புலப்பெயர்வு : வரையறையும் வரலாறும்

இடம்பெயர்தல், புலம்பெயர்தல் ஆகிய சொற்கள் ஒரே பொருளையே கொண்டுள்ளன. இதனை ஆங்கிலத்தில் ‘Diaspora’ என்று அழைக்கப்படுகிறது. இது, ‘Diaspeirein’ என்ற கிரேக்கச் சொல்லினைக் கொண்டு உருவானதாகும். Diaspeirein என்னும் சொல் ‘சிதறுதல்’ அல்லது ‘பரவுதல்’ என்னும் பொருளைக் குறித்து நிற்பதாக உள்ளது. வரலாற்று ரீதியாக ‘கி.மு. ஆறாம் நூற்றாண்டில் இஸ்ரவேலிலிருந்து பாபிலோனுக்கு வெளியேற்றப்பட்ட யூதர்களைக் குறிப்பதற்காக Diaspora என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது’. (வ. ந.கிரிதரன். 2019: 9-13)

பண்டைக் காலத்தில் பல்வேறு சூழல் காரணமாக ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு மக்கள் இடம் பெயர்ந்தனர். இந்நிகழ்வு புலம் பெயர்தல் (Diaspora) என்ற பொதுப் பெயரால் குறிக்கப்பட்டது. சாதாரண அல்லது தவிர்க்கமுடியாத சூழலில் மனிதன் தனியாகவோ, குடும்பத்துடனோ, சிறுசிறு குழுக்களாகவோ தம் இருப்பிடத்தை ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்கு மாற்றுவது இடப் பெயர்ச்சி அல்லது இடப்பெயர்வு ஆகும். இடம் பெயர்தல் (Migration), குடி பெயர்தல் (Emigration), புலம்பெயர்தல் (Diaspora) என்று இதனை முறைப்படுத்தலாம். ‘புலப்பெயர்வு என்பது ஒரே அரசியல் பூகோள எல்லையை விட்டுப் பெயர்ந்து சமூக அரசியல் பண்பாட்டுச் சூழ்நிலைகளால் முற்றிலும் வேறுபட்ட பிரதேசத்தில் வாழ நேரிடுபவர்களைக்’ குறிக்கிறது. (சு. குணேஸ்வரன். 2009)

புலம்பெயர்தல் என்பது மனித சமூகத்திற்கு மட்டுமே உரியது அல்ல. மாறாக, விலங்கினம், தாவரங்கள், மற்றும் பறவைகள் ஆகியனவற்றிற்கு இடப் பெயர்ச்சி வாழ்க்கை என்பது பொது நியதியாகும். அவை தங்களின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளவும் இருப்பின் ஆதாரத்தை நிலைநாட்டவும் புலம்பெயர்ந்திருப்பதைக் காணமுடிகிறது. மனிதர்கள் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்குப் புலம்பெயர்தலைப் பழந்தமிழில் ‘வலசை’ என்று குறிக்கும் வழக்கம் இருந்துள்ளது. இப்போதெல்லாம், ‘வலசை’ என்ற சொல் பெரும்பாலும் பறவைகளின் இடப்பெயர்ச்சி தொடர்பாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பறவைகள் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட பருவ காலத்தில் தட்பவெப்பம், உணவு, இனப்பெருக்கம் முதலான காரணங்களுக்காக இடம்பெயர்வதை ’வலசை போதல்’ (Animal Migration) என்று குறிப்பிடப்படுகிறது. ஆக, விலங்கினமும், மனித இனமும் என்று தோன்றியதோ அன்றிலிருந்து புலம்பெயர்தல் நடந்து கொண்டிருக்கிறது என்று கூறலாம்.

