இடம்பெயர் வாழ்வு என்பது பெரும்பாலான தருணங்களில் துன்பக் கேணியாகவும், அரிதான சில தருணங்களில் இன்பச்சோலையாகவும் இருந்து வந்துள்ளது. மனித வாழ்வின் ஆதிமூலத்தைத் தோண்டினால், அது ஓரு புலம்பெயர் வாழ்வாகத்தான் இருக்கும். நதிக்கரை நாகரிகங்கள் பற்றி வரலாறு விரிவாகப் பதிவிடுவதை அனைவரும் அறிவோம். இயக்கமே, மாற்றத்தின் தோற்றுவாய். மாற்றமே வாழ்வின் உந்து சக்தி.
மனிதர்கள், தாவரங்கள் அல்ல! விருப்பம் சார்ந்தும், நெருக்கடிகள் சார்ந்தும் அவர்கள் இடம் பெயர்கின்றனர். கனவுகளைத் துரத்துவதும், இறுதியில் நம்பிக்கைகள் தகர்வதும்தான் பெரும்பாலான புலம்பெயர் வாழ்வாக இருக்கிறது. நல்வாய்ப்பாகச் சிலருக்கு அதுவே விடியலாகவும் அமைந்து விடுகிறது. பெரும் வல்லரசாக உருவெடுத்திருக்கும் அமெரிக்கா ஓர் அகதிகளின் தேசம் என்பது சமகால வரலாறு.
ஆனால், புதிய அமெரிக்காவின் தோற்றம் என்பது ஆதிகுடிகளான செவ்விந்தியர்களின் கல்லறையில்தான் கட்டப்பட்டது எனும் வரலாற்றுச் சோகத்தை மறக்க முடியாது.
எல்லைகளற்ற ஓர் உலகே மனிதனின் இலட்சியக் கனவாக இருக்கிறது. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பது மனித விழுமியங்களின் சாரமாகும். ஆனால், அது ஒரு நீண்ட பயணமாகத்தான் இருக்கிறது. பெரும்பாலான நாடுகளில் வலதுசாரி அரசுகள் ஆட்சி அதிகாரத்தில் கோலோச்சும் இந்தக் காலகட்டத்தில், எல்லைச் சுவர்கள், கத்திமுனைக் கம்பி வேலிகள், கடலில் மிதக்கும் தடுப்புகள், பாலைவனங்களையும் கண்காணிக்கும் ஆளில்லாத குட்டி விமானங்கள் (Drones) தடுப்புமுகாம்கள் போன்றவைதான் இன்றைய மெய் நடப்பாக உள்ளது. இந்நிலையில் இடம்பெயரும்
மனிதர்கள், புள்ளிவிவரங்களின் வெறும் எண்ணிக்கையாக மாறிப் போய் விட்டனர். எந்த சமயத்திலும் உலகப் போர் மூண்டு விடலாம் என்ற அச்சத்திலேயே மனித வாழ்வு உறைந்து கிடக்கிறது. பாலஸ்தீனம் அந்தச் செய்தியைத்தான் நமக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறது. தங்களது தேசத்தை இழந்தது மட்டுமல்லாமல், தங்களுக்கு ஆதரவாக இருக்கும் நாடுகளுக்கும் போர் ஆபத்து சூழ்ந்து வருவதைக் கையறுநிலையில் பாலஸ்தீனிய அகதிகள் கண்டு வருகின்றனர். அறமற்ற ஏவுகணைத் தாக்குதல்களில் ஏதுமறியாத தங்கள் குழந்தைகள் உருக்குலைந்து கொல்லப்பட்டால், அவர்களை அடையாளம் கண்டு கொள்வதற்கு அக்குழந்தைகளின் கைகளில் உரிய விவரத்தைப் பாலஸ்தீனியர்கள் பொறித்து வைக்கும் பெரும் அவலம் நம் கண்முன்னால் நடந்து கொண்டிருக்கிறது.
ரோஹிங்கிய அகதிகள்
இத்தகைய இனப் படுகொலை, பாலஸ்தீனத்தில் மட்டுமல்ல, மியன்மாரிலும் தொடர்கிறது. மியன்மார் அரசு, ரோஹிங்கியா முஸ்லீம்களை அங்கு தொடர்ந்து வேட்டையாடி வருகிறது. 2017 ஆகஸ்டு - செப்டம்பர் மாதத்தில் மட்டும் மியன்மார் இராணுவத்தின் சித்திரவதை பொறுக்க மாட்டாமல் 7, 50,000 ரோஹிங்கியா அகதிகள் வங்காளதேசத்திற்கு ஓடி வந்தனர். வங்காள தேசத்தின் டெக்நேப் மற்றும் உக்ஹியா (Teknaf & Ukhia) பகுதிகள் இன்று உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக அகதிகள் தொகை கொண்டதாக மாறியுள்ளது. அப்பகுதியிலுள்ள 34 அகதி முகாம்களில் 10 இலட்சம் பேர், ஒரு சதுர கிலோ மீட்டரில் 40,000 பேர், என்பதான கொடிய நெருக்கடியில் உழன்று கொண்டுள்ளனர். மேலும் 1,05,000 அகதிகளுக்கு மேல் மலேசியாவிற்கும், 22,000 பேர் இந்தியாவிற்கும், தோராயமாக 1,000 பேர் இந்தோனேசியாவிற்கும் என ரோஹிங்கியர்கள் சென்றுள்ளனர். 2017 ஆம் ஆண்டில் ரோஹிங்கிய முஸ்லீம்கள் வங்காள தேசத்திற்கு வந்தது மூன்றாவது தவணை ஆகும். பல ஆண்டுகளாக ரோஹிங்கியர்கள் மியன்மாரில் ஓரங்கட்டப்பட்டும், விலக்கி வைக்கப்பட்டும், தண்டிக்கப்பட்டும் இருந்த காரணத்தால் உயிரையும் பொருட்படுத்தாமல் இப்படி நாடு விட்டு நாடு ஓடுகின்றனர். கும்பல் படுகொலை, பாலியல் வன்புணர்வு, . திட்டமிட்ட கலவரங்கள் ஆகியவற்றின் காரணமாக ரோஹிங்கியர்களின் 300 கிராமங்களும், பல்லாயிரம் ரோஹிங்கிய முஸ்லீம்களின் வீடுகளும் முற்றிலும் மியன்மாரில் அழித்தொழிக்கப் பட்டன.
