"மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா" எனவும், "பெண்ணிற் பெருந்தக்க யாவுள" எனவும் மகளிரைப் போற்றிக் கொண்டாடும் மனநிலை பரவலாக உள்ளது. எனினும் தனிவாழ்விலும், பொது வாழ்விலும் அவர்கள் சுமக்கும் சிலுவைகள் சொல்லுந்தரமன்று. இருப்பினும், இவற்றை எல்லாம் கடந்து, வையத்துள் வாழ்வாங்கு வாழும் பெண்ணரசிகள் வரலாற்றில் நிலைத்து வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். காலம், தேசம், இனம், மொழி கடந்த இவர்கள் என்றென்றும் நம் வணக்கத்திற்கு உரியவர்கள். தனித்தும், தன் இணையரோடும் இணைந்து பாடாற்றிய இவர்களில் கார்ல் மார்க்ஸ் & ஜென்னி / பெரியார் & நாகம்மை / லெனின் & குரூப்ஸ்கயா போன்றவர்களை எவர்தான் மறக்க முடியும்?
"கூர்மையான அறிவு, உயர் பண்பு, சிறந்த அரசியல் ஞானம், சுயதியாகம் எனப் புரட்சிகர இயக்கத்தில் எந்தப் பெண் இப்படிச் செயல்பட்டிருக்க முடியும்? இருப்பினும் அவர் கவனஈர்ப்புடன் முன்நிறுத்தப்படவில்லை, அச்சுப் புலத்தில் பதிவிடப்படவில்லை. அவரோடு நெருங்கி இருந்தவர்களுக்கு மட்டுமே இவரைத் தெரியும். தோழர்களின் போராட்டங்களுக்கு அர்ப்பணிப்பு மிக்க சேவை, பகட்டில்லாத துணிவு, சமரசம் செய்து கொள்ளாத அறிவுக்கூர்மை போன்ற அவரது அறம் சார்ந்த வழிகாட்டுதலை இன்று நாம் இழந்து நிற்கிறோம். மற்றவர்களுக்கு மகிழ்ச்சி ஊட்டுவதன் மூலம் பெருமகிழ்ச்சி அடையக் கூடிய ஒரு பெண் இருக்கக் கூடுமானால், அந்தப் பெண் ஜென்னிதான்" என ஜென்னியின் இறுதி அஞ்சலிக் கூட்டத்தில் பிரடெரிக் ஏங்கெல்ஸ் புகழ் மாலை சூட்டினார்.
ஆம், அவர்தான் ஜென்னி வான் வெஸ்ட்பலென்! (12/02/1814 - 02/12/1881) பேராசான் மார்க்சின் இணையர். செல்வமும், செல்வாக்கும் மிக்க பிரபு வம்சப் பேரழகி ஜென்னி. டிரியர் நகரில் ஜென்னியின் இல்லத்திற்கு அருகிலேயே இருந்த கார்ல் மார்க்ஸ், நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்த யூத வம்ச இளைஞர். சிறு வயது முதலே மார்க்ஸ் & ஜென்னி நன்கு பழகி வந்தனர். நாளடைவில் அது காதலாக மலர்ந்தது. பணக்காரக் குடும்பத்தில் பிறந்த ஜென்னியை மணக்க உயர் அதிகாரிகளும், பிரபு வம்ச இளைஞர்களும் தயாராக இருந்த நிலையில், தன்னைவிட நான்கு வயது குறைவான மார்க்சைத் தனது துணைவராக அவர் தெரிவு செய்தார்.
தன் மக்களுக்காகக் கடவுளையும் எதிர்த்துப் போராடிய புரட்சிகர வீரனான பிரமீத்தியஸ் போன்றவர் மார்க்ஸ் எனக் கருதி அவர்பால் ஜென்னி காதல் கொண்டார். ஆனால் குடும்பத்தினரின் இசைவு கிடைக்காது என்ற நிலையில், ஒரு கௌரவமான நிலையை மார்க்ஸ் அடையும் வரை காத்திருக்க ஜென்னி முடிவு செய்தார். எனவே மார்க்ஸ், தனது முனைவர் பட்டத்தை முடிக்கும் வரை பொறுமையாக இருந்தார்.
