம்மோடு சாதி, சமயம், சம்பிரதாயங்கள், சடங்குகளைக் கொண்டு சென்றிருந்தார்கள். புலம்பெயர்ந்த தேசங்களில் அவற்றைச் செயலாக்கவும் முயன்று அதில் ஓரளவு வெற்றியும் பெற்றார்கள். அத்தகையோரின் காலம் இப்போது காலாவதியாகிவிட்டது. அடுத்த தலைமுறை- யினரின் முடிவுகளில் அவர்கள் செல்வாக்குச் செலுத்த முடியாதவர்களாகிவிட்டார்கள். ஒன்று, அவர்கள் முதுமையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். இரண்டு, அவர்கள் பெற்றோர்கள் என்ற கோதாவில் பிள்ளைகள் மீது அதிகாரத்தைச் செலுத்த முடியாதளவு பிள்ளைகளை புலம்பெயர் வெளி உள்வாங்கிவிட்டது. புலம்பெயர்தலின் ஆரம்ப நாட்களில் வீடு- வெளி இரண்டுக்குமிடையிலான கலாச்சார இடைவெளிகளால் குழப்பமடைந்திருந்த இளையவர்களுள் பெரும்பாலானவர்கள் வெளியைத் தெரிவு செய்துவிட்டதை இன்று கண்கூடாகக் காண்கிறோம். பெற்றோரின் உறவினர்களோ நண்பர்களோ வீட்டுக்கு வரும்போது, சம்பிரதாயமாக ஒரு வணக்கம் தெரிவிப்பதுடன் அவர்களுக்கு முந்தைய தலைமுறையுடனான தொடர்பாடல்கள் முடிந்துபோகின்றன. குடும்ப ஒன்றுகூடல்களின்போது எனது உறவினர்களது பிள்ளைகள் தமக்குள் தமிழில் உரையாடுவதில்லை; தமிழ்ப் புத்தகங்களை வாசிப்பதில்லை; திரைப்படங்களினுடாக மட்டுமே தமிழ்மொழி அவர்களைச் சென்றடைகிறது.
தமது இனத்திற்குள்தான் திருமணம் செய்யவேண்டுமென்ற நிர்ப்பந்தமும் அவர்களுக்கு இல்லை. எனக்குத் தெரிந்த சிலருடைய பிள்ளைகள் சீன, இத்தாலிய, கரீபியன், கயானா நாடுகளைச் சேர்ந்தவர்களை மணம் முடித்திருக்கிறார்கள். கண் விழித்தெழுந்தது முதல் கண்ணுறங்கப் போகும்வரை ‘தமிழ்.. . தமிழ்.. . ’எனப் பாராயணம் பண்ணிக்கொண்டிருந்த ஒரு பிரமுகரின் மகள் வெள்ளைக்காரர் ஒருவரைத் திருமணம் செய்திருக்கிறாள். அதில் தவறேதுமில்லை. காதலிப்பதற்கும் திருமணம் செய்துகொள்வதற்கும் இன, மொழி, நில வேறுபாடுகள் தடையாக இருக்கக்கூடாது, முடியாது. ஆனால், அந்தப் பிரமுகர் ஆடிய ‘தமிழ்க்கூத்து’க்கும் “என்னுடைய மகளுக்குத் தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது. மற்றவர்கள் தமிழில் கதைப்பது அவளுக்கு விளங்கும்”என்ற போலிப் பெருமிதத்திற்கும் இடையிலான முரண்பாடுதான் உறுத்துகிறது.