இனப்படுகொலை வழக்குகள்
2017 ஆம் ஆண்டுத் தாக்குதலில் மியன்மாரில் இனப்படுகொலை நடந்ததாக ஐ. நா. - வின் உண்மை அறியும் குழு தெரிவிக்கிறது.
மியன்மாரின் இனப்படுகொலைக்கு எதிராகப் பன்னாட்டு நீதிமன்றத்தில் (International Court of Justice -ICJ) காம்பியா (Gambia) குற்றச்சாட்டினைப் பதிந்துள்ளது. பன்னாட்டு நீதிமன்றத்தில் இதுவரை பதிவான நான்கு இனப் படுகொலை வழக்குகளில் இதுவும் ஒன்றாகும். ஐக்கிய யுகோஸ்லோவேகியக் குடியரசுக்கு (செர்பியா மற்றும் மான்டெனீக்ரோ - Montenegro) எதிராக போஸ்னியா - ஹெர்சிகோவினா - (Bosnia - Herzegovina) 1993 - ஆம் ஆண்டில் இனப்படுகொலை வழக்குத் தொடர்ந்தது.
இசுரேல் நாட்டிற்கு எதிரான தென்னாப்பிரிக்காவின் இனப்படுகொலை வழக்கும், இரசியாவிற்கு எதிரான உக்ரேன் வழக்கும் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது.
குடியுரிமைக் கோரிக்கை
அகதிகள் குறித்த சர்வதேச 1951 - ஆம் ஆண்டு ஒப்பந்தம் அல்லது 1967 - ஆம் ஆண்டு நெறிமுறைகள் ஆகியவற்றில் கையொப்பம் மற்றும் ஏற்பிசைவு தராத காரணத்தால், வங்காள தேசம், அகதிகளுக்கான உரிமைகளைப் பேணுவதில்லை. முறைசாராத் தொடக்கக் கல்வியைத் தாண்டி ரோஹிங்கியா அகதிக் குழந்தைகள் மேலே படிப்பதற்கு வங்காள தேச அரசு தடை விதித்துள்ளது. இதை ஈடுகட்ட முகாமிலுள்ள ரோஹிங்கியா ஆசிரியர்கள் அகதிக் குழந்தைகளுக்கு மேற்கொண்டு இடைநிலைக் கல்வி கற்பிக்கச் சமூகப் பள்ளிகளை உருவாக்க முயன்றால், அத்தகைய ஆசிரியர்களது அடையாள அட்டை பறிமுதல் செய்யப்படும் அல்லது அவர்கள் கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள் என வங்கதேச அதிகாரிகள் அச்சுறுத்துகின்றனர்.
இத்தகைய கையறு நிலையில் ரோஹிங்கிய முஸ்லீம்கள் தங்களது நாடான மியன்மாருக்கும் திருப்பிச் செல்ல முடியாது. ஏனெனில் அங்கு அவர்களுக்கு எவ்வித உரிமைகளும் வழங்கப் படாது. ஏற்கெனவே 1,20,000-க்கும் அதிகமான ரோஹிங்கியர்கள் அங்கு முகாம்களில் அல்லாடிக் கொண்டுள்ளனர். மேலும் ரோஹிங்கிய அகதிகளின் முக்கியக் கோரிக்கையான குடியுரிமையை வழங்க மியன்மார் அரசு மறுத்து விட்டது. (தகவல்களுக்கு நன்றி--மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தின் மனிதநேய மற்றும் போர்களை எதிர்கொள்ளும் நிறுவனத்தின் மூத்த விரிவுரையாளர் முனைவர் மிரியம் பிராட்லி -- Dr. Miriam Bradley , Senior Lecturer in humanitarian studies at the University of Manchester's Humanitarian and Conflict Response Institute) பாலஸ்தீனம் மற்றும் மியான்மார் ரோஹிங்கியா முஸ்லீம்களைப் போல சிங்களக் காடையர்களால் இனப்படுகொலைக்கு உள்ளான பல்லாயிரக் கணக்கான ஈழத் தமிழர்களின் அவல வாழ்வு குறித்துப் இத்தருணத்தில் நினைவுகூர்வது முக்கியம்.
அகதிகளாக இருப்பினும், மக்கள் அனைவரும் சமமானவர்கள் அல்ல. அவர்களிலும் பாகுபாடுகள் நிலவுகின்றன. இலங்கை, மியன்மார், காங்கோ சனநாயகக் குடியரசு ஆகிய நாடுகளின் குடிமக்களைக் காட்டிலும், ஸ்வீடன், நியூசிலாந்து மற்றும் அமெரிக்கக் குடிமக்களுக்கு மேலதிகமான வாழ்வாதாரங்களும், கூடுதல் சுதந்திரமும் இருக்கிறது. சனநாயகம் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதைக் காட்டிலும், குடியுரிமை மற்றும் எல்லைகள் போன்ற பல்வேறு நிலைகளில் சமத்துவமின்மை, அநீதி மற்றும் துன்பங்கள்தான் மேலதிகமாக நிலவுகின்றன.
புலம்பெயர்க் கட்டுப்பாடுகள்
ஒரு நாட்டிலிருந்து மற்றோர் நாட்டுக்குச் செல்பவர்கள் இருவகையினராக உள்ளனர். தாங்கள் தாக்கப்படுவதிலிருந்து அஞ்சி ஓடுபவர்கள் ஒரு வகையினைர். பின் தங்கிய நாடுகளிலிருந்து வளமான வாழ்வை நாடி, தங்களது நாட்டிலிருந்து வேறோர் நாட்டிற்குக் குடிபெயர்ந்து செல்பவர்கள் மற்றோர் வகையினர். இப்படிப்பட்டவர்களுக்காகப் புலம்பெயர்க் கட்டுப்பாடுகள் என்பவை ஒப்பீட்டளவில் அண்மைக் காலத்தில்தான் உருவாக்கப்பட்டன. 19- ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கு முன்னால் மக்கள் தத்தம் நாடுகளின் எல்லைகளைத் தாண்டி புலம்பெயர்ந்து வருவதையும், நாடுகளுக்குள்ளேயே இடம்பெயர்ந்து செல்வதையும் கட்டுப்படுத்துவதற்காகப் பல்வேறு சட்டங்கள் உருவாக்கப் பட்டன. எடுத்துக்காட்டாக, சீனத் தொழிலாளர்கள் இடம்பெயர்ந்து தங்கள் நாட்டில் நுழைவதைத் தடுப்பதற்கு 1882 - ஆம் ஆண்டில் 'சீனர்களைத் தவிர்க்கும் சட்டம்' (Chinese Exclusion Act)' அமெரிக்க அரசு கொண்டு வந்தது. குடிபெயர்ந்து வருபவர்கள் குறித்த நவீனக் கட்டுப்பாடுகளையும் அதன் மூலம் தொடங்கி வைத்தது.
