‘Who enters here leaves noise behind.’ - Charles Dickens

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இங்கிலாந்து தன்னை சீரமைத்துக் கொள்ள அடித்தட்டு மக்களின் உழைப்பைக் கோரியது. அதனால், 1948இல் இங்கிலாந்து அரசு தனது காலனியாதிக்க நாடுகளிலிருந்த மக்களை, இங்கிலாந்தைச் சீரமைக்கும் வேலைகளுக்கு அழைத்தது. கரீபியன் தீவு, சிங்கப்பூர், இந்தியா, தென்னாப்பிரிக்கா என மக்கள் பல்வேறு நாடுகளிலிருந்தும் சாலை போடுநர் -ஓட்டுநர்- பெயின்டர்- துப்புரவுப் பணியாளர் போன்ற வேலைவாய்ப்புகளை நோக்கிப் புலம்பெயர்ந்தார்கள். இப்படியாக 1948முதல் 1971வரை புலம்பெயர்ந்தவர்களே இங்கிலாந்தை மறுகட்டமைப்புச் செய்தனர்.

இவர்களில் அதிகமானவர்கள், கரீபியன் தீவுகளிலிருந்து புலம்பெயர்ந்த கறுப்பினத்தவர்களே. அம்மக்களிலிருந்து 1966ஆம் ஆண்டு எழுத்தாளர்கள், பாடகர்கள், இசை-நாடக-திரைபடக் கலைஞர்கள் என உதிரிகளாய் இருந்தவர்கள் பலரும் இணைந்து The Caribbean Artists Movement என்றொரு இயக்கத்தை ஆரம்பித்தனர். கலைகள் வழியே தங்களது கலாச்சார அடையாளங்களையும், கரீபியக் கதைகளையும், இலண்டன் வாழ்வியலில் சந்திக்கும் சிக்கல்களையும் தீவிரமாகப் பேசினர். இதுபோன்ற தொடர் செயற்பாடுகளினால் இங்கிலாந்தின் கலை-இலக்கியங்களில் தவிர்க்க முடியாத இடத்தினை இவர்கள் பெற்றனர்.

இவர்களும், இவர்களது வம்சாவளிகளும் “வின்ட்ரஷ் தலைமுறை- யினர்” என்ற அடையாளத்துடன் அறியப்படுகின்றனர். (வின்ட்ரஷ் என்பது கரீபியன் தீவுகளிலிருந்து மக்களை அழைத்து வந்த ஒரு கப்பலின் பெயர்). “Black Literature”யில் வின்ட்ரெஷ் கதைகள் ஒரு பிரிவாகவும் உள்ளது. அதுமட்டுமல்ல இங்கிலாந்தின் வரலாறு என்பது “வின்ட்ரெஷ்” எனும் சொல் இல்லாமல் இனி ஒலிக்க முடியாது என்ற இடத்திற்கு தங்களது வரலாற்றைப் பதிவு செய்துள்ளனர். இதற்கு அடித்தளமாக அவர்களது கலை-இலக்கியச் செயல்பாடுகளே அமைந்துள்ளது.

இதே காலத்தில், இதே பணிகளுக்காகப் புலம்பெயர்ந்த தமிழர்களோ மற்ற இந்திய வம்சாவளிகளோ இதுபோன்ற ஓர் இயக்கத்தை ஏனோ கட்டமைக்கத் தவறிவிட்டனர். அதனால்தான் என்னவோ, இங்கிலாந்து பள்ளிக் கல்வியில் காலனியாக்க வரலாறோ, ஒப்பந்தக் கூலிகளாக நாம் அடிமைப்படுத்தப்பட்ட வரலாறோ, இங்கிலாந்தின் மறுகட்டமைப்பில் தமிழர்கள் உட்பட ஆசியர்களின் பங்களிப்பு குறித்த வரலாறோ, இன துவேஷத்தின் வழியே நமக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த பத்திவுகளோ ஓர் ஊறுகாய் அளவிற்கே இடம்பெற்றுள்ளது.

கலை-இலக்கியச் செயற்பாடுகள் வழியே வரலாற்றில் நமக்கான இடத்தினைப் பெறுவதோடு நமக்கான உரிமைகளைப் பெற்று எதிர்காலத்தையும் நல்வழிப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை வின்ட்ரெஷ் தலைமுறையினர் தொடர்ந்து உணர்த்தி வருகின்றனர். இந்தப் புரிதலின் அடிப்படையிலே - இலண்டனில் கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக நான் கவனித்த தமிழர்களின் கலை- இலக்கியச் செயற்பாடுகள் குறித்து இக்கட்டுரையில் பதிவு செய்ய விரும்புகிறேன்.