‘அடக்க ஒடுக்கமான’, ‘குடும்பப் பாங்கான’மருமகளை எதிர்பார்க்கும் சில பெற்றோர் தமது மகனுக்கான மணப்பெண்ணை இலங்கையிலிருந்து ‘இறக்குமதி’ செய்வது இப்போதும் நடக்கவே செய்கிறது. பெற்றோரால் முன்வைக்கப்படும், ‘குடும்பத்திற்கு ஏற்ற பெண்’ என்ற கற்பிதத்தை ஏற்றுக்கொள்ளும் அந்த இளைஞர்கள், சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்திருப்பார்கள். அநேகமாக, இருபதுகளுக்குப் பிறகான வயதில் புலம்பெயர்ந்தவர்களாக, தமிழ் விழுமியங்கள் என்று கற்பிக்கப்பட்டவற்றில் ஊறிப்போனவர்களாக இருப்பார்கள். வேற்றினத்தைச் சேர்ந்த இணைகளைத் தேர்பவர்கள் கனடாவிலேயே பிறந்து படித்து வளர்ந்தவர்களாக அல்லது தம் பதின்பருவத்தில் புலம்பெயர்ந்தவர்களாக இருப்பதற்கே சாத்தியம் அதிகம். அவர்கள்தான் “சாதி என்றால் என்ன?”என்று எள்ளலோடு வினவுகிறவர்கள். “ஒரு பெண் பூப்பெய்துவது இயல்பான விசயம். அதை ஏன் ஊரை அழைத்துக் கொண்டாடவேண்டும்?”என்று கேள்வி எழுப்புகிறவர்களும் அவர்களே. உலகமயமாக்கலானது அவர்களை இனம், மொழி ஆகிய ஒற்றை அடையாளங்களிலிருந்து விலகச்செய்கிறது. இன்னுஞ் சொல்லப்போனால், சர்வதேசிய மனிதர்களாக உணரச்செய்கிறது. அவர்கள் ஒரு குறிப்பிட்ட நிலத்தோடோ மொழியோடோ மதத்தோடோ கட்டுண்டிருப்பவர்கள் அல்லர். ஆனால், யூதர்கள் எத்தனை தலைமுறைகள் கடந்தாலும், எங்கு வாழ்ந்தாலும் ‘ஹோலோகோஸ்ட்’ஐ மறப்பதில்லையோ, அவ்விதமே தமிழர்களும் குறிப்பாக தமிழ் இளைஞர்களும் இனப்படுகொலைக்குள்ளான சமூகமொன்றின் சந்ததிகள் என்ற ஞாபகத்துடன் பிணைப்பினைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இலங்கை அரசிற்கெதிரான போராட்டங்களில் காணப்படும் இளைஞர்களது முகங்களில் அந்தக் கோபம் இருக்கிறது. அவர்களுக்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்த எனக்கு, அவர்களது அந்தப் பிரசன்னமானது ஆசுவாசத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது.
முன்பெல்லாம், புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் இருவர் நேரில் சந்திக்கும்போதோ, அலைபேசியில் உரையாடும்போதோ ஒரு கேள்வி தவறாமல் இடம்பெறும்: “ஊரிலை நிலைமை என்ன மாதிரியாம்?” அந்தக் கேள்வி போர் குறித்தது. போராளிகளால் கைப்பற்றப்பட்டதும் இழக்கப்பட்டதுமான எல்லைகள், தாக்குதலில் பலியானோரின் எண்ணிக்கை தொடர்பானது. இப்போதோ “ஊருக்குப் போகேல்லையா?”என்ற கேள்வியுடன் உரையாடல்கள் தொடங்குகின்றன. வெளிப்படையான போர் முடிவுக்கு வந்தபிறகு, ஊருக்குச் செல்வதென்பது எங்களுடைய தலைமுறையைச் சேர்ந்தவர்களுடைய குறிக்கோள்களில் ஒன்றாகிவிட்டது. நாடு குறித்த கனவை இழந்தவர்களுக்கு இப்போது எஞ்சியிருக்கும் தெரிவு நாட்டுக்குச் சென்று சுற்றிவிட்டு வருவது ஒன்றே. தமது இருபதுகளுக்குப் பிறகு புலம்பெயர்ந்து இன்று ஐம்பது வயதைக் கடந்து விட்டவர்கள் மீண்டும் மீண்டும் தாய்மண்ணுக்குத் திரும்பி வருகிறார்கள். ஒருவருடைய ஆடை அணிகள், நடவடிக்கைகளை வைத்து அவர் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிறார் என்பதை உள்ளுர்வாசிகள் அனுமானித்து விடுகிறார்கள். வியாபாரிகள், தமது பொருட்களுக்கு எத்தனை மடங்கு விலையை ஏற்றிச் சொல்வதென கணக்கிட ஆரம்பித்து விடுகிறார்கள்.
