மூன்றாண்டுகளாகப் பின்லாந்தில் வாழ்ந்து வருவது எனக்கு மிகப் பெரிய அகமாறுதலுக்கு வழிவகுத்துள்ளது, குறிப்பாக, நான் மிகவும் மாறுபட்ட கல்வி மற்றும் பண்பாடு அமைப்புடைய நாட்டிலிருந்து வந்துள்ளதால். நான் மத்தியப் பின்லாந்தில் உள்ள ஜ்யூவாஸ்குலா நகரில் வசிக்கிறேன். இங்கு தமிழ்ச் சமூகமானது மிகவும் சிறியது - என் கணிப்பின் படி சுமார் ஆறு குடும்பங்கள் மட்டுமே. தமிழ் மற்றும் இந்தியச் சமூகங்கள் ஹெல்சிங்கியில் சற்றே பெரிதாக உள்ள நிலையில், எனது தொடர்புகள் அவற்றுடன் மிகவும் குறுகியதாகவே உள்ளது. நாங்கள் பொங்கல் போன்ற விழாக்களைக் கொண்டாடுவதற்காக சில சமயங்களில் ஒன்று கூடுவோம். அப்போது நாங்கள் உணவுப் பகிர்வை (பாட்லக்) நடத்தி ஒரு மிகச் சிறிய நேரத்தில் கூடுதல் நெருக்கம் மற்றும் ஒருமைப்பாட்டை உருவாக்குகிறோம். இது அந்தத் திருவிழாக்கள் கடந்து சென்ற பின்பும் தொடர்வதில்லை.
பின்லாந்தில் நான் வசித்த காலத்தில் என்னை மிகவும் கவர்ந்தது, தமிழ் அல்லது இந்தியச் சமூகம் தொடர்பானதன்று,என் முதுநிலை படிப்பின் மையமாக இருந்த பின்லாந்தின் கல்வி முறைதான். மாணவரை மையமாகக் கொண்ட, முன்னோக்கி நகரும் கல்வி முறையைக் கொண்டதனால் பின்லாந்து புகழ் பெற்று விளங்குகிறது. ஆனால் நான் முதலில் இங்கு வந்தபோது, அதன் உலகளாவிய புகழைப் பற்றி மட்டுமே அறிந்திருந்தேன். இப்போது எனது படிப்பின் போது பின்லாந்து கல்வி முறையின் தனித்துவம் அதற்குண்டான உலகளாவிய மரியாதை எனப் பல அம்சங்களை நான் புரிந்துகொண்டு வருகிறேன். இந்த அம்சங்கள் பின்லாந்து கல்வி முறையை மட்டுமல்லாமல் பின்லாந்து சமுதாயத்தின் மதிப்பீடுகளையும் முன்னுரிமைகளையும் வெளிப்படுத்துகிறது.
பல வாரங்களாகப் பின்லாந்து பள்ளிகளைக் கவனித்து வந்தபின், அச்சமுதாயத்தின் மதிப்பீடுகள் அன்றாட நடைமுறைகளில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதில் எனக்கு ஆழமான புரிதல் கிடைத்தது. நான் வசிக்கும் ஜ்யூவாஸ்குலா பகுதியில் உள்ள ஒரு பள்ளியைப் பார்வையிடுவதற்கான நல்வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அங்கு சில மணி நேரங்களாக வகுப்பறைகள், ஆசிரியர்கள், மாணவர்களைக் கவனித்து கல்வி முறை எவ்வாறு செயல்படுகிறது என்பதை நேரடியாக அறிந்தேன். இதில் இந்தக் கல்விமுறையின் செயல்திறனை நேரில் கண்டேன். மேலும் அங்குள்ள ஆசிரியர்களின் செயல்பாடுகளில் நான் கண்ட சுதந்திரம் என்னை வியப்பிற்குள்ளாக்கியது. நம்நாட்டில் ஆசிரியர்கள் பெரும்பாலும் தமது மாணவர்களுக்கு கிடைக்கும் தேர்வு முடிவுகளை வைத்துத்தான் மதிப்பிடுகிறார்கள். இதன் அடிப்படையில் அவர்களின் பணி சம்பந்தமான வெற்றிகள் தொடர்புபடுத்தப்பட்டு நிர்ணயிக்கப்படும். பின்லாந்தில், மாறாக, ஆசிரியர்கள் மாணவர்களை முழுமையாக மதிப்பிடுவதில் பொறுப்பாக்கப்பட்டு நம்பப்படுகிறார்கள். அவர்களின் பங்கானது மாணவர்களுக்கு கல்வித் திட்டத்தின் உள்ளடக்கத்தைக் கொண்டு சேர்ப்பது, அவர்களைத் தேர்வுகளுக்குத் தயாராக்குவது என மட்டுமல்லாமல் அதற்கும் மேலாகப் பார்க்கப்படுகிறது.