தமிழ்ச்சங்கங்கள்:

இங்கிலாந்தில் தமிழர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் கட்டாயம் தமிழ்ச் சங்கங்கள் இருக்கும். அடுத்த தலைமுறையினருக்குத் தமிழைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தை முதன்மையாகக் கொண்டு இங்கிலாந்தில் நிறைய தமிழ்ச் சங்கங்கள் இயங்கி வருகின்றன. தமிழைப் பாடமாகக் கற்றுத் தருவது அதனைத் தொடர்ந்து ஆண்டு விழா, பண்டிகைக் கொண்டாட்டங்கள், பெரியவர்களுக்கான கிரிக்கெட், மாரத்தான் என விளையாட்டு சார்ந்த ஒன்றுகூடல் நிறைய நடக்கின்றன. இதில் மிகவும் முக்கியமானது “சமத்துவப் பொங்கல்” - மத அடையாளங்களைக் கடந்து பல்வேறு அமைப்புகள் இணைந்து பொங்கலைக் கொண்டாடுகின்றனர்.

இங்கிலாந்தில் மிகவும் பழமையான தமிழ்ச் சங்கம் “இலண்டன் தமிழ்ச் சங்கம்”. கிழக்கு இலண்டனிலுள்ள ஈஸ்ட் ஹேமில் இச்சங்கம் உள்ளது. சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சரான ஆர். கே. சண்முகம் மற்றும் கம்யூனிஸ்ட்டுக் கட்சி தலைவர்களில் ஒருவரான கே. டி. கே. தங்கமணி அவர்களால் 1936இல் இச்சங்கம் தொடங்கப்பட்டது. காந்தியும் இச்சங்கத்திற்கு வருகை புரிந்துள்ளார் என்ற செய்தியும் கூறப்படுகிறது. ஆனால் முறையாக 1960முதலே பதிவு செய்யப்பட்டுத் தொடர்ந்து இயங்கி வருகிறது. சங்கத்தில் 300க்கும் மேலான நூல்களைக் கொண்ட நூலகமும் உள்ளது. தமிழ்ப் பள்ளி, சுற்றுலா, பொங்கல் கொண்டாட்டம் என பல்வேறு பணிகளைச் சங்கம் செய்து வருகிறது.

இதே ஈஸ்ட் ஹேம் பகுதியில் 1975ஆம் முதல் தமிழர் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பும் இயங்கி வருகிறது. திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளியை இவர்கள் நடத்தி வருகின்றனர். தமிழர் முன்னேற்றக் கழகம் கடந்த 2023ஆம் ஆண்டு, “கலைஞர் நூற்றாண்டு விழாவை நடத்தினர். இந்நிகழ்வில் சுப. வீரபாண்டியன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இலங்கைத் தமிழர்கள் சார்பாகவும் சங்கங்கள் உள்ளன. அவர்களும் தனியே தமிழ்ப் பள்ளியை நடத்தி வருகின்றனர்.

சங்கங்களின் முதன்மையான பணியாகப் பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. வாரம் ஒரு நாள் - மூன்று மணி நேர வகுப்பு என்ற வடிவிலே புலம்பெயர்ந்த தேசங்களில் சங்கங்கள் நடத்தும் தமிழ்ப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. கொரோனாவிற்குப் பிறகு நிறைய இணைய வழித் தமிழ் வகுப்புகள் நடக்கின்றன, அதையும் இச்சங்கங்கள் ஒருங்கிணைத்து வருகின்றன. பாட வகுப்புகள், பண்டிகைக் கொண்டாட்டங்கள், ஆண்டு விழாக்கள், பட்டிமன்றங்கள், ஊடகப் பிரபலங்கள் எனப் பெரும்பான்மையான செயற்பாடுகள் அமைகின்றன. கலைகளில் குழந்தைகளுக்குப் பறையிசை, பரத நாட்டியம், வயலின், நாதஸ்வரம் உட்படப் பல்வேறு இசைக் கருவிகள் அறிமுகமாகின்றன. பறையிசை நிகழ்வுகள் பல்வேறு விழாக்களில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. அதைத்தாண்டி இச்சங்கங்கள் மூலம் இலக்கிய நிகழ்வுகள் நடைபெறுவதை நான் இதுவரை பார்க்கவில்லை. (சமீபத்தில் கம்பன் விழா நிகழ்விற்கு பாரதி கிருஷ்ணகுமார் அழைக்கப்பட்டிருந்தார்) ஆனால், இங்குத் தனிமனிதராய் சிலர் பெரும் வேலைகளைக் கலை-இலக்கியத்தில் செய்து வருகின்றனர்.