தாய்நாட்டுக்கு சுற்றுலாப் பயணிகளாக வரும் மேற்குறித்தோர்- தாம் வாழ்ந்த வீடுகளை, விளையாடிய முற்றங்களை, வழிபட்ட கோவில்களை, நடந்தும் சைக்கிளிலும் திரிந்த மண் ஒழுங்கைகளை அள்ளி மனதுள் பொதிந்துகொள்கிறார்கள். மண்ணில் இல்லாமற் போன காலங்களில் இழந்தவற்றையெல்லாம் இட்டு நிரவுவது போலிருக்கின்றன அவர்தம் செயற்பாடுகள். தமது பால்யத்தில் விசாலமாகத் தோன்றிய வீதிகள் ஏனிப்படிக் குறுகிப் போய்விட்டன என்று வியக்கிறார்கள். இருளடைந்து கிடக்கும் கோயிற் பிரகாரங்களில் தமது இளமைக்காலத்தினுள் தனியாக அமர்ந்திருக்கிறார்கள். இழந்துபோன காதலொன்றும் இருக்குமேயானால் அந்த ஊர் திரும்புதலுக்கொரு காவியத்தன்மை கூடிவிடுகிறது. இன்னமும் புலம்பெயராமல் ஊரிலேயே தங்கி- யிருக்க நேர்ந்து விட்ட தம் வயதொத்தவர்களைச் சந்தித்து பழைய நினைவுகளை அசைபோடுகிறார்கள். “என்ன இருந்தாலும் ஊரைப் போல வராது”என்ற வாசகத்தை மந்திரம்போல அடிக்கடி சொல்கிறார்கள். ஊரிலேயே தங்கிவிட்டவர்கள் “இஞ்சை என்னதானிருக்கு? காலன் எப்ப வருவான் எண்டு காத்திருக்கிறம்”என்று சலித்துக் கொள்வதைக் கேட்கமுடிகிறது. அப்படிச் சலித்துக் கொள்வோருள் பெரும்பாலானவர்களுடைய பிள்ளைகள் வெளிநாடுகளில் வேரூன்றிவிட்டவர்கள். ஊர்க்கோயில் திருவிழாக்களின்போதோ, தமது பெற்றோரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவோ மட்டும் திரும்பி வருகிறவர்கள். சிலரைப் பொறுத்தளவில் அந்தக் கொடுப்பினையும் இல்லையென்பதே யதார்த்தம்.
சிதைந்து போனதும் பூட்டப்பட்டதுமான வீடுகள் போர் நிகழ்ந்தது என்பதற்கான சாட்சியங்களாக இன்றும் எஞ்சியுள்ளன. அண்மையில், தமிழகத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த கவிஞர் ஒருவர், “இங்கு ஓர் அழுத்தமான மௌனம் நிலவுகிறது. அடியாழத்தில் உறைந்திருக்கும் துயர நினைவுகளுடன் மக்கள் உலவுவதைக் காண்கிறேன்” என்றார். இறுதிப்போர் என இன்று விளிக்கப்படும் பேரழிவின் பின், விடுதலைப்புலிகளுக்குச் சொந்தமாகவிருந்த கட்டிடங்களையும், காணிகளையும் இலங்கை இராணுவம் கையகப்படுத்தி விட்டது. அண்மையில் கிளிநொச்சி வழியாக யாழ்ப்பாணம் சென்றபோது, “இந்த நீதிமன்ற வளாகத்திலிருந்தபடிதான் விடுதலைப் புலிகள் நீதி பரிபாலனம் செய்தார்கள்” என்று நான் பயணித்த வாகனத்தின் சாரதி கூறினார். நானறிந்திராத செய்தியொன்றை என்னிடம் தெரிவிக்கும் ஆர்வம் அவருடைய குரலிலிருந்தது. அந்த வழியாக ஆண்டுக்கு இரண்டு தடவையாவது செல்லும் எனக்கு அது புதிய செய்தியன்று. ஆனால், அந்தக் கட்டடத்தைப் பார்க்கும் ஒவ்வொரு தடவையும் மனதில் எழும் வலி புதிதானது. போலவே, விடுதலைப் புலிகளால் பராமரிக்கப்பட்ட தேக்குமரக் காட்டினுள் இராணுவம் முகாம் அமைத்துக் குடியிருக்கிறது. கிளிநொச்சியில் இராணுவத்தால் வீழ்த்தப்பட்ட பாரிய தண்ணீர் தாங்கி அகற்றப்பட்டுவிட்டது. போர் நடந்ததென்பதற்கான அடையாளங்கள் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன. அங்ஙனம் ஞாபகங்களை அழிப்பதும் மறைப்பதும் சாத்தியமில்லை.
