இலாபத்தையே தமது ஒரே இலக்காகக் கொண்டு இயங்கி வரும் முதலாளிய உற்பத்திமுறை உழைக்கும் மக்களை ஓட்டச் சுரண்டி அவர்களை அழித்து வருவதோடு மட்டுமல்லாமல், இந்தப் புவிக்கோளத்தின் இயற்கை வளங்களையும் வேகமாக அழித்து வருகிறது. இயற்கை வளங்களை அழிப்பதன் மூலம் மனித குலத்தின் வாழ்வாதாரங்களை அழித்து வருகிறது; மனித குலத்தின் அழிவுக்கு வழி வகுத்துள்ளது. மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையில் உள்ள உறவைப் புரிந்து கொள்ளாத ஒரு சமூகம் இயற்கையை அழிப்பதன் மூலம் இறுதியில் தன்னையே அழித்துக் கொள்ளும் என்பதுதான் உண்மை. மனிதன் இயற்கையின் ஒரு பகுதி

இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையில் உள்ள உறவைப் புரிந்து கொள்வதன் மூலமே இந்தப் புவிக் கோளத்தைக் காப்பாற்ற முடியும். இந்தப் புரிதலுக்கான ஆழமான அடித்தளத்தை மார்க்ஸ் வழங்கியுள்ளார், அவர் தன்னுடைய ‘பொருளாதார மற்றும் தத்துவக் குறிப்பேட்டில்’ மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையில் உள்ள உறவைப் பின் வருமாறு குறிப்பிடுகிறார்:

“இயற்கையே மனிதனின் உடலாக இல்லாவிட்டாலும் அது மனிதனின் அனங்கக உடலாக உள்ளது. மனிதன் இயற்கையினால் வாழ்கிறான் - அதாவது இயற்கை அவனது உடல். அவன் இறக்காமலிருக்க வேண்டுமானால் அதனுடன் தொடர்ந்த பரிமாற்றத்தில் இருக்க வேண்டும். மனிதனின் உடல் மற்றும் மனம் சார்ந்த வாழ்வு இயற்கையுடன் இணைந்துள்ளது என்பதன் பொருள் இயற்கை தன்னுடனேயே இணைந்துள்ளது என்பதாகும். ஏனெனில் மனிதன் இயற்கையின் ஒரு பகுதி” என்கிறார் மார்க்ஸ். (Economic and Philosophical Manuscript 1844 p.72-73)

அதாவது இயற்கை என்பது மனிதனிலிருந்து தனித்துப் பிரிந்து இருக்கவில்லை. இயற்கையின் பரிணாம வளர்ச்சியின் மூலம் தோன்றியவன் மனிதன். அவன் இயற்கையின் ஓர் அங்கம். இயற்கை அவனுடைய வாழ்வின் ஒரு பகுதி. இயற்கை அவனுக்கு உணவையும் உடையையும் வழங்குகிறது. மனிதனின் இருப்பிடம் போன்ற பிற தேவைகளுக்கான அனைத்துப் பொருள்களையும் உற்பத்தி செய்வதற்கு மூலாதாரமாகவும் இயற்கைதான் இருக்கிறது. அவற்றை உற்பத்தி செய்வதற்கான கருவிகளைத் தயாரிப்பதற்கான மூலப் பொருள்களையும் இயற்கையே வழங்குகிறது. உலகிலுள்ள பொருள்கள் அனைத்திற்கும் அடிப்படையாக இருப்பது இயற்கையும், அவற்றை உற்பத்தி செய்த உழைப்பும்தான். மனிதனின் உழைப்பு சக்தி கூட இயற்கையின் வெளிப்பாடுதான். உழைப்பு இயற்கையைச் சார்ந்திருக்கிறது. எனவே மனித வாழ்வையும் இயற்கையையும் பிரிக்க முடியாது. இதைப் புரிந்து கொள்ளாமல் இயற்கையை, அதன் விதிகளைப் புரிந்து கொள்ளாமல், மனிதன் தன்னுடைய சுயநலத்திற்காக, இலாபத்திற்காக அழிக்க நினைத்தால் இறுதியில் அவனும் அழிந்து விடுவான் என்பதுதான் மார்க்ஸ் கூறுவதன் சாராம்சமாகும்.