பின்லாந்தில் மாணவர் - ஆசிரியர் உறவு
நம்நாட்டில் வழக்கமாக இருப்பதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. நம்நாட்டில் வகுப்பறைகள் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டவையாக உள்ளன, ஆசிரியர்கள் தொடர்ந்து வழிமுறைகளை தந்து கண்டிப்பான ஒழுக்கத்தைப் பேணுகிறார்கள். ஆனால் பின்லாந்தில், மாணவர்கள் தங்கள் கற்றலுக்குத் தாங்களே பொறுப்பேற்றுக் கொள்ள ஊக்கப்படுத்தப் படுகிறார்கள். ஆசிரியர்கள் வழிகாட்டல் மற்றும் கட்டமைப்புகளை அளிப்பதுடன், மாணவர்களைத் தனியாகவும், குழுவாகவும் செயல்படத் தாராளமாக அனுமதிக்கிறார்கள். இதனால் அவர்கள் பொறுப்புணர்வு மற்றும் ஒருங்கிணைக்கும் உணர்வை வளர்த்தெடுக்கின்றனர். இந்த அணுகுமுறை முற்றிலும் மாறுபட்டதாகஎனக்குத் தோன்றுகிறது. மேலும் சுதந்திரமும் நம்பிக்கையும் உயர்ந்தளவில் மதிக்கப்படுகிற பின்லாந்து பண்பாட்டை அது அப்படியே வெளிப்படுத்துகிறது.
பின்லாந்துப் பள்ளிகளின் உட்புறச் சூழலும் எனக்குப் பெரிதாகத் தோன்றியது. வகுப்பறைகள் பரந்தும் உபகரணங்களுடன் நன்கு பொருத்தபட்டும் உள்ளது. அனைவரையும் உள்நோக்கி வரவேற்கத்தகுந்ததாகவும் இருக்குமாறு குறிப்பாகவே உருவாக்கப்பட்டு இருந்தது. பின்லாந்து பள்ளிகள் ஒரு திறந்த, அமைதியான சூழலை வளர்த்தெடுக்கின்றன. அங்கு மாணவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளும்படியாக நம்பிக்கை வைக்கப்படுகிறார்கள். இந்த கற்றல் சூழலின் மற்றும் பண்பாட்டின் வெளிப்படைத்தன்மை வகுப்பறையைத் தாண்டியும் பரவியது; பள்ளியைச் சுற்றியுள்ள சமூகத்திலிருந்து வேறுபடுத்திக்காட்டும் உயர்ந்த சுவர்கள் அல்லது கதவுகள் இல்லை, இது நம்நாட்டில் பல பள்ளிகள் அளிக்கும் ஒரு பாதுகாக்கப்பட்ட உணர்விலிருந்து உறுதியாகவே மாறுபட்டதாக இருந்தது.
