தமிழர்கள் இவ்வுலகில் எங்குப் போய் வாழ்ந்தாலும் ஒரே உணர்வினராக ஒரே வகைப் பண்பினராக வாழ்கின்றனர் என்பது ஒரளவில் மகிழ்ச்சி தருவதானாலும், பிறிதோரளவில் மிகவும் வருத்தம் தருவதாகவும் இருக்கின்றது என்பதை என் சிங்கை மலேசியச் சுற்றுச் செலவின் பொழுது உணர வேண்டியிருந்தது. தாய் நிலம் துறந்து வேற்றுப் புலனங்களில் வயிற்றுக்காகவும் குடி பெயர்ந்து மலைகள் தாண்டியும் கடல் தாண்டியும் சென்று வாழும் தமிழர்கள், பெரும்பாலும் கடந்த இரண்டு மூன்றா- யிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தில் என்னென்ன வகையான உணர்ச்சிகளுடன் வாழ்ந்தார்களோ அவ்வவ் வகையான உணர்ச்சிகளுடனேயே அங்கும் போய் வாழ்ந்து வருகின்றனர். தங்கள் மொழிப்பற்றும் இனப்பற்றும் அவர்களின் நல்லுணர்வுகளாக இன்றும் ஆங்காங்கே பளிச்சிட்டு மிளிர்கின்றன என்றாலும் தமிழகத்தில் உள்ள மூடநம்பிக்கைகளும் அவர்கள் வாழ்கையில் பின்னிப் பிணைந்துக் கொண்டிருப்பதைப் பல விடயங்களில் பலர்வியன் கண்டேன். கண்டு மிகவும் வருந்தினேன்.

சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் உள்ள தமிழர்கள் பலர் பல தலைமுறைகளைக் கண்டவர்களாக விளங்குகின்றனர். அவர்களுள் பெரும்பாலார் தங்களது உடைகளிலும் உணவு முறைகளிலும் ஆங்காங்கு உள்ள பழக்க வழக்கங்களையே பின்பற்றி வருகின்றனர் என்றாலும், சிறுபான்மையினர் இன்றும் வேட்டி சட்டை உடுத்துபவர்களாக இருப்பதையும் கண்டு மகிழ்ந்தேன். மேலும் தோட்டப்புறங்களில் வாழ்ந்து வருகின்ற தொழிலாளர்கள் குடியிருப்புகளில் புகுங்கால் தமிழகத்திற்குள் நுழைவது போன்ற உணர்ச்சியே உண்டானது. சில இடங்களில் அரசமரத்தடியில் கோவில்களும் நம் பெண்களின் அரட்டை அளப்புகளும் எனக்குத் தமிழகச் சிற்றூர்ப் புறங்களையே நினைவூட்டின. ஆனால் இவ்வகை உணர்வுகளில் எல்லாம் என் உள்ளத்தில் தீப்போல் காந்தியவை, அவர்கள் தங்களுக்குள் இன்னும் விடாப்பிடியாகக் கொண்டிருக்கும் குல சமய வேறுபாடுகளேயாகும்.

சிங்கை மலேசியத் தமிழர்களுள் ஒரு கணிசமான பகுதியினர் இலங்கைத் தமிழர்களாவர். அவர்களும் தாய்த் தமிழகத்தினின்று குடியேறிய பலரும் பெரும்பாலும் சிவனிய (சைவ)க் கொள்கை- யினராக இருந்தாலும் மாலிய (வைணவ) வழிபாடும் வேறு சில சிறுதெய்வ வழிபாடுகளும் கூட அவர்களிடையே இருந்து வருகின்றன. தமிழகத்துப் பிராமணப் பூசாரிகள் சிலர் சில கோ- யில்களில் இருந்து வழிபாடுகளுக்கு உதவுவதை நான் பார்த்து வியந்தேன் சிலரிடம் இதைப் பற்றிக் கேட்ட பொழுது அவர்கள் தமிழகத்தினின்று இதன் பொருட்டாகவே தருவிக்கப்பட்டனர். என்று விடை கிடைத்தது.