இதை வலியுறுத்தும் விதமாக, மார்க்சின் உயிர்த் தோழரும் மார்க்சியத்தின் மூல ஆசான்களில் ஒருவருமான ஏங்கல்ஸ் புகழ் பெற்ற அவருடைய ‘இயற்கையின் இயங்கியல்’ என்ற நூலில் கூறுவதைப் பார்ப்போம்:

“இயற்கையின் மீது நாம் பெற்ற வெற்றி பற்றி அதிகம் தம்பட்டமடித்துக் கொள்ளக் கூடாது. அத்தகைய ஒவ்வொரு வெற்றிக்கும் இயற்கை நம்மைப் பழி வாங்கியுள்ளது. ஒவ்வொரு வெற்றியும் ஆரம்பத்தில் நாம் எதிர்பார்த்த பலனைக் கொடுக்கக் கூடியதாகவே உள்ளது. ஆனால் அடுத்தடுத்த நாம் எதிர்பாராத நிகழ்ச்சிகளினால் முதலில் கிடைத்த பயன் கிடைக்காமல் போய் விடுகிறது. மெசபட்டோமியா, கிரீஸ், ஆசியா மைனர் ஆகிய பகுதிகளிலிருந்த மக்கள் விவசாயம் செய்வதற்காக வனங்களை அழித்தார்கள். அவ்வாறு செய்யும்போது அதனோடு சேர்த்து அவர்கள் நீர்த் தேக்கங்களையும் அழித்தார்கள் என்பதையும், அந்த நாடுகளின் இன்றைய கவலைக்கிடமான நிலைமைக்கு வழி வகுத்தார்கள் என்பதையும் அறியவில்லை. இத்தாலியர்கள் ஆல்ப்ஸ் மலையின் தென் சரிவுகளில் பைன் மரக் காடுகளை அழித்தபோது அவர்கள் பகுதியில் பால் பண்ணைத் தொழிலின் ஆணி வேரை அறுத்தார்கள் என்பதை அறியவில்லை; மலைச் சுனைகளில் உள்ள நீர் வற்றி விடும் என்பதை அவர்கள் அறியவில்லை; மழைக் காலங்களில் சமவெளிகளில் கடுமையான மழைக்கு ஆளாவார்கள் என்பதை அறியவில்லை. ஐரோப்பாவில் உருளைக்கிழங்கு பயிரிடுதலைப் பரப்பியவர்கள் ‘கண்டமாலை’ என்னும் நோயையும் பரப்பினார்கள் என்பதை அறியவில்லை. இவ்வாறு ஒவ்வொரு நடவடிக்கையிலும் நமக்கு நினைவூட்டப்படுவது அந்நியநாட்டு மக்களை வென்றவரைப் போலவோ, இயற்கைக்கு வெளியே நிற்கும் ஒருவரைப் போலவோ நாம் இயற்கையை ஆள முடியாது, நாம் சதையாலும் இரத்தத்தாலும் மூளையாலும் இயற்கையைச் சார்ந்தவர்கள், நாம் அதன் மத்தியில் வாழுகிறோம். இயற்கையின் விதிகளைக் கற்பதிலும், அவற்றைச் சரியாகக் கையாளுவதிலும் பிற உயிரினங்கள் பெறாத சாதகமான அம்சத்தை நாம் பெற்றிருப்பதில்தான் நமது சிறப்பு அடங்கியுள்ளது.” (Dialectics of Nature, p.180) என்கிறார் ஏங்கல்ஸ்.

இயற்கையின் விதிகளைப் புரிந்து கொள்ளாமல் தனது நலன் ஒன்றையே இலக்காகக் கொண்டு செயல்படும் மனிதர்கள் எவ்வாறு கொடும் துயரங்களுக்கு ஆளாவார்கள் என்பதை இன்று நாம் சென்னையில் வாழுகின்ற மக்களின் நிலைமையைப் பார்த்துப் புரிந்து கொள்ளலாம். ஏரிகளாகவும் குளங்களாகவும் இருந்த பகுதிகளில் குடியிருப்புகளை உருவாக்கிக் கொண்ட மக்கள் இன்று ஆண்டுதோறும் ஒவ்வொரு மழைக் காலங்களிலும் படும் அவதி கொஞ்சம் நஞ்சமல்ல. ஆண்டு தோறும் பல நூறு கோடி ரூபாய்களை வெள்ளச் சேதத்தால் அவர்கள் இழந்து வருகின்றனர். ஒவ்வொரு மழைக் காலமும் அவர்களுக்கு கொடூரமான அனுபவங்களைத் தரும் காலமாக உள்ளது.