இன்று, புதுப்பொலிவுடன் எழுந்து நிற்கும் பல வீடுகளை யாழ்ப்பாணமெங்கிலும் காணவியலும். போருக்கு முன்னாலும் கூட யாழ்ப்பாணம் விசாலமான வீடுகளுக்கும் வளவுகளுக்கும் பெயர்பெற்றதே. எனினும், தலைமுறை தலைமுறைகளாக அங்கு வாழ்ந்தவர்களால் கட்டப்பட்ட அந்த வீடுகளும், இன்று ஆண்டிற்கொரு தடவை மட்டுமே கிடைக்கும் விடுமுறையின்போது தம் ஒட்டுமொத்தக் குடும்பத்தினரோடு வந்து தங்குவதற்கெனக் கட்டப்படும் வீடுகளும் ஒன்றல்ல. எமது மரணத்திற்குப் பிறகும் நாம் ஞாபகங்கொள்ளப்பட வேண்டுமென்பதற்காக ஏதாவதொன்றை பூமியில் விட்டுச் செல்ல வேண்டும் என விரும்புவதனோடு இதனைத் தொடர்புபடுத்திப் பார்த்தேன். வெளிநாடுகளுக்குச் சென்று அங்கு காலூன்றிவிட்டபோதிலும், பிறந்தமண்ணோடான உறவு என்பதை அறுத்துக்கொள்ள விரும்பாது, அதைத் தமது சந்ததிகளுக்கு அறிமுகப்படுத்த விழையும் அந்த மனங்களையும் இழப்பை ஏற்கமுடியாதபோது, அதை ஏதொன்றைக் கொண்டேனும் நிரவமுயலும் தவிப்பையும் புரிந்துகொள்ளமுடிந்தது. ஆனால், “கொடிய போர் நடந்த காலத்தில் நாங்கள்தான் இந்த நாட்டைவிட்டு ஓடாதிருந்தோம். உடமைகளையும் உயிர்களையும் பறிகொடுத்தோம். இவர்கள் எல்லாம் முடிந்தபிறகு வந்து படங்காட்டுகிறார்கள்”என்று என் காதுபடக் கூறியவர்கள் உண்டு.
