முன்னுரை
பழந்தமிழ் மக்கள் உடற்கூறுகள் பற்றிய அறிவிலும், மருத்துவம் பற்றிய புரிதலிலும் சிறந்து விளங்கினர். உலகில் பல்வேறு மருத்துவ முறைகளுக்கிடையே தனக்கென தனி மரபு சார்ந்த மருத்துவ முறைகளை உருவாக்கி முத்திரை பதித்தவர்கள் தமிழர்கள். நாட்டுப்புற மருத்துவம், பாட்டி வைத்தியம், சித்த மருத்துவம், வீட்டுவைத்தியம், மூலிகை மருத்துவம் எனப் பல பெயர்களில் வழங்கப்பட்டு வந்த மருத்துவ முறையே நம் தமிழர் மருத்துவம். அறிவியல். தொழில்நுட்பம் போன்றவற்றில் வளர்ந்து நிற்கும் தற்கால மருத்துவ முறைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கவல்லது நம் பழந்தமிழ் மருத்துவமுறைகள். சமுதாயத்தின் காலக்கண்ணாடியாகவும், வரலாற்றுப் பதிவுகளாகவும் விளங்கும் இலக்கியங்கள் வழி நம் தமிழரின் மருத்துவப்பெருமை வெளிப்படுகிறது.
நோய், பிணி
நோய், பிணி ஆகிய இருசொற்களுமே சங்க இலக்கியங்களில் கையாளப்படுகின்றன. நோய் என்பது சிறிதுகாலம் இருக்கக்கூடியது. உடம்பை சிறிதுகாலம் நொய்த்து எடுத்துவிட்டு மருந்தின் உதவியால் சரிசெய்யக்கூடியது. பிணி என்பது இடையறாது தொடர்ந்து துன்புறுத்தக் கூடியது. நோய், பிணி இவ்விரு சொற்களுமே சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.
‘வரினும் நோய் மருந்து அல்லர் வாராது’ (நற்றினை -64/10)
‘நோய்க்கு மருந்தாகிய கொண்கன் தேரே’ (ஐங்குறுநூறு- 101/5)
போன்ற இலக்கியப் பாடல்வரிகள் இதற்குச் சான்றுகளாகின்றன.
‘நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்
வாய் நாடி வாய்ப்பச் செயல் ‘ (குறள் – 948)
என்ற குறள், நோய்க்கானக் காரணத்தை அறிந்து அதற்கேற்ப சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
மருந்து உட்கொண்டாலும் சிறிது இடைவெளியில் மீண்டும் உருவெடுப்பது பிணி எனப்படுகிறது. எனவேதான் மணிமேகலைக்காப்பியம் பசியை ‘பிணி’ எனக் குறிப்பிடுகிறது. ஆதிரைபிச்சையிட்ட காதையில் பசியைப்ற்றிக் குறிப்பிடுகையில்.
‘அமுத சுரபியின் அகன் சுரை நிரைதரப்
பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுகென
ஆதிரை இட்டனள் ஆருயிர்மருந்து என்’ 1
எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மாணிக்கவாசகர் எட்டாம் திருமுறை புணர்ச்சிப்பத்தில்
‘தாதாய் மூவேழுலகுக்குந்
தாயே நாயேன் தனை யாண்ட
பேதாய் பிறவிப் பிணிக்கோர் மருந்தே’ 2
என மனிதப்பிறவியைப் பின்னணியாகக்கொண்டு பாடல் இயற்றுகிறார். இவ்விலக்கியங்கள் வழி, பிணியின் சொல்லாடலை உணர முடிகிறது.
‘மருந்து’ சொல்லாட்சி
குறிப்பிட்ட சில பொருள் அல்லது பொருட்களின் கலவை நோய்க்கான சிகிச்சையில், அல்லது நோய்த்தடுப்பில் பயன்படுத்தப்படும் பண்புகளைக் கொண்டுள்ளதோ அந்தப்பொருள் மருந்து எனப்படுகிறது. இலக்கியங்களில் மருத்துவம் பற்றிய குறிப்புகளிருப்பது போல சில நூல்களுக்குப் பெயர்கள் மருத்தின் பெயராக வைத்துள்ளனர். திரிகடுகம், ஏலாதி, சிறுபஞ்சமூலம் போன்றவை இதற்குச் சான்றுகளாகும். சங்க இலக்கியங்களில் மருந்து என்ற சொல் பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.-
‘மருந்து பிறிது இல்லை யான் உற்ற நோய்க்கே’ - (நற்றிணை 80/9)
‘மருந்து எனின் மருந்தே வைப்பு எனின் வைப்பே’ (குறுந்தொகை- 71/1)
‘நோய்க்கு மருந்து ஆகிய பணை தோளோளே ‘(ஐங்குறுநூறு – 99/4)
‘மருந்து பிரிது இன்மையின் இருது வினை இலனே’ (அகநானூறு- 147/14)
‘மருந்து கொள் மரத்தின் வாள் மடு மயங்கி’ (புறம் 180/5)
போன்றவை சங்க இலக்கிய எடுத்துக்காட்டுகளாகும். இவைபோலவே
‘மருவு நல்லாதன் மருந்து’ (திரிகடுகம் -105/4)
‘தலைமகனைத் தாழ்க்கும் மருந்து’ (சிறுபஞ்சமூலம் 51/4)
போன்ற சில எடுத்துக்காட்டுகள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களிலுள்ள மருந்து என்ற சொல்லின் பயன்பாட்டை உணர்த்துகிறது.