‘உடல் ரீதியிலான பருவ மாற்றங்கள், காலநிலை மாற்றங்கள், இனவிருத்தித் தேவைகள் எனப் பல்வேறு காரணங்களுக்காகப் பறவைகள், மிருகங்களெல்லாம் தாம் பிறந்த இடத்திலிருந்து புலம்பெயர்ந்து வருவதெல்லாம் அவற்றின் தப்பிப் பிழைத்தலுக்குரிய தேவைகளின் காரணமாகத்தான்’ எனக் கருதுகிறார். (வ. ந. கிரிதரன். 2013 : 1) ‘இன்றைய யுகத்தில் புலம்பெயர்தல் என்பது உயிரைத் தக்க வைப்பதற்கான இடப்பெயர்வாகவே உள்ளது’ என்ற மதிவதனியின் கருத்தும் இவ்விடத்தில் ஒப்புநோக்கத்தக்கது. புலப்பெயர்தலுக்கும் மனிதனுக்கும் இயல்பிலேயே நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பதையும், புலப்பெயர்வு என்பது மனித சமுதாய முன்னேற்றத்திற்கு பக்கபலமாக இருந்து வந்திருக்கிறது என்பதையும் அறிய முடிகிறது. மனித இனம் தோன்றியது முதல் இந்தத் தொடர்பு நீண்ட காலமாக இருந்துவரும் ஒரு நிகழ்வாகும்.

புலப்பெயர்வு : கற்காலம் முதல் தற்காலம் வரை

ஆதிகாலத்தில் அவ்வப்போது நாடோடிகளாகப் புலம்பெயர்ந்த மானிட இனம் பின்னர் உணவுத் தேவைக்காக அடிக்கடி புலம்பெயர வேண்டிய சூழல் ஏற்பட்டது. காலப்போக்கில், சமூக, பொருளாதார, அரசியல் சூழல்கள் மானுட இனத்தின் புலப்பெயர்தலை மேலும் விரிவாக்கியது. மக்களின் குடியேற்றம் மற்றும் புலப்பெயர்வு வரலாற்றைக் கற்காலம், வரலாற்றுக் காலம், சங்ககாலம், பிற்காலச் சோழர் காலம், காலனிய ஆட்சிக்காலம் மற்றும் விடுதலைக்குப் பிந்தைய காலம் எனப் பல கட்டங்களில் வகைப்படுத்தி விளக்கலாம். 

கற்காலமும் புலப்பெயர்வும்

     கற்காலம் அல்லது வரலாற்றுக்கு முற்பட்ட காலம் என்பது, எழுத்துப்பூர்வமான ஆதாரங்கள் எதுவும் இல்லாத காலத்தைக் குறிப்பதாகும். கருவிகளைச் செய்வதற்காகக் கற்கள் பயன்படுத்தப்பட்ட வரலாற்றுக்கு முந்திய காலமாகக் கற்காலம் கருதப்படுகிறது. இக்காலத்தைப், பழைய கற்காலம் (கி.மு. 1000 ஆண்டுகள்), புதிய கற்காலம் (கி.மு. 10000-கி.மு. 4000), செம்புக் கற்காலம் (கி.மு. 3000 - கி.மு. 1500), இரும்புக் காலம் (கி.மு. 1500- கி. மு. 600) என நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தலாம். இக்காலத்தில் வாழ்ந்தவர்களைப் பற்றிப் படிமங்கள், புதைபொருட்கள், எலும்புகள் ஆகியவற்றின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

வரலாற்றுக்கு முந்தைய கற்காலத்தில் பெருமளவில் புலப்பெயர்வுகள் ஏற்பட்டதற்கான ஆதாரங்களை அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்தக் கண்டுபிடிப்பு, பிரிட்டனில் உள்ள இன்றைய மக்களின் மரபணு அமைப்பை விளக்க உதவுகிறது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் பிற்கால மக்கள் தொகையின் பாதி வம்சாவழியினார் இப்படிக் குடியேறியவர்களிடமிருந்து வந்தவர்கள். இந்த மாபெரும் புலப்பெயர்வு கி.மு. 1400 முதல் கி.மு. 870 –க்கு இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்ததாகக் கருதப்படுகிறது. ஐரோப்பாவில் கிடைத்த சில எலும்புக் கூடுகளின் DNA-வை ஆராய்ந்ததில் பிரிட்டன் மக்களின் மரபணுவை மாற்றிய புலப்பெயர்வு உண்மைகள் வெளிவந்துள்ளதாகக் குறிப்பிடுகிறார் பால் ரிங்கன். (BBC News Internet, 25.12.2021)