இலங்கை போன்றதொரு நாட்டில் வாழும் அநேகமானவர்களுடைய வெளிநாட்டுக் கனவுக்குத் தூபமிடுபவையாக, புலம்பெயர்ந்த தேசங்களிலிருந்து திரும்பி வருபவர்களிடம் காணப்படும் பணப்புழக்கமும், அவர்களால் கட்டப்படும் மிகப் பெரிய வீடுகளும், வாங்கப்படும் நிலம் இன்னபிற சொத்துக்களும் அமைகின்றன என்பதைக் கண்கூடாகக் காண்கிறேன். கேட்கிறேன். அள்ளி வீசிச் செலவழிக்கப்படும் அந்தப் பணமானது, அந்தக் குறிப்பிட்ட பயணத்தின்போது செலவழிப்பதற்காகக் கடன் வாங்கப்பட்டிருக்கலாம்; கடனட்டைகள் வழித்துத் துடைக்கப்பட்டிருக்கலாம் ஆகிய உண்மைகள் வெளிப்பார்வைக்குத் தென்படாதவை. அதிலும், 2022ஆம் ஆண்டின் பொருளாதார வீழ்ச்சிக்குப் பிற்பாடு, இலங்கைத்தீவை வாய்ப்புகள் துடைத்தழிக்கப்பட்டுவிட்ட நாடாகவே மக்கள் கருதுகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும், இயற்கை எழில்மிகு இத்தீவிலிருந்து இலட்சக்கணக்கானோர் வெளியேறிச் செல்வதை அவதானிக்கமுடிகிறது. 2024ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து ஜூலை வரையிலான காலப்பகுதியில் மட்டும் 175,163 பேர் தொழில் நிமித்தமாக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. அதிலும், கனடாவுக்கு ‘விசிற்றர்ஸ் விசா’வில் செல்வதொன்றே தமது வாழ்நாளின் குறிக்கோள் என எண்ணுபவர்களையும் சந்திக்க முடிந்தது. அங்கு சென்றுவிட்டால் எல்லாம் சரியாகிவிடும், வாழ்வு ஒளிமிக்கதாகி விடும் என நம்பிக்கையோடு சொல்கிறார்கள். ஊரில் வாழும் எவராவது வெளிநாட்டுக்குச் செல்வது பற்றி என்னிடம் கதைத்தால், “ஊரில் வாழ்வதுதான் வாழ்க்கை. வெளிநாட்டு வாழ்க்கை உப்புச்சப்பற்றது”என்று முன்புபோல துணிந்து சொல்ல நாவெழுவதில்லை. நாட்டு நிலைமை அப்படி! உயர்ந்து கொண்டேயிருக்கும் விலைவாசி அவர்களை நாட்டைவிட்டு விரட்டுகிறது. வெளிநாட்டில் ஓய்வொழிச்சலற்று வேலைக்குப் பின்னால் ஓடும் பாடுகள் பற்றி நான் எனது மருமகன் முறையானவரிடம் குறைப்பட்டுக் கொண்டபோது, “நீங்கள் வெளிநாடு சென்றபடியால்தானே பெரியதொரு வசதியான வீட்டைக் கட்டி இங்கு வாழமுடிகிறது? நினைத்தபோதெல்லாம் பயணங்கள் செல்லமுடிகிறது?”என்று, என்னைத் தன் கேள்வியால் மடக்கிவிட்டதான தொனியில் கேட்டார்.
‘வாழ்க்கை என்றால் என்ன?’என்பது குறித்துப் பாடம் நடத்தும் வலுவை நான் இழந்துபோனேன். மேலும், ரூபாய்க்கு உழைக்கிற உழைப்பை டொலர்ஸ்க்கோ பவுண்ட்ஸ்க்கோ உழைத்தால் பொருளாதாரச் சுமைகள் குறையுமென்பதில் எனக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், ஒரே பாடலில் பணக்காரனாகிவிடும் கதாநாயகனைப் போல, கனடாவுக்குப் போனவுடனே காசை அள்ளிவிடலாம் என்பதும் ஒரு கனவுதான் என்று மட்டுமே பதிலளிக்கமுடிந்தது. புலம்பெயர் வாழ்வில் உறக்கம், உணவு, ஓய்வு, நல்ல வதிவிடம் இன்னபிறவெல்லாம் ஆடம்பரங்கள் என்றாகும் பொழுதுகள் கூடும்போதில் அவர்களாகவே நிலைமையை உணரக்கூடும். பணக்கார நாடென விளிக்கப்படும் கனடாவில் வாழும் தமிழ்ச் சமூகத்தினரிடையேயும் வர்க்க வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. அண்மைய ‘விசிற்றர்ஸ் விசா’ இன்னபிற தற்காலிக வதிவிட அனுமதிகளுடன் அங்கு சென்று தலையெடுக்க முற்படுகிறவர்களுக்கும், பல தசாப்தங்களுக்கு முன்னரே கனடாவுக்குப் புலம்பெயர்ந்து, கடுமையாக உழைத்துச் சேமித்து, இன்று வீட்டுக்கு முன்புறமும் பின்புறமும் புற்றரைகளுடன் கூடிய பிரமாண்டமான வீடுகளில் வாழும் தமிழர்களுக்கும் இடையில் வர்க்க வேறுபாடுகள் இருக்கவே செய்கின்றன.