இந்நிலையில் ஆறு ஆண்டுகள் கழித்து, இருவரும் மணவாழ்வில் இணைந்தனர். அப்பொழுது ஜென்னியின் வயது 29. ஜென்னி, ஜெர்மன் மொழியில் வல்லுநராகத் திகழ்ந்தார்; அரசியலில் மிகுந்த நாட்டம் உடையவராகவும் இருந்தார். பிரெஞ்சு சோசலிசம், ஜெர்மன் புனைவியல் போன்றவற்றில் ஈர்ப்பு மிக்கவராக அவர் இருந்தார். மேலும் பெண் சமத்துவம் குறித்த தொடக்க காலப் பெண்ணிய நோக்கு அவரிடம் மேலோங்கி இருந்தது. எனவே திருமணத்திற்குப் பின், மார்க்சின் கொள்கைகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் இணைந்து அவர் செயலாற்றினார். மார்க்ஸ், நிலையான வேலை எதிலும் பணியாற்றவில்லை. தீவிர வாசிப்பு, எழுத்து, அரசியல் செயல்பாடு என்பதாக அவரது வாழ்க்கை அமைந்திருந்தது. அதன் விளைவாகப் போதிய வருமானம் இன்றிச் சிறிது சிறிதாக வறுமை அவர்களைத் தின்னத் தொடங்கியது. தவிரவும், தனது தீவிரமான கோட்பாட்டினால், ஜெர்மனி, பெல்ஜியம், பிரான்சு என ஒவ்வொரு நாட்டிலிருந்தும் மார்க்ஸ் விரட்டியடிக்கப்பட்டார். அப்பொழுதெல்லாம் அவருக்கு உற்ற துணையாக நின்றவர் ஜென்னி. அலைக்கழிக்கும் இந்த அவல வாழ்வு குறித்து அவர் மார்க்சின் மீது குறைபட்டுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மார்க்ஸ் & ஜென்னி இணையருக்கு நான்கு மகள்கள், மூன்று மகன்கள் என மொத்தம் ஏழு குழந்தைகள். இதில் வறுமையினாலும், நோயினாலும், போதிய உணவின்மையாலும் நான்கு குழந்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக இறந்து போய்விட்டன. “எனது இரண்டாவது குழந்தை பிறக்கும் பொழுது, அதற்கு ஒரு தொட்டிலும் இல்லை. அதே குழந்தை பிறகு இறக்கும் பொழுது, அதற்கு ஒரு சவப்பெட்டியும் இல்லை, இதுதான் எங்கள் நிலை” என ஜென்னி குறிப்பிடுகிறார். மூன்றாவது குழந்தை எட்கர் எட்டு வயது இருக்கும்பொழுது மார்க்சின் கைகளிலேயே மரணத்தைத் தழுவினான். அது ஓர் அஞ்சி நடுங்கும் அனுபவமாக இருந்தது.
"நான்காவதாகப் பிறந்த குழந்தை இந்த உலகத்திற்கு வந்த நாள் முதல் ஒரு நாள் கூட இரண்டு / மூன்று மணி நேரத்திற்கு மேல் நிம்மதியாக உறங்கியதில்லை. அண்மையில் அவனுக்குக் கடுமையான வலிப்பு வரத் தொடங்கி விட்டது. வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே அவன் போராடிக் கொண்டிருக்கிறான். அவனுக்கு இருந்த வேதனையில் அவன் பால் அருந்த பலமாக எனது மார்பகத்தை உறிஞ்சியதால் எனது மார்பின் தோல் வெடித்து, நடுங்கும் அவனது சிறிய வாய்க்குள் இரத்தம் கொட்டியது" என உதவி கேட்டுக் குடும்ப நண்பருக்கு எழுதிய கடிதத்தில் ஜென்னி குறிப்பிடுகிறார். மருந்து கடைக்காரர், ரொட்டிக் கடைக்காரர், பால்காரர், மளிகைக் கடைக்காரர், காய்கறிக் கடைக்காரர், கசாப்புக் கடைக்காரர் என எல்லோரும் பாக்கிக் கணக்குகளை எடுத்துக்கொண்டு இவர்களை முற்றுகையிடுவது அடிக்கடி நடக்கும் செயலாகி விட்டது. எனவே அவ்வப்பொழுது வீட்டில் இருக்கும் பொருள்களை விற்று இவர்களின் கணக்குகளைத் தீர்த்ததாக ஜென்னி குறிப்பிட்டார்.