ஒரு காலத்தில் நொய்யல் ஆற்றுப் பகுதி பெரும் வளம் கொண்ட, நெல் விளையும் பூமியாக இருந்தது. சங்க காலத்தில் அயல்நாடுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்த கொடுமணல் என்ற நகரம் இப்பகுதியில்தான் அமைந்திருந்தது. இன்று நொய்யல் ஆறு தொழிற்சாலைக் கழிவுகளால் விசமாக்கப்பட்டுள்ளது; அந்த ஆற்று நீரை மக்களும் கால் நடைகளும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திருப்பூர் பின்னலாடைத் தொழில் முதலாளிகளின் இலாப வெறி நொய்யல் ஆற்றுக்குச் சாவு மணி அடித்துள்ளது.

உயிர்ப்பொருளாக்கச் செயல்பாட்டில் ஏற்படும் பிளவு (Metabolic Rift)

இலாப நோக்கத்தையே அடிப்படையாகக் கொண்டு இயங்கி வரும் முதலாளிய உற்பத்திமுறை இயற்கை மீதும் மனித குலத்தின் மீதும் ஏற்படுத்தி வரும் பேரழிவுகள் பற்றி மார்க்ஸ் தனது உலகப் புகழ் பெற்ற மூலதனம் நூலில் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பே கூறியுள்ளார். அந்தக் காலகட்டத்தில் முதலாளியம் தனது இளமைப் பருவத்தில் இருந்தது. முதலாளியம் உலகு தழுவிய அளவில் வளராத காலகட்டம் அது. இப்பொழுது உள்ள அளவுக்கு இயற்கை மீது முதலாளியம் பேரழிவுகளை ஏற்படுத்தாத காலம் அது. இருப்பினும் முதலாளியம் உலகு தழுவிய அளவில் வளரும் என்றும், அது தனது இலாப வேட்டைக்காக உலகு தழுவிய அளவில் இயற்கையின் மீது பேரழிவுகளை நிகழ்த்தும் என்றும் அவர் முன்னுரைத்தார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் முதலாளிய உற்பத்திமுறை விவசாயத்தின் மீதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சாகுபடிக்குப் பயன்படும் மண் தன் வளத்தை இழக்க வேண்டிய சூழலைத் தொழில்துறை வளர்ச்சி ஏற்படுத்தியது. மனிதனுக்கும் மண்ணுக்கும் இடையில் இருந்து வந்த உயிரோட்டமான உறவை அது தகர்த்தது. அது பற்றி மார்க்ஸ் கூறும்போது, “முதலாளிய உற்பத்தி பெரிய மையங்களில் மக்களைக் குவித்து நகர மக்களின் எண்ணிகையை அதிகரிக்கிறது.; அதன் மூலம் ஒரு பக்கம் சமூகத்தின் வரலாற்று உந்து சக்தியை ஒன்று குவிக்கிறது.; இன்னொரு பக்கம் மனிதனுக்கும் மண்ணுக்கும் இடையே உள்ள உயிரோட்டத்தைக் குலைக்கிறது. அதாவது, மனிதனுக்கு உணவையும் உடையையும் வழங்கும் மண் அதற்குரிய மாற்றைப் பெறாமல் தடுக்கப்படுகிறது; அதன் மூலம் மண்ணின் நிலையான வளத்திற்குத் தேவையான நிபந்தனைகளை மீறுகிறது. அதே சமயத்தில் உழைக்கும் நகர்ப்புற மக்களின் உடல் நலத்தையும், கிராமப்புற மக்களின் அறிவார்ந்த வாழ்க்கையையும் அழிக்கிறது. (Capital,vol.1 p.474) என்கிறார்.

