2023இல் வெளியிடப்பட்ட ‘சாதியின் தோற்றம் – வட இந்தியாவும் பழந்தமிழகமும்’ என்ற எமது நூல் வட இந்தியாவில் கி.பி. 1ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரே சாதி தோன்றியது என்பதையும், குப்தர் காலத்தில்தான் சாதி அரச அங்கீகாரமும் சமூக அங்கீகாரமும் பெற்று சமூகம் முழுமையும் நிலைநிறுத்தப்பட்டது என்பதையும், பழந்தமிழ்நாட்டில் சங்ககாலம் முதல் களப்பிரர் காலம்வரை சாதி இருக்கவில்லை என்பதையும் விரிவான ஆழமான ஆய்வின் மூலம் உறுதி செய்துள்ளது.

அதே சமயம் கி.பி. 250 வரை பழந்தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக இருந்த இன்றைய கேரளாவில், களப்பிரர் படையெடுப்பின் பேரழிவாலும் அதன் கொடுங்கோன்மை ஆட்சியாலும் உருவான சமூகச் சூழ்நிலைக்குப்பின் ஏற்பட்ட பார்ப்பனக் குடியேற்றங்களின் காரணமாக, கி.பி. 8ஆம் நூற்றாண்டுக்குள் சாதியத்துக்கான அடிப்படைகள் உருவாகி, கி.பி. 10ஆம் நூற்றாண்டுக்குள் சாதிகள் உருவானதையும் அந்நூல் விரிவாக ஆய்வு செய்து உறுதி செய்துள்ளது. மௌரியர் வீழ்ச்சிக்குப்பிறகு மகத அரசில் ஆட்சிக்கு வந்த சுங்க, கன்வ பார்ப்பன வம்ச காலத்தில் (கி.மு.187-30) தான் வைதீக பார்ப்பனியம், சாதியம் போன்றவைகளுக்கான அடிப்படைகள் உருவாக்கப்பட்டன என்பதையும், வைதீக பார்ப்பனியமே இன்றைய சாதியைக் கொண்டு வந்தது என்பதையும் அந்நூல் உறுதி செய்துள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை களப்பிரர் காலத்திற்குப் பிறகு (கி.பி. 550க்குப்பிறகு) கி.பி.1400 வரையான பல்லவர் காலம் முதல் சோழ பாண்டியப் பேரரசு காலம் வரையான காலகட்டத்தில் சாதி இருந்ததா? என்பது குறித்த ஆய்வு விரிவாக மேற்கொள்ளப்பட்டு அக்காலகட்டத்திலும் சாதி இருக்கவில்லை என்பது ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் இப்பகுதியும் சேர்க்கப்பட்டு ‘சாதியின் தோற்றம்’ நூலின் விரிவுபடுத்தப்பட்ட பதிப்பு வெளியிடப்படவுள்ளது. கி.பி.550 முதல் கி.பி. 1400 வரையான காலகட்டத்தில் சாதி இருக்கவில்லை என்பது குறித்த கீழ்க்கண்ட

1. பல்லவர் காலத்தில் (கி.பி.550 - கி.பி.850) சாதி

2. இடைக்காலப் பாண்டியர் காலத்தில் (கி.பி. 550 – கி.பி.950) சாதி

3. சோழப்பேரரசுக் காலத்தில் (கி.பி.850 – 1218) சாதி

4. அரசு ஆவணங்களும் ஆதித்தகரிகாலன் கொலையும்

5. இராசராச சோழன் காலத்தில் (கி.பி. 985-1014) சாதி

6. பாண்டியப் பேரரசுக் காலத்தில் (கி.பி. 1190 – 1310) சாதி

7. மக்கள் எழுச்சிக் காலத்தில் (கி.பி.1100-1300) சாதி

8. சோழப்பேரரசுக் காலத்தில் பார்ப்பனர்களின் நிலைமை

எட்டு ஆய்வுக் கட்டுரைகள் கீற்று இணைய இதழில் வெளிவந்துள்ளன. எனது ‘சாதியின் தோற்றம்’ குறித்த நூலையும் இந்த எட்டு கட்டுரைகளையும் படித்தபின் இக்கட்டுரையைப் படிக்கும்பொழுது மட்டுமே முழுமையான புரிதலைப்பெற முடியும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

கி.பி. 550இல் களப்பிரர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். தமிழகத்தின் வடக்கே பல்லவர்களும் தெற்கே பாண்டியர்களும் ஆண்டனர். கேரளாவில் சிறுகுறு அரசுகள் உருவாகி அவைகளுக்குள் இடைவிடாத போர்கள் நடைபெற்று வந்தன. கேரளாவில் கி.பி. 5ஆம் நூற்றாண்டிலிருந்தே பார்ப்பனக் குடியேற்றம் நடந்து வந்தது. கி.பி. 550க்குப்பின் அது பெருமளவில் அதிகரித்தது. அவர்களுக்கு நிலதானங்களும் பெருமளவில் நடைபெற்றன. நாளடைவில் பார்ப்பனர்கள் கேரள சமூகத்தில் நிலபுலங்களும் செல்வவளமும் ஆட்சி அதிகாரமும் சமூகச் செல்வாக்கும் கொண்டவர்களாக ஆகியிருந்தனர். இவற்றின் விளைவாக கி.பி. 800க்குள் சம்பந்தம், மறுமக்கள் தாயமுறை முதலியன கொண்டுவரப்பட்டு சாதியத்துக்கான அடித்தளங்கள் அனைத்தும் அங்கு உருவாகியிருந்தன. கி.பி. 9ஆம் 10ஆம் நூற்றாண்டுக்குள் கேரள சமூகத்தில் இருந்த குடிகள் அனைத்தும் சாதிகளாக மாற்றப்பட்டன என்பதோடு தீண்டாமையும் புகுத்தப்பட்டிருந்தது. ஆனால் தமிழ் நாட்டில் களப்பிரர் காலத்தில் சமண பௌத்த வைதீக பார்ப்பனியம் போன்றவை வளர்ச்சி பெற்று பழந்தமிழகத்தில் இருந்த பொருள்முதல்வாதச் சிந்தனைப் பள்ளிகளான எண்ணியம், சிறப்பியம், அளவியல், உலகாயதம், ஆசிவகம் போன்றவைகளை சிதைவுக்கும் அழிவுக்கும் உள்ளாக்கின. இது தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.

பல்லவர் காலத்தில் சோழர் பகுதியில் பார்ப்பனர்களின் செல்வாக்கு பேரளவு அதிகரித்த போதிலும் சாதிகள் உருவாக இயலவில்லை. அதே காலத்தில் உருவான பக்தி இயக்கம் தமிழ் மொழியின் மீட்சியாகவும் சமத்துவக் கண்ணோட்டத்தைக் கொண்டதாகவும் இருந்த போதிலும், இறுதியில் சமண பௌத்த மதங்கள் இல்லாது போய் வைதீக பார்ப்பனியம் வந்து சேர்ந்தது அதன்பின் வந்த சோழர் பாண்டியர் காலத்தில் பார்ப்பனச் செல்வாக்கும் சமற்கிருதமும் கட்டுப்படுத்தப்பட்டது. சோழப்பேரரசு காலத்தில் பார்ப்பனர்களின் பிரம்மதேயங்கள், கோயில்கள், அவற்றுக்கு வழங்கப்பட்ட தேவதானங்கள், பிரம்மசபைகள் ஆகிய பார்ப்பனர்கள் சார்ந்த அனைத்தும் முழுமையாக அரசின் கணிகாணிப்புக்கும் மேற்பார்வைக்கும், தணிக்கைக்கும் உடபடுத்தப்பட்டு பார்ப்பனர்கள் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டார்கள். அவர்களின் குற்றங்கள், ஊழல்கள், களவாடல்கள் ஆகிய அனைத்தும் கண்டறியப்பட்டு கடுமையான தண்டனைகளும் வழங்கப்பட்டன. அவர்களின் பிரம்மசபைகள் கூட அரசின் வழிகாட்டுதலின் படியே இயங்கியது. களப்பிரர், பல்லவர் காலத்தில் இருந்த அவர்களின் அரசியல் அதிகாரமும் செல்வாக்கும் இல்லாதுபோய், நிலபுலங்களும் செல்வ வளமும் குறைந்து போனது.

தமிழ்மொழி வளர்ச்சி அடைந்தது. பண்டமாற்றுப் பொருளாதாரம் இல்லாது போய் பணப் பொருளாதாரம் உருவாகி இருந்தது. பார்ப்பனியத்தின் மீது ஊர், நாடு, நகரம் போன்றவைகளும் பொதுமக்களும் வெறுப்பு கொண்டிருந்தனர். மலைநாட்டு மக்களும், பழங்குடிகளும், கைவினைஞர்களும் வணிகர்களும் இன்னபிற பல்வேறு வலங்கை இடங்கைக் குடிகளும் மேல்நிலைக்கு வந்தனர். இவற்றின் காரணமாக பிற்காலச் சோழர்-பாண்டியர் காலச் சமூகம் குறிப்பிட்ட தொழிலை வழிவழியாகச் செய்துவந்த குடிமுறைச் சமூகமாகவும், தொழிலை மாற்றியமைத்துக்கொள்ளும் சூழ்நிலை நிலவிய சமூகமாகவும், சாதியற்ற வர்க்க, வகுப்பு அடிப்படையிலான சமூகமாகவும் இருந்தது. சாதி என்ற பெயரை அவை கொண்டிருந்த போதிலும் அவை தொழில் குடிகளாகவே இருந்தன. ஆகவே தமிழகத்தில் கி.பி. 1400 வரை படிநிலையையும் அகமண முறையையும் கொண்ட பிறப்பின் அடிப்படையிலான இன்றைய சாதிமுறை உருவாகவில்லை.

விசயநகர நாயக்கர் ஆட்சிக்காலம்:

“எப்பொழுதெல்லாம் வைதீகப் பார்ப்பனியம், முழுமையான அரசியல் அதிகாரமும் நிலபுலங்களும் செல்வவளமும் கொண்டு செல்வாக்குமிக்க ஒரு உயர் சமூகமாக உருவாகிறதோ அங்கு சமற்கிருதமயமாக்கமும் சாதியமும் உருவாகி வலிமையடைந்து விடும் என்பதை இந்திய வரலாறு பலவகைகளிலும் உறுதி செய்கிறது” என்பதோடு “இன்றைய சாதிப்படிநிலை என்பதைப் பார்ப்பனர்களும் அரசர்களும் அரசியல் அதிகாரமும் ஒன்றிணைந்து மதத்தோடு சார்ந்ததாக அதனை நடைமுறைப்படுத்தினர்” என்ற செயல்முறையையும் கொண்ட ஒரு சமூகச் சூழ்நிலை உருவாகும்பொழுது மட்டுமே சாதியம் உருவாக்கப்படுகிறது. அதுபோன்ற ஒரு சமூகச் சூழ்நிலை சோழ பாண்டியப் பேரரசு காலத்தில் உருவாகவில்லை. அதுபோன்ற ஒரு சமூகச் சூழ்நிலை விசயநகர, நாயக்கர் ஆட்சிக் காலத்தில்தான் உருவாகியது. அதன் காரணமாக அக்காலகட்டத்தில் தான் இன்றைய படிநிலை கொண்ட சாதியம் தமிழகத்தில் உருவாக்கப்பட்டு வளர்ச்சியடைந்தது. அதன் பிந்தைய ஆங்கில ஆட்சியில் அது மேலும் இறுகி இன்றைய நிலையை அடைந்தது.

சங்ககாலக் குடிகள்:

சங்ககாலத்தில் இருந்தே தமிழ்ச் சமூகத்தில் நான்கு வகுப்புகள் இருந்தன. தமிழ்க் குடிகளில் பெரும்பாலானவை நான்காம் வகுப்புக்குரியன. நான்காம் வகுப்புக் குடிகள் கீழ் மக்கள் என அழைக்கப்பட்டனர். முதல் மூன்று வகுப்புகளான அரசர், அந்தணர், வணிகர் & வேளாளர் ஆகியவற்றுக்குரிய குடிகள் மேல் வகுப்புகளாக இருந்தன. குடிகள் என்பன தொழில்பிரிவுகள் என்பதை இங்கு மனதில் கொள்ள வேண்டும். கீழ்மக்கள், மேல்மக்கள் ஆவதும், மேல்மக்கள் கீழ்மக்கள் ஆவதும் நடந்து வந்தன. அதாவது கீழ்க்குடிகள் மேல்குடிகள் ஆவதும் மேல்குடிகள் கீழ்க்குடிகள் ஆவதும் நடைபெற்று வந்தன. இவர்கள் அனைவருக்குமிடையே கலப்பு மணமும் கலந்து உண்ணுதலும் இருந்து வந்தன. அகமணமுறையோ சாதியோ இருக்கவில்லை. பழந்தமிழ்க் குடிகளுக்கிடையே வர்க்க வகுப்பு வேறுபாடுகள் மட்டுமே இருந்தன. அதனை இன்றைய மேற்குலகில் உள்ள வர்க்க வகுப்பு வேறுபாடுகள் போல எனலாம். ஆகவே தமிழகத்தில் இன்று இருக்கும் சாதிகளை பண்டையத் தமிழ்க்குடிகள் போலக்கருத முடியாது. இன்றைய சாதிகளில் அகமணமுறை இருக்கிறது, படிநிலை இருக்கிறது, சாதிகளிடையே சமத்துவம் இல்லை. கலந்து உண்ணுதலும் கலப்பு மணமும் இருக்கவில்லை. உயர்வு, தாழ்வும், தீண்டாமையும் இருக்கிறது. ஆகவே பண்டைய தமிழ்க்குடிகள் வேறு, இன்றைய சாதிகள் வேறு.

ஆனால் இன்றைய தமிழ்ச்சாதிகளை தமிழ்க்குடிகள் என அழைக்கும் பழக்கம் இன்று உருவாகியுள்ளது. ஆனால் இரண்டும் ஒன்றல்ல. இன்றைய தமிழ்ச் சாதிகள் பண்டைய தமிழ்க்குடிகள் போல மாற வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் அவை அப்படி அழைக்கப்படுகின்றன. முதலில் சமூக நல்லிணக்கமும், சமத்துவமும் அவைகளுக்கிடையே உருவாகவேண்டும். படிநிலை என்பதும், உயர்வு தாழ்வும், தீண்டாமையும் ஒழிய வேண்டும். இறுதியாகக் கலந்து உண்ணுதலும், கலப்பு மணமும் உருவாக வேண்டும். அகமணமுறை ஒழிய வேண்டும். அவற்றின் மூலம் மட்டுமே இன்றைய தமிழ்க்குடிகள் பண்டைய தமிழ்க்குடிகள் போல ஆகமுடியும். பேரளவான தொழிற்துறை வளர்ச்சி ஏற்பட்டு, அமைப்புச் சார்ந்த (Organised Sector) பணிகளில் இருப்பவர்களின் எண்ணிக்கை 80 விழுக்காட்டுக்கும் அதிகமாகும் பொழுது மட்டுமே சாதி ஒழிந்து, குடிகளாக ஆகமுடியும். .

சாதியும் வர்க்கமும்:

சமூக உற்பத்தியும் உற்பத்தி உறவுகளும் சமூகத்தின் அடிக்கட்டுமானமாக இருக்கிறது எனில் அதன்மேல் கட்டப்படும் அரசியல், கலை, பண்பாடு முதலியன அதன் மேற்கட்டுமானமாக இருக்கிறது. சமூகப்பொருளாதாரமும் அதன் உற்பத்தி உறவும் ஒரே நிலையில் இருக்கும் தொழில்குழுவை ஒரு வர்க்கம் என வகைப்படுத்தலாம். வர்க்கம் என்பது சமூகத்தின் அடிக்கட்டுமானமாக இருக்கிறது. அப்படியானால் சாதி என்பது அடிக்கட்டுமானமா மேற்கட்டுமானமா? அகமணமுறையைப் பின்பற்றுவதும், பிறப்பின் அடிப்படையில் இருப்பதும், சாதிகளுக்கிடையே படிநிலை இருப்பதும், உயர்வு-தாழ்வு தீண்டாமை முதலியன இருப்பதும் சாதியின் தனித்துவமான பண்புகள். சாதியின் இப்பண்புகள் சாதி என்பது சமூகத்தின் மேற்கட்டுமானமாக இருக்கிறது என்பதை உறுதி செய்கிறது. நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் சாதி என்பது முழுமையாக ஒரு குறிப்பிட்ட தொழில் குழுவாகவே இருந்தது. தொழில்குழு என்பது ஒரு வர்க்கமாக ஒரு வகுப்பாக இருந்தாகவேண்டும். ஆகவே சாதி என்பது ஒரு அடிக்கட்டுமானமாகவும் இருந்து வந்தது. ஆகவே சாதி என்பது சமூகத்தின் அடிக்கட்டுமானமாக, அதன் மேற்கட்டுமானமாக என இரண்டுமாகவும் இருந்து வந்துள்ளது.

ஆனால் தொழில்துறை வளர்ச்சிக்குப்பிறகு ஒவ்வொரு சாதியும் ஒரு குறிப்பிட்ட தொழில் குழுவாக இருந்து வந்ததில் உடைப்பு ஏற்பட்டு வருகிறது. ஆனாலும் இப்பொழுதும் ஒவ்வொரு சாதியும் பெரும்பான்மையாக ஒரு குறிப்பிட்ட தொழில் குழுவாகவே இருந்து வந்த போதிலும் ஒவ்வொரு சாதிக்குள்ளும் வேறுபல தொழில் செய்வோரும் தொழில்குழுக்களும் உருவாகி வருகின்றன. ஆகவே இன்று ஒவ்வொரு சாதியும் ஒரு குறிப்பிட்ட வர்க்கமாக இருக்கவில்லை. அதில் வேறு சில வர்க்கங்களும் இருக்கின்றன. அவை நாளுக்கு நாள் அதிகரித்தும் வருகின்றன. சாதியம் குறித்தச் சிந்தனைப் போக்கிலும் ஓரளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது. இருந்த போதிலும் சாதிகள் என்பன இன்றும் தமிழ்ச் சமூகத்தில் ஓரளவு வலிமையுடன்தான் இருந்து வருகின்றன. அதற்குப் பல்வேறு காரணிகள் காரணமாக உள்ளன.

தொழிற்துறை வளர்ச்சி:

இந்தியாவிலும், தமிழகத்திலும் தொழிற்துறை வளர்ச்சி போதிய அளவு இல்லாததுதான் சாதியம் இருப்பதற்கான முதற்காரணியாகும். இந்தியாவில் பணி செய்பவர்களில்(Work force) 2020ல் இருந்த சுமார் 50 கோடிப்பேரில் 47 கோடிப்பேர் அமைப்புச்சாரா பணிகளிலும், 3 கோடிப்பேர் மட்டுமே அமைப்பு சார்ந்த பணிகளிலும் இருந்துள்ளனர். இவைபோக மத்திய மாநில அரசுகள், பொதுத்துறைகள் போன்றவற்றில் 4.5 கோடி மக்கள் பணிபுரிகின்றனர். மொத்தப்பணிகளில் சுமார் 15% க்கும் குறைவானவர்களே இந்தியாவில் அமைப்பு சார்ந்த பணிகளில் (Organised or Formal) உள்ளனர். 80% க்கும் அதிகமானவர்கள் அமைப்பு சாரா பணிகளில் (unorganized or informal) தான் இருக்கின்றனர். ஆனால் வளர்ச்சியடைந்த மேற்கத்திய நாடுகளில் 10-20% க்கும் குறைவானவர்களே அமைப்புச் சாரா பணிகளில் இருக்கின்றனர். 80% க்கும் அதிகமானவர்கள் அமைப்பு சார்ந்த பணிகளில்தான் இருக்கின்றனர். தமிழகத்திலும் அமைப்பு சார்ந்த பணிகளில் 80%க்கும் அதிகமானவர்கள் பணிபுரியும் பொழுதுதான் சாதி இல்லாமல் போகும்.

இந்தியாவில் 2018ஆம் ஆண்டில் கிராமப்புற மக்களில் 70% மக்களும், மொத்த மக்கள் தொகையில் 50% மக்களும் வேளாண்மை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் மொத்த மக்கள் தொகையில் 2001ல் 49.2% மக்களும், 2011ல் 42.1% மக்களும் வேளாண்மையை நம்பி இருந்தனர். இன்று (2021) 40% க்கும் சற்று குறைவான மக்கள் வேளாண்மையை நம்பி இருப்பர். வளர்ந்த நாடுகளில் 10% க்கும் குறைவான மக்களே வேளாண்மையை நம்பி உள்ளனர். சான்றாக அமெரிக்க மக்களில் 1.5%க்கும் குறைவான மக்களே வேளாண்மையை நம்பியுள்ளனர். தமிழகம் அது போன்ற ஒரு நிலையை அடையும் பொழுதுதான் சாதியின் தாக்கம் இல்லாமல் போகும்.

அதுபோன்றே 2011ல் தமிழ்நாட்டில் நகரமயம் என்பது 48.5%, மகாராசுடிரத்தில் 45%, கேரளாவில் 47%, பஞ்சாபில் 37.5% இராசசுதானில் 25% ஆக இருந்துள்ளது. நகரமயம் என்பது 80% க்கும் அதிகமாக இருக்கும்பொழுதுதான் சாதியின் தாக்கம் குறையும். நகரமயத்தைவிட முதலில் கூறிய இரண்டிலும் முழு வளர்ச்சி ஏற்படும் பொழுதுதான் சாதி இல்லாமல் போகும்.

சாதியப் பெருமை:

சாதியப் பெருமைகளைப் பரப்புவதும் அதனை வளர்த்தெடுப்பதும், சாதியச் சங்கங்கள் உருவாக ஊக்குவிப்பதும் அவற்றிற்கு ஆதரவு வழங்குவதும் அவற்றை வளர்த்தெடுப்பதும் தமிழகத்தில் மிகநீண்டகாலமாக நடந்து வருகிறது. நாளடைவில் இந்த சாதிய சங்கங்கள் கட்சிகளாக மாறுவதும் அந்த கட்சிகளைக் கூட்டணியில் சேர்த்துக் கொண்டு சீட்டுகள் வழங்குவதும் நடந்து வருகிறது. இவைபோக விடுதலைப்போராட்ட வீரர்களுக்கும், தேசியத் தலைவர்களுக்கும் தமிழறிஞர்களுக்கும் சாதிய வர்ணங்கள் பூசப்பட்டு அவர்கள் அனைவரையும் சாதியத் தலைவர்களாகக் கொண்டாடும் மனநிலை தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான அரசு விழாக்களில் இந்தச் சாதியத் தலைவர்கள் கலந்துகொண்டு இந்த தேசியத் தலைவர்கள் அனைவரையும் சாதியத் தலைவர்களாகக் கொண்டாடும் சூழ்நிலை இருந்து வருகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் இவற்றை ஆதரிக்கின்றன.

இதுபோன்ற நிகழ்வுகள் சாதியப் பெருமிதங்களை வளர்த்தெடுப்பதற்கும் சாதியச் சங்கங்கள் வலிமை பெறுவதற்கும் காரணமாகி விடுகின்றன. இந்நடவடிக்கைகள் சாதியப் பெருமைகளை சாதியவெறிகளாக உருமாற்றி சாதிகளுக்கிடையே பகைமை வெறுப்பு போன்றவற்றை கொண்டு வருவதோடு அவற்றிற்கு இடையே சாதியத் தகராறுகளையும் சாதியச் சண்டைகளையும் கொண்டு வருகின்றன. ஆணவப் படுகொலைகளுக்கும் காரணமாகின்றன. இவற்றின் விளைவாக சாதிகளுக்கு இடையே இருக்க வேண்டிய நல்லிணக்கம் ஒற்றுமை சமத்துவம் பரசுபர நம்பிக்கை முதலியன இல்லாது போகின்றன. அவற்றின் காரணமாக கலந்து உண்ணுதல் கலப்புமணம் முதலியனவும் இல்லாது போகின்றன. தேசியக்குடும்பநல ஆய்வின் (National Family Health Survey - NFHS-III, 2005-2006) படி, இந்திய அளவில் சாதிகளுக்கிடையே நடக்கும் கலப்பு மணம் என்பது 11 விழுக்காடாக இருக்கிறது. கேரளாவில் சுமார் 20 விழுக்காடும் பஞ்சாபில் சுமார் 20 விழுக்காடும் மராட்டியத்தில் 17 விழுக்காடும் சாதிகளுக்கிடையே கலப்பு மணம் இருந்து வருகிறது. ஆனால் தமிழகத்தில் சாதிகளுக்கு இடையேயான கலப்பு மணம் என்பது 3 விழுக்காடு மட்டுமே நடந்து வருகிறது. இது வருத்தத்தையும் வியப்பையும் தருகிறது.

மேலே சொல்லப்பட்ட மூன்று மாநிலங்களைப் போலவே பலவகையிலும் வளர்ச்சியடைந்த மாநிலமாகவே தமிழ்நாடு இருக்கிறது. இருந்தபோதிலும் அந்த மூன்று மாநிலங்களைவிட மிகவும் குறைந்த அளவில் கலப்பு மணம் இருப்பதும் இந்திய சராசரியை விட மிகமிகக் குறைவாக இருப்பதும் பெருவியப்பைத் தருகிறது. இதற்கான காரணம் ஆழமாக ஆய்வு செய்யப்பட வேண்டும். இராசசுதானில் நடக்கும் கலப்பு மணம் 3 விழுக்காடு. அதன் நகர்மயம் என்பது 2011ல் சுமார் 25% தான். தமிழகத்தைவிட 2.6 மடங்கு பரப்பும் அதிக மக்கள் தொகையும் கொண்டது இராசசுதான். ஆனாலும் அதன் மொத்த உற்பத்தி (GDP) என்பது தமிழக உற்பத்தியில் பாதிதான் இருக்கிறது. இருந்த போதிலும் இராசசுதான் அளவுதான் கலப்புமணம் தமிழகத்தில் இருக்கிறது. மேலும் கலப்புமணம் பீகாரில் 6.14%, மத்திய பிரதேசத்தில் 4.39%, உத்திரபிரதேசத்தில் 11.33% இருப்பதும் இவை அனைத்தைவிடவும், இந்திய சராசரி அளவை விடவும் தமிழ்நாட்டில் குறைவாக இருப்பதும் ஆய்வுக்குரியது. தமிழகத்தில்தான் மிக அதிக அளவு சாதிஒழிப்பு நடந்துள்ளது போன்ற ஒரு கருத்து இருந்து வருகிறது. ஆனால் அது உண்மையல்ல என்பதை இந்தக் கலப்புமணம் குறித்தத் தரவுகள் உறுதி செய்கின்றன. ஆகவே சாதி ஒழிப்பு என்பது இங்கு சாதி வளர்ப்பு என்பதாகவே இருந்துள்ளதுபோல் தோன்றுகிறது.

சாதி ஒழிப்புப் போராளிகள் சாதிகளுக்கு இடையே நல்லுறவு நல்லிணக்கம் ஒற்றுமை சமத்துவம் பரசுபர நம்பிக்கை போன்றனவற்றை வளர்த்தெடுக்கவும் சாதிகளுக்கு இடையே ஏற்படும் பகைமை வெறுப்பு போன்றனவற்றை நீக்கவும் பாடுபடவேண்டும். அவற்றின்மூலம் மட்டுமே சாதிகளுக்கிடையே நல்லிணக்கம் சமத்துவம் பரசுபர நம்பிக்கை முதலியன ஏற்பட்டு, கலந்து உண்ணுதல் கலப்புமணம் முதலியன அதிகரிக்க வாய்ப்பு உருவாகும். தமிழகத்தில் 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்புப்படி 89% விழுக்காடு மக்கள் தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட தமிழ்ச் சாதிகள். ஆகவே தமிழ் தேசியப் பெருமைதான் தமிழ் மக்களிடையே தமிழ் தேசிய உணர்வையும், தமிழ் தேசிய ஓர்மையையும் கொண்டுவந்து தமிழ்ச் சாதிகளுக்கிடையேயான பகைமை, வெறுப்பு முதலியனவற்றை அகற்றும். அவர்களுக்கிடையே நல்லிணக்கம் சமத்துவம் பரசுபர நம்பிக்கை ஒற்றுமை முதலியனவற்றைக் கொண்டு வந்து கலப்பு மணத்தை அதிகரிக்கச் செய்யும்.

பஞ்சாப் கேரளம் போன்ற மாநிலங்களில் அவரவர் தேசியப்பெருமிதங்கள் வளர்க்கப்பட்டன. அந்த தேசியப் பெருமிதம்தான் அம்மாநிலச் சாதிகளுக்கிடையே 20 விழுக்காடு கலப்பு மணம் நடக்கக் காரணம். தாங்கள் மலையாளிகள், தாங்கள் பஞ்சாபிகள் என்ற தேசியப் பெருமிதத்தின் காரணமாக சாதிகளுக்கிடையே பகைமை, வெறுப்பு முதலியன இல்லாது போய் அவற்றிற்கிடையே நல்லிணக்கம், சமத்துவம், பரசுபர நம்பிக்கை முதலியன ஏற்படுவதால்தான் அங்கு 20 விழுக்காடு கலப்புமணம் நடக்கிறது. தமிழகத்தில் தமிழ்த் தேசியப் பெருமிதங்கள் வளர்த்தெடுக்கப்படவில்லை என்பதோடு சாதிகளுக்கிடையே பகைமை, வெறுப்பு முதலியன வளர்த்தெடுக்கப்பட்டுள்ளன. ஆதலால் அவற்றிற்கிடையே நல்லிணக்கம், நல்லுறவு, சமத்துவம், பரசுபரம் நம்பிக்கை முதலியன இல்லாது போயுள்ளது.

நான் முன்பு கூறியவாறு தொழிற்துறை வளர்ச்சி பேரளவில் ஏற்பட்டு அது முழுமையடையும் பொழுது மட்டுமே சாதி என்பது இல்லாது போகும். அதுவரை சாதி இருக்கவே செய்யும். தொழிற்துறை வளர்ச்சி முழுமையடைவதற்கு முந்தைய இடைக்காலத்தில் தமிழ்ச்சாதிகளிடையே தமிழ்த் தேசியப் பெருமிதங்களைக் கொண்டு செல்வதன் மூலம் சாதிகளுக்கிடையே நல்லிணக்கம், சமத்துவம், பரசுபர நம்பிக்கை போன்றனவற்றைக் கொண்டு வந்து சாதிகளுக்கிடையே உள்ள பகைமை, வெறுப்பு முதலியனவற்றை இல்லாது செய்ய முடியும். அதன் மூலம் சாதியத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கமுடியும்.

தமிழ்வழிக்கல்வி:

கி.பி. 14ஆம் நூற்றாண்டுக்குப்பின்னர் விசயநகர தெலுங்கு நாயக்கர் ஆட்சியில் சமற்கிருதமும் தெலுங்கும் ஆட்சி மொழிகளாக இருந்தன. தமிழ்மொழி கீழ்மக்களின் மொழியாக ஆகிப் போனது. ஆங்கில ஆட்சியில் தமிழ்மொழி மீண்டும் மறுமலர்ச்சி பெறத்தொடங்கியது. சுதந்திரத்துக்குப் பின்னர் தமிழ் மீண்டும் புத்துயிர் பெற்று வளரத்தொடங்கியது. ஆனால் 1967க்குப்பின் ஆங்கிலம் தமிழ்நாட்டின் முதல் மொழியாக ஆகி தமிழை இரண்டாம் இடத்துக்குத் தள்ளியது. 1980க்குப்பின் பள்ளிகளில் கூட தமிழ்வழிக் கல்வி இல்லாது போய் ஆங்கில வழிக்கல்வி பெருகியது. கல்வி வணிகமயமாகியது. ஆங்கில வழிக்கல்வி என்பது பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைக் கொண்டதாகவும் சனாதனச் சிந்தனையை வளர்ப்பதாகவும் இருந்து வருகிறது. ஆங்கிலவழிக் கல்வியைப் போதிக்கும் பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் இந்துமதச்சார்பும் சனாதனச் சிந்தனையும் கொண்டனவாக இருப்பது என்பது தற்செயலானதல்ல. ஆகவே சமூக சமத்துவச் சிந்தனைக்கு ஆங்கிலவழிக் கல்வி எதிரானது. ஆனால் தமிழ் வழிக்கல்வி சமூக சமத்துவத்திற்கு ஆதரவான சிந்தனைகளை வளர்த்தெடுப்பதாக இருக்கிறது. தமிழ் இலக்கியங்கள் சமயச் சார்பற்றும், அறம் சார்ந்த வாழ்க்கையை வலியுறுத்தியும், சமூகத்தில் சமத்துவத்தை பேணும் விழுமியங்களைக் கொண்டும் இருக்கிறது. ஆகவே தமிழ்வழிக் கல்வி என்பது சமூக சமத்துவத்திற்கு ஆதரவான சிந்தனைகளைப் பேரளவில் வளர்க்கும் என்பதையும் ஆங்கிலவழிக்கல்வி இதற்கு எதிரானது என்பதையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

வைதீக பார்ப்பனியமும் சாதியமும்:

இந்தியாவில் கி.மு. 2ஆம் நூற்றாண்டுக்குப்பிறகே வைதீக பார்ப்பனியத்தால் சாதியம் தோன்றியது. கி.பி. 4ஆம் நூற்றாண்டில் குப்தர் காலத்தில்தான் சாதியம் அரச அங்கீகாரத்தைப் பெற்றது. அதன்பின்தான் அது இந்தியா முழுவதும் பரவத்தொடங்கியது. சங்க காலத்திலும், சங்கம் மருவிய காலத்திலும், களப்பிரர் காலம் வரையிலும் கூட (கி.பி. 550வரை) தமிழகத்திலும், கேரளாவிலும் குடிகள் தான் இருந்தன. சாதிகள் இருக்கவில்லை. ஆனால் கேரளாவில் கி.பி. 500க்குப்பிறகு நடைபெற்ற பெருமளவிலான பார்ப்பனக் குடியேற்றங்களால் கி.பி. 800க்குள் சாதியத்துக்கான அடித்தளங்கள் உருவாக்கப்பட்டு கி.பி. 10ஆம் நூற்றாண்டுக்குள் சாதியமும் தீண்டாமையும் அங்கு நிலைபெற்ற ஒன்றாக ஆகின. ஆகவே வைதீக பார்ப்பனியம் அரசியல் அதிகாரமும், சமூகச் செல்வாக்கும் கொண்ட ஒரு ஆதிக்கமிக்க சக்தியாக உருவாகும் பொழுது அங்கு சமற்கிருதமயமாக்கலும் சாதியமும் உருவாகி விடுகிறது என்பதைக் கேரள வரலாறு உறுதி செய்கிறது.

1500 வருடங்களுக்கும் மேலாக சாதியம் பார்ப்பனர்களுக்குப் பேரளவான நன்மைகளை வழங்கி வந்துள்ளது. ஆகவே பார்ப்பனியம் இன்றும் சாதிகளைப் பாதுகாக்கவே விரும்புகிறது. ஆனால் மிகப்பெரும் சமூகத் தீமையாக இருந்து வரும் சாதிகள் அழித்தொழிக்கப்படவேண்டும். சாதிகளை அழித்தொழிக்க வேண்டுமானால் பேரளவான தொழிற்துறை வளர்ச்சி ஏற்பட்டு, அமைப்புச் சார்ந்த (Organised Sector) பணிகளில் இருப்பவர்களின் எண்ணிக்கை 80 விழுக்காட்டுக்கும் அதிகமாக ஆக வேண்டும். வேளாண்மையைச் சார்ந்து இருப்பவர்களின் எண்ணிக்கை 10 விழுக்காட்டுக்கும் குறைவாக இருந்தாக வேண்டும். அப்பொழுதுதான் உற்பத்தி உறவுகளில் அடிப்படையான மற்றங்கள் ஏற்பட்டு சாதி என்பது முழுமையாக இல்லாது ஒழியும் நிலை ஏற்படும். ஆகவே முதலில் முழுமையான தொழிற்துறை வளர்ச்சிக்கான செயல்திட்டங்களை முடுக்கிவிட வேண்டும். பேரளவான தொழிற்துறை வளர்ச்சி மட்டுமே சாதியை ஒழிக்கும். அதேசமயம் தொழிற்துறை வளர்ச்சி என்பது இயற்கையையும் சுற்றுப்புறச் சூழ்நிலையையும், அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்கக் கூடிய, அவற்றுக்கு எந்தவகையிலும் பாதிப்பு ஏற்படுத்தாத முறையில் இருக்க வேண்டும். இயற்கையோடு இயைந்து வாழ்வதன் மூலமே மனிதன் ஒரு நிலையான நிறைவான நிம்மதியான மகிழ்ச்சிகரமான வாழ்வை வாழமுடியும் என்பதை மனித சமூகம் முழுமையும் உணர்ந்து செயல்படும் ஒரு சூழ்நிலை உருவாக வேண்டும். இவை போன்ற ஒரு நிலைமையை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோமாக!

- கணியன் பாலன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.