(1) சமமான கல்வி கிடைத்தல்
பின்லாந்து கல்வி முறையின் மிகக் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்று, அனைத்துக் குழந்தைகளுக்கும் அவர்களின் சமூக- பொருளாதார பின்னணியைப் பொருட்படுத்தாமல் சமமான கல்வி கிடைக்கும் வசதி வழங்கப்படுகிறது. இது நம்நாட்டின் ஆழமாகப் பிளவுபட்டிருக்கும் சமூக அடுக்குகளுக்கான கல்வி முறைக்கு நேர் எதிர்மாறானதாக இருக்கிறது. நம்நாட்டில் தனியார் பள்ளிகள் பணக்காரர்களுக்கு சேவை செய்துகொண்டிருக்க, பொதுப்பள்ளிகள் அடிப்படை வசதிகளை மட்டும் வைத்துக் கொண்டு போராடுகின்றன. பின்லாந்தில், பொதுப்பள்ளிகள் தாம் விதி, அடிப்படை மேலும் கிட்டத்தட்ட ஒவ்வொருவரும், உயர்வான குடும்பங்களில் உள்ள குழந்தைகள் உட்பட, அவற்றில் கற்கின்றனர். தனியார் மற்றும் பொதுக் கல்விக்கிடையே வேறுபாடு என்ற உணர்வு எதுவும் இங்கு இல்லை. இதனால் மாணவர்கள் எந்தப் பின்னணியுடன் இருந்தாலும் ஒரே உயர்தரமான கல்வியைப் பெறுகிறார்கள்.
(2) மாணவர்களின் நலனே மையம்
பின்லாந்துப் பள்ளிகள் மாணவர்களின் முழுமையான நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. இங்கு கல்வி என்பது வெறும் பாடங்கள் அல்ல, அது குழந்தையின் முழுமையான வளர்ச்சியைக் குறிக்கிறது. மாணவர்களின் மனநலன் மற்றும் உடல் நலனுக்கு அதிகபட்ச முக்கியத்துவம் வழங்கப்பட்டு, மனநல ஆலோசகர்கள், சமூகப் பணியாளர்கள், சிறப்புக் கல்வியாளர்கள் போன்ற பல்வேறு ஆதரவுக் குழுக்கள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றால் ஒவ்வொரு குழந்தையும் சிறப்பாக வளர்ந்து வருவது உறுதி செய்யப்படுகிறது. நமது பள்ளிகளில், குறிப்பாக பொதுப் பள்ளிகளில், மாணவர்களின் நலனுக்கான இத்தகைய விரிவான ஆதரவு முறைகள் பெரும்பாலும் குறைவாகவே காணப்படுகின்றன. அவை அப்படியே இருந்தாலும் பெயரளவில் இருக்கும். ஆசிரியர்கள் கடும் வேலைப்பளுவில் சிக்கியிருப்பதுவும், அடிப்படை வளங்கள் குறைவாக இருப்பதுவும் இதற்குக் காரணமாகும்.
(3) உயர்திறன் வாய்ந்த ஆசிரியர்கள் மற்றும் தொழில்முறை
பின்லாந்தில் ஆசிரியப்பணி உயர்ந்த அளவில் மதிக்கப்படுகிறது. மேலும் ஆசிரியர் பயிற்சிக்கான கடுமையான தரநிலைகள் உள்ளன. இப்பயிற்சி ஆராய்ச்சி அடிப்படையில் உள்ளது. ஆசிரியர்கள் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பது அவசியமானது. வகுப்பறைகளில் அவர்களுக்கு குறிப்பிடத்தக்க அளவில் கற்றல் சுதந்திரம் வழங்கப்படுகிறது. மாறாக, இந்தியாவில், ஆசிரியர் பணி அடிக்கடி களங்கப்படுத்தப்படுவதாக, பெரும்பாலும் குறைத்து மதிப்பிடப்படுவதாக உள்ளது. மேலும் பலர் இதை மருத்துவர் அல்லது பொறியியலாளர் போன்ற "மரியாதைக்குரிய" வேலைகளில் வெற்றியடையாதவர்களுடைய அல்லது இவ்வேலைகள் கிடைக்கப் பெறாதவர்களுடைய மாற்றுத்தொழிலாகக் காண்கின்றனர். நம்நாட்டில் பொதுப் பள்ளிகள் பெரும்பாலும் தரமற்றதாகக் கருதப்படுவதோடு, ஆசிரியர் பணியும் பின்லாந்தைப் போல உயர் மரியாதையைப் பெறுவதில்லை. இந்த நிலைமை மூலதனங்களின் குறைவாலும், பொதுப் பள்ளிகளில் உள்ள அமைப்புச் சீர்கேடுகளாலும் அதிமோசமாகியுள்ளது. இதனால் பொதுக் கல்வி மற்றும் தனியார் கல்விக்கிடையிலான வேறுபாடு நீங்காமல் நீடிக்கிறது. இந்தச் சூழலில், பொதுப் பள்ளிகள் பெரும்பாலும் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு மட்டுமே பணியாற்றுவதாக இருக்கின்றன என்பதோடு, சமூகப் படிநிலைகள் தளர்த்தப்படாமல் பலப்படுத்தப்படுகின்றன.