அதே போல் இந்தியாவிலிருந்து வரும் தொழிலாளர்களுக்கு எதிரான கனடியர்களின் இனக்கசப்பினை ஈடு கட்ட, இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் கனடா குடியுரிமைக் கட்டுப்பாடுகளை விதித்தது. ஐரோப்பியர்கள் அல்லாதவர்கள் ஆஸ்திரேலியாவில் நுழைவதைத் தடுக்க "வெள்ளை ஆஸ்திரேலியா" கொள்கை (White Australia policy) உருவாக்கப் பட்டது. 1890 முதல் 1950 வரை ஆஸ்திரேலியாவின் அனைத்து அரசுகளும், முக்கிய அரசியல் கட்சிகளும் அதை ஆதரித்தன. அதே போல் கிழக்கு ஐரோப்பாவில் யூதக் குடியேறிகள், தாங்கள் துன்புறுத்தப் படுவதிலிருந்து தப்பிக்க ஐக்கியப் பேரரசுக்குள் (United Kingdom) நுழைய முயன்றனர். இதைக் கட்டுப்படுத்த முதன்முதலாக 1905 “அந்நியர்கள் சட்டம்” (Aliens Act) கொண்டு வரப்பட்டது. அதேபோல் காமன்வெல்த் நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து வருபவர்களைத் தடுக்கும் தீவிரமான கட்டுப்பாடுகள் 1962 - ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகுதான் பெரும்பாலான நாடுகள் விடுதலை அடைந்தன. எனவே காலனிய மற்றும் காமன்வெல்த் நாடுகளிலுள்ள ஆயிரக்கணக்கானவர்கள் கரிபியன், ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகளிலிருந்து ஐக்கியப் பேரரசுக்கு (UK) வரத் தொடங்கினர். விளைவாக, கறுப்பு மற்றும் பழுப்பு நிறக் காமன்வெல்த் மக்களைத் தடுப்பதற்குப் பிரித்தானிய அரசு குடியேற்ற மற்றும் தேசியச் சட்டங்களைக் கொண்டு வந்தது. இப்படி இனவழியிலான கட்டுப்பாடுகள் பற்பல நாடுகளில் நடைமுறைப் படுத்தப் படுகின்றன.
தமிழர்கள் பெயர்வு
இந்தப் பின்னணியில்தான் தமிழர்களது இடப்பெயர்வு /புலப்பெயர்வு ஆகியவற்றைக் காண வேண்டியுள்ளது. 1876 - ஆம் ஆண்டில் உண்டான பெரும் பஞ்சத்தின் காரணமாக அரசியல் மற்றும் பொருளியல் ரீதியில் தமிழகம் மிகவும் பாதிக்கப்பட்டது. இந்த ஏழ்மையைப் பயன்படுத்திக் கொண்டு பிரிட்டன், பல நாடுகளிலுமுள்ள தனக்குச் சொந்தமான தோட்டங்களில் வேலை செய்யத் தமிழ்த் தொழிலாளிகளைப் பயன்படுத்திக் கொண்டது. மலேசியா, சிங்கப்பூர், தென் ஆப்ரிக்கா, மியன்மார், மொரிஷியஸ், கென்யா, டான்சானியா, பிஜி, இலங்கை போன்ற நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்கள் பட்ட துன்பங்களுக்கும், சித்திரவதைகளுக்கும் அளவே இல்லை. ஆனால், தமிழர்கள் சிந்திய கண்ணீர்க் கதைகள், காற்றில் கலந்து மறைந்தே போய் விட்டது. பல்லாயிரக் கணக்கான தமிழ்மக்களின் அளவற்ற சோகம் வரலாற்றில் பெருமளவு பதிவிடப் படவேயில்லை.
சயாம் மரண இரயில்பாதை
அதன் ஒரு சிறு அங்கம்தான் சயாம் (தாய்லாந்து) நாட்டிலிருந்து பர்மா (மியன்மார்) வரையிலான இரயில்பாதை அமைக்கும் திட்டம். 1942 செப்டம்பர் 16 - ஆம் நாளிலிருந்து 16 மாதங்களுக்குள் அந்த இரயில்பாதை அமைத்து முடிக்கப்பட வேண்டும் என ஜப்பான் அரசு கட்டளையிட்டது. இதற்காகச் சுரங்கம் வெட்டுதல், மண் அள்ளுதல் போன்ற கடினமான உடல் உழைப்புப் பணிகள் செய்வதற்கு ஏற்கெனவே மலேயாவிலுள்ள தேயிலைத் தோட்டத் தமிழ்த் தொழிலாளிகளைக் கட்டாயப்படுத்தினர். அவ்வாறு கொண்டு செல்லப்பட்டவர்களில் ஒரு இலட்சத்திற்கும் மேலானவர்கள் தமிழர்கள் எனத் தோராயமாகக் கணக்கிடப் படுகிறது. இவர்களைத் தவிர, சயாமியர் மற்றும் மலாய் இனத்தவர்களும் கணிசமான அளவில் இப்பணிக்குப் பயன்படுத்தப்பட்டனர் . சயாம் இரயில் பாதை போட ஆட்களைத் தேடி ஜப்பானிய இராணுவத்தினர் வேட்டை நாய்களைப் போல அலைந்து கொண்டிருந்தனர். இராணுவத்தினரிடமிருந்து தங்களது ஆண் பிள்ளைகளைக் காப்பாற்ற அவர்களுக்குச் சேலை கட்டி, பொட்டிட்டுப் பெண் வேடம் போட்டு வைத்தனர் பல தமிழ்த் தாய்மார்கள். சயாமுக்குப் போய்ச் சாவதை விட, காட்டுக்குள் போய்த் தலைமறைமாக வாழ்வது உத்தமம் எனக் கருதித் தங்களது பிள்ளைகளைக் காட்டிற்கு விரட்டிய பெற்றோர்கள் பலர் இருந்தனர்.
