நோர்வே -சுவீடன் இரு நாடுகளிலும் கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் வாழ்ந்துள்ள நிலையிலும், அங்கேயே எங்கள் குழந்தைகள் பிறந்து வளர்ந்து வருகின்றபொழுதிலும், இரு நாடுகளும் தாய்மொழிகளுக்கெல்லாம் கொடுக்கும் முக்கியத்துவத்தின் வழியாக, எங்கள் குழந்தைகளுக்குத் தமிழ்க் கல்வி தங்குத்தடை- யின்றி கிடைத்து வருகிறது.

குழந்தைகள் கருவில் இருக்கும் தருவாயில் நோர்வே அரசு மருத்துவமனைகளில் இரு வாரங்களுக்கு ஒருமுறை தொடர் உடல்நலச் சோதனை மேற்கொள்வர், கருவில் வளரும் குழந்தை குறித்தும், தாயின் உடல் மற்றும் மனநலன் சார்ந்த புரிதலும் தந்தைக்கும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், சில சோதனைகளின் பொழுது தந்தையும் உடன் இருத்தல் அவசியம்.

அப்பொழுது, வீட்டில் மொழி உச்சரிப்புகள் மற்றும் குழந்தையின் வளர்ச்சி தொடர்பான கேள்விகளுக்கு, “பல்கலாச்சாரச் சூழலில் வாழ்வதால், குழந்தையின் மனநல வளர்ச்சியில் நேர்மறையான உறுதியினை வளர்க்கத் தாய்மொழியில் உரையாடுவது அவசியம்” என மருத்துவர்களும், “நோர்வேஜிய மொழி தொடர்பான குழந்தைகளுக்கான பயிற்சியினை மேற்கொள்வது தங்கள் பொறுப்பெனவும், அதற்கு அடித்தளமாக குழந்தைகளோடு வீட்டினில் தாய்மொழியில் உரையாடி, குழந்தையின் அடிப்படைச் சிந்தனை கட்டமைப்பினை வளர்த்தெடுக்க வேண்டும்” எனப் பள்ளியிலும் கற்றுக் கொடுத்தார்கள்.

 நோர்வேயில் மருத்துவக் கல்வியும் தாய்மொழி மதிப்பெண்ணும்: நோர்வே நாட்டின் பள்ளிக்கூட மேல்நிலை வகுப்பில், இயற்பியல், வேதியியல், உயிரியியல், கணிதம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளோடு, சர்வதேச மொழிகள் (ஜெர்மன், ஃபிரெஞ்சு, ஸ்பானியம், தமிழ், பெர்சியம், அரேபியம் உள்ளிட்ட மொழிகளில்) ஒன்றை மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுத்துத் தேர்வெழுத வேண்டும். மேல்நிலை வகுப்பு மூன்று ஆண்டுகளிலும் இந்த மொழிப்பாடங்களில் ஒன்றில் தேர்வெழுதினால், இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியியல் பாடங்களில் மதிப்பெண் குறைந்திருந்து, இம்மொழிப் பாடத் தேர்வில் மதிப்பெண் அதிகமாக வாங்கியிருந்தால், மருத்துவம்/ பொறியியல் சேர்க்கைக்கான கூட்டுமதிப்பெண்ணில், குறைந்த மதிப்பெண் வாங்கிய பாடத்தை நீக்கிவிட்டு மொழிப்பாட மதிப்பெண்ணைச் சேர்த்துக் கொள்ளலாம்.

அதாவது, நோர்வே நாட்டினில் தமிழ் மொழிப் பாடத்தில் பெறும் மதிப்பெண், நோர்வே நாட்டின் மருத்துவக் கல்வி நுழைவிற்கு உதவுகிறது. சமீபத்தில் நோர்வே நாட்டினில் மருத்துவக் கல்வியில் சேர்ந்த தமிழர்களின் எண்ணிக்கை பெருகிவருகிறது. தாய்மொழிப் பாடத்தில் எடுத்த மதிப்பெண்களே மிக முக்கியக் காரணமாகவுள்ளது!

