சென்ற வாரத்திற்கு முந்திய வாரம் தோழர் சிங்காரவேலு அவர்களால் ஒரு வியாசம் எழுதப்பட்டிருந்ததை நேயர்கள் அறிந்திருப்பார்கள். அதற்கு நாம் ஒரு சமாதானம் எழுதியிருக்கவேண்டும். ஆனால் பிறகு பார்த்துக் கொள்ளுவோம் என்று சற்று அசதியாக இருந்துவிட்டோம். இதற்குள் மற்றொரு வியாசம் தோழர் பொன்னம்பலம் அவர்களால் எழுதப்பட்டு இவ்வாரம் மற்றொரு பக்கம் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.

ஆகவே மேற்கண்ட இரண்டு வியாசத்தைப்பற்றியும் இவ்வாரம் நமத பிப்பிராயத்தை எழுதலாம் என்று கருதி இத்தலையங்கம் எழுதுகிறோம்.

தோழர் சிங்காரவேலுக்கு

தோழர் சிங்காரவேலு அவர்களின் வியாசத்தின் கருத்தைச் சுருக்க மாகக் கூறவேண்டுமானால், “சமதர்மவாதி அல்லாதவர்களையும் சம யோசிதமாய் பேசுபவர்களையும், மேல் பூச்சுக்கு அனுகூலமாய் முகம் துடைக்கப் பேசுகின்றவர்களையும் நம் இயக்கத்தோடு சம்மந்தம் வைத்துக் கொள்ள இடங்கொடுக்கக் கூடாது” என்பதேயாகும்.

மேலும், “அப்படிப்பட்டவர்கள் நம் மகாநாடுகளில் தலைமை வகிக்கவிட்டு வருகின்றபடியால் கூட்டத்தில் குழப்பமும், மாச்சரியமும், விறோதமும் ஏற்படுகின்றன” என்பதும் அவரது வியாசத்தின் கருத்தாகும்.

periyar 329இந்தக் கருத்துக்கள் சற்றேரக்குறைய திருநெல்வேலி மகாநாட்டு நிகழ்ச்சிகளை சரி என்று ஆதரிப்பதாகவே நமக்குத் தோன்றுகின்றது. ஆத லால் இதற்கு நமது சமாதானத்தைக் கூறவேண்டியது நம் கடமையாகும்.

சுயமரியாதை இயக்கத்துக்கு சில திட்டங்களை லட்சியமாகவும் சில திட்டங்களை காரியாம்சையில் நடத்தவும் ஈரோடு வேலைத்திட்டக் கூட்டத் தில் தீர்மானித்திருப்பது யாவரும் அறிந்ததே என்றாலும் காரியாம்ச திட்டத் திற்கு சுயமரியாதை சமதர்ம திட்டம் என்பதாகப் பெயர் கொடுத்து அதை மாகாண மகாநாட்டில் ஊர்ச்சிதப்படுத்த எதிர்பார்த்து அதுவரையில் அத் திட்டங்கள் பிரசார தத்துவத்தில் இருக்கவேண்டுமென்கின்ற கருத்தின்மீது பிரசாரம் செய்யப்பட்டு வருகின்றது.

அன்றியும் இப்படி இரண்டுவிதமாக அதாவது லக்ஷியம் ஒரு விதமாகவும், திட்டம் ஒரு விதமாகவும் பிரித்து ஏற்பாடு செய்ததற்குக் காரணமும் அப்போதே எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது.

அதென்னவென்றால், லட்சியத்தை இப்போதே எல்லோரும் ஒப்புக் கொள்ளுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாதென்றும், லட்சியத்தை ஒப்புக் கொள்ளாதவர்களும் கூட நம்முடன் இருந்து வேலை செய்யத்தக்க மாதிரி யிலும் கூடியவரை யாரும் ஆnக்ஷபிக்க முடியாத மாதிரியிலும் ஒரு திட்டம் வகுக்கவேண்டும் என்கின்ற எண்ணத்தின்மீதுமே ஒரு திட்டம் வகுத்து அதற்கு சமதர்ம திட்டம் என்று பெயர் கொடுத்திருப்பது அக் கூட்டத்தில் இருந்த யாவருக்கும் தெரிந்த விஷயமாகும்.

மேற்கண்ட திட்டம் இரண்டையும் சுயமரியாதை இயக்கத்தில் இருந்த - இருக்கின்ற தோழர்கள் எல்லோரும் ஒப்புக் கொண்டவர்கள் என்றோ, மறுக்காதவர்கள் என்றோ, ஆnக்ஷபித்து எதிர்ப்பிரசாரம் செய்யாதவர்கள் என்றோ, சொல்லிவிட முடியாது.