எம். பௌசர் “சமூக இயல் பதிப்பகம் - Activity Centre for Tamil Language”: இலண்டனிலும் இலண்டனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தொடர்ந்து புத்தகக் கண்காட்சிகளை நடத்தி வருகிறார். இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்த பிறகும் இலக்கியம் மீது கொண்ட தீராக் காதலால் பெரும் பொருளாதார நெருக்கடியிலும் இலண்டனில் தன்னிச்சையாக ஒரு புத்தகக் கடையையும் நடத்தி வருகிறார். “இலண்டனில் காணக் கிடைக்கும் இந்தப் புத்தகங்களைத் தமிழ்நாட்டில்கூட ஒரே இடத்தில் காண இயலாது” என்று எழுத்தாளர் கமலாலயன், இ. பா சிந்தன், முத்துகிருஷ்ணன், அ. வெண்ணிலா, ஜி. குப்புசாமி, பவா செல்லத்துரை என இவரது புத்தகத் தேர்வைக் குறித்து பல எழுத்தாளர் பெருமக்களும் குறிப்பிட்டுள்ளனர். இந்தப் புத்தகக் கண்காட்சிகளிலும், இவரது புத்தகக் கடையில் பல முக்கியமான இலக்கிய நிகழ்வுகளும் கருத்தரங்குகளும் நடைபெற்றுள்ளன.

“சமூக இயல் பதிப்பகம் - Activity Centre for Tamil Language” என்ற பெயரில் தொடர்ந்து தமிழ் இலக்கிய உலகில் பல முக்கியமான புத்தகங்களைப் பதிப்பித்தும் வருகிறார். சென்ற ஆண்டு வெளியான “ஒப்பாரி கோச்சி - மு. சிவலிங்கம்”, கவிதையும் அரசியலும் - எம். ஏ. நுஃமான், சிவசேகரம் கவிதைகள்(தொகுப்பு), புதுவை இரத்தினதுரை கவிதைகள்(தொகுப்பு), சமூத்திரனின் எழுத்துகள் (தொகுப்பு), பி. ஏ. காதரின் இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம், இலங்கை மலையகத் தமிழ் மக்களின் மறைக்கப்பட்ட பக்கங்கள் போன்ற புத்தகங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. 2024இல் -ஐரோப்பிய நாடுகளிலும் இலங்கையிலும் இவர் புத்தகக் கண்காட்சியும் அதனுடன் பல்வேறு கருத்தரங்குகளையும் ஒருங்கிணைத்து வருகிறார்.

இங்கிலாந்து வரும் தமிழ் எழுத்தாளர்களுக்கு இலக்கியம் சார்ந்து முதல் தொடர்பாக இவர் இருக்கிறார் என்று சொல்லலாம். சமீபத்தில் இவர் பவா செல்லத்துரையின் இங்கிலாந்து, ஐரோப்பிய, இலங்கைப் பயணத்தில் உறுதுணையாக இருந்து பல்வேறு நண்பர்களுடன் இணைந்து பல நிகழ்வுகளை பல்வேறு பகுதிகளில் ஒருங்கிணைத்துள்ளார். புலம் பெயர்ந்த இடத்தில் மொழி சார்ந்து ஒரு புத்தகக் கண்காட்சி நடத்துவது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று. ஆனால் பௌசர் அவர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்.