மேலும், சில பள்ளியின் நிர்வாகம், தலைமை ஆசிரியர் அனுமதித்தால் தமிழ்ப்பாடப்பிரிவு 1, 2, 3 ஆகிய மூன்று தேர்வுகளையும் ஒரே ஆண்டிலோ அல்லது இரண்டு ஆண்டுகளிலோ நிறைவுச்செய்துவிட்டு, மூன்றாம் ஆண்டு முழுமையும் தாய்மொழிப் பாடத்திற்கான நேரத்தினை மிச்சப்படுத்தி, அறிவியல், கணிதம், உயிரியல் பாடங்களில் மட்டும் கவனம் செலுத்தி வெல்லும் தமிழ் மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெறுகின்றனர். ஏனைய மொழியினத்திற்கு இதே வாய்ப்புகள் உண்டெனினும், நோர்வே முழுமைக்கும் உள்ள அன்னைப்பூபதிப் பாடசாலையின் தமிழ்ப்பாடத்திட்டம் நோர்வேஜிய மொழிக்கல்விப் பாடத்திட்டத்தினை விட வலுவானதென்பதால், தமிழ்ப்பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு நிறைவுச்செய்யும் மாணவர்களுக்கு முதலாம் ஆண்டிலோ இரண்டாம் ஆண்டிலோ மூன்று மொழிப்பாடத் தேர்வினையும் முடித்து அதிகப்புள்ளிகள் பெற்று நிறைவு செய்வது அதனால் எளிமையாகிறது.

நோர்வே நாட்டில் தமிழ்மொழிக் கருத்தரங்கம்:

நான் நோர்வே நாட்டின் அன்னைபூபதி தமிழ்க்கலைக்கூடத்தில் 7 ஆண்டுகள் தமிழ் மற்றும் அறிவியல் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளேன். அந்தக் காலக்கட்டத்தில்தான் ஒவ்வொரு வருடமும் தாய்மொழிக் கல்விக்கான கருத்தரங்கினை நோர்வே அரசு தங்கள் நாட்டில் வசிக்கும் கல்விகற்கும் மொழியினருக்கு வலுவூட்ட பன்னாட்டுக் கருத்தரங்கங்களை நடத்தத் தொடங்கியது.

ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மாநில/பிராந்திய உள்ளூர் நிர்வாகங்கள் பொறுப்பேற்று நடத்தும் இக்கருத்தரங்கில் கலந்துக்கொள்ள தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் பள்ளி, வகுப்புகள் நடத்தும் ஆசிரியர், ஆசிரியைகளுக்கான பயணச்செலவு, ஒவ்வொரு மொழிக்குமென அளிக்கப்படும். பன்னாட்டு அறிஞர்களுக்கான செலவுகள், தங்கும் விடுதிக்கான செலவு, மற்றும் கருத்தரங்கம் நடத்த நட்சத்திர விடுதி எனப் பிரமாண்டமாக நடக்கும்.

 2010 நான் முதன் முதலில் பேர்கன் நகரத்தில் அப்படியொரு கருத்தரங்கில், தமிழர் வரலாறு தொடர்பான உரை நிகழ்த்தினேன், சிறு நாடகமும் நடத்தினோம். நோர்வே நாடு முழுமைக்கும் இருந்து தமிழ் பயிற்றுவிக்கும் ஆசிரியர், ஆசிரியைகள், இலங்கை மற்றும் மலேசியாவில் இருந்து அறிஞர்களும் வந்திருந்தனர்.

 அதன் பின், 2014இல் ஸ்டாவாங்கர் என்ற இடத்தில் நடந்த மொழியியல் கருத்தரங்கிற்கு நாங்கள் அனைவரும் விமானத்தில் சென்று நட்சத்திர விடுதியில் தங்கி, நோர்வே நாட்டில் தமிழ்க்கல்வி வளர்ப்புத் தொடர்பான நிகழ்வுகளில் கலந்து கொண்டோம். முதல் நாள் கருத்தரங்கில் பதினைந்திற்கும் மேற்பட்ட மொழியினர் கலந்து கொண்ட கூட்டு நிகழ்வுகள் நடந்தது. அதில், நோர்வே நாட்டில் பிறந்து வளரும் பிற மொழியினருக்குத் தாய்மொழிக் கல்வியையும் நோர்வேஜிய மொழிக் கல்வியையும் வழங்குவது தொடர்பான பயிற்சிகளை நோர்வேஜிய மொழியியல் மற்றும் கல்வியியல் அதிகாரிகள் எங்களுக்கெல்லாம் வழங்கினர்.

