அறிஞராக, பேராசிரியராக, கலைஞராக, ஆராய்ச்சியாளராக, பல்கலைக்கழகத் துணை வேந்தராக சிறந்து விளங்கியவர் பேராசிரியர்  சு. வித்தியானந்தன்.

                VithiyananthanSயாழ்ப்பாணம் லீமன்காமத்து கிராமத்தில் சுப்பிரமணியன் - முத்தம்மா வாழ்விணையருக்கு மகனாக 08.05.1924 அன்று மகனாகப் பிறந்தார். தமது தந்தை நிர்வகித்த லீமன்காமம் தமிழ்ப் பள்ளியில் ஆரம்பக் கல்வி கற்றார். பின்னர் தெல்லிப்பழை ஆங்கிலக் கல்லூரியில் இடைநிலைக் கல்வியை முடித்தார். உயர் கல்வியை யாழ்ப்பாணம் பரி.யோவான் கல்லூரியிலும் இந்துக் கல்லூரியிலும் பயின்று முடித்தார். கொழும்புப் பல்கலைக் கழக மாணவராக 1941 ஆம் ஆண்டு தேர்ச்சியடைந்தார். தமிழ், ஆங்கிலம், லத்தீன், வரலாறு ஆகியப் பாடங்களைக் கற்று, இலண்டன் இடைநிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். துமிழைச் சிறப்புப் பாடமாகத் தேர்ந்தெடுத்து, வரலாற்றைத் துணைப்பாடமாகக் கொண்டு இளங்கலை பட்டப்படிப்பை 1944 ஆம் ஆண்டு முடித்தார். தொடர்ந்து பயின்று தமிழில் 1946 ஆம் ஆண்டு முதுகலைப் பட்டம் பெற்றார். இலங்கைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறையில் உதவி விரிவுரையாளராகப் பணியேற்றார்.

                வித்தியானந்தன் 1948 ஆம் ஆண்டு இலண்டன் சென்று கீழைத்தேயக் கல்விக் கல்லூரியில் (School of Briental studies) தமிழறிஞர் அல்பிரட் மாஸ்டர் (Alfred Master) வழிகாட்டுதலில் ‘பத்துப்பாட்டு’ வரலாற்று, சமூக, மொழியியல் நோக்கு’ என்னும் தலைப்பில் தமது முனைவர் பட்ட ஆய்வினை முடித்தார். இலங்கைத் திரும்பிய பின்னர் இலங்கைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறையில் இணைப் பேராசிரியராகவும், பேராசிரியராகவும் பணிபுரிந்தார்.

                யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தராக 1979 ஆம் ஆண்டு பதவியேற்று 1989 வரை பணிபுரிந்தார். அப்பொழுது விபுலானந்த அடிகள், கலாநிதி கணபதிப்பிள்ளை, பேராசிரியர் செல்வநாயகம் முதலியவர்கள் தமிழ்த்துறையில் பணியாற்றினார்கள்.

                யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றிய போதும், தமிழ்த்துறை மாணவர்களுக்கு தொல்காப்பியம் - சொல்லதிகாரம், சிலப்பதிகாரம், நாச்சியார் திருமொழி, திருக்கோவையார், பாரதி பாடல்கள், தமிழர் பண்பாடு. துமிழ் இலக்கிய வரலாறு ஆகியனவற்றை விரும்பிக் கற்பித்தார். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நன்னூல் இலக்கணத்தை, இவரே கற்பித்தார். “கடினமான இலக்கணத்தைக் கனியாக்கி வழங்குவதிலே அவர் வல்லவர்” என்று பலரும் போற்றிப் புகழ்ந்தனர்.

                தமிழைச் சிறப்புப் பாடமாகக் கற்கும் மாணவர்கள், தமிழருடைய இலக்கியங்களை மாத்திரமல்லாமல், அவர்களுடைய அரசியல், வணிகவியல், கலைகள், கல்வி, சமூக நிலை ஆகியனபற்றி வரலாற்று முறையிலே ஒழுங்கான தரவுகளையும் தகவல்களையும் சேகரித்து கற்பித்தார்.

                தமிழியல் ஆய்வில் ஈடுபட்டும், தமிழ் ஆய்வாளர் பலரை உருவாக்கியும் ஈழத்து தமிழ் ஆய்வு வரலாற்றில் சிறந்த இடத்தை வகித்தார் பேராசிரியர் வித்தியானந்தன். துமிழன் பல்வேறு துறைகளில மிகுந்த ஈடுபாடு கொண்டு பண்டையத் தமிழ் இலக்கியங்களிலும் நவீன தமிழ் இலக்கியங்களிலும் சிறந்து விளங்கினார்.

