award to v arasuபேராசிரியர் வீ.அரசு அவர்கள் பற்றிய விழாக் குறிப்பு- சென்னைப்பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத்துறையின் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள வீ.அரசு அவர்கள் தஞ்சை நகருக்கு அருகில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து தஞ்சையில் பள்ளிக் கல்வியும் கல்லூரிக் கல்வியும் முடித்தவர். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை கற்று உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். பேராசிரியராகவும் தமிழ் இலக்கியத் துறைத் தலைவராகவும் கால் நூற்றாண்டுக்கும் மேல் ஆசிரியப் பணி ஆற்றியவர்.

இவர் வழக்கமான ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியர் அல்லர். கலாநிதி கைலாசபதி,கா. சிவத்தம்பி, பேராசிரியர் நா.வானமாமலை ஆகிய தமிழின் ஆய்வுலக முன்னோடிகளின் வழித்தோன்றலாகத் தன் ஆய்வுப்பாதையைச் சமைத்துக் கொண்டவர். மிகவும் குறிப்பாகச் சொல்வதெனில் பேராசிரியர் கா.சிவத்தம்பியின் அணுக்கத் தோழமையாக அவருடைய இறுதிக் காலம் வரை அவரோடு இணைந்து பணியாற்றியவர்.கா.சிவத்தம்பி அவர்கள் முன்னெடுத்த இலக்கியத்தின் வழி சமூகத்தையும் தமிழ்ச்சமூக வரலாற்றையும் ஆராய்கின்ற பணியை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்தியவர்.

தொகுத்துப் பதிப்பிக்கும் பணியில் இவர் அளவுக்கு உழைப்பைச் செலுத்திய இன்னொருவரைக் காண முடியாது.நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் இவரைப் பற்றிச் சொல்லியிருக்கும் இந்த வார்த்தைகள் அதற்குச் சான்று:

”தோழர் ப. ஜீவானந்தம் நூற்றாண்டு நினைவாக அவரது ஆக்கங்களைத் தொகுத்து ஜீவாவின் ஆக்கங்கள் (2007) என இரண்டு தொகுதிகளை வெளியிட்டோம். இதே நேரத்தில் ஜனசக்தி இதழ்களில் உள்ள தலையங்கங்களைத் (1937--1963) தொகுத்து இரண்டு தொகுதிகள் வெளியிட்டோம். இத்தொகுதிகளைப் பேராசிரியர் வீ. அரசு அவர்களே தொகுத்துப் பதிப்பித்தார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டில் செயல்பட்ட சென்னை இலௌகீக சங்கம் என்னும் அமைப்பின் இதழ்களான 'தத்துவ விவேசினி' மற்றும் அவ்வியக்கத்தின் ஆங்கில இதழான 'The Thinker' ஆகியவற்றில் உள்ள ஆக்கங்களை ஆறு தொகுதிகளாகப் பேராசிரியர் வீ. அரசு பதிப்பித்தார். அந்தத் தொகுதிகளையும் எங்கள் நிறுவனமே வெளியிட்டது (2012). இதே ஆண்டில் அத்திப்பாக்கம் வெங்கடாசலனார் ஆக்கங்கள் திரட்டு என்ற அரிய தொகுப்பு நூலையும் நாங்கள் வெளியிட்டோம்.

 எங்கள் நிறுவனத்தின் மாத இதழான உங்கள் நூலகத்தில் அவ்வப்போது பேராசிரியர் கட்டுரைகளை எழுதி வருகிறார். அந்தக் கட்டுரைகள் சிலவற்றையும் வேறுசில கட்டுரைகளையும் எங்கள் நிறுவனம் வெளியிடும் குறுநூல் வரிசையில் வெளியிட்டிருக்கிறோம். இந்த வகையில் ஏறக்குறைய பதினைந்து குறுநூல்களை வெளி- யிட்டோம். எங்கள் நிறுவனம் வெளியிட இருக்கும் 'அண்ணல் அம்பேத்கர் ஆக்கங்கள் திரட்டு' என்னும் சுமார் எழுபத்திஐந்து தொகுதிகளைப் பதிப்பிக்கும் பணியிலும் பல தோழர்களோடு இணைந்து செயல்பட்டு வருகிறார்.”

