கண.குறிஞ்சி - நடராச பாலசுப்பிரமணிய சேதுராமசாமி, சிற்பி எனப் பரிணாமம் அடைந்ததை நினைவு கூரவும். "ஆழ் கடலே கேள்" எனும் உங்களது முதல் கவிதையிலேயே அந்தப் பயணம் தொடங்கி விட்டதா?
கவிஞர் சிற்பி - என் அப்பா முருக பக்தர். ஒவ்வொரு கிருத்திகைக்கும் பழனி செல்பவர். அதனால் பாலசுப்பிரமணியம் என்ற பெயரை அவர் வைத்திருக்கலாம். நான் கருவில் இருந்த போது என் அம்மா எங்கள் கிராமத்துக் குடும்பங்களோடு இராமேசுவரம் சென்றிருந்தார். எனவே நான் பிறந்த போது எங்கள் ஊர் மெத்தை வீட்டு அம்மாவும் என் தாயாருடன் இராமேசுவரம் சென்றிருந்ததால் சேது ராமசாமி என்று பெயர் வைக்கச் சொல்லி அவர் மட்டும் என்னை சேது என்றே அழைத்து வந்தார். நடராசன் என்று என் நெருங்கிய உறவினர்கள் அம்மாவுடன் பிறந்தவர்கள் கடைசிக் காலம் வரை அழைத்தார்கள். ஒருவேளை என் நட்சத்திரத்துக்காக 'ந' என்ற எழுத்தில் பெயர் வைத்திருக்கலாம். ஏட்டுச் சுவடியில் இந்தப் பெயர் தான் சோதிடரால் எழுதப்பட்டிருக்கிறது. பள்ளியில் பாலசுப்பிரமணியம் எனவே பதிவாயிற்று.
நான் 'சிற்பி' யானதற்குக் காரணம் கண்ணதாசனின் தென்றல் இதழ். அதன் வெண்பாப் போட்டிகளில் கலந்து கொள்ள நான் வைத்துக் கொண்ட புனைப் பெயர்களில் ஒன்று சிற்பி (மற்றவை செந்தாமரை, ஆ.பொ. பாலன்) முதல் தொகுப்பான நிலவுப் பூ வரும் போது சிற்பி என்ற பெயரைத் தெரிவு செய்தேன். அது கவிதை, சிற்பமாக அமைதல் வேண்டும் என்ற கருத்தினால்.
'ஆழ் கடலே கேள்' நான் இடைநிலை வகுப்பில் (Intermediate) திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் பயிலும் போது (1951-53) கல்லூரி இதழுக்காக ஆர்வத்தால் எழுதிய முதல் கவிதை. என் ஆசிரியர் இறையருட் கவிமணி என அறியப்பட்டவரும், நான் தமிழ் முதுகலை பயிலத் தூண்டுதலாக விளங்கியவருமான கா. அப்துல் கபூர் கல்லூரி இதழாசிரியராக இருந்தார். அந்தத் துணிசேலில் பேரறிஞர் அண்ணாவின் தாழ்ந்த தமிழகமே என்ற உரையின் தாக்கத்தால் எழுந்த இளம்பிள்ளைக் கவிதையாக எழுதினேன். என் ஆசிரியர் 'உன் கவிதையைப் பார்த்து நானும் ஒரு கடல் கவிதை எழுதினேன்' என்றார். தாழ்ந்து போன தமிழகத்தின் நிலை கண்டு ஆழ்கடலை அழைத்து முன்னர் பூம்புகாரை அழித்தது போல் 'அழித்து விடு தமிழகத்தை, அழித்து விடு என் தாயகத்தை' என்று ஆதங்கம் கொள்வது கவிதைப் பொருள்.
அன்று நான் திராவிட இயக்கப் பித்தனாக இருந்தேன்.
* அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்களுடனான உங்களது தோழமை?
* கடலூர் கி. வீரமணி என்று அன்று அறியப்பட்டிருந்தவரும் அன்றே (1953) திராவிடர் கழகப் பேசோளராகப் புகழ்பெற்றவருமான தோழர் என்னோடு மாணவ வயதில் நெருங்கிப் பழகியவர். அவர் அண்ணாமலையில் இடைநிலை வகுப்பை முடித்து 1953 இல் பொருளாதாரச் சிறப்பு வகுப்பில் ((B.A. Hons) பயிலத் தொடங்கியிருந்தார். அதே சமயத்தில் தமிழ் இலக்கிய ஆனர்ஸ் வகுப்பில் நான் சேர்ந்தேன். மாணவர் இல்லத்தில் அடுத்தடுத்த அறையில் இருந்தோம். என் வகுப்புத் தோழர் பாலகிருஷ்ணன் கி.வீ.யின் அறைத் தோழர். எனவே அந்த அறையில் பெரும்பாலும் பத்திரிகை படிக்கவும் (ஆங்கில, தமிழ் நாளிதழ்கள் அவர் அறையில் கிடைக்கும்) உரையாடவும் நாள்தோறும் சந்திப்போம்.
மாணவப் பருவத்திலேயே நாடறிந்த பேசோளராக இருந்தார் கி.வீரமணி. ஒரு முறை பெரியார் சிதம்பரம் நகருக்கு வந்திருந்த போது எங்களையெல்லாம் அழைத்துப் போய் அறிமுகப்படுத்தினார். சிறுவர்களாகிய எங்கள் ஒவ்வொருவரையும் 'வாங்க அய்யா' என்று அழைத்த பெரியாரின் பெருந்தகைமையைக் கண்டோம். 1953இல் தி.மு.க. முப்பெரும் போராட்டம் நடத்திய போது பல்கலைக்கழக மாணவனாகிய நானும் இரயில் நிறுத்தப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டேன். இரண்டு நாள் காவல் நிலையத்தில் கைதானவர்கள் வெட்ட வெளியில் கிடந்த போது ஒவ்வொரு வேளையும் தி.மு.க. தொண்டர்கள் கொண்டு வந்து கொடுத்த உணவு அமுதமாக இருந்தது. அந்த சமயத்தில் கி.வீ. தலைமையில் பல்கலைக்கழக மாணவர்கள் ஊர்வலமாக வந்து நடத்திய பொதுக் கூட்டத்தில் மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்துப் பேசினார் என காவல் நிலையத்திலேயே கேள்விப்பட்டேன்.
என் வகுப்புத் தோழரும் பொதுவுடைமைவாதியும் பிற்காலத்தில் மதுரைப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கச் செயலாளராக வீரம் செறிந்த போராட்டங்கள் நடத்தியவருமான வெ. சண்முகசுந்தரம் சிறிது சிறிதாக அப்பொழுது என்னைச் சிவப்பாக்கிக் கொண்டிருந்தார்.
கி. வீரமணி படிப்பிலும் வல்லவர். பல்கலைக்கழக இறுதித் தேர்வில் பொருளாதார முதுகலையில் முதல்வராக அவர் தேறியபோது தமிழ் முதுகலையில் நான் முதலாவதாகத் தேறினேன். பெரியார் கையொப்பமிட்ட கி.வீ.யின் திருமண அழைப்பை நெடுநாள் நான் வைத்திருந்தேன். படிப்பு முடிந்த பின் அவர் அரசியலில் தீவிரமானார். எப்போதாவது பொள்ளாச்சிக்கு அவர் வரும்போது சந்திப்பேன். என் இளைய மகன் காலமான சமயம் பகுத்தறிவுக் கழகத் தலைவர் பொ.வ. ராதாவும் காலமானார். ராதாவின் இறுதிச் சடங்குக்காக வந்த வீரமணி தம் மனைவியாரோடு என்னிடமும் வந்து ஆறுதல் கூறினார்.