மருந்தின் வகைகள்
பண்டையத் தமிழர்கள் உணவே மருந்து மருந்தே உணவு என்ற வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்.
‘உண்டி முதற்றே உணவின் பிண்டம்
உணவெனப்படுவது நிலத்தொடு நீரே’ 3
என்கிறது புறம்.
ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, அலோபதி போன்ற மருத்துவமுறைகள் போன்று, தமிழர்கள் பயன்படுத்திய மருத்துவ முறைகளை ‘சித்த மருத்துவம்’ என்று அழைத்தனர். இயற்கையில் கிடைக்கக்கூடிய தாவரம், மரம், செடி, கொடி, பூ, புல், பூண்டு, கொடி, வேர், பட்டை, இலை, பிஞ்சு ,காய், பழம் விதை முதலியவைகளைக் கொண்டு தயாரிக்கப்படுகின்ற மாத்திரை, கட்டுகள், பொடிகள், தைலங்கள், கசாயங்கள் போன்றவை சிறந்த மருத்துவ முறைகள் ஆகின்றன.
சங்க இலக்கியங்களில் மருத்துவக் குறிப்புகள்
‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்ற பழமொழி நோயின்றி வாழ்தலின் முக்கியத்துவத்தை எடுத்தியம்புகிறது. உடம்பை நோய்களிலிருந்து பாதுகாக்க உணவும் ஒழுக்கமும் சரியான முறையில் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை இலக்கியங்கள் உணர்த்துகின்றன. உணவை உட்கொள்ளும் முறை அறிந்து உண்ண வேண்டும் என்பதைத் தெளிவாக எடுத்தியம்புகிறது.
‘கிடந்துண்ணார் நின்றுண்ணார், வெள்ளிடையும் உண்ணார்
சிறந்து மிகவுண்ணார், கட்டின்மேல் உண்ணார்
இறந்தொன்றும் தின்னற்க நின்று’ - 4
என்ற ஆசாரக்கோவை பாடல் நாவைக்காத்து வேண்டிய அளவு மட்டும் உண்பவனுக்கு நோய்கள் வராது என்பதை விளக்குகிறது. சிறுபஞ்சமூலத்தின் ‘காத்திருப்பான் காணான் பிணி’ (8;4) என்ற வரி. முறைப்படி உணவை உட்கொண்டால் மருந்தின் தேவையே இராது என்பதை உணர்த்துகிறது
‘மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்திய
தற்றது போற்றி உணின் ‘ 5
என்ற குறள். இலக்கியங்களில் நோயின்றி வாழ்தலின் முக்கியத்துவம் பற்றிக் குறிப்பிடப்படுவது போலவே, சில இடங்களில் மருத்துவக் குறிப்புகளும் விளக்கப்படுகின்றன.
போர்க்களத்தில் விழுப்புண் ஏற்படுகின்ற வீரர்களுக்குப் புண்மீது பஞ்சு வைத்துக் கட்டுகின்ற நவீன மருத்துவ முறை பழங்காலத்திலேயே இருந்ததை, ‘பஞ்சியும் களையாப் புண்ணர்’ (353:16) என்ற புறநானூற்று அடி உறுதி செய்கிறது. இக்காட்சி பாசறையின்கண் என்பதால் தற்போது இராணுவ மருத்துவமனைகள் இயங்குதல் போல அக்காலத்திலும் இராணுவ மருத்துவமனைகள் அமைக்கப்பட்டிருப்பது அறியமுடிகிறது. அறுவைசிகிச்சை மருத்துவ முறை பற்றியக் குறிப்பு பதிற்றுப்பத்தில்,
‘மீன்றோர் கொட்பிற் பனிக்கயம் மூழ்கிச்
சிரல் பெயர்ந்தன்ன நெடுவெள் ஊசி
நெடுவசி பரந்த வடு வாழ் மார்பின்’ 6
என்ற அடிகள் வழி விளக்கப்படுகிறது. சிரற்பறவை நீரில் மூழ்கி மேலெழும்போது அதன் அலகில் மீன்கள் மாட்டி இருபுறமும் தொங்குவதுபோல, காயங்களின் மேலெழும் ஊசியின் காதில் தையல் இழைத் தொங்குதல் ஒப்புமையாகக் காட்டப்பட்டுள்ளது.