இன்றும் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றவர்களுக்குள்ளாகவே சிலர் ஆnக்ஷபித்தும், மறுத்தும், எதிர்ப்பிரசாரம் செய்து கொண்டும் அவைகளை ஒழிக்க கட்சி சேர்க்கவும் இரகசியமாகவும் வெளிப்படையாகவும் முயற்சி செய்தும் வருவது அநேக ருக்குத் தெரிந்த விஷயமேயாகும். இந்தக்காரியங்கள் செய்ய அவர்களுக்கு இப்பொழுது உரிமை இருக்கின்றது என்று கருதித்தான் அப்படிப்பட்ட வர்களையும் இயக்கக்காரர்கள் என்று கருதி வருகிறோம்.

இது ஒருபுறமிருந்தாலும், சமதர்மத் திட்டத்தை ஒப்புக்கொண்டவர் கள் யார்? ஒப்புக்கொள்ளாதவர்கள் யார்? என்று கண்டுபிடிக்க நம்மிடம் என்னவிதமான அளவு கருவி இருக்கிறது? நம்மிடம் என்ன விதமான மெம்பர் லிஸ்ட்டு இருக்கின்றது?

அன்றியும் ஒரு தோழர் ஆஸ்திகறாயிருந்து விட்டதாலேயே அவர் சு.ம. இயக்க சமதர்ம கட்சியில் மெம்பராக அருகதையற்றவறாக ஆகிவிடு வாறா? ஒரு ஆஸ்திகறும் சமதர்ம திட்டத்தை ஒப்புக் கொள்ளாதவறுமான ஒருவர் நம் மகாநாட்டுக்கு வந்ததாலோ கலந்து கொண்டதாலோ, ஒரு கூட்டத்திற்கு தலைமை வகித்ததாலோ நம் இயக்கம் ஒழிந்து போகுமா? அல்லது ஆடிப்போகுமா? அப்படிப்பட்டவர்கள் வந்தால் சுயமரியாதைக் காரர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் கலகமும், கூச்சலும், குழப்பமும் ஏற்படும்படி செய்துதான் ஆகவேண்டுமா? என்று தோழர் சிங்காரவேலு அவர்களை பணிவாய் வினவுகின்றோம்.

நாம் பல தடவைகளில் தெரிவித்து இருப்பதுபோல் சங்கராச்சாரி என்பவர் நமது மகாநாட்டிற்கு தலைமை வகிக்க ஒப்புக்கொண்டாலும் ஏற்றுக் கொள்வதில் நமக்கு ஆட்சேபனை இல்லை என்று இப்போதும் சொல்லு கின்றோம். ஏனெனில் அவர் நமது கூட்டத்திற்கு வருவதற்கு முன் நம் லட்சியங்களையும், கொள்கைகளையும், திட்டங்களையும், உணர்ந்து கொண்டுதான் வருவார். அப்படி இல்லாவிட்டாலும் கூட அவரது உபதேசத் தாலோ பிரசாரத்தாலோ நமது இயக்க கொள்கைகள் மறைந்துவிடும் அல்லது மறைக்கப்பட்டுவிடும் - அல்லது நமது கொள்கைக்காரர்கள் சங்கராச்சாரி போன்ற - அப்படிப்பட்டவர்கள் பிரசங்கங்களைக் கேட்டு மனம் திரும்பிவிடு வார்கள் என்று நாம் பயப்படவேண்டியதில்லை.

இந்த எண்ணத்தின் மீதும், துணிவின்மீதும்தான் ஈரோடு மகாநாட் டிற்கு இந்து (மத) மகாசபையின் தலைவரான தோழர் ஜெயகரவர்களை தலைவராகப் போட்டு நடத்தி இருக்கின்றோம். சில ஜில்லா மகாநாடுகளில் புத்தமத தலைவராகிய தோழர் பி.லெக்ஷிமிநரசு அவர்களை தலைவராகப் போட்டு நடவடிக்கைகள் நடத்தியிருக்கின்றோம். மற்றும் பல மகாநாடு களில் பழுத்த ஆஸ்திகர்களையும் போட்டு இருக்கின்றோம். அனேக கூட்டங்களில் ஆஸ்திகர்கள், முதலாளிகள் ஆகியவர்கள் தலைமையில் காரியங்கள் நடத்தி இருக்கின்றோம்.