சேலம் பல்கலைக்கழகப் பெரியார் இருக்கையில் அவரும் நானும் உரையாற்றினோம். பின்னர் பெரியார் திடலிலும் (சென்னை) நான் பேசக் கேட்டு மகிழ்ந்தார். சில மாதங்களுக்கு முன் அவரைக் காண்பதற்கென்றே சென்னை சென்ற போது வரவேற்று பொன்னாடை போர்த்தி நூல்களை அளித்து என்னை நெகிழ வைத்தார்.
என் வகுப்புத் தோழரும் அவருடைய மாணவர் இல்ல அறைத் தோழருமான பாலகிருஷ்ணன் வேலையின்றித் தவித்தபோது பழுத்த காங்கிரஸ்காரரான அவருக்கு Rationalist இதழில் பணியமர்த்திக் காத்தார். பின்னர் அவருடைய உதவியால் தமிழ்நாடு பாடத்திட்டத் துறையில் பாலகிருஷ்ணன் அரசு ஊழியராகவும் ஆனார். உதவும் பெருமனம் கொண்ட தலைவர் என் நண்பர் கி.வீரமணி.
* 30 ஆண்டுகள் கல்லூரி ஆசிரியராகப் பல்கலைக்கழகப் பேராசிரியராக உங்களது அனுபவங்கள்?
* பொள்ளாச்சி ந.க.ம. கல்லூரியில் 32 ஆண்டுகளும் பாரதியார் பல்கலைக்கழகத்தில் எட்டு ஆண்டுகளுமாக நாற்பதாண்டுகள் ஆசிரியப் பணி ஆற்றியிருக்கிறேன்.
நான் ஆசிரியப் பணியைத் தேர்வு செய்யக் காரணம் என் வழிகாட்டிகளான நான்கு ஆசிரியப் பெருமக்கள்தான். கா. அப்துல் கபூர் (ஜமால் முகமது கல்லூரி) டாக்டர் அ. சிதம்பரநாதனார், கா. மீனாட்சிசுந்தரம், மு. அண்ணாமலை (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்) ஆகிய நான்கு வைரத் தூண்களே என்னை வாழ்வித்த ஆசிரியப் பெருமக்கள். அவர்களைப் பார்த்து வியந்து நான் ஆசிரியனானேன். அப்துல் கபூர் தண் நறும் தமிழ்த் தென்றல். சிதம்பர நாதனார், கம்பீரமான துணிவு மிக்க பேராசிரியர். ஔவையார் திரைப்படம் வந்த போது மு.வ, ரா.பி. சேதுப்பிள்ளை போன்ற பேராசிரியர் பலரும் அதனை வரவேற்ற போது அத்திரைப்படத்தை எதிர்த்துக் கண்டனக் கூட்டம் நடத்தியவர் என் பேராசிரியர். கா. மீனாட்சி சுந்தரம் நேர்மையும் வாய்மையும் திருவுருவானவர். மு. அண்ணாமலை பாரதிதாசனிடம் தொண்டராகப் பணியாற்றிப் பின் பேராசிரியர் ஆனவர். என்னைக் கவிதைக் கடலுக்குள் தள்ளியவர் அவர்.
என் வகுப்புகளில் பாடம் ஒரு பகுதி; நான் படித்தவை ஒரு பகுதி; உலக அனுபவம் ஒரு பகுதி என மூன்று கூறுகள் இருப்பதால் மாணவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். கல்லூரி ஆசிரியனாக மாணவனைத் தரம் உயர்த்திய பணி என்னுடையது. மயில்சாமி அண்ணாதுரை, காவல்துறை (மகாராஷ்டிரம்) உசே அதிகாரியாக இருந்த சிவானந்தன், தமிழ்ப் பல்கலைக்கழகத் துணை வேந்தராக விளங்கிய சி. சுப்பிரமணியம், கார்மேகம் இ.ஆ.ப. ஆகியவர்கள் என்னை முன்மாதிரியாகக் கொண்ட மாணவர்கள்.
பல்கலைக்கழகம் விரிந்த களம். அனைத்திந்தியத் தொடர்புகளும் ஆய்வு நோக்கும் வளர்ந்த இடம். அங்கே ஒரு சில மாணவர்களுக்குப் பொருளுதவி செய்தும் உதவினேன். பல கருத்தரங்குகளை நடத்தினேன். மாணவர்களை விடவும் அதிகம் நான் கற்றுக் கொண்டேன்.
* தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் தோற்றம், அதில் உங்களது பங்களிப்பு?
* 1961இல் கலை இலக்கியப் பெருமன்ற அமைப்பு மாநாடு கோவையில் ஜீவா தலைமையில் மூன்று நாட்கள் நடைபெற்றது. அக்கூட்டத்தில் நான் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படவில்லை. ஆனால் அதற்கு முன்னரே 1959இல் புதுக்கோட்டையில் தோழர் சேதுராமன் (அறந்தையின் மாமனார்) நடத்திய பாரதி விழாவில் கவியரங்கம், பட்டிமன்றம் நிகழ்வுகளில் கலந்து கொண்டேன். ஜீவா, ரகுநாதன், தா.பா, முதா.மு. பாஸ்கரத் தொண்டைமான் முக்கிய அழைப்பாளர்கள். பெரும்பாலும் கலை இலக்கிய பெரு மன்றம் பாரதி விழாக்களை நடத்துவதன் மூலம் மக்களைச் சந்தித்து வந்தது.
1963 ஜனவரி 18இல் பெருமன்றத்தின் பேராசான் ஜீவா மறைந்தார். அதனால் ஜீவாவுக்குப் பதில் ரகுநாதன் தலைவரானார் அந்த ஆண்டில் பெருமன்ற முதல் மாநில மாநாடு மதுரையில் நடந்தது. அதுவும் மூன்று நாள்கள். கே.சி.எஸ் அருணாசலம் அழைத்த போதும் நான் மதுரை செல்லவில்லை. இந்த மாநாட்டுக்குப் பிறகு பெருமன்றக் கிளைகள் பெருகின.
1966இல் பொள்ளாச்சியில் நடந்த இரண்டாவது மாநில மாநாட்டிலிருந்து தொடர்ந்து பெருமன்றக் கூட்டங்களில் மாநாடுகளில் கலந்து கொண்டேன். அதன் தலைமைக் குழுவிலும் இடம் பெற்றேன். அப்போது தான் தோழர் பாலதண்டாதேம் என்ற மகத்தான மக்கள் தலைவரை அறியவும் உணரவும் வாய்ப்புப் பெற்றேன். 1966 பிப்ரவரி 17, 18, 19, 20 என நான்கு நாள்கள் நடைபெற்ற மாநாட்டில் ஒரு தொண்டனாகவும் கல்லூரி மாணவராகக் கவிஞர் சிற்பி உரையாளனாகவும் பணியாற்றினேன். ரகுநாதன், நா.வா. ரஷ்ய நாட்டு ரூதின், கேரளத்தின் தகழி, ஜோசப் முண்டசேரி, நடிகர் பால்ராஜ் சகானி, கவிஞர் ஜாப்ரி அகமது எனக் கலைகளும் அறிவும் சங்கமித்த மாநாடு என்னைப் புதுச் சிந்தனைகளில் தள்ளிற்று. அந்த மாநாட்டில் நான் தோழர் ஆர்.கே. கண்ணனின் காதலன் ஆனேன்.