இரண்டாம் நாள் கருத்தரங்கில், ஒவ்வொரு மொழியினருக்கும் தனித்தனி அரங்கங்கள் அதே நட்சத்திர விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டு, அவரவர் மொழி வளர்ச்சி தொடர்பான பயிற்சிகளும் வாத-விவாதங்களும் நடந்தன. மொழிகளுக்கு மட்டுமல்ல, நோர்வே நாட்டில் வாழும் பல்வேறு இனப்பிரிவினரும் அவரவர் பண்பாட்டினைப் பேணிக் காக்கவும் வளர்க்கவுமென நடத்தப்படும் மாநாடுகள், விழாக்களுக்கும் நோர்வே நாட்டில் நிதி உதவி கிடைத்து வருகிறது.

அறிவியல், கணிதப் பாடங்களில் தமிழ்:

தாய்மொழிகளுக்கான கல்வி வளர்ச்சிக்கென நோர்வே அரசு morsmal.no என்ற இணையப்பக்கத்தையும் செயல்படுத்தி வருகிறது. இதில், தமிழுக்கான பக்கங்களில் நோர்வே அரசு நடத்தும் மேல்நிலை வகுப்பிற்கான தமிழ்ப்பாடத் தேர்வுக்கான பயிற்சி நூல்களும் முந்தைய ஆண்டு வினாத்தாள்களும் கிடைக்கும். அதோடு, நோர்வே அரசுப் பள்ளியில் பயிலும் தமிழ் மாணவ, மாணவியரின் தாய்மொழிக் கல்விப் பயிற்சிக்காக, கணிதம், சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான சில பகுதிகளும் தமிழில் கிடைக்கிறது.

 ஒரு தமிழனாக, “ஏதோ ஒரு மூலையில், ஏதோ ஒரு நாட்டில் தமிழ் வளர்க்க நமக்கு எவ்விதத் தொடர்பும் இல்லாத ஏதோ ஓர் அரசு செலவு செய்து ஊக்கப்படுத்துகிறார்களே” என்ற பெருமிதமும் ஒரு சராசரி மனிதனாக, “அனைத்துத் மொழியினரையும் மதித்து அவரவர் தாய்மொழிகளுக்கான வளர்ச்சிக்கு நாமும் உதவ வேண்டும்” என்ற அறம்சார் பாடமும் கற்க முடிந்தது.

 நோர்வே நாட்டில் நூல்களும் கையேடுகளும் தமிழில்:

 நோர்வே நாட்டிற்கு நான் வருவதற்கு முன்பே நோர்வேஜிய- தமிழ் அகராதி ஒன்றினை அரசின் நிதியுதவியில் பேராசிரியர் தயாளன் அவர்களும் திரு ஹேமச்சந்திரன் அவர்களும் பதிப்பித்து இருந்தார்கள். விளையாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் தமிழ்க் கையேடுகள் பதிப்பிக்கவும் அரசு நிதி உதவிக் கிடைக்கிறது.

மகப்பேறு காலங்களில் உடல்நலன் பேணல், குழந்தை வளர்ப்பு, பல்துலக்குதல் தொடர்பான கையேடுகள் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் அச்சிடப்பட்டு இருந்ததைப் பார்க்கும்பொழுது வியப்பாக இருந்தது. 2009ற்குப் பிறகு, நோர்வேஜிய மருத்துவத்துறைக்கான தமிழ்க் கையேடுகளில் ஒன்றான, நீரிழிவு நோய் விழிப்புணர்வுக் கையேட்டினைத் தமிழ்த் தட்டச்சு செய்யும் பணியையும் மருத்துவர் சிவகணேசன் உள்ளிட்டக் குழுவினரோடு இணைந்து நானும் பங்களித்து மகிழ்ந்தேன்.

அதோடு, மருத்துவம் சார்ந்த எவ்வித நடவடிக்கைகளுக்கும் ஒவ்வொரு மொழியினரும் தங்கள் தாய்மொழியைச் சார்ந்த மொழிப்பெயர்ப்பாளரை உடன் வைக்கக் கோரிக்கை வைக்க முடியும். அம்மொழிப்பெயர்ப்பாளருக்கான செலவினை அரசே ஏற்றுக் கொள்ளும்.

சுவீடனில் நடந்த தமிழ் நேர்முகத் தேர்வு!