சில கோயில்களில் தமிழ்க் குருமார்கள் சிலர் பூச்சார்த்திகளாக இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. கோயில்களைப் பற்றிய அமைப்புகளிலெல்லாம் தமிழக மணமே வீசுகின்றது. சிலைகளின் அமைப்பும் கோயில் மதில்சுவர்களின் தோற்றமும் வண்ணப் பூச்சுகளும் தமிழகத்தையே அங்கு உருவாக்கிக் காட்டுகின்றன. அவை முற்றும் தமிழகச் சிற்பிகளையே கொண்டு செய்யப்பட்டவனாகத் தெரிகின்றன. சில வகைச் சமய மூடநம்பிக்கைகளையும் அங்குத் தமிழகத்தைப் போலவே காண நேர்ந்தது. ஆனால் இவற்றிலெல்லாம் கூட என் மனம் மிகவும் வருந்துமாறு ஏதும் நடந்துவிடவில்லை. தமிழ் எவ்வாறு ஆரிய கலப்பு நீக்கம் பெற்றுத் தூய்மையுற வேண்டியுள்ளதோ, அது போலவே தமிழர்களின் சமயவுணர்ச்சியும் ஆரிய கலப்பு நீக்கம் பெற்றேயாகல் வேண்டும். அதைத் தொற்றிக் கொண்டுள்ள மூடநம்பிக்கைகள், மனவேறுபாட்டு நோய்கள் முதலியனவும் நீங்கியாகல் வேண்டும். அதுவரை நாம் கொண்டுள்ள சமயக் கோட்பாடுகள் முழுத்தூய்மை பெற்றவனவாகவோ, பொதுமை சான்றனவாகவோ, எல்லா மக்கள் நலத்திலும் ஒரே படித்தான அக்கறை கொண்டுள்ளவனவாகவோ கூறிப் பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது.

இனி, சமய நிலைகள் ஒருபுறம் இவ்வாறிருந்தாலும், தமிழர்கள் தங்கள் தாய் நிலம் துறந்து அயல் நிலங்கள் நோக்கி கப்பல் ஏறும் பொழுது விடாப்பிடியாக அவர்கள் தமிழகத்திற்கொண்டிருந்த குலவேறுபாட்டுக் குப்பைக் கூலங்களையும் அன்றோ, அவர்கள் வாழப் புகுந்த அயல்நாடுகளுக்கு வாரிக் கொண்டு சென்றிருக்கிறார்கள்! இந்த உண்மைதான் என் நெஞ்சாங்குழியில் நெருஞ்சி முள்ளெனக் குத்திக் கொண்டுள்ளது.

இவர்களின் அறியாமையை என்னவென்பது! பெயர்களின் பின்னும் இன்னும் வாலிட்டு எழுதுவது, இடுகாடு சுடுகாடுகளில் கூடச் சிற்சில இடங்களில் குலப் பிரிவுகளைக் கையாள்வது, திருமண, இறப்பு நிகழ்ச்சிகளில் குல வேறுபாடுகளைத் தெற்றெனக் காட்டும் பழக்க வழக்கங்களையும் இன்னும் குரங்குப் பிடியாகக் கைக் கொண்டிருப்பது போலும் தீய மூடப்பழக்கங்கள் தமிழர்கள் எத்துணையளவு நாட்டியல், குமுகவியல், பொருளியல் முன்னேற்றங்களைப் பெற்றாலும் தங்கள் மனங்களில் உள்ள மனக் கசடுகளை நீக்கிக் கொள்ளவே மாட்டார்கள் என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன. அவ்வப்பொழுது தமிழகத்தில் உள்ள தலைவர்கள் சிலர் பொருளியல் முன்னேற்றம் ஏற்படுமானால் இந்தக் குலமுறைகள்கூட மூட நம்பிக்கைகள் எல்லாம் அடியோடு ‘ஒழிந்துபோகும்’ என்றுக் கூறக் கேட்டிருக்கின்றோம். பெரும்பாலும் பொதுவுடைமைக் கொள்கையினரும் பேராயக் கட்சிக் கொள்கை- யினர் சிலரும் இதைக் கூறி வருகின்றனர். இந்தக் கூற்றுக்கு மண்டையடி விழுந்திருக்கின்றது இங்கே! பொருளியல் மட்டுமன்று அறிவியலில் முன்னேறினால் கூட, சில சமய வெறிகளும் சாதி வெறிகளும் அறவே ஒழிந்து போகமற் போனாலும் அடங்கியாகிலும் கிடைக்குமா எனும் ஐயப்பாடு என்னுள் பூதம் போல் வளர்ந்து விட்டது.