இரயில் பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளிகளுக்கு மருத்துவம், உணவு, தங்குமிடம் ஆகியவை போதிய அளவு வழங்கப்படவில்லை. நோய்வாய்ப்பட்டால் அவர்களைக் குடிசைகளில் அனாதையாகக் கிடத்தி விட்டு, மற்றவர்கள் சென்று விடுவார்கள். தனித்து விடப்பட்ட நோயாளிகளுக்குச் . சாவதைத் தவிர, வேறு வழியில்லை. இரயில் பாதை அமைக்கும் பணியில் சரிவர வேலை செய்யாமல் இருந்தாலோ, தப்பிக்க முயன்றாலோ அவர்கள் ஜப்பானிய இராணுவத்தினரால் இரக்கமின்றி உடனடியாகச் சுட்டுக் கொல்லப் பட்டனர். இராணுவத்தினரின் கொடிய சித்திரவதைகளுக்கு அஞ்சி நதியில் குதித்து மாண்டவர் பலர். இப்படிச் சொல்லித் தீராத இன்னல்களை அனுபவித்த தமிழர்கள் எதிர்கொண்ட உயிரிழப்பு, உறவிழப்பு, பொருளிழப்பு போன்றவை வரலாற்றில் உரிய முறையில் பதிவாகவில்லை. சயாம் மரண இரயில் பாதை அமைப்பதில் தாங்கள் பாதிக்கப்பட்ட வரலாற்றை ஆங்கிலேயர்கள் "The Bridge on the River Kwai" என்ற பெயரில் திரைப்படமாக எடுத்துப் பல்லாண்டுளுக்கு முன்பே ஆவணப்படுத்தி விட்டனர். ஆனால் தமிழர்களது தியாகத்திற்கு ஆறுதலோ, அங்கீகாரமோ கிடைக்கவில்லை. இந்த அமர காவியம் குறித்துத் தமிழில் ஒன்றிரண்டு நூல்களே வந்துள்ளன என்பது பெரும் துயரச் செய்தியாகும்.
தென் ஆப்பிரிக்கத் தமிழர்கள்
இதே போன்றதுதான் தென் ஆப்பிரிக்கத் தமிழர்களது வாழ்வும். 1844-ல் அடிமை வணிகத்தை இந்தியாவில் தடை செய்தது இங்கிலாந்து அரசு. எனவே ஒப்பந்த அடிப்படையில் கூலிக்குத் தொழிலாளர்கள் கப்பலேற்றி அழைத்துச் செல்லப்பட்டனர். புதிய வாழ்வு கிடைக்கும் எனும் கங்காணிகளின் பசப்பு வார்த்தைகளை நம்பி, பெரும் எண்ணிக்கையிலான தமிழர்கள் கூலி வேலைக்குச் சென்றனர். எதைச் செய்தால் தனது பசி நீங்கும் எனும் கையறு நிலையில் அப்பொழுது தமிழ்த்தொழிலாளிகள் வாடி நின்றனர். இது குறித்துத் "துன்பக் கேணி" எனும் கதையில் புதுமைப்பித்தன் அவர்களும் தேயிலைத் தோட்டத்தொழிலாளர்களின் துன்பியல் வாழ்வைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார். "பறைச்சேரியில், தேயிலைத் தோட்டம் இவ்வுலக வாழ்க்கையில் மோட்சம் போலத் தோன்றியது. திரைகடல் ஓடியாவது திரவியம் தேட வேண்டுமாமே? அதற்காகத் திரை கடலோடிச் சுதந்திரத்தைப் பயணம் வைத்தால் என்ன? கடைசியிலாவது ஏதாவது மொத்தமாகக் கொண்டு வரலாமே!" என அவரது சிறுகதைப் பாத்திரம் கூறுவது. அன்றைய தமிழர்களின் வறுமை நிலையைச்சுட்டிக் காட்டுகிறது.
"1834 முதல் 1940 வரை 2. 8 கோடி இந்தியர்கள் குடிபெயர்ந்தார்கள் என்றும், ( இவர்களில் கணிசமானவர்கள் ஒப்பந்தக் கூலிகள் என்றும்) மூன்றில் ஒரு பகுதியினரேனும் தமிழர் என்றும் வரலாற்று ஆய்வாளர் சுனில் அம்ரித் கணக்கிடுகிறார். குடியேறியவர்களில் 60 முதல் 70 இலட்சம் மக்கள் வரை . புகலிடத்திலேயே தங்கிவிட்டனர். 1834 முதல் மொரீசியஸ், பிஜி, இலங்கை, மலேயா, பிரிட்டிஷ் கயானா ஆகியவற்றிற்கு ஒப்பந்தக் கூலிகளாகச் சென்ற தமிழர்கள், 1860 முதல் தென்னாப்பிரிக்காவுக்குக் குடிபெயரலானார்கள். சென்னைத் துறைமுகம் இதற்கான முதன்மையான வாயிலாக இருந்தது. முதல் உலகப்போர் காலகட்டத்தில் ஏறத்தாழ ஒன்றரை இலட்சம் இந்தியர்கள் தென் ஆப்பிரிக்காவில் இருந்திருக்கலாம் என்பது ஒரு கணக்கு. . இதில் ஒரு இலட்சம் பேர் ஒப்பந்தக் கூலி முறையின்படி வந்தவர்களின் வழித்தோன்றல்கள். இவர்களுள் சரிபாதியேனும் தமிழர்கள் . டர்பன் நகரத்தில்தான் தமிழர்கள் பெருமளவில் வாழ்ந்தார்கள். பலப் பல சாதிப்பட்டப் பெயர்களுடன் பல்வேறு தமிழர்கள் அங்கு குழுமியிருந்தாலும், கணிசமான எண்ணிக்கையில் பட்டியலினச் சாதியினர் இருந்தனர். தாயகத்தின் சாதி ஒடுக்குமுறையில் இருந்து தப்பி வேறு அடையாளத்துடன் புது வாழ்வு தொடங்குவதற்குக் குடிபெயர்வு ஒரு வழியாக இருந்தது " என ஆய்வாளர் ஆ. இரா. வேங்கடாசலபதி குறிப்பிடுகிறார்.