சோஷலிசம், மனிதநேயம், காலத்தின் குரலான இலக்கியம் இவற்றின் அடித்தளமான மனிதநேய அழகியல் பார்வை என்ற கருத்தில் ஈடுபட்டேன் பின்னர் நடந்த பெருமன்ற நிகழ்வுகளில் நான் கலந்து கொள்ளாதவை மிகச் சில. ஜீவா, ரகுநாதன், ஆர்.கே.கண்ணன், எஸ்.ஆர்.கே ஆகிய சிந்தனையாளர்களின் வழித்தடம் எனக்குள் பதிவாக கலை இலக்கியப் பெருமன்றமே காரணம்.
* தோழர் ஜீவா அவர்களுடனான உங்களது உறவு எப்படி இருந்தது?
* ஜீவாவை நான் சந்திக்கும் முன்பே அவரது எழுத்துக்களை நான் படித்திருந்தேன். அதன் மூலமே எனக்குள் அவர் விசுவருபம் கொண்டிருந்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் 1954 அல்லது 1955 இல் ஜீவாவை அழைத்து வந்து ஒரு பொதுக் கூட்டம் நடத்தினோம். இரண்டு நாள் மாணவர் இல்லத்தில் எங்கள் விருந்தாளியாகத் தங்கியிருந்தார்.
பின்னர் 1961 இல் புதுக்கோட்டை பாரதி விழாவில் மீண்டும் அவருடைய சண்டமாருத உரையினைக் கேட்டேன். பாரதி பழமையைப் புதுமை செய்தவன் அல்ல புதுமையைச் செழுமை செய்தவன் என அவர் முழங்கினார். தொடர்ந்து தாமரை மூலமும் கட்டுரைகள் மூலமும் அவரைத் தொடர்ந்தேன். ஜீவா அவர்களுடைய ஆகிருதி இன்று வரை என்னில் வியப்புறக் கலந்திருக்கிறது. பண்டைய இலக்கியங்களின் முற்போக்குக் கூறுகளைக் காண்பதிலும், புதுமையை இரு கை நீட்டி அரவணைப்பதிலும் எனக்கு என்றும் அவர் முன் மாதிரி ஆவார். கம்பன், பாரதி இருவரையும் புதிய பார்வையில் தந்தவர் ஜீவா.
* "மானுடம் பாடும் வானம்பாடி" இயக்கம் உருவானதன் பின்னணியைக் குறிப்பிடுங்கள்.
* 1971 அக்டோபரில் (9ஆம் நாள்) வானம்பாடி முதல் இதழ் விமர்சனங்களுக்கிடையே வெளியிடப்பட்டது. இதன் தோற்றத்துக்குப் பின்வரும் காரணங்களைக் கூறலாம்.
(1) சிந்தனை மன்றம், பூம்பொழில் இலக்கிய வட்டம், தேனீ என்ற இளமுருகு / புவியின் இதழ் அனுபவம், கோவையின் தீவிர அரசியல் நிலைப்பாடு, பல எழுத்தாளர் அமைப்புக்கள் உரமாக அமைந்த பின்புலம்.
(2) புதுக்கவிதையை ஒரு புதிய வகைமையாக வளர்த்தெடுத்த 'எழுத்து' இதழ் தந்த இலக்கிய நிர்பந்தம்.
(3) சமகாலத் தமிழ்நாட்டு அரசியல் தந்த ஏமாற்றம்
(4) வளர்ந்து கொண்டிருந்த மார்க்சியப் படிப்பு
(5) புதுக்கவிதை வடிவத்துள் சமூக உள்ளடக்கங்களைக் கொண்டு வர வேண்டும் என்ற தீவிரம். மரபின் தேய்மானமும் மாற்றத்துக்கான தூண்டுதல்.
இவையெல்லாம் ஒன்றாகி உடனாகிய நிலையில் பூம்பொழில் இலக்கிய வட்ட நண்பர்கள் கவிதை இதழ் தொடங்கும் ஆவலைப் புலப்படுத்த அதன் விரிவாக்கமாகப் பலர் கூடி இழுத்த தேர் வானம்பாடி.
வானம்பாடி என்ற பெயரை முன் மொழிந்தவர் இளமுருகு. மானுடம் பாடும் என்ற அடைமொழியை இணைத்தது நான்.
* எதிர்காலத் தலைமுறையின் புரிதலுக்காக வானம்பாடி இயக்கத்தில் நேரிட்ட பிரிவுக்கான பின்னணியைக் குறிப்பிடவும்.
* எல்லா இயக்கங்களிலும் ஏற்படுவது போல, குழு மனப்பான்மை, தனிமனித முனைப்பு, தீவிரவாதம் வானம்பாடியிலும் உண்டானது. வானம்பாடியின் புகழே அதனை வீழ்த்தியது. நான் ஜீவாவின் மனிதாபிமான அழகியலின் வழி நின்றவன். அக்காலத்தில் கட்டுப் பெட்டி மார்க்சியவாதியாக (Conservative Marxist) ஞானி இருந்தார். பின்னர் உருவான ஞானியின் முகம் வேறு. இதனால் முதல் ஆறேழு இதழ்கள் வெளிவந்த காலத்தில் இருந்துவந்த ஒற்றுமை சிதறியது.
இரண்டாவதாகத் தத்துவமா கவித்துவமா என்ற விவாத உணர்வும் வளர்ந்தது. தத்துவமே என ஓர் அணி ஊன்றி நிற்க கவித்துவத்தோடு இணையாவிடில் இலக்கியமாகாது என்ற அணியில் நானும், புவியும் மையமாக நின்றோம். அதனால் படைப்பாளிகள் ஒரு புறமும் திறனாய்வாளிகள் ஒரு புறமுமாகக் களம் பிரிந்தது. இரண்டு பக்கமும் சசேரவை ஊதி விடுகிற நண்பர்கள் இருக்கவே செய்தார்கள்.
வானம்பாடியிலிருந்து பிரிந்த அணி 'வேள்வி' இதழைத் தொடங்கியதென்றாலும் தொடரவில்லை. வானம்பாடி மேலும் சில இதழ்களைக் கொண்டு வந்ததென்றாலும் 22 இதழ்களுடன் முடங்கியது.
ஓர் இலட்சிய நோக்கு பல பிரிவுகளாக உடைந்து போனது; கவிதையை விடுத்துச் சிறுகதை, நாவல் என வேறு களங்களுக்குச் சென்றவர்களும், திறனாய்வு, அரசியல் எனப் பிற துறைகளுக்குப் போனவர்களும் வானம்பாடிக்கு முடிவுரை எழுதினர். நானும் புவியும் மட்டுமே அவரவர் போக்கில் கவிதைக்காரர்களாகத் தொடர்ந்தோம்.
மௌன மயக்கங்கள் கவிதை நூலுக்குத் தமிழக அரசின் விருது பெற்ற நிகழ்வு.