இவை மட்டுமன்றி மக்கள் தலைவர் வ.உ.சி.யின் படைப்புகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளார். நூறாண்டுத் தமிழ்ச்சிறுகதைகளையும் புதுமைப்பித்தன் கதைகளையும் தொகுத்து வெளியிட்டுள்ளார். பேரா.வீ.அரசு தொகுத்து வெளியிட்டுள்ள பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் தமிழ்ச் சமூகத்துக்கு அவர் அளித்துள்ள மாபெரும் கொடை என்றே சொல்ல வேண்டும்.

கல்விப்புலத்துக்கு உள்ளேயும் ஊதியத்துக்கு வேலை பார்க்கும் ஒரு பேராசிரியராகத் தன்னைக் குறுக்கிக்கொள்ளாமல் உயர்கல்வியில் தமிழ்ப்பாடத்திட்டத்தில் அறிவியல்பூர்வமான மாற்றங்களைக் கொண்டு வந்தார்.பழமைவாதிகளின் எதிர்ப்பைக்கண்டு அஞ்சாமல் பாடத்திட்டத்தில் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டு வந்தார். ஓர்மைத்தடம் என்கிற நூலில் அவருடைய மாணவர்கள் பதிவு செய்துள்ள நேர்காணல்களில் இவை விரிவாக வெளிப்பட்டுள்ளன.

தன்னுடைய மாணவர்களின் படைப்பாற்றலை வெளிக்கொண்டு வர வேண்டும் என்பதற்காக மேடை என்கிற அமைப்பை உருவாக்கித் தன் மாணவர்கள் தம் படைப்புகளை அரங்கேற்றச்செய்துள்ளார். பத்து ஆண்டுகளில் 70 தொகுப்புகளாக மாணவர் படைப்புகளைக் கொண்டு வந்துள்ளார்.மாற்று வெளி என்கிற ஆய்விதழ் இவரது மாபெரும் பங்களிப்பாகும். ஆங்கிலத்தில் வெளியாகும் “செமினார்” இதழுக்கு இணையாக மாற்றுவெளியைக் கொண்டு வந்தார். ஒவ்வொரு இதழும் ஒரே ஒரு பொருண்மையிலான கட்டுரைகளைத் தாங்கி வரும்படி வந்த அவ்விதழ் தமிழில் முன்னுதாரணம் இல்லாத இதழாகும்.இவர் அளவுக்குத் தன் மாணவர்களை முந்தியிருப்பச் செய்த பேராசிரியரைக் காண்பது அரிது.

இவர் மட்டும் சாதி மறுப்புத் திருமணம் செய்தவராக அல்லாமல் தன்னுடைய 300 மாணவர்களில் 50 பேருக்குமேல் சாதிமறுப்புத் திருமணம் செய்யத் தூண்டுகோலாக இருந்தவர் என்கிற ஒரு உண்மை போதும் இவர் எந்த அளவுக்குப் பேச்சுக்கும் எழுத்துக்கும் சொந்த வாழ்வுக்கும் இடைவெளி இல்லாமல் வாழ்கிறார் என்பதற்கு.

தன் ஓய்வுக்காலப் பணப்பலன்களையெல்லாம் தன்னுடைய வீட்டில் நூலகம் அமைக்கவே செலவிட்டார். முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களைக் கொண்ட அவரது சொந்த நூலகம் இன்று பலருக்கும் பயன்படும் வண்ணம் பராமரிக்கப்பட்டு வருகிறது. ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்துடன் தன்னுடைய நூலகத்தை இணையவழியில் இணைத்துப் பொதுமைப்படுத்தியுள்ளார்.

கல்விப்புலத்துக்கு உள்ளேயே முடங்கிப்போய் விடாமல் பல்வேறு பண்பாட்டு இயக்கங்களுடன் தன்னை இணைத்துக் கொண்டு முற்போக்கான சமூக மாற்றத்துக்காகப் பொதுவெளியில் நடக்கும் போராட்டங்களிலும் தன்னை இணைத்துக் கொள்கிறார்.