தென் ஆப்பிரிக்காவின் தடைகள்
1860 - ஆம் ஆண்டிலிருந்து தமிழர்கள் தென் ஆப்பிரிக்காவிற்கு வந்து சேர்ந்தனர். மிகவும் சொற்பமான ஊதியம். ஆனால் எவ்வித சுதந்திரமோ, உரிமையோ கிடையாது. இங்கும் தாங்கள் கண்ட கனவு வாழ்வு கிட்டவில்லை என்பதறிந்து தமிழர்கள் குமுறினர். இத்தகைய சூழ்நிலையில் 1893 -ஆம் ஆண்டு காந்தியார் ஒரு வழக்கில் வாதாடுவதற்காகத் தென் ஆப்பிரிக்கா வந்தடைந்தார். அப்பொழுது அங்குள்ள இரயிலில் பயணிப்பதற்காக முதல் வகுப்புப் பெட்டியில் சீட்டு வாங்கி, அதில் ஏற முயன்றபோது கருப்பினத்தவர் என்ற காரணத்தால் இரயிலிலிருந்து அவர் வெளியே தள்ளப் பட்டார். மேலும் அங்குள்ள இந்தியர்களுக்கு இழைக்கப்படும் பல்வேறு கொடுமைகளை எதிர்த்துப் போராடத் தொடங்கினார்.
இந்தியர்களுக்கு எதிரான சூழ்நிலை அப்பொழுது உச்ச கட்டத்தில் இருந்தது. அனுமதியின்றி குறிப்பிட்ட பகுதிக்குள் அவர்கள் நுழைய முடியாது. வெள்ளை இனத்தவருடன் எங்கும் சமமாக அமர முடியாது. அவர்களுடன் பள்ளியில் குழந்தைகள் படிக்க முடியாது. அவர்கள் வாழும் இடம் சுகாதாரமற்ற சேரிகளாகத்தான் இருந்தது. அவர்களுக்கு வாக்குரிமையும் மறுக்கப் பட்டது. கிருத்துவ மதச் சடங்குப்படி நடக்கும் திருமணங்கள்தான் பதிவு செய்யப்படும். இந்துக்களின் திருமணங்கள் பதிவு செய்யப்படாததால், அவை செல்லுபடி ஆகாது என உயர்நீதிமன்றமே தீர்ப்பு வழங்கி- யிருந்தது. இதனால் இந்துக் குழந்தைகளுக்கு வாரிசு உரிமையும் மறுக்கப்பட்டது. மேலும் இந்தியர்களுக்குக் கூடுதல் வரியும் விதிக்கப்பட்டது.
எனவே தென் ஆப்ரிக்க இந்தியர்களின் உரிமைக்காகக் காந்தியார் தனது போராட்டங்களைத் தீவிரப்படுத்தினார். குறிப்பாக 1913 - ஆம் ஆண்டில் வோல்க்ரஸ்ட் சத்தியாகிரகப் போராட்டத்தை (Volkrust Satyagraha) அவர் தொடங்கினார்.
தில்லையாடி வள்ளியம்மை
இப்போராட்டத்தில் தீவிரமாகப் பங்கெடுத்தவர்தான் தில்லையாடி வள்ளியம்மை ( 22/02/1898-22/02/1914 ) மயிலாடுதுறைக்கு அருகிலிருக்கும் தில்லையாடி எனும் சிற்றூரைச் சார்ந்த முனுசாமி முதலியார் மற்றும் மங்களத்தம்மாள் ஆகியோர் இவரது பெற்றோர் ஆவர். பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் முனுசாமி அவர்கள் தென் ஆப்பிரிக்கா சென்று ஜோகனஸ் பார்க் எனும் இடத்தில் சிறு வணிகம் தொடங்கினார். அங்குதான் வள்ளியம்மை பிறந்தார். சிறுமி ஆனாலும் தென்னாப்பிரிக்க வெள்ளையர்களை எதிர்த்த போராட்டங்களில் அர்ப்பணிப்புடன் பங்கேற்றார். கஸ்தூரிபாய் தலைமையிலான பெண்கள் அணியில் தீவிரமாகப் போராடியதால், இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு இளம் வயது காரணத்தால், சலுகை அடிப்படையில் அவர் சிறை- யிலிருந்து விடுவிக்கப் பட்டார். ஆனால் வள்ளியம்மை அந்தச் சலுகையை மறுத்துவிட்டுத் தண்டனைக் காலம் முடிந்த பிறகே விடுதலை பெற்று வெளியேவந்தார்.
சிறை வாழ்வு அவரது உடல் நிலையைக் கடுமையாக பாதித்ததால், இளம் வயதிலேயே மரணத்தைத் தழுவினர். "பலன் ஏதும் கருகாமல் தென்னாப்பிரிக்காவில் தியாகம் செய்து வெற்றி கண்ட சிறுமி தில்லையாடி வள்ளியம்மைதான் எனக்கு முதன்முதலில் விடுதலை உணர்வை ஊட்டிய பெருமைக்குரியவர் " என்றும், "இந்தியா உள்ள வரையில் தென் ஆப்பிரிக்கச் சத்தியாகிரக வரலாற்றில் வள்ளியம்மையின் பெயர் நீங்கா இடம்பெற்றிருக்கும்" எனவும் காந்தியார் தில்லையாடி வள்ளியம்மையின் தியாகத்தைப் புகழ்ந்து போற்றினார்.
வ. உ. சி. அவர்களும் தென் ஆப்பிரிக்கத் தமிழர்களும்
வள்ளியம்மை மட்டுமல்ல, தென்னாப்பிரிக்காவிலிருந்த தமிழர்கள் தமிழகத்தின் விடுதலைப் போராட்டத்திற்குப் பெரும் பங்காற்றி உள்ளதை வரலாறு பதிவு செய்கிறது. இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் வ. உ. சிதம்பரனார் அவர்களின் தியாகத்திற்கு ஈடு இணை எதுவுமில்லை என்பதை அனைவரும் அறிவர். ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய கப்பலோட்டிய தமிழன், அதற்காகத் தந்த விலை மிக மிகப் பெரியது. தனது சொத்துக்களையும் வழக்கறிஞர் பணியையும் விடுதலைப் போராட்டத்திற்காக இழந்தது மட்டுமல்லாமல், இரட்டை ஆயுள் தண்டனை பெற்றுச் சிறையில் கடும் சித்திரவதைகளுக்கு உள்ளானார். சிறையிலிருக்கும் பொழுதும், சிறையிலிருந்து வெளிவந்த பிறகும் தியாக வேங்கை சிதம்பரனாருக்கு உற்றுழி உதவியும், உறுபொருள் ஈந்தும் உதவியவர்கள் தென் ஆப்பிரிக்கத் தமிழர்கள்தான் என்பதைத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஒரு போதும் மறக்கலாகாது.