* உங்களது பொறுப்பில் வெளிவந்த விலையிலாக் கவிமடலாகிய வானம்பாடி இதழ்கள் வித்தியாசமான பொருண்மைகள் குறித்துப் பேசியுள்ளது. அது குறித்து விரிவாகப் பதிவிடவும்
* கொஞ்சம் கொஞ்சமாக வானம்பாடி நண்பர்களுக்கிடையில் பிரிவு ஏற்படத் தொடங்கிய போது இதழ் வெளிவருவதில் சிரமங்கள் நேர்ந்தன. வானம்பாடி நின்றுவிடலாகாது என்ற கவலை எனக்குள் எழுந்தது. அதனால் முதல் இதழிலிருந்து பங்களிப்பவனாக இருந்த நான் 14 ஆம் இதழிலிருந்து பொறுப்பேற்றுப் பொள்ளாச்சியிலிருந்து கொண்டு வரத் தொடங்கினேன்.
முன்னையவை இயக்க இதழ்கள் என்றால் என் பொறுப்பில் வெளிவந்தவை இலக்கிய இதழ்கள். மொழிபெயர்ப்பு, நேர்முகம், விமர்சனம், கடம்மனிட்டா சிறப்பிதழ், ஈழச் சிறப்பிதழ் எனப் பன்முகம் கொண்டவை இலக்கிய இதழ்கள். தருமு சிவராமின் நேர்முகமும் அவரது கவிதையும் கூட வானம்பாடியில் வெளி வந்தது. சுகுமாரனும் நானும் கடம்மனிட்ட கவிதைகளைச் சிறப்பிதழில் மொழிபெயர்த்துத் தந்தோம். ஈழச் சிறப்பிதழில் மஹாகவி, சேரன், யேசுராஜா, ஊர்வசி, சண்முகம், சிவலிங்கம், சிவசேகரம், நிர்மலா நித்தியானந்தன், நுஃமான், மு.பொன்னம்பலம், வில்வரத்தினம், வ.ஐ.ச ஜெயபாலன் முதலிய ஈழத்துக் கவிஞர்களின் கவிதைகளைப் பெற்று வெளி யிட்டேன். அப்போது ஈழத் தமிழர்கள் இலக்கியப் படைப்புகளை உள்நாட்டில் வெளியிடவும் முடியாமல் தவித்த காலம். வாசகர் கடிதங்களை எதிரொலிகாளாக வெளியிடவும் செய்தோம்.
அன்று வானம்பாடி தமிழகம் தாண்டி வட இந்திய நகரங்களில் வாழ் தமிழரிடையேயும், ஈழத்திலும், மலேசியாவிலும் அறிமுகமாகி இருந்தது. இதன் எதிரொலியாக மலேசியாவிலும் ஒரு வானம்பாடி இதழ் வெளிவந்ததாக நான் மலேசியா சென்ற போது பத்திரிகை நண்பர்கள் கூறினர்.
* இரசிய மொழி கற்றதன் பின்புலம் / அம்மொழியில் உங்களது ஈடுபாடு பற்றி அறியத் தரவும்.
* இரசிய மொழி கற்றதற்குக் காரணம் வெளிப்படை சோவியத் நாட்டின் மீது கொண்டிருந்த அன்பும் பாசமும். கோவையிலிருந்து ஓர் ஆசிரியர் வந்து கற்பிக்க புதுதில்லி கிமிமிஸிலி என்ற நிறுவனம் நடத்திய சான்றிதழ் தேர்வு, அடுத்த கட்டமாக பட்டயத் தேர்வு இரண்டையும் எழுதினேன். சிறப்பு நிலை பெற்றுத் தேறினேன். என்னுடன் மூன்று நான்கு பேர் படித்தார்கள். ஓரளவு ரஷ்யன் படிக்க முடிந்தது இப்போது மறந்து கொண்டிருக்கிறேன்.
* உங்களது முனைவர் பட்டம் பற்றிய விவரங்களைக் கூறவும். கவிஞர் வள்ளத்தோள் குறித்த உங்களது மதிப்பீட்டையும் தெளிவு படுத்த வேண்டுகிறோம்.
* போரதியும் வள்ளத்தோளும் ஒப்பாய்வு" என்பது என் முனைவர் பட்டத் தலைப்பு. இருவரும் தேசியக் கவிஞர்கள். சுதந்தரம், தாய் மொழிப்பற்று, காந்தி முதலிய பொதுப் பொருண்மைகள் பல இருவரிடமும் இருந்தன. அரசியல் வானில் காந்தி உதயமான பிறகே வள்ளத்தோளின் தேசியம் பிறந்தது. ஆனால் காந்தி தென்னாபிரிக்காவில் இருந்த போதே பாரதியின் தேசபக்திப் பாடல்கள் தோன்றிவிட்டன. ரிக்வேதம், வால்மீகி இராமாயணம் என வடமொழிப் பெருநூல்களை மொழிபெயர்த்தவர் வள்ளத்தோள். வேத ரிஷிகளின் கவிதை, பதஞ்சலி யோக சூத்திரம் இரண்டிலும் சிறிய அளவு மொழி பெயர்ப்புச் செய்தவர் பாரதி. தன் இறுதி நாட்களில் புராணங்களைக் கற்பனை என்றவர் பாரதி. வள்ளதோள் நூறு விழுக்காடு நம்பிக்கைகளின் நாயகன். கவித்துவ மதிப்பில் ஆசானுக்கு அடுத்தபடி தான் வள்ளத்தோள். தமிழில் மறுமலர்ச்சி யுகத்தின் முதல் சூரியன் பாரதி. பத்திரிகைத் துறைப் பணியில் வள்ளத்தோள் இராமாநுஜன், கேரளோதயம் இதழ்களின் துணை ஆசிரியராகவும் ஆத்ம போதிணி ஆசிரியராகவும் இருந்தார். அப்பணியில் பங்களிப்புக் குறைவே. ஆனால் பாரதி சுதேசமித்திரனில் துணை ஆசிரியர் கர்மயோகி, சக்கரவர்த்தினி, இந்தியா, விஜயா, சூர்யோதயம் தமிழ் இதழ்களின் ஆசிரியராகவும் பாலபாரதா ஆங்கில இதழாசிரியராகவும் தீவிரப் பணி புரிந்தவர்.
சமூக சீர்திருத்தக் களத்தில் பாரதி முன்னோடி. வள்ளத்தோள் சமூக சீர்திருத்தத்தைப் பாடியிருந்தாலும், ஆசான் அவரை வெல்கிறார்.
இப்படிப் பல ஒற்றுமை வேற்றுமைகளை எடுத்துக் கூறுவது என் ஆய்வு. அதனை ஆங்கிலத்திலிருந்து தமிழில் கொண்டுவர முயன்று கொண்டிருக்கிறேன்.
* பல்கலைக்கழக நல்கைக் குழுவின் உதவியோடான உங்களது ஆய்வுத் திட்டங்கள் குறித்து விளக்கவும்.
* பல்கலைக்கழக நல்கைக் குழுவில் உதவியோடு இரண்டு திட்டங்களை மேற்கொண்டேன்.
எனக்கு இரண்டு பெருந்திட்டங்கள் அமைந்தன.
(1) "தமிழ் இலக்கியத்தில் விடுதலைத் தாக்கம்" இத்தலைப்பிலான திட்டம் எனக்கு முன் இருந்த துறைத் தலைவர் டாக்டர் செயராமன் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தேன். உதவி ஆய்வாளர் சோமசுந்தரம்.