தமிழகத்தினின்று ஓராண்டுக்கு முன் இங்குச் சுற்றுலாப் போந்தப் திரைப்படப் பாட்டாசிரியர் கண்ணதாசன் இங்குப் பேசிய கருத்துகளைப் பற்றி அன்பர்கள் சிலர் வாயிலாகக் கேட்டு செவி கொதித்துப் போனேன். நிகரியக் கொள்கையையும், காந்தியப் பொதுமைக் கருத்துக்களையும் பேசிவரும் அத்தமிழகக் குடிமகன், கோயில் கூட்டங்களிலேயே கள்ளொழுகும் வாயுடன் ‘முருகன் எங்கள் செட்டிக் குலத்தைச் சேர்ந்த கடவுள். ஐம்பெரும் பாவியங்களுள் இரண்டு பெரும் பாவியங்கள்’ (சிலப்பதிகாரமும் மணிமேகலையும்) எங்கள் செட்டியினப் பாவியங்கள்’ என்று கூறிப் பெருமைப்பட்டுக் கொண்டாராம். அதைக் கேட்டு, இங்கு வாழும் அவ்வினத்தவருள் பெரும்பாலோர் மிகவும் உடல் குளிர்ந்து போனார்களாம். (மேலும் அக்கண்ணதாசர் என்ன கூறினார் என்பதைக் கேட்கையில் அண்மையில் ஏதோ எம். சி. இராமச்சந்திரன் தம் தேர்தல் விரகாண்மைக்காக “நான் சொன்னால் தமிழகப் பெண்கள் தங்கள் கணவன்மார்கள் பேச்சைக்கூடக் கேட்காமல், ஒப்போலைகளை எங்கள் கட்சிக்கே போடுவார்கள்” என்று சொன்னதை தப்பறைக் கொட்டி வாய்ப்பறை கிழித்த பச்சைத் தமிழர் பலர் இதைக் கேட்டால் என்ன கூறுவார்களோ என்று மனங்கொதித்து நின்றேன் “நான் இங்குள்ள இத்தனைக் கடவுள்களுள் ஏன் கண்ணனை என் கடவுளாகக் கொண்டிருக்கிறேன் என்றால், அவன்தான் பெண்கள் பலருடன் கூடிக் களித்திருக்கிறான். அவனைப்போல்தான் நானும்” என்று கண்ணதாசத் தமிழர் பெண்கள் எல்லாரும் தலைகுனிந்து நாணுமாறு பெரிய பொதுக் கூட்டத்திலேயே பெருமை பேசி இருக்கின்றார். (இதற்காகத்தான் போலும் இவர் தமிழகத்தில் கண்ணன் கோயிலைக் கட்ட முனைந்திருப்பதும், அதற்குப் பலரும் ஊக்கமாக நின்று ஆக்கந்தருவதும்) இந்நிலைகள் எல்லாம் குலவெறிக்கு எத்துணையளவு, இங்கு வலிவூட்டப்பெற்று வருகின்றது என்பதையும், அவ்வெறி இங்கு எத்துணையளவு வேரூன்றியிருக்கின்றது என்பதையும் தெளிவாக உணர்த்தும்.

மேலும் இல்கு பலவாறான ÔசாதிÕ இயக்கங்கள் இயங்கி வருவதையும், அவை தங்கள் இன வேறுபாடுகளை பலவாறு விரிவுப்படுத்திப் பூசல்கள் இட்டுக் கொள்வதையும் காணுங்கால் தமிழன் நிலா மண்டலத்திற்கே போய் வாழ நேரிட்டாலும் சாணிச் சட்டியில்தான் தன் தலையைத் தேய்த்துக் கொள்வான் என்றே உறுதியாக நம்ப வேண்டியிருக்கின்றது. அவன் எத்தனை வகையான உடைகளை உடுத்தால் என்ன? எத்தனை நாகரிகமுள்ள மக்களிடையில் போய் வாழ்ந்தால்தான் என்ன? அல்லது எத்தனை உயரமான கட்டிடங்களில் போய் வாழ்ந்தால்தான் என்ன? அவன் குலவேறுபாட்டு முடை நாற்றமும், மூளையில் உயர்ச்சி தாழ்ச்சி யென்னும் மேடுபள்ளங்களும் அகற்றப் பெற்றுச் சமனிலைப்படாதவரை, தமிழகத்தின் குப்பை மேடுகளின் மலப்புழுவாய் அவன் நெளிவதும் அமெரிக்க அரசவை விருந்தினனாக அவன் உலாவருவதும் ஒன்றுதான்! அதனால் அவனுக்கோ பிறர்க்கோ என்ன பயன் ஏற்பட்டு விடப்பட போகின்றது என்பது விளங்கவில்லை.

இனி என் அயலகச் செலவின்போது நான் அறிந்துக் கொண்ட தமிழகச் செய்திகளுள் என்னை அதிரச் செய்தது, மதுரையில் நடந்த ‘யாதவர்’ மாநாட்டுத் தீர்மானந்தான். "மொழி மாநில வேறுபாடுகளையெல்லாம் மறந்து இந்தியாவில் உள்ள யாதவர்களெல்லாம் ஒன்றுபட வேண்டும்" என்றும் "இனிமேல் தென்னகத்தில் உள்ள யாதவர்களும் கோனார், பிள்ளை எனும் குலப்பட்டங்களை வைப்பதை விட்டுவிட்டு வடநாட்டினர் போல் யாதவ் எனும் பட்டத்தையே வைத்துக் கொள்ள வேண்டும்" என்றும் அம்மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்கள் பெரியார், அண்ணா, பாரதிதாசன் போன்றவர்களின் பகுத்தறிவுக் கொள்கையின் மேல் விழுந்த சம்மட்டி அடிகளாகும்! இவ்விருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலத்திலும் மேனாட்டார் நிலாக்கோளுக்கும் செவ்வாய்க்கோளுக்கும் வலைவீசிக் கொண்டுள்ள காலத்திலும் -தமிழர்கள் இத்தகைய கீழ்மை நிலைக்கும் கூடப்போகத்தான் போவார்களென்றால், அவர்கள் கற்காலத்திற்கே கூடத் திரும்பி போவது நல்லது என நெஞ்சார நினைக்கின்றேன்.