இதுவரையில் அனுபவத்தில் நமது பக்கத்தை முழுவதும் ஒப்புக் கொள்ளாதவர்கள் தலைமையில் எத்தனையோ மகாநாடுகளும், கூட்டங் களும் நடந்தும் அதனால் நமது இயக்க லட்சியங்களோ, கொள்கைகளோ திட்டங்களோ மாறிவிட்டதாகவோ, பலங்குறைந்து விட்டதாகவோ, சிலராவது மனந்திரும்பிவிட்டதாகவோ சொல்வதற்கு இல்லாமல் இருந்து வந்திருக்கிறது என்றுதான் கருதுகிறோம்.

நாம் இன்று பிரசார நிலையில் இருக்கின்றோம் என்பதையும், நமது காரியத்திட்டங்களை எல்லோரிடமும் பரப்பவேண்டும் என்கின்ற வேலை யில் இருக்கின்றோம் என்பதையும் வேறு ஒரு கருத்துள்ள தோழரின் பிரசாரத்தால் நாம் ஏமாந்துவிடமாட்டோம் என்பதையும் சந்தேகமற உணர்ந் தோமேயானால் அதற்காக நமக்குள் பயமோ குழப்பமோ உண்டாக சிறிதும் இடமில்லை.

சில ஆஸ்திக ஸ்தாபனங்களும் சில முதலாளிகள் ஸ்தாபனங்களும் இந்த இரு கூட்டத்தாரின் ஆயுதமான காங்கிரசும்தான். சுயமரியாதைக்காரர் களை உள்ளேவிட்டால் தங்களுக்கு ஆபத்து வந்துவிடும் என்று பயப் படுவதும், சுயமரியாதைக்காரர்கள் கூட்டத்தில் கலகமும், கூச்சலும், குழப்பமும் உண்டாக்கும் இழிதொழில்களைச் செய்து கலைக்கப் பார்ப்பது மான காரியங்கள் நடைபெறுகின்றதை நாம் பார்த்துவருகின்றோம்.

ஏனெனில் அவர்களுடைய நிலை அந்தமாதிரி பலமற்றதும் உண்மையற்றதும், சூக்ஷிநிறைந்ததும், அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் நிற்காத துமாய் இருப்பதால் அவர்கள் பயந்து மாச்சரியங்கொண்டு துவேஷித்து மூர்க்கத்தன மான காரியங்களைச் செய்ய வேண்டியவர்களாகின்றார்கள்.

நமக்கு அப்படிப்பட்ட அவசியம் என்ன என்பது விளங்கவில்லை. தோழர் சிங்காரவேலு அவர்கள் “நமது லக்ஷியத்துக்கு-கொள்கைகளுக்கு, திட்டத்துக்கு விரோதமானவர்களைச் சேர்க்கக்கூடாது” என்று மாத்திரம் சொல்லியிருந்தாலும் அதற்குச் சாதாரண சமாதானமே போதுமானதாயிருக் கலாம். அப்படிக்கில்லாமல் அப்படிப்பட்டவர்களை நமது இயக்கக் கொள்கைகளை ஒப்புக் கொள்ளாதவர்களைச் சேர்த்தால் “குழப்பமும், விரோதமும், மாச்சரியமும் நேரிடுகின்றன” என்று சொல்லியிருப்பதானது சிறிதும் ஒப்புக் கொள்ள முடியாத விஷயம் என்று வலியுறுத்திச் சொல்ல வேண்டியிருப்பதற்கு வருந்தவேண்டியதாய் இருக்கிறோம். இதுவரையில் நடந்திருக்கும் மகாநாடுகளுக்கும், பிரசாரங்களுக்கும் பெரும்பாகமான உதவிகளும் நமது கொள்கைகளை ஒப்புக் கொள்ளாதவர்களிடமிருந்து ஏற்பட்டிருக்கின்றதென்பதை யாரும் மறுக்கமுடியாது.

அதோடு மாத்திரமல்லாமல் அப்படிப்பட்டவர்களைச் சேர்த்ததாலும், தலைமைவகிக்க விட்டதாலும் அப்படிப்பட்டவர்கள் பெரிதும் மனமாற்ற மடைந்து நமது கொள்கைகள், திட்டங்கள் எல்லாவற்றையும் அடியுடன் தழுவாவிட்டாலும் பெரும்பாகங்களில் மனம் திரும்பியும், சிலவற்றைத் தழுவியும் இருக்கிறார்களே ஒழிய சுயமரியாதைக்காரர்கள் யாரும் மனம் திரும்பி விடவில்லை.