(2) "இடைக்காலக் கொங்கு நாட்டின் சமுக பொருளாதார அமைப்புக்கள்" இத்திட்டம் நான் கேட்டுப் பெற்றுக் கொண்டது. மாணவ உதவியாளர் சாந்தகுமார்.
இரண்டு பெருந்திட்டங்களையும் முடித்து நல்கைக் குழுவிடம் சமர்ப்பித்தேன்.
ஆய்வுத் திட்ட அறிக்கையின் பிரதி என் புத்தகத் குவியலுக்குள் உள்ளது. தேடினால் கிடைக்கலாம்.
* சாகித்திய அகாதமி அமைப்பில் நீண்ட காலம் பல்வேறு நிலைகளில் பொறுப்பில் இருந்துள்ளீர்கள். அந்தப் பின்னணியில் சாகித்திய அகாதமி விருதுகள் தேர்ந்தெடுக்கப் படும் முறை / அதன் பட்ஜெட் / அதன் கட்டமைப்பு போன்றவை குறித்தும், பால சாகித்திய பிரஸ்கார் மற்றும் வே பிரஸ்கார் குறித்தும், அகாதமியின் மொழிபெயர்ப்புப் பரிசு குறித்தும் இளம் படைப்பாளிகளுக்குத் தெளிவான விளக்கம் தர வேண்டுகிறோம்.
* சாகித்ய அகாதமி அமைப்பில் 1993 முதல் 1998 வரை பொதுக்குழு உறுப்பினராகவும் 2008 முதல் 2012 வரை, மீண்டும் 2018 முதல் 2022 வரை செயற்குழு உறுப்பினர், தமிழ் ஆலோசனைக் குழு ஒருங்கிணைப்பாளராகவும் (மூன்று முறை) பொறுப்பில் இருந்துள்ளேன்.
1954ஆம் ஆண்டு முதல் சாகித்ய அகாதமி செயலாற்றி வருகிறது. ஒவ்வொரு மொழி சார் மாநிலத்திலிருந்தும் பல்கலைக்கழகங்கள், மாநில சாகித்ய அகாதமி, இலக்கிய அமைப்புக்கள் சார்பாக 3 பிரதிநிதிகள் பொதுக்குழுவுக்குத் தெரிவு செய்யப்படுகின்றனர். மாநில சாகித்ய அகாதமி இல்லாத போது மாநில அரசு தரும் பெயர்ப்பட்டியலில் இருந்து ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். இந்தத் தேர்வு முந்தைய பொதுக்குழுவின் இறுதிக் கூட்டத்தில் நடைபெறும். பதவிக்காலம் ஐந்தாண்டுகள்.
பொதுக் குழுவிலிருந்து ஒவ்வொரு மொழியிலிருந்தும் செயற்குழுவுக்கு ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். அவரே ஆலோசனைக் குழு ஒருங்கிணைப்பாளர் ஆவார். புதிய பொதுக் குழுவில் தலைவர், துணைத் தலைவர் தெரிவு செய்யப்படுவார்.
போட்டி இருந்தால் வாக்களிப்பு நடைபெறும் விரிவான கட்டமைப்புக் குறித்து அகாதமி வலைத்தளத்தில் பார்க்கலாம்.
விருது தெரிவு செய்யும் முறை
முந்தைய ஐந்தாண்டுகளின் சிறந்த நூல் பட்டியலை இரண்டு வல்லுநர் தயாரித்துத் தருவர், அப்பட்டியல் பத்து உறுப்பினர் கொண்ட ஒரு குழுவுக்கு முதன்மைச் சுற்றுக்கு அனுப்புவார்கள். அவர்கள் தெரிவு செய்த பட்டியல் தமிழ் ஆலோசனைக் குழுவுக்கு இரண்டாவது சுற்றுக்கு விடப்படும். பின்னர் சுருக்கமாகி விட்ட பட்டியலை நடுவர்கள் மூவர் (Jury) விவாதித்து முடிவை அறிவிப்பர். அந்தப் பரிந்துரையை (மூவரும் ஒரே முடிவு அல்லது பெரும்பான்மை முடிவு) ஏற்று அகாதமி விருதாளராக நூற்பெயரோடு அறிவிக்கும்.
சாகித்ய அகாதமி சார்பில் முதன்மை விருது, மொழி பெயர்ப்பு விருது, சிறுவர் இலக்கிய விருது, இளம்படைப்பாளி விருது, பாஷா சம்மான் எனப் பல விருதுகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டை விட்டு விட்டு, அதற்கு முந்தைய ஐந்தாண்டுகளில் வெளி வந்த நூல்கள் பட்டியலிடப்பட்டுத் தெரிவு செய்யப்படுகின்றன. முன்பு வல்லுநர் இருவரிடம் மந்தணமாகப் பட்டியல் பெறப்பட்டது. இனி வரும் ஆண்டுகளில் அம்முறை நீக்கப்பட்டு யார் வேண்டுமானாலும் நேரடியாகப் பரிந்துரை செய்யும் முறை பின்பற்றப்படும்.
* கேரள மற்றும் கர்நாடக சாகித்திய அகாதமியின் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டதன் பின்புலத்தில் அவற்றோடு தமிழ் சாகித்திய அகாதமி அமைப்பினை ஒப்பிட்டுக் காண முடிமோ?
* மாநில சாகித்ய அகாதமிகள் கர்நாடகத்திலும் கேரளத்திலும் இன்னும் பல மாநிலங்களிலும் உள்ளன. அவை நடத்தும் சிறப்புக் கருத்தரங்குகளுக்குப் பல முறை அழைக்கப்பட்டுள்ளேன். தமிழ் நாட்டில் அத்தகைய அமைப்பு இல்லை. குறள்பீடம் என்று கலைஞர் அமைத்த மாநிலக் கழகம் ஒரே ஆண்டில் பட்டுப் போய் விட்டது.
* "மலையாளம் எனக்கு இரண்டாவது தாய்மொழி" எனக் குறிப்பிடுவீர்கள். அவ்வகையில் மலையாள இலக்கிய ஆளுமைகள் குறித்த உங்களது மதிப்பீடு என்ன?
* நான் பள்ளிக் காலத்தில் தமிழை ஒரு மொழியாய்ப் படித்திருந்தாலும் மற்ற அனைத்துப் பாடங்களையும் மலையாள மொழி மூலமே கற்றேன். அதனால் அது எனக்கு இரண்டாவது தாய்மொழி ஆனது.
சுதந்தரத்துக்கு முன் மலையாளத்தின் முப்பெருங்கவிஞர்களாக குமாரன் ஆசான், வள்ளத்தோள், உள்ளூர் பரமேசுவர அய்யர் என மூவர் சிறந்து விளங்கினர். நவீன மலையாள இலக்கியத்தில் சங்ஙம்புழா, சச்சிதானந்தன், சங்கர குறுப்பு, ஓ.என்.வி. குறுப்பு, வைலோப்பிள்ளி, கடம்மனிட்ட, கே.ஜி. சங்கரப் பிள்ளை, அய்யப்பப் பணிக்கர் எனப் பெருமிதம் கொள்ளத்தக்க ஒரு பட்டாளம் தொடர்ந்தது.