இதைத் தொடர்ந்து பரம்பரைச் சொத்து மூலம் சிறிதளவு தொகை மார்க்ஸ் பெற்றிருந்தார். அந்த சமயத்தில் பெல்ஜியத்தில் தொழிலாளர்களின் ஆயுதப் போராட்டத்திற்கு மார்க்ஸ் பெருமளவு உதவி செய்தார். இது அரசுக்குத் தெரிய வந்து, மார்க்சை விசாரணைக்காக இழுத்துச்சென்று விட்டனர். மார்க்சைத் தேடி இருளில் வீடு வீடாக அலைந்தார் ஜென்னி. திடீரென்று ஒரு காவல் அதிகாரி ஜென்னியைக் கைது செய்து, இருண்ட சிறைக்குள் தள்ளி விட்டார். அது வீடற்ற பிச்சைக்காரர்கள், நாடோடிகள், தீய ஒழுக்கப் பெண்கள் முதலியோர் காவலில் வைக்கப்படும் இடம். இருட்டு அறையில் தள்ளப்பட்ட ஜென்னி அழுது கொண்டே உள்ளே சென்று அங்கிருந்த முரட்டுப் பலகையில் படுத்திருந்தார். அடுத்த நாள் பல மணி நேர விசாரணைக்குப் பிறகு இராணுவப் போலீசார் இவரை வெளியே அனுப்பினர். இப்படித்தான் அவர்கள் வாழ்வு நடந்தது.
இவ்வளவு இன்னல்களுக்கு இடையிலும், மார்க்ஸ் குறித்தே ஜென்னி அதிகம் கவலைப்பட்டார். "என்னைப் பொறுத்தவரை நான் மகிழ்ச்சியுள்ள, சலுகைகள் பெற்ற அதிர்ஷ்டக்காரி என்றே கருதுகிறேன். காரணம், எனது வாழ்க்கையின் ஆதரவான என் அருமைக் கணவர் என்றும் என் அருகில் இருக்கிறார். அவருக்குத் தேவையான உதவியின் அளவு சிறிதாக இருந்த போதிலும், பொருளாதார ரீதியில் சில்லறை விஷயங்களுக்காக அவர் எவ்வளவு தூரம் வருந்த வேண்டியிருக்கிறது? எத்தனையோ பேருக்கு விருப்பத்துடன் உதவி புரிந்த அவர், இன்று உதவியற்ற நிலையில் இருக்கிறார் என்பதுதான் எனது உள்ளத்தைச் சித்திரவதை செய்கிறது" என ஜென்னி குறிப்பிட்டார். எனவே தன்னாலான அனைத்து உதவிகளையும் அவர் மார்க்சுக்கு மனமுவந்து அளித்து வந்தார்.
மார்க்சின் கையெழுத்து மிகவும் மோசமாக இருக்கும். அதை எளிதில் புரிந்து கொள்ள முடியாது. எனவே அவரது கையெழுத்தைப் புரிந்து கொண்டு, அதைச் செழுமைப்படுத்தி, மறு உருவாக்கம் செய்து பதிப்பகங்களுக்கும், ஊடகங்களுக்கும் அனுப்பி வைக்கும் பணியை ஜென்னிதான் செய்து வந்தார். கூடவே அவரது அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபாட்டுடன் பங்கேற்றார். மார்க்சும், ஏங்கெல்சும் இணைந்து 1847-ல் உருவாக்கிய கம்யூனிஸ்டு லீக் அமைப்பில் முதல் உறுப்பினராக இருந்தவர் ஜென்னி. தவிரவும் ஜெர்மானிய உழைப்பாளர் சங்கம் (German Workers' Union) அமைப்பிலும் பங்கேற்றுச் செயல்பட்டார்.