நிற்க நமது சமதர்மத் திட்டத்தின்படி அடுத்துவரும் தேர்தலில் சுயமரியாதைக்காரர்கள் நிற்கவேண்டுமானால் நாஸ்திகர்களும் முதலாளிகள் அல்லாதவர்களுமாகவே கிடைத்துவிடுவார்களா? என்று யோசிக்கும்படி வினயமாய் வேண்டுகின்றோம்.

முதலாளிகளாய் இருந்தாலும் சரி, ஆஸ்திகர்களாய் இருந்தாலும் சரி அதைப்பற்றி விசேஷமாய்க் கவனிக்காமல் சமதர்மத்திட்டத்தை ஒப்புக் கொண்டு கையெழுத்துப் போட்டு சட்டசபைக்கு நின்று வெற்றிபெற்ற பிறகு அத்திட்டத்தை நிறைவேற்றத் தகுந்த சட்டம் செய்ய வேலை செய்வாரா இல்லையா? என்பதைத்தான் நாம் முக்கியமாய்க் கவனிக்கவேண்டும் என்ப தாகத்தான் நாம் கருதியிருக்கிறோம். இந்தப்படிக்கானால்தான் சட்ட சபைப் பிரவேசம் என்பதையும் சட்டத்திற்கு கட்டுப்பட்டு திட்டங்களை நிறை வேற்ற முயற்சிப்பது என்பதையும் நமது வேலைத் திட்டமாக வைப்பதில் அருத்தம் உண்டு. அப்படிக்கு இல்லையானால் சமதர்ம திட்டத்தை வெறும் காகிதத் திட்டம் என்பதாகத்தான் சொல்லவேண்டியிருக்கும் என்று பயப் படுகின்றோம்.

அரசாங்க சட்டத்தை மதித்து அச்சட்டத்திற்குட்பட்ட கிளர்ச்சி செய்து காரியத்தை சாதிக்கக் கருதியிருக்கும் நாம், ஆஸ்திகர்களையும், முதலாளி களையும் உதவிக்கு அதுவும் நமது கொள்கைக்கு திட்டத்திற்கு பாதகமில் லாமல் அவர்களாக சம்மதித்து வருபவர்களை ஏற்றுக்கொள்வதால் நமது காரியம் கெட்டுப் போகுமென்றோ, அதற்காக கூச்சலும் குழப்பமும் ஏற்பட வேண்டியது கிரமம் என்றோ கருதி பயப்படவேண்டுமா? என்றும் அறிய விரும்புகிறோம்.

தோழர் பொன்னம்பலம்

நிற்க, தோழர் பொன்னம்பலனார் எழுதியிருக்கும் இவ்வாரக் கட்டுரையில் சுயமரியாதை இயக்கம் ஆரம்பத்தில் ஈடுபட்டிருந்த பார்ப்ப னீயத்தை ஒழிக்கும் முயற்சியிலும் பார்ப்பன ஆதிக்கத்தை அழிக்கும் முயற்சி யிலும் இன்னமும் ஈடுபட்டிருக்காமல் அதை விட்டு விட்டு வேறு வழியில் அதாவது சமதர்மம் பொதுவுடமை என்கின்ற வழியில் பிரவேசித் தது தப்பு என்றும் அதனால் பழயபடி பார்ப்பனீயம் துளிர்த்து வருவதாக வும், பார்ப்பன ஆதிக்கம் தலை விரித்தாடுவதாகவும் குறிப்பிட்டுவிட்டு நாம் ஏதோ பார்ப்பன மாய்கையில் சிக்கி இருப்பதாகவும் பொருள்பட மிக்க ஆத்திரத்துடன் பல விஷயங்களைக் கொட்டியிருக்கிறார். அதற்கும் சிறிதாவது சமாதானம் கூறவேண்டும் என்றே கருதுகின்றோம்.

முன்போல் பார்ப்பனீயத்தின் கொடுமைகளை வெளியாக்கும் வேலையிலும் பார்ப்பன ஆதிக்கத்தை ஒடுக்கும் வேலையிலும் நமது முயற்சி முழுவதும் இல்லை என்பதை நாம் ஓரளவுக்கு ஒப்புக் கொள்ளு கின்றோம். ஆயினும் சுயமரியாதை இயக்கத்தின் லட்சியமெல்லாம் அதுவேதான் என்பதை நம்மால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. பார்ப்பனீ யத்துக்கும் பார்ப்பன ஆதிக்கத்திற்கும் காரணமாயிருப்பது மதம் என்பதை நமது தோழர் பொன்னம்பலனார் அவர்கள் உணர்ந்திருப்பார். அம்மதத்தை ஒழிப்பதில் நாம் முன்னையைவிட இப்போது பலமடங்கு தீவிரமாய் இருக்கின்றோம் என்பதையும் தோழர் பொன்னம்பலம் அவர்கள் அறிவார்.