சிறுகதை, நாவல் இலக்கியத்தில் தகழி முதல் எம்.டி.வாசுதேவன் நாயர் வரை உலகத் தரமான படைப்பாளிகள் பலர் சிறந்திருந்தனர், இன்றும் புதிய படைப்பாளிகள் வளர்ந்துள்ளனர். என்.பி. முகம்மதுவும், எம்.டியும் உலகச் சிறுகதைப் போட்டிகளில் முதன்மை பெற்றவர்கள். தகழியின் செம்மீன் உலகத்தின் முக்கிய மொழிகளில் எல்லாம் வந்துள்ளது. மாதவிக்குட்டி இந்தியப் பெண் எழுத்தில் புரட்சி செய்த முன்னோடி.
* குறிப்பாக "மலையாளத்தில் எழுதும் உலகக்கவி" எனக் கவிஞர் சச்சிதானந்தன் அவர்களை அடையாளம் காட்டியுள்ளீர்கள். அவரது படைப்புகள் குறித்த உங்களது கண்ணோட்டம்.
* சச்சிதானந்தன் நக்சலைட் இயக்கத்திலும் இருந்தவர். எனவே புரட்சிக் கவிஞர், ஆங்கிலப் பேராசிரியர். எனவே உலக இலக்கியப் போக்குகளைக் கூர்ந்து கண்டவர். இந்திய இலக்கியங்களைக் கரைத்துக் குடித்தவர். எனவே இவருடைய கவிதைகளில் வியப்பூட்டும் படிமங்கள், உருவகங்கள், புதுமைப் பார்வைகள் நிரம்பிக் கிடக்கின்றன. எல்லா மொழித் தொன்மங்களும் பொங்கித் ததும்பும் கவிதைகள் இவருடையவை. என் பார்வையில் தமிழில் இவருக்கு நிகராகச் சொல்ல யாருமில்லை. ஆண்டாள், கபீர்தாஸ், மீரா, அக்கம்மா என இந்தியக் கவிகளைக் கொண்டாடுபவர்.
* தமிழை வணங்கி மலையாள ஆதிகவிகள் பாடியுள்ளனர் என ஒருமுறை நீங்கள் குறிப்பிட்டது எனது நினைவுக்கு வருகிறது. அதைப் பற்றி விவரிக்க இயலுமா?
* சச்சிதானந்தன் கவிதைகள், ஆலிலையும் நெற்கதிரும், உழவனின் பாடல் எனப் பல தொகுப்புகளாக சச்சிதானந்தன் கவிதைகளை மொழி பெயர்த்திருக்கிறேன். அவற்றுள் 'ஆதிகவிகள்' என்ற கவிதையும் ஒன்று. இந்திய மரபில் வால்மீகியை ஆதிகவி என்பார்கள். ஆனால் சச்சிதானந்தன் சங்கக் கவிஞர்களை ஆதிகவிகள் என அழைக்கும் பரிமாணம் வியப்பூட்டுவது.
'மேற்கு மலைச் சிகரங்களாய் உயரும் என் திராவிட குலத்தின் ஆதி கவிகளே' - என்று கவிதைத் தொடக்கமே ஆசேரியப்படுத்துகிறது. மொழியின் அழகு வெள்ளமாய்த் ததும்புகிறது.
'எந்தக் குன்றுகளின் வைகறைகள்
உங்கள் வரிகளில் இத்தனை செம்பொன்னும் இத்தனை பூக்களின் நறுமணமும் நிறைத்தன?'
& என்று சங்கக் கவிகளிடம் அடுக்கடுக்காக வினவிக் கொண்டே போகிறார். முடிக்கிறபோது சொல்கிறார்.
'ஆதி கவிகளே
என் வார்த்தைகளுக்கு உங்கள் பழைய மொழியின்
ஆற்றலையும் கனிவையும் ஊட்டுங்கள் என் கடும்பயணத்தைத் தொடங்குகிறேன் என் நாட்டின் குருதிகளை நோக்கியும்
குருத்துகளை நோக்கியும்
ஒரு புதிய உணர்வின் தளிர்களைத் தேடி ஒரு புதிய உறவின் உறுதியைத் தேடி'
"சங்கக் கவிதையே தன் தொப்புள்கொடி உறவென" சொல்லும் சச்சிதானந்தன் பார்வை நம் கவிகள் தொடாத இடம்.
* அன்னம் விடுதூது / வள்ளுவம் / கவிக்கோ / கணையாழி ஆகிய இதழ்களின் ஆசிரியர் குழுவில் பணியாற்றியுள்ளீர்கள். அந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும்.
* நீங்கள் குறிப்பிட்ட இதழ்களை முறையே மீரா, பல்லடம் மாணிக்கம், ரகுமான், ம. இரா"ஜந்திரன் ஆசிரியர்களாக இருந்து நடத்தினர். அவற்றில் ஆசிரியர் குழுவில் இருந்து பங்காற்றியுள்ளேன். அது எனக்குச் சிறந்த அனுபவம்.
* பாரதி குறித்த உங்களது ஆங்கில நூல் பற்றிக் குறிப்பிடவும்.
* பாரதியைப் பற்றிய என் ஆய்வேடு 'Bharati and Vallathol - A Comparative study' இரு கவிஞர்களின் பின்புலம், பொதுமைக் கருத்துக்கள், தனிச் சிறப்புக்கள் எனப் பல தலைப்புகளில் ஒப்பீடு செய்துள்ளேன்.
* பாரதி குறித்த உங்களது கண்ணோட்டத்தை அனைவரும் அறிவர். பாவேந்தர் பாரதிதாசன் குறித்த உங்களது பார்வை என்ன?
* பாவேந்தரைப் பார்த்து மகிழ்ந்துள்ளேன், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவனாக, நிலவுப் பூ நூலுக்கு அணிந்துரை கேட்ட இளங்கவியாக, பொள்ளாச்சி பாரதி விழாவில் அவரை வரவேற்று உபசரிக்கும் விழாக்குழு உறுப்பினராகச் சந்தித்திருக்கிறேன். எந்தக் கவிஞருக்கும் தராத சிறப்பைத் தம் அணிந்துரையால் எனக்குத் தந்தவர்.
'கவிதை ஒவ்வொன்றும் அமிழ்தாக நான் கண்டேன்'
'வீட்டிற் குறட்டைவிட்ட செந்தமிழர் கண்விழிக்க வெற்றி இலக்கியத்தை அன்றளித்த பாரதி
போல்
பாட்டை திறக்க வந்த பாலசுப்பிரமணியப்
பைந்தமிழ்ப் பாவாணர்'
- என்றெல்லாம் இந்தக் குருவி தலையில் பனங்காயை வைத்தவர் பாவேந்தர்.
பாரதியையும் பாரதிதாசனையும், 'The two great moderns' என்று கவிஞர் பாலா வியப்பது போலவே நானும் இருவரையும் ஒரு தலைப்புள்ளின் ஈருயிர் என்றே மதிப்பிடுவேன்.
பாரதி என்ற தீபத்தில் கொளுத்திய தீப்பந்தம் பாவேந்தர்.
* ஈழ இலக்கியங்களோடான உங்களது பயணம் குறித்து அறிய ஆவல்.
* கைலாசபதி, சிவத்தம்பி இருவரையும் அறிந்தவன் நான். என்னிடம் சிவத்தம்பி அன்பும் நெருக்கமுமாகப் பழகியவர். எஸ். பொன்னுத்துரை எனக்கு மூத்த சகோதரர் போல, தீவிரமான படைப்பாளி, இலண்டன் பத்மநாப அய்யரை இங்கும் இலண்டனிலும் சந்தித்து மகிழ்ந்திருக்கிறேன். சேரனின் படைப்பையும் அறிவேன். அவருடைய தந்தையார் மஹாகவியை நான் ஈழத்தின் பாரதி என்று கூறுவேன்.