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் என்ற கொள்கை உடையவர்களான சித்தர்கள் ‘காயகற்பம்’ எனும் மருந்தினை உண்டு யோகத்தில் ஈடுபட்டு நீண்டகாலம் வாழும் வல்லமையை பெற்றிருந்தார்கள். இயற்கையாக மனித உடலில் ஏற்படும் நரை, மூப்பு போன்றவற்றைப் போக்கும் இயல்புடையதே காயகற்பமாகும். இதனைச் சாகா மருந்து, அமுதம் என்றும் கூறுவர். இது குறித்துப் பாம்பாட்டி சித்தர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
“காலமெனும் கொடிதான கடும்பகையைக்
கற்பமென்னும் வாளினாற் கடிந்து
சாலப் பிறப்பிறப்பினை நாம் கடந்தோம்
தற்பறங் கண்டோமென்று ஆடாய்பாம்பே” 7
மருத்துவர் பெருமை
நோய்க்கானக் காரணமறிந்து, சரியான நேரத்தில், சரியான முறையில் கொடுத்து, நோயைத்தீர்ப்பது மருத்துவரின் கடமையாகக் கருதப்படுகிறது. தொல்காப்பியர் மருத்துவரை ‘நோய்மருங்கு அறிநர்’ (தொல்.அகம்.192) என்கிறார். மேலும் மருத்துவரை ‘அறவோன்’ (நற்.136) ‘மருந்தன்’, ‘மருத்துவன்’ (கலி17:20;21) எனவும் அழைத்தனர். வள்ளுவர் மருத்துவ நூல்களை கற்றுத் தேர்ந்தான் என்ற பொருளில் ‘கற்றான்’ (குறள் 949) என்றும், நோய்களைத் தீர்க்கும் மருத்துவ அறிவு பெற்றவன் என்ற நோக்கில் ‘தீர்ப்பான்’ (குறள்.950) என்றும் குறிப்பிடுகிறார். மருத்துவர் நோயின் தன்மைக்கு ஏற்ப மருந்துகளை ஆய்ந்து, கொடுத்து நோயினை குணப்படுத்தும் தன்மை வாய்ந்தவராக இருந்தார் என்பதை உணர்த்துவதாக அமைந்துள்ளது நற்றிணையின்
‘அரும்பிணி உறுநர்க்கு, வேட்டது கொடாஅது,
மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல’(நற் 136:2-3)
என வரும் வரிகள்.
மருத்துவன் நோயுற்றவனின் வயதளவையும், நோயின் அளவையும், காலத்தையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும் என்பதை
‘உற்றான் அளவும் பிணி அளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்’ (குறள்-950)
என்ற குறள் வழி விளக்குகிறார் வள்ளுவர்.
எளிய சில வீட்டு வைத்தியங்கள்
ஊருக்கு ஒரு மருத்துவர். ஒரு வைத்தியர் என்ற காலம் மாறி உடலில் உள்ள ஒவ்வொரு உடல் உறுப்பிற்கும் தனித்தனி மருத்துவ முறை என்ற காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மருத்துவப் பெயர்ப்பலகைகளைக் கண்டு பணத்தைச் செலவழிக்காமல், அடிக்கடி ஏற்படுகின்ற சில சிறிய உடல் உபாதைகளுக்கு நாம் வீட்டிலேயே வைத்தியம் பார்ப்பது, பணத்தை மிச்சப்படுத்துவதோடு ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும். தடுப்பூசியை நோக்கி ஓடிக்கொண்டிருந்த கொரோனா போன்ற கொடு நோய்க்கும், மிளகு ரசம் வைத்தும், இஞ்சி, எலுமிச்சை, மஞ்சள் கொதிநீர் வைத்தும் தீர்வு கூறியவர்கள் நம் தமிழர்கள். பாட்டி வைத்தியமாகக் காலங்காலமாக போற்றப்பட்டு வரும் சில வைத்திய முறைகளை நாம் கடைப்பிடிப்பதால் அடிக்கடி மருத்துவமனைக்குச் செல்வதைத் தவிர்க்கலாம். சில வீட்டு வைத்திய முறைகள்.
1. ஓமம், பனங்கற்கண்டு, மிளகு இவற்றைப் பாலில் போட்டுக் காய்ச்சி, காலை மாலை குடித்து வர, சளித் தொல்லைக் குறையும்.
2. வேப்ப இலையை சிறிது எடுத்து அரைத்து, நீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடித்தால் பூச்சித் தொல்லை அகலும்.