இத்தகைய அனுபவம் தந்த பாடத்தில், தமிழ்நாட்டில், அரசுப் பள்ளியில், தமிழ்வழிப் பிரிவில் என் குழந்தைகளை ஒன்றாம் வகுப்பில் சேர்த்துப் படிக்க வைத்தேன். பிறகு, மீண்டும் சுவீடன் வரவேண்டும் என்ற சூழலில், அவர்களுக்குத் தமிழ் மட்டுமே தெரிந்திருந்தது.

சுவீடன் பள்ளியில் சேரும் குழந்தைகளோடு பள்ளி நிர்வாகம் அல்லது மாவட்ட நிர்வாகத்தின் ஆசிரியர்கள் கலந்துரையாடி அவர்களின் எண்ண ஓட்டம், அவர்களின் அன்றைய கல்வி நிலை, செயற்பாடுகள் குறித்து அறிந்து அதற்கு ஏற்றவாறு பயிற்சி வழங்கவும் வளர்த்தெடுக்கவும் பள்ளி நிர்வாகத்திற்கு அறிக்கை கொடுப்பர்.

சுவீடனிற்குப் புதிதாக வந்திருந்த எங்கள் குழந்தைக்கும் அத்தகைய நேர்முகக் கலந்துரையாடல் நிகழ்ந்தது, ஆனால், மாவட்ட நிர்வாகத்தின் தமிழாசிரியர் துணைகொண்டு, முழுக்க முழுக்கத் தமிழில் நடந்தது.

பிறகு, தமிழ் தவிர வேறு மொழியே தெரியாததால், பள்ளி நிர்வாகம் எங்கள் மகன் ஒருவருக்காக வாரத்தில் ஒரு நாள் மாவட்ட நிர்வாகம் தமிழாசிரியர் ஒருவரைக் கொண்டு சிறப்பு வகுப்பினைத் தமிழ் வழியில் நடத்தி மெல்ல மெல்ல சுவீடிஷ் மொழி அறி- வினையும் பாட அறிவினையும் வளர்த்தெடுத்தார்கள்.

இன்றும் கூட, அரசுப் பள்ளியில் பயிலும் அனைத்து தமிழ் மாணவர்களுக்கும் வாரம் ஒரு நாள், அந்தந்தப் பகுதிக்கு ஏற்றவாறான மாணவ எண்ணிக்கையினைக் கொண்டு, பொது வகுப்பினை தமிழ் மொழிப் பாடத்தில் நடத்துகிறார்கள்.

குழந்தைகளுக்கான தாய்மொழி அனுபவம்:

சுவீடனில் வசிக்கத் தொடங்கிய காலத்தில், டோர்சுலாண்டா என்னும் பகுதியின் பள்ளியிலேயே செவிலியர் ஆலோசனைக்கென அவ்வப்பொழுது அழைப்பு வரும். பள்ளி வளாகத்திலேயே உடல்நலன் மற்றும் மனநல ஆலோசனைக்கென அப்பள்ளியில் தனிப் பகுதியும் செவிலியர் மற்றும் வருகைதரு மருத்துவரும் இருந்தனர். செவிலியரும் குழந்தைக்கு சுவீடிஷ் மொழி தெரியாத தருணங்களில் எங்களுடன் அமர்ந்து தமிழில் சில சொற்களைக் கற்றுக்கொண்டு எங்கள் மகனுக்குச் சில விளக்கங்களை அளித்தார். அதோடு, பல் மருத்துவமனை சிகிச்சைக்கெனக் குழந்தைகளை அழைத்துச் சென்றபொழுது, அங்குள்ள மருத்துவர் எங்கள் தாய்மொழி தமிழ் என்பதை அறிந்து, எங்கள் குழந்தைகளை தமிழ் தெரிந்த கேரளப் பெண் மருத்துவருக்குப் பரிந்துரைத்து அவரிடமே மேலதிகத் தொடர் சிகிச்சைக்கு செல்லச் உதவிப் புரிந்தார். குழந்தைகளிடம் மொழியைக் கையாளும் விசயத்தில் தெரியாத மொழியில் பேசுவதை அறம் சார்ந்து தான் தவிர்ப்பதாகவும், தமிழ் தெரிந்த மருத்துவர் இவ்வளாகத்தில் உள்ளபொழுது அவரிடம் தொடர் சிகிச்சைக்குச் செல்வதே குழந்தைக்கும் ஆரோக்கியம் எனச் சிரித்துக்கொண்டே விளக்கப்படுத்தினார். இதுவும் டோர்சுலாண்டா பகுதியில் அம்மூல்ட் பல் மருத்துவமனையில் நடந்த நிகழ்வு!