(4) உள்ளடக்கிய கல்வி மற்றும் சிறப்புக்கல்வி
பின்லாந்தின் உள்ளடக்கிய கல்விமுறை அனைத்து குழந்தைகளையும், சிறப்புத் தேவைகள் உள்ளவர்கள் உள்பட, ஆதரிக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. கற்றல் சிரமங்களைச் சந்திக்கும் மாணவர்களைப் பொதுவான வகுப்பறைகளில் ஒருங்கிணைக்க சிறப்புக்கவனம் செலுத்தப்படுகின்றது, மேலும் சிறப்புக் கல்வியாளர்கள் வகுப்புகளை நேரடியாகப் பார்வையிட்டு கூடுதல் உதவிகளை வழங்குகிறார்கள். ஒரு மாணவரின் நடத்தையானது கற்றல் செயல்முறையைப் பெரிதாகப் பாதிக்கும்போது மட்டுமே அவர்கள் தனிப் பகுதிகளில் கற்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. மாறாக, நம்நாட்டில் பாடக்கல்வி முறையில், மாணவர்கள் மாற்றுத்திறனோடு இருந்தாலோ அல்லது கற்றல் சவால்களைச் சந்தித்தாலோ பெரும்பாலும் தனிமைப்படுத்தப்படுகிறார்கள் அல்லது தேவையான ஆதரவைப் பெற முடியாமல் உள்ளனர்.
(5) ஆசிரியர்களுக்கான கற்பித்தலில் தன்னுரிமை
பின்லாந்து கல்வியின் மற்றொரு முக்கிய அம்சமானது ஆசிரியர்கள் தங்களின் கற்பித்தல் முறைகளைத் தாங்களே உருவாக்கிக்கொள்ளவும் மாணவர்களை மதிப்பீடு செய்யவும் வழங்கப்பட்ட தன்னுரிமை ஆகும். ஒரு மாணவரின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஒரே மாதிரியான தேசியத் தேர்வு முறை அங்கு கிடையாது. மாறாக, ஆசிரியர்கள் வசம் மாணவர்களின் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்யும் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் மற்றும் அதற்கேற்றாற் போல் கற்றல் முறைகளை மாற்றுகிறார்கள். இது நம்நாட்டில் நிலவும் முறைக்கு முற்றிலும் மாறுபட்டது, இங்கு தேசியத் தேர்வுகள் ஒரு மாணவனின் வெற்றியை அளவிடும் முதன்மையான கருவியாக உள்ளன, மேலும் ஆசிரியர்களுக்கு வகுப்புகள் நடத்துவதில் குறைந்த சுதந்திரம்தான் உள்ளது.