குறிப்பாகத் தென் ஆப்பிரிக்காவிலிருந்த சுவாமி வள்ளிநாயகம் அவர்களும், அவர் மூலம் அறிமுகமான வேதியப் பிள்ளை மற்றும் விருத்தாசலம் பிள்ளை ஆகியோரும் சொல்லொணா வறுமையில் வாடிய சிதம்பரனாரின் துணைவியார் மீனாட்சி அம்மையாருக்குத் தென் ஆப்பிரிக்கத் தமிழர்களிடம் நன்கொடை திரட்டி, அதை வ. உ. சி. அவர்களின் குடும்பத்திற்குத் தொடர்ந்து அனுப்பி வந்தனர். இதனைப் பெற்ற மீனாட்சி அம்மாள் நன்கொடையாளர்களின் பட்டியலையும் தமது நன்றியறிவிப்பையும் "சுதேச மித்திரன் " ",இந்தியா " முதலான இதழ்களில் வெளி- யிட்டார். அதே போல் தன்னை வாட்டி வதைத்த கொடும் சிறை- யிலிருந்து விடுதலை பெற்று வந்த வ. உ. சி. அவர்கள் தனது நூல்களுக்குத் தென்னாப்பிரிக்காவில் இருந்து பொருள் உதவி செய்த தமிழ்ச் சகோதரர்களின் பெயர்களை வெளியிட்டுத் தனது நன்றியை தெரிவித்தார். தமிழகத் தமிழர்கள் வ. உ. சி. அவர்களுக்கு உதவவில்லை எனினும், தென் ஆப்பிரிக்கா வாழ் தமிழர்கள் வ உ சி அவர்களுக்கு இறுதிவரை உதவி வந்தனர் என்பது வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய முக்கியமான செய்தியாகும்.
பீஜித்தீவினிலே...
ஆஸ்திரேலியாவின் கிழக்கில் தென் பசிபிக் பெருங்கடலில் சிதறி கிடைக்கும் 300 தீவுக் கூட்டங்களைத்தான் பீஜித் தீவுகள் என அழைக்கிறோம். 1879-1916 ஆண்டுகளுக்கிடையே கங்காணிகள் மூலம் 65,000 இந்தியத் தொழிலாளர்கள் பீஜித் தீவுகளுக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் . கரும்புத் தோட்டத்தில் கடுமையான உடலுழைப்புப் பணி. ஆங்கிலேய அதிகாரிகள் சொல்வதுதான் சட்டம். அதை யாரும் மீற முடியாது. கொடுக்கப்பட்ட கடினமான வேலையைச் செய்யாதவர்களுக்குத் தண்டனை கடுமையாக இருக்கும்.. இழிவான வசவு , குறைந்த கூலி, அபராதம், என்பதிலிருந்து அடி உதை வரை அந்தக் கொடுமை நீளும்.
பீஜித் தீவில் இருந்த கரும்புத் தோட்டங்கள் அனைத்தும் சி எஸ் ஆர் எனும் ஆஸ்திரேலிய நிறுவனத்திற்கு சொந்தமானவை. அந்த நிறுவனத்தின் போக்கு சிறிதும் மனிதநேயமற்றது. "ஆறு மாத காலம் கரும்பை அரைத்துப் பிழிகிறார்கள். ஆனால் ஆண்டு முழுவதும் சி எஸ் ஆர் நிறுவனம் இந்தியர்களை அரைத்துப் பிழிகிறது" எனக் கூறப்படும் அளவுக்கு அவ்வளவு கடுமையான ஓய்வு ஒழிவற்ற உழைப்பு. இதில் பெண் தொழிலாளர்களுக்கும் விலக்கு இல்லை. இந்தக் கொடுமையைத்தான் "பீஜித் தீவினிலே" என்ற கவிதையில் பாரதி சுட்டிக்காட்டி வருந்தினார்.
கரும்புத் தோட்டத்திலே--அவர்
கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி
வரு ந்துகின்றனரே! .. .. .. .. .. .. .. .. .. .. .. .. ..
.. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .
பெண்ணென்று சொல்லிடிலோ-ஒரு
பேயும் இரங்கும் என்பார்;தெய்வமே! நினது
எண்ணம் இரங்காதோ?-அந்த
ஏழைகள் அங்கு சொரியுங் கண்ணீர்வெறும்
மண்ணிற் கலந்திடுமோ ? - தெற்கு
மாகடலுக்கு நடுவினிலே, அங்கோர்
கண்ணற்ற தீவினிலே-தனிக்
காட்டினிற்பெண்கள் புழுங்குகின்றார்.
நாட்டை நினைப்பாரோ?-எந்த
நாளினிப் போயதைக் காண்பதென்றே அன்னை
வீட்டை நினைப்பாரோ? - அவர்
விம்மிவிம்மி விம்மிவிம்மியழுங் குரல்
கேட்டிருப்பாய் காற்றே-துன்பக்
கேணியிலே எங்கள் பெண்க ளழுத சொல்
மீட்டும் உரையாயோ?"
என நீளும் பாரதியின் கவிதை அயலக வாழ்வில் தமிழ் மக்கள்- குறிப்பாகப் பெண்கள் பட்ட சித்திரவதைகளைப் படம்பிடித்துக் காட்டுகிறது.
