அலைகுடிகளாக வாழ்ந்த மனிதர்கள் பல பரிமாணங்களைக் கடந்து இனக்குழு வாழ்க்கைக்குத் தங்களை தயார்செய்து கொள்ளும்போது தான் அவர்களின் வாழ்வியல் அனுபவங்களை வழக்காறுகளாக நிகழ்த்தத் தலைப்பட்டார்கள். வேட்டைச் சமூகமாய் இருந்தபோது பெற்ற பொருட்களை சமமாக பாதீடு (பகிர்ந்து இடு என பொருள்படும். இதுபற்றி தமிழ் இலக்கண மரபில் உள்ளது) செய்ததுபோல் தங்களது அனுபவங்களையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டதன் விளைவால் வழக்காறுகள் தோன்றியுள்ளன. ஒவ்வொரு இனக்குழு சமூகமும், உற்பத்தியில் ஈடுபட்டு பொருளீட்ட முற்படும்போது அதன்சார்ந்த சடங்குகள் உருவாயின. ஓர் இனக்குழு சமூகத்தில் உருவான சடங்கு நிலவியல் எல்லை கடந்தும் பரவியது. இவ்வாறு சடங்காய் நிகழ்த்தப்பட்ட வழக்காறே பொங்கல் விழாவாகும். காலப்போக்கில் சடங்கிலிருந்து விலகி நிறுவனப்படுத்தப்பட்டு விழாவாக இன்றளவிலும் தமிழர்கள் கொண்டாடிவருகின்றனர்.

pongal at collegeஎந்தவொரு சமூகம் தொன்மைச் சமூகமாக இருக்கிறதோ, அச்சமூகம் பல்வேறுபட்ட பண்பாட்டு அடையாளங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கும். பண்பாட்டு அடையாளங்களை வெளிப்படுத்தும் ஊடகமாக வாய்மொழி வழக்காறுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. வழக்காறுகளுக்கும், உற்பத்தி உறவுகளுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. உற்பத்தியில் ஈடுபடும் போதும், வழக்காறுகளை நிகழ்த்தும்போதும் மகிழ்தல், அறிவூட்டல் எனும் நிலை உருவாகின்றது. உற்பத்தி மூலம் உபரி கிடைப்பது போல் அதன் மூலம் சடங்குகளும், விழாக்களும், நிகழ்த்துக்கலைகளும் கிடைக்கின்றன. அந்த வகையில் தமிழர்களுடைய பொங்கல் விழா உற்பத்தி சார்ந்த கூட்டு வாழ்வினையும், கூட்டு உணர்வினையும், கூட்டுச்செயல்பாட்டினையும் வெளிப்படுத்தும் விதமாய் அமைந்துள்ளது.

‘பழையன கழிதலும், புதிய புகுதலும் கால வகையினானே’ எனும் இலக்கண வரியின் மூலம் பழையனவற்றிலிருந்து புதுமை உருவாவது காலத்தின் சுழற்சி என்பதை அறிய முடிகிறது. பொங்கல் விழாவின் முதல் நாளாக போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழைய துணி முதலிய பொருட்களை தீயிட்டு கொளுத்தி விட்டுவிட்டால் நன்மை கிடைக்கும் என்பதற்காக பழைய பொருட்களை இந்நாளில் எரிப்பதுண்டு. இவ்வாறான நிகழ்வில் தான் பழைமையான ஓலைச்சுவடிகளை புனல்வாதம் எனும் பெயரில் எரிக்கப்பட்டதையும் அறிய முடிகிறது.

இதற்கடுத்ததாக காப்புக்கட்டுதல் எனும் நிகழ்வினைச் செய்வதுண்டு. இது நாட்டுப்புற நம்பிக்கை சார்ந்த வளமைச் சடங்காகும். மக்களை நன்கு காக்க வேண்டுமென நாட்டுப்புற தெய்வத்திடம் வேண்டி வீட்டுக்கூரையின் மேல்பகுதியில் மாங்குழை, பாலாங்குழை, கூளப்பூ முதலியவைகளை வைப்பது பாரம்பரிய வழக்கமாக உள்ளது. இது மார்கழி கழிவின் இறுதியாய்ப் கொண்டாடுவதாகும்.