தமிழ்நதி, ஷோபா சக்தி, முத்துலிங்கம் ஆகியோரை இன்று வாசித்து நேசிக்கிறேன். முத்துலிங்கம் நவீனத் தமிழ் இலக்கியத்தில் ஒரு சிகரம்.
* பெரியசாமித் தூரன் அவர்கள் குறித்து நீங்கள் பேசாத நாளில்லை. அவர் மீதான உங்கள் ஈர்ப்பு பற்றித் தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.
* தூரன் அவர்கள் பன்முகப் பேராளுமை மிக்கவர். சிறுகதை, நாடகம், கவிதை, கட்டுரைகள் பல தொகுதிகள் தந்தவர். பண்பட்ட படைப்பாளி, பித்தன், காலசேக்கரம் இதழ்கள் நடத்தியவர். இன்றைக்கும் தனிச் சிறப்பாகக் கொண்டாட வேண்டிய கலைக் களஞ்சியம், சிறுவர் கலைக்களஞ்சியம் தந்த மகத்தான தொகுப்பாசிரியர். தமிழ்ப் பண்பாட்டின் ஒரு கிளையான இசைத்துறையில் பெரும் பங்களிப்பை நல்கியவர் 'உள்ளத்துள் மின்னல் பூச்செண்டு கட்டி, வெள்ளத்துள் எங்கோ விளையாட விட்ட' கலைஞர் அவர்.
* மொழிபெயர்ப்பில் உங்கள் ஈடுபாடு குறித்து அறிய விரும்புகிறோம்?
* மூன்று மொழிகளில் மாணவப் பருவத்திலிருந்தே எனக்குப் பயிற்சியும் ஆர்வமும் இருந்தது. மலையாளம் எனக்குப் பாட மொழியாக இருந்தது. ஆங்கில நூல்களைத் தேடிப் படிக்கும் ஆர்வம் அடைந்தது. அதனால் ஆங்கிலத்திலிருந்து முதலில் மொழிபெயர்க்கலானேன். என் முதல் கவிதைத் தொகுப்பான 'நிலவுப்பூவில்' ஆங்கிலப் பூங்கா என்ற பிரிவில் கீட்ஸ், வால்டர் டிலாமர் முதலிய கவிஞர்களின் பாடல்களை மொழி பெயர்த்திருந்தேன். நான் எழுதிய தொடக்க காலக் கட்டுரைகளில் ஒன்று ஷெல்லியின் 'மேல் காற்று' கவிதை பற்றியது. அந்தக் கவிதையையும் அதில் தந்திருந்தேன்.
தொடர்ந்து மலையாளத்திலிருந்து சச்சிதானந்தன், ஓ.என்.வி. குறுப்பு, கே.ஜி. சங்கரப்பிள்ளை போன்றோர் கவிதைத் தொகுப்புகளை மொழிபெயர்த்தேன். அதே சமயம் லலிதாம்பிகா சுந்தர் ஜனத்தின் 'அக்கினி சாட்சி' பெரும்படவம் ஸ்ரீதரனின் ' ஒரு சங்கர்தனம் போல' எம்.டி.யின் 'வாரணாசி' அம்பிகா சதன்மாஸ் காடின் 'என்மத ஜெ', கே.ஆர். மீராவின் 'அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்' ஆகிய நாவல்களையும் மலையாளத்திலிருந்து மொழி பெயர்த்தேன். எம்.பி. வீரேந்திரகுமாரின் 'வெள்ளிமலையின் மீது' பயணநூல் என்னால் மொழிபெயர்க்கப்பட்டது.
ஆங்கிலம் வழி 'தேனீக்களும் மக்களும் (மோஸ்கோ வெளியீடு), அப்துல் கலாமின் '2020 ஆண்டுகளுக்கு அப்பால்', கலீல் ஜிப்ரானின் 'மணலும் நுரையும்' 'பித்தன்' 'நாடோடி' 'தேவ தூதர்' 'தேவ தூதரின் தோட்டம்' 'மனித குமாரன் ஏசு' கலீல் ஜிப்ரானின் வாழ்கை வரலாறு நூல்களை மொழி பெயர்த்தேன்.
அண்மையில் சிவராம் காரந்தின் சுயசரிதையான 'ஞானக்கிறுக்கனின் பத்து முகங்கள்' வெளியிட்டுள்ளேன். இன்னும் மொழிபெயர்ப்பேன்.
* நேஷனல் புக் டிரஸ்ட், ஞானபீடம், இந்தியக் கலாசோர உறவுகளுக்கான குழு (Indian Council for Cultural Relations) ஆகியவற்றின் தொகுப்பில் இடம் பெற்றுள்ள உங்கள் கவிதைகளின் விவரம் பற்றி அறியத் தரவும்.
* இந்த அமைப்புகள் தொகுத்த கவிதைத் தொகுப்புகளில் என் கவிதைகள் இடம் பெற்றதுண்டு. ஏதோ ஓர் அமைப்புக்காக தி. ஜானகிராமனும் சிட்டியும் தொகுத்துப் பாராட்டிய என் கவிதைகளில் ஒன்று 'தனி மூங்கில்' மற்றதெல்லாம் நினைவில் இல்லை.
* அருட்செல்வர் மொழிபெயர்ப்பு மையத்தின் செயல்பாடுகள் பற்றிக் குறிப்பிடுங்கள்.
* அருட்செல்வர் மறைவுக்குப் பிறகு அவர் பெயரால் அவருடைய மகனார் மாணிக்கம் என்னை அழைத்து மொழிபெயர்ப்பு மையத்தின் பொறுப்பை அளித்தார். பிற மொழிகளிலிருந்து தமிழுக்கு எந்தத் துறைப் படைப்பாக இருந்தாலும் மொழிபெயர்த்தளிக்கிறோம். ஐம்பதுக்கு மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளோம். அப்துல் கலாம், கலீல் ஜிப்ரான், சிவராம் காரந்த், நொபுரு கராஷிமா, நிக்கோலஸ் டர்க்ஸ், தஸ்தயெவ்ஸ்கி, த.வி. வெங்கடேஸ்வரன் முதலிய பலருடைய நூல்களை வெளியிட்டுள்ளோம். ஆழ்கடலில் நீள் பயணம் செய்கிறோம்.
அருட்செல்வர் நூற்றாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 'அருட்செல்வர் மொழிபெயர்ப்பு விருது' வழங்கி வருகிறோம். இதில் முதல் பரிசாக ஒரு நூலுக்கு இரண்டு இலட்ச ரூபாயும், இரண்டாம் பரிசாக இரு நூல்களுக்குத் தலா ஐம்பதாயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாகத் நான்கு நூல்களுக்குத் தலா இருபத்தைந்தாயிரம் ரூபாயும் வழங்கி வருகிறோம்.
* கவிஞர் சிற்பி அறக்கட்டளை பற்றிய விவரங்களைப் பகிர வேண்டுகிறோம்.