பழங்காலத் தமிழர் வணிகம்
தென் ஆப்பிரிக்கா / இலங்கை / மலேசியா / மியன்மார் / பீஜித்தீவுகள் எனச் சென்ற இடமெல்லாம் தமிழ்மக்கள் அளவற்ற துன்பங்களை எதிர்கொண்டனர் என்பது வரலாறு. ஆனால் இது வரலாற்றின் ஒரு பக்கம்தான். மற்றுமோர் பக்கமும் உண்டு. அது மிகவும் செல்வாக்கான பக்கமாகும். அதற்கு ஓர் எடுத்துக்காட்டுத்தான் பழந்தமிழகத்தின் கடல் வணிகம். குறிப்பாக முசிறி - அலெக்சாண்ட்ரியா ஒப்பந்தம் இங்கு குறிப்பிடத்தக்கது.
முசிறியில் வாழ்ந்த தமிழ் வணிகன் ஒருவனுக்கும் எகிப்து நாட்டின் அலெக்சாண்ட்ரியா நகரில் வாழ்ந்த கிரேக்க வணிகன் ஒருவனுக்கும் இடையே கி. பி. 150 வாக்கில் ஏற்படுத்தப்பட்ட முசிறி ஒப்பந்தம் எனும் வணிக ஒப்பந்தம் பழந்தமிழர் வணிகத்தின் அளவினையும் தன்மையையும் உணர்ந்து கொள்ள நமக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய சான்றாகும்.
ஆஸ்டிரியா நாட்டு வியன்னா நகரிலுள்ள அருங்காட்சியகத்தில் இந்த ஒப்பந்தச் சுவடி இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஒரு தமிழ் வணிகன் ஒரு கப்பலில் ஒரு தடவை ஏற்றுமதி செய்த வணிகப் பொருள்களின் பண மதிப்பீடு என்பது சுமார் மூன்று கோடி கிராம் வெள்ளியின் எடைக்கு ஈடானது.
இன்றைய வெள்ளி விலையில் கணக்கிட்டால் அந்த வணிகப் பொருட்களின் மதிப்பு ரூபாய் 240 கோடியாகிறது. இதைப் போன்று நூற்றுக்கணக்கான கப்பல்களில் பல வணிகர்கள் மூலம் ரோமுக்கு ஏற்றுமதி நடந்துள்ளதை அறிய வருகிறோம். எகிப்து தவிர அதிக அளவில் கிழக்குத் நாடுகளுக்கு தமிழகத்திலிருந்து ஏற்றுமதி நடந்துள்ளது. அலெக்சாண்டிரியா நகரை அடைவது வரை இந்த ஏற்றுமதிப் பொருள்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது குறித்து முன்பக்கத்திலும், பொருட்களின் அளவு குறித்துப் பின்பக்கத்திலும் எழுதப்பட்டுள்ளது.
ஏற்றுமதி செய்யப்பட்ட ஆறு பொதிகளில், மூன்று பொதிகளில் காணப்படும் பொருள்கள் குறித்து மட்டுமே தகவல் கிடைக்கிறது. மீதித் தரவுகள் சிதைந்து போய் உள்ளன. இப்பொருட்களின் மதிப்பு அன்று நைல் நதியின் பாசனப்பிடிப்புப் பகுதியில் 2,400 ஏக்கர் வளமான நிலத்தை வாங்குவதற்கு இணையானது. இப்பொருள்கள் ஹெர்மபோலன் (Hermopollan) என்ற பெயர் கொண்ட கப்பலில் எடுத்துச் செல்லப் பட்டுள்ளது. இது வரலாற்றுச் சான்றாகும்.
எனவே ஒரு காலத்தில் மிகுந்த வளத்தோடு வாழ்ந்த தமிழர்கள், பிற்காலத்தில் பற்பல நாடுகளுக்குக் கூலிகளாகப் போய் சொல்லொணாத் துயரத்தில் வாழ்ந்து வந்தனர் என அறிய வருகிறோம்.
ஐ. நா. அகதிகள் ஆணையம்
காலமாற்றத்தில் புலம்பெயர்தலில் பிழைப்புத் தேடிச் செல்வது என்பது ஒரு வகையாகவும், தன்னை வளப்படுத்திக் கொள்வதற்காகச் செல்வது மற்றொரு வகையாகவும் பிரிந்து இரண்டு நிலைகள் உருவாயின. இதில் முதல்வகையினர் மிகவும் ஏழ்மை . நிலை- யிலுள்ள அடிப்படை வர்க்கத்தினராகவும், இரண்டாம் வகை- யினர் நடுத்தர வர்க்கத்தினராகவும் இருப்பதை அவதானிக்க முடிகிறது. 19 ஆம் நூற்றாண்டில் பற்பல நாடுகளுக்குப் பிழைப்புத் தேடிச் செல்வோர் அதிகரித்த காரணத்தால், வளம் மிக்க நாடுகள் இப்படிப்பட்ட அகதிகளைக் கட்டுப்படுத்த பல்வேறு தடைகளை விதிக்கத் தொடங்கின. புகலிடம் கோரும் உரிமை இருதரப்பினருக்கும் மறுக்கப்படும் சூழல் உருவாகியது. இரண்டாம் உலகப் போரின் விளைவாக இத்தகைய தடைகள் மேலும் தீவிரமடைந்தன. எனவே இத்தகைய இடர்களைக் களையும் பொருட்டு ஐக்கிய நாடுகள் பொது அவையின் முன்முயற்சியால் அகதிகளுக்கான உயர் ஆணையம் உருவாக்கப்பட்டது.
1950 திசம்பர் 14-ஆம் நாள் இந்த ஆணையம் தனது சேவைகளைத் தொடங்கியது. ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையர் அலுவலகம் ஸ்விட்சர்லாந்தின் தலைநகராகிய ஜெனிவாவில் அமைந்துள்ளது. இதன் அலுவலகங்கள் 136 நாடுகளில் உள்ளன. இந்த ஆணையத்திற்கு இந்தியாவில் 11 இடங்களில் கிளை அலுவலகங்கள் உள்ளன. இந்தியத் தலைமையகம் புதுதில்லியில் அமைந்துள்ளது. ஆண்டுக்கு மூன்று முறை சர்வதேச அளவிலான ஒன்றுகூடலை இந்த ஆணையம் சுவிட்சர்லாந்தில் ஒருங்கிணைக்கிறது. இந்நிகழ்வில் அகதிகளின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் சிவில் உரிமைகள் குறித்து விவாதிக்கப்பட்டு செயல் திட்டங்கள் முன்னெடுக்கப் படுகின்றன. இதில் ஐ. நா. வின் அலுவலர்களும், சர்வதேச அளவிலான சுதந்திரமான வல்லுநர்களும் பங்கேற்கின்றனர்.
