“மழை ஊசிகளால் தனது மேனி  

 எங்கும் பச்சை குத்திக்

 கொள்கிறது பூமி”.

கவிஞர் சிற்பியின் மழை குறித்த இந்தக் கவிதை, மழை வரும் போதெல்லாம் மனதில் வந்து போகும் ..!

மழை, பச்சையத்தை மட்டுமன்று! புத்துயிர்ப்பையும் பூமிக்குத் தருகிறது. மழை நீரின் மகத்துவம் குறித்தும் , பருவ காலங்கள் குறித்தும் , பழந்தமிழ் இலக்கியங்களில் பற்பல குறிப்புகள் உள்ளன. பொழியும் மழை நீரின் அளவு பற்றியும், மழை வரும் நாள்கள் பற்றியும் மிகச் செறிவான அறிவு மரபு கொண்ட இனமாகத் தமிழினம் இருந்துள்ளது!.

நிலத்தையும், பொழுதையும் முதற் பொருளாகக் கொண்ட பழந்தமிழர் பெரும் பொழுதாகிய பருவங்களையும் அவற்றின் தன்மைகளையும் ஆய்ந்தறிந்து இருந்தனர். மிக ஆழமான வானியல் அறிவும், சூழலியல் அறிவும் தமிழர்களுக்கு இருந்துள்ளன.

மழைக்கால இரவுகளில் நிலவைச் சுற்றி விழும் ஒளி வட்டத்தைக் கவனம் கொண்டு "கிட்டத்தில் கட்டினால் எட்டத்தில் மழை. எட்டத்தில் கட்டினால் கிட்டத்தில் மழை" நிலவின் ஒளிவட்டம் நெருக்கமாகயிருந்தால் அருகே மழை பெய்து கொண்டிருக்கிறது. விரிவான வட்டமிருந்தால் தொலைவில் மழை பெய்து கொண்டிருக்கிறது என்பதோடு ... வானில் இடம் மாறும் விண்மீன்களைக் கொண்டு வானிலையை அவதானிக்க முடிந்தது அன்றைய தமிழர்களால்.

வான்கொடையான பருவமழையின் சிறப்பையும், உயிர்ப்பையும் நவீனத் தமிழர்கள் உணர முடியாதவாறு காலம் மாற்றத்தை அடைந்துள்ளது. சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையில் வடகிழக்கு பருவமழையின் பொழுது பதினைந்து நிமிடத்தில் பெய்த 4.5.செ.மீ.மழை மக்களை நிலைகுலையச் செய்து விட்டது. மதுரையில் மட்டுமன்று! உலகெங்கும் பெய்யும் பருவமழை பெரும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தி வருகிறது.

பூமியின் மீது உயிரினங்கள் தோன்றிப் பல கோடி ஆண்டுகள் திசை மாறாமல் பயணித்த பருவமழைக்கு என்னவாயிற்று ..?

நூறு ஆண்டுகளில் தோன்றிய தொழில் நுட்பமும், முதலாளித்துவ சமூக அமைப்பும் வளங்களை வகைதொகையில்லாமல் சுரண்டி நில வாழ்வைப் பாழடித்து விட்டன. வெப்பமயமாகுதலில் பனி உருகுதல், கடல் மட்டம் உயர்தல் ஒருபக்கம் என்றால், மறுபக்கம் பருவங்கள் திசைமாறி காலத்தைப் பிறழச் செய்துள்ளன..!

ஆண்டுக்கு மிகக்குறைவான மழைப்பொழிவை சந்திக்கும் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான துபாய் செயற்கை மழை வேண்டி சில்வர் ஐயோடைட் இரசாயனத்தை வானயூர்தியின் மூலம் மேகத்தில் தூவி மழைப்பொழிவை பெறுவார்கள். இந்த ஆண்டு இயற்கையாகவே ஒரே நாளில் 30- செ.மீ.மழை கொட்டித்தீர்க்கக் கண்ணெதிரே உடமைகளும், ஒட்டகங்களும் கரை புரளும் வெள்ளத்தில் அடித்துச்செல்வதைப் பதற்றத்துடன் பார்க்கிறார்கள். சடுதியில் நேர்ந்து விட்ட துயரத்தை எதிர் கொள்ள முடியாது நிலைகுலைந்து போனார்கள். நடந்தது இன்னதென்று அறியும் முன் எல்லாம் முடிந்து விட்டது.