ஆனால், வாழ்வின் பொருளெனப்படுவது பணத்திலோ வசதிகளிலோ ஆடம்பரங்களிலோ இல்லை; மனநிறைவில்தான் உள்ளது என உணர்ந்தவர்களும் இலங்கையில் வாழத்தான் செய்கிறார்கள். எளிதாக வெளிநாட்டுக்குச் செல்லும் வாய்ப்பிருந்தும், அதைப் புறந்தள்ளிவிட்டுத் தாய்மண்ணிலேயே நிலைத்துவிட்டவர்களையும் நான் அறிவேன்.
சென்னை எனக்குப் புதிய நகரமன்று. இந்தியாவிலிருந்து என்னை கனடாவுக்கு அழைப்பது எளிதென்று எண்ணியதால், 1990ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், என்னைச் சென்னைக்குச் செல்லும்படி எனது கணவர் பணித்தார். வெளிநாடு செல்லும் கனவோடு சென்னை, அண்ணா நகரில் தங்கியிருந்த வேறு சில பெண்களோடு சேர்ந்து ஒரு வீட்டில் நானும் தங்கினேன். 1991ஆம் ஆண்டு மே மாதம், முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதையடுத்து, சூழல் கொதிநிலையடைந்தது. இந்தியாவில் தங்கியிருந்த ஈழத்தமிழர்களும் அவர்களுக்கு ஆதரவாயிருந்த தமிழகத் தமிழர்களும் காவல்துறையால் சந்தேகக் கண்கொண்டு பார்க்கப்பட்டனர். சிலர் கைதுசெய்யப்பட்டனர். நாங்கள் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளராகிய பெண்மணியோ காவல்துறையை விடவும் மோசமாக எங்களை நடத்த ஆரம்பித்தார். ஏதோ நாங்கள்தான் பிரதமர் ராஜீவ் காந்தியைத் திட்டமிட்டுக் கொன்று விட்டதைப் போல எங்களைக் கோபத்துடனும் வெறுப்புடனும் நோக்க ஆரம்பித்தார். எங்களுடைய பெயர், முகவரி இன்னபிற விடயங்களை காவல் நிலையத்தில் பதிவு செய்தபின், குறிப்பட்ட நாட்களுக்கொரு தடவை அங்கு சென்று கையெழுத்திட்டு வரவேண்டியதாயிற்று. பேரச்சம் தந்த அந்தச் சூழலை விட்டு வெளியேறினால் போதுமென்று தோன்ற ஈழத்திற்குத் திரும்பிச் சென்றேன். அதன்பிறகு, இலங்கையிலிருந்தே கனடாவுக்குச் சென்றேன்.
கனடாவில் பத்தாண்டுகளைக் கழித்தபின், பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் (2006ஆம் ஆண்டு) சென்னைக்குச் சென்று அங்கு தற்காலிகமாக வாழ முயன்றபோது கண்ட சென்னை முந்தைய கசப்பான அனுபவம் போலன்றி இணக்கமானதாகவே தோன்றிற்று. ஆனாலும், நான் ஈழத்துக்காரி! எங்களுக்கு வீடு தருவதற்கு வீட்டு உரிமையாளர்கள் அவ்வளவாக விரும்பவில்லை. திருவான்மியூரிலிருந்த ஒரு தொடர்மாடிக் குடியிருப்பிலிருந்து தகுந்த காரணமோ கால அவகாசமோ இன்றி நாங்கள் (நானும் எனது பெறாமக்களும்) வெளியேறும்படி கேட்கப்பட்டோம். அந்த வீட்டு உரிமையாளரிடம் அதற்கான காரணத்தைக் கூறும்படி வற்புறுத்திக் கேட்டபோது, “சிலோன்காரங்களை குடிவைத்திருப்பது என் சகோதரர்களுக்குப் பிடிக்கவில்லை”என்றார். பிற்பாடு, எவ்வளவோ அலைச்சல்களுக்குப் பிறகு, வட இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் எங்களுக்குத் தன் வீட்டை வாடகைக்கு விட ஒத்துக்கொண்டார். 2007ஆம் ஆண்டிலேயே நாற்பதாயிரம் ரூபாய் மாத வாடகை! அது நாங்கள் ‘சிலோன்காரங்கள்’ஆக இருந்ததற்காகக் கொடுத்த விலை. ‘சிலோன்காரர்’களுக்கு மட்டுந்தான் தமிழகத்தில் இந்தக் கதியென்றில்லை என்பதை இப்போது, பல்லாண்டு கால அனுபவத்திற்குப் பிறகு தெரிந்து கொண்டு விட்டேன். வெகு சில மனிதர்களது நடவடிக்கைகளை வைத்து ஒரு நகரமே இப்படித்தான் என பொதுமைப்படுத்தலாகாது என்ற புரிதலும் இப்போது கூடியிருக்கிறது.