(6) பங்குதாரர்களுக்கிடையிலான ஒத்துழைப்பு
பின்லாந்தில், கல்வி என்பது ஒரு கூட்டுறவு முயற்சியாகக் கருதப்படுகிறது. ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள், பெற்றோர் மற்றும் அரசு அதிகாரிகள் எல்லாம் மாணவர்களின் வெற்றியை உறுதி செய்ய ஒருங்கிணைக்கக் கடமைப்பட்டுள்ளனர். பின்லாந்து சமூகமானது ஆசிரியர்கள் மீதும்கல்வி முறை மீதும் பொறுப்பை ஒப்படைத்து அவை நிறைவேற்றப்படும் என நம்பிக்கை வைக்கிறது, கல்வி பகிர்ந்து கொள்ளப்படுகிற பொறுப்பாக இருக்க வேண்டும் என்ற கருத்தை இந்த நம்பிக்கை வலுப்படுத்துகிறது. இந்தக் கூட்டுநடவடிக்கை, மாணவர்கள் வகுப்பறைக்குள்ளேயும் மற்றும் வெளியேயும் தேவையான ஆதரவைப் பெறுவதை உறுதி செய்கிறது.
(7) அழுத்தமின்றி மதிப்பீடு செய்தல்
பின்லாந்து ஆசிரியர்கள் மாணவர்களின் தகுதிகளை மதிப்பீடு செய்ய உகந்த சுதந்திரத்தைப் பெற்றுள்ளனர். அவர்கள் மீது தேவையற்ற அழுத்தம் சுமத்தப்படுவதில்லை. இதன் மூலம் மாணவர்கள் தோல்வியடையலாம் என்றோ அல்லது அவர்கள் தேர்வு முடிவுகளால் மட்டும் மதிப்பீடு செய்யப்படுகிறார்கள் என்றோ கருதாமல் அச்சமின்றி கற்கக்கூடிய சூழலை வளர்த்தெடுக்கிறது. மாறாக, நம்நாட்டில் மாணவர்கள் நல்லபடியாக தேசியத் தேர்வுகளை எழுதுவதற்குப் பெரும் அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். இது அவர்களுடைய திறமையின் இறுதி அளவீடாகக் கருதப்படுகிறது. இந்த தேர்வு முறைமைகளால் பெரும்பாலும் மாணவர்களுக்கு மன அழுத்தம் மற்றும் அச்சம் ஏற்படுகிறது, அவர்கள் தங்கள் முழு எதிர்காலமும் ஒரு வகையான தேர்வு மதிப்பீடுகள் மீது நின்று காத்திருப்பதாக உணர்கின்றனர்.
(8) சமூகமும் கல்விமுறையும்
பின்லாந்துக்கும் மற்றும் நம்நாட்டுக்கும் இடையிலான மாறுபாடுகளைப் பரிசீலித்த போது இந்தக் கல்வி முறைகள் அவற்றைச் சார்ந்த சமுதாயங்களின் விளைவுகள் எனத் தெளிவாகப் புரிகிறது. பின்லாந்தின் கல்வி முறையை உருவாக்கும் மதிப்பீடுகள்- சமத்துவம், நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பு- அந்த நாட்டின் சமூக அமைப்பில் ஆழமாக வேரூன்றியுள்ளன. இரண்டாம் உலகப்போருக்குப் பின் வந்த காலத்தில் சனநாயகம் மற்றும் மதச்சார்பின்மையை நோக்கி பின்லாந்து மேற்கொண்ட பயணத்தின் மூலம் அது சமூக நலன், உள்ளடக்கத்தன்மை போன்ற மதிப்பீடுகளின் மீது முக்கியத்துவத்தை வடிவமைத்துள்ளது. இவை அவர்களுடைய பள்ளிகளின் செயல்பாடுகளில் தெளிவாக வெளிப்படுகிறது. மாறாக, நம்நாட்டில் கல்வி முறை காலனித்துவ வரலாறுகளால் மிகுந்த அளவில் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதுடன் சமத்துவமின்மை மற்றும் சமூக அடுக்குப்படுத்தல் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளது.