அடுத்ததாக தை முதல் நாளாகும். இதுவே தமிழ் ஆண்டின் முதல் நாள். இது தமிழர்களின் புத்தாண்டின் தொடக்கமாகும். சித்திரை என்பது பார்ப்பனர்கள் வந்தபின்னரே தமிழ் ஆண்டின் முதல் மாதமாக கொண்டாடப்பட்டது. இதுவும், ஆரியமயமாதலின் சூழ்ச்சி என்றே சொல்லலாம். தமிழ் இலக்கண மரபின்படி பார்த்தோமானால் பொழுது சிறுபொழுது, பெரும்பொழுது என்று இரண்டாகப் பகுக்கப்பட்டுள்ளது. இதில் சிறு பொழுது என்பது ஒரு நாளை ஆறுபொழுதுகளாக பிரிப்பதாகும். பெரும்பொழுது என்பது ஒரு ஆண்டினை பன்னிரெண்டு திங்கள்களாகப் பிரிப்பதாகும். இவ்வமைப்பின் அடிப்படையில் பார்த்தோமானால் தை மாதத்தையே முதல் மாதமாக கொள்ள வேண்டும். எனவேதான் ‘தை பிறந்தால் வழிபிறக்கும்” எனும் பழமொழி உருவாகியது. ஒன்றின் தோற்றத்தைத்தான் பிறப்பு என்று கூற முடியும். பிற வேறு எந்த தமிழ் மாதத்தையும் பிறப்பு என்கிற அடைமொழி கொடுத்து கூறுவது மரபன்று. ஆதலால், தை மாதமே தமிழ்ப்புத்தாண்டாகும். இதனை கொண்டாடும் விதமாகவே மாதத்தின் முதல் நாளில் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

இதற்கடுத்ததாக உழவுத்தொழிலுக்கு நன்றி கூறும் வழிபாட்டு மரபாக ஆடு, மாடுகளைப் பராமரித்தல் எனும் நிலையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. ஒருவருக்கொருவர் சந்தித்து உறவுமுறைகளை மேம்படுத்தும் விதமாக காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இது மக்களின் கூட்டு வாழ்க்கை முறையினைமேன்மைப்படுத்துவதாய் அமைந்துள்ளது. ஆடிப்பட்டத்தில் விதைக்கப்பட்ட நெற்கதிர்களை அறுவடை செய்து நிலத்திற்கும், உழவுத்தொழிலுக்கும் வலிமை உருவாக வேண்டும் என்பதற்காக பொங்கல் செய்து கொண்டாடுவது வழிபாட்டு மரபோடு இணைக்கப்பட்டது. நிலத்தில் விளைந்த நெல்லரிசியினைக் கொண்டும், கரும்பு, வெல்லம் முதலியவைகளைப் படைத்து பொங்கலிட்டு வழிபடுவர். பின்னர் பொங்கலினையும், கரும்பினையும் நிலத்திற்குப் படையலிட்டு உழவுத்தொழிலுக்கு உதவிய மாடுகளுக்கு உணவாக உண்ணக் கொடுப்பதுண்டு. தொடக்க காலத்தில் இவ்வழிபாடு மருதநிலத்திலேயே தோன்றியிருக்கும். ஏனென்றால் மருதநிலம் என்பது வயலும் வயல் சார்ந்த பகுதியாகும். இந்நிலத்தில் தான் நெல், கரும்பு முதலிய உணவுப்பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டது. பின்னர் குறிஞ்சி, முல்லை முதலிய நிலங்களிலும் இவை கொண்டாடப்பட்டது. பின்பு இவ்வழிபாடு பரவலாக்கம் பெற்றது என்று கூற முடியும்.

பொங்கல் வைக்கும் தினத்தன்று பொங்கிவரும் பால்நீரை ஆராவாரத்தோடு ‘பொங்கலோ பொங்கல்; பால் பொங்க, பச்சரிசி பொங்க’ என வேளாண் உற்பத்தியையும் சமூக விருத்தியையும், பெருக்குவதற்காகவே பொங்கல் சமைத்தல் நிகழ்த்தி வருவதுண்டு. பொங்கலில் பொங்கிய பால்நீரை எடுத்து வீட்டுக்கூரையில் தெளிப்பதை வழக்கமாக செய்யவதுண்டு. திணைமாறி வந்த ஆந்தையை விரட்டும் விதமாக இச்சடங்கை தொடக்கத்தில் செய்தனர். இதனை பொங்கழி என்றும் பொங்கித் தெளித்தல் சடங்கு என்றும் கூறுவர்.