ஸ்பெயின் நாட்டில் எடுக்கப்பட்ட ஓர் ஆவணப்படத்தை இங்கே நினைவு படுத்த வேண்டும்! " உலகின் இதயத்திலிருந்து" (FROM THE HERT OF THE WORLD) ஆவணப்படம் பி.பி.சி.செய்தி நிறுவனத்திற்காக 1991-யில் இயக்குநர் "அலன் எரெய்ரா" என்பவரால் படமாக்கப்பட்டது.

18,000 -அடி உயர மலைப்பகுதியில் வாழும் "கோகி" பழங்குடிகளின் பண்பாட்டு வாழ்வியலைப் பேசும் ஆவணப்படத்தில் ... உயர்ந்த மலைமீது உட்கார்ந்து கொண்டு கோகி இனப்பழங்குடி பேசும் ஒவ்வொரு சொற்களும் சிந்திக்கத் தக்கவை.

" இளைய தலை முறைக்குப் புரியவில்லை. தாய் பூமியை அதிகளவில் காயப்படுத்தி வருகின்றனர் .அவளின் இதயம் துளைக்கப்பட்டுள்ளது. மண்ணைத் தோண்டுவதை, மரங்கள் வெட்டுவதை, கடலை அசுத்தப்படுத்துவதை, இயற்கையை அழிக்கும் வளர்ச்சித் திட்டங்களை நிறுத்துங்கள் ..! இல்லை என்றால் சூரியன் கோபம் கொள்வான். வெப்பத்தை கக்குவான், தண்ணீருக்குப் பஞ்சம் ஏற்படும். இன்னும் இன்னும் அழிவுகளை உலகம் சந்திக்கும். ஆகவே, தயவு செய்து நிறுத்தி விடுங்கள்” என்ற வேண்டுதலோடு படம் முடிகிறது.

முப்பதாண்டுகளுக்குப் பிறகு ...

வரலாறு கண்டிராத மழை ஸ்பெயினில் ஒரு பகுதியை புரட்டிப் போடுகிறது. ஓராண்டிற்குப் பெய்ய வேண்டிய மழை எட்டு மணி நேரத்தில் பெய்கிறது. முப்பதாண்டுக் காலம் உழைத்துழைத்துச் சேமித்த செல்வமெல்லாம் சேற்றில் புதைந்து போகிறது. அருகருகே குடியிருந்தவர்களின் உயிரற்ற உடலை வெள்ளம் உருட்டிக் கொண்டு போகிறது. உடனிருந்தவர்களில் பலரையும் காணவில்லை.

ஆறுதல் சொல்லக் களத்திற்கு வந்த மன்னர் மீது மாளாத கோபத்திலிருந்த மக்கள் சேற்றை அள்ளி வீசுகிறார்கள். ஆட்சியாளர்களின் முகத்தில் சேறு அப்பிக் கொள்கிறது. கொலையாளிகள், கொலைகாரர்கள் என்று எல்லாவற்றையும் இழந்து கையறுநிலையில் உள்ள மக்கள் முழக்கமிடுகிறார்கள்.

எங்கோ, நடந்த நிகழ்வென்று எளிதாக எவரும் கடந்து போக முடியாது!

புவி வெப்பமயமாகுதலில் ஒவ்வொரு பாகை செல்சியசுக்கும் பதினைந்து விழுக்காடு அதிக மழை பெய்யும் என்கிறார்கள் வானிலையாளர்கள். அண்மையில் கேரளாவில் வயநாட்டில் மலை சரிந்ததை, நிலம் குலைந்ததை பார்த்தோம். உலக மக்கள் தொகையில் முப்பது விழுக்காடு மக்கள் மலை நிலத்தை அல்லது பீடபூமியைச் சார்ந்து வாழ்கிறார்கள். பெருமழையின் பாதிப்பிற்கு உள்ளாகும் மக்களும் இவர்களே. தென்மேற்கு பருவமழைக்காலம் செப்டம்பர் மாதத்தில் முடிந்திருக்க வேண்டும். அது அக்டோபர் மாதம் வரையிலும் தொடர்கிறது. டெல்லிமுதல் கேரளா வரை மழைக்கான வாய்ப்பிருக்கிறது.