வரலாற்றுக் காலமும் புலப்பெயர்வும்

மனிதர்கள் வாழ்ந்ததற்கான எழுத்துப்பூர்வமான ஆதாரங்கள் கிடைக்கின்ற காலத்தையே வரலாற்றுக் காலம் என வழங்கப்படுகிறது. வரலாற்றுக் காலந்தோட்டே மானுடப் புலப்பெயர்வு என்பது நடைமுறையில் இருந்திருக்கிறது. பாலஸ்தீனிய யூதர்கள் பாபிலோனியாவிற்கு நாடுகடத்தப்பட்ட நிகழ்வு மேற்குலகில் நிகழ்ந்த முதல் புலப்பெயர்வாகக் கருதப்படுகிறது. பதினாறாம் நூற்றாண்டில் தொடங்கி தொடர்ந்து ஏராளமான ஆப்பிரிக்க இனத்தினர் ஐரோப்பிய நாடுகளுக்கு விற்கப்பட்டு நாடு கடத்தபட்ட நிகழ்வும் புலப்பெயர்வாகவே கொள்ளப்படுகிறது. கிறிஸ்து காலத்திற்கு முன்பிருந்தே மேற்கு நாட்டவர்க்கும் தமிழகத்திற்கும் வாணிபத் தொடர்பு இருந்ததை எகிப்தில் தமிழி எழுத்திலான வாணிப ஒப்பந்தப் பட்டயம் ஒன்று தெரிவிக்கின்றது. வணிக நோக்கில் புலம்பெய்ர்ந்த தமிழர்கள் முக்கியமான நகரங்களில் நிலைபெற்று, அங்கு தம்மொழியையும் பண்பாட்டையும் பரப்பினர்.

சங்க காலமும் புலப்பெயர்வும்

‘புலம்பெயர்’ என்ற சொல் மட்டுமல்லாது புலம்பெயர்ந்த நிலைகள் மற்றும் நிகழ்வுகள் குறித்த குறிப்புகள் சங்க இலக்கியங்களில் காணக் கிடைக்கின்றன. ‘மொழிபெயர்தேயம்’, ‘வேறுபுலம்’, ‘அறியாத்தேயம்’ முதலான சொற்கள் இதற்குச் சான்றுகளாகும்.

‘புலம்பெயர் புலம்பொடு கலங்கி’ (நெடுநல்வாடை: 5),

 ‘புலம்பெயர் புதுவீர்’ (மலைபடுகடாம்: 350)

ஆகிய சங்க இலக்கிய வரிகளில் ‘புலம்பெயர்’ என்ற பதம் பயின்று வருகிறது.

தமிழ்ச் சூழலில், வேற்று நாட்டவர் வணிகம், பொருள் தேடல் நிமித்தமாகத் தமிழ் மண்ணிற்குப் புலம்பெயர்ந்தோரை ‘புலம்பெயர் மாக்கள்’ என்ற பதம் குறித்து நிற்கிறது. புகார் நகர மக்களோடு புலம்பெயர்ந்த மாக்கள் கலந்து இனிதிருந்த காட்சியை,

 “புலம்பெயர் மாக்கள் கலந்து இனிதுறையும்

 முட்டாச் சிறப்பின் பட்டினம் பெரினும்” (பட்டினப்பாலை, 217-218 )

பட்டினப்பாலை வர்ணிக்கிறது.