இப்போது, சென்னை என்னையும் நான் சென்னையையும் அறிந்திருக்கிறோம். என்னுடைய படைப்புகள் அங்கு வெளியீடு செய்யப்படுகின்றன. ஒப்பீட்டளவில் ஓரளவு வாசகப் பரப்பு எனக்கு அங்கிருப்பதை என்னுடைய புத்தகங்களது விற்பனையின் மூலம் அறிந்துகொள்கிறேன். தீவிர இலக்கியத்தில் எனக்கென ஓர் அடையாளத்தை வழங்கியதில் சென்னைக்கு மிகப்பெரிய பங்குண்டு என்பதை நன்றியோடு நான் சொல்லித் தானாக வேண்டும். தவிர, ஈழத்தையோ கனடாவையோ பார்க்கிலும் அதிகளவான நண்பர்கள் தமிழகத்தில் எனக்கு இருக்கிறார்கள். உயிரச்சத்தினால் என்னால் இலங்கைக்குச் செல்லமுடியாதிருந்த காலத்தில், தாய்நிலத்திற்கு அருகிலிருக்கிறேன் எனும் ஆசுவாசத்தை அளித்து, என்னைத் தன்னுள் பொதிந்து வைத்திருந்தது தமிழகமே. பல வழிகளாலும் அந்நிலத்திற்குக் கடமைப்பட்டவள் நான். சென்னை விமான நிலையத்தில், “என்ன காரணத்திற்காக இங்கு அடிக்கடி வருகிறீர்கள்?”என்று குடிவரவு அதிகாரிகளால் கேட்கப்படும்போது, “நான் ஒரு எழுத்தாளர். தவிர, எனது நண்பர்களும் இங்கிருக்கிறார்கள்”என்று பதிலளிக்கும்போது, அவர்கள் புன்னகையோடு என்னை நிமிர்ந்து பார்க்கிறார்கள். “என்னவெல்லாம் எழுதியிருக்கிறீர்கள்?”என்று ஆர்வத்தோடு விசாரிக்கிறார்கள். “ஏன் புனைபெயரில் எழுதுகிறீர்கள்? உங்களுடைய இயற்பெயரே நன்றாகத்தானிருக்கிறது”என்று சொல்கிறார்கள்.
பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு உணர்ந்ததுபோல, இப்போது சென்னையில் என்னை நான் அந்நிய மனுசியாக உணர்வதில்லை. முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின், தமிழகத்தைச் சேர்ந்த சிலரது மலினமான அரசியலானது தமிழகத்திலும் ஈழத்திலும் வாழும் தமிழர்களிடையே ஒரு விலகலை உண்டு பண்ணிவிட்டது. உணர்வுபூர்வமான ஒட்டுதலில் மெல்லிய விரிசல் உண்டாகிவிட்டது. எப்போதும்போல, பொதுமக்கள் அதற்குக் காரணமில்லை; அரசியல்வாதிகளே காரணகர்த்தாக்கள்.