                பேராசிரியர் வித்தியானந்தன் இலக்கியம் பற்றி எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து 1953 ஆம் ஆண்டு ‘இலக்கியத் தென்றல்’ என்னும் நூல் வெளியிடப்பட்டது. அந்நூல் பல்கலைக்கழக புகுமுக வகுப்பு மாணவர்களுக்கு பயனுடையதாக அமைந்தது.

                பல்கலைக்கழக மலர்களில் இதழ்களில் தமிழ் இலக்கியப் படிப்பு, சோழர் காலத் தமிழிலக்கியம், விசய நகர நாயக்கர் தமிழ் இலக்கியம், பாரதி சபதம், பண்தேய்ந்த மொழியினர் கொண்டேத்தும் கோவலன், இஸ்லாமியர் தமிழிற் பாடிய புதிய பிரபந்த வகைகள் முதலிய ஆய்வுக் கட்டுரைகைளை எழுதியுள்ளார்.

                இவருடைய தமிழ் ஆய்வுக்குச் சிகரம் வைப்பது போல் அமைந்தது ‘தமிழர் சால்பு’ என்னும் நூல். இலண்டன் பல்கலைக் கழகத்தில் இவர் மேற்கொண்ட ஆய்வின் பயனாக ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஆய்வேடு “A Historical Social and Linguistic Study of Pattuppattu” என்பதாகும். இந்நூலை அடிப்படையாகக் கொண்டு ‘இலக்கியத் தென்றல்’ என்னும் நூல் ஆகும்.

                தமிழருடைய கலை, இலக்கியம், மொழி, வரலாறு, சமூகம், அரசியல், பொருளியல், சமயம், நடைமுறைகள் போன்ற பல்வேறு பொருள்கள் குறித்து ஆய்வு செய்யும் கூறாகத் ‘தமிழியல்’ என்னும் ஆய்வுப் பரப்பு அமைந்தது. அத்தகைய ஆய்வுகள் அடங்கிய முன்னோடி நூலாக அமைந்தது பேராசியர் வித்தியானந்தனின் ‘தமிழர் சால்பு’. பண்டைத் தமிழர் வாழ்வியலை இனிமையான தமிழில் இந்நூல் விளக்குகிறது.

                பேராசிரியர் வித்தியானந்தன் 1960 ஆம் ஆண்டு இங்கிலாந்து, யூகோசிலாவியா, அய்க்கிய அமெரிக்கா, ஐப்பான், மலேசியா முதலிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அந்த நாடுகளின் பல்கலைக் கழகங்களில் இவர் ஆய்வுரை நிகழ்த்தினார். இச்சுற்றுப் பயணம் ‘வெளிநாட்டுக் கலைத்தூது’ என தமிழ் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

                மலேசியா, சென்னை, பாரிஸ், யாழ்ப்பாணம், மதுரை ஆகிய இடங்களில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளில் கலந்து கொண்டார். ஊலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் இலங்கைக் கிளையின் தலைவராக இருந்து 1974 ஆம் ஆண்டு பல்வேறு தடைகளுக்கிடையே உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை யாழ்ப்பாணத்தில் சிறப்பாக நடத்தினார்.

                உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் இலங்கைக் கிளை சார்பாக மட்டக்களப்பில் மாவட்ட மாநாட்டை ஒரு வார காலம் நடத்தப்பட்டது. அம்மாநாட்டிற்கு வித்தியானந்தன் தலைமை வகுத்தார். அம்மாநாட்டில் மாநாட்டு மலர் வெளியிடப்பட்டது, மட்டக்களப்பு பகுதியின் வரலாறு, சமூகம், அரசியல், பொருளியல், மொழி, கலை, சமயம் முதலியவைகள் குறித்த ஆய்வுக் கட்டுரைகள் படிக்கப்பட்டன. 1983 ஆம் ஆண்டு முல்லைத் தீவில் மாவட்ட உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டையும் சிறப்புற நடத்தினார். 

இறுதிக்காலத்தில் கொழும்பிலே தங்கிய அவர், சனவரி 21, 1989 இல் மறைந்தார்.

- பி.தயாளன்

Pin It