தமது சொந்த நாட்டிலிருந்து வெளியேறி அல்லது வெளியேற்றப்பட்டு வரும் அகதிகளுக்குத் தங்குமிடம், உணவு ,மருந்து மற்றும் வாழ்வாதார உரிமைகளை இந்நிறுவனம் வழங்குகிறது. சிறந்த சேவையின் காரணமாக ஐ. நா. அகதிகளுக்கான உயர் ஆணையத்திற்கு 1954 மற்றும் 1981 ஆகிய ஆண்டுகளில் இருமுறை சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கப் பட்டுள்ளது.
1951 ஆம் ஆண்டின் அகதிகளுக்கான ஒப்பந்தத்திலும், 1967 -ஆம் ஆண்டின் நெறிமுறைகளிலும் (Refugee Convention and Protocol) பல உலக நாடுகள் கையெழுத்திட்டும், ஏற்பிசைவு வழங்கியும் உள்ளன. ஆனால், கெடுவாய்ப்பாக இந்தியா இதில் இதுவரை கையெழுத்தும் இடவில்லை, ஏற்பிசைவும் (Ratification) வழங்கவில்லை. இதனால் இந்தியாவிற்கு வரும் அகதிகளுக்குப் போதிய உதவிகள் கிடைப்பதில்லை. மேலும் வழங்கப்படும் உதவிகளிலும் சமத்துவம் இருப்பதில்லை.
எடுத்துக்காட்டாக திபேத் அகதிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் ஈழ அகதிகளுக்கு வழங்கப்படுவதில்லை. தவிரவும், மதரீதியாகவும் அகதிகளிடையே பாகுபாடு காட்டப்படுகிறது.
அகதிகளின் உரிமைகள்
மனித நாகரிக வளர்ச்சிப் போக்கில் அகதிகளுக்கென பல்வேறு சனநாயக விழுமியங்கள் அங்கீகரிக்கப்பட்டு வந்துள்ளன. அவை மேற்காண் சர்வதேச ஒப்பந்தத்தில் இணைக்கப் பட்டுள்ளன.
அதன்படி, ஒவ்வொரு மனிதருக்கும் புகலிடம் கோரும் உரிமை உண்டு. அவர்கள் மீது உடல்ரீதியான வன்முறைகளை ஏவக்கூடாது. அவர்களுக்கான அடிப்படைத் தேவைகள் நிறைவு செய்யப்பட வேண்டும். புகலிடம் கோரும்நாட்டில் அவர்கள் எங்கு வேண்டுமானாலும் சென்று வரக்கூடிய உரிமை உண்டு. அவர்களுக்கு வேலை கோரும் உரிமை உண்டு. அமைப்புகளை உருவாக்க அவர்களுக்கு உரிமை உண்டு. உறைவிடம் கோரும் உரிமையும் வழங்கப் பட்டுள்ளது. மேலும் அகதிகளின் விருப்பத்திற்கு மாறாக வலுக்கட்டாயமாக அவர்களை நாட்டிலிருந்து வெளியேற்ற யாருக்கும் உரிமை கிடையாது.
இவ்வகையான அகதிகளின் உரிமைகள் மீறப்பட்டால், அது குறித்த நிலவரத்தை அறிய உண்மை அறியும் குழுக்களை உருவாக்கவும், விசாரணைக் கமிஷன் அமைத்து உரிய பரிந்துரைகள் வழங்கவும், நிலைமை மேம்பட உரிய செயற்பாடுகளை மேற்கொள்ளவும் இந்த ஒப்பந்தத்தில் வழிவகை செய்யப் பட்டுள்ளது.
இன்று உலகம் முழுவதும் 10 கோடிக்கும் மேலான அகதிகள் இருப்பதாகப் புள்ளி விவரங்கள் குறிப்பிடுகின்றன. அரசுகளின் தோல்வியால்தான் அகதிகள் உருவாகின்றனர். தாங்கள் மகிழ்ந்து குலாவிய தாய்மண்ணை விட்டு வெளியேற எவர் ஒருவரும் விரும்ப மாட்டார்கள். எனவே அதற்கேற்ற மனித நேயம் மிக்க அரசியல், பொருளாதார, பண்பாட்டுச் சூழலை அரசுகள் உருவாக்க வேண்டும். அது ஒரு நீண்ட பயணம். அது நாட்டுப்பற்று மிக்க மக்கள் எழுச்சி மூலந்தான் சாத்தியப் படும் என்பதை வரலாறு நமக்குத் தொடர்ந்து உணர்த்துகிறது.
- கண.குறிஞ்சி
(கட்டுரையாளர், புதுமலர் பதிப்பகத்தின் நிறுவனர் ஆவார். புதுமலர் பதிப்பகம் சார்பாக இதுவரை நாற்பதுக்கும் மேலான நூல்கள் அச்சிடப்பட்டு வெளியாகி உள்ளன. இதில் கட்டுரையாளரது ஏழு நூல்களும் அடங்கும். எழுத்தாளராகவும், மொழிப்பெயர்ப்பாளராகவும் விளங்கும் இவர் 'இடது' இதழின் ஆசிரியராகப் பணியாற்றிய பின் 'புதுமலர்' எனும் சமூக அரசியல் கலை இலக்கிய காலாண்டிதழின் ஆசிரியராகச் செயல்பட்டு வருகிறார்.)
பார்வை நூல்கள்
(1) Against Borders - The case for Abolition, GRACIE MAE BRADLEY and LUKE DE NORONHA. VERSO, LONDON.
(2) Red Pepper, Summer 2024. To the four Winds, an article by MIRIAM BRADLEY.Socialist Newspaper (Publications Ltd) U.K.
(3) வ. உ. சி. யும் காந்தியும், 347 ரூபாய் 12 அணா, ஆ. இரா. வேங்கடாசலபதி, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.
(4) பாரதியார் கவிதைகள் (ஏழாவது பதிப்பு), பாரதி பதிப்பகம், சென்னை.
(5) தொல்லியல் நோக்கில் சங்ககாலம், முனைவர் கா. இராசன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
(6) பழந்தமிழர் வணிகம், கணியன் பாலன், NCBH, சென்னை.