சீர் வாசகர் வட்டத்தின் கலை இலக்கிய விருது விழா கோவை மாருதி அரங்கில் அண்மையில் நடைபெற்றது.
நிகர் கலைக்கூடத்தின் இளந்தோழர்களின் பறை முழக்கம் அரங்கை அதிரச் செய்தது. பறை இசைத்தாடிய 18 கலைஞர்களுக்கும் 'நாளை விடியும்' இதழ் ஆசிரியர் (திருச்சி) அரசெழிலன் அவர்கள் 15 குறுநூல்கள் கொண்ட நூற்கட்டை நினைவுப் பரிசாக வழங்கினார்.

(சீர் விருது வழங்கும் நிகழ்வு. பொதியவெற்பன், அவரது துணைவியார், கண. குறிஞ்சி, ஜமாலன் ஆகியோர்.)
இதுவரையிலான சீர் வாசகர் வட்டத்தின் பதிப்புப் பணிகள் காணொலி வடிவில் அரங்கில் ஒளிபரப்பப்பட்டது. அதில் நூல்களின் உருவாக்கம் அச்சகத்தில் எவ்வாறு தயாராகிறது என்பதும், அதில் அச்சக ஊழியர்களின் உழைப்பு இடம் பெற்றிருந்ததும் பார்வையாளர்களைக் கவர்ந்தது.
சீர் வாசகர் வட்டத்தின் நோக்கம் குறித்தும், பயணிக்கும் திசைவழி குறித்தும், இவ்விருது குறித்தும் கவிஞர் தம்பி அவர்கள் சுருக்கமாக எடுத்துரைத்தார்.
'மானுடம் தழுவிய சக பயணி' என்ற பெயரில் தோழர் தினேஷ் அவர்கள் இயக்கிய விருதாளர் குறித்த ஒரு மணி நேர ஆவணப்படம் ஒளிபரப்பானது. கவிதை வாசிப்பு, நிழலுரு பின்னணி காட்சிகள், பாடல் என்று சலிப்பு ஏற்படாவண்ணம் ஆவணப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. ஆய்வறிஞர் பொதியவெற்பன் அவர்களின் அரை நூற்றாண்டுக்கும் மேலான சமூகப் பயணத்தை மிகச் சிறப்பாக ஆவணப்படம் வெளிப்படுத்தி இருந்தது. மௌலி அவர்கள் ஒளிப்பதிவு செய்யக் கார்த்திக் அவர்கள் அற்புதமாகப் படத்தொகுப்புச் செய்திருந்தார். பெரிய உழைப்பு. ஆவணப்படம் பார்க்கிறோம் என்ற உணர்வே இல்லாத அளவுக்கு விறுவிறுப்பாக அது அமைந்திருந்தது.. உதிரி நாடக நிலம் விஜயகுமார் அவர்கள் இசை அமைத்திருந்தார்.
பின்னர் 'உதிரி' நாடக நிலம் குழுவினர் புதுமைப்பித்தனின் 'கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்' சிறுகதையை நாடகமாக்கினர். மிகச் சிறப்பான நிகழ்வாக அது அமைந்தது. நாடகக் கலைஞர்களுக்குத் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர் கு. இராமகிருட்டிணன் அவர்கள் நினைவுப்பரிசுகளை வழங்கினார்.
சீர் இதழையும் சேர்த்து ஐந்து நூல்கள் வெளியிடப்பட்டன. 'நேத்தாஜீ முதல் பொதிகைச்சித்தர் வரை' எனும் பொதியவெற்பனுடனான இரா. விஜயன் அவர்களின் செவ்வி நூல், நிகழ்வுக்கு வருகை தந்த அனைவருக்கும் வழங்கப்பட்டது. ஐந்து நூல்களையும் வாசகர்களே வெளியிடவும் பெற்றுக் கொள்ளவுமாக அமைந்தது மிகவும் சிறப்பு. அதிலும் சரிபாதி பெண்கள் என்பது மிகவும் போற்றத்தக்கதாகும்.
பின்னர் எழுத்தாளர் ஜமாலன் அவர்கள் வாழ்த்துரை வழங்க, "புதுமலர்" இதழாசிரியர் கண. குறிஞ்சி அவர்கள் தலைமையுரை ஆற்றிப் பொதியவெற்பன் அவர்களுக்குச் சீர் வாசகர் வட்ட விருதை வழங்கினார். விருதாளரின் குடும்பத்தினர் அனைவரும் அதில் பங்கேற்றனர். பேராசிரியர் கண்ணம்மாள் மனோகரன் தலைமையில் சீர் உறுப்பினர்கள், விருதுத் தொகையான ஒரு இலட்சம் ரூபாயைப் பணமுடிப்பாக விருதாளரிடம் வழங்கினர்.
இறுதியாக எழுத்தாளர் பொதியவெற்பன் அவர்கள் ஏற்புரை வழங்கினார். மிகமிகச் சுருக்கமாகத் தேர்ந்தெடுத்த சொற்களைக் கொண்ட உரையாக அது அமைந்தது. இறுதியாக ஒரு பாடலோடு அவர் உரையை முடித்தார்.
அறிவிக்கப்பட்ட நேரத்தில் தொடங்கி உரிய நேரத்தில் விழா நடந்து முடிந்தது மிகவும் குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல், சீர் வாசகர் வட்டத்தின் விருது வழங்கும் விழா, அனைத்து வகையிலும் ஓர் எடுத்துக்காட்டாக அமைந்தது வெகுசிறப்பு . சீர் வாசகர் வட்டத்தின் விருது, எதிர்வரும் காலத்தில் தமிழின் மதிப்பு மிக்க விருதாக உயரும் என்ற நம்பிக்கையை இவ்விழா உருவாக்கியது.
ஆய்வறிஞர் பொதியவெற்பன் நூல்கள்
தொகைநூல்கள் 14 .
கவிதை + பாடல்கள் = 1
கவிதாநிகழ்வு = 1
பொருள்கோளியல் =1
புனைகதை ஆய்வுகள்: 3
கவிதையியல் மதிப்பீடுகள் = 2 வாழ்வியல்: 1
செவ்வி =1
அரசியல் உரையாடல்கள் = 7
இறையியல் மெய்யியல் ஆய்வு: 2 இதழியல் பதிப்பியல் = 1
குறு நூல்கள் = 1
ஆக மொத்தம் 35 நூல்கள்
- புதுமலர் ஆசிரியர் குழு