கடந்த பத்தாண்டுகளாகத் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை புயலோடு வந்து, புயலோடு முடிகிறது. ஆண்டில் மூன்று, நான்கு புயலைச் சந்திக்கும் நகரம் சென்னை. சென்னைக்கு அருகிலுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வாழும் மக்கள் மனதில் மழை மீதான அச்ச உணர்வு மேலோங்கும் காலமிது. சென்னையைச் சூழ்ந்த 2015- ஆம் ஆண்டு வெள்ளத்தின் பாதிப்பிலிருந்து இன்னும் பல குடும்பங்கள் மீளவில்லை.

சென்னை உலகில் இரண்டாவது பெரிய சதுப்பு நிலம் என்பதை பலரும் அறியமாட்டார்கள். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த 3,500-க்கும் மேலான ஏரி, குளம், குட்டைகளை நகரமயமாகுதல், தொழில்மயமாகுதல் போன்றவற்றிக்கு மடைமாற்றி விட்டோம்.

உலகின் பெருநகரத்தைக் கடந்து கடலுக்குச்செல்லும் மூன்று ஆறுகள் ஒருங்கே அமைந்த நகரம் சென்னை. அடையாறு, கொசஸ்தலையாறு, கூவம் ஆறு போக, பக்கிங்காம் கால்வாய் வடிநீர் அமைப்பும் சென்னைக்கு வாய்த்தும். முறையாக அதனை பராமரிக்கவில்லை. சென்னை நகரம் பெரும் வெள்ளத்தை கட்டுப்படுத்தும் தொழில் நுட்பத்துடன் உருவாக்கப்படவில்லை. மழைநீர் வடிகால், உட்கட்டமைப்பு போன்ற திட்டமிடலில் உள்ள குளறுபடிகளே பருவமழைதோறும் மக்களை, அரசை பதறச் செய்கிறது.

பூமி வெப்பமயமாகுதலுக்கு வளர்ந்த நாடுகளின் கரியமில உமிழ்வுகள் காரணம் என்றாலும். உலகில் நகரமயமாகும் ஒவ்வொரு பகுதிகளும் தன்னளவில் பாதிப்புகளை உருவாக்குகிறது. பெரு நகரமான மும்பையின் பசுமைப்பரப்பு 25.4.விழுக்காடு. சென்னைப் பெரு நகரத்தின் பசுமைப்பரப்பு 5.3.விழுக்காடு. வியப்பாகயிருந்தாலும் இதுதான் உண்மை.

உலகில் சராசரியாக ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 400- மக்கள் வாழ்கிறார்கள். சென்னையில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு 28 ஆயிரம் மக்கள் வாழ்கிறார்கள். அதன் பொருட்டே குடிநீர், தூய்மை, இடநெருக்கடி, பயண நெரிசல் போன்றவற்றில் ஏற்படும் வசதியின்மையால் மனம் எரிச்சலடைகிறது. தேவையற்ற கோபம் சகமனிதனை எதிரியாக்குகிறது.

நீர்வடியும் சாக்கடைகளை ஞெகிழி குப்பைகளால் நிரப்பி வைத்துள்ள சென்னையில் ஒரு செ.மீ. மழை பெய்தாலே சாலைகள் முழங்கால் அளவில் மூழ்கிப்போகிறது. மாமழை போற்றிய தமிழ் மரபில் வந்தவர்கள் பெரும் மழையைப் பேய்மழை என்று சபிக்கிறார்கள். நுகர்வுப்பசிக்கு மலைகளைத்தின்று, ஆறுகளைக் குடித்தவர்கள் நீண்ட கோடையை, மேலதிக வெப்பத்தை சந்திக்க நேரிடும்.

இதுகாறும் பார்த்திடாத இயற்கைப் பேரழிவுகளை 2024-ஆம் ஆண்டில் பார்த்து வருகிறோம். நதிக்கரையோரம் வாழும் மக்கள் தங்களது வீடுகளை, வாகனங்களை, நுகர்வுப் பொருட்களை முற்றிலும் இழந்துள்ளார்கள். அடுத்தடுத்த ஆண்டுகளில் காலநிலைமாற்ற விளைவுகள் தீவிரமடைந்து பல நாடுகளின் பொருளாதாரத்தைப் பாதிக்கும். காலநிலையை மட்டுப்படுத்தும் திட்டங்களுக்கு அனைத்து நாடுகளும் இணங்க வேண்டும். தனிமனித, அரசுகளின் பங்களிப்பில் இயற்கையோடு இயைந்து வாழும் அறச்சூழலை உருவாக்கி வளரும் தலைமுறை வாழத் தகுதியான பூமியை கையளிக்க வேண்டும்.

கோவை சதாசிவம்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.