முதலாளிய உற்பத்திமுறையில் நகரங்களில்  பெரும் தொழிற்சாலைளைச் சுற்றிலும் உழைப்புக்காக மக்கள் ஒன்று குவிக்கப்படுகின்றனர். கிராமங்களிலிருந்து மக்கள் பெரும் அளவில் நகரங்களுக்குப் புலம் பெயர்வதால் கிராமத்தில் மனிதனுக்கும் மண்ணுக்கும் இடையில் இருந்த உயிரோட்டமான உறவு அறுபடுகிறது. உணவுப் பொருட்கள், உடைகள் தயாரிக்கத் தேவையான பருத்தி போன்ற பொருட்கள் கிராமங்களில் உள்ள விளை நிலத்தில் உற்பத்தி செய்யப்பட்டு நகரங்களில் குவிந்துள்ள மக்களின் தேவைக்காகவும், தொழிற்சாலைகளில் தேவைப்படும் மூலப் பொருட்களுக்காகவும் எடுத்துச் செல்லப்படுகின்றன. அவை மண்ணின் ஊட்டச் சத்துகளால் உருவாக்கப்பட்டவை. எனவே அந்தப் பொருட்களின் வடிவில் மண்ணின் வளமும் நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு அவை மனிதர்களின் நுகர்வுக்குப் பிறகு கழிவுகளாக மாற்றம் பெறுகின்றன. அவை கிராமங்களில் உள்ள மண்ணுக்குத் திரும்புவதில்லை. அதனால் மண்ணின் வளம் தொடர்ந்து கொள்ளையடிக்கப்படுகிறது. மண் வளம் இழக்கிறது. மலடாகிறது. இன்னொரு புறமோ மனிதனின் கழிவுகள் நகரங்களை அசுத்தமாக்குகின்றன. நகரக் கழிவுகள் நகரங்களை ஒட்டிய பகுதிகளில் மலை போலக் குவிக்கப்பட்டுச் சுற்றுப் புறத்தையும் வாழ்விடங்களையும் காற்றையும் துர்நாற்றம் எடுக்க வைக்கின்றன. நோய்களைப் பரப்பி வருகின்றன. நீர் நிலைகளையும் சாக்கடைகளாக மாற்றுகின்றன. பொதுவாக நகர வாழ்க்கையை நரகமாக மாற்றுகின்றன.

இங்கிலாந்தில் இந்த நிலையைப் பற்றி மார்க்ஸ், “இலண்டனில் மாபெரும் செலவில் 45 இலட்சம் மக்களால் உற்பத்தியான கழிவுகளைக் கொண்டு தேம்ஸ் நதியை அசுத்தப்படுத்தியதைத் தவிர சிறப்பாக எதையும் அவர்கள் செய்யவில்லை” எனக் கூறுகிறார்.

மேலும் ஏங்கல்ஸ் இது பற்றி, “இலண்டனில் மட்டும், ஆங்கில இன மரபினரின் ஆட்சிப் பகுதி முழுவதும் உற்பத்தி செய்யப்படுகிற உரங்களின் அளவை விட அதிக அளவிலான கழிவு பெரும் செலவுடன் கடலில் ஒவ்வொரு நாளும் கொட்டப்படுகிறது” எனத் தனது ‘குடியிருப்புப் பிரச்சினை’ என்னும் நூலில் குறிப்பிடுகிறார்.

மார்க்ஸ் இயற்கைக்கும் மனிதனுக்கும் உள்ள உறவை பிரிக்க முடியாத ஒரே அங்கத்தின் உறவாகப் பார்க்கிறார். அதை ஓர் உயிர், தான் வாழ்வதற்கு அவசியமான உயிர்ப்பொருளாக்கச் செயல்பாட்டுடன் (Metabolism) சமப்படுத்துகிறார். இயற்கை- யிலிருந்து மனிதன் பிரியும்போது உயிர்ப்பொருளாக்கச் செயல்பாட்டில் பிளவு (Metabolic Rift) ஏற்படுவதாகக் கூறுகிறார். முதலாளிய உற்பத்தி முறையில் இயற்கையிலிருந்து மனிதன் பிரிக்கப்படும்போது உயிர்ப்பொருளாக்கச் செயல்பாட்டில் பிளவு ஏற்பட்டு எவ்வாறு ஒரு பக்கம் சாகுபடி நிலம் மலடாக்கப்படுகிறது என்பதையும் இன்னொரு பக்கம் நகரங்கள் கழிவுப் பொருள்கள் நிரம்பியதாய், மனிதர்கள் ஆரோக்கியமற்றவர்களாக மாற்றப்படுகிறார்கள் என்பதையும் விளக்குகிறார்.

நகரத்திற்கும் கிராமத்திற்கும் இடையிலான பிளவை மார்க்ஸ் உலகு தழுவிய அளவில் பார்த்தார். ஏகாதிபத்திய நாடுகள் குடியேற்ற நாடுகளின் மண்ணையையும் மூல வளங்களையும் தம்முடைய தொழில்மயமாக்கலுக்காக கொள்ளையடித்தன. “மாபெரும் பிரிட்டன் அனைத்து நாடுகளிலும் அவற்றின் வளங்களைக் கொள்ளையடிக்கிறது” என்றார் மார்க்ஸ்.