 பார்ப்பனீயத்தையும், பார்ப்பன ஆதிக்கத்தையும் அழிக்க வேண் டிய அவசியம் நமக்கு எதனால் ஏற்பட்டது? பார்ப்பனீயத்தின் பேராலோ, பார்ப்பனர் பேரிலோ, ஏற்பட்டது துவேஷமா? வெறுப்பா? வஞ்சகமா? என் பதை யோசித்துப்பார்க்க விரும்புகின்றோம். ஒரு நாளுமல்ல மற்றென்ன வென்றால், பார்ப்பனீயமும் பார்ப்பன ஆதிக்கமும் ஏழை மக்களை-தாழ்த்தப் பட்ட மக்களை என்றென்றும் தலை எடுக்கவொட்டாமல் அழுத்தி நசுக்கி வருவதற்கு ஆதரவாய் இருக்கின்றதென்றும், தாங்களே என்றென்றும் மேன்மையாயும் ஆதிக்கமாயும் இருந்துவரத்தக்கதாய் இருக்கின்றதென்றும் கருதியே அதனுடன் போர் புரிந்து வந்தோம். ஆனால் அப்போரின் பலன் என்ன ஆயிற்று என்று பார்ப்போமானால் பார்ப்பனர்களின் ஆதிக்கம் சில குறைவுபட்டது. அரசியல் துறையில் பார்ப்பன ஆதிக்கத்திற்கு சாவுமணி அடிக்கத்தக்க நிலைமையும் ஓரளவுக்கு ஏற்பட்டது. ஆனால் இதனால் ஏற்பட்ட பயன் என்ன என்று பார்ப்போமானால் சில பார்ப்பனரல்லாதார் பார்ப்பனர்களின் ஸ்தானத்துக்கு வந்தார்கள். பார்ப்பனர்களைப் போலவே நடந்தார்கள். ஏழைகளையும், தாழ்த்தப்பட்டவர்களையும், தலைதூக்க விடாமல் இருக்க பார்ப்பனர்களுக்கு கையாளாக இருந்து வேலை செய்து வருகின்றார்கள் என்பதுதான் வெளிப்படையாகத் தெரிகின்றது.

தோழர்கள் னுச. சுப்பராயன் முத்தையா முதலியார் ஆகியவர்கள் காலத்தில் பார்ப்பனரல்லாதார்களுக்கென்றும், தாழ்த்தப்பட்டவர்களுக்கென் றும் அரசியலில் என்ன காரியங்கள் செய்யப்பட்டனவோ அதற்குமேல் நாளது வரை ஒரு இம்மியளவாவது முற்போக்கு ஏற்பட்டது என்று சொல்ல முடியாத நிலையிலேயே இருந்து வருகிறது.

உதாரணமாக சொல்ல வேண்டுமானால் பார்ப்பனரல்லாதார் பெயரைச் சொல்லிக் கொண்டு பெரிய மனிதனாகி மந்திரி பதவியையும், பார்ப்பனரல்லாதார் இயக்கத் தலைவர் பதவியையும் பெற்ற தோழர் முனிசாமி நாயுடு அவர்கள் பதவிக்கு வந்தவுடன் பார்ப்பனர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் பார்ப்பனரல்லாதார் நன்மைக்காகவே தோழர் முத்தையா முதலியார் அவர்களால் உத்தியோகங்கள் வகுப்புவாரி பிரதிநிதித்துவப்படி வினியோகிக்க வேண்டும் என்று செய்யப்பட்டிருந்த விதியை ஒழிக்க வேண்டும் என்றும் பாடுபட்டதோடு சுயமரியாதை இயக்கம் என்பதாக ஒரு இயக்கம் இருக்கின்றதா என்று அறியாதவர்போலும் பல தடவைகளில் அதை அலட்சியமாய் பேசியும் நடந்தும் வந்தார். இந்த காரியம் சுயமரியாதை இயக்கம் பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்கபாடுபட்டதற்கும் தோழர் முனிசாமி நாயுடு அவர்கள் தலைவராவதற்கும், முதல் மந்திரியாவதற்கும் ஓரளவாவது காரணமாய் இருந்ததற்கு ஏற்பட்ட பலனாகும். இதுமாத்திரமல்ல மற்ற மந்திரிகள் நிலைமையை யோசித்தால் இனியும் வெட்கக்கேடாகும்.