 ‘கலந்தரு திருவிற் புலம்பெயர் மாக்கள்’ (சிலப்பதிகாரம்- 6:130)

 ‘பரந்தொருங் கீண்டிய பாதை மாக்கள்’ (மணிமேகலை -1:16)

என்று தமிழகத்திற்குப் புலம்பெயர்ந்து வந்தவர்களை மனிதத் தன்மையிலிருந்து குறைந்த ‘மாக்கள்’ என்ற பொருளில் சங்க இலக்கியங்கள் சுட்டுகின்றன. மேற்கு ஆசியாவிலிருந்து வியாபாரத்தின் பொருட்டு தமிழகம் ஏகியோரை யவனர், சோனகர் என்று சிலப்பதிகாரம் குறிப்பிடுகொன்றது.

வணிகத்தின் நிமித்தம் கிரேக்க, உரோம நாடுகளுக்குத் தமிழர்கள் புலம்பெயர்ந்த நிகழ்வை சங்க இலக்கியங்கள் பதிவு செய்கின்றன. ‘சாதுவன்’ போன்ற வணிகர்கள் பலர் வேற்று நாடுகளுக்குச் சென்று வணிகம் செய்த சான்றுகள் காணக்கிடைக்கின்றன. தமிழ் மரபில் போர், கல்வி, பொருள் தேடல் ஆகிய மூன்றின் நிமித்தம் ஆண்கள் புலம்பெயர்ந்ததாக இலக்கியங்கள் சுட்டுகின்றன. பொருள்தேடப் புலம்பெயர்ந்த தலைவன் குறித்துச் சங்க இலக்கியங்கள் தெளிவாகப் பதிவு செய்திருக்கின்றன. பொருள் தேடும் பொருட்டுப் புலம்பெயராமல் ஓரிடத்தில் தேங்கி நிற்றலைச் சங்ககாலச் சமுதாயம் அங்கீகரிக்கவில்லை எனத் தெரிகிறது. கண்ணகியுடன் கோவலன் மதுரைக்குப் புலம்பெயர்ந்து ஏகிய வரலாற்றைச் சிலப்பதிகாரம் விளக்கி நிற்கிறது. தருமதத்தன் பழிக்கு அஞ்சி பெற்றோடுடன் புகாரை விட்டு மதுரைக்குப் புலம்பெயர்ந்த நிகழ்வை மணிமேகலை விவரிக்கின்றது. தமிழ்ச் சமூக வரலாற்றில் வணிகம் மற்றும் பொருள் தேடும் பொருட்டே புலப்பெயர்வு நிகழ்ந்துள்ளதாகக் கணிக்கலாம்.

பிற்காலச் சோழர் காலமும் புலப்பெயர்வும்

கி.பி. இரண்டாம் நூற்றாண்டு தொடங்கி பதினோராம் நூற்றாண்டு வரை உள்ள காலத்தைப் பிற்காலச் சோழர் காலம் எனக் கொள்ளலாம். இக்காலத்தில் இலங்கை, மலேசியா, தாய்லாந்து முதலான தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழ் மன்னர்களின் ஆட்சி நிலவிவந்தது. பேரா நதி, பெர்ணம் நதி, முவார் நதி முதலான நதிக்கரைகளில் தமிழர் ஆட்சி நடந்ததாக மலேசியத் தமிழர் வரலாறு குறிப்பிடுகின்றது. அந்தமான்- நிகோபார் , இந்தோனேசியா, ஜாவா , வட மலேயா ஆகிய பகுதிகளிலும் சோழர்கள் தமது ஆட்சியை நீட்டித்தனர். ஆக, மன்னர்களின் படையெடுப்பின்போது நிகழ்ந்த இப்புலப்பெயர்வு முற்றிலும் அரசியல் சார்ந்ததாகும்.

கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டில் வணிகத்தின் காரணமாகத் தென்னிந்தியாவில் அடிக்கடி மக்களின் புலப்பெயர்வு நிகழ்ந்துள்ளது. இத்தகைய புலப்பெயர்வு பல கலப்பினங்கள் உருவாக இடமளித்தது. தென்னிந்தியாவில் கேரளத்தின் கொச்சி, திருவாங்கூர் போன்ற பகுதிகளில் யூத இனக்கலப்பு உருவானது. மலபார் பகுதியில் அரபிய வணிகர்களின் புலப்பெயர்வினால் ஏற்பட்ட இனக்கலப்பு அங்கு மாற்று சமூக , அரசியல் சூழ்நிலைகளை ஏற்படுத்தியது. வணிகத்தின் பொருட்டு போர்ச்சுக்கீசியர்களின் இந்தியத் தென்கிழக்குக் கடற்கரைப் பகுதிப் பிரவேசம் மரக்காயர் என்ற புது இனம் உருவாகக் காரணமாக அமைந்தது.

காலனிய காலமும் புலப்பெயர்வும்

சோழர் ஆட்சிக் காலத்தில் ஆளும் அரசர்களாகக் குடியேறிய தமிழர்கள் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கூலித் தொழிலாளிகளாகப் புலம்பெயர்ந்து வாழும் அவலநிலை ஏற்பட்டது. பிரெஞ்சு, ஆங்கில ஆட்சிக்கு உட்பட்ட காலனி நாடுகளிலும், கரிபியன் மற்றும் பிஜி தீவுகளிலும் தமிழர்கள் கூலிகளாகவும் அடிமைகளாகவும் அமர்த்தப்பட்டனர். ஆங்கில ஆட்சியாளர்களின் பொருளாதார நலனை முன்னிறுத்தி செயல்படுத்தப்பட்ட இந்த நடவடிக்கை தமிழர் வரலாற்றில் கறுப்புப் பக்கங்களாகும். எளிமையான கருவிகளைக் கொண்டு தங்கள் சுயதேவைகளைப் பூர்த்தி செய்து இயங்கிவந்த இந்திய விவசாயக் கிராமங்கள் காலனிய அரசின் நவீன நீர்ப்பாசன தொழில் நுட்பங்களால் சீர்குலைந்தன. விவசாயிகள் வீதிக்கு வரவும் புலம்பெயரவும் காலனித்துவ ஆட்சி காரணமாக அமைந்தது.

விடுதலைக்குப் பிந்தைய தமிழர் புலப்பெயர்வு

விடுதலைக்கு முந்தைய தமிழர் புலப்பெயர்வு வணிகம், படையெடுப்பு, போர், கூலி மற்றும் அடிமைத் தொழில் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருந்தது. விடுதலைக்குப் பிந்தைய தமிழர் புலப்பெயர்வு என்பது இன்றைய நவீனத் தேவைகளுக்கேற்ப கல்வி, தொழில், நவீன வாழ்க்கை நாட்டம், வாழ்வாதார மேன்மை, உயர்ந்த வேலை வாய்ப்பு , புதுப்புது இடங்களைக் காணும் ஆர்வம் முதலானவைகளின் உந்துதலால் உலகின் பல்வேறு நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து நலம் பெற்று வாழ்வதைக் காண முடிகிறது.

பெருவாரியான பாண்டிச்சேரித் தமிழர்கள் தாய்மண்ணை விட்டுப் பெயர்ந்து பிரான்சில் குடியேறியதிலிருந்து விடுதலைக்குப் பிந்தய தமிழர் புலப்பெயர்வு ஆரம்பமாகிறது எனலாம். முதலில் பொருளாதார மேம்பாட்டிற்காக மலேசியா, சிங்கபூர் போன்ற அண்டை நாடுகளுக்குப் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் பின்னர் போர்ப் பதற்றம், இனவெறி, படுகொலை போன்ற காரணங்களுக்காக சொந்த நாட்டை விட்டு விலகி உலகின் பல்வேறு தேசங்களுக்குப் புலம்பெயர நேரிட்டது. ‘இன்றைய கணிப்பின்படி ஏறத்தாள ஆறு லட்சத்திற்கும் அதிகமான ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்வதாகக் கணிக்கப்படுகிறது. இவர்களில் பெரும்பாலோர் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிஸ், நோர்வே, இத்தாலி, டென்மார்க், நெதர்லாந்து, வட அமெரிக்கா, கனடா மாற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் குடியேறியுள்ளனர்’ என்று கூறுகிறார். எம். சேகர். ‘தமிழர் புலப்பெயர்வு என்பது இன்று ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வையே குறிப்பிடுகின்றது’ எனக் கருதுகிறார் பா. ஆனந்தகுமார். (2018 : 11).