* சிற்பி அறக்கட்டளை ஓர் எளிய முயற்சி. 1996 இல் என் மணிவிழா நடந்தபோது தொடங்கப்பட்டது. கவிதைக்கு சாகித்ய அகாதமி பரிசுகள் வழங்கப்படாத ஒரு சூழ்நிலையில் கவிதைக்கென்றே பரிசளிக்க முற்பட்டேன். முதல் விருது அப்துல்ரகுமானுக்குத் தந்தேன். இன்று 28 ஆண்டுகள் ஆகிறது. பழமலய், சி. மணி, தேவதேவன், புவியரசு, பாலா, கல்யாண்ஜி, தமிழ்நாடன், தமிழன்பன், வ.ஐ.ச.ஜெயபாலன், லெனின் தங்கப்பா, சுகுமாரன், இன்குலாப், கலாப்ரியா, இளம்பிறை, அபி, லீனா மணிமேகலை, நா.முத்துக்குமார், காசி ஆனந்தன், இந்திரன், மு.மேத்தா, ரவிசுப்பிரமணியம், எஸ்.வைதீ ஸ்வரன், புலமைப்பித்தன், மகுடேசுவரன், தேவதசேன், கேபாரதி, பிருந்தாசாரதி, வசந்தகுமாரன், அமுதபாரதி, நா.வே. அருள் முதலிய பலர் விருது பெற்றவர்கள்.
இவர்கள் தவிர தமிழச்சி தங்கப்பாண்டியன், அ.வெண்ணிலா, அன்பாதவன், பழநிபாரதி, கடற்கரய், சக்தி"ஜாதி உட்படப் பலர் இலக்கியப் பரிசு பெற்றுள்ளனர்.
சிறப்பு விருதுகள் ஜெயகாந்தன், மீரா, மணியம்செல்வன், அப்துல்காதர், புகழேந்தி தங்கராஜ், இராம.குருமூர்த்தி உட்படப் பலருக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பயணம் தொடர்கிறது.
* உங்களது திரைப்பட அனுபவம் குறித்து அறிய விழைகிறோம்.
* திரைப்பட அனுபவம் கசப்பானது. என் துண்டறிக்கை ஒன்றைப் படித்து மகிழ்ந்த பாரதிராஜா கிழக்கே போகும் ரயில் படத்துக்குப் பாட்டெழுத அழைப்பு விடுத்தார். தயாரிப்பாளர் ராஜ் கண்ணு பொள்ளாச்சி வட்டாரம் சார்ந்தவர். இளையராஜா முன் நானும் முத்துலிங்கமும் பாட்டெழுத அமர்ந்தபோது எனக்குக் கதைச்சுருக்கம் சொல்லப்பட்டிருக்கும் என்று பாரதிராஜா எண்ணினார். யாரும் சொல்லவில்லை. அத்துடன் முத்துலிங்கம் என்னை மறைமுகமாக அன்னியப்படுத்தி, ராஜாவிடம் "அண்ணா, நாங்க உங்களை நம்பி இருக்கிறோம்" என்று பலமுறை சொன்னார். நான் காயம் பட்டுப் போனேன். என் இரண்டு பாடல்கள் ஏற்கப்பட்டன. அதனிடையே கங்கைஅமரனுக்கு வாய்ப்புத் தர என் பாடல் ஒன்று தவிர்க்கப்பட்டு, 'மலர்களே நாதசுரங்கள்' பதிவு செய்யப்பட்டது. அது கனவுக் காட்சியாதலால் செலவு அதிகம் ஆகுமென்று தயாரிப்பளரிடம் சொல்லி படத் திலிருந்து நீக்கப்பட்டது. இந்த அவலத்தால் பாடல் எழுதுவதை அன்றே விட்டுவிட்டேன்.
சில ஆண்டுகளுக்குப் பின் பாரதிராஜா பேசும் ஒரு கூட்டத்துக்குச் சென்னையில் தலைமை தாங்கினேன். அக்கூட்டத்தில் பாரதிராஜா எனக்கு வாய்ப்பளிக்காமல் போனதற்காகப் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார். மு.மேத்தாவின் கண்ணீர்ப்பூக்கள் 25 ஆம் பதிப்பு விழா கலைஞர் தலைமையில் நடந்தபோது வாலி என் நல்லபாட்டு தவிர்க்கப்பட்டது ஏனோ என வினா எழுப்பினார். இளையராஜா கூட்டத்தில் இருந்தார்.
நீண்ட காலம் கடந்த பிறகு இளையராஜா என்னிடம் அன்பு பாராட்டி தொலைபேசியிலேயே ஒரு பாடல் சொல்லும்படி கேட்டார். நான் தயங்கினேன். பிறகு ஏதோ சொன்னேன். திரையில் வெளிவந்த அந்தப் பாடலை நான் கேட்கவில்லை. ஆனால் அதற்குப் பத்தாயிரமோ, பதினைந்தாயிரமோ பணத்தை ராஜா அனுப்பி வைத்தார்.
இளையராஜா தமிழகத்தின் பெருமை. எனவே அவரைக் குறித்து எனக்கு வருத்தம் ஏதுமில்லை.
* திருக்குறளுக்கு உரை எழுதிய பின்னணி பற்றிக் கூறுங்கள்.
* புதுமலர் பதிப்பக நிறுவனர் கண. குறிஞ்சி அவர்கள் விரும்பிக் கேட்டதால் திருக்குறளுக்கு ஒரு சிற்றுரை எழுதினேன். எண்ணிப் பார்த்திராத ஒரு நல்வாய்ப்பு இது. இரண்டு பதிப்புகளை அவர் வெளியிட்டார். இப்போது என்சிபிஎச் பல பதிப்புகளைக் கொண்டு வந்துள்ளது.
திருக்குறள் குறித்து ஒரு நூல் எழுதும் ஆசையை இச்சிற்றுரை தூண்டி விட்டிருக்கிறது. வயதும் காலமும் உடல்நலமும் ஒத்துழைத்தால் எழுதுவேன்.
* "எனக்கு என் கிராமத்து நதி வெறும் தண்ணீர் ஊர்வலம் அல்ல. அதன் அசைவு என் தமிழ். அதன் அலை என் கலை. அதனுள் நானும், என்னுள் அதுவும் கரைந்து கலந்திருக்கிறோம்" என நீங்கள் குறிப்பிடும் அந்தச் செல்லமான நதி உங்கள் படைப்பு அனுபவமான இரசவாதத்தைப் பதிவிடுங்கள்.
* நான் எங்கள் கிராமத்து நதியான, ஆழியாற்றின் பிள்ளை. என் ஆசைகள், கனவுகள், சோகங்கள், நினைவுகள் அனைத்தினூடும் கரைந்து கலந்து போன நதி அது.
அதுவே என் இலக்கிய நதி. என்று பிறந்தது என்றறியாத இலக்கியம் போலவே அந்த நதி. நதியில்லாமல் நானில்லை. அதன் அசைவு, இசை, பாய்சேல், தேக்கம், அலையோசை எல்லாம் என் வாழ்க்கைக்கும் என் படைப்புக்கும் நெருக்கமானவை.
காலம், வாழ்க்கை, இலக்கியம் எல்லாவற்றுக்கும் உருவகம் ஒரு கிராமத்து நதி. எனக்கு முன்னும் இருந்தது, பின்னும் இருக்கும்; என் எழுத்துக்களில் உயிராய், உணர்வாய், இரத்தமாய், கண்ணீராய் வியர்வையாய் அந்த ஆறு ஓடிக்கொண்டே இருக்கும்.
- கண.குறிஞ்சி