ஒரு மந்திரியார் ஒரு பொதுக் கூட்டத்தில் “சுயமரியாதை இயக்கத்தின் நிழலில் தான் நாங்கள் இன்று மனிதர்களாய் வாழு கின்றோம்” என்று கோஷம் செய்தார். அவர் கண்களுக்கு இன்று ரூபாயைத் தவிர வேறு வஸ்துவே உலகத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. பார்ப்பனர் கள் தான் அவர்களுக்கு மனிதர்களாக காணப்படுகின்றார்கள். மற்றொரு மந்திரியோ “சுயமரியாதை இயக்கமே தனது மூச்சாய் இருந்து வருகின்றது” என்று நடித்தவர். ஆனால் இன்று அவர் கொடுக்கும் உத்தியோகம் 100-க்கு 97 பார்ப்பனருக்கு. அவரது மந்திரிகள் எல்லாம் பார்ப்பனர்களே. தாசி வீட்டுக்கு போவதானாலும் பார்ப்பன தாசிகள் வீட்டுக்கேதான் போக வேண்டுமென்ற அவ்வளவு பார்ப்பன அபிமானியாயிருந்துவருகிறார். மற்றும் இப்போது பார்ப்பன ரல்லாதார் தலைவர் என்று சொல்லிக்கொள்ளு கின்ற பணக்காரர்களின் யோக்கியதையும் முன்சொன்ன மந்திரி போலவும் பார்ப்பனர்களையே தூதாட்களாகவும் தங்கள் பதவி வேட்டைக்கு ஒற்றர் களாகவும் வைத்து பார்ப்பனீய ஆதிக்கத்தை விட மோசமான ஆதிக்கம் செலுத்தி வருகின்ற வர்களாவார்கள்.

தோழர் பொன்னம்பலம் அவர்கள் விரும்புவது போல் பார்ப்பனீ யத்தை ஒழிக்கவும் பார்ப்பன ஆதிக்கத்தை வீழ்த்தவும் இன்னமும் எவ்வளவு தான் பாடுபட்டாலும் இன்றைய நிலையில் இருந்த பலன் தான் ஏற்படுமே ஒழிய வேறு ஒன்றையும் நாம் கனவு கூட காணமுடியாத நிலை யில் தான் இருக்கிறோம்.

பார்ப்பானை ஒழித்து பணக்காரன் கையில் ஆதிக்கத்தை வாங்கிக் கொடுக்க சுயமரியாதை இயக்கம் இருக்கின்றது என்று சொல்லுவதானால் கஷ்டப்படும் மனித சமூகத்துக்கு இவ்வியக்கத்தினால் எவ்வித பலனும் ஏற்படாதென்பதே நமதபிப்பிராயம்.

ஆதலால் சமதர்மத்தையும் பொதுவுடமைக் கொள்கையையும் விட பார்ப்பனீய ஒழிப்பும், பார்ப்பன ஆதிக்க அழிப்பும் பிரதானம் என்பதை ஒப்புக்கொள்ள முடியாமைக்கு வருந்துகிறோம்.

தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் ஜஸ்டிஸ் கட்சியை அழிக்க தாம் சட்டசபைக்குப் போகவேண்டும் என்று சொல்லித் துணிந்தது சத்தியமூர்த்தியின் சாமர்த்தியமும் துணிவும் என்று நாம் ஒருநாளும் ஒப்புக்கொள்ள முடி யாது. அந்தப்படி அவரைச் சொல்லச் செய்வது பார்ப்பனரல்லாத பணக்காரரின் பணமும் பார்ப்பனரல்லாத பணக்காரரின் சூழ்க்ஷியுமேயாகும். அவரது நிலைமையாரும் அறிந்ததே. அவரது அரசியல் ஞானமும் முயற்சியும் எல்லாம் வயிற்றுப்பாட்டிற்கே ஒழிய வேறு ஒரு பிரமாத காரியத்திற்கு மல்ல. ஆதலால் அவருக்கு ஒரு சிறு உத்தியோகமோ வயிற்றுப் பாட்டிற்கு ஒரு வழியோ ஏற்பட்டுவிட்டால் அவரால் யாருக்கும் எவ்வித தொல்லை யும் இல்லாமல் போய்விடும். தோழர்கள் டாக்டர் சுப்பராயன் அவர்கள் மந்திரிகாலமும், குமாரராஜா அவர்கள் மேயர் காலமும் ஒரு அளவுக்காவது அமைதியாய் நடைபெற்று வந்ததற்குக் காரணம் தோழர் சத்தியமூர்த்தி அவர்களது அமரிக்கைத் தன்மையேயாகும். “அப்படிப்பட்ட” சத்திய மூர்த்தி “இப்படிப்பட்ட” அமரிக்கையாய் இருப்பது சும்மா முடிந்திருக் குமா?