இன்றும் நமது நாட்டிலிருந்து நமது மண் வளமும் நீர் வளமும் உணவுப் பொருட்கள் வடிவிலும் ஆடைகள் வடிவிலும் கனிமப் பொருட்கள் வடிவிலும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதைப் பார்க்கிறோம்.

முதலாளிய உற்பத்திமுறை மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையில் பெரும் பிளவை ஏற்படுத்தி உள்ளதால், உயிரின வாழ்வுச் சூழலைக் காத்துப் பேணுவது என்பது இந்த உற்பத்தி நீடிக்கும் வரையிலும் வெறும் கனவாகவே இருக்க முடியும். இயற்கைக்கும் மனிதனுக்கும் இது அழிவையே தரும். இதைத்தான் மார்க்ஸ், “முதலாளிய வேளாண்மை முன்னேற்றம் என்பது தொழிலாளியைக் கொள்ளையடிக்கும் கலையில் ஏற்பட்ட முன்னேற்றம் மட்டுமல்ல; கூடவே மண்ணைக் கொள்ளையடிக்கும் கலையில் ஏற்பட்ட முன்னேற்றம் கூட... தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித்திறனை மட்டும் வளர்ச்சியுறச் செய்யும் முதலாளிய உற்பத்தி அதே சமயத்தில் அனைத்துச் செல்வங்களுக்கும் உண்மையான ஆதாரமாக இருக்கும் மண்ணையையும் தொழிலாளியையும் அழிக்கிறது.” என்கிறார்.

எனவே இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையில் உள்ள “உயிரோட்டமான உறவை ஓர் அமைப்பாக, சமூகப் பொருளுற்பத்தி முறையை ஒழுங்குபடுத்தும் விதியாக மனித இனத்தின் முழு வளர்ச்சிக்குப் பொருத்தமான வடிவில் மீட்டமைப்பது மிகவும் அவசியமானது” என மார்க்ஸ் கூறுகிறார்.

இலாப அடிப்படையில் அமைந்த உற்பத்திமுறையும் இயற்கைப் பேரழிவும் சூழல் பேரழிவுக்கும் இயற்கையின் பேரழிவுக்கும் அடிப்படையாக இருப்பது முதலாளிய உற்பத்திமுறைதான். மக்களின் தேவைக்காக அது உற்பத்தி செய்வதில்லை. தனது இலாபத்தை இலக்காகக் கொண்டே அது உற்பத்தி செய்கிறது. நுகர்வுக் கலாச்சாரத்தைப் பரப்புவது, செயற்கையான தேவைகளை உருவாக்குவது ஆகியவற்றின் மூலம் தனது சந்தையை விரிவுபடுத்தி இலாபம் சம்பாதித்து வருகிறது முதலாளியம்; அது ஏற்கனவே பயன்பாட்டிலுள்ள பொருள்களில் சிறிய சிறிய மாற்றங்களைச் செய்து தொடர்ந்து சந்தையில் புதிய புதிய பொருள்களை நிரப்புவதன் மூலம் தனது இலாபத்தைப் பெருக்கி வருகிறது; எடுத்துக்காட்டிற்கு அலை பேசிகள், தொலைக்காட்சிப் பேட்டிகள், மகிழுந்துகள், குளிர் சாதனப் பேட்டிகள், துணி துவைக்கும் இயந்திரங்கள் ஆகியவற்றைக் கூறலாம். அதனால் பொருள்கள் அவற்றின் பயன்பாட்டுக் காலம் முடிவடைவதற்கு முன்பே கழிக்கப்படுவதும், வீணாக்கப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகின்றன. அவற்றின் மூலப் பொருள்களுக்காக இயற்கை பெரும் அளவுக்கு நாள்தோறும் அழிக்கப்பட்டு வருகிறது.