விம்பம் அமைப்பு கே. கே. ராஜா

ஓவியர் கே. கே. ராஜா அவர்கள் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக விம்பம் என்ற கலை-இலக்கிய அமைப்பை நடத்தி வருகிறார். வருடந்தோறும் இலண்டன் ஈஸ்ட் ஹேம் பகுதியில் முழுநாள் கருத்தரங்கை இரண்டு முறை நடத்துகிறார். 2024இல், தமிழ் திரைப்படம் குறித்த ஒரு கருத்தரங்கை யமுனா ராஜேந்திரன் - சொர்ணவேல் ஈஸ்வரன் ஆகியோரைக் கொண்டு நடத்தியது, அதனுடன் பஞ்சு மிட்டாய் பிரபு அவர்கள் தொகுத்த “நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம்” புத்தகத்தின் அறிமுக விழாவையும் சிறப்புற நடத்தியது. எதிர்வரும் அக். 12ஆம் தேதி “நொச்சிமுனை தர்ஹா” என்ற ஆவணப்படத்தைத் திரையிட இருக்கிறது, அதனுடன் ஆத்மா ஜாபிரின் ஆதாரம் நூல் வெளியீடும் நடக்க இருக்கிறது. சென்ற மாதம் ஈழக்கூத்தன் ஏ. சி. தாசீசியஸ் ஆவணப்பட வெளியீட்டுத் திரையிடல் நிகழ்வையும் நடத்தியுள்ளது. 2023இல் - “ஈழப் புகலிடப் படைப்புகள்”, “பெண் படைப்பாளிகள்” ஆகிய தலைப்புகளில் முழுநாள் கருத்தரங்குகளை நடத்தினார். 2022இல் நாவல், சிறுகதை அரங்கு நடத்தினார். இந்தக் கருத்தரங்குகளில் மேடை நாடகமும் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. 2022இல் மெய் வெளி குழுவின் சார்பாக “காத்தாயி காதை” நாடகத்தின் வரிகளான “எழுதப்படாத வரலாறு ஒன்றின் எரிந்து கருகிய புத்தகம் காத்தாயி காதை” இன்றும் என் நினைவுகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இலங்கையில் பல்வேறு மக்களால் வஞ்சிக்கப்பட்ட மலையக மக்களின் வரலாற்றைப் பதிவு செய்வதிலும் சமகால வாழ்வியல் மேம்பாட்டிற்கும் விம்பம் அமைப்பு பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது. கடந்த டிசம்பர்(2023) மாதம் “மலையகம் - 200” என்ற பெயரில் ஓவியக் கண்காட்சி மற்றும் சிறுகதைப் போட்டிகளை நடத்தியது. இங்கிலாந்து, தமிழ்நாடு மற்றும் இலங்கை என பல்வேறு நிலத்தில், பல்வேறு வடிவங்களில் 200 ஆண்டுக்கால வாழ்வில் மலையக மக்கள் பெற்ற துயரங்களுக்கான குரலை விம்பம் அமைப்பு பல்வேறு தோழமை அமைப்புகளுடன் இணைந்து எழுப்பி வருகிறது.

சிறார் நிகழ்வுகள்:

இந்நிகழ்வுகள் அனைத்திலும் துணை நிற்பதோடு, தொடர்ந்து அடுத்த தலைமுறை- யினருடனான உறவு குறித்தும், அதற்குச் சிறார் இலக்கியத்தின் மீது புலம்பெயர்ந்த தமிழர்கள் செலுத்த வேண்டிய கவனம் குறித்தும் சிறார் எழுத்தாளராகவும் கதைசொல்லியாகவும் நான் உரையாடி வருகிறேன். தமிழ்ப் பள்ளிகள், ஆண்டு விழாக்கள், புத்தகக் கண்காட்சிகள் என பல்வேறு தளங்களில் சிறுவர்களுக்கான நிகழ்வுகளை ஒருங்கிணைத்தும் வருகிறேன். தமிழை வெறும் பாடமாக எடுத்துச் செல்வதைக் கடந்து நம் மொழியை வாழ்வியலின் ஒரு பகுதியாய் மாற்ற வேண்டும், அதற்குப் பெற்றோர்கள் ஒரு சமூகமாய் கலை-இலக்கிய செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

எழுத்தாளர்கள் கமலாலயன், ஜி. குப்புசாமி, ஷோபா சக்தி, இ.பா. சிந்தன்(பெல்ஜியம்), காலம் இதழாசிரியர் செல்வம் (கனடா), அ. முத்துகிருஷ்ணன், தமிழ்க்கவி (இலங்கை), அ. வெண்ணிலா, குட்டி ரேவதி, புதுமலர் இதழாசிரியர் கண குறிஞ்சி, பாரதி கிருஷ்ணகுமார், பவா செல்லத்துரை என எழுத்தாளர்கள் பலரும் இங்கிலாந்து வந்திருந்த போது அவர்களுக்கான நிகழ்வுகளை ஒருங்கிணைத்துச் சிறப்பித்திருக்கிறோம். பிரிட்டிஷ் நூலகத்தின் ஆவணத் தேடல்களுக்கும் பல நேரங்களில் பலரும் உறுதுணையாக இருந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல, பயணிகளாக வரும் எழுத்தாளர்கள்-கலைஞர்களுக்குப் பெரும் துணையாய் புலம்பெயர்ந்த தமிழர்கள் உறுதுணையாக நிற்கின்றனர்.