ஈழத்திலிருந்து மேற்குலகிற்குப் புலபெயர்ந்து சென்றவர்களை:

  • போருக்கான அனுமானங்கள் உருவான ஆரம்ப காலகட்டத்திலேயே புலம்பெயர்ந்தவர்கள்
  • எண்பதுகளில் ஏற்பட்ட தீவிர போர்ச் குழலில் உடமை, உறவுகளை இழந்து தன்னுயிரை மட்டுமாவது காத்துக் கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தத்தின் காரணமாகப் புகலிடம் தேடித் தஞ்சம் அடைந்தவர்கள்
  • 2009-இல் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் போரையொட்டிப் புலம் பெயர்ந்தவர்கள்

என மூன்று நிலைகளில் வகைப்படுத்தியுள்ளார் சு. செல்வக்குமரன்.

புலம்பெயர்தலுக்கான காரணங்கள்

      ‘இடப் பெயர்ச்சி என்பது கிராமப்புறங்களிளிருந்து நகர்ப்புறங்களுக்கும், ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கும், ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கும் மக்கள் செல்வதாகும்’ (பா. சிங்காரவேலன். 2006:10). சரித்திர காலத்தில் போர், வணிகம், இயற்கைச் சீற்றம் முதலானவை மக்கள் புலப்பெயர்வுக்குக் காரணங்களாக அமைந்தன. காலப்போக்கில் கடும் வறட்சி, விளைச்சல் நிலங்களைப் பாராமரிக்க இயலாமை, பொருள் தேடல், புதிய தொழில் தொடங்கும் வேட்கை, உயர்தர வாழ்க்கை நாட்டம், தரமான கல்வி பெறும் எண்ணம், வணிகம் செய்ய, வாழ்வாதாரத்தைப் பெருக்க, கடல்கோள்களில் இருந்து காப்பாற்றிக் கொள்ள, புதிய இடங்களை அறிந்து கொள்ள மற்றும் சமூக அரசியல் சூழல்கள் முதலானவை மனித இடப் பெயர்தலுக்கான முக்கிய காரணங்களாக அமைகின்றன. இவை தவிர, ‘மன்னர்களின் வரி விதிப்பும் இடப் பெயர்ச்சிக்குத் தூண்டுதலாக இருந்ததைச் சோழர், பாண்டியர், விஜயநகர ஆட்சிக் காலத்தியக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன’. (ஆ. சிவசுப்பிரமணியன். 2006 : 17).

வரி விதிப்பிலிருந்து தப்பித்து அண்டை மாவட்டங்களுக்குப் புலம்பெயர்ந்த விவசாயிகள் கம்பெனி அரசால் தண்டிக்கப்பட்டனர். ‘வளரும் நாடுகளைப் பொறுத்த வரையில் சமூகம் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக உள்நாட்டுக்குள் புலப் பெயர்வு அங்கீகரிக்கப்பட்ட முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது’. (S.Kunjamma, 2014 : 93). சுருங்கக் கூறின், பொருளாதார ஆதாரமின்மை, மழை பொய்த்துப் போதல், அரசியல் காரணங்கள், வேற்று நாட்டின் மீதான விருப்பு வெறுப்பு, இயற்கை சீற்றம் மற்றும் வளமின்மை ஆகியன புலம்பெயர்தலுக்கு அடிப்படைக் காரணிகளாக அமைகின்றன. புலம்பெயர்தலுக்குப் பல்வேறு காரணிகள் கூறப்பட்டாலும் ஒட்டுமொத்தத்தில் ‘இருத்தலுக்கான தப்பிப் பிழைத்தலே’ முக்கியக் காரணியாகப் பலராலும் முன்வைக்கப்படுகிறது.