இவர் ஆய்வறிஞர்தான். ஆனால் ஆய்வறிஞர் மட்டுமாக இல்லை. அவர் ஆற்றிய கல்விப்புலம் சார்ந்த பணிகள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. அவர் எழுதிய நூல்களை எண்ணிக்கை மிகுதி காரணமாகப் பட்டியலிடாமல் எண்ணிக்கை மட்டும் குறிக்கப்பட்டுள்ளது:

பணி - சென்னைப் பல்கலைக்கழக ஆசிரியர்-29 ஆண்டுகள் (பேராசிரியர்-16 ஆண்டுகள்)

கல்வி, நிருவாகப் பணி - சென்னைப் பல்கலைக்கழகம்

- பேராசிரியர்-தலைவர், தமிழ் இலக்கியத் துறை - 16 ஆண்டுகள் -ஆட்சிக்குழு உறுப்பினர்-3 ஆண்டுகள்

- பேரவை உறுப்பினர்-14 ஆண்டுகள்

கல்விக்குழு உறுப்பினர் - 14 ஆண்டுகள்

- கல்லூரி நிர்வாகக்குழு--3 ஆண்டுகள்

- தலைவர், பாடத் திட்டக்குழு-14 ஆண்டுகள்

- பாட நூல் உருவாக்கும் குழு-3 ஆண்டுகள்

- உயர்கல்வி நிறுவனங்கள் ஆய்வுக்குழு-20 ஆண்டுகள்

 - பாடத்திட்டச் சீரமைப்புக்குழு சிறப்பு அழைப்பாளர்,

- மலேசியப் பல்கலைக்கழகம்-3 ஆண்டுகள்

- பாடத்திட்ட சீரமைப்புக்குழு சிறப்பு அழைப்பாளர்,

- கிழக்குப் பல்கலைக்கழகம்,இலங்கை-3 ஆண்டுகள்

- ஆலோசனைக்குழு, நேஷனல் புக் ட்ரஸ்ட், இந்தியா

- ஆய்வுத் திட்டத் தேர்வாளர், பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு,

புது தில்லி ஆலோசனைக்குழு உறுப்பினர்,

- சாகித்திய அகாதமி ஆலோசனைக்குழு,

- தமிழ்நாடு பாட நூல் நிறுவனம்

ஆய்வு மேற்பார்வை

முனைவர் பட்ட ஆய்வு முடித்தவர்கள்-49

ஆய்வியல் நிறைஞர்(எம்.ஃபில்)-125

வெளியீடுகள் நூல்கள் - 86

(குறு நூல்கள் - 17; பதிப்பு நூல்கள் - 69)

ஆய்வுக் கட்டுரைகள்--121

மெய் நிகர் காணொளி ஆய்வுரைகள்-64

கருத்தரங்குகள், மாநாடுகள் வெளிநாடு-37; இந்தியா-82

பரிசுத் தேர்வுக்குழு உறுப்பினர்

தமிழ்த் தோட்டம்,

கனடா பேரா. செல்வநாயகம் நினைவு விருது, இலங்கை நூல் வெளியீட்டாளர்- விற்பனையாளர் சங்கம், தமிழ்நாடு சாகித்திய அகாதமி, புது தில்லி

கல்விப் பணி தொடர்பாகப் பயணம் செய்த நாடுகள்

மலேசியா, சிங்கப்பூர், செக்கோஸ்லோவாக்கியா, இத்தாலி,

இங்கிலாந்து, கனடா, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, பிரான்சு, டென்மார்க், இரசியா, நெதர்லாந்து, இலங்கை, நேபாளம்.

அறிஞர்கள் மூலம்தான் சமூகத்தின் மனசாட்சி எப்பொழுதும் விழிப்புடன் இருக்கிறது: அத்தகைய அறிஞர்களைப் போற்றும் வண்ணம் உருவாக்கப்பட்டதுதான் "அறிஞர் போற்றும் " எனும் விருது. அறிவுத்தளத்தில் இயங்கும் ஆளுமைகளைப் பாராட்டும் பணியைச் சிரமேற்கொண்டு அவர்களுக்கு விருது வழங்கிவரும் திருச்சி எஸ்.ஆர்.வி. பள்ளியின் சமூக அக்கறை கொண்டாடத் தக்கது. அவ்வகையில் அப்பள்ளியின் சார்பாக 2024 செப்டம்பர் 14-ஆம் நாளன்று பேராசிரியர் வீ.அரசு அவர்களுக்கு "அறிஞர் போற்றுதும்" எனும் விருது வழங்கப்பட்டது.

அப்பொழுது பேராசிரியர் வீ.அரசு அவர்களின் வாழ்நாள் பெரும்பணி குறித்து விரிவாகப் பேசப்பட்டது.

- புதுமலர் ஆசிரியர் குழு

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.