மார்க்சின் ஒவ்வொரு புத்தக உருவாக்கத்திலும் ஜென்னியின் பங்களிப்பு காத்திரமானது. மார்க்சின் நூல்களுக்கு மிகுந்த வரவேற்புக் கிடைக்கும் என ஒவ்வொரு முறையும் ஜென்னி எதிர்பார்த்துக் காத்துக் கிடப்பார். ஆனால், அந்த நூல்கள் பின்னர் கண்டுகொள்ளப்படாமல் போவதறிந்து ஜென்னி நொந்து போவார். இருப்பினும், மார்க்சின் 'பிரான்சில் உள்நாட்டுப் போர்' (The Civil War in France) எனும் நூல் மட்டும் 1000 படிகள் உடனடியாக விற்பனையாகிச் சாதனை படைத்தது. இரண்டு மாதங்களில் மூன்று பதிப்புகள் கண்டதோடு, இந்தப் புத்தகம் ஐரோப்பா முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அது குறித்து ஜென்னி மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இருப்பினும், மார்க்சின் மகத்தான படைப்பாகிய "மூலதனம்" முதல் தொகுதி 1867-ஆம் ஆண்டு வெளிவரும் நாளுக்காக ஜென்னி அளவற்ற எதிர்பார்ப்போடு காத்திருந்தார். ஆனால், பிற்காலத்தில் உலகையே தலைகீழாகப் புரட்டிப் போட்ட அந்த வரலாற்று ஆவணம் வெளியிடப்பட்ட சமயத்தில், அது கண்டுகொள்ளப்படவே இல்லை. இதைக் கண்டு ஜென்னி மனம் இடிந்து போனார்.
கணவனுக்கும் உழைப்பாளித் தோழர்களுக்கும் ஓயாது உழைத்து ஓடாய்த் தேய்ந்த ஜென்னி கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். படுக்கை அருகில், மூலதனம் நூல் குறித்து ஆங்கிலத்தில் வெளிவந்த ஆக்கவழியிலான விமர்சனத்தை மார்க்ஸ், ஜென்னிக்குப் படித்துக் காட்டினார். இறுதியில் மார்க்சின் நூலுக்குக் கிடைத்த அங்கீகாரத்திற்கு ஜென்னி மிக்க மகிழ்ச்சி அடைந்தார். நோய் முற்றத் தொடங்கியதும் படுத்த படுக்கையாகக் கிடந்த ஜென்னி ஓர் அறையிலும், உடல்நலம் குன்றிய மார்க்ஸ் மற்றோர் அறையிலும் பிரிந்து இருந்தனர். 1881-ல் ஜென்னி இறந்து கல்லறையில் அடக்கம் செய்யப்படும் வரையிலும் கூட ஜென்னி உடலைப் பார்க்க மார்க்ஸ் அனுமதிக்கப்படவில்லை. மார்க்சுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டு விடக்கூடாது என்ற அச்சம்தான் அதற்குக் காரணம். அவர்களது 38 ஆண்டு மணவாழ்வு இப்படியொரு அவலத்தில்தான் முடிந்தது. ஆனால் ஜென்னி இறந்த இரண்டு ஆண்டுகளில் மார்க்சும் மடிந்தார் என்பதுதான் மகத்தான சோகம்.
"அன்புதான் ஜென்னி, ஜென்னி என்பது அன்பின் மற்றுமோர் பெயர்" எனவும், "ஜென்னியைப் போல் ஒரு பெண் இல்லையெனில், நான் சாமானியனாகவே இருந்திருப்பேன். அவள் எனக்குக் கிடைத்தது பெரும் பேறு" எனவும் மார்க்ஸ் அஞ்சலிக் கடிதத்தில் குறிப்பிட்டது அவரது பேரன்பின் வெளிப்பாடாகும்.
புரட்சிகர சோசலிசத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார் ஜென்னி. அதற்காகவே மார்க்சுடன் இணைந்து பொதுவுடைமை விழுமியங்களுக்காகத் தன்னை இறுதி வரை அர்ப்பணித்துக் கொண்டார். உலகின் மீது தான் ஏற்படுத்திய தாக்கத்தைக் காணாமலே அவர் மறைந்தார். ஆனால் சுரண்டலற்ற உலகிற்கான போராட்டத்தில் ஜென்னி மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுவார் என்பதில் ஐயம் ஏதும் இல்லை.
- புதுமலர் ஆசிரியர் குழு