பின்லாந்தில் என் கால அனுபவம், பின்லாந்து கல்வி முறையின் சில அம்சங்களையாவது இந்தியாவில் செயல்படுத்த முடியுமா என எனக்குக் கேள்விகளை எழுப்பியுள்ளது. பின்லாந்தின் அணுகுமுறையை இங்கு மறு உருவாக்கம் செய்வது பெரிய கலாச்சார, சமூக மற்றும் பொருளாதார வேறுபாடுகள் காரணமாக கடினமாக இருக்கும் என்றாலும், நிச்சயமாக கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் உள்ளன. பின்லாந்தின் சமத்துவத்திற்கான உறுதியும், ஆசிரியப் பணி மீதான மரியாதையும், முழுமையான மாணவர் வளர்ச்சி மீதான கவனக்குவிப்பும் இந்தியாவின் கல்விமுறைக்குள் தக்கபடி கொண்டு வந்தால் மிகுந்த நன்மையைப் பெற முடியும். தரலாம். இருப்பினும், இந்த மாற்றங்களைச் செயல்படுத்தும் முயற்சியில் இந்தியாவின் தனித்துவமான சவால்களான பெரிய மக்கள்தொகை, வட்டார வேறுபாடுகள் மற்றும் ஆழமாக வேரோடி- யிருக்கிற சமூக அடுக்குமுறைகள் போன்றவற்றையும் தக்கபடி கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
முடிவாக, பின்லாந்தின் கல்வி முறையைப் பற்றி நான் கற்ற,கவனித்த அனுபவம் ஆழ்ந்த வளம் சேர்க்கின்றது. இது கல்வி பற்றிய எனது பல முன்முடிவான கருத்துக்களை முறியடித்ததுடன் கல்வி சார்ந்த விளைவுகளை வடிவமைக்கும் பணியில் பண்பாடு, சமூகம் மற்றும் கொள்கை ஆகியவற்றின் பங்கைப் பற்றி திறனாய்வு நோக்கில் சிந்திக்கும் படி வலியுறுத்தியது.
பின்லாந்தின் மாதிரிக்கல்வி அமைப்பு, பயனுள்ள நுண்ணிய பார்வைகளை வழங்குகிறது என்றாலும், கல்வி என்பது 'ஒரு விதமான முறை, எல்லாவற்றிற்கும் பொருந்துவது' என்ற மாதிரியான தீர்வாக இருக்க முடியாது என நான் கண்டறிந்துள்ளேன். ஒவ்வொரு நாடும் தன் பாதையை உருவாக்கிக்கொள்ள வேண்டும், மற்றவர்களிடமிருந்து உத்வேகத்தைப் பெற வேண்டும், ஆனால் அதற்கான சந்தர்ப்பச்சூழலை நினைவில் கொண்டிருக்க வேண்டும். நான் என் படிப்பைத் தொடர்ந்தும், கல்வித் துறையுடன் மேலும் ஆழ்ந்தும் ஈடுபடுகிற நேரத்தில் எவ்வாறு வெவ்வேறு கல்விமுறைகளில் இருந்து ஆகச்சிறந்த அம்சங்களை எடுத்துக்கொண்டு அனைவருக்குமான மேலும் உள்ளடக்கிய, சமமான மற்றும் அதிகாரமளிக்கும் கல்வியை உருவாக்கலாம் என்பதை ஆராய்ந்தறிய ஆர்வமாக உள்ளேன்.
குறிப்புகள்
Sahlberg, P. (2021). Finnish Lessons 3. 0: What Can the World Learn from Educational Change in Finland? Teachers College Press.
Vitikka, E., Krokfors, L., & Hurmerinta, E. (2012). The Finnish national core curriculum. In Miracle of education (pp. 83-96). Sense Publishers.
- அபிதா சக்ரபாணி
அபிதா சக்ரபாணி, பின்லாந்து நாட்டின் யூவாஸ்குலா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டப்படிப்பை அண்மையில் முடித்துள்ளார். பின்லாந்துக்குச் செல்லும் முன் ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அவரை
மொழிபெயர்ப்பாளர்: செல்வராஜ், சுயகற்றல் ஆலோசகர். இவர் பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் இயங்குகிறார், கோயம்புத்தூர் மாவட்டம், வாகராயம்பாளையத்தைச் சார்ந்தவர். அவரை