மேலும் ஒவ்வொரு முதலாளிய அரசுக்கும் தனது நாட்டு முதலாளிகளுக்கான சந்தையைத் தக்க வைத்துக் கொள்ளவும், புதிய சந்தைகளைக் கைப்பற்றவும் பெரும் இராணுவக் கட்டமைப்பு தேவைப்படுகிறது. இராணுவத் தளவாடங்கள், போர் விமானங்கள், போர் ஆயுதங்கள் போன்றவற்றிற்காக ஆண்டு தோறும் இலட்சக்கணக்கான கோடி ரூபாய்களை அரசுகள் செலவழித்து வருகின்றன. அவற்றிற்குத் தேவையான மூலப் பொருள்களுக்காக இயற்கை பெரும் அளவு அழிக்கப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் சமூகத்திற்குத் தேவையற்ற வீணடிப்புகள். இன்று இராணுவத் தளவாடங்கள் உற்பத்தி தொழில்துறையுடன் இணைந்து இலாப நோக்கத்திற்கான உற்பத்தியாக மாறிவிட்டது. எனவே இராணுவத் தளவாடங்களை விற்று இலாபம் சம்பாதிக்க வேண்டியது உற்பத்தி தொடர்ந்து நடைபெறுவதற்கு அவசியமாகி விட்டது. எனவே ஆயுத விற்பனைக்காக போர்கள் நடை பெறவேண்டியது அவசியமாகி விட்டது. அதனால் போரின் மூலம் உலகெங்கும் முதலாளியம் இலட்சக்கணக்கான மக்களையும் கொன்று குவித்து வருகிறது. இன்று நடை பெற்று வரும் பாலஸ்தீன மக்களின் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு யுத்தம் மற்றும் இரசியா -உக்ரைன் யுத்தம் ஆகியவை இராணுவத் தளவாடங்கள் தயாரிக்கும் அமெரிக்க, ஐரோப்பா முதலாளிகளின் இலாபத்தைப் பன்மடங்கு பெருக்கியுள்ளன என்பதைக் கவனிக்க வேண்டும். இந்திய முதலாளிகளும் இந்தப் போரில் இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனை செய்வதன் மூலம் இலாபம் அடித்து வருகின்றனர். கடந்த பத்தாண்டுகளில் மட்டும் இந்தியாவின் ஆயுத ஏற்றுமதி 30 மடங்கு அதிகரித்துள்ளதாக ஒரு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

போர்களுக்குத் தேவைப்படும் ஆயுதங்களை விற்பனை செய்வதன் மூலம் பெரும் இலாபத்தைக் கொள்ளையடிக்கும் முதலாளியம் போரின் முடிவுக்குப் பிறகு மறு கட்டமைப்பு என்ற பெயரில் தமது பொருள்களை விற்று அதிலும் பெரும் இலாபத்தைப் பார்க்கின்றது.

இவ்வாறு முதலாளியம் தனது இலாப நோக்கத்திற்காக இயற்கையைப் பேரழிவுக்கு உட்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மனித குலத்தையும் அழித்து வருகிறது.

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த இலாபம் தடையாக இருக்கிறது. தனது இலாப நோக்கத்திற்காக இயற்கையைப் பாழ்படுத்தி வரும் முதலாளிகள் அத்தகைய பேரழிவு வராமல் தடுப்பதற்கான தொழில் நுட்பங்கள் இருந்தபோதும் அவற்றைப் பயன்படுத்தத் தயாராக இல்லை. ஏனென்றால் அதற்காகச் செலவிடும் தொகை தனது இலாபத்தைக் குறைக்கும் எனக் கருதுகின்றார். எடுத்துக்காட்டாக, தோல் பதனிடும் தொழிற்சாலைகளும் சாயப் பட்டறைகளும் தாம் வெளியேற்றும் கழிவு நீரைச் சுத்திகரிக்க முடியும். சுத்திகரிக்கப்பட்ட நீரை அவை மீண்டும் மறு சுழற்சி மூலம் பயன்படுத்த முடியும். ஆனால் நீரைச் சுத்திகரிப்பதற்காக அவை கூடுதலாகச் செலவு செய்ய வேண்டும். அது அவர்களுடைய இலாபத்தில் குறைவை ஏற்படுத்தும். அதன் காரணமாக கழிவு நீரைச் சுத்திகரிக்காமல் பக்கத்தில் உள்ள ஆறுகளிலும் நீர் நிலைகளிலும் அப்படியே திறந்து விடுகின்றனர். அது ஆற்று நீரை மனிதர்களும் கால் நடைகளும் பயன்படுத்த முடியாத அளவுக்குக் கெடுக்கிறது. அந்தத் தொழிற்சாலைகளுக்குப் பக்கத்தில் உள்ள நீர் நிலைகளையும் நிலத்தையும் கெடுக்கிறது. ஒரு பக்கம் முதலாளிகள் இலாபம் பெறுகின்றனர். இன்னொரு பக்கம் அந்தத் தொழிற்சாலைகளால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கும், துயரங்களுக்கும் மக்கள் ஆளாகின்றனர். சக்கடைகளாக மாறி- விட்ட ஆறுகளைத் தூய்மைப்படுத்தும் பொறுப்பை முதலாளிகள் அரசாங்கத்தின் தலையில் கட்டி விடுகின்றனர். மக்களின் வரிப்பணத்திலிருந்து அரசாங்கம் அந்தப் பணியைச் செய்ய வேண்டும். முதலாளிகளுக்கு இலாபம், மக்களுக்கு வரிச் சுமை.