பொங்கல் உணவுப்பண்டமாக இருப்பினும், உள்ளார்ந்து நோக்கும் போது, பண்பாட்டு இருப்பின் வேரிலிருந்து கிளர்ந்த தமிழரின் உணவுப் பண்பாடாகப் பார்ப்பதற்கு இடமுண்டு. பொங்கல் எனும் சொல் பொங்கு எனும் பகுதிச் சொல்லில் இருந்து கல் எனும் விகுதிச் சொல் இணைந்து பொங்கல் எனும் சொல் உருவாக்கம் பெறுகிறது. இச் சொல் பொங்குதல் எனும் உள்ளீட்டிலிருந்தே உருவாகியுள்ளது. பொங்குதல் எனும் சொல்லிற்கு தமிழ் அகராதி பல அர்த்தங்களைத் தந்துள்ளது. பொங்குதல், கொதித்தல், கொந்தளித்தல், செழித்தல், சமைத்தல், உயருதல், மேலேருதல், வளர்தல், விளம்புதல், விளங்குதல், செறுக்குறுதல், மகிழ்தல். இவ்வாறு பல அர்த்தங்களில் பொங்குதல் எனும் சொல் பயன்பட்டுள்ளன. இதன் பின்னனியில் தமிழ் இலக்கண இலக்கியங்கள் பொங்குதல் எனும் அடிக்கருத்தில் அமைந்த பாடல்களைப் பதிவு செய்துள்ளன.

பொங்கின சிலம்பு ஃபொங்கி மறத்திடை மான மேற்க்கொண்டு ஃ பொங்குதலின்றி புரையோர் நாட்பண் ஃ பொங்கு நீர் ஞாலம்ஃ வன்கொங்கை பொங்கஃ போர்த்தொழில் வேட்கைபூண்டு பொங்கினாஃ பொங்குகாலம்ஃ தழைக்குமஃபொங்கழியாலை புகையொடு பரந்துபொங்கல்படி ஃபொங்கல் இனாம் இவ்வாறு தமிழ் இலக்கண இலக்கியங்களில் அமைந்துள்ளன. பொங்குதல் என்பது உணவை சமைக்கும் போது ஏற்படும் நிலையினைக் குறிக்கும் சொல்லாக மட்டுமில்லாமல் உற்பத்தியோடும், அறிவு வளர்ச்சியோடும், சமூக விருத்தியோடும், வளமைக்கான குறியீடாகவும் ஆராவாரத்திற்காகவும் உயர்வுக்காகவும் என பல நிலைகளில் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.

தமிழர் வழிபாட்டு மரபில் பொங்கல் விழா பாரம்பரியமிக்க, தொன்மைமிக்க விழாவாகும். இதனை கொண்டாடுவது தமிழரின் பண்பாட்டு அடையாளங்களைப் பேணுவதாகும். இன்றைய சூழலில் பொங்கல் விடுமுறைக்கான நாட்களாவே அணுகப்பட்டு வருகிறது. உள்ளார்ந்து நோக்கும் போது மனிதர்கள் உற்பத்தியிலிருந்து அந்நியமாகி வருகின்றதை இது காட்டுகிறது. விளைநிலங்கள் கான்கிரீட் வீடுகளாகவும், நீண்ட சாலைகளாவும் மாறிய சூழலில் இயற்கை சார்ந்த உற்பத்தி நிலங்கள் காவுவாங்கப்பட்டு வருகின்றன. ஒருபுறம் நவீன கலாச்சாரத்தாலும், உலகமயமாக்கலாலும், நவீன முதலாளித்துவச் சூழல்களாலும் பாரம்பரிய உற்பத்தி சார்ந்த பண்பாட்டு மரபும் தமிழர் வாழ்விய‌லும் அழிக்கப்படுகின்றன. இச்சூழலில் தமிழின் பாரம்பரியத் தொன்மையான பொங்கலை பண்பாட்டின் அடையாளமாகவே கொண்டாடி மகிழ்வோம்.

- ம.கருணாநிதி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, அருள் ஆனந்தர் கல்லூரி, கருமாத்தூர்.

Pin It