புலம்பெயர்ந்தோர் : எதிர்மறைக் கருத்துக்கள்

இடம் பெயரும் மக்கள், சொந்த மண்ணில் வாழ முடியாமல் தங்கள் உறவுகளையும் உடைமைகளையும் இழந்து, அந்நியமான மொழி மற்றும் நிலவியல் சூழலில் வாழ நேரிடுகிறது என்று ஒரு சாரார் கருதுகின்றனர். ‘இடப் பெயர்ச்சி சமுதாய மாற்றத்திற்கு வழிகாட்டியாக அமைகின்றது’ என்று மக்கள் தொகைக் கணக்கெடுப்பாளர்கள், பொருளியல் அறிஞர்கள், சமுதாயச் சிந்தனையாளர்கள், மனிதவள மேம்பாட்டுத் திட்டத்தினர், அரசியல் ஞானிகள், சட்ட வல்லுனர்கள், திட்டக் குழுவினர் என இன்னொரு சாரார் மதிப்பிடுகின்றனர். (பா. சிங்காரவேலன், 2006. 1) எனினும், புலம்பெயர்ந்த மக்களை எல்லாம் கோழைகளென்றும், பயத்தினாலும், பொருள் தேடும் நோக்கினாலும் மேற்கு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தவர்களென்றும்’ செங்கை ஆழியான் குறிப்பிடுகிறார். ‘பிரச்சினைகளுக்குப் பயந்து நாட்டையும் வாழ்ந்த வீட்டையும் இனசனங்களையும் விட்டு பிரதேசம் ஓடும் காகக் கூட்டத்தைப் பற்றி நினைத்துத்தான் நான் அடிக்கடி பச்சாதாபப்படுவதுண்டு’ என்ற முருக பூபதியின் கருத்தும் இவ்விடத்தில் எண்ணிப் பார்க்கத் தக்கது. புலம்பெயர்ந்தவர்களை மக்கள் என்னாமல் ‘மாக்கள்’ என விளிக்கிறது சங்க இலக்கியம்.

சான்றாதாரங்கள்

  1. ஆனந்தகுமார். பா. 2018. புலம்பெயர்ந்தோர் இலக்கியம், சென்னை : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.
  1. கிரிதரன். வ. ந. 2013. ‘புலம்பெயர்தலும், புலம்பெயர் இலக்கியமும், தமிழரும், தாய்ப்பிரிவு: தாமரை, கீற்று, 17 ஜனவரி,
  2. சு. குணேஸ்வரன், புலம்பெயர் இலக்கியம்: ஓர் அறிமுகம், உதயன், யாழ்பாணம், 25 ஜூலை - 07 ஆகஸ்ட்.
  3. சிங்காரவேலன், பா. (2006). இடப்பெயர்ச்சிக் கதைகள், சென்னை: காவ்யா.
  1. சிவசுப்பிரமணியன். ஆ. 2006. பஞ்சமனா பஞ்சயனா: சமூக வரலாற்றுக் கட்டுரைகள், சென்னை: பரிசல்.
  1. செல்வக்குமரன். சு. (2017)தமிழில் புலம்பெயர் இலக்கியம், தினமணி - தமிழ்மணி, 11.06.2017.
  2. முத்தையா. இ. புலம் பெயர்தல் : பண்பாட்டு அடையாள அரசியலில் பாலினத்தின் பங்கு, பெயல், அக்டோபர், 2018- மார்ச், 2019, பக். 6-26.
  1. வேங்கடசாமி, மயிலை சீனி. (1995). பழங்காலத் தமிழர் வாணிகம், சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்.
  2. Anand Inbanathan, 1997, Migration and Adaptation: Tamils in Delhi, Delhi: Kalinka Publications.
  3. Kunjamma, S. 2014, ‘Malayalee Diaspora in Delhi: A Case Study’, in International Journal of Dravidian Linguistics, Vol.43 No.1 January 2014: PP-92-115.

- முனைவர் ச.சீனிவாசன்

Pin It