ஆதலால் அவரது கூச்சலைப்பற்றி நாம் அவ்வளவு கவனிக்க வேண்டியதில்லை. ஏனெனில் ஜஸ்டிஸ் கட்சியின் உதவியில் வாழ்ந்து கொண்டு ஜஸ்டிஸ் கட்சியை வைவதென்றால் அதில் இரகசியமில்லாமல் இருக்காது. ஏனெனில் ஜஸ்டிஸ் கட்சிக்காரருக்குள்ளாகவே, அடுத்ததடவை தலைவராவது யார்? யார் யார் மந்திரியாவதென்ற விஷயம் இன்னமும் தீர்மானமில்லை என்பதோடு அக்கட்சித் தலைவர்கள் என்பவர்களே ஒருவரை ஒருவர் அழுத்த வேலை செய்து வருகின்றார்கள். ஆதலால் அவ் வேலையின் பயனே தோழர் சத்தியமூர்த்தியின் “துணிவுக்கும் ஆணவத் திற்கும்” காரணமென்பது நமதபிப்பிராயம்.

தவிர சில பத்திரிகை, தோழர் ஷண்முகத்தினிடம் பொறாமைகாட்டி அவரை இழிவுப்படுத்தியும் இழிவுப்படுத்துவதற்காக தோழர் பட்டேல் அவர்களை உயர்த்திக் காட்டி ஷண்முகத்தைத் தாழ்த்திப் பேசுவதையும்பற்றி தோழர் பொன்னம்பலனார் குறிப்பிட்டிருக்கிறார். அதுவும் பார்ப்பன சூட்சி என்பதை நாம் ஒப்புக் கொள்கிறோம். ஆனாலும் பொது ஜனங்கள் இதில் ஏமாந்துபோக மாட்டார்கள். பொது ஜனங்கள் முட்டாள்களாய், மூடர்களாய் இருந்தால் அதற்கு நாம் என்ன செய்யலாம்.

தோழர் பட்டேல் அவர்கள் “எல்லா இந்திய சத்தியமூர்த்தி” என்று முன்னமே சிலதடவை எழுதியிருக்கிறோம்.

அவர் காங்கிரஸ்காரர்கள் சட்டசபைக்குப் போகக்கூடாது என்று தீர்மானித்திருந்த காலத்தில் காங்கிரஸ் கொள்கைக்கு விரோதமாய் சட்ட சபையை ஒழிப்பதற்கென்று சொல்லிக்கொண்டு, சட்டசபைக்குப் போய் அங்கு µ 4000 ரூபாய் சம்பளமுள்ள உத்தியோகத்தை அடைந்து சட்டசபையை ஒழிப்பதற்குப் பதிலாக அதற்கு முட்டுக்கட்டை போடுவதற்கும் பதிலாக தலைமைவகித்து ஒழுங்காய் நடத்திக்கொடுத்து சட்ட சபையை நிலைக்க வைத்துவிட்டுப் போன வீரர். “சட்டசபையை ஒழுங்காய் நடத்துவ தற்காக நாள் ஒன்றுக்கு பத்துத்தடவை வைசிராய் பிரபு வீட்டிற்குப் போவேன்” என்று சொன்ன “முட்டுக்கட்டை வீரராவார்”. அன்றும் ஒத்து ழையாமையை ஒழிக்கச் சூட்சி செய்தவர். இன்றும் “காந்தி தலைவராய் இருக்க யோக்கியதை இல்லை” என்று சொல்லி வேறு தலைவரை நியமிக்க வேண்டுமென்று சொன்னவர். எந்தக் காலத்தில் எந்த வேலையில் அவர் நாணயஸ்தராய், யோக்கியராய், வீரராய் நடந்து கொண்டார் என்பது நமக்கு விளங்கவில்லை. தோழர் சத்தியமூர்த்தியைப்போல் வாய்ப்பேச்சில் வீரரா னவர். சர்க்காருக்குத் தொந்திரவில்லாமல் முட்டுக்கட்டை போடமுடியாமல் சட்டசபையை அழிக்காமல் வேகமாய், கடினமாய் பேசிவிட்டு வில்லர் என்ற பேர்வாங்கினவர். அவர் போல் தோழர் ஷண்முகம் இல்லையென்று சொல் வதில் ஒருவித அர்த்தம் உண்டுதான். ஆனால் பார்ப்பனர்கள் அந்தக் காரியங்களை உணர்ந்தும் ஷண்முகத்தின் மீதுள்ள பொறாமையால் ஏதோ உளரித் தீரவேண்டிய முறையில் குலைக்கின்றார்களென்றால் அதற்காகவே கொள்கையை மாற்றிக் கொள்ளவேண்டும் என்பது நமக்குப் பரிகாசமாய் தோன்றுகின்றது.