இயற்கையின் பேரழிவு பற்றி முதலாளிய வர்க்கம் ஒரு சிறிதும் கவலைப்படுவதில்லை. இன்று கார்பன் டை ஆக்சைடு, மீதேன், குளோரோப்ளுரோகார்பன் போன்ற பசுமைக் குடில் வாயுக்களின் அதிக அளவு வெளியேற்றத்தாலும் அமேசான் வனங்கள் போன்ற பெரும் காடுகளை அழிப்பதாலும் இந்தப் புவிக்கோளம் வெப்பமடைந்து வருகிறது. மனிதர்களும் பிற உயிரினங்களும் உயிர் வாழமுடியாத ஒரு கோளமாக இந்தப் பூமி மாற்றப்பட்டுள்ளது. ஆனால் முதலாளிய வர்க்கமோ அதைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் மூலதனத்தைத் திரட்டல், இலாபம் குவித்தல் என்பதிலேயே குறியாக இருந்து வருகிறது.

பூமி வெப்பம் அடைவது குறித்தும் பருவநிலை மாற்றம் குறித்தும் இதுவரையிலும் உலகளவில் 29 மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன. ஆனாலும் இது வரையிலும் எந்தவிதமான பருண்மையான முன்னேற்றத்தையும் நம்பிக்கைக்குரிய நடவடிக்கையையும் இந்த நாடுகள் மேற்கொள்ளவில்லை. அண்மையில் அஜர்பைஜானில் பாகு என்ற இடத்தில் நவம்பர் 11 முதல் 22 வரையிலும் நடந்த பருவநிலை மாற்றம் பற்றிய மாநாட்டில், புதை படிவ எரிபொருளின்  பயன்பாட்டைக் குறைக்கவும், சூரிய ஆற்றல், காற்றாலை போன்ற புதுப்பிக்கும் ஆற்றலுக்கான புதிய தொழில் நுட்பத்திற்காகவும் வளர்ச்சியுற்ற முதலாளிய நாடுகள் ஆண்டுக்கு 1.3 இலட்சம் கோடி டாலர்கள் மான்யமாகவும் கடனாகவும் பிற நாடுகளுக்கு வழங்க வேண்டும் என்று கோரின. ஆனால் வளர்ச்சியுற்ற முதலாளிய நாடுகளோ 30,000 கோடி டாலர்களை மட்டுமே வழங்க முடியும் என்றும், அதையும் 2035 லிருந்தே வழங்க முடியும் என்று கை விரித்து விட்டன. முதலாளிய வர்க்கத்திற்கு இலாபம்தான் குறியே தவிர இயற்கையைக் காத்துப்பேண வேண்டும் என்பதோ மக்கள் நல்வாழ்வோ நோக்கமல்ல.

வரம்பற்ற நுகர்வா? இயல்பான தேவையா?

முதலாளியம் வளர்ச்சியை இலாபத்தின் அடிப்படையில்தான் பார்க்கிறது. ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அதைப் பொறுத்த வரையிலும் உள்நாட்டில் பொருள் உற்பத்தியும் அதில் கிடைக்கும் இலாப விகிதமும்தான்; எவ்வளவு அதிகமாகப் பொருள்களை விற்க முடியுமோ அந்த அளவுக்கு இலாபம் பெருகும். எனவே அது மக்களை நுகர்வோர்களாக மட்டுமே பார்க்கிறது. மென்மேலும் பொருள்களை விற்க அது செயற்கையான தேவைகளை உருவாக்குகிறது. வரம்பற்ற நுகர்வை மக்களிடம் உருவாக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது. ஒவ்வொரு நுகர்வுப் பொருளிலும் சிறு சிறு மாற்றங்களைத் தொடர்ந்து ஏற்படுத்தி அதன் மூலம் புதிய புதிய தேவைகளை உருவாக்கி வருகிறது. மித மிஞ்சிய நுகர்வே செல்வத்தின் அடையாளம், நாகரிக மனிதனின் அடையாளம் போன்ற சமூக மதிப்பீடுகளை உருவாக்கித் தனது சந்தையைத் தொடர்ந்து விரிவுபடுத்திக் கொண்டு வருகிறது. அதே சமயத்தில் அந்தப் பொருள்களை உற்பத்தி செய்வதற்குத் தேவையான மூலப் பொருள்களுக்காக இயற்கை வளம் வெகு வேகமாக அழிக்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் முதலாளிய இலாப வெறி நாம் வாழும் பூமியை வாழத் தகுதியற்றதாக மாற்றி வருகிறது.