மூன்று நிலங்களில் வாழ்கிறேன். ஆனால், ஒன்றோடும் என்னை நிரந்தரமாகப் பொருத்திக்கொள்ள முடியவில்லை. என்னுடைய வீடிருக்கும் வவுனியாவின் அயலவர்களைப் பொறுத்தமட்டில் நான் கனடாவிலிருந்து அவ்வப்போது வந்துசெல்லும் வெளிநாட்டுக்காரி. என்னுடைய பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு நான் எழுதுபவள் என்பதே தெரியாது. ரொறன்ரோவில் வாழும் தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தமட்டில், ஒருகாலத்தில் நிறைய எழுதிக்கொண்டிருந்தவள், பிறகு ஊரோடு போய்விட்டவள். தமிழகத்து நண்பர்களது கண்களில் நான் கனடாவிலிருந்து தமிழகத்திற்கு வந்து செல்லும் ஈழத்துக்காரி. புத்தகத் திருவிழாவில் தொலைந்து போகிறவள்.
கனடாவுக்கு நான் புலம்பெயர்ந்து சென்ற தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் புலம்பெயர்ந்து சென்ற பலர் இன்று அங்கு நிரந்தரமாகக் காலூன்றி விட்டார்கள்; பொருளாதாரரீதியாக தம்மைச் செழுமைப்படுத்திக் கொண்டு விட்டார்கள்; பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் சூழப் பெருவாழ்வு வாழும் அவர்கள், ஊர் ஒன்றுகூடல்களில் நண்பர்கள், உறவினர்களைச் சந்தித்து அளவளாவுகிறார்கள்; புலம்பெயர்ந்து சென்ற நாட்டிலும் சமூக மனிதர்களாக நீடித்திருக்கிறார்கள். அவர்களைப் போல என்னால் ஏன் அந்நிலத்துடன் இயைபுற்று வாழ முடியவில்லை? தனிமையை, காலநிலையினால் ஏற்பட்ட இருண்மையை அவர்கள் கடந்துவந்ததைப் போல என்னால் ஏன் கடந்துவர இயலவில்லை? புயல் பொருதும் கடலென என் மனம் ஏன் இப்படி கொந்தளித்தபடி உள்ளது? விடையற்ற கேள்விகள்!
இலங்கையில் போர் முடிந்துவிட்டது என்கிறார்கள்; என் போன்ற ஈழத்தமிழர்களது அகத்துள் ஓயாமல் நிகழ்ந்து கொண்டிருக்கும் போர் இன்னுந்தான் முடிந்தபாடில்லை!
- தமிழ்நதி (ஈழத்தின் திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட தமிழ்நதியின் இயற்பெயர் கலைவாணி. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் பட்டம் பெற்றவர். போர்ச்சூழல் காரணமாக மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் கனடாவுக்குப் புலம்பெயர்ந்த இவர், 1996ஆம் ஆண்டிலிருந்து கவிதை, கட்டுரை, நாவல், சிறுகதை, நாடகம், பாடல் என எழுத்தின் பல்வேறு தளங்களிலும் இயங்கிவருகிறார். ஈழம்- தமிழகம் -புகலிடம் என மூன்று நிலங்களிலும் தன் வாழ்வினைத் தொடர்பவர்.)
தமிழ்நதியின் நூல்கள்
சூரியன் தனித்தலையும் பகல் (கவிதைகள், பனிக்குடம்)
நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதுவது (சிறுகதைகள், காதை வெளியீடு)
தேவதைகளும் கைவிட்ட தேசம் (கட்டுரைகள், காலச்சுவடு)
கானல் வரி (குறுநாவல், உயிர்மை)
இரவுகளில் பொழியும் துயரப்பனி (கவிதைகள், ஆழி)
பார்த்தீனியம் (நாவல், நற்றிணை)
அதன் பிறகும் எஞ்சும் (கவிதைகள், ஆகுதி)
மாயக்குதிரை (சிறுகதைகள், டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்)
காலம் உறைந்த சட்டகம் (கவிதைகள், தமிழினி)
தங்க மயில்வாகனம் (சிறுகதைகள், தமிழினி)