4. சுக்கு, மிளகு, சீரகம், கொத்தமல்லி விதை, கறிவேப்பிலை இவற்றைச் சம அளவு எடுத்து வறுத்துக் கசாயமாக வைத்துக் குடித்தால் வரட்டு இருமல் குறையும்.
5. வேப்பம் பூவை நன்கு காயவைத்துத் தூளாக்கி வெந்நீரில் கலந்து உட்கொள்வதினால் வாயுத் தொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் ஆறும்
இது போன்று சமையலறையில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களே சில வியாதிகளுக்கு மருந்தாகவும் விளங்குகின்றன.
தவிர்க்க வேண்டியவை
நோயின்றி வாழ நமது வாழ்க்கை முறையும் முக்கியப்பங்கு வகிக்கிறது. பகட்டுவாழ்க்கை வாழ நினைக்கும் நாம் விளம்பர வாழ்க்கையையும், துரித உணவு வகைகளையும் விரும்பி ஏற்கிறோம். மண்ணாலான வீட்டு உபயோகப் பொருட்கள், பீங்கான், கல்சட்டி, கண்ணாடி,வெண்கலம், செம்பு,பித்தளை போன்றவற்றாலான பாத்திரங்களைப் பயன்படுத்தி வந்தனர். தற்காலத்தில் அழகை விரும்பி, ஆரோக்கியத்தை மறந்து உப்பு முதல் அனைத்து உணவுவகைகளையும், குடிதண்ணீரையும் பாத்திரங்களில் பத்திரப்படுத்துகிறோம். நெகிழி பொருட்களைத் தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறப்பு. கவர்ச்சிக்காகவும் ருசிக்காகவும் பல கலவைகளை இட்டு, பல்வேறு வண்ணங்களிலும், வடிவங்களிலும் வருகின்ற பொட்டல உணவு வகைகளைத் தவிர்த்தல் சிறந்தது. குழந்தைகள் விரும்பி உண்ணும் சாலையோர உணவுகளையும், துரித உணவுகளையும் தவிர்த்தல் நலம்.
முடிவுரை
பழந்தமிழ் நூல்களில் மருத்துவமுறைகள், பயன்படுத்தப்பட்ட மருந்துகள், மருத்துவன் இயல்பு, மருந்து பெறும் முறைகள் போன்றவை இக்கட்டுரை வாயிலாக அறிய முடிகின்றது. உயிரைப்பேண உணவு உட்கொள்ளும் முறை, முறையான உறக்கம், இயற்கையோடு இயைந்த வாழ்வியல் போன்றவை மனிதனை நோய்களிலிருந்து காக்கின்றன. மனித இனத்தின் பகுத்தறிவிற்கு இயற்கை அளித்தப் பரிசாகிய பழந்தமிழர் மருத்துவமுறையை பாதுகாத்து வளர்த்தல் நாம் அடுத்த தலைமுறைக்காக சேர்த்து வைக்கும் ஆரோக்கியமான எதிர்காலமாகும். துரித உணவுகளிலும் மேலைநாட்டுக் கலாச்சாரங்களிலும் ஆரோக்கியமற்ற அலங்கார உணவு வகைகளிலும் சிக்கியிருக்கும் நம் அடுத்தத் தலைமுறையினருக்கு, தமிழர் மருத்துவத்தின் சிறப்புகளையும், நன்மைகளையும் பயன்பாடுகளையும் எடுத்தியம்புவது நமது கடமையாகும்.
அடிக்குறிப்புகள்
- மணிமேகலை, ஆதிரை பிச்சையிட்டகாதை.பா.133
- திருவாசகம் சில சிந்தனைகள் - 446/9
- புறநானூறு,பா.18
- ஆசாரக்கோவை-23
- திருக்குறள்,942
- பதிற்றுப்பத்து -42-2-4
- பதினெண்சித்தர்கள் பெரிய ஞானக்கோவை சட்டமுனி பாடல்கள்
துணைநின்ற நூல்கள்
- நற்றிணை. பொ.வே.சோமசுந்தரனார்,கழகவெளியீடு,சென்னை 1976.
- பத்துப்பாட்டு மூலமும் உரையும் (1, ) பொ.வே.சோமசுந்தரனார், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்,1973.
- திருக்குறள்,பரிமேலழகர் உரை, கழக வெளியீடு.1976.
- தமிழர் கண்ட தாவரவியல், முனைவர் வே.நெடுஞ்செழியன், உலகத்தனிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
- இலக்கியத்தில் மருத்துவக் கருத்துக்கள், கலாநிதி இ.பாலசுந்தரம், நாட்டார் வழக்கியல் கழகம், யாழ்ப்பாணம், 1990.
- முனைவர் நா.தீபா சரவணன், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை.