என் ஆருயிர் நண்பனுக்கு,

சுகமாகச் சென்னை வந்து சேர்ந்தோம். நண்பனே, நான் ஊருக்கு வருவதற்குமுன் இங்கே விட்டுவிட்டு வந்த வாழ்க்கை முறை பழையபடியும் என்னைப் பற்றிக் கொள்ளத் தயாராகக் காத்திருந்தது. என் முந்திய பிரயாணத்தின்போது நான் திரும்பி வருகையில் பட்ட கஷ்டம் இந்தப் பிரயாணத்தில் இல்லை. காரணம், என்னோடு இப்போது திரு. துரை வந்தது ஒன்று. மற்றொன்று நாமிருவரும் பிரிந்திருக்கவேண்டிய காலம் இனி அதிகமில்லை என்ற தெம்பு. என்றாலும், வேதனை இராமல் போகுமா?

இந்தக் கடிதத்தில் உனக்கு அதிகம் எழுத நேரமும் இல்லை. சந்தர்ப்பமும் இல்லை. இதையடுத்து நான் உனக்கு எழுத போகும் இரண்டு கடிதங்கள் மிகவும் முக்கியமானவை; இரகசியமானவை. அதைச் சொல்லத்தான் இக்கடிதம் எழுதினேன் என்று வைத்துக்கொள்.

தம்பி ராமசாமியின் கடிதம் ஒன்று நான் சென்னை திரும்பியதும் என்னைச் சந்தித்தது. அது எனக்காக நாலைந்து நாட்களாக என் அறையில் காத்திருந்து சோர்ந்து போயிருக்கிறது. நீ அவனுக்கு எழுதியிருந்த கடிதத்தைப் பற்றியும், அனுப்பி இருந்த, “என் ஆசைகள்” என்ற கவியைப் பற்றியும் பலபடப் பாராட்டி எழுதியிருக்கிறான்.

கோடங்காலுக்கு ஒரு ஆளை அனுப்பி நண்பர் பெருமாள் வசமுள்ள நம் புத்தகங்கள் அனைத்தையும் வாங்கி வைத்துக்கொள்ளவும். அதற்கு ராமசாமியின் கடிதம் தேவையாக இருந்தாலும், நீ அவனுக்கு விபரத்தை எழுதி ஒரு கடிதம் வாங்கிவைத்துக்கொள்.

நண்பன் ராமசாமி ஜுலை மாதக் கடைசியில் லீவில் ஊருக்கு வருவானாம். நிற்க. நம் ஊரில் ஏற்பட்டுள்ள மாறுதல்களும் அபிவிருத்தியும் நம் லக்ஷியத்துக்கு உகந்ததாக அமைந்தருக்கின்றன. அநேகமாக எல்லோரும் ஒவ்வொரு துறையில் அதிவேகமாக அபிவிருத்தியாகிக் கொண்டு வருகின்றனர்.

கடிதத்தை நிறுத்தட்டுமா? அன்பைத் தெரிவித்துக்கொள். என்னென்ன சொற்கள் உண்டோ அவற்றையெல்லாம் பயன்படுத்தி பயன்படுத்தி சாரமில்லாமல் செய்துவிட்டோம். இனி எந்தச் சொற்களை உபயோகிப்பது? நீயோ நானோ ஒரு பெண்ணாக இருந்திருந்தால் அழகழகாக என்னென்னவோ எழுதலாம். அதெல்லாம் இங்கே நடக்குமா?

ஏமாற்றத்துடன் விடை பெற்றுக்கொள்ளுகிறேன், என் அன்புருவே!

பின் குறிப்பு : கோர்க்கியின் புத்தகத்தை பற்றி விசாரிக்கவும், மகாபலிபுரம் வரும் விஷயமாக நண்பர்களை ஜரூர்படுத்தவும். மகாபலிபுரம் பிராயணத்தில் நம் நண்பர்களில் ஒருவராவது வரத் தவறக்கூடாது. தேதியை வேண்டுமானாலும் ஒத்திவைத்துக் கொள்ளலாம்.

அன்புடன்,
கு. அ

***********************

சென்னை
23.3.45

அன்புமிக்க ராஜநாராயணனுக்கு,

உன் 17ம் தேதி கடிதம் நேற்று கிடைத்தது. எல்லா விபரங்களும் அறிந்தேன். இத்துடன் சுரப்படுத்துவதற்காக கம்பன் பாடல்களையும் கம்பன் சம்பந்தப்பட்ட பாடல்களையும் அனுப்பியிருக்கிறேன். அவற்றில் முதல் இரண்டு பாடல்களையும் அனுப்பியிருக்கிறேன். அவற்றில் முதல் இரண்டு பாடல்களும் கடைசி 7, 8 பாடல்களும் அவ்வளவு முக்கியமானவையல்ல. ஆனால் இசைக்குப் பொருத்தமாக வந்தால் எடுத்துக் கொள்ளவும். 2 பாடல்களைக்கூட ஒரு கீர்த்தனையாக அமைக்கலாம். இவற்றை சாவகாசமாக சுரப்படுத்தி வையுங்கள். பத்திரிக்கைக்கு அனுப்ப வேண்டாம். நான் கடைசியாக அனுப்பியிருந்த ‘கனவிலும் வாராரோ’ என்ற பாட்டு எந்த ராகத்துக்குப் பொருத்தமாக இருக்கிறது? உசேனி வர்ணம் சரிதானா? இதுவரை எத்தனை பாடல்கள் மொத்தம் சுரப்படுத்தப்பட்டுள்ளன? யார் யார் பாடல்கள் எத்தனை எத்தனை? எத்தனை காவடிச் சிந்துகள்? இந்த விபரங்களை உடனே தெரிவிக்கவும். புத்தகமாக வெளியிட வேண்டிய முயற்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.

திரு. குருபரன் கவிராயருக்கு இன்று கடிதம் எழுதினேன். அவரிடமிருந்து ஒரு கடிதத்தைத் தவிர்த்து வேறு பதிலைக் காணோம். சீக்கிரமாக காவடிச்சிந்தை வெளியிட வேண்டும். உன்னிடம் அவர் எழுதிக்கொடுத்த பாடல்கள் அனைத்தையும் அனுப்பி வை. கவிராயரவர்களைக் கண்டு விபரம் தெரிவிக்கவேண்டும் சீக்கிரத்தில்.

நீ ஆபிசுக்கு அனுப்பிய கட்டுரை பிரசுரிக்க எடுத்து வைக்கப்பட்டிருக்கிறது மற்றும் இரண்டு குழந்தைப் பாட்டுகளும் பிரசுரமாகும். எப்போதும் பழைய கவிஞர்களின் பாடல்களை வைத்துத்தான் கட்டுரை எழுதுவது வழக்கம். இன்னும் அச்சேறாத நம் அண்ணாச்சியின் பாடல்களை வைத்து கட்டுரை எழுத வேண்டாம். நான் திருத்தி அனுப்பிய பாட்டை என்ன செய்தாய்? இப்போது நீ அனுப்பிய பாடல்கள் உன் அபரிதமான வளர்ச்சியைக் காட்டுகின்றன. ஆனா சிரமத்தைச் சமாளிக்க முடியாமல் எதுகை மோனைகளை தெரிந்தே தவறுதலாகப் போட்டிருக்கிறாய். அது கூடாது. அதனால் இன்னொரு தடவை நீயே அதைத் திருத்தி எழுதி அப்புறம் எனக்கு அனுப்பவும். ‘ரங்கா’ என்ற தமிழ் பண்பில்லாத பெயர் பாட்டைச் சீரழித்துவிடுகிறது. நமக்குப் பிடித்தமான பெயர் என்றாலும் பாட்டில் அமைக்க வேண்டாம். அந்தப் பெயரை இனி உபயோகிக்க வேண்டாம்.

திரு. ராமசாமிக்கு நானும் கடிதம் எழுதியிருக்கிறேன். நீயும் எழுத வேண்டும், புத்தகவிஷயமாக.

உன் உடல்நிலையும் திரு. நடராஜன் உடல் நிலையும் சுகம் என்று நம்புகிறேன். திரு. சுவாமியவர்கள் தற்போது எங்கே இருக்கிறார்கள்? எல்லா அன்பர்களையும் கேட்டதாகச் சொல்லவும். திரு.சண்முகசுந்தரம் 25ம் தேதி அங்கு வருவார்.

நான் சென்ற கடிதங்களில் தெரிவித்ததைத் தவிர்த்து என்னைப் பற்றிய செய்தி ஒன்றுமில்லை. பதில்.

அன்புடன்
கு. அ


***********************

சென்னை
4.4.45

அன்பு மிக்க ராஜநாராயணணுக்கு,

முதலில் உன் கடிதத்துக்குப் பதில் எழுதிவிடுகிறேன். என் ‘பங்குக்கு வரும்’ பாடல்களை நான் சீக்கிரம் எழுதி அனுப்புகிறேன். இப்போது ஸ்வர சாகித்யங்கள் ஒன்றையும் அனுப்ப வேண்டாம். எல்லா வேலைகளும் முடிந்தபின் பூர்த்தியான உருவில் அனுப்ப வேண்டும். இனி கூடிய மட்டிலும் சில பாடல்களை சாதாரணமாக வழங்கும் ராகங்களில் ஸ்வரப்படுத்தவும். அப்பொழுதுதான் பொதுமக்களிடம் அவை விரைவில் பரவும்.

‘சக்தி’யிலிருந்து எப்போதுமே கதை, கட்டுரை ஸ்டாம்பு வைத்து அனுப்பினாலும், திரும்பி வந்ததாக எனக்குத் தெரியவில்லை. பார்க்கலாம். உன் ‘ரங்கா’ நன்றாகவே இருந்தது. ஆனால் இந்த ரங்கா என்ற பெயர் தமிழ்ப் பண்போடு ஒலிப்பதில்லை. நான் திருத்துவதைவிட நீயே திருத்த முயற்சித்தால் என்ன?

நான் திருத்தியனுப்பியிருந்த அண்ணாச்சியின் பாடல்களைப் பிரதி செய்துகொண்டு, நான் அனுப்பிய பிரதியை எனக்கு அனுப்பிவிடவும். கவிராயர் எழுதித் தந்த பாடல்களை மட்டும் அனுப்பினால் போதுமானது. வேறு பிரயாசை ஒன்றும் நீ எடுத்துக்கொள்ள வேண்டாம். சென்ற வருஷத்தில் கவியரங்கத்தில் பங்கெடுத்துக்கொண்ட எவருக்கும் இந்த வருஷம் அழைப்புக் கிடையாது. இந்த வருஷம் வேறு சில கவிஞர்களுக்கு இடமளிக்கப்பட்டிருக்கிறது என்றாலும் போன வருஷக் கவியரங்கம்... ஆகா!

சுவாமியவர்கள் என்ன ஜோலியை முன்னிட்டு பழையபடியும் திருவனந்தபுரம் சென்றிருக்கிறார்களோ?
நீ அனுப்பியவை கிடைத்தன. நாலைந்து நாட்களுக்கு முன் உனக்கு ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தேன். அதை இப்போதுதான் கிழித்தெறிந்துவிட்டு இக்கடிதத்தை எழுதலானேன்.

செட்டியாருடைய ‘சந்திரிகை’ என்னை ஆட்கொண்டுவிட்டது. ஆனால் அவர் உணர்ச்சி மேலீட்டினால் வாக்கிய அமைப்பில்லாத சில பாடல்களை எழுதி விடுகிறார். அதைத் திருத்தம் செய்திருக்கிறேன். அவர், இப்படியே கவிதைத் துறையில் முயற்சித்தால் வெகு சீக்கரம் கவியாகிவிடுவார். அவருடைய ‘மலை’யை உடனே அனுப்பிவை. என் வீட்டு விலாசத்துக்கு.

என் உசேனி வர்ணம் வழிக்கு வந்ததா?

என் எழுத்துக்களை நீ ஒழுங்காகப் படித்து வருகிறாயா?

நீ கேட்டிருக்கும் மருந்து சம்பந்தமான தகவலை விரைவில் விசாரித்துத் தெரிவிக்கிறேன். எப்படியும் இங்கே அவை கிடைக்கும் உன் உடல்நிலை இப்போது எப்படித்தான் இருக்கிறது?

நடராஜனிடமிருந்து கடிதமே காணோம். என்ன விபரமோ?

அன்புடன்
கு. அ

Pin It