"ஓ! தமிழ் இனமே! நீ அடிமையாக வாழ்ந்தாலும் சரி, அரசனாக வாழ்ந்தாலும் சரி, பதியெழுவறியாப் பழங்குடியாக இருந்த இடத்திலேயே இருந்தாலும் சரி அல்லது பதிபெயர்ந்து அகன்று பாரெங்கிலும் உள்ள நாடுகள் அனைத்திலும் போய்ப் பதிந்து வாழ்ந்தாலும் சரி, உன்னை நீயேதான் தாழ்த்திக் கொள்ளல் வேண்டும்! அத்தனையளவுக்கு ஆரியம் உன்னை அடிமாற்றி உள்ளது; திரிபுபடுத்தி உள்ளது. அதன் அடிப்படையாக உள்ள இறுதி அணுவும் உன் உடலினின்று அறக் கழன்றாலன்றி உன் குடிபெயர்ப்பாலும் பயனில்லை; கொடிச் சிறப்பாலும் உயர்வில்லை, நீ என்றென்றும் ஆரியத் தமிழனே! உன்னை ஈடேற்றுபவர் இனி பிறப்பாரா என்பது ஐயமே!’ என நெஞ்சு புழுங்குவதைத் தவிர வேறு வழியில்லை.

தென்மொழி--சு. 11, 8-9 (1974)

- பெருஞ்சித்திரனார் (1933 - 1995)



தமிழ்த் தேசத் தந்தை என்று பலராலும் மதிக்கப்பெறும் பாவலரேறு பெருஞ்சித்திரனார் தமிழ் மொழி, இன, நாட்டின் உரிமைகளுக்காகவே தம் வாழ்நாள் முழுமையையும் ஈடுபடுத்திக் கொண்டவர்.

தமிழே தமக்கு உயிர் மூச்சு.. இறைவன்.. என்றெல்லாம் கருத்துக் கொண்டிருந்த அவர் தமிழ்நாட்டின் அடிமை நிலை மீட்புக்காக எத்தனை முறை சிறையிட்டாலும் கொள்கைமாறா உறுதியுடன் களம் கண்டார்.

சங்க கால இலக்கியங்களுக்கு இணையான பா எழுதும் திறன் கொண்டு எண்ணற்ற இலக்கியங்களை உருவாக்கி அளித்திருக்கிறார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட அவரின் தனிப்பாடல்கள் அனல் வீச்சாகத் தமிழ் மொழி இன நாட்டு உரிமை முழங்குவன. தென்மொழி - எனும் தூய தமிழ் இலக்கிய இதழை இலக்கியச் சுவையோடும் தமிழ்நாட்டு உரிமை உணர்ச்சியோடும் 1959 முதல் தம் இறுதிக் காலம் வரை (1995) நடத்தி வந்தார், தமிழ்ச்சிட்டு எனச் சிறுவர் இதழையும், தமிழ் நிலம் எனும் அரசியல் இதழையும் இணைத்துத் தொடர்ந்து நடத்திப் பரப்பினார். சிறந்த மேடைப் பேச்சாளராகவும், சிறுகதை எழுத்தாளராகவும், சிறந்த மொழிபெயர்ப்பாளராகவும், ஆய்வாளராகவும், சிறந்த ஓவியராகவும், இவற்றின் ஊடாகப் போராளியாகவும் வாழ்ந்தவர்.

பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் பல்துறை சார்ந்த படைப்புகளை அளித்திருக்கிறார்.

கனிச்சாறு (பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் தனிப்பாடல்கள்) 8 தொகுதிகள்

திருக்குறள் மெய்ப்பொருளுரை 5 தொகுதிகள் (240 குறள்களுக்கு உரையும், துறவறவியல் முன்னுரையும் )

திருக்குறள் மெய்ப்பொருளியல் பொழிவுகள்

கொய்யாக்கனி (காவியம்)

 இலக்கியத்துறையில் தமிழ்வளர்ச்சிக்குரிய ஆக்கப் பணிகள்

.. .. .. .. . உள்ளிட்ட 35 - க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவரது நூல்கள் முழுமையும் "பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் எழுத்தடைவுகள்" என்கிற பெயரில் 16 தொகுப்புகளாக வெளிவருகின்றன.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.