ஆனால் மார்க்ஸ் மனிதனின் வரம்பற்ற நுகர்வுக்காக பூமியின் வளத்தை அழிப்பதைக் கடுமையாக விமர்சிக்கிறார். “ஒரு முழுமையான சமூகமோ, ஒரு நாடோ அல்லது ஒரே சமயத்தில் நிலவுகின்ற அனைத்து சமூகங்களின் ஒட்டுமொத்தமோ புவியின் உடைமையாளர்கள் அல்ல. அவர்கள் வெறுமனே புவியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள், அதனால் பயனடைபவர்கள். அவர்கள் நல்ல குடும்பத் தலைவர்களைப் போல மேம்படுத்தப்பட நிலையில் அதை அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்ல வேண்டும்” என்கிறார்.

மார்க்ஸ் புவிக் கோளத்தைக் காத்துப்பேணுவதோடு மட்டுமல்லாமல், அதை மேம்படுத்தவும் வேண்டும் என்கிறார். வரம்பற்ற நுகர்வால் இந்தப் பூமியைக் காத்துப்பேணமுடியாது. எனவே வரம்பற்ற நுகர்வுக்கு முடிவு கட்ட வேண்டும். மனிதனின் இயல்பான தேவைகளுக்கு மட்டுமே பூமியின் வளத்தைப் பயன்படுத்த வேண்டும் என்கிறார் மார்க்ஸ்.

மார்க்சுக்கு மிகவும் பிடித்த, அவர் தனது முனைவர் பட்டத்திற்காக ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட கிரேக்கத் தத்துவ அறிஞர் எபிக்கூரசின் கருத்தை வலியுறுத்துவது இங்கு அவசியம். “இயல்பாகத் தேவைப்படும் வளத்தின் அளவு குறைவானதும் எளிதில் அடையப்படக் கூடியதும் ஆகும். செயற்கையான கற்பனைகளால் தேவைப்படும் வளத்தின் அளவிற்கு எல்லையே இல்லை.”

மார்க்சின் கருத்தும் இயல்பான தேவைகளை நிறைவு செய்யும் நுகர்வுதான். முதலாளிய இலாப வேட்டைக்காக செயற்கையாக உருவாக்கப்படும் நுகர்வு வெறி அல்ல.

முதலாளி என்பவன் மூலதனத்தின் ஆளுருவம் என்கிறார் மார்க்ஸ். மூலதனம்தான் முதலாளியை இயக்கி வருகிறது, ஆட்டிப் படைத்து வருகிறது. மூலதனம் ஒவ்வொரு நிமிடமும் இலாபத்தைப் பெருக்கித் தன்னை வளர்க்கச் சொல்லி முதலாளியை ஆட்டிப் படைத்து வருகிறது. மூலதனத்தைப் பெருக்குவதற்காகவே கடுமையான போட்டியில் முதலாளியம் மனித உழைப்பைக் கடுமையாகச் சுரண்டுகிறது. இயற்கையைப் பேரளவில் அழித்து வருகிறது. இவ்வாறு மனிதனையும் இயற்கையையும் அழித்து வரும் முதலாளிய உற்பத்தி முறையை வீழ்த்தாமல் மனித குலத்தையும் இயற்கையையும் காப்பாற்ற முடியாது. இதைத்தான் மார்க்சியம் கூறுகிறது.

உதவிய நூல்கள்:

(1) Karl Marx, Economic and Philosophical Manuscript of 1844, Progress Publishers, 1977.
(2) Karl Mrax, Capital vol.1,Progress Publishers, 1986
(3) Engels, Dialaectis of Nature, Prigress publishers, 1986

(4) ஜான் பெல்லமி ஃபாஸ்டர், மார்க்சும் சூழலியலும். தமிழில்:மு.வசந்தகுமார், விடியல் பதிப்பகம், கோவை. 2012

- மு.வசந்தகுமார்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.