ஒரு வலசைப் பறவை போல் பயணத்தை ருசிக்கும் கலைஞர்களுக்கு இம்மாதிரியான தனி மனிதர்கள் ஓர் வேடந்தாங்கல் என்று சொல்லலாம்.

எழுத்தாளர்கள்

இங்கிலாந்தில் மட்டும் நூற்றுக்கும் மேலான தமிழ் எழுத்தாளர்கள் உள்ளனர். அவர்களது அறிமுகம் மேற்கண்ட நிகழ்வுகள் மூலமே எனக்குக் கிடைத்தது. ஆனால். அதற்கு முன்னரே இலண்டனிலுள்ள ஒரு கிளை நூலகம் மூலம் கூலித் தமிழ் புத்தகம் எனக்கு அறிமுகமானது. கூலித் தமிழ் புத்தகத்தின் ஆசிரியர் மு. நித்தியானந்தன் அவர்களை விம்பம் நிகழ்வின் மூலம் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. கடந்த 2023ஆம் ஆண்டு, மு. நித்தியானந்தம் பவள விழா நிகழ்வும் அவரது புத்தகங்கள் வெளியீடும் இனிதே நடந்தன. பெருமளவில் வாசகர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

அதேபோல், புத்தகங்கள் போக வீட்டில் தனக்கு இடமிருந்தால் அதுவே போதும் என்று வாழும் 90வயது இளைஞர் ஐயா பத்மநாபன் அவர்களும் இலண்டனில் இருக்கிறார். அமைதியின் உருவமாய்த் தெரிந்தாலும், ஒரு புத்தகத்தின் பெயரைச் சொன்னதும் அது எங்கு யாரிடமிருக்கும் என்று தேடித் தருவதில் ஜித்தர். ஜித்தர் என்று சொல்வதைவிட அவரை இலக்கியச் சித்தர் என்று அழைக்கலாம்.

பர்தா நாவலின் ஆசிரியர் எழுத்தாளர் மஜீதாவின், அயலி தொடர் வெளியான போது அது தன்னுடைய கதை என்று கோரியவர் எழுத்தாளர் ராஜேஸ் பாலா, அரசியல் மற்றும் சினிமா விமர்சகர் யமுனா ராஜேந்திரன், மலையக தமிழர்களின் வரலாற்றை ஆவணப்படுத்தும் எழுத்தாளர் பி. ஏ. காதர், அற்றவைகளால் நிரம்பியவள் நாவலின் ஆசிரியர் பிரியா விஜயராகவன், ஞானமுருகன், நவஜோதி, “சுல்தானாவின் கனவு” மொழிபெயர்ப்பாளர் திவ்யா பிரபு, “பகத்சிங் ஏன் நாத்திகர் ஆனார்” புத்தகத்தை டீன் குழந்தைகளுக்கு எழுதிய சிவ சுப்பிரமணியன், பஞ்சு மிட்டாய் பிரபு (நான்) எனப் பல எழுத்தாளர்கள் இங்கிலாந்- திலிருந்து தொடர்ந்து இயங்கிவருகின்றனர்.

பெரியார் அம்பேத்கர் வாசகர் வட்டம்:

2024 செப். 22ஆம் தேதி இலண்டன் ஈஷ்ட்ஹாம் பகுதியில், பெரியாரின் 146ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது. இலண்டன் பெரியார்-அம்பேத்கர் படிப்பு வட்டம் இந்நிகழ்வை ஒருங்கிணைத்தது. பெரியார் பற்றாளர்களும், செயல்பாட்டாளர்களும் பங்கேற்ற இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக எழுத்தாளர், செயற்பாட்டாளர், புது மலர் இதழ் ஆசிரியர் கண. குறிஞ்சி அவர்கள் கலந்துகொண்டு “இன்றைய சூழலில் பெரியாரின் தேவை” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். 2017ஆம் ஆண்டு பெரியார்-அம்பேத்கர்-மார்க்சியச் சிந்தனையுள்ள தோழர்கள் ஒன்றிணைந்து இந்தப் படிப்பு வட்டத்தைத் தொடங்கினர். சிறு குழுவாக இணைந்து புத்தக வாசிப்பு, தொடர் கருத்தரங்குகள் என இணைய வழிச் செயற்பாட்டோடு நீட் எதிர்ப்பு, விவசாயிகள் ஆதரவுப் போராட்டங்கள் போன்ற நேரடியான களப் போராட்டங்களையும் படிப்பு வட்டம் நடத்தியுள்ளது. புலம்பெயர்ந்த இடத்திலும் தமிழ்நாடு மற்றும் ஈழ உறவுகளுக்கு எப்போதும் துணை நின்றுள்ளது. இலண்டனில் பெரியார்-அம்பேத்கர்-மார்க்ஸ் ஆகியோரின் முற்போக்குச் சிந்தனைகளைத் தொடர்ந்து வாசித்து அதுகுறித்து உரையாடும் அறிவார்ந்த தளத்தினைப் படிப்பு வட்டம் உருவாக்க அனைத்துவிதமான முயற்சிகளையும் தொடர்ந்து எடுத்து வருகிறது.

பெரிய சங்கங்கள் கலை-இலக்கியத்தின் பக்கம் அதிகம் திரும்பாத போதும், பெரிய ஆய்வுகளுக்கான தொடக்கத்தைத் தனிநபர்களும் சிறு குழுக்களுமே உருவாக்கி வைக்கின்றனர். உருவாக்கியதோடு நிற்காமல் தொடர்ந்து இயங்குதலுக்கான உந்துதலையும் வழங்கி வருகின்றனர். உடல் உழைப்பு, நேரம், பொருளாதாரம், மன ரீதியான திட்டமிடல் என அனைவருக்கும் இருக்கும் அதே பரபரப்பான வாழ்விற்கிடையில் சமூகத்தை இயக்கும் ஆற்றல் கொண்ட கலை-இலக்கியச் செயற்பாடுகள் மீது பெரிதும் நம்பிகை கொண்டு இயங்கி வருகின்றனர்.

- பஞ்சு மிட்டாய் பிரபு

தஞ்சாவூர் இவரது சொந்த ஊர். தற்போது இலண்டனில் வசித்து வருகிறார். பஞ்சு மிட்டாய் சிறுவர் இதழ், ஓங்கில் கூட்டம் பதிப்பகம் எனத் தொடர்ந்து சிறார் இலக்கியம் சார்ந்தும், கதைசொல்லியாகவும் பயணித்து வருகிறார். தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் பொருளாளராகவும் இருந்து வருகிறார். எனக்குப் பிடிச்ச கலரு, குட்டித் தோசை, சாவித்திரியின் பள்ளி, எலெக்ட்ரானிக்ஸ் இன்றியே விளையாடுவோம், ஆகிய சிறார் நூல்களை எழுதியுள்ளார். இங்கிலாந்திற்கும் கருப்பின அடிமைத்தனத்திற்கும் உள்ள தொடர்பை இவரது இளையோர் நாவலான ஒலாடா பேசுகிறது. கருப்பின அடிமைத்தனம் குறித்து நேரடியாகத் தமிழில் எழுதப்பட்ட படைப்புகளில் மிக முக்கியமானது இந்த நாவல். மேலும் இவர் தொகுத்து வெளியான “நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம்- நோக்கமும் அதன் பாதையும்” தமிழ்ச் சிறார் இலக்கியத்தின் ஆவணப் பெட்டகமாக விளங்குகிறது.

இங்கிலாந்து சிறார் இலக்கியம் சார்ந்து ஒரு தொடரையும் பஞ்சு மிட்டாய் இணையத்தில் எழுதி வருகிறார். இங்கிலாந்தில் தொடர்ந்து பல்வேறு அமைப்புகள் வழியே தமிழ்ப் பள்ளிகளிலும், புத்தகக் கண்காட்சிகளிலும் கதை சொல்வது, பாரம்பரிய விளையாட்டுகளை அறிமுகம் செய்தல், தமிழ் - ஆங்கிலப் புத்தகங்கள் குறித்து குழந்தைகளுடன் உரையாடுதல் எனப் பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகிறார். புலம்பெயர்ந்த இடத்தில் தமிழை இயல்பில் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வது குறித்துத் தொடர்ந்து பெரியவர்களிடம் உரையாடி வருகிறார்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.