மூன்றாவதாக ஒரு பார்ப்பனப் பத்திரிகை வாணியம்பாடி மகா நாட்டைப்பற்றி விஷமப் பிரசாரம் செய்திருப்பதை குறிப்பிட்டிருக்கிறார். நாளது வரை எந்தப் பார்ப்பனப் பத்திரிக்கையாவது சுயமரியாதை இயக் கத்தைப் பற்றி விஷமத்தனமாயும் அயோக்கியத்தனமாயும் நடக்காதிருந்து இந்த பத்திரிகை மாத்திரம் நடந்திருந்தால் அதை ஒரு பிரமாதமாகக் கருதலாம். பாம்புக்கு விஷமிருப்பதைப் பற்றி கோபிப்பதில் என்ன புத்தி சாலித்தனமோ அதுதான் பார்ப்பன பத்திரிகை நமது விஷயத்தில் அயோக் கியத்தனமாய் நடந்து கொள்வதைப்பற்றி கோபிப்பதாகும். ஏனெனில் நமது இயக்கம் பார்ப்பனீயத்தையும், பார்ப்பன ஆதிக்கத்தையும், ஒழிப்பதை ஒரு திட்டமாகக் கொண்டது என்றிருக்கையில் பார்ப்பனர்களும் பார்ப்பனப் பத்திரிக்கைகளும் நம் விஷயத்தில் யோக்கியமாய்-நாணையமாய் நடந்து கொள்ளும் என்று எதிர்பார்ப்பது நமது முட்டாள்தனமேயாகும். பார்ப்பனரல்லாத மக்கள் வயிற்றுப் பிழைப்புக்காகத்தான் அப்பத்திரிகைகளை ஆதரிக்கிறார்கள். வாங்கி விற்கிறார்கள். சுதேசமித்திரன் இந்து முதலிய பத்திரிகைகளின் யோக்கியதைகளை அறிந்தவர்களுக்கு இந்த “அரைடிக்கட்” பத்திரிகை, என்பதின் யோக்கியதை குற்றமாகத் தோன்றாது.

இந்து சுதேசமித்திரன் பத்திரிகைகளுக்கு நாட்டில் செல்வாக்கு இருக்கும்வரை, இந்தியாவுக்கு வெள்ளைக்கார முதலாளிகள் ஆட்சி மேலானது என்பதுதான் நமதபிப்பிராயமாயிருந்து வருகிறது. ஏனெனில் தங்களை இழிவுபடுத்தி தங்கள் சமூகத்தை அடிமையாக்கி வாழ்ந்துவரும் ஸ்தாபனத்தை ஒரு மக்கள் ஆதரிக்கின்றார்கள் என்றால், அந்த மக்கள் “விடுதலை” பெற யோக்கியதை உடையவர்கள் என்று எந்த மூடனாவது ஒப்புக்கொள்ள முடியுமா? இவற்றையெல்லாம் பார்த்துத்தான் இந்த நாட்டுக்கு வேண்டியது சமதர்மமும், பொதுவுடமைத் தத்துவமும் என்ற முடிவுக்கு வந்தோமேயொழிய வேறில்லை. பார்ப்பனரல்லாத மக்கள் அறிவோடு, மானத்தோடு நடந்து கொள்ள யோக்கியதை உடையவர்கள் என்றால், பார்ப்பன ஆதிக்கத்தை ஒழித்து பார்ப்பனரல்லாதார் ஆதிக்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பதில் அருத்தமுண்டு; அப்படிக்கில்லாமல் பார்ப்பனீயத்தை அழித்து பார்ப்பன அடிமை கையில் ஆதிக்கத்தை கொடுப்பதற்கு பாடுபடுவதென்றால், அது கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொரிந்து கொள்வதேயாகும். என்றாலும் எல்லாக் காரியத்தையும், ஏககாலத்தில் செய்கின்ற முயற்சியில்தான் நாம் இருக்கின்றோமேயொழிய அவற்றை அடியுடன் விட்டுவிடவில்லை என்பதை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

(குடி அரசு - தலையங்கம் - 22.10.1933)

Pin It