சுவீடனில் உலக தாய்மொழிகள் நாளில் சங்க இலக்கியம்:

2023இல் உலகத் தாய்மொழி நாள் கொண்டாட்டத்திற்காக சுவீடனின் கோத்தென்பர்க் நகரில் தாய்மொழிக் கல்வியினைப் பெறும் பெரும்பாலுமான மொழிப்பிரிவினரை வைத்து நிகழ்ச்சிகளை கோத்தென்பர்க் நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.

தமிழ் மொழிக் கல்வி பெறும் பத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு மேடையேறி தமிழின் பெருமை, இலக்கியம், வரலாறு, பண்பாடு ஆகியவைகளை எடுத்தியம்புவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது. தமிழ்க் குழந்தைகளுக்கு ‘நீர்’ தொடர்பான தலைப்பு இருந்தமையால், திருக்குறள் முதல் சங்க இலக்கியத்தின் சிலவற்றில் சுட்டிக்காட்டப்பட்டிருந்த நீர் மேலாண்மை, அரசு நிர்வாகம் அதனை முறைப்படுத்திய வழிமுறைகள் உள்ளிட்டவைகளை அனைத்துக் குழந்தைகளும் மேடையேறித் தமிழில் பேச, பின்னால் இருந்த திரையில் அதற்கு இணையான சுவீடிஷ் மொழிப்பெயர்ப்பு வரிகள் ஓடிக்கொண்டிருந்தன.

எங்களுடைய குழந்தைகள் கவின் திலீபனும் கதிர் நிலவனும் சிலப்பதிகாரம், அகநானூறு உள்ளிட்டவைகளைக் குறிப்பிட்டு உரை நிகழ்த்தினர்.

இப்படியாக, எங்கள் குழந்தைகளுக்கு இயல்பாகவே தாய்மொழியின் மீதான பற்றிற்குக் காரணமாக நோர்வே நாடும் சுவீடன் நாடும் அமைந்துவிட்டது. எங்கள் இளைய மகனிடம் யாராவது ஆங்கிலத்தில் பேசினாலோ புரியாத சொல்லை ஆங்கிலத்தில் கூறிவிட்டாலோ, மிக தன்னம்பிக்கையுடன், “நான் இன்னும் ஆங்கில மொழியினைக் கற்கத் தொடங்கவில்லை, எனக்கு ஆங்கிலம் தெரியாது தமிழில் கூறுங்களேன்” எனச் சொல்லிவிடுவார். தமிழில் பேசுவதும் தமிழோடு வாழ்வதும் எவ்வித இடர்பாடையும் கொடுக்காத ஸ்கேண்டியனேவியன் நாடுகளில் வசிக்கிறோம் என்பதே பெருமைதான்!

- முனைவர் விஜய் அசோகன்

முனைவர் விஜய் அசோகன், அறிவியல் ஆராய்ச்சி துறையில் முனைவர் பட்டம் பெற்று, நோர்வே சுவீடன், அயர்லாந்து, ஜெர்மனி, சீனா உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐரோப்பிய பெரியார் அம்பேத்கர் தோழர்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர், உலகத் தமிழ் கழகத்தின் நிறுவனர்களில் ஒருவர், சுவீடன் நாட்டின் நோர்டிக் அறிவியல் தொழிற்நுட்பக் கழகத்தின் நிறுவனர்களில் ஒருவர் எனப் பல பரிணாமங்களில் பணியாற்றுபவர்.

ஈழம், தமிழ்த்தேசியம், திராவிட இயக்கம், ஐரோப்பியக் கல்வி, தாய்மொழிக் கல்வி, சுற்றுச்சூழல் அறிவியல், பயணக் கட்டுரைகள் என இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளும், “நோர்வே பயண அனுபவம்”, “வீழ்ந்துவிடவில்லை விடுதலைப் புலிகள்”, “பிசாசுத் துகள்கள்”, “தாய்மொழிக்கல்வி - உலக அரசியலும் கல்வியியலும்” “நோர்டிக் கல்வி - சமத்துவமும் சமூகநீதியும்” என 5 நூல்களை இதுவரை எழுதியுள்ளார்.

